விழிகளுக்குத் திரையிடு
விழிகளுக்குத் திரையிடு
- அரங்க கனகராசன்
கோவையின் குளிர்க் காற்று,மேனியின் மயிர்க் கால்களை சிலிர்க்க வைத்த இளங்காலைப் பொழுது...
நெரிசல் இல்லாத ரயில்நிலையமாக இருந்தது - கொரானாவின் பாதிப்பு -
ரயில்நிலையத்திலிருந்து வெளியே வந்தார் பார்த்திபன் - வயது 50ஐ எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது...
பதினொன்று மற்றும் இரண்டாம் எண் கொண்ட பேருந்துகள் அடுத்தடுத்து வந்தன...
இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், பார்த்திபன் கோவையில் இருந்திருக்கிறார்...
அப்போதெல்லாம், இந்த பதினொன்று மற்றும் இரண்டாம் எண் பேருந்துகள் ரயில்நிலையத்தை அடையும் முன்னரே கூட்டம் முண்டியடித்து மோதி ஏறும்...
இன்று அப்படியில்லை -
கொரானாவின் தாக்கம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருந்தது...
பார்த்திபனுக்கும் இன்று கோவை வரும் எண்ணம் இல்லை...
எதேச்சையாக நேற்று வலையொளி ஒன்றை நண்பர் இளம்வழுதி மூலம் கண்டார்...
வலையொளி சிலிர்ப்பு உண்டாக்கியது...
அதன்பிறகு அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை...கோவை வழியாக - கேரளாவுக்கு ரயில் இயக்கப்படுவதாக அறிந்தார்...
கோவைக்கு ரயிலில் வந்து இறங்கிவிட்டார்...
தெருவில் நின்று தேவி உணவகத்தைப் பார்த்தார்...
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே தேவி ஓட்டல் - ஆனால் - சில அலங்கார மாறுதல்களுடன்...
குளிரின் குத்தல் அதிகம் இருந்ததால் தேநீர் பருக விரும்பி, தேவி ஓட்டலுக்குச் மெல்ல நடந்தார்..
கையில் சிறு பெட்டி ..
அவரை மறித்து, "சார் எங்கே போகணும்" என்று கேட்டு முச்சக்கர ஓட்டுநர் ஒருவர் வந்து நின்றார்...
பார்த்திபன் அவரை சிறுது நேரம் பார்த்தார்... பிறகு, "பீளமேடு பி எஸ் ஜி காலேஜ்" என்றார்..
"போலாம் சார்" என்று சொல்லிக் கொண்டே, அவரிடமிருந்து பெட்டியை வாங்க கை நீட்டினார் ...
"தம்பி, நான் போக வேண்டிய நேரம் பத்து மணிக்கு!... இப்ப அஞ்சரைதானே ஆகுது... பத்துமணிக்கு நான் போகும்போது, நீ இருந்தா உன்னைக் கூப்பிட்றேன்" என்றார் பார்த்திபன்.
"சரிங்க சார் " என்று சொல்லிவிட்டு, அடுத்தவர் எவராவது சவாரிக்குக் கிட்டுவரா என்று, பார்வையை ஓடவிட்டு, நகர்ந்தார் முச்சக்கர ஓட்டுநர்...
"தம்பி, தேனீர் குடிக்கலாமா " என்று பார்த்திபன் ஓட்டுனரைப் பார்த்துக் கேட்டார்.
ஓரடி எடுத்து வைத்த, ஓட்டுநர் சற்று நின்று அவரை ஏதும் விளங்காமல் பார்த்தார்...
"ஏம்ப்பா, டீ குடிக்கலாமா"
சற்றுத் தயக்கத்துடன் ஏதும் பேசாமல் நின்ற முச்சக்கர ஓட்டுநரின் தோள் மீது கைப்போட்டு 'வா' என்பது போல தலையசைத்து அழைத்தார்...
தேவி ஓட்டல்-
மேற்கு திசை மூலையில் தனிமையில் இருந்த மேசை மீது இரு தேநீர் கோப்பைகளை வைத்துவிட்டு பணியாள் நகர்ந்தார்...
"இந்த மேசைக்கு அப்ப போட்டி அதிகம்... நாங்க இந்த மேசை காலியாகும் வரைக்கும் காத்திருந்து இடம் பிடிச்சோம்" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டார் பார்த்திபன்...
ஓட்டுனருக்குப் புரியவில்லை; இருப்பினும் வினாவேதும் கேட்கவில்லை...
தேநீரை நன்கு உறிஞ்சிக் குடித்தார் பார்த்திபன்...
" இந்துமதிக்கு ரொம்பப் பிடிக்கும்"
"----------------------------"
"இந்து, ?" - என்று சொல்லிக் கொண்டே கண்ணீர்க் கசிவைத் துடைத்து கொண்டார் பார்த்திபன்...
"சார் தப்பா நினைக்காதீங்க... உங்க பக்கத்தில் நா மட்டும்தா இருக்கேன்... ஆனா, நீங்க வேற யார் கூடவோ பேசற மாதிரி இருக்கு " என்று சொல்லிவிட்டு, அவரைப் பார்த்தார்...
பார்த்திபன் மெல்ல புன்னகைத்துவிட்டு, "தம்பி , இன்னொரு டீ குடிக்கிறியா " என்று கேட்டார்...
ஓட்டுநர், வேண்டாமென்று தலையசைத்தார்...
மீண்டும் ஒரு தேநீர் கொண்டு வரச் சொல்லிப் பருகினார் பார்த்திபன்...
"இந்துமதி நல்லாயிருக்கியா" என்று மீண்டும் தனக்குள் பேசிக் கொள்ளவே, முச்சக்கர ஓட்டுனருக்கு லேசாக பீதிக் கவ்விற்று முகத்தில்!... "பைத்தியமாக இருப்பாரோ?"
"நன்றி சார், நா கிளம்பறேன்... சவாரி கிடைக்குதான்னு பாக்கனும்"
"தம்பி, உட்கார்... பி எஸ் ஜி கல்லூரிக்கு ஒரு தகவலுக்காகத்தான் போறேன்... அங்க கிடைக்கிற தகவல் பொறுத்து வேறு வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கும்.. இன்றைக்கு முழுக்க நீதான் எனக்கு வண்டி ஓட்டணும்... இந்தா இதை வெச்சுக்க... மீதி பிறகுத் தரேன்... " என்று சொல்லி இரண்டாயிரம் தாள் ஒன்று எடுத்து ஓட்டுனரின் கையில் திணித்தார்...
"சார்"
"என்னப்பா, நா தனியா பேசறேனு பயம்படறியா?... எனக்குப் பழகிருச்சு... பதினெட்டு, பத்தொன்பது வருடமா இப்படித்தான் இருக்கேன்... மனம்விட்டு பேச ஆள் இல்லைனா, தனியா பேசி நம்ம ஆதங்கத்தை தணிச்சுக்கிடனும்... பயப்படாதே... என் கூட நீ வா... என்னைத் தெரிஞ்ச ஆள் என் பக்கத்தில் இருந்தா நல்லதுதானே..."
ஓட்டுநர் தலையசைத்தார்...
"தம்பி, நா இங்கே அறை எடுத்துருக்கேன்... நா போய் குளிச்சிட்டு, உனக்காகக் காத்திருப்பேன்... நீ சரியா ஒன்பது மணிக்கு வந்துரு... " என்று சொல்லி முகவரி அட்டையை கொடுத்தார் பார்த்திபன்...
முற்பகல் பதினோரு மணியிருக்கலாம்-
முச்சக்கரவுந்து அவிநாசி சாலையில் விரைந்துக் .கொண்டிருந்தது...
கொரோனா தாக்கத்தால் சாலையின் பயண நிலை குறைவாகவே இருந்தது...
"தம்பி, மெதுவா போ... இந்தத் தெருவைப் பார்த்து இருபத்தஞ்சு வருடம் ஆச்சு... என்னமா மாறியிருக்கு... சென்னை மாதிரியே உயரம் உயரமானக் கட்டிடங்கள் ... "
ஒருநாள் முழுச் சவாரிக் கிடைத்த மகிழ்ச்சி, ஓட்டுனரின் முகத்தில் ஊஞ்சலாடியது...
பார்த்திபனை அழைக்க, ஒன்பது மணிக்கு சென்றபோது-
அவர் புறப்படு நிலையில் இருந்தார்...
கீழே உணவகத்தில் இருவரும் சிற்றுண்டிச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள்...
பார்த்திபனின் மென்மையான குணம் ஓட்டுனரின் தாழ்வு மனநிலையைப் போக்கிச் சற்று சரளத் தன்மையை உண்டாக்கியது...
பீளமேடு வரதராஜமில்லைக் கடக்கும் போது வண்டியை நிறுத்தச் சொன்னார்...
வண்டியிலிருந்து இறங்கிய பார்த்திபன் சாலையின் இருமருங்கையும் பார்த்தார்...
ஒருபெருமூச்சுடன் " எத்தனை மரங்கள் இருந்துச்சு... இந்துமதி, உனக்கு ஞாபகம் இருக்கா... இந்த இடத்தில இருந்த மரத்தடியில் நாம மணிக்கணக்கில் பேசிட்டிருப்போம்..." -என்றார்...
தெருவோரத்தில் திண்பண்டக் கடைகள் இருந்தன... "சுடச்சுட மீன் சாப்பிட உனக்குப் பிடிக்கும் ' என்று சொல்லிக் கொண்டே விழிகளை மூடினார்...
அவருள் திரியும் ஆயிரம் நினைவுகளிலும் இந்துமதியே இருந்தாள்...
"இந்துமதி யாருங்க சார்"
ஆட்டோ பயணித்துக் கொண்டிருந்தது..
"என் மனைவி"
"இப்ப அவங்க எங்கே இருக்காங்க சார் "
"தெரியல தம்பி" என்று சொல்லிவிட்டு மீண்டும், "என் மனைவியைத் தேடிட்டு வந்திருக்கேன்" - என்றார்...
"சார் சண்டைப் போட்டுட்டு - கோவிச்சிட்டு வந்துட்டாங்களா ?"
"இந்துமதிக்கு கோபமே வராது தம்பி"
வண்டி, பூ சா கோ கலை அறிவியல் கல்லூரியின் வாயிலுக்குள் நுழைந்தது...
அதே அமைதி - அதே நிழல்கள் - பரந்தத் திடல்கள் -
பார்த்திபன், கல்லூரியின் எழில் தோற்றத்தை மீண்டும் மீண்டும் விரும்பினார்...
சாலைத் தடுப்பின் அருகே, காவலாளி வந்து முச்சக்கர வண்டியை மறித்தார்...
"இன்னும் காலேஜ் திறக்கலே... யாரையும் உள்ளே விடக்கூடாதுனு சொல்லிருக்காங்க... திரும்பிப் போங்க"
ஆட்டோவில் இருந்து பார்த்திபன் இறங்கிக் காவலரிடம், "தம்பி நா இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்..." என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டார்...
முன்னாள் மாணவர் என்றதும், காவலர் கடுமையை விலக்கி, புன்னகையுடன், "சார், கொரோனவுக்காக கல்லூரி மூடியிருக்காங்க... இப்ப யாரையும் விடவேண்டாம்னு சொல்லியிருக்காங்க" - என்றார் கனிவுடன்.
"முதல்வர் இருக்காரா?"
"இப்பதான் வந்திருக்கார்... "
"தம்பி, முன்னாள் மாணவர் ஒருத்தர் வந்திருக்கார்... வயது அய்ம்பதுனு சொல்லு... சென்னை ஏ டி ஆர் கல்லூரி முதல்வர்னு சொல்லு "
"அய்யா, நீங்க சென்னை ஏ டி ஆர் கல்லூரி முதல்வரா?"
பார்த்திபன் மெல்லப் புன்னகைத்தார்...
காவலர் கல்லூரியின் உள் இணைப்புப் பேசியில் விபரம் சொல்ல-
முச்சக்கர வண்டியை நிழலில் நிறுத்தி, காத்திருக்கும்படி ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு கல்லூரியின் அந்த நெடும்பாதையில் நடந்தார் பார்த்திபன்..
பூ சா கோ முதல்வர் வரவேற்றார்...
முகக்கவசம் அணிந்திருந்தார்...
"தொண்ணுற்று அஞ்சாவது வருடம் என் கல்லூரியின் இறுதிப் படிப்பை இங்கேதான் படித்தேன்..."
தேநீர் வழங்கப்பட்டது...
தேநீர்க் குடித்துக் கொண்டே, பார்த்திபன், யூ ட்டுயூப் எனப்படும் வலையொளிக் காட்சி ஒன்றை பூ சா கோ முதல்வரிடம் காட்டினார்...
"இது நம்ம கல்லூரியின் ஆண்டு விழாவில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி" - என்றார் பூ சா கோ முதல்வர்.
"இந்த காணொலியில் பாட்டு பாடிட்டு இருக்கும் மாணவனை நான் பார்க்கணும்" - பார்த்திபன் .
"மாணவனுக்கு நீங்க?" என்றக் கேள்வியை முதல்வரிடம் பார்த்திபன் எதிர்ப்பார்க்கவில்லை...
சற்றும் தயங்காமல், "என் மகனாக இருக்கக்கூடும்" என்றார்...
"மகனாக இருக்கக் கூடுமா? என்னச் சொல்றீங்க... இந்த மாணவன் பெயர் முகமத் அகமத்... "
என்று சொல்லி, பார்த்திபனைப் பார்த்தார்...
பார்த்திபன் அமைதியாக - முகவாட்டத்துடன் -இருந்தார்...
மீண்டும் முதல்வர், "இந்த மாணவனின் அப்பா எனக்குத் தெரிந்தவர்தான்" -என்றார்...
"ரொம்ப மகிழ்ச்சி!... அவரை நான் பார்க்க முடியுமா.. முகவரிக் கொடுக்க முடியுமா? - என்று அதீத ஆவலுடன் கேட்டார் பார்த்திபன்...
"சார், நீங்க இந்த மாணவனின் அப்பாவைப் பார்க்க வந்தீங்களா? மாணவனை பார்க்க வந்தீங்களா?.. எதுக்கு இந்த மாணவனை உங்க மகன்னு சொன்னீங்க?" - என்று கேட்டார்...
அவர் பேச்சில் சற்று கோபம் தெறித்தது...
"அவன் என் மகனாகத்தான் இருக்கவேண்டும்... என் மனைவிக்குப் பிறந்தவன் எனக்கும் மகன்தானே"
பூ சா கோ கல்லூரி முதல்வர் ஒரு வித தயக்கமான நிலைக்கு மாறினார்...
"என் மனைவி எங்கிட்ட இல்லை... பிரிஞ்சு பத்தொன்பது வருடம் ஆச்சு" - என்று சொன்ன பார்த்திபனிடம் முதல்வர், மனதில் சிறிதே சோகத்துடன் அம்மாணவனின் முகவரியைக் கொடுத்து அனுப்பினார்...
முச்சக்கர உந்து அவிநாசி சாலையில் மீண்டும் தனது பயணத்தைக் தொடங்கியது...
ஓட்டுநர் கேட்டார் : "சார், உங்க மனைவியைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?..." - ஓட்டுநர் கேட்டார்.
"ம்... வடவள்ளி... வடவள்ளிக்கு போ" - என்றார் பார்த்திபன்
மேலும் "வடவள்ளியில், என் மனைவியின் மகன்!.. இல்லை இல்லை என் மகன் இருக்கிறான்..."
வண்டி சுக்ரவார்பேட்டையை நெருங்கும்போது, "இந்து உனக்கு, அன்னபூர்ணா இட்லி சம்பார்ப் பிடிக்குமே" என்றார்...
"சார், அன்னபூர்ணாவுக்குனா இப்படியே திருப்பிடலாம்... அந்த பக்கம் ரோடு அடைச்சிருக்காங்க"
வண்டி ஆர். எஸ். புரம் அன்னபூர்ணா வாசலில் நின்றது...
"தம்பி உனக்கு சாப்பாடு சீட்டு வாங்கிக்க" என்றார்...
"உங்களுக்கு"
"நா இட்லி சாம்பார்... இந்துமதிக்கு ரொம்பப் பிடிக்கும்"
சாப்பாடுப் பரிமாறலில் நெய் மணந்தது...
ஆயினும்; கொரோனா காலம் என்பதால் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது...
சாம்பாரில் ஊறிய இட்லியை சிறு கரண்டியால் கிள்ளி எடுத்து வாயில் வைத்து சுவைக்கும் போது, அலைபேசி அழைத்தது...
"இளம்வழுதி, கோவை வந்துட்டேன்... இப்ப அன்னபூர்ணாவில் சாப்பிட்டிட்டு இருக்கேன்..."
"......................................."
"இந்துவை கண்டுப்பிடிச்சிட்டேன் ... வடவள்ளியில் வீடு............. ரொம்ப நன்றி... நீ அந்த யுடுயூப் காட்னதுக்கு நன்றிப்பா!.............................. இல்லை ........... எனக்குத் துணையா ஓட்டுநர் தம்பி இருக்கார்... .................................................. ஆமா மருந்து எடுத்துக்குறேன்.................... இந்துவை பார்த்தவுடன் நா உனக்கு சொல்றேன்............................... எப்படி இளம்வழுதி, இந்து வேறு யாரையாவது கல்யாணம் செஞ்சிருந்தா, .... நா எப்படி கூப்பிட முடியும்?... அடடே ... இரு இரு ... இந்து இங்கேதா இருக்கா"
பார்த்திபன் அலைபேசியில் உரையாடிக்கொண்டே திடீரென எழுந்து நின்று "இந்துமதி " என்றுக் கூவிக் கொண்டே, ஓடும்போது, மேசையில் இருந்த இட்லித் தட்டு, அவர் கைப்பட்டு கீழே விழுந்து தெறித்தன...
உணவு அருந்திக் கொண்டிருந்தோரின் பார்வை பார்த்திபன் மீதுத் திரும்பியது...
"இந்து..." என்று சொல்லிக்கொண்டே ஓடினார்...
அழகான - நாற்பத்தி எட்டைத் தொட்டுக் கொண்டிந்த பெண் ஒருத்தி காசாளரிடம் தொகையைச் செலுத்திவிட்டு படியிறகிக் கொண்டிருந்தாள் வெளியேப் போக...
பார்த்திபன் "இந்து" என்று கூவிக் கொண்டே, படியிறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தோள் தொட்டுத் திருப்ப-
ஓடி வந்த வேகத்தில் பார்த்திபன் கால் இடறி, இந்துமதி என்று அழைக்கப்பட்ட பெண்மீது சாய- இருவரும் படியில் விழுந்து உருண்டார்கள்...
அந்தப்பெண் அச்சத்தில் அலறினாள்...
உருண்டு எழுந்த பார்த்திபன், "இந்து, நா உன் பார்த்திபன்" என்று சொல்லி கை நீட்டினார் ஆனந்தம் பொங்க!...
மேலும் அந்தப் பெண் அலற, கூட்டம் கூடியதோடு, பார்த்திபனை அடிக்கலாயினர்...
அடி வாங்கிக் கொண்டே "இந்து" என்று கூப்பாடு இட்டுக் கொண்டே அந்த பெண்ணை நெருங்கிய பார்த்திபன், பிறகு அமைதியாகி, "இல்லை இல்லை ... மன்னிச்சிரும்மா நீ என் இந்துமதி இல்லை" - என்றார் கெஞ்சலாக!
" போலீசைக் கூப்பிடுங்க " என்று அந்த பெண் கத்தினாள்...
கூட்டம் மீண்டும் அவரை அடிக்கத் தொடங்கியது...
விபரீதத்தை உடனே புரிந்துக் கொண்ட ஓட்டுநர், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடி வந்தார்...
"சார் ... சார்... அண்ணே .... அவரை அடிக்காதீங்க... அவர் மனசு பாதிச்சவர்" என்று சொல்லி பார்த்திபனைக் காப்பாற்றினார்...
சுற்றி நின்ற கும்பலைப் பார்த்து, கையெடுத்து வணங்கினார் பார்த்திபன்...
மீண்டும் ஆட்டோ புறப்பட்டது....
"சார், நாம வடவள்ளிக்குப் போய்த் தான் ஆகணுமா?"
"ஆமா ; தம்பி!" - என்ற பார்த்திபனின் குரல் கசிந்தது...
"உண்மையாவே இந்துமதினு ஒருத்தர் இருக்காங்களா சார்"
"கொஞ்சம் வண்டியை நிறுத்து தம்பி"
வண்டி ஓரமாக நின்றது...
தன் கைப்பையிலிருந்து புகைப்படத் தொகுப்பை எடுத்து நீட்டினார்...
"பாரு தம்பி"
அனைத்தும் பழைய புகைப்படங்கள்... திருமணக்கோலத்திலும்... வேறு வேறு தளங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... இந்துமதியும், பார்த்திபனும் இணைந்த புகைப்படங்கள்...
"இவங்கதா என் இந்துமதி"
ஓட்டுநர் அமைதியாகி, பார்த்திபனைப் பரிதாபமாகப் பார்த்தார்...
"எதுக்கு சார் உங்களைவிட்டுப் பிரிஞ்சாங்க" - என்று ஓட்டுநர் கேட்டார்...
"அதைக் கேட்கத்தான் இந்துமதியை தேடிட்டு இருக்கேன் தம்பி..." - என்றார் பார்த்திபன் கண்ணீர்க் கசிய...
"தம்பி அன்னபூர்ணாவில் நான் பார்த்த, அந்த பெண் என் இந்துமதி யில்லை" - என்றார் கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே...
"தெரிஞ்சும் எதுக்கு சார் அந்தப் பொம்பளையைத் தொட்டீங்க" என்று கேட்டார் ஓட்டுநர்.
"தம்பி, அந்த பெண் ... இதோ போட்டோவைப் பார் இந்துமதி மாதிரியே இருந்தாங்க..." - போட்டோவில் இந்துமதியை சுட்டிக் காட்டினார்...
"சின்ன வயசு போட்டோ சார் இது..." என்றார் ஓட்டுநர்...
"ஆமா; தம்பி, எனக்கும் இப்ப வயசாயிருச்சு இல்லையா" - என்றார் பார்த்திபன்.
"அதுக்காக, வயசான பொம்பிளைகள் எல்லாரும் உங்க இந்துமதி ஆயிருவாங்களா" - என்றுக் கேள்வியெழுப்பிய முச்சக்கர ஓட்டுனரைப் பார்த்து -
"தம்பி அந்தப்பெண் தோற்றத்திலும், நிறத்திலும், உயரத்திலும் என் இந்துமதி மாதிரியே இருந்தாங்க... எனக்கு என் இந்துவைத் தெரியாதா? என் இந்துமதியின் கண்களில் ஒருவித காந்தம் இருக்கும்... பாரு... " என்று சொல்லி இந்துமதியின் கண்களைக் காட்டினார்...
"ஆனா அந்தப் பெண்ணின் கண்களில் ஈர்ப்பு இல்லை... மற்றபடி என் இந்துமதியின் தோற்றம் அப்படியே இருந்துச்சு... அதனால் நா ஏமாந்துட்டேன்..."
"ஒருவேளை, அவங்க உங்க இந்துமதிக்கு அக்காவா இருக்கலாம் இல்லையா" என்று கேட்ட ஓட்டுனரைப் பார்த்து,
"தம்பி, என் இந்துமதிக்கு கூடப் பிறந்தவங்க யாருமில்ல... அப்பா, அம்மாவும் இல்லை... அநாதை விடுதியில் தங்கிப் படிச்சிட்டுருந்தாங்க... நானும், அவளும் ரொம்ப நேசிச்சோம்... கல்யாணம் செஞ்சுட்டோம்... ஒருநாள் என்னைப் பிரிஞ்சுப் போயிட்டாங்க... பிரிஞ்சு பதினெட்டு ஆண்டுகள் ஆச்சு... ஏன்னு தெரியல... இந்துமதி என்னை விட்டுப் பிரியும் போது வயிற்றில் மூனு மாசம்..." - என்றார் கண்ணீர்க் கசிவுடன்...
"உங்கக் குழந்தையைச் சுமந்துட்டு உங்களை விட்டுப் பிரிஞ்சுப் போயிட்டாங்க... உங்களை விட்டுப் பிரிஞ்சவங்க, உங்க குழந்தையை விட்டு பிரிஞ்சிருக்க மாட்டாங்களா சார்" - என்று ஓட்டுநர் ஒருவித தயக்கத்துடன் கேட்டார்...
"தம்பி, என் இந்துவை எனக்குத் தெரியும்... எனக்கும், இந்துமதிக்கும் பிறந்தக் குழந்தையை விட்டு என் இந்து பிரியலை..."
"சார் எனக்கென்னமோ பயமா இருக்கு சார்... வேற யார்கூடவாவது உங்க இந்து வாழலாம் இல்லையா"
"இல்லை... அப்படியிருக்காது... என் இந்துவை எனக்குத் தெரியும்"
"உங்களுக்கு துரோகம் பண்ணிட்டாங்கனு... " என்று ஓட்டுநர் சொல்லும்போது இடைமறித்த பார்த்திபன், "என்னை விட்டு எதுக்குப் பிரிஞ்சாங்கனு நா தெரிஞ்சுக்கனும்... தம்பி, வடவள்ளிக்கு போங்க"
வடவள்ளியை நோக்கி பயணித்தது வண்டி!...
வடவள்ளி-
குறிஞ்சி மின் நகர்-
நிலாப்பிறையினூடே 786 என்று குறியிடப்பட்டிருந்த மிகப்பெரிய விசாலமான - அரண்மனைப் போன்ற - வீடு!...
வண்டி நின்றது.
வீட்டுக்காவலரிடம், "நா சென்னையிலிருந்து வந்திருக்கேன்... முகமதுவைப் பார்க்கணும்..."
காவலர், உள்பேசியில் தகவல் தந்தார்...
சிறுநேரத்தில் கதவுத் திறக்கப்பட்டு-
ஏறக்குறைய பார்த்திபன் வயதொத்த ஒருவர் வெளியே வந்தார்...
"வணக்கம். நான் பார்த்திபன்... சென்னையிலிருந்து வந்திருக்கேன்"
"வாங்க... வாங்க... உள்ளே வாங்க... பி எஸ் ஜி கல்லூரி முதல்வர் எனக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருந்தார்... " என்று அழைத்தார்...
பார்த்திபன் முன்னே செல்ல, முச்சக்கர ஓட்டுனரும் தயங்கிப் பின் தொடர-
அந்த இசுலாமியர் ஓட்டுனரிடம் "ட்ரைவர் நீங்க வெளியே இருங்க " - என்றார்...
"இல்லை அவரையும் வீட்டுக்குள் அனுமதிக்கனும்" - என்றார் பார்த்திபன்...
மூவரும் உள்ளே சென்றனர்...
மிகப்பெரியக் கூடம் ..
இருவரையும், அமரச் சொல்லிவிட்டு இசுலாமியர் ஊஞ்சலில் அமர்ந்தார்...
சிறுது நேரத்தில் இருவருக்கும் பருக நீர்க் கொண்டு வந்தார் பணியாள்...
'குடிங்க" என்றார் இசுலாமியர்...
நீர்க் குவளையைத் தொட்டுப் பார்த்து விட்டு, பார்த்திபன் பார்வையை வீட்டினுள் செலுத்தினார்...
மாடியிலிருந்து இசை-
"உங்கத் தவிப்பு எனக்குப் புரியுது..." என்று சொல்லிவிட்டு, 'முகமத்' என்று குரல் கொடுத்தார்...
மாணவப் பருவத்தில் இளைஞன் ஒருவன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து "என்னங்க வாப்பா" என்று கேட்டு ஊஞ்சலில் அப்பாவின் அருகில் அமர்ந்தான்...
"சார், வீடியோவில் பாட்டு பாடிட்டு இருந்த ஸ்டூடெண்ட் இவர்தானே?" என்று தன்மகனை சுட்டிக் காட்டி, பார்த்திபனிடம் கேட்டார்...
பார்த்திபன் அந்த இளைஞனை ஆசைப் பொங்கப் பார்த்துப் பரவசம் அடைந்தார்...
மெல்லிய முறுவலைக் காட்டினார் பார்த்திபன் அந்த இளைஞனுக்கு!... இளைஞனும் புன்முறுவல் செய்து வணக்கம் தெரிவித்தான்...
"சார் இவன் என் மகன்... இவன் உங்க மகனா இருக்கலாம்னு நினைக்கிறீங்க... இவன் உங்க மகனா இருந்தா இவனோட அம்மா, உங்க மனைவியா இருக்கலாம்னு வந்திருக்கீங்க..." - என்று இசுலாமியர் கேட்டார்...
ஆட்டோ ஓட்டுநர் நுனி இருக்கையில் உட்கார்ந்திருந்தார் அச்சத்தோடு...
"சார், நான் பார்த்திபன்..." என்று சொல்லி முடிப்பதற்குள், இடை மறித்து, "சென்னையில் ஏ டி ஆர் கல்லூரியில் முதல்வர் பணியில் இருக்கீங்கன்னு பி எஸ் ஜி கல்லூரி முதல்வர் எனக்குச் சொன்னார்... என் மனைவியை நீங்க உங்க மனைவின்னு சொந்தம் கொண்டாட வந்திருக்கீங்கனு நா சொல்லலை... உங்க நிலையில் இருந்தாலும் நானும் உங்க மாதிரிதான் தவிச்சிட்டு இருப்பேன்... "
"இல்லை சார்... நான் அந்த எண்ணத்தில் வரலை... நா என் இந்துமதியைத் தேடிட்டு வந்திருக்கேன்..."
"நீங்க நேரடியா வந்திருந்தா, உங்கக் கழுத்தைப் பிடிச்சு நெரிச்சிருப்பேன்..." என்று இசுலாமியர் பேசிய போது, பயந்து வெளியில் ஓடி விடலாமா என்று முச்சக்கர ஓட்டுநர் தவித்தார்...
தொடர்ந்து, 'உங்களைப் பற்றி முன்கூட்டியே, முதல்வர் சொல்லிட்டார்... எனக்கும் உங்களைப் பார்க்க பரிதாபமா இருக்கு... உங்க நிலைமையை என்னால் உணர முடியுது..." என்று சொல்லிவிட்டு, மகனைப் பார்த்து 'முகமத்' என்றார்...
"சொல்லுங்க வாப்பா"
"போய் அம்மாவை அழைச்சிட்டு வா"
சிறுது நேரத்தில் முகமது தன் தாயாரோடு வந்தான்...
முகமதுவின் அன்னையைப் பார்த்து, ஏமாற்றத்துடன் எழுந்து நின்ற, பார்த்திபன் "மன்னிச்சிருங்க... உங்களுக்கு மன வருத்தம் கொடுத்துட்டேன்... சரி நாங்க கிளம்பறோம்" - என்று சொல்லியப்படியேக் கிளம்ப-
ஆட்டோ ஓட்டுனரும் அவசரம் அவசரமாக வாசலுக்கு விரைந்தார்...
ஈரடி எடுத்து வைத்த, பார்த்திபன் மீண்டும் நின்று, திரும்பி, "தம்பி முகமது, நா உங்கிட்டே ஒன்னு சொல்லலாமா " - என்று கேட்டார்...
"சார், சொல்லுங்க'' - என்றான் மாணவன் முகமது.
"நீ ஆண்டு விழாவில் பாடினப் பாட்டு, நா எழுதின பாட்டு... என் மனைவிக்காக எழுதின பாட்டு... என் மனைவிக்கு மட்டுமே தெரிஞ்ச பாட்டு... என் மனைவி வேற யாருக்கும் அந்தப் பாட்டைப் பகிர வாய்ப்பில்லை..." என்று சொல்லிவிட்டு "நன்றி தம்பி, நான் வரேன்" என்று சொல்லி நகரும் போது அவர் கண்களில் தாரைத் தாரையாக நீர் வடிந்தது...
கூடத்தில் இருந்த எல்லார் முகமும் சோகம் கவ்வின...
ஆட்டோவில் அமர்ந்தார் பார்த்திபன்...
வண்டியை இயக்க வேண்டாமென்று சொல்லிவிட்டு, "என் நண்பனிடம் பேசிக்கிறேன்... பிறகு வண்டி எடு..." என்றார்...
அலைபேசியில், "இளம்வழுதி... " என்று கூப்பிட்டவர், தேம்பித் தேம்பி அழுதார்... "அவங்க இந்துமதி இல்லை.... நா... முழுக்க செத்துட்டேன்.................................... இல்லை இளம்வழுதி,......................... நீ கலங்காதே... நா சாகறதுக்குள் இந்துவைப் பார்த்துடுவேன்ற நம்பிக்கை போயிடுச்சு... நா இன்றைக்கு இரவே கிளம்பி வரேன்... சென்னைக்கு வந்தவுடன் சந்திக்கலாம்" - என்று அலைபேசியில் பேசிவிட்டு, "தம்பி வண்டி எடு" - என்றார்...
"சார் அழாதீங்க, சார்... எனக்கும் அழுகையா வருது" - என்றார் ஓட்டுநர்...
"இல்லை, தம்பி... நீ வண்டி எடு... பதினெட்டு ஆண்டுகள் தேடிட்டு இருக்கேன்... இன்னும் தேடுவேன்... இந்துமதியைத் தேடிட்டே இருப்பேன்.. அந்தத் தேடலில் என் வேதனையும் இன்பமா மாறுது... என் தேடல் என் மரணத்தோடுக் கலந்தாலும் அதைவிட வேறு மகிழ்ச்சி எனக்கு இருக்காது... " - என்றார்...
மூடிய இமைகளினூடே வடிந்த நீர்த்துளிகள் கன்னம் தொட்டுக் கரைந்தன...
"சார், டிவி பேப்பர் ல "
"விளம்பரம் பதினெட்டு ஆண்டுகளாக கொடுத்துட்டுத்தான் இருக்கேன்... என் இந்துமதி எனக்குக் கிடைப்பாங்க..." - என்றார் மிகுந்த வேதனையுடன் பார்த்திபன்...
ஆட்டோ இயங்கத் தொடங்கியது...
மெல்ல நகர்ந்தது...
மாணவன் முகமத் ஓடிவந்து, "சார்" என்றான்...
முச்சக்கர வண்டி நின்றது...
"சார், உங்களுக்கு போன்" என்று சொல்லி அலைபேசியை நீட்டினான்...
"யாரு தம்பி? - என்றுக் கேட்டுக்கொண்டே, அலைபேசியை வாங்கி "வணக்கம் நான் பார்த்திபன்" - என்றார்...
"எந்த பார்த்திபன்?" - அலைபேசியில் குரல் கேட்டு முகம் மலர்ந்தார் பார்த்திபன்...
"இந்து... இந்து... இந்துமதி... எப்படிம்மா இருக்கே?... நா செத்துட்டு இருக்கேம்மா... என் மேல் என்னம்மா கோபம்?... உனக்கு கோபமே வராதே இந்து... என்னை நீ சாகடிச்சிட்டுப் போயிருக்கலாம்... அணுஅணுவா செத்துட்டு இருக்கேன் இந்து" - அழுதார்...
"ஹலோ, மிஸ்டர்! I am மதி தீபா... உங்களுக்கு என்ன வேணும்?''
"இந்து, உன்னைப் பார்க்க ஒருநிமிடம் அனுமதி வேணும்"?"
"மிஸ்டர், நா மதிதீபா... did u inquire about the song sung on college stage? " (மேடையில் பாடியப் பாட்டுக் குறித்து நீங்க விசாரிச்சீங்களா?)
"yes" (ஆமா)
"my friend mohammed. He has nothing to do with that song" (என் நண்பன் முகமது...அவனுக்கும் அந்தப் பாட்டுக்கும் தொடர்பில்லை)
"to u" (உனக்கு?)
"what r u asking for" ( எதுக்காக கேட்கறீங்க?"
"i'm looking for my wife" (என் மனைவியைத் தேடிட்டு இருக்கேன்")
"-------------------------"
"a song i wrote for my wife" (என் மனைவிக்காக நா எழுதினப் பாடல்"
"No this is my mom's ring tone" (இல்லை...இது எங்க அம்மாவின் அழைப்புப் பாடல் )
"daughter... mathi theeba, i am ur father" (மகளே, மதி தீபா நா உன் அப்பா"
"NO no... i was adopted from an orphanage... i don't hava a father... there is only the foster mother" (இல்லை... இல்லை... அநாதைக் காப்பகத்தில் இருந்து தத்து எடுக்கப்பட்டவள் நான்... எனக்கு அப்பா இல்லை... வளர்ப்புத் தாய் மட்டுமே இருக்காங்க)
"My daughther, u r not an orphan... your mother is lying to u " (என் மகளே, நீ அநாதையில்ல... உங்கம்மா உன்கிட்ட பொய் சொல்லியிருக்காங்க )
தலையில் அடித்து கதறி அழுதார்...
"pl stop crying" (தயவு செஞ்சு அழுவதை நிறுத்துங்க...)
"daughter, can u tell ur mother to talk to me" (மகளே, உங்கம்மாவை என்கூட கொஞ்சம் பேச சொல்ல முடியுமா?"
கெஞ்சினார் பார்த்திபன்...
அவரிடமிருந்து அலைப்பேசியை வாங்கிய முகமது, " hai, it is a pity to see Deepa... the old man... cries in despair... just like I showed my mother... show your mother for a minute" (தீபா, இவரைப் பார்க்கவே பரிதாபமா இருக்கு... வயசானவர்... மன அழுத்தத்தில் அழுகிறார்... நா எங்கம்மாவை காட்ன மாதிரி ,நீயும் உங்கம்மாவை ஒரு நிமிசம் காட்டிரு" - என்றான்.
"Listen mohammed... my mother will not talk to anyone today..she is lonely" (இதப்பார் முகமது... இன்றைக்கு முழுதும் எங்கம்மா யார்கிட்டயும் பேச மாட்டாங்க... தனிமையில் இருக்காங்க) - என்று அலைபேசியில் சொன்ன மதிதீபா, மீண்டும் முகமதுவிடம், "எங்கம்மாவுக்கு எந்தத் தொந்தரவும் தரக்கூடாது... அப்படினா அவரை வரச்சொல்" - என்றாள் தீபா!
பார்த்திபனிடம், "சார் அந்த பொண்ணோட அம்மா மவுன விரதம் இருக்காங்க... யார்கிட்டையும் பேச மாட்டங்களாம்... அவங்களுக்கு எந்தத் தொந்தரவும் தராம, - எங்க அம்மாவைப் பார்த்த மாதிரி அவங்களையும் பார்த்துருங்க..." என்றான் முகமது.
"ரொம்ப நன்றி முகமது. முகவரித் தெரியாதே?" என்றார் பார்த்திபன் .
முகமது, முச்சக்கர ஓட்டுனரிடம் "அண்ணே ஆர் எஸ் புரம் மெக்ரிகர் ரோடு தெரியுமா? " என்று கேட்டான்.
"தெரியும் தம்பி சொல்லுங்க" - என்றார் முச்சக்கர ஓட்டுநர்.
"அண்ணே, மெக்ரிகர் ரோடும், சிவசுப்ரமணியம் ரோடும் சந்திக்கிற கார்னர்ல, சின்னதா ஒரு ஓட்டல் இருக்கும்" என்று சொன்ன முகமதுவை மறித்து ஓட்டுநர் : "அடடே நம்ம உமா அக்கா டிபன் கடை... ரொம்ப பிரபலமாச்சே அந்தக் கடை... சார்,சுலபமா கண்டுபிடிச்சிரலாம் சார்... கவலைப்படாதீங்க" என்றார் பார்த்திபனை நோக்கி.
"தம்பி பொறுங்க... முகமது இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க " - என்றார் பார்த்திபன்...
"அந்தக் கடையை ஒட்டிய சந்துக்குள் அவங்க வீடு இருக்கு... 'டியூஷன் டீச்சர் வீடு எங்கிருக்கு'னு யார்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க... நானும் அவங்ககிட்டதா மேத்ஸ் டியூஷன் படிக்கிறேன்..." என்றான் முகமது.
வண்டி மெக்ரிகர் தெருவில்-
டியூஷன் டீச்சர் வீட்டை எளிதில் கண்டுப் பிடித்து விட்டனர்... சிறிய வீடு... ஓடு வேய்ந்த குட்டையான வீடு...
கதவைத் தட்டினார்...
கதவுத் திறந்தாள் மதிதீபா!
மதிதீபாவைப் பார்த்தவுடன் "இந்து" என்று இதழ் மலர நெருங்கினர்...
"சார் நா மதிதீபா" - என்றுச் சொன்ன மதி, "உள்ளே வாங்க" என்று அழைத்தாள்...
மாணவர்கள் அமர்ந்து, கற்றுக்கொள்வதற்கு ஏற்ப, நான்கைந்து மேசை நாற்காலிகள் இருந்தன... கரும்பலகை சுவற்றில் இருந்தது... உள்ளே ஒரு சிறிய சமையல் அறை தெரிந்தது...
"தீபா, no tution today" - (இன்றைக்கு டியூஷன் இல்லையா ) என்று கேட்டு விட்டு, தீபாவை கூர்ந்து பார்த்தார்...
பிறகு, "மகளே" என்று அழைத்தார்...
தீபா ஏதும் பேசாமல் முறைத்தாள்...
"தீபா, இதைப் பார்" - என்று சொல்லி சில புகைப்படங்களைக் காட்டினார்...
வேண்டா வெறுப்போடு வாங்கிய தீபா, மேலோட்டமாகப் புகைப்படங்களைப் பார்க்கத் தொடங்கியவள் -
சட்டென விழிகள் விரிய புகைப்படங்களை ஆழ்ந்துப் பார்த்தாள்...
மீண்டும் பார்த்திபனைப் பார்த்து, "நீங்க?" என்று கேட்டாள்
"உங்கப்பா" என்றார்க் கண்ணீரோடு..
புகைப்படங்களைத் தூக்கிக் கொண்டு, உள்ளேஓடினாள்...
உள்ளிருந்து,"யாரும்மா இவர்... நான் யாரும்மா... விரதத்தை நிறுத்துங்க... எங்கிட்ட பேசுங்க " என்று உரக்ககமாகப் பேசினாள் ...
இந்துமதியிடம் இருந்த புகைப்படத்தைப் பார்த்து, திகிலுற்றாள்... அதே கணம் நெஞ்சில் ஓர் இனம் காணா உந்துதல் ஏற்பட-
சமையல் அறையிலிருந்து படபடவென ஓடிவந்து நின்ற இந்துமதி, பார்த்திபனைப் பார்த்துவிட்டு ஓவென அழுது, பார்த்திபனைத் தழுவி, அழுதாள்... பிறகு, திடீரென அவரைத் தள்ளி, விலக்கிவிட்டு மீண்டும் சமையல் அறைக்குள் ஓடினாள்...
"தீபா, அவரை போகச் சொல்லு..." என்று சத்தமாகக் கத்தினாள் இந்துமதி!
"இந்து... இந்து" என்று கதறினார் பார்த்திபன்...
"ஏம்மா, இந்த நாள் நீங்க யார்கிட்டையும் பேசாமல் மவுனம் செய்வீங்க... அவரோட போட்டோ பார்த்தவுடனே அவரைப் பார்க்க, ஓடினீங்க... உங்க மவுனத்தை நீங்களே ஒடைச்சுட்டீங்களே " - என்று தீபா பேசுவது பார்த்திபனுக்குக் கேட்டது...
அவர்க் கூரையை வெறித்துப் பார்த்து கசிந்து அழுதார்...
ஓட்டுநர் சொல்லவியலா சோகத்தில் ஆழ்ந்தார்...
"நா மவுனவிரதம் இருக்கறது உனக்குத் தெரியும்தானே" - என்று இந்துமதிப் பேசுவதும் கேட்டது...
"ஏண்டி நிக்கறே... என் மவுனத்தைக் கலைக்கக் கூடாதுனு உனக்குத் தெரியாதா" என்று கத்தினாள்...
மீண்டும், "போடி, அவரையும் போகச் சொல்லுடி..." என்று சொல்லி, தேம்பி அழுதாள்...
"சொல்லிட்டே இருக்கேன்... போடி" - என்றுச் சொல்லி, தீபாவை தள்ளிவிட்டாள்...
தடுமாறி கீழே விழுந்தாள் தீபா...
"அம்மா, ஏம்மா இப்படி நடந்துக்குறே... அமைதியா இரு...நா அவரை அனுப்பிட்டு வரேன்" - என்றுக் கிளம்பிய தீபாவைத் தடுத்து, "வேண்டாம்... அவருக்கு எதிரில் நீ போகக் கூடாது... இங்கிருந்தே சொல்லு... 'போயிடுங்க'னு'... -என்று இந்துமதியிடம் சொல்ல-
"ஏம்மா, எதை நீ என்கிட்டே மறைக்கிறே..."- என்று கேட்டாள் மதிதீபா!
"நா சொல்றதைக் கேளு... அவரை போகச் சொல்லு... இங்கிருந்தே சொல்லு" - என்றாள்
"சரிம்மா... நீ அமைதியா இரு" என்று சொன்ன மதிதீபா, மீண்டும் "அம்மா, நீ என்னைப் பெற்றத் தாய்னு அவர் சொல்றாரே... சொல்லும்மா... நீ யார்?"
"என்னை நீ நம்பலையா? எதிர்த்துக் கேள்விக் கேட்கிறே?... நீ எனக்குப் பிறக்கலே.... பிறக்கலே ..." என்று அழுத்தமாகக் கத்திச் சொன்னாள்...
"சரிம்மா... உன் பேச்சுக்கு நா மறு பேச்சு பேச மாட்டேன்... அமைதியா இருங்க..." என்று சொல்லிவிட்டு -
வெளிப்பக்கம் ஓசை கேட்கும்படி, "sir pl let go... my mom's loneliness is important to me" (தயவு செய்து, போயிடுங்க... எனக்கு எங்கம்மாவின் அமைதிதான் எனக்கு முக்கியம்" - என்று உரக்கப் பேசினாள்...
அதற்கு, அழுதுக் கொண்டே பார்த்திபன் : "ok daughter I am going... I need an answer from ur mother" ( சரி மகளே, நா போறேன்... எனக்கொரு விடை வேணும் உங்கம்மாகிட்டிருந்து) - என்றார்...
அதற்கு உள்ளிருந்த மதிதீபா, "what an answer?" (என்ன விடை?) என்று கேட்டாள்...
சற்றும் தயங்காமல், "daughter, Tell ur mom what the relationship is between u and me" (மகளே, உனக்கும் எனக்கும் என்ன உறவுனு உங்கம்மாவை சொல்லச் சொல்" - என்று கேட்கச் சொன்னார்...
அதற்கு மதிதீபா, "அம்மா அவர் சொன்னது கேட்டுச்சா" என்று இந்துமதியிடம் கேட்டாள்...
"எனக்கும் அவருக்கும் எந்த உறவுமில்லை.... நா ஒரு அனாதைனு சொல்லிறட்டுமா அம்மா" - என்று மதிதீபா கேட்டாள்...
"என்னைப் பார் ... தீபா," என்று சொல்லி நிறுத்தினாள் இந்துமதி
"பார் தீபா ... பார்த்தீபா பார்த்தீபன் " - என்று பார்த்தீபன் சொன்னது கேட்டது...
"எனக்கும் அவருக்கும் எந்த உறவுமில்லை.... நா ஒரு அனாதைனு சொல்லிறட்டுமா அம்மா" - என்று மீண்டும் மதிதீபா கேட்டாள்...
"தீபா பார் என்னை" என்றாள் இந்துமதி
"நா பாத்துட்டுதான் இருக்கேம்மா"
"அவரைப் போகச் சொல்லு மதிதீபா" - என்றாள் இந்துமதி மீண்டும்.
உடனே, பார்த்தீபன் " இந்து மதி பார்த்தீபா ... மதி தீபா... இந்து உன் பேரையும், என் பேரையும் சேர்த்து வெச்சிட்டு நம்ம பொண்ணை ஏமாத்திறியே இந்து... எதுக்கு இந்த நாடகம் னு சொல்லு... நா போறேன்"
"தீபா, அவரை போகச் சொல்லு" - என்றுக் கேவினாள் இந்துமதி...
அப்போது பார்த்திபன் -
'உன் விழிகளுக்குத்
திரையிடு ...
வீணில்
என் இதயத்தைத்
துளையிடுகிறதே..." என்று பாடல் வரிகளைப் பாடினார்...
ஓடி வந்து பார்த்திபனை அணைத்துக் கொண்டு அழுதாள்... "என்னை மன்னிச்சிருங்க... நீங்க என்னையும், நம்ம மகளையும் பார்க்கக் கூடாது .... தயவு செஞ்சுப் போயிருங்க" என்று இறுகத் தழுவி அழுதாள்...
அப்போது வாஞ்சையுடன் பார்த்த மதி தீபாவை கைநீட்டி அருகில் அழைத்து , மகளையும் அணைத்துக் கொண்டு பார்த்திபன் அழுதார்...
"டாட்... "
"மகளே"
நீண்ட நேரம் வாஞ்சையோடு மூவரும் அழது ஓய்ந்தார்கள்...
பிறகு, மதிதீபா உள்ளே சென்று தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்...
"என் இந்துமதியின் கைப்பக்குவம் அப்படியே என் மகள்கிட்டேயும் இருக்கு" - என்று சொல்லி தேநீரை உறுஞ்சிக் குடித்தார்...
"அம்மா, நீங்க குடிக்கற மாதிரியே அப்பாவும் உறிஞ்சிக் குடிக்கிறார்மா" - என்று வியப்போடு மதிதீபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பார்த்திபனிடமிருந்து தேநீர்க் குவளையை வாங்கி இந்துமதியும் உறிஞ்சினாள்...
உறிஞ்சிவிட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்...
இந்துமதியின் தலையை வருடி, தன் மடியில் படுக்கவைத்தார் பார்த்தீபன்...
முச்சக்கர ஓட்டுநர் எழுந்து நின்று ,"சார்" என்று சொன்னான்...
"தம்பி, ரொம்ப நன்றிங்க தம்பி... நீங்க அவசியம் சென்னைக்கு வரனும்... சரி நீங்க புறப்படுங்க..." என்று சொன்ன பார்த்திபன், "மதிதீபா" என்றுச் சொல்லி மதிதீபாவிடம் கைப்பையை நீட்டினார்...
கைப்பையை வாங்கிக் கொண்டாள்...
"தம்பி, எனக்கு ரொம்பவும் ஒத்தாசையா இருந்தார்... காலையிலிருந்து இப்ப வரைக்கும்... அவருக்கு பணம் கொடுத்துரும்மா" - என்றார்...
பையைத் திறந்து, "எவ்வளவுப்பா" என்று கேட்டாள் மதிதீபா !...
"உன் கை நிறைய அள்ளிக் கொடும்மா"
மதிதீபா ஒரு கற்றை தாள்களை அள்ளிக்கொடுத்தாள்...
ஓட்டுநர் வாங்க மறுத்து, வேண்டாம் சார்..." என்று மறுத்தான்...
"தம்பி, பதினெட்டு ஆண்டுகள் கழித்து, என் மகள் - என் ,மனைவி - எனக்குக் கிடைச்சுருக்காங்க... நான் மகிழ்ச்சியில் இருக்கேன்... நீ வாங்கிக்க... என் நினைவா வாங்கிக்க" - என்றார் பார்த்திபன்...
"சார், சினிமாவில் ஒரே மாதிரி ரெண்டுப் பேரைப் பார்த்திருக்கேன்... எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல... அம்மாவும், மகளும் ஒரே மாதிரி இருக்காங்க... மேடம், ஒரே அச்சா இருக்குற மகளை வளர்ப்பு மகள்னு சொல்லிட்டீங்களே மேடம்"- என்று சொல்ல, இந்துமதி, மதிதீபாவை அணைத்து அழுதாள்...
"மதிதீபா, தம்பிக்கு, பணம் கொடுத்து அனுப்பிரும்மா... தம்பி போகட்டும்... தம்பிப் போனப் பிறகு, நாம விடிய விடிய அழுதுட்டே இருக்கலாம்" - என்று சொன்னப் பார்த்திபனைப் பார்த்து இந்துமதி சிரித்தாள்...
ஓட்டுநர் கைநிறைய பணம் பெற்றுக் கொண்டு கிளம்பியவுடன்-
"இந்து, கொஞ்சம் நடந்துட்டு வரலாமா... மதிதீபா , நீயும் வாயேன்... மூணு பேரும் நடந்துட்டு வரலாம்... உங்கம்மாவுக்கு நடக்கறதுனா ரொம்பப் பிடிக்கும்"
"உங்க கையைப் பிடிச்சிட்டு" என்றாள் நாணத்தோடு இந்துமதி!...
"dad, u n mom walk in and come" (அப்பா, நீங்களும் அம்மாவும் நடந்துட்டு வாங்க) என்று சொன்ன மதிதீபா,"I am very happy. I want to share my happiness with my friends" (நா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்... என் மகிழ்ச்சியை என் நண்பர்களுக்கு பகிர விரும்பறேன்.." என்று சொல்லி இருவரின் கரத்தையும் பிடித்து, இணைத்து அனுப்பி வைத்தாள்...
நெடு நேரம் கழித்து, இருவரும் கைகோர்த்த நிலையில் நடந்து வந்தார்கள்...
இந்துமதி கதவுத் தட்டினாள்...
மதிதீபா, கதவுத் திறந்து, "ரொம்ப தூரம் நடந்துப் போயிருக்கீங்கப் போலிருக்கு" என்று சொல்ல, பார்த்திபனும், இந்துமதியும் உள்ளே நுழைந்தார்கள்...
"இல்லைம்மா... இப்படியே நேரா போனோம்... திருவெங்கடசாமி ரோட்டில் திரும்பி, தபால்நிலையம் வரைக்கும் நடந்து, தபால் நிலையம் எதிரில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துப் பேசிட்டு இருந்தோம்... பிறகு, டி பி ரோடு வழியா நடந்து வந்துட்டோம்" என்று சொன்ன பார்த்திபன் பரண் மாதிரி இருந்த இடத்தில் இருந்து, பாயை எடுத்து தரையில் விரித்தார்...
"இந்து, உனக்கு களைப்பா இருக்கும்... கொஞ்ச நேரம் படுத்துக்கோ" என்று சொல்லி, இந்துமதியைப் படுக்க வைத்தார்.
பிறகு, மதிதீபாவைப் பார்த்து, "மதிதீபா, மகளே, இந்த வீட்டில் பூசையறை இருக்காம்மா" என்று கேட்டாள்...
"வாங்கப்பா, காட்றேன்" என்று சொல்லி சமையல் அறைக்கு அழைத்துச் சென்ற தீபா, இதுதா எங்க பூசையறை" என்று ஒரு திரையைக் காட்டினாள்...
திரையை விலக்கிப் பார்த்த பார்த்திபன் அங்கு நிறைய சாமி படங்கள் கண்டார்...
தீபாவைப் பார்த்து, "என்னம்மா சமையல்?... சாம்பார் தூக்கலா இருக்கு" என்று கேட்டார்...
"சமையல் செஞ்சுட்டேன்... வாங்கப்பா சாப்பிடலாம்" - என்று அழைத்தார்...
"எனக்கும் பசிக்குது... என் மகள் சமையல் என் பசியைப் போக்கப் போகுது"... என்று சொன்ன பார்த்தீபன், "மதிதீபா, எடுத்து வைம்மா... சாப்பிடலாம்... எனக்கு, பூசை அறையில் கொஞ்சம் வேலை இருக்கு " என்று சொல்லி, திரையை விலக்கி உள்ளே சென்றார்...
தீபா மூன்றுத் தட்டுகள் எடுத்து வைத்து, மூன்றிலும் உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்...
"அம்மா எழுந்திரும்மா சாப்பிடலாம்" என்று பாயில் படுத்திருந்த அம்மாவை அழைத்தாள் மதிதீபா!
அப்போது இருக் கைகளிலும் ஏந்தி வந்த படங்களை டமாரென்று தரையில் போட்டு உடைத்தார் பார்த்திபன்...
"அப்பா" என்று பயந்துக் குரல் எழுப்பி நின்றாள் மதிதீபா!
பாயிலிருந்து விருக்கென எழுந்து அமர்ந்தாள் இந்துமதி...
"இந்த மூடநம்பிக்கையால் தான் நாம மூனு பேரும் பிரிஞ்சோம்" - என்று சொன்ன பார்த்திபன், "மதிதீபா கை அலம்பனுமே..." - என்று கேட்டார் பார்த்திபன்...
மதிதீபா ஒருவித மிரட்சியுடன் செம்பில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்...
கையலம்பி வந்த பார்த்திபன், பசியாகுது சோறு போடும்மா" என்று சொல்லிவிட்டு "இந்து, வா சாப்பிடலாம்... என் மகள் எனக்கு பரிமாற நா பசியாறப் போகிறேன்" - என்றார்...
பரிமாறிக்கொண்டே கேட்டாள் மதிதீபா "ஏம்ப்பா சாமி படத்தை உடைச்சீங்க?"
"மகளே நீயும் சாப்பிடு... சாப்பிட்டுட்டே பேசலாம்" என்றார் பார்த்தீபன்...
அய்ந்து ஆண்டுகளாகக் காதலித்தார்கள் இந்துமதியும், பார்த்திபனும்...
பெரும் தொழிலதிபர் பார்த்திபனின் அப்பா!
மகனின் காதலில் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டவில்லை... பணக்காரப் பெண்ணனை மகனுக்கு மணமுடிக்க பிடிவாதம் காட்டினார்...
வணிகத்தில், நாட்டம் இல்லாததால், ஒரு கல்லூரியின் விரிவுரையாளர்ப் பணிக்குச் சென்றான் பார்த்திபன்...
அதேக் கல்லூரியில் , இந்துமதிக்கும் விரிவுரையாளர் பணிக் கிடைத்தது...
தனியே ஒரு வீடு எடுத்து இந்துமதியைத் தங்கவைத்தார்...
அப்பாவின் ஒப்புதல் கிடைக்கும் வரைக் காத்திருப்பது என்று தனது முடிவைச் சொன்னான்...
இந்துவும் ஒப்புக் கொண்டாள்...
வீட்டில் அப்பா கல்யாணப் பேச்சு எடுக்குபோதெல்லாம், ஒவ்வொரு முறையும், கல்யாணம் செய்வதாக இருந்தால் இந்துவை மட்டுமே செய்வேன் என்று பார்த்திபன் உறுதியாகச் சொன்னான்...
பார்த்திபனின் அப்பாப் பார்வையில்-
இந்துமதி பிச்சைக் காரியாகத் தெரிந்தாள்...
அறவே அவருக்கு இந்துமதியைப் பிடிக்கவில்லை...
அதேநேரம் மகனையும் இழக்க விரும்பவில்லை...
ஒருவழியாக ஒப்புதல் தெரிவித்தார்...
பார்த்திபன் - இந்துமதி - திருமணம் ஆடம்பரமாக நடந்தது...
பார்த்திபனின் அப்பா சற்றும் வெறுப்பை வெளிக்காட்டாமல் மிகவும் ஈடுபாடுடன் திருமண வேலைகள் பார்த்தார்...
மருமகளைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார்...
இந்துமதியும், பார்த்திபனும் நெகிழ்ந்தார்கள்...
திருமணத்திற்குப் பிறகாவது, வணிகத்தைப் பார்க்க அழைத்தார், தந்தை!
பார்த்திபன் விருப்பம் இல்லை என்றதால், தனக்கு வயதாகிவிட்டதாலும், வணிகத்தை நிர்வகிக்க மருமகளை அழைத்துச் செல்வதாகவும் சொன்னார் பார்த்திபனின் தந்தை...
வணிகத்தில் முழு சிறப்புடன் செயல்பட்டாள் இந்துமதி...
அடிக்கடி வணிகநிறுவன பங்குதார்களின் கூட்டம் நடக்கும்... அதனை திறம்பட கையாண்டாள்...
இந்நிலையில் ஒருநாள்-
மருத்துவ சோதனைக்காக மருத்துவ மனைக்கு பார்த்திபன் இந்துமதியை அழைத்துச் சென்றான்...
மூன்று மாதம் கரு, கூடியிருப்பதாக மருத்துவர் சொன்னார்...
மிகவும் மகிழ்ந்த பார்த்திபன் தந்தைக்குச் சொல்லி , பெரிய உணவகத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்து நண்பர்கள் உறவினர்கள் என எல்லாரையும் அழைத்துக் கொண்டாடினான்...
வழக்கம்போல மறுநாள் -
அலுவலகம் சென்றாள் இந்துமதி!...
அன்று பங்குதார்களில் ஒருவர் இந்துமதியைச் சந்திக்க வந்தார்...
வணிகம் பற்றி கேட்டறிந்தார்...
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும், அதற்கு ஒரு வரைவு அறிக்கை வேண்டும் என்று கேட்டார்...
சில கோப்புகளை இந்துமதியிடம் நீட்டி, "இதில் விவரம் இருக்கு" என்றார்...
இரண்டு நாளில் வரவு அறிக்கைத் தருவதாகச் சொன்னாள் இந்துமதி...
இரண்டு நாள் கழித்து வந்தார்...
ஏற்பாடு செய்து வைத்திருந்த, வரைவு அறிக்கையை அவரிடம் கொடுத்து, அமெரிக்காவில் தொடங்கவிருக்கும் நிறுவனம் செழிக்க வாழ்த்துகள் சொன்னாள்...
நன்றி சொன்னவர், இந்துமதியின் முகத்தைப் பார்த்து, "இந்துமதி, நீங்க பிறக்கும்போதே தாய், தந்தையை இழந்துட்டீங்கதானே " என்று கேட்டார்...
ஆச்சரியத்தில் விழித்தாள்...
"உங்களுக்கு எப்படித் தெரியும்" - என்று கேட்டாள்...
"உங்களுக்கு பத்து வயதிருக்கும் போது, தண்ணீரில் சிக்கி மறுபிறவி எடுத்துருக்கீங்க... இல்லையா?"
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"நீங்க பள்ளியிறுதி தேர்வு ,முடிஞ்சு உங்க சான்றிதழ் வாங்க போகும்போது, ஒரு லாரியில் அடிப்பட்டுத் தப்பிப் பிழைச்சீங்க... ஞாபகம் இருக்கா? "
"சார் உங்களுக்கு எப்படித் தெரியும்? என் கணவர்கிட்ட கூட நான் இதை சொன்னதில்லையே"
"இந்துமதி நீங்க சொல்லலைனாலும், உங்க முகம் சொல்லுதே"
"என்ன சொல்றீங்க"
"எனக்கு, முகத்தைப் பார்த்து ஒருத்தருடைய கடந்தக் காலத்தை - நிகழ்காலத்தை - எதிர்க்காலத்தை சொல்லக் கூடிய ஆற்றல் இருக்கு... உங்க மாமனாருக்கு என்னை நல்லாத் தெரியும்... ஆரம்பத்தில், உங்கக் கல்யாணத்திற்கு உங்க மாமனார் சம்மதிக்கலை... அவர் முகத்தைப் பார்த்து, 'உங்க மகனின் காதலுக்குத் தடைச் சொல்லாதீங்க... உங்க மகனின் உயிருக்கு ஆபத்தாயிரும்'னு நான் சொன்னப் பிறகுதான், அவர் உங்க கல்யாணத்திற்கு சம்மதிச்சார்.."
இந்துமதி அவரின் முகத்தை பெரும் வியப்புடன் பார்த்தாள்...
"இப்ப நீங்க மாசமா இருக்கீங்க" - என்று அவர் சொல்லும்போது வெட்கம் கொண்டு தலை குனிந்தாள் இந்துமதி!...
"ஆனா, இந்துமதி, உங்க கர்ப்பத்தால், நீங்க ஒரு பெரிய சிக்கலில் மாட்டப் போறீங்க" என்றார்
இதனைக் கேட்டு, அதிர்ச்சியுற்ற இந்துமதி இலேசாக கலக்கமுற்றாள்...
"உங்களுக்குக் குழந்தைப் பிறந்தால், நீங்க உங்கத் தாலியை இழக்க வேண்டியது வரும்" - என்று அவர் சொன்னதைக் கேட்டு, "என்ன சொல்றீங்க" என்று அதிர்ந்து, கண்ணீர் கசிந்தாள்...
"நா சொல்லலை இந்துமதி... உங்க முகம் சொல்லுது... முகத்தின் அமைப்பு உங்களைப் படம் பிடிச்சுக் காட்டுது... சரி நா வரேங்க " என்றுச் சொல்லிவிட்டு அவர் எழ-
"உட்காருங்க சார்" என்றுச் சொல்லி, மீண்டும் அவரை அமர வைத்தாள்...
"இந்துமதி, உங்க மாமனார் எனக்கு ரொம்பநாள் பழக்கம்... அவர் குடும்பத்திற்கு ஒன்னுனா எனக்கும் வருத்தம்தானே... நா எனக்குத் தெரிஞ்சதச் சொன்னேன்... இன்னும் நீ உறுதிப் படுத்திக்கணும்னா நல்ல சோதிடரைப் பார்... நா சொன்னது தப்புனு எந்த சோதிடர் சொன்னாலும், நா என் அமெரிக்க பிசினெஸ்ஸை நிறுத்திட்றேன்... நூற்று அம்பது கோடி ப்ராஜெக்ட் பிசினெஸை அந்த சோதிடர்க்கே தந்துடறேன்... " என்றார் அழுத்தமாக!
"சார், நீங்க சொல்றதை கேட்க எனக்கு பயமா இருக்கு... நா என்ன செய்யனும்" - என்று கேட்டார்...
அப்போது உள்ளே நுழைந்த மாமனார், மருமகளே, "இவர் உன் முகத்தை ரெண்டு நாள் முன்னாடி பாத்துட்டு வந்து, என்கிட்டையும் சொன்னார்... இவர் சொல்றதை நா முழுசா நம்பறவன்... ஏன்னா, இவர் சொன்னது என் வாழ்க்கையில் பலமுறை நடந்திருக்கு" என்றார்...
மாமனாரைப் பார்த்து, எழுந்து நின்றார்...
"உட்காரும்மா... எனக்கு நீயும் வேணும்... என் மகனும் வேணும்... ஒரு முடிவு சொல்லும்மா" என்றார்
"மாமா, எனக்குப் புரியல" - என்றார்...
"இவரோட முக ஜோசியம் தப்புனு உன் மனசுக்கு பட்டதுனா, உனக்குப் பிடிச்ச வேற ஜோசியரை பார்த்து முடிவு எடும்மா... எனக்கென்னவோ இவர் பேச்சு இதுவரைக்கும் பொய்த்துப் போனதில்லம்மா"
"மாமா நா என்ன செய்யனும்? சொல்லுங்க?"
"சார், நீங்களே தெளிவா சொல்லிட்டு வாங்க... என் மனசுக்கு தைரியம் இல்லை, நீங்க சொல்றத கேட்க " - என்று சொல்லிவிட்டு மாமனார் வெளியே சென்று விட-
"சார், நீங்க சொல்லுங்க...ஒன்னும் புரியல" - என்றாள் இந்துமதி பயந்த குணத்துடன்...
"இந்துமதி, உங்க கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சகுனம் சரியில்ல... குழந்தைப் பிறந்தால், நீங்களும் உங்க கணவரும் பிரிஞ்சிடுவீங்க... உங்க குழந்தையின் முகத்தைப் பார்த்தா, அதே கணம் உங்க கணவரின் உயிர்ப் பிரிஞ்சிடும்..."- என்றவர், "உங்க வாழ்க்கையில் சோதனை ரொம்ப அதிகமா இருக்கு... நா இப்படி ஒருத்தரை என் வாழ்க்கையில் சந்திச்சதே இல்லை..." - என்று சொல்லிவிட்டு வடிந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டு, "நீயும், கணவரும் பிரியக்கூடாதுன்னா கருவை கலைச்சிடுங்க... விதியோடுப் போராட மனிதருக்கு சக்தி இல்லைம்மா" - என்று சொல்லிவிட்டு போய்விட்டார்...
"மதி தீபா, உன் அம்மா மாதிரியே நீயும் ரசம் வெச்சிருக்கே... இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்தும்மா" என்றார்...
ரசம் ஊற்றினாள் மதிதீபா
"அம்மா" என்று கட்டிப்பிடித்து அழுதாள் மதிதீபா!
"எனக்காக உங்க வாழ்க்கையைத் தொலைக்க எப்படிம்மா முடிஞ்சது" - என்று கேவினாள்...
"மகளே, உன்னை தைரியமானவளா நெனச்சேன்... நீயும் உங்கம்மா மாதிரி இருக்கியேம்மா" - என்று சொன்ன பார்த்திபன்-
"அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுனு சொல்றேன் கேளு மகளே!... "
"அப்பா" - என்று அழுதாள் மதிதீபா
மாமனாரின் நண்பர் அப்படி சொல்லிச் சென்றவுடன் இந்துமதி மனம் சுக்கு நூறாக உடைந்து விட்டது...
முதல் கருவைக் கலைத்து விட்டால், மீண்டும் கர்ப்பம் தரிப்பது அவ்வளவு எளிதல்ல என்று அவளுடைய படிப்பறிவால் உணர்ந்திருந்தாள்...
தன் சுய வாழ்க்கைக்காக ஏதும் அறியா, கருவைக் கலைக்க இந்துமதிக்கு மனம் விரும்பவில்லை...
அப்படியே கலைத்தாலும், மீண்டும் மறுமுறை கருக் கூடி குழந்தைப் பிறந்தாலும், அந்தக் குழந்தையாலும் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணம் அவளுள் ஊறி அவளின் இதயத்தைப் பிசைந்தது...
தன்னால், காதல் கணவனுக்கு ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது, வயிற்றில் வளரும் கருவும் அழியக்கூடாது என்று முடிவுக்கு வந்த இந்துமதி, அன்று மாலையே யாரிடமும் சொல்லாமல் வெளியேறினாள்...
முதலில் சென்னையிலிருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணி, சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த இந்துமதியின் பார்வைக்கு சற்று நேரத்தில் டில்லிக்குப் புறப்படவிருந்த ரயில் தெரிந்தது... ஏறிவிட்டாள்...
சிலகாலம் அலைந்து ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகக் சேர்ந்தாள்...
தன் இருப்பிடம் - சுவடுகள் - கணவனுக்குத் தெரிந்துவிடாதபடி, குழந்தையைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு பணிக்குச் சென்று வந்தாள்...
"உங்கம்மா, என்னை சந்திச்சிருந்தால், நா நிச்சயம் உங்கம்மாவை பிரிய விட்டிருக்க மாட்டேன்... நா தேடி, தேடி எனக்கு மனநிலை பாதிச்சிருச்சு... பைத்தியக்காரன் மாதிரி உங்கம்மாவைத் தேடினேன்... வயிற்றில் குழந்தையுடன் போய் என்ன துன்பம் அடைஞ்சாளோனு நா ரொம்ப வேதனை பட்டேம்மா... "
"அப்பா அழாதீங்க" என்று சொல்லி அவருக்கு சோறு ஊட்டினாள் மதிதீபா!...
"உங்கம்மாவை எங்கப்பாவுக்குப் பிடிக்கலை... உங்கம்மா வயிற்றில் குடும்ப வாரிசு வளருவதை அவர் விரும்பலை... உங்கம்மாவுக்கு, சாமி, சடங்கு, பேய், பிசாசுனு மூடநம்பிக்கைகள் அதிகம் இருக்குன்றது எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கு..." என்று சொன்னார் பார்த்திபன்...
"எனக்கும் மூடநம்பிக்கை அதிகம் இருக்குப்பா... அம்மா பழக்கிக் கொடுத்துட்டாங்க" - என்று சொல்லி, பார்த்திபனுக்கு மீண்டும் ஊட்டினாள் மதிதீபா...
"உங்கம்மாவின் விபரங்களை பிரைவேட் டிடெக்ட்டிவ் மூலமா தெரிஞ்சிட்டு, மூடநம்பிக்கையை நம்பும் உங்கம்மாவை மூடநம்பிக்கையால் அடிச்சுத் துரத்தத் திட்டம் போட்டு அவரோட நண்பர் மூலமா சாதிச்சிட்டார்... நீ பிறந்தால் குடும்பம் பிரிஞ்சிரும்... உன்னைப் பார்த்தாலே எனக்கு சாவு வந்துரும்னு உங்கம்மா பயந்துட்டாங்கம்மா... இத பார்... என் மகள் எனக்கு சோறு ஊட்டிட்டு இருக்கா... மகளை நா கண் குளிரப் பார்க்கிறேன்... இன்னும் நா உயிரோடுதானே இருக்கேன்... " - என்று சொல்லி மகளை அணைத்துக் கொண்டார் பார்த்திபன்...
"இந்து, இனி நீ மூடநம்பிக்கை.... "என்று பார்த்திபன் சொல்லும்போதே இடைமறித்த இந்துமதி, "மூடநம்பிக்கையை எரிச்சு சாம்பலாக்கிட்டேன்" - என்று சொல்லி கணவன் மீது சாய்ந்துகொண்டாள்...
"அப்பா, தாத்தா இப்படி செஞ்சது, உங்களுக்கு எப்ப தெரிய வந்துச்சு? - என்று மதிதீபா கேட்டாள்...
"உங்கம்மாவைக் காணாமல் நா படுத்தப் படுக்கையாயிட்டேன்... யார் உங்கம்மாகிட்டே பொய் சொன்னாரோ, அவரே வந்து என் நிலைமையப் பார்த்து வேதனைப் பட்டார்... பொய்ச் சொன்னக் குற்றம் அவர் மனசை உறுத்திருக்கு... உண்மையைச் சொன்னார்... சொத்துக்கு வாரிசா, இந்துமதியின் குழந்தை வந்திரக் கூடாதுனு, எங்கப்பா போட்டத் திட்டத்தை என்கிட்ட சொல்லிட்டார்..." என்றவர், இந்துமதியின் கண்களில் வடிந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டார்...
பார்த்திபனின் கண்களில் வடிந்தக் கண்ணீரை மதிதீபா துடைத்தாள்...
"சாப்பிடுங்கப்பா" என்று சொல்லி ஊட்டினாள்...
"ம் சொல்லுங்கப்பா... அப்புறம் என்ன செஞ்சீங்க?' - என்று மதிதீபா கேட்க-
"என்மனைவிக்குப் பிறக்கும் குழந்தை, இந்தச் சொத்துக்களுக்கு வாரிசாயிடக் கூடாதுனு வஞ்சகமா என் மனைவியை என்கிட்டிருந்துப் பிரிச்சிட்டீங்க... எனக்கும் உங்க சொத்திலிருந்து எதுவும் வேண்டாம்'னு சொல்லிட்டு நானும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன்..."
"அப்பா, உங்களை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு... என்னதான் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிருந்தாலும், சின்ன மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிஞ்சு, மறுமணம் செய்துக்கறாங்க ஆண்கள்!... ஆனா, நீங்க, பத்தொன்பது ஆண்டுகள்- அம்மாவுக்காகக் காத்திருந்து அம்மாவின் நினைவாகவேத் துடிச்சிருக்கிறீங்க... இந்த காலத்தில் யாருப்பா இப்படி இருப்பாங்க?..." என்று சொல்லி அப்பாவின் மடியில் சாய்ந்தாள்...
மகளின் தலைமுடியைக் கோதிவிட்ட பார்த்திபன்-
"மகளே, எனக்கு என் மனைவி மட்டும் கிடைக்கலை... அறிவுள்ள மகளும் எனக்கு நீ கிடைச்சிருக்கே... என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லைம்மா " - என்று கண்ணீர் உகுத்தார்...
கண்ணீர்த் துளிகள், மதிதீபாவின் கன்னத்தில் விழுந்து, வடிந்து இதழோரம் இழைந்தது...
இதழ் மீது இழைந்தக் கண்ணீர்த் துளிகளை சுவைத்த மதித்தீபா, " அப்பா" என்று தேம்பினாள்...
"எனக்கு அப்பா இல்லை; அம்மா இல்லைனு என் மனசு ஏங்கும்... நிறைய இரவுகள் அழுதே கழிச்சிருக்கேன்... என் அழுகையை என் ஏக்கத்தைத் தீர்த்துட்டீங்கஅப்பா!... அப்பா, எனக்கு நீங்க கடைசி வரைக்கும் வேணும்பா... " என்று அழுதாள்...
"இந்துமதி" என்று சொல்லி இந்துமதியைப் பார்த்த பார்த்திபன், "உன் மூடத்தனம் நமக்குள் எவ்வளவுக் கொடூரமானப் பிரிவை ஏற்படுத்திருச்சு... நாம மட்டும் பாதிக்கப்படலை... நம்ம மகளும் தவிச்சிருக்கா உறவுக்காக!..." என்றார் ...
"என்னை மன்னிச்சிருங்க... யோசிக்காமல் நான் பலியாயிட்டேன்... உங்களையும் துடிக்க வெச்சுட்டேன்..." என்று இந்துமதி விரக்தியின் விளிம்பில் நின்று புலம்பினாள்...
"ஏம்மா, அப்பா உன்னைத்தேடி வந்தபிறகும், நீ எதுக்கும்மா அப்பாவைப் பார்க்க விடாம என்னைத் தடுத்தே/" என்று கேட்டாள் மதித்தீபா!
"மதித்தீபா, இதுகூடவா உனக்குப் புரியல... உன் முகத்தை நா பார்த்தால், அந்த நொடியே நான் செத்துருவேன்னு உங்கம்மாவை நம்ப வெச்சிட்டாங்க... உங்கம்மா, என் மேல் உள்ள பாசத்தால் உனக்கு மோசம் செஞ்சுருக்காங்க... தன்னையும் அழிச்சிட்டு இருந்துருக்காங்க..." - என்றுச் சொல்லி இந்துமதியின் முதுகை ஆறுதலாய்த் தடவிக் கொடுத்தார் பார்த்திபன்...
"ஏண்டி, அப்பா பசியால் இருக்கார்... அவரை சாப்பிட விடாம, சும்மா தொணதொணன்னு பேசிட்டிருக்கியே... நகரு" - என்றுச் சொல்லி இந்துமதி பார்த்திபனுக்கு ஊட்டினாள்...
பார்த்திபன் அவளின் பிஞ்சு விரல்களைப் பிடித்து, 'பீளமேட்டில் மீன் சாப்பிடும்போது இந்த விரலில் முள் குத்தி, உங்கம்மா போட்ட கூச்சல்' இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு... நீ மறக்கலையே இந்து" என்றுச் சொல்லி விரல்களை ஊதிவிட்டார் சிரித்துக் கொண்டே!...
"சும்மா இருங்க, பொண்ணு இருக்கா" - என்று இந்துமதி சிணுங்கினாள்...
"ஏம்மா, உனக்கு வெட்கம் வருமா.. ஒருநாள்கூட உன் முகத்தில் வெட்கம் பார்த்ததில்லையே..." என்று சீண்டிய மதித்தீபா, மீண்டும் "உம்மனா மூஞ்சி அம்மா" - என்றாள்
"பாருங்க, உங்கப் பொண்ணை... என்னைத் திட்றா"
"அம்மாடி மகளே, என் இந்துமதியைத் திட்டாதம்மா... எனக்கு கோபம் வரும்" - என்றார்...
"அப்பா, அப்பாகிட்ட மகளுக்குத்தான் அதிக உரிமை இருக்கு... நகரும்மா... நான்தான் அப்ப மடியில் படுப்பேன்..." என்றுச் சொல்லி அம்மாவை இழுக்க-
"அடப்பாருடா... என் தங்கத்தை " என்றுச் சொல்லி மகளின் முகத்தில் முத்தம் பதித்தாள்...
"நா தேநீர் கொண்டு வரேன்" - என்று சொல்லி இந்துமதி உள்ளே சென்றாள்...
"அப்பா, என்னோட சான்றிதழில் கூட உங்கப் பேர் போடாம அம்மா மறைச்சிட்டாங்க...ஏம்ப்பா?"
"அதுவா, உனக்கு அப்பான்ற உறவுனு ஒன்னு இருந்ததா தெரிஞ்சு நீ தேட ஆரம்பிச்சிட்டியினா, அது என் உயிருக்கு ஆபத்து ஆயிருமேனு உங்கம்மா தப்பா நினைச்சுட்டாங்கம்மா... உங்கம்மாவுக்கு என்மேல் அவ்வளவு காதல்" - என்றார் மதித்தீபாவிடம் பார்த்திபன்
"அப்பா, அம்மாவும், நானும் டில்லியில்தான் இருந்தோம்... ஒருநாள் திடீர்னு வந்து, நாம தமிழ்நாட்டுக்கு போவோம்னு கூப்பிட்டிட்டு வந்துட்டாங்க..."
இந்துமதி தேநீரோடு வந்தாள்...
"இந்து, நீ டில்லியில் இருந்ததா சொன்னியே, மகளை அழைச்சிட்டு எதுக்கு கோயமுத்தூருக்கு வந்தேனு சொல்லவே யில்லையே" - என்று கேட்டார்...
"கோயமுத்தூர் வந்து அஞ்சு ஆண்டுகள் ஆச்சுங்க... மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, நம்மப் பொண்ணுப் படிச்ச பள்ளி விடுதியில் ஒரு கூட்டம் வந்து, 'மாட்டுக்கறி சாப்பிடுவீங்களா... மாட்டை அடிப்பீங்களா... நீ இந்துவா கிறிஸ்டினா' னு கேக்க ஆரம்பிச்சாங்களாம்... மதித்தீபாவுக்கு ஒன்னும் புரியல... விடுமுறை நாளில் வீட்டுக்கு வந்த மதித்தீபா, எங்கிட்ட சொன்னப்ப, ரொம்ப பயமாயிருச்சு... தமிழ்நாட்டின் பாதுகாப்பான சூழல் அப்பதான் எனக்குப் புரிஞ்சது... அங்கிருந்தே பி எஸ் ஜி கல்லூரியில் விண்ணப்பம் செஞ்சோம்... இடமும் கிடைச்சது... வந்துட்டோம்... " என்றாள் இந்துமதி...
"ஒருவகையில் நாம அந்த கும்பலுக்கு நன்றி சொல்லனும் இந்துமதி... அவங்க வந்து மதவெறியைக் காட்டலனா, நீங்களும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்க மாட்டீங்க... நாமும் சந்திக்க வாய்ப்பிருந்திருக்காது"
"அப்பா, அது மட்டுமல்ல... நாம ஒன்னா சேர்ந்ததுக்கு நீங்க எழுதினப் பாட்டும் முக்கியம்..."
"யுடியூபில் அந்த பாட்டை கேட்டப் பிறகுதான், எனக்கு நம்பிக்கை அதிகம் ஆச்சு... ஆமா, அந்த மாணவனுக்கு எப்படி உன் பாடல் கிடைச்சது"
"நம்ம மதித்தீபா கூப்பிட்டால் மட்டும் அந்தப் பாட்டு ரிங்டோன் ஆகும்... ஒருநாள், அலைப்பேசியை இங்கே வெச்சிட்டு, கடைக்கு போயிட்டேன்... அந்த நேரம் மதித்தீபா எனக்கு அழைப்பு விடுத்திருக்கா... எங்கிட்ட படிக்க வந்த முகமது அந்த ரிங்டோனை நகல் எடுத்துட்டு, கல்லூரி விழாவில் பாடியிருக்கான்... அதை பெருமையாவும் வந்து எங்கிட்ட சொன்னான்... எனக்கு கோபமும், பயமும், துக்கமும் அதிகம் ஆயிருச்சு... நான் பயந்த மாதிரியே அந்தப் பாட்டை நீங்க..."
"யூ டியூபில் அந்தப் பாட்டைக் கேட்டு நா அழுதுட்டேன்... நீ என் பக்கத்தில் இருக்கற மாதிரி மகிழ்ச்சியில் திண்டாடிட்டேன்...."
பார்த்தீபன் கண்களில் வடிந்த நீரை, மகள் மதிதீபா துடைத்துவிட்டாள்...
மறுநாள்-
மூவரின் பயணம் சென்னையை நோக்கியதாக இருந்தது...
அப்பாவின் மடியில் மகள் தலை சாய்த்திருந்தாள்....
கணவனின் தோளில் மனைவி சாய்ந்திருந்தாள்...
பார்த்திபன் மனது மகிழ்ந்துத் ததும்பியது...
கருத்துகள்
கருத்துரையிடுக