காதல் கவிதைகள்...
-அரங்க கனகராசன்
1.இதழ்மீது பல் பதிக்க வருவானோ...
-----------------------------------------------------------
நீராடி நான்
நிலைக் கண்ணாடி எதிரில் நின்று
என்னை நான் பார்ப்பேன்...
பள்ளியறையில்
"கிள்ளையே உன்னை நான்
அள்ளவா " என்றுக் கூறி
கிள்ளிக் காயம் பலச் செய்தான்...
இதழ் மீதும் - என்
மார்பின் மீதும்
பல் பதித்து வடு செய்தான் ...
காயமும் காயவில்லை
வடுவும் நீங்கவில்லை
வடிவழகன் என்னை நீங்கினானே...
அவன் செய்த காயம் ஆடியில் கண்டு
கண்கள் நாணும்...
இனியொரு முறை
இதழ்மீது பல் பதிக்க வருவானோ என
இதயம் ஏங்கும்...
ஏக்கத்தில் என்மேனி
நிறமிழந்து
உருவும் மாறியதே ...
காமம் கொண்டு நெஞ்சில் இவள்
ஏங்குகிறாள் என்றே என்னை
ஏளனம் செய்வோரே
என் ஒருசொல் கேளீரோ...
எனைவிட்டு
என்னவன் பிரிந்தான்...
அதனால்
சிதிலமானது நெஞ்சு
சீரிழந்தது மேனியென
யாரும் நீவிர் கூறீரோ...
----------------------------------------------------------
2.அவர் மீது கால் போட்டிடவா...
--------------------------------------------
கட்டியவன் மீது
என்கோபம் தீரவில்லை...
பேசமறுத்து
முகத்தைத் திருப்பிக் கொண்டேன்...
தூக்கமும் வரவில்லை...
பரந்தமார்பை எனக்குக் காட்டி
பாயில் படுத்திருக்கிறான்...
உருண்டத் தோள்களோ - என்னைச்
சுண்டியிழுக்கிறது...
இதழ்கவ்வும் இதழ் கண்ணில் பட்டு
இதயம்தனைத் துளையிடுகிறது...
சில்லென்றக் காற்றும் - என்
சின்ன மேனிக்குள் சிலிர்த்தது...
காமத்தீச் சுட்டெரிக்கிறதே...
உருண்டுச் சென்று - அவர்
உணரா வண்ணம்
பூப்போல் என்கரத்தை - அவர்
மார்மீது வைத்திடவா...
உறக்கத்தில் தவறி
கால்பட்டதுப் போல்
அவர் மீது
கால் போட்டிடவா...
பாழும் நாணம்
பாவையென் காமத்துக்கு
தடைப் போல் தடுக்கிறதே...
நெஞ்சே என் நன்னெஞ்சே
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னிடம்
வஞ்சிக்காதே - வாழ்வில்
நஞ்சுச் செய்யாதே
நாணத்தை விரட்டு
அல்லவெனில் - என்
காமத்தைத் துரத்து...
நெஞ்சே
காமத்தையும் நாணத்தையும்
ஆழமாய் என்னுள் வைத்தாய்...
மூழ்கி நான் மடிந்து விடுவேனோ
தாங்காது என்மேனி
இரண்டில் ஒன்றை
என்னிலிருந்து எடு நெஞ்சே!...
-------------------------------------------------------------------
3. இளந்தோள்கள் வலித்தனவே...
--------------------------------------------------
வா... வா...
கண்ணாளா
கண்ணால் உன்னைக் காணவே...
கயல்விழியாள் காத்திருக்கிறேன்
வா வா கண்ணாளா...
காற்றோடு நான் விட்ட தூது
காதோடு கேட்டதா...
முகில் பார்த்தும் சொன்னேன் - இடி
முழக்கமாய் அது சொல்லவில்லையா
வா... வா... கண்ணாளா
கண்ணார நானுன்னைக் காணவே!
கண்ணார நானுன்னைக் கண்டாலே
பசந்த என் தோள்கள்
வசந்தமாகும்...
இறுகத் தழுவியப் போது - என்
இளந்தோள்கள் வலித்தனவே...
இளந்தோளின் வலி நீங்க
இனியவனே தழுவிட வா வா
கண்ணாளா வா வா
-----------------------------------------------------------------------------
4. இந்த இரவினில் என் தழுவல் வேண்டி ...
--------------------------------------------------------------
என்சொல் கேளாத நெஞ்சே
ஓர்சொல் மட்டும்
உறுதியாய்க் கேள்...
தழுவ வருவான் தங்கமார்பழகன்...
தழுவாமல் நான் கோபமாய்
விலகிப் புரள்வேன்...
குளிர்க் கொண்ட - இந்த
இரவினில்
என் தழுவல் வேண்டி
என்னவன் படும் வேதனைக்
கண்டு மகிழ்வோம் சிறுதுநேரம்...
உறுதியற்ற நெஞ்சே
உறுதுணை செய்வாய் எனக்கு நீ!...
என் தழுவல் வேண்டி
என்னவன் தவிக்கும் தவிப்பை
இந்த இரவினில் கண்டு மகிழவேண்டும்
என்நெஞ்சே...
ஆதலால் நெஞ்சே - நீ
உறுதியிழந்து தழுவலுக்கு ஏங்கி
என் உறுதியைக் குலைத்துவிடாதே...
--------------------------------------------------------------------
5. என்வாசல் மீது...
---------------------------
செல்லாதே - என் நெஞ்சைக்
கொல்லாதே என்றேன்...
மாறு
சொல்லாதே - என் சொல்லைத்
தள்ளாதே என்றான்...
எல்லை நீங்கிச் சென்று
பல்லாயிரம் ஈட்டுவதேன் ...
என்னருகில் நீயிருந்தால்
பொன்னும் மணியும் ஈடாகுமோ?...
கண்ணாளனே
எங்கும் செல்லாதே என்றேன்...
என்சொல் கேளாது
தன்நிலை மாற்றாது
என்னைவிட்டுச் சென்றான்
என்ன சொல்வேன்...
திங்கள் பலவாயிற்று!...
திண்ணையில் நின்று
தெருவைப் பார்த்திருப்பேன்...
வருவோர் முகத்தை
வாஞ்சையுடன் பார்ப்பேன்... - என்
வடிவழகனோவென்று
இரவின் பனிக்காற்று
இதயத்தைத் துளையிட
உறக்கத்தை நீக்கி - சன்னல்
திரையிடுக்கில் பார்வையை நிறுத்தி
தெருவைப் பார்க்கிறேன்...
வந்தாலும் வருவான்
வந்தென் கதவைத் தட்டுமுன்
கண்ணால் கண்டு
கட்டியணைக்கக்
காத்திருக்கிறேன்
அதனால் நிலவே!
மறைந்து விடாதே - வான்
திரையில் நீ நின்று
என்வாசல் மீது
பொன்னொளியைப் பொழிந்திரு...
ஒய்யாரமாய் வரும் - என்
மெய்யழகனை
உறங்காத என் விழிகளுக்குக் காட்டிவிடு...
மறையாமல் நீ நெடுநேரம்
என்வாசல் மீது
ஒளிசெய்வாய் என
உண்மையாய் நான்
உள்ளத்தால் நம்புகிறேன்...
நீயும் பெண்ணல்லவா - நிலவே
நானும் பெண்ணல்லவா...
பெண்மனதறிந்த
பொன்நிலவே
வாழி நீ!... வாழி நீ!!...
-------------------------------------------------------------------------------
6.கோபம் போனதெங்கே?
----------------------------------
என்னதான் நினைப்பு அவருக்கு
இல்லத்தில் நானொருத்தி
இருப்பதை மறந்தாரா...
அக்கறையுள்ளவர்போல்
அழகுமலரோடு இன்று
வந்துள்ளாரே...
தோழி,
பிரிவுச் செய்த என்னவரிடம்
சிறிதேனும் சிணுங்கி
கோபம் கொண்டு
நாலுவார்த்தை
நறுக்கென்றுக் கேட்டிட வேண்டுமென்று
பள்ளியறைக்குள் நான் சென்றேன்...
பாவையெனைக் கண்டதும்
பூவிதழ் விரிவதுப் போல்
புன்னகைச் செய்தார்...
அகலவிழிகளை விரித்து - என்
அங்கங்களில் மேய்ந்தார்...
கோமானைக் கண்டதும்
பேதை நெஞ்சம்
கோபம் மறந்து
தாபம் கொண்டது...
தாவியோடித் தழுவி மகிழத் துடித்தது...
கட்டியணைத்து கன்னத்தில்
முத்தமழைப் பொழியவே விழைந்தது...
---------------------------------------------------------------------------------
7.ஊடலை நீடித்தேன்...
"கண்வீங்கி
கன்னம் சோர்ந்து
உடல்தளர்ந்துப் போனதேன் தோழி"
"பொய்க் கோபம் கொண்டு
புரண்டுப் படுத்தேன் நான்...
கெஞ்சியெனை நெடுநேரம்
மஞ்சத்தில் மன்றாடினார்...
ஏக்கத்தில் கெஞ்சினாலும்
அதிலோர் சுகம் கண்டேன்
அதனாலென்
ஊடலை நீடித்தேன்...
நீண்ட ஊடல் கண்டு - என்னவன்
கோபம் பெரிதாய்க் கொண்டான்...
தழுவலின்றி
கழிந்ததடி இரவு - உள்ளம்
பதைக்கிறது!"
------------------------------------------------------------------------
8. ஒரு முத்தம்... ஒரு தழுவல் ... ஒரு முயக்கம் ...
நினைத்தாலே இனிக்குது நெஞ்சு
நிம்மதியாய்ப் பாடுது மனசு...
ஏனென்று என்னைக் கேட்கிறாயா?
தோழி சொல்வேன் கேளடி!
ஒரு முத்தம்
ஒரு தழுவல்
ஒரு முயக்கம் இல்லையே...
இதென்ன தனிமை தவிப்பு என்று
காமங்கொண்டு நான்வாட
என் வேதனைக் கடலினும் பெரிதடி
என்னவென்றுச் சொல்வேன்
இந்நோயை எனக்குச் செய்தது
என்னிருக் கண்களல்லவா...
அழகன் இவனென்று
ஒருவனை
எனக்குக் காட்டியது என்கண்கள்
அவன்
நினைவில்
நான்படும் வேதனைக் கண்டு - எனது
மான்விழிகளும் மாளாத் துயரில்
நீர்ச் சொறிந்து அழுகின்றனவே...
எனக்குத்
துன்பம் செய்த விழிகள்
இன்று
துன்புற்று அழுவதால்
இன்புற்று
என்னிதயம்
இசைக்குயில் போல்
பாடுது தோழி!...
-------------------------------------------------------------------------------------
9. தூக்கமின்றி வாடுகிறேன் ..
----------------------------------------
ஆசை முத்தம் ஆயிரம் தந்து காமசுகத்தால் குளிர்வித்து - எனை
ஆழ்க்கடலுக்கே அழைத்துச் சென்றவன்
இன்றில்லை...
காமத்தின் ஆழத்தைக் காட்டியவன்
பேதை எனைவிட்டு
தூரமாய்ப் பிரிந்தானே...
இதென்னக் கொடுமை - என்
இளமையைத் துடிக்கச் செய்யும் கொடுமை...
காட்டாற்று வெள்ளமாய்
எனைச் சூழ்ந்ததே...
காமச் சூட்டில் - என் நெஞ்சு
வெந்து வெடிக்கிறதே...
பஞ்சணையில் புரண்டு - என்
பிஞ்சுடல் புண்ணாகுதே...
ஆசை அளவின்றி வாட்டுதே
காமத்தை அடக்கி
கண்துஞ்ச முயல்கிறேன்...
கடுகளவும் இல்லையே தூக்கம்...
வானும் மீனும்
காடும் மேடும்
ஊரும் ஊரில் எல்லா உயிரும்
தூங்கி இருக்க
நானோ - நடு
சாமத்திலும்
காமத்தால் தூக்கமின்றி
வாடுகிறேன் துவண்டு...
--------------------------------------------------------------
10.இடைக்கொரு முத்தமும் ...
------------------------------------
ஒரு கையால்
கார் குழல் வருடுவார்...
மறு கையால்
தோள் தொட்டு முதுகு தடவுவார்...
இதழால்
நுதல் தொடுவார்...
இமை மீதில் மூச்சு தருவார்
நாசிதனை மெலிதாய்க் கடிப்பார்
இதழ் கவ்வி சுவைப்பார்...
இருகரத்தால் - என்னை
மார்போடு அணைத்து
மஞ்சத்தில் சாய்ப்பார் ...
வயிறு மீது அவர் விரல் நடக்கும் - என்
உயிரோ உல்லாச வானில் பறக்கும்...
இடைக்கொரு முத்தமும்
தடையின்றிக் கீழும் கீழும்
அளவின்றி மேலும் மேலும்
ஆசை முத்தம் ஆயிரம் தருவார்...
நாவில் நல்ல வீணை மீட்டி - என்
நாணத்தை புதைக்குழியில் தள்ளுவார்...
அவரோடு நான் கூடி மகிழ்வதை
அளவிட்டுக் கூறின் - அது
கடல்போல் பெரிதேன்பேன்...
காதலன் ஒருநாள்
தூரமாய் - எனைப் பிரிந்துப்
போய்விட்டால்
காமம் கொண்டு
நான்படும் வேதனைக்
கூறிட வேண்டுமோ...
காமத் துயரின் அளவும்
கடலினும் பெரிதேன்பேன்...
-------------------------------------------------------------------
11.நினைத்தாலே இனிக்கும் காதல்!
அடிப்பார் - செல்லமாய் இடிப்பார்..
கிள்ளுவார்
அள்ளி அணைப்பார்...
உச்சிக்கும் உள்ளங்காலுக்கும்
உதட்டால் பாதை சமைப்பார்
நாவால் நாவை நீவி
மோகவீணை மீட்டுவார்...
என்னவென்பேன் - அவர்
எது செய்தாலும்
இன்பங் கோடி என்பேன்...
என்னை மயக்கிய மன்னவன்
ஏழுகடல் தாண்டி இருப்பினும்
நான்
நினைத்த நேரத்தில்
என்
எண்ணத்தில் உலா வருவான்...
கன்னல் போல்
இன்பம் பொழிவான்...
இதுபோல்
இனியச்செயல் எதுவுமில்லை....
------------------------
12. அவள் விழிகள்...
இளந்தளிர் - இவள்
விழியிரண்டும்
எந்தன் உயிர்ப் பறிக்கிறதே
விழியிரண்டும்
கொலைக் கருவிதானோ...
அல்ல...
அழகிய வடிவங் கொண்ட கண்களோ...
அல்ல...
மானின் விழியை
மங்கையிவள் முகத்தில் வைத்தாளோ...
மையல் பொழியும்
மரகதச் சுடரிவள் பார்வையில்
இம்
மூன்றுவிதக் காட்சிகள்
ஒன்றன்ப் பின் ஒன்றாய்த் தெரிகிறதே...
அவள் விழியிரண்டும் என் உயிர்ப் பறிக்கிறதே...
உயிர்ப் பறிக்கும் கருவியோ அவள் விழிகள்...
அல்ல எழில் விழியினள்தான் என்றாலும்
அவள் விழிகளில் பேரெழில் மிளிர்கிறதே...
ஆதலால்
இவள் மானின் விழியை இரவலாய்ப் பெற்றனளோ...
மையல் பொழியும் இவள் விழிகளால்
என்னுள் மூன்றுக் காட்சிகள் விரிகின்றனவே...
------------------------------------------------------------------
13. இதழ்கூடினால்...
"ஆயக்கலைகள் அறுபதுக்கும் மேல்
அதிலொன்று
இதழோடு இதழ் கூடுதல்"
"இதழோடு இதழ் கூடுதலா
என் வயிறும் குமட்டுதே
இதுவும் கலையாகுமோ"
"அய்யமென்ன"
"ஒருவர் எச்சில்
பிறிதொருவர் உண்ணல்
நலக்கேடுத் தருமே"
"எச்சிலன்று... கேள் நண்பா..."
அது
பாலும் தேனும் கூடிய விருந்து!
இளமகள் - அவள்
இதழ்கூடினால்
முத்துப் போல் ஒளிரும்
சித்திரப் பல்வரியினூடே
ஊறும்நீர்தான்
பாலும் தேனும்!
"இதுநாள் வரையும்
இதனை அறியாதுப் போனேன்...
இன்றெனது
இளங்கிள்ளையின்
இதழோடு இதழ் சேர்த்து
பாலும் தேனும் பருகுவேன்...
தோழனே நன்றி!"
------------------=-------------------
14. காதல் வாழ்க!
இனியவளே - என்
இதயம் கவர்ந்தவளே!
கனியமுதே
கார்குழல் பேரழகே!
இனியப் பிறப்பு
மானிடர்ப் பிறப்பு...
மானிடராய்ப் பிறந்திட்ட யாம்
எக்காரணம் கொண்டும்
இவ்வினியப் பிறப்புதனில்
பிரிதல் கூடாது கண்ணே...
பிரிதல் என்பதுக் கொடுமையாகும் கண்ணே
ஆதலால்
பிரியோம் யாம்
பிரியோம் யாம் என்றேன்...
இனியாளை இறுகத் தழுவியே...
காதலனே
கண்ணிறைப் பேரழகனே
என்னையாளும் மன்னவனே
வாழ்க்கை என்பது
நிலையாமை என்பதனை அறிவாயா...
இன்றில்லையென்றாலும்
என்றேனும் ஒருநாள் - இயற்கை
எம்மிருவரைப் பிரித்திடுமே என
கண்ணீர்ப் பெருக்கிக் கலங்கியழுதாள்...
-----------------------------------------------------------------------------------------------------------
15.ஒருவர்மீது ஒருவர்ப் புரள...
தோளோடுத் தழுவி
தோகைமயில் பாலமுதுப் போல்
காமவிருந்து படைத்தாள்...
இறுகத்தழுவி இருவரும்
ஒருவர்மீது ஒருவர்ப் புரள
வாட்டியக் குளிரும் வழிப்பார்த்து ஓடியது...
வாகையாய் சூடும் வந்துக் குடியேற
தத்தையின் தளிருடலில்
நீர்த்துளி அரும்பியது...
மான்விழி மங்கை - சிறு
ஓய்வுக் கொள்ளட்டுமென்று
ஓசையின்றி - அவன்
ஆசைக்கிளியின் தழுவலைத் தளர்த்தினான்...
தழுவல் தளர
தத்தை சித்தம் கலங்கினாள்...
வண்ணமுகம் வாட்டம் கொண்டது...
பசுந்தளிர் மேனியாள்
சோகம்கொண்டு நெளிந்தாள்...
சின்னநெற்றி சீர் கெட்டு
சிறுசுருக்கம் பிறந்தது...
-------------------------
16என்னருந்தோழனே
"என்னருந்தோழனே
என்னநீ சோகமானாய்...
ஊரிலிருந்துத் திரும்பி - ஒரு
நாளும் ஆகவில்லை...
ஏன்நீ துயரோடு
காணப்படுகிறாய்..."
"என்னருந்தோழனே...
என் நெஞ்சின் சுமையைக் கூற
உன்னைவிட்டால் - வேறு எவருண்டு...
என்மொழிக் கேட்டு
எனக்கோர் ஆறுதல் கூறு...
ஊருக்குச் சென்று - உடனே
திரும்பினேன் இங்கு
பணியின் பொருட்டென்று
அறிவாய் நீயும்..."
நாணமென்னும் நன்கலம் சூட்டி
பெண்மைக்கு பெருஞ்சிறப்பு செய்பவள்
பெண்ணல்லவா ...
இதனை நான் - என்
இனியாளிடம் கண்டேன்...
பணியின் பொருட்டு
பைங்கிளியே
செல்கிறேன் விடைகொடு என்றேன்...
தழுவி சுகம் தந்தவனே
விலகி நீ தொலைவு சென்றால்
பொழியும் காமமழையில்
தொலைவேன் நான்...
காமத் தொல்லைத் தாங்காமல்
கேவி யழுவேன்என்று
வாய்த் திறந்து
வனிதை சொன்னாளில்லை...
நாணம் கொண்டு அடக்கி நின்றாள்...
காமவேதனையிலும்
காரிகையவள்
காட்டவில்லை நெஞ்சின் துயரெனில்
பெண்மைக்கு பெருஞ்சிறப்பு செய்தவளன்றோ
என் கண்மணி...
ஆயினும் நண்பா
அவள் நெஞ்சின் துயரை
கண்டேன் கண்ணில்
என் கட்டழகி தன் கண்ணிரண்டில்
காமநோய்க் கண்டு
வானளவுத் துயரடைவேன்
கண்ணாளா
பெண்எனக்கு பெருந்துயர் தராதே
போகாதே பொன்னழகனே என்று
கெஞ்சினாள்...
கெஞ்சிய விழிகள் - என்
நெஞ்சில் காட்சிகளாய் விரிந்து
நெடுந்துயர் தருகிறது தோழனே
என்மொழி சொன்னேன்
எனக்கோர் ஆறுதல்கூறு...
------------------------
17. இடைதனில் வீணை மீட்டிடுமோ...
கோபம்கொண்டு - என்
கோலமயில்
சோகமாய் முகத்தை ஆக்கினாள்...
பேசமறுத்து - என்
பைங்கிளி
மைவிழி மூடினாள்...
ஊடல் தணிக்க
இருவிரலால்
இடைதனில்
கிசுகிசு மூட்டினேன்...
செவ்விதழ் விரிய சிரித்து
தளிர்விரலால் என்னைத் தட்டி
பொன்மேனியை என் பக்கம் திருப்பி
கண்ணிமை மலர நோக்குவாள் என்று
நானிருக்க
கோதையோ மேலும்
கோபம் கொண்டு சீறினாள்...
முன்னர் இதுபோல்
சினம்கொண்ட பெண்டிரை - இப்படித்தான்
சீண்டி
சினம் தணித்தாயோ...
அல்லவெனில்
சரளமாக உம் விரல்கள் - என்
இடைதனில் தவழ்ந்து வீணை மீட்டிடுமோ...
இது முன்னர் நீர்பெற்ற பழக்கம் தானே என்று
இடியாய் வெடித்தாள் என்னிதயம் அதிரவே...
-------------------------------------
18. விம்மி நின்ற மார்பழகை ...
கண்ணே
கருவிழிப் பெண்ணே
செந்தேனே
செம்பவழப் பூஞ்சிட்டே
உன்னை நான் நினைத்தேன் என்றேன்...
அதற்கவள் சொன்னாள்
இதயம் அதிர
நினைத்தீரா... - எனை
மறந்து விட்டீரா...
மறந்தால்தானே - மீண்டும்
நினைக்கத் தூண்டும்...
ஏன் மறந்தீரெனை
என்று சொல்லி - என்
நெஞ்சு அதிரச் செய்தாள்...
தழுவிய என்னைத் தள்ளிவிட்டு
விலகிப் படுத்து ஊடினாள்...
விம்மி நின்ற மார்பழகை - என்
விரல் தொட விடாமல்
முரண்டுப் படுத்தாள்...
-------------------------------
19. தும்மலுக்கு மருத்துவக் குறிப்பறியா பேதை...
துடியிடையாள் - என்
துணையாள் - மூட
மனம் கொண்டவள்...
தும்மலுக்கு
மருத்துவக் குறிப்பு என்னவென்று
அறியா பேதையிவள்...
அதனால்
வந்த - என்
தும்மலை அடக்கிக் கொண்டேன்...
உணர்ந்து உடனே
அழுதாள் அன்னக்கிளி !
அழுவதேன் என் அழகே என்றேன்...
உம்மை ஒருத்தி நினைக்கின்றாள்...
அதனால்தானே
உமக்குத் தும்மல் வந்தது...
தும்மினால் - நான்
தெரிந்துக் கொள்வேனென்று
அடக்கிக் கொண்டீரே தும்மலை!
அறிந்தேன் நானதனை...
ஆசை நான் உம்மீது வைத்திருக்க
ஆசையாய் வேறெவளை நெஞ்சில் வைத்தீர்...
மோசம் செய்யலாமோ எனக்கு நீர் - என்று
பேசினாள் பல!... அழுதாள் கூடவே...
----------------------------
20. இரவே விடியாதே...
நிலவில் மூழ்கி
நிலத்தில் பிறந்து
ஒளியை சிந்தும்
ஒய்யாரப் பெண்ணே!...
விழியால் வீழ்த்தும்
கலையைக் கற்றவளே...
மொழியில் மௌனத்தை
கலந்து மொழிபவளே...
எழில் கொழுந்தே என் பூஞ்சரமே
நிழல் தருவே பொன்மேனியாளே
பனிமலையில் பூத்தெழுந்து
குளிர்விக்கும் விந்தைச் சுடரே!...
உன்னைக்
கண்ணில் கண்டாலும்
உள்ளத்தில் நினைத்தாலும் - என்
நரம்பின் அணுக்களும்
குறும்பு செய்யத் துடிக்கும்...
அரும்பின் அரும்பே
அழகின் அழகே
நிலவின் நிலவே - நீ
ஊடல் செய்வாய் செய்வாய்
செவ்விளந் தோளாய்
செம்பவழ இதழாய் - நீ
ஊடல் செய்வாய்!...
என்
ஆழ் நெஞ்சின்
ஆசை இதுதான்...
பேசுங்கிளியே - நீ
பேசாது ஊடல் செய்வாய்!...
இரவே - நீ
விரைந்து விரைந்து ஓடாதே...
கயிறுக் கொண்டு கட்டி - உன்னை
நெடுநேரம் நிற்க வைக்கட்டுமா...
இரவே இரவே நீ போகாதே...
இனியாள்
இடைத்தொட்டு
கனிவாய்க் கனிவாய்
கன்னந்தொட்டு
பனியாய் பனியாய்
வயிற்றில் விரல் வரைந்து
தொடையில் இதழால் ஊர்ந்து
தொகையாய் தோள் தடவி
வளைசங்காம் கழுத்தில் இறங்கி
வளம் நிறை மார்பில் ஊர்ந்து
தொப்பூளுக்கு தொன்னூறு முத்தம் தந்து - அவள்
வெப்பத்தை நான் உள்வாங்கி
தப்பாமல் ஊடலை
தணிக்க வேண்டும்...
அதனால் இரவே விடியாதே...
----------------
21. எனக்கு நீ இனித்தாய்...
உன்னைக் காணும் - என்
கண்களுக்கு - நீ
இன்பம் தருகிறாய்...
உன்
சொல் வீச்சில்
சிரிப்பலையில்
என் செவிக்கு இன்பம் தருகிறாய்...
நாவால் - உன்
மேனியைத் தீண்டினேன்...
நாவும் பெற்றதம்மா இன்பம்...
முகர்ந்தேன் - உன்
அங்கமெங்கும்...
அங்கமெல்லாம் - அடியே
ஆனந்தமாய் மணம் நுகர்ந்தேன்...
முழுமையாய் - முழுநிலவே
உன்னைத் தழுவினேன்...
இன்பக் கடல்போல்
எனக்கு நீ இனித்தாய்...
என்
ஐம்புலனும் ஓரிடத்தில்
ஓராயிரம் சுகம் காணுமெனில்
அது
சுடரும் வளையணிந்த
சுந்தரச் சிலையே உன்னிடத்தில்தான்!...
-----------------------
22. என்னிதயம் கவர்ந்தவளே...
'மது உண்ணும் பழக்கமுண்டோ
மன்னவனே சொல்லு' என்றாள் ...
'மாந்தளிரே
உன் இதழருந்தியதுண்டு
எந்நாளும் நான் மது அருந்தியதில்லை
இனிமேலும் அருந்தேன்' என்றான்...
ஏனென்றாள்
மதுவுண்டால் மயக்கமுண்டு என்பான்
மங்கையே
என் தோழன் ...
மதுவருந்தாப் போதில்
மயக்கம் துளியும்
மனதில் இல்லை என்பான் மேலும் அவன் ...
ஆனால் பெண்ணே
மதுவருந்தாமலே - நான்
மயங்குவதுண்டு அறிவாயா நீ என்றான்...
மதுவின்றி மயக்கமா
அறியேன் மன்னவா என்றாள் ...
உன்னைக் கண்ணால் கண்டாலே
கண்மணி
என்நெஞ்சில் போதையூறுதடி...
உண்டால் மயக்கம் தந்திடுமாம் மது
உன்னைக்
கண்டாலேப் போதுமே
கணக்கின்றி நெஞ்சில் போதை ஏறுதே ...
இனியவளே
என்னிதயம் கவர்ந்தவளே...
-----------------
23.
15. மாங்கனியின் சுவையை...
கார்க்குழல் பெண்ணே
கருவிழிப் பெட்டகமே
இருகன்னமும் - உனக்கு
இரு நிலவோ...
மது நிரம்பப் பெற்ற
இதழிரண்டுக் கொண்டவளே
மாங்கனியின் சுவையை - இள
மார்பில் கொண்டவளே...
இருளில் - நீ
இளநகைப் பூத்தால்
ஒளிப் பிறக்கும்...
நிலவில்லா நாளில் - உன்
தளிருடல் ஒளித் தரும்...
என்றெல்லாம் என்னைப் புகழ்ந்தவனே
உந்தன் மொழியழகால்
எந்தன் உள்ளம் மயக்கி
என்னை ஆட்கொண்டவனே...
சாயலும் நாணும்
= எங்கே என் மேனியழகு
எங்கே என் நாணம்
எல்லாமே
அவர்கொண்டார்
= நீக் கொண்டாயோ...
நீப் பிரிந்துச் சென்றப்பின்
உன்னை நான்
நெஞ்சில் பார்க்கிறேன்...
நெருப்பின் ஒளிப் போல்
ஒளிர்கிறாய் ஆழகாய்...
என்
உள்ளத்தில் நீ
உலா வரும்போதெல்லாம்
அழகனே என நான் அழைப்பேன்...
ஆண்மகனே
வெட்கங் கொண்டு நீ
தலை கவிழ்கிறாயே...
என்னழகை நீ
அள்ளிக் கொண்டாயோ...
எனது நாணத்தையும்
எடுத்துச் சென்றாயோ...
கைம்மாறா
= மாறாய் நீயெனக்கு
நோயும்
= காமநோய்த் தந்தாயோ
கட்டுக்குள் அடங்காத
காதல் நோயால் - நானும்
நாணம் துறந்துப் புலம்புகிறேன்...
பசலையும் தந்து.
= உன்னால் புகழப்பட்ட - என்
தளிர்மேனியில் இன்று
ஒளியில்லை...
பசலைப் படர்ந்து
மெலிந்தேன்...
மெலிவையும் நீதான்
தந்தாயோ...
-------------------------
சாமியும் பேயும் இல்லை...
பாம்பொன்று கனவில் கடித்தால்
தீங்கெல்லாம் நீங்கிடுமாம்
மலம் தின்றால் கனவில்
நலம் செழிக்குமாம் வாழ்வில்...
பகல் கனவு பலிக்காதாம் - ஆனால்
விடிகாலை கனவு நனவாகுமாம்...
இன்னும்பல பலர் பகர்வர்
இதிலென்ன விந்தை என்கிறாயா தோழி!...
கனவு என ஒன்று - வரும்
காரணம் என்னவென்று
ஊரில் பலரிடம் கேட்டேன்...
கேட்டதைச் சொல்வேன் கேளடி...
சாமியும் பூதமும் கண்ணில் தோன்றி
கனவு செய்யுமாம்...
கெட்டவர் ஆவியும்
கெடுதி செய்யவே வருமாம்...
செத்தவர் நல்லவரெனில்
சித்தமினிக்க கனவு வருமாம்...
இளவயதில் பெண்ணொருத்தி
மரணம் எய்திட்டாலும்
மோகினியாய் அவதரித்து
மோகக் கனவுத் தருவாளாம்...
இன்னும்பல கேட்டேன் தோழி!...
வள்ளுவன் சொன்னதையும்
சொல்கிறேன் கேளடி...
சாமியும் பேயும்
காரணமில்லை...
கனவு மலரக் காரணம்
நினைவலைகளே என்றான் வள்ளுவன்...
பகுத்த அறிவால் - வள்ளுவன்
பகன்றது
உண்மை என்றே - என்
உள்நெஞ்சு கூறுகிறது தோழி!...
கொஞ்சிப் பேசி என்னுள்
குடிப்புகுந்தானோ
ஏறு போல் நடையிட்டு
என்னிதய பீடம் ஏறினானோ
ஓரக்கண்ணால் பார்த்து
ஒளித் தந்தானோ நெஞ்சுக்கு!...
நினைக்க நினைக்க - என்
நெஞ்சம் இனிக்கிறதே...
நினைவலைகள் - என்
ஆழ்நெஞ்சில்
ஊஞ்சலாடாதெனின்
கனவொன்று தோன்றுமோ...
தோன்றியக் கனவில்
தோன்றியக் காதலரும்
நீங்குவாரோ கூறு தோழி...
----------------
-----------------------------------------------------------
காதல் மணம்... கண்ணாளனை பொய்வழக்கில் சிக்கவைத்து சிறை அனுப்புகின்றனர் மணமகளின் தந்தை... சிறைவாசம் முடிந்து, திரும்பியப்போது மனைவி ஓராண்டு கைகுழந்தையோடு இருக்கிறாள்... மனதால் இணைந்த இருவரும், மீண்டும் ஊருக்குத் தெரியாமல் ஓடுகின்றனர்... மோப்பம் பிடித்த, மணமகளின் தந்தையோ, தானூர்த்தி வரும் பாதையில், வெட்டிய மரம்தனை சாய்க்கிறார்... தானூர்த்தி நொறுங்குகிறது... கூடவே காதலர் இருவரும் மரணம் தழுவிட, இருவரது சடலமும் இரத்தம் தோய்ந்து தெருவில் கிடக்கிறது... இது எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தை, தாயின் மார்பை கவ்வுகிறது பசிக்காக...
-இது ஒரு குறும்படம் ...
இப்படத்தின் இச்சூழலை மையம் படுத்தி எழுதப்பட்ட பாடல் இது:-
மரம் சாய்ந்துப் போனதம்மா
மாங்கனி அறியவில்லை...
குரல் சோகம் ஆனதம்மா
பூங்குயில் அறியவில்லை...
புதியதோர் வார்த்தைகள் சொல்லி
இனித்திடும் முத்தங்கள் தந்து
மனங்கவர் சந்தங்கள் பாடி
உறங்க வைத்த அன்னையிங்கே
உறக்கம் ஆனாளே...
உறக்கம் ஆனாளே...
தவிக்குதம்மா கைக் குழந்தை
தாலாட்ட இனி வருவாளோ...
கொடி சாய்ந்துப் போனதம்மா
பூக்கள் அறியவில்லை...
நதி மாறியே போனதம்மா
மீன்கள் அறியவில்லை...
முகிலை நிலவை ஊர்வலம் ஆக்கி
அமுதமழையில் பசியைப் போக்கி
இரவும் பகலும் இமையாய் காத்து
இனியவன் வருகையை எதிர் நோக்கி
புதிய உலகின் பயணம் பார்த்து
புறப்பட்டக் காதலும் கண்ணீராச்சே
பூந்தளிர் அறியலியே...
- அரங்க கனகராசன்.
வேகம் கூடாதடா
ஒருமையில் - அவள் என்னை விளிக்கும் போது
என்னுள்
ஓராயிரம் ஊஞ்சல் ஆடும்...
அவள் வருகையின் பொருட்டு
எனது காத்திருப்புகள்
என்னை வலிச் செய்ததில்லை...
மெல்லியப் புன்னகையோடு
என்னெதிரில் வந்து நிற்பாள்...
அவள் முறுவலில்
இதழால் தேன்தொட்டு
இதயத்தை முத்தம் செய்வதுப் போல் மகிழ்வேன்...
ஈருருளையின் பின்னிருக்கையில்
என்னவள் -
என் இடைப் பற்றுகையில்
வண்ணமயில் தோகையின் வருடல்தனை
உணர்வேன்...
வேகம் கூடாதடா என்பாள்...
ஈருருளையின் வேகம் கூட்டுவேன்...
அச்சத்தோடு தோள் சாய்வாள்...
அதில்
நானொரு ஓவியம் காண்பேன்...
ஒருநாள்
என்னவளோடு
சாலையோர மணலில்
ஈருருளைச் சரிய
நான் காயங்களோடுத் தப்பித்தேன்...
என்னவளோ படுக்கையில் விழிமூடி...
என்னவளே
நீ செத்து விடாதே...
உன் உயிர்ப் பிரிவதாயிருந்தால்
சிறுதே உயிர்த்து
என் கழுத்தை நெறித்து
என்னையும் கொன்றுவிடு...
அல்லவெனில் - நீ
விழித் திறக்கும் வரை
உன் காலடியை
என் சுவாசத்தால் வருடவிடு...
காதலுக்கு எதிர்வினைஞர்
இந்திய நாட்டிலுண்டு...
என்வினையே எனக்கு எதிர்வினையாயிற்றே...
- அரங்க கனகராசன்.
--------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக