வாடகைத்தாய்


வ.எண் :                        உள்ளடக்கம்                             பக்கம் 

1                        1. யாரவள்... எங்கிருக்கிறாள்...




 வாடகைத்தாய் 

                                 - அரங்க கனகராசன்

1. யாரவள்... எங்கிருக்கிறாள்...

வரவேற்புப் பெண் உள்பேசியில் பேசினாள் : "சார், உங்களைப் பார்க்க தேன்மொழி வந்திருக்காங்க... உள்ளே அனுப்பவா?"

"எந்த தேன்மொழி?"

"அரும்பாக்கம்! ஏற்கனவே நேரம் தந்திருக்கீங்க?"

"ஓ... அவங்களா வரச்சொல்லுங்க"

"தேன்மொழி!... உள்ளே போங்க!"...

பெரிய உள் அரங்கு முழுமையான அலுவலகமாக திகழ்ந்தது... தனி தனித் தடுப்புகளாக இருந்த... ஒவ்வோர் தடுப்பும் கணினி வசதியுடன் இருந்தது... ஒரு ஆண் ஒரு பெண் என பணியாளர்கள் ஒவ்வோர் தடுப்பிலும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்...

அவர்களுக்குள் கேள்விகள் எழுவதும், சிந்திப்பதும் அவர்களே யூகங்களின் அடிப்படையில் தற்காலிகத் தீர்வினைக் கொணர்வதும், அதனை நோக்கி வழக்கின் திசையை நகர்த்துவதும் அவர்களின் பணி!

ஆம்! அது ஒரு தனியார் துப்பறியும் அலுவலகம்!

துப்பறியும் அதிகாரி வேல்முருகனை சந்திக்கவே தேன்மொழி வந்திருந்தாள்...

"சார் வணக்கம்... உள்ளே வரலாமா?"

மாடியில் இருந்த அறைக் கதவைத் தட்டி கேட்டாள்...

"வாங்க" - என்ற வேல்முருகனின் முறுக்கு மீசையும், உருட்டு விழியும் ஒட்டவெட்டப்பட்ட தலைமுடியும் நெடிய உருவமும் காவல்துறையின் கனிவற்றக் காவலர் போன்றதோர்  காட்சியைக் காட்டியது...

ஆனால்; 'வாங்க' என்று தேன்மொழியை அழைக்கும்போது அந்த அழைப்பில் பண்பும், இதழில் உண்மையான புன்முறுவலையும் கண்டாள் தேன்மொழி!

"சார், நான் தேன்மொழி... நேற்று  பேசியிருந்தேன்... இன்றைக்கு நேரம் ஒதுக்கி வரச் சொன்னீங்க..."

"உட்காருங்க... என்ன குடிக்கிறீங்க?"

"தண்ணீர் போதும்"

தண்ணீர் புட்டியை எடுத்து தேன்மொழியின் அருகில் நகர்த்தினார்...

தேன்மொழி நீர்ப் பருகியவுடன் வேல்முருகன் பேசினார்  : "நான் அலைபேசியில் பேச விரும்பறதில்லை... அதனால்தான் நேரில் வரச் சொல்லியிருந்தேன்..."

அமைதியாக இருந்தாள் தேன்மொழி 

"நாம பேசறது பிறரால் ஒட்டுக் கேட்கப்படலாம் இல்லையா... அதனால் நேரில் வரச் சொல்லியிருந்தேன்... சுருக்கமா பேசுவதாக இருந்தால்; தேன்மொழி, நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க... விரிவா பேச நேரம் இருக்கும்னா இப்பவே நீங்க பேசலாம்"   

"என் கணவர் மணமுறிவு கேட்கிறார்"

"உங்களுக்குள் புரிதல் இல்லையா?"

"குழந்தை இல்லை"

"குறை யார்கிட்ட?"

"என்கிட்டே குறையில்லை?"

"மருத்துவசோதனை செஞ்சீங்களா"

"நான் செய்யல"

"கணவர் செஞ்சாரா?"

"தெரியல"

"ரெண்டுபேரும் மருத்துவசோதனைக்கு உட்படுத்தினால், உங்களுக்குக் குறையில்லைனு தெரியவந்தால் மணமுறிவுக்கு அவசியமில்லையே"

"திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகுது... பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், அவரும் அவருடைய அதாவது என் மாமியாரும் என்கிட்ட குறை இருப்பதாக நினைக்கிறாங்க..."

"நீங்க மருத்துவ சோதனை செஞ்சு, அவங்களுக்கு தெளிவுப் படுத்தலாமே"

"மருத்துவ சோதனைக்கு என்னை உட்படுத்த எனக்கு விருப்பமில்லை சார்"

"குழந்தை இன்மைக்கு உங்ககிட்ட குறை இருப்பதாக உங்க கணவர் நினைக்கிறார்... நீதிமன்றத்திற்கு  மணமுறிவு வழக்குப் போனாலும், நீதிபதி மருத்துவ அறிக்கையில்லாமல் மணமுறிவுத் தரமாட்டாரே"

"மணமுறிவு எனக்கும் விருப்பம்தான்!... ஆனா; பத்து ஆண்டுகள் என்கூட வாழ்ந்தும் அவர் என்னை பிள்ளைப் பெறும் கருவியாகத்தானே பாவிச்சிருக்கார்... அப்படிப்பட்டவர்கூட வாழ எனக்கும் விருப்பமில்லை..."

"மணமுறிவுக்கு நீங்க எதிர்ப்புத் தெரிவிக்கலை... அவரோடு வாழ இனி விருப்பமும் இல்லைனு சொல்றீங்க... தேன்மொழி, என்கிட்ட நீங்க என்ன மாதிரி  உதவி எதிர்ப்பார்க்கிறீங்க?"

"என் குழந்தையை நீங்க எனக்குக் கண்டுப் பிடிச்சுத் தரணும்..."

"குழந்தை பிறக்கவில்லைனு சொன்னீங்க..."

"என் கணவருக்கும் எனக்கும் குழந்தை பிறக்கலை..." - என்று சொல்லிவிட்டு தேன்மொழி அமைதியானாள்...

"சொல்லுங்க தேன்மொழி"

"என் கல்லூரிப் படிப்பு முடிஞ்சு வேலைத் தேடிட்டு இருந்தேன்... வறுமை மிகுந்த குடும்பம்... அப்பா இல்லை... அம்மா வீட்டில் தையல் வேலை செஞ்சு செலவை சமாளிச்சிட்டு இருந்தாங்க... அப்போ"

தேன்மொழி சற்று நிதானித்தாள்...

வேல்முருகன் அவள் பேச்சை உற்றுக் கொண்டிருந்தார்...

"எனக்கு அப்போ பத்தொன்பது வயது... வாடகைத்தாயாக இருந்து குழந்தைப் பெற்றேன்..."

"சட்டப்படி வாடகைத்தாயாக ஆக, இருபத்துமூணு வயசாயிருக்கணுமே"

"சார்... அந்த சட்டமெல்லாம் இரண்டாயிரத்து பத்தொன்பதில் வந்தது... நான் வாடகைத்தாயாக இருந்தபோது அப்படி எந்த சட்டமும் இல்லை..."

"சரி... பத்தொன்பது வயதில் குழந்தைக்குத் தாயாகியிருக்கீங்க... இப்ப உங்க வயசு?"

"முப்பத்தெட்டு"

"குழந்தைக்கும் பதினெட்டு வயசிருக்கும்... எங்கே வசிக்கிறாங்க?"

"தெரியாது"

"யாருக்காக வாடகைத் தாயாக இருந்தீங்க?"

"தெரியாது"

"யார் மூலமா வாடகைத் தாய்க்கு ஒத்துக்கிட்டீங்க?"

"ஒரு நாளிதழில் வந்த விளம்பரம்... அதிலிருந்த தொலைபேசிக்குப் பேசினேன்..."

"அந்த தொலைபேசி எண் சொல்லுங்க"

"மறந்துருச்சு"

"விளம்பரம் வந்த நாளிதழ் வெச்சிருக்கீங்களா"

"இல்லை"

"நாளிதழ் பேர்"

"மாலைமலர்"

"தேதி?"

"ஞாபகமில்லை"

"எந்த தடயமும் இல்லை... குழந்தையைக் கண்டுப் பிடிக்க நீங்களே வழிச் சொல்லுங்க"

"தெரியாது... ஆனால்; நீங்க என் வயிற்றில் பிறந்தக்  குழந்தையைக் கண்டுப் பிடிச்சுத் தருவீங்கனு நம்பி வந்திருக்கேன்..."    

"எந்த மருத்துவமனையில் குழந்தைப் பிறந்தது?"

"வீட்டில்"

"வீடா? மருத்துவர் இல்லாமலா?"

"மருத்துவர் இருந்தார்... மருத்துவர் வருவார்... என்னை சோதித்து மருந்து தருவார்..."

"மருத்துவர் பேர்"

"தெரியாது"

"ஆண் மருத்துவரா?... பெண் மருத்துவரா?"

"பெண் மருத்துவர்"

"அவரை அடையாளம் தெரியுமா?"

"தெரியாது... மருத்துவ சோதனை நடக்கும்போது, என்னை யாரும் பார்க்கக் கூடாதுனு எனக்கு முகக்கவசம் போட்டுருவாங்க..."

"முகக்கவசம் போட நீங்க எதிர்ப்பு தெரிவிக்கலையா?"

"முகக்கவசம் போடுவதில் எனக்கும் விருப்பம் இருந்தது...  நான் விரும்பித்தான் முகக்கவசம் போடச் சொன்னேன்; வாடகைத்தாயாக இருப்பது மற்றவங்களுக்குத் தெரியக்கூடாதுனு"

"வீட்டில் குழந்தைப் பிறந்திருக்கு... உங்க வீடா?"

"இல்லை"

"யார்  வீடு?"

"என்னை வாடகைத்தாயாக வைத்தவரின் வீடுனு நினைக்கிறேன்..."

"அவரின் வீடு எங்கிருக்கு?" 

"தெரியாது"

"தெரியாதுனா?"

"கண்ணகி சிலைகிட்ட காத்திருந்தேன்... ஒரு கார் வந்தது... என்னை ஏத்திக்கிட்டாங்க... காருக்குள் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிட்டேன்... நான் கண்விழிச்சுப் பார்த்தப்ப ஒரு பெரிய வீட்டு மாடியில் இருந்தேன்..."

"தேன்மொழி நீங்க வாடகைத்தாயாக இருந்தது உங்க அம்மாவுக்குத் தெரியுமா?"

"தெரியாது... வெளிநாட்டில் வேலை கிடைச்சிருக்குனு பொய்ச் சொன்னேன்... எனக்கு முன் பணமா கொடுத்த ரெண்டு இலட்சத்தை அம்மாகிட்ட கொடுத்துட்டுக் கிளம்பிட்டேன்..."

"ம்... தேன்மொழி, வாடகைத்தாயாக இருக்கத் தகுதி இருக்கானு உங்களை மருத்துவ ஆய்வு செஞ்ச பிறகுதானே, உங்களுக்கு முன் பணம் தந்திருப்பாங்க"

"ஆமா!"

''எந்த மருத்துவமனையில் நடந்தது?"

 "மருத்துவமனையில் நடக்கலை... அதுவும் ஒரு வீடுதான்!... மருத்துவருடைய வீடுனு நினைக்கிறேன்..."

"எங்கிருக்கு?"

"அண்ணா நகர்"

"சரி... அண்ணா நகர் இப்ப போகலாமா?"

"போனாலும் எந்தத் துப்பும் கிடைக்காது சார்... அந்த இடம் இப்ப வணிக வளாகமாக இருக்கு..."

"சரி... தேன்மொழி, நீங்க வாடகைத் தாயாக இருந்தது உங்கள் கணவருக்குத் தெரியுமா?"

"தெரிந்திருந்தால் என்னை மலடினு சொல்லி, மணமுறிவு கேட்டிருக்க மாட்டார்... விபச்சாரினு சொல்லி எப்பவோ கழற்றி  விட்டிருப்பாரே"

"நீங்க காதல் கல்யாணமா?"

"காதலனாக இருந்தால் உண்மையைச் சொல்ல எனக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்... எனக்கு நடந்தது வலுமணம்... என் அழகு அவருக்குப் பிடிச்சிருக்குனு, தன்னுடைய பணக்காரத்தனத்தால் என்னை திருமணம் செஞ்சுக்கிட்டார்... அம்மாவும் பணக்கார மாப்பிளைனு சம்மதம் தெரிவிச்சாங்க"

"இப்பவும் நீங்க அழகாகத்தானே இருக்கீங்க..." -என்று சொல்லி வேல்முருகன் தேன்மொழியைப் பார்த்தார்...

தேன்மொழி மவுனமாக இருந்தாள்...

"தேன்மொழி, நான் தப்ப கேட்கலை..."

இப்போதும் ஏதும் பேசாமல் மவுனமாகவே இருந்தாள்...

"நீங்க வாடகைத் தாயாக இருந்ததை உங்க கணவருக்கு நீங்க சொல்ல முயற்சி செய்யவே யில்லையா?"

"என்னைப்  பேச விடமாட்டார்... என்னை  ஒரு கருவியா பயன்படுத்திட்டு போயிடுவார்... என்னுடைய இந்த பத்தாண்டு  திருமண வாழ்க்கையில் நானும் அவரும் பத்து நிமிடம் கூட பேசியிருக்க மாட்டோம்..."

"தேன்மொழி, இப்படியொரு வாழ்க்கை வாழ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?"

"வறுமையில் அம்மா செத்துறக் கூடாதுனு..."

"அம்மாவுக்காக வாழ்ந்துட்டு இருக்கீங்க"

"அதுதான் உண்மை!"

"அம்மா எங்கிருக்காங்க?"

"தனியா இருக்காங்க"

"மகிழ்ச்சியா இருக்காங்க?"

"ஆமா!"

"நீங்க கணவரோடு இருக்கீங்களா?... அம்மாவோடு இருக்கீங்களா?"

"கணவர் வீட்டில் இருக்கேன்"

"ஒரே வீட்டில் இருந்துட்டே மணமுறிவா?"

"இருவரும் சம்மதிச்சால் விரைவில் மணமுறிவு கிடைச்சிருமே... மணமுறிவு கிடைக்கும்வரை தன்னோடு இருக்க என்னை சம்மதிச்சிருக்கார்..."

"மணமுறிவு கிடைச்சிருச்சுனா நீங்க அவரை விட்டுப் பிரிஞ்சு உங்க அம்மா வீட்டுக்குப் போயிடுவீங்க"

"இப்பவே அவரை விட்டுப் பிரிய எனக்குத் தயக்கமில்லை; பயமும் இல்லை... ஆனால்; நான் பிரியும் முன்னாடி, அவருக்கு சில உண்மைகளைப் புரிய வைக்க விரும்பறேன்..."

வேல்முருகன் அவள் முகத்தையே பார்த்தார்...

"நான் மலடியில்லை என்பதை அவருக்குப்  புரிய வைக்கணும்... பத்தாண்டுகள் வாழ்ந்தும் மனைவியை நேசிக்கத் தெரியாத மிருகம்னு அவரை வெளியுலகிற்கு அடையாளம் காட்டணும்... பிள்ளைப் பெறும் கருவியாக மட்டும் பெண்களைப் பார்க்கும் அவரைப் போன்ற ஆண்களுக்கு, நான் ஒரு பாடமாகத் தெரியணும்..."

"நீங்க ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாய்னு தெரிஞ்சா அவர் உங்களை வெறுக்கத்தானே செய்வார்?"

"செய்வார்... ஆனா; குழந்தைப் பெற தகுதியில்லாதவன்னு வெளிச்சமானால்; அவரை அவரே துப்பிக்குவார் இல்லையா?"

"சரி; தேன்மொழி!... நீங்க கிளம்பலாம்"

"ஏன்? என் தரப்பு நியாயத்தை நீங்க, தவறாப் புரிஞ்சிட்டீ  ங்களா?..."

"நீங்க வீட்டுக்குக் கிளம்பலாம்னு சொன்னேன்... உங்கத் தேடுதலை நான் ஏற்றுக் கொண்டேன்... உங்கக் குழந்தையைக் கண்டுப் பிடிக்க முயற்சி செய்றேன்... உங்களுக்குப் பிறந்தது பெண்குழந்தையா? ஆண் குழந்தையா?"

"பெண் குழந்தை!"

"நிறம்?"

"என்னைப் போல் சிவப்பு... குழந்தைப் பிறந்து மூணு வாரம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தேன்... அதுவரைக்கும்தான் ஒப்பந்தம்... ஒப்பந்தம் முடிஞ்சவுடன் குழந்தையை அவங்க வாங்கிட்டாங்க... என் கணக்கை முடிச்சு அனுப்பிட்டாங்க"

"யார் கையில் குழந்தையை ஒப்படைச்சீங்க?"

"எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கிட்ட"

"மருத்துவர் யார்னு  அடையாளம் காட்ட முடியுமா?"

"நானும் முகத்திரை போட்டிருப்பேன்... எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரும் முகத்திரை அணிஞ்சிருப்பார்"

"சரி நீங்க போலாம்..."   

"உங்களுக்கானக் கூலி?"

"இப்ப வேண்டாம்... நீங்களும் ஆதாரம் எதுவும் தரலை... ஆனாலும் எங்க புலனாய்வுப் பணியைத் தொடங்க சம்மதிக்கிறேன்... அதில் ஏதும் தடயம் கிடைத்தால் நீங்க எனக்குக் கட்டணம் கொடுத்தால் போதும்... இப்ப வேண்டாம்..."

"மீண்டும் நான் எப்ப வரட்டும்?"

"உங்களை உங்க வீட்டுக்கு வந்து சந்தித்துப் பேச வாய்ப்பு நேர்ந்தால், உங்களை உங்க வீட்டுக்கு வந்து சந்திக்கலாமா?"

"ஓ... தாராளமாக"

"உங்க கணவர் கேள்வி கேட்டால்?"

"எனக்கு வேண்டியவரை நான் சந்திக்க எனக்குப்  பிறரின் உத்தரவு தேவையில்லை"

"கேள்விக் கேட்டால்?"

"அதை நான் பார்த்துக் கொள்வேன்... எனக்குக் குழந்தையிருக்கு என்ற விபரம் எக்காரணம் கொண்டும் இப்போதைக்கு அவருக்குத் தெரியக் கூடாது"

"அதை நான் காப்பாற்றுவேன்... நீங்க போகலாம்"

அழகு இடை அசைய, இளமை மாறா சின்னப் பெண் போல் ஒயிலாக நடந்துச் செல்லும் தேன்மொழியை வேல்முருகன் பார்த்துக் கொண்டிருந்தார்... 

அவள் பார்வையிலிருந்து மறைந்தவுடன், உள்ளக தொலைபேசியை எடுத்து, "மாறன், நீங்களும் தமிழ்மொழியும் உள்ளே வாங்க..." -என்றார்...

மாறனும், தமிழ்மொழியும் வந்தனர்... இருவருக்கும் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்...

"இப்ப வந்துட்டு போனாங்களே, அவங்க பேர் தேன்மொழி"

"எஸ் சார்... தேன்மொழியும் நீங்களும் பேசிட்டிருந்ததை நாங்க ஆடியோவில் கேட்டுட்டு இருந்தோம்" - என்றாள் தமிழ்மொழி...

"இதுதான் அவங்க கோப்பு"

கோப்பு நீட்டினார்!

"தேன்மொழியின் குழந்தையைத் தேடும்  பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்... இப்ப இருந்தே நீங்க வேலையை ஆரம்பிக்கலாம்"

"எஸ் சார் " -என்று ஒருசேர மாறனும், தமிழ்மொழியும் கூறிவிட்டு வெளியேறினர், வேல்முருகனின் அறையிலிருந்து...

    

2.

 

  

  "ஒரு டீ  குடிச்சிட்டுப் போலாமா..." -மாறன் கேட்டான்...

         

   



  

 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்