பாப்பாவைத் திட்டாதே... நீதிக் கதைகள்
பாப்பாவைத் திட்டாதே...
நீதிக் கதைகள் -1.
மைவிழியும் தாத்தாவும்
------------------------------
நீதிக் கதைகள் -1.
உனக்கும் வலிக்குதா?...
-அரங்ககனகராசன்
தாத்தாவின் கையை இறுக்கமாகப் பிடித்தாள் தமிழரசி.
தாத்தா அவளைத் தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டார்...
"பாப்பா என்ன செய்யலாம்?" - என்று தாத்தா கேட்டார்.
"அந்தாளை சும்மா விடக்கூடாது தாத்தா" - என்றாள் தமிழரசி.
தெருவில் ஒரு குடிகாரன் அவன் மனைவியை அடித்துக் கொண்டிருந்தான்...
எல்லாரும் வேடிக்கைப் பார்த்து நின்றார்கள்...
"சொல்லு பாப்பா என்ன செய்யலாம்" என்று மீண்டும் கேட்டார் தாத்தா!
"வேடிக்கை பாக்கறவங்களை நாலு சாத்து சாத்தனும் போலிருக்கு தாத்தா" - என்று சொன்னாள் தமிழரசி.
"செஞ்சுருவோம் பாப்பா " என்று சொன்ன தாத்தா இடுப்பில் கட்டியிருந்த இடுப்புவாரை பாப்பாவின் கையில் கொடுத்தார்...
"பாப்பா... ம்..." என்று சொல்லிய, தாத்தா பாப்பாவை கீழே இறக்கிவிட்டார்...
மனைவியை அடித்துக் கொண்டிருந்தவனுக்கு எதிரில் சென்று நின்று அவனை முறைத்துப் பார்த்தாள் தமிழ்ப் பாப்பா!...
பிறகு கூடியிருந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி, பெல்ட்டால் சரமாரியாக வீசினாள்...
கூடிநின்ற கூட்டம் மெல்ல கலைந்தது.
பெல்ட் அடிபட்ட இருவர் தாத்தாவைப் பார்த்து " ஏய் கெழவா,பேத்தி கிட்ட பெல்ட் கொடுத்து அடிக்கச் சொல்றியா? பேத்தியை வளக்கற லட்சணம் இது... " என்று தாத்தாவிடம் கத்தினார்கள்...
"உங்களுக்கு அறிவில்லையா? ஒரு ஆள் ஒரு பொம்பளையை அடிக்கிறாரு... நீங்களும் நின்னு வேடிக்கை பாக்கறீங்களே" என்று நறுக்கென்று தமிழரசி கேட்டாள்.
"அது அவங்க குடும்ப பிரச்னை... நாங்க என்ன செய்ய முடியும் " என்று ஒருவன் கேட்டான்.
அவனையும் சுளீர் என்று பெல்டால் அடித்து, "உங்களுக்கு வலிக்குதா? என்று கேட்டாள் பாப்பா தமிழரசி!
"சொல்லுங்கய்யா, என் பேத்தி அடிச்சதுக்கே உங்களுக்கு வலிக்குதுன்னா, அந்த குடிகாரன் அடி அடினு அடிக்கிறான்... அந்த பொம்பளைக்கு எப்படி வலிச்சிருக்கும்" - என்று தாத்தா கேட்டார். இப்போது மனைவியை அடித்துக் கொண்டிருந்தவனும் அடிப்பதை நிறுத்திவிட்டு தாத்தாவை பார்த்தான்...
"ஏன்டா குடிகார நாயே, உன் மனைவி உன்னைத் திருப்பி அடிக்க மாட்டாள்னு நெனைச்சுட்டுதானே அடிச்சிட்டு இருக்கே... இப்ப என்னை அடிடா" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் பளார் என்று அறை விட்டார்.
"அய்யோ அம்மா" என்று கத்திக் கொண்டே குடிகாரன் கீழே விழுந்தான்.
"அக்கா, உங்களுக்கு கை இல்லையா? திருப்பி நாலு சாத்து சாத்தாம அடிவாங்கிட்டு அழுதுட்டு இருக்கீங்களே " என்று பாப்பா தமிழரசி கேட்டாள்.
இடுப்பு வாரோடு நின்ற, பாப்பாவைப் பார்த்த குடிகாரன் ஓட்டம் எடுத்தான்...
தாத்தா வேடிக்கைப் பார்த்து நின்றவர்களைப் பார்த்து, "அவங்க குடும்பப் பிரச்சனைனு சொல்லிட்டு அடுத்தவங்க பிரச்னையை எதுக்கு வேடிக்கைப் பாக்கறீங்க... வேடிக்கைப் பாக்கறது மட்டும் உங்க பிரச்னையா? வீதியில் ஒன்னு நடந்தா அதை பொதுப் பிரச்னையா பாக்க பழகிக்காங்க... என்ன சொன்னே நீ? என் பேத்தியை வளர்க்கற லட்சணம் சரியில்லைன்னு சொல்றியா..." என்று கேட்டார்.
"தாத்தா எனக்கு நல்லதுதா சொல்லித் தருவார்... என்னை யாராவது அடிச்சா நா அடிவாங்கிட்டு ம்னு... அழ மாட்டேன்... திருப்பி அடிக்க எனக்கு சொல்லித் தந்திருக்கார் தாத்தா... உங்க வீட்டில் இருக்கிற பாப்பாவையும் வீரமா வளத்துங்க... ஏன்னா, நாளைக்கு இந்த அக்கா மாதிரி உங்க பாப்பாக்களும் அடிவாங்கி அழக்கூடாது... புரிஞ்சுதுங்களா..." பாப்பா தமிழரசியின் பேச்சில் மகிழ்ந்த தாத்தா பாப்பாவைத் தூக்கி கொண்டுப் பெருமையாக நடந்தார்...
(தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல் - 318.)
11032020
----------------------------------------------------------------------
2 - கேளு பாப்பா கேளு
-----------------------------------
-----------------------------------
"தாத்தா" - என்று சினுங்கினாள் தேன்மொழி
தன் மார்பின் படுத்திருந்த பேத்தியின் தலையை வருடினார் தாத்தா : "சொல்லு தங்கம் "
"எங்காவது கூட்டிட்டுப் போங்க தாத்தா "
"என்னடி தாத்தாவை தூங்க விடாமெத் தொந்தரவு செஞ்சிட்டு இருக்கே.... இந்தாங்கப்பா எழுந்து காபிக் குடிங்க... " என்று அம்மா காபி நீட்டினாள்
பிறகு தேன்மொழியைப் பார்த்து , "ஏண்டி அறிவில்லை... தாத்தா மேல் படுத்திருக்கே.. தாத்தாவுக்கு உடம்பு வலிக்கும்.... நகர்ந்து படு " என்று தேன் மொழியை அவள் அம்மா இழுத்தாள்
தேன்மொழி தாத்தாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, விலக மறுத்தாள்...
"சனியன் சனியன்... இப்பவே பிடிவாதம் பாரு " என்று சொல்லி தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு நகர்ந்தாள்..
"தாத்தா "
'தேனு, நீயே சொல்லு எங்கே போகலாம்னு " - என்று கேட்டார்.
"தாத்தாவும் பேத்தியும் எங்கேயும் போகாதீங்க... பக்கத்தில் சாமியார் ஒருத்தர் வர்றாரு... குடும்பத்தோட போயி ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம் " என்றாள் பாட்டி.
"தாத்தா ஆசீர்வாதம்னா என்ன தாத்தா " என்று கேட்டாள் தேன்.
'பாட்டிகிட்ட நீயே கேளு " -என்று சொன்னார் தாத்தா.
"பாட்டி, சாமியார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கறதுனா என்ன " - என்று கேட்டாள்
"கேட்டியாடி உன் பொண்ணு கேள்வியை. இப்பவே உன் மகளை கண்டிச்சு வை... இல்லைனா உங்கப்பன் மாதிரி ஆயிருவா "
"என்ன தாத்தா பாட்டி சொல்றாங்க " - என்று தேன்மொழி தாத்தாவிடம் கேட்டாள்.
"தேன், பதில் சொல்லத் தெரியலைனா இப்படிதா உன்பாட்டி மழுப்புவாங்க... நீ திரும்பவும் பாட்டிகிட்ட கேள்வி கேளு " என்றார் தாத்தா.
"பாட்டி சொல்லுங்க... ஆசீர்வாதம்னா என்ன? " என்று திரும்பவும் கேட்டாள்.
அதற்குள் உள்ளிருந்து வந்த அம்மா மகளைப் பார்த்து " பாட்டி சொன்னா கேட்கனும்.... என்ன ஏதுனு கேட்டு பாட்டியைத் தொந்தரவுப் பண்ணக் கூடாது... சரி வா குளிக்க " என்று சொல்லி அழைத்தாள்..
"ஆசீர்வாதம்னா என்னானு சொல்லுங்கம்மா... சொன்னாதா நா குளிக்க வருவேன் " என்று அடம் பிடித்தாள் தேன்மொழி.
"சாமியார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினம்னா உனக்கு நல்லா படிப்பு வரும்" - என்றாள் அம்மா.
"இப்ப நான் நல்லாதானே படிக்கிறேன். நல்லா படிக்கற எனக்கு ஆசீர்வாதம் எதுக்கு? " என்று கேட்டாள் தேன்மொழி
தாத்தா சிரித்தார்.
பாட்டிக்கு கோபம் வந்தது... "சாமியோட ஆசீர்வாதம் இருக்கறதால்தான் நீ நல்லா படிக்கிறே... இன்னும் ஆசீர்வாதம் வாங்கினம்னா இன்னும் நல்லா படிப்பு வரும் " என்றாள் பாட்டி.
"சாமியோட ஆசீர்வாதம் கிடைச்சா படிப்பு வரும்னா நம்ம நாய்க்குட்டியை கூட்டிட்டுப் போய் ஆசீர்வாதம் வாங்கிக்கலாமா ... அம்மா ப்ளீஸ்... நாய்க் குட்டியையும் பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டுப் போறேம்மா.... நாய்க்கும் படிப்பு வருமில்லே " - என்றாள் தேன்மொழி.
"நாய்க்குட்டியை யாரும் பள்ளிக் கூடத்தில் சேர்த்திக்க மாட்டாங்க " என்றாள் பாட்டி.
"அப்ப ஒன்னு செய்வோம் பாட்டி. " சாமியாரு சாமியாரு எங்க வீட்டு நாய்க் குட்டி படிக்கற மாதிரி ஆசீர்வாதம் தாங்கோ'னு சாமியார்கிட்ட கேப்போம்... அவர் நிச்சயம் தருவார் பாட்டி " என்றாள் தேன்மொழி
"ஏண்டீ பொண்ணை இப்படி வளத்து வெச்சிருக்கே... முதுகில் நாலு சாத்து சாத்துனுயினா இப்படி எகத்தாளமா கேள்வி கேப்பாளா... " பாட்டி சொல்லவும் அம்மாக்காரி தேன்மொழியை அடிக்க கை ஓங்கி வந்தாள்...
உடனே தேன்மொழியைத் தோளுக்கு மேல் தூக்கி தோளில் உட்கார வைத்துக் கொண்டார் தாத்தா.
அடிக்க வந்த மகளைத் தடுத்து, " மகளே, குழந்தைகள் கேள்விக் கேட்டால் நாம மகிழ்ச்சி அடையனும்.... கேள்வி கேட்கும் குழந்தைகள் நமக்கு மட்டுமில்லை... நம்ம நாட்டுக்கே சொத்து " என்று சொல்லி தேன்மொழியின் கன்னத்தில் முத்தமிட்டார் தாத்தா
"செல்லம் நாம குளிச்சிட்டு , சாப்டிட்டு நூலகம் போகலாம்... பெரியார் நூல் வாங்கித் தர்றேன். படி... அப்பதான் நிறைய கேள்விகள் கேட்கலாம் " என்றார்
"என்னப்பா நீங்க... சாமியார்கிட்ட கூட்டிட்டு போலாம்னு இருந்தா நீங்க பெரியார்கிட்ட கூட்டிட்டுப் போறேனு சொல்றீங்களே"
தாத்தா தேன்மொழி பாப்பாவைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குக் கொண்டு போனார் குளிப்பாட்ட!...
(தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. - 68)
-அரங்ககனகராசன்
(பாப்பாவைத் திட்டாதே கதைகள்)
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. - 68)
-அரங்ககனகராசன்
(பாப்பாவைத் திட்டாதே கதைகள்)
14022020
--------------------------------------------------------------------------------------
3-சங்கிகள் யார்?
------------------
தமிழரசி கதவை மெல்லத் திறந்து எட்டிப் பாத்தாள்...
தாத்தா குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்...
தமிழரசி மெதுவாக உள்ளே நுழைவதைப் பார்த்த சரசம்மா "ஏய்... உள்ளேப் போகாதே... தாத்தா தூங்கட்டும் " என்று சொல்லி, தமிழரசியை வெளியே இழுத்தாள்..
"கையை விடும்மா... ஊரடங்கு வந்ததிலிருந்து என்னம்மா செஞ்சிட்டிருக்கீங்க... அப்பா போன் பாத்துட்டே இருக்கார்... நீயும் பாட்டியும் டிவியே கதினு உக்கந்துக்கிறீங்க.... அலுப்பில்லாமெ பாத்ததையே பாக்கறீங்க... என்கூட பேச யார் இருக்காங்க ; தாத்தாவைத் தவிர "
"சொன்னா கேட்க மாட்டே... இப்பதானே சாப்பிட்டுப் படுத்துருக்காரு... கொஞ்ச நேரம் தூங்கட்டும் வாடி... "
அம்மா, மகள் பேச்சொலியால் தூக்கம் கலைந்தது தாத்தாவுக்கு...
" தமிழ் நீ உள்ளே வாம்மா " என்று அழைத்தார் தாத்தா.
அம்மாவின் பிடியிலிருந்து உள்ளே ஓடினாள் தமிழரசி...
ஓடிவந்து தாத்தாவின் மார்பின் மீது அமர்ந்தாள்
"தாத்தா உங்ககிட்டெ ஒரு கேள்வி கேட்கனும்"
"என் செல்லம்... எங்கிட்டெ என்னடா கேக்கணும் "
"சங்கினா யார் தாத்தா "
"ஏம்மா திடீர்னு சங்கிகள் பற்றி கேக்கறே "
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க போன் பேசிட்டு இருக்கும் போது அடிக்கடி சங்கினு சொல்லிட்டு இருந்தீங்ளே "
" ஓ அதுவா... "
"சொல்லுங்க தாத்தா சங்கினா யார் "
"கெட்டவனை நாம என்ன சொல்லுவோம் "
"கெட்டவன்னு சொல்லுவோம்"
"அயோக்கியனை?"
"அயோக்கியன்னு சொல்வோம் "
"திருடனை "
"என்ன தாத்தா சங்கியைக் கேட்டா திருடனை சொல்றீங்க " என்று தமிழரசி கோபம் பட்டாள்...
"தமிழ்... சங்கியைப் பற்றிதான் சொல்லிட்டிருக்கேன் " - என்றார்..
"புரியல தாத்தா " என்று சொல்லி தாத்தாவின் தலையில் குட்டினாள்...
"அம்மாடி... என்னைப் பேசவிடும்மா "
"ம்... சொல்லுங்க "
"நா பேசறதை கவனமா கேளு "
"அய்யோ தாத்தா... சொல்லுங்க சீக்கிரம் " என்று சொல்லி தாத்தாவை மீண்டும் குட்டினாள்...
"அம்மாடி... ஏழைகளுக்கு உதவக் கூடாதுனு யார் நினைப்பாங்க "
"ஏழைகளை அடிமையா பாக்கறவன்தா அப்படி நெனைப்பானு நீங்க செல்லி இருக்கீங்களே தாத்தா "
"மக்களை ஏமாத்தறவன் எப்பவும் பொய் பேசுவான்னு "
"சொல்லியிருக்கீங்க"
"முட்டாள் தனமா பேசுவான்... அவன் பேசறதை ஏற்றுக் கொள்ளாதவர்களை கொலையும் செய்வான்... அவனை நாம"
"முட்டாள்னு சொல்றதா... கொலைகாரன்னு சொல்றதா தாத்தா " என்று கேட்டாள்...
"தனித் தனியா சொல்ல முடியாதும்மா... முட்டாள் தனமாகவும்., மக்களை சிந்திக்க விடாமலும் , அடிப் பணியாதவர்களை கொலை செய்யும் கொடூரமானவர்களாவும்,
ஏமாற்றி வஞ்சிப்பவர்களாவும், கூசாமல் பொய்யும், புரளியும் பேசறவங்களாகவும் இப்படி எல்லா கெட்ட குணங்களும் பின்னி, பினைந்து சங்கிலித் தொடர் மாதிரி இருக்கறக் கும்பலை சங்கிகள்னு சொல்லுவாங்க " - என்றார் தாத்தா
"ஓ.. அநியாயம் செய்றவங்ளை சங்கிகள்னு சொல்லுவாங்க "
"அட என் செல்லத்துக்கு புரிஞ்சுடுச்சே" என்று சொல்லி தமிழரசியை தோள் மீது தூக்கி தாத்தா மகிழ்ந்தார்.
(பாப்பாவைத் திட்டாதே - நீதிக் கதைகள்)
மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல். 1071.
19042020
----------------------------------------------------------------
4-தெரிந்தால் சொல்லு
-----------------------------
தாத்தாவும் பேத்தியும் நடையிட்டுக் கொண்டிருந்தார்கள் - மாலை நேரம் - மொட்டை மாடியில்....
குளு குளு வெனக் காற்று வீசிக் கொண்டிருந்தது...
ஏரியைச் சுற்றிலும் மரங்கள்...
ஒரு மரத்தின் கிளையிலிருந்து இன்னொரு மரத்துக்கு வந்தது ஒரு குட்டிப் பறவை...
அதனைக் காட்டி , "அது என்ன பறவை தாத்தா " -என்று கேட்டாள் பேத்தி
"அடடே சிட்டுக் குருவி.. அட இந்தக் குருவியைப் பாத்து பலக் காலமாச்சு" - என்று தாத்தா வியந்தார்
"ஏன் தாத்தா ' என்று ஆர்வமாக தாத்தாவைப் பார்த்தாள்...
"மலர்மொழி, இந்தக் குருவியை சிட்டுக்குருவினு சொல்லுவோம்.. நா சின்னதா இருக்கும் போது நம்ம வீட்டுக்குள்ளேயே கூடு கட்டி வாழ்ந்துட்டு இருக்கும் சிட்டுக் குருவிகள்... " - என்று சொன்னார் தாத்தா
"இப்ப நம்ம வீட்டுக்கு வருமா தாத்தா " என்று மலர்மொழி கேட்டாள்.
"சிட்டுக்குருவி இனமே அழிஞ்சிருச்சுனு சொன்னாங்க... ஆனா இந்தக் கொரோனா வந்து இன்னும் சிட்டுக்குருவி இனம் உயிரோடுதான் இருக்குனு காட்டிருச்சும்மா "
"இத்தனை நாள் எங்கே போயிருந்துச்சு , தாத்தா " என்று மீண்டும் கேட்டாள் மலர்மொழி.
"வண்டிகளின் இரைச்சல், வண்டிகளின் புகை எல்லாம் சேந்து காற்று மண்டலத்தை அசுத்தம் ஆக்கிருச்சு " - என்று வேதனையோடு சொன்னார் தாத்தா...
" காற்று அசுத்தம்னா"
"அசுத்தமானக் காற்றை சுவாசிக்க முடியாது. அதனால் இந்த மாதிரி சின்னஞ்சிறு பறவைகள் காட்டுப் பக்கமா போயிருச்சு "
"இப்ப எதுக்கு வந்துருக்கு தாத்தா " - என்று மலர்மொழி கேட்டாள்...
"கொரோனா வந்ததால் ஊரடங்கிப் போச்சில்லையா... அமைதியான சூழ்நிலையில் மக்கள் வசிக்கிறாங்கனு திரும்பவும் சிட்டுக் குருவிகள் வந்துருக்கு மலர்... மக்கள் குடியிருக்கும் பகுதியில் வசிக்க சிட்டுக் குருவிகளுக்கு ரொம்பப் பிடிக்கும் " என்றார் தாத்தா
"அப்ப இனிமேல் சிட்டுக்குருவிகள் நம்ம வீட்டில் வந்து கூடு கட்டுமா தாத்தா "- என்று ஆசையாகக் கேட்டாள் மலர் மொழி.
"இல்லம்மா... கொரோனா போயிருச்சுனா, சிட்டுக் குருவிகளும் காட்டுக்கேப் போயிரும் "-என்றார் தாத்தா.
"கொரோனா எப்பப் போகும் தாத்தா "
"தெரியலையே "- என்றார் தாத்தா.
"நம்ம முதலமைச்சுருக்கு இருக்குற மாதிரி உங்களுக்கு அறிவில்லையே தாத்தா "
"ஏம்மா தாத்தாவைத் திட்றே "
''போங்க தாத்தா... நம்ம முதலமைச்சர் மூனே நாள்ல கொரோனா போயிடும்னு சொன்னார்... உங்களுக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது " - என்று புலம்பினாள் மலர்மொழி.
"மலர் அவர் சொல்லி எத்தனை நாளாச்சு?... முப்பது நாளாச்சு... இன்னும் கொரோனா போகலியே " என்று தாத்தா கேட்டார்...
"அப்ப முதலமைச்சர் தாத்தா சொன்னது பொய்யா " என்று மலர் மீண்டும் கேட்டாள்...
"நமக்குத் தெரிஞ்சா சொல்லனும்.... இல்லைனா தெரியாதுனு சொல்லிடனும்... யாரும் எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க "என்று தாத்தா சொன்னார்....
"ஆமாங்க தாத்தா... முதலமைச்சர் தாத்தா ஏற்கனவே ஒன்னு சொன்னாரே... கம்பராமாயணம் எழுதினது சேக்கிழார்னு... ஏ. தாத்தா... சின்ன விவரத்தை கூட சரியா சொல்லத் தெரியாதவங்க எப்படி தாத்தா முதலமைச்சர் ஆனார்... "
"தெரியலையே மலர் "
"தேர்வு எழுதி தானே முதலமைச்சர் பதவிக்கு வந்திருப்பார் "
தாத்தா சிரித்தார்..
"எதுக்குத் தாத்தா சிரிக்கிறீங்க "
"தேர்வு எழுதிதா அமைச்சர் ஆகனும்னா பாதி அரசியல் வாதிகள் வேர்க்கடலை விற்கப் போயிருவாங்க " என்றார் தாத்தா.
"டீ வித்துட்டு இருந்த மோடி தாத்தாவும் பிரதமர் பதவிக்கு தேர்வு எழுதி வர்லியா " என்று மலர் கேட்டாள்...
"இல்லையேம்மா "
"நா நினைச்சேன் அப்பவே... " என்றாள் மலர்மொழி
"என்னம்மா நினைச்சே "
"தகர டப்பாவைத் தட்டிட்டு, நெருப்பைத் தூக்கிட்டு 'கோ கோரோனா" னு நடுத்தெருவில் மக்கள் கூப்பாடுப் போட்டிட்டு ஓடினப்பவே நினைச்சேன்... நம்ம பிரதமர் அறிவாளினு " என்றாள் மலர் மொழி.
மேலும், "நாட்டு மக்களை இப்படி வழி நடத்தறது சரியா தாத்தா ".என்று கேட்டாள் பேத்தி.
"தப்பும்மா... தப்பு " - என்றார் தாத்தா.
"தப்புனு சொல்லாதீங்க... இப்படி தவறா வழிகாட்டுதல் செய்றவங்க மேல் வழக்குப் போடுங்க ""
"பாத்தியாடி... உம் பொண்ணை... தாத்தாவுக்கு ஜெயிலுக்கு போக வழி காட்றத" என்று பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குள் நுழைந்தாள் பாட்டி தேநீரோடு
பாட்டியோடு வந்த மலர் மொழியின் அம்மா, "ஏண்டி சனியனே.... இந்த வயசுல உனக்கெதுக்குடி ஊர்வம்பு.... ஏன்டி இந்தியனாக்கப் பாக்கறியா தாத்தாவை" என்று திட்டினாள்...
"செவ்வந்தி பாப்பாவைத் திட்டாதே " என்று சொல்லி மலர்மொழியைத் தூக்கிக் கொண்டார் தாத்தா...
-அரங்க கனகராசன்.
(பாப்பாவைத் திட்டாதே - நீதிக்கதைகள்-5)
01052020
--------------------------------------------------------------------
------------------------------
(நீதிக்கதை - 5)
தாத்தாவுக்கு உடல்நலம் சரியில்லை...
அதனால் வீட்டில் செய்த உப்புமா அவருக்கு பிடிக்கவில்லை.
"வாய்க் கசக்குது... இட்லி சாப்பிடனும் போலிருக்கு" என்றார் தாத்தா!
பேத்தி மைவிழி அம்மாவிடம் போய் சொன்னாள்...
"வீட்டில் மாவு இல்லையே... சரி வா... கடைக்குப் போய் இட்லி வாங்கிட்டு வந்து தாத்தாவுக்குத் தரலாம் " என்று மைவிழியின் அம்மா சொன்னாள்...
அம்மாவும், மகளும் இட்லி வாங்க வீட்டை விட்டு கிளம்பும்போது, போலீஸ் ஜீப் வந்து நின்றது...
ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் இராமன், "எங்கே போறீங்க?" என்று கேட்டார்...
"அப்பா... அப்பா... தாத்தாவுக்கு இட்லி வேணுமாம்... நாம வண்டியில் போய் வாங்கிட்டு வந்துரலாமா " - என்று மைவிழி கேட்டாள்...
மைவிழியின் அம்மா, "நீங்க போய் இட்லி வாங்கிட்டு வந்துடுங்க... எனக்கு வீட்டில் வேலை இருக்கு " என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாள்...
இன்ஸ்பெக்டர் இராமன் வண்டியிலேறி உட்கார்ந்து, "மைவிழி நீனு அம்மாகூட வீட்டுக்குள்ளே போ... அப்பா சீக்கிரம் போய் வாங்கிட்டு வந்துட்றேன்" - என்றார்...
"அப்பா... அப்பா... நானும் வரேம்பா " என்று சொல்லி வண்டிக்குள் ஏறி உட்கார்ந்துக் கொண்டாள்...
சிறுது நேரத்தில் ஜீப் திரும்பி வந்து வாசலில் நின்றதும், மைவிழி வண்டியில் இருந்து குதித்து வீட்டுக்குள் ஓடி, தாத்தாவின் அருகில் அமர்ந்தாள்...
"மைவிழி, இட்லி வாங்கிட்டு வந்தாச்சா..." என்று கேட்டார்...
மைவிழி கோபத்துடன் முகம் காட்டினாள்...
அப்போது தட்டில் இட்லியை வைத்து மைவிழியின் அம்மா கொண்டு வந்தாள்...
"அப்பா இட்லி சாப்பிடுங்க... சூடா இருக்கு" என்று சொல்லி தட்டை தாத்தாவின் அருகில் வைத்தாள்...
"தாத்தா இந்த இட்லியைச் சாப்பிடாதீங்க " என்று சொல்லி, தட்டைத் தூக்கி வீசினாள்...
பறந்தத் தட்டிலிருந்து இட்லிகள் சிதறின...
மைவிழியின் அம்மா ஏதும் புரியாமல் விழித்தாள்... இருந்தபோதிலும் அவளுக்கு கோபம் வந்து, "திமிர் பிடிச்சவளே, ஏண்டி தூக்கி வீசினே" என்று சொல்லி அடித்தாள்...
தாத்தா தடுத்து, "அட விடம்மா... என்ன ஏதுன்னு விசாரிக்காமே அடிக்கக்கூடாது" என்று சொன்னார்...
அப்போது இன்ஸ்பெக்டர் இராமன் உடை மாற்றிவிட்டு, தாத்தாவின் அறையை எட்டிப் பார்த்தார்...
இட்லி சிதறிக் கிடப்பதைப் பார்த்து கோபத்துடன் மைவிழியைப் பார்த்தார்...
"என்னங்க ஆச்சு? எதுக்கு இவ இட்லியை தூக்கி வீசறா" என்று கோபத்தோடு கேட்டாள்...
"என்னடி நீ குழந்தையை பெத்து வெச்சுருக்கே... இட்லி வாங்கினதிலிருந்து இட்லியை தூக்கி வீசச் சொல்லி, என்னை கடுப்பேத்தறா... குழந்தையாடி இவ" என்று சொல்லி மைவிழியை உதைக்க கால் தூக்கினார்...
மைவிழி பயந்து, தாத்தாவின் முதுகோரம் பதுங்கிக் கொண்டாள்...
"குடும்பச் செலவை சமாளிக்கறவனுக்குத் தாண்டி வலி தெரியும்... இந்த நாய்க்கு என்னடி தெரியும்?... குழந்தையை பெத்துருக்கப் பாரு... போலீஸ்காரன் குழந்தை மாதிரியா இருக்கா? சனியன்...'' என்று சொல்லி மீண்டும் அடிக்க கை ஓங்கினார்...
தாத்தா மைவிழியை இறுக்கமாக அரவணைத்து அடிபடாமல் பார்த்துக் கொண்டார்...
"என்னம்மா மைவிழி... அப்பா கோபம் படறமாதிரி நடந்துக்கக் கூடாதுனு உனக்குத் தெரியாதா?" என்று மைவிழியை செல்லமாக தடவிக் கொடுத்தார் தாத்தா!...
"தாத்தா இந்த இட்லிக்கு அப்பா காசு கொடுக்கல... காசு கேட்ட இட்லிக்கார அக்காவை அடிச்சுட்டு இந்த இட்லியை வாங்கிட்டு வந்திருக்கார்"... என்றாள் மைவிழி!...
தாத்தா மைவிழியின் அப்பாவைப் பார்த்தார்...
"என்ன மாமா போலீஸ் காரன்கிட்டையே காசு கேக்கறா... எனக்கு கோபம் வராதா.. நாலு சாத்து சாத்தினப் பிறகு, இட்லியை எடுத்துக் கொடுக்குறா... திமிர்பிடிச்ச தேவ.... ஜன்மத்துக்கு எந்த போலீஸ் காரன்கிட்டயும் காசு கேக்க மாட்டா"- என்றார் இன்ஸ்பெக்டர் இராமன் கர்வத்துடன்...
"அப்பா உங்களைப் பார்த்தா பயமா இருக்கு... எனக்கு நீங்க அப்பாவா இருங்க... போலீஸ் வேலை வேண்டாம்பா"
"என்ன சொன்னே?... இந்த வீட்டில் நடக்கற ஒவ்வொரு செலவையும் சமாளிக்கறது, இந்த போலீஸ் வேலை தான்... இதைவிட்டுட்டு திருட்டு வேலைப் பாக்க சொல்றியா... என்னால் ஜெயிலுக்கு போக முடியாது... கிடைச்ச வேலையைப் பயன்படுத்தி பிழைக்கத் தெரியலைனா, இன்ஸ்பெக்டர் வேலைக்கே கேவலம் செஞ்ச மாதிரி ஆயிரும்..."
"அப்பா, போலீஸ் வேலை வேண்டாப்பா... " என்றாள் மைவிழி மீண்டும்...
இன்ஸ்பெக்டர் இராமனுக்கு கோபம் கொப்பளித்தது...
"தாத்தா, எனக்கு அப்பாவைப் பாக்க பயமா இருக்கு... என்னை ஊருக்கு கூட்டிட்டு போயிடுங்க..."- என்றாள் கண்ணீரோடு!...
:அழாதே மைவிழி... தாத்தா இருக்கேன்" - என்று சொல்லிக் கொண்டே, மைவிழியைத் தூக்கி தோளில் சுமந்தப்படி போனார் தாத்தா வெளியே...
-அரங்க கனகராசன்.
(பாப்பாவைத் திட்டாதே - நீதிக்கதைகள்-5)
30062020
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக