காமத்துப்பால் திருக்குறள் நாத்திகநூலே

காமத்துப்பால்   திருக்குறள் நாத்திகநூலே 

குறளும் - உரையும்
------------------------------

உரையாசிரியர்: ஆர்.கனகராஜ் (எ)  அரங்ககனகராசன்.

வணக்கம் 
வணக்கம்...
என்னுள் பகுத்தறிவுச் சுடர் சுடர்தற்கு ஏதுவாய் அமைந்தது தந்தைப் பெரியாரின் உணர்வலைகளே...
ஆதலால்; பெரியாருக்கு என்றென்றும் எனது வணக்கம்!
- அரங்ககனகராசன் 


கண்ணீரும் துக்கமும் 
என் உணர்வில்- 
என் ஒவ்வொரு அசைவிலும்-
எதிர்ப்பார்ப்புகள் பலகோடியாய்க் கொண்டிருந்தவர் என் அன்னை ஆறுகுட்டியம்மாள்!...

தன்னலமற்றவர் என் தங்கை ஆர்.சகுந்தலா. என்நலமதில் ஓராயிரம் வேட்கை என் தங்கையின் நெஞ்சிலே...

இந்நூல் வெளிவந்திடல் வேண்டுமென, என் தங்கையின் நெஞ்சிலே பேரவாக் குடில் அமைத்திருந்தது...

இந்நூல் நூற்கையில்-
என்மடிமீதமர்ந்து - குறளுக்கு விளக்கம் கேட்பான் - உண்மையை விண்டுரைப்பான் - என் மைந்தனாய் வளர்ந்திட்ட என் தங்கையின் மைந்தனாம் பாரி!...

மூவரும் 
ஆழிப்பேரலையில்-
வேளாங்கண்ணியில்-
26-12-2004ல் அமிழ்ந்துப் போயினர்...

கண்ணீரும் துக்கமும் என் நெஞ்சு சுமக்கட்டும்... 
என் தோட்டத்தில் பூத்திட்ட, இத்தமிழ்ப் பூவினை தமிழ் மண் சுமக்கட்டும்...
-அரங்ககனகராசன் .



தமிழர்கள் பெருமைக்குரியவர்கள்...

பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்; திருக்குறளைத் தமிழ் மொழியில் பெற்றமையால்!...

திருக்குறள் எந்தெந்த மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டாலும், அந்தந்த மொழிகளுக்குப் பெருமை சேர்கிறது!... எவ்வாறெனில்; அந்தந்த மொழியினரைத் திருக்குறளின் நல்லுரை சீர் படுத்துவதால், அம் மக்கள் மேன்மையுறுகின்றனர்...

மக்கள் மேன்மையுற-
பாலமாய்த் திகழ்வதால், மொழிகளும் பெருமையடைகின்றன...

மானிடர் யாவரும் பகுத்தறிவுடன் விளங்க வேண்டுமென்கிற நோக்குடன் திருவள்ளுவன் திருக்குறளை யாத்தான்...

திருக்குறளில் பொதிந்துள்ள விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவுக் கருத்துக்களை ஏனோ உணர மறுத்தனர் உரையாசிரியர்கள் சிலர்... பொதுவழி நூலானத் திருக்குறளை, ஆன்மீகச்சாயம் பூசினர்...

எனது உரையிலும் குறைகள் இருக்கலாம்... சுட்டிக்காட்டுங்கள் ; உங்கள் சுட்டிக்காட்டல் என்னுள் இன்னும் தெளிவை ஏற்படுத்தும்...

தமிழ்மக்களே, நீவிர் மேலும் மேலும் திருக்குறளை ஆய்வுச் செய்திடுங்கள்!... உங்கள் ஆய்வு-

உலகின் ஒப்பற்ற 'பகுத்தறிவு நூல்' திருக்குறளே எனப் பறைசாற்றிட உதவும்...

சாதி, பேதமின்றி, மாந்தர் குலம், மாந்தர் குலமாகவே வாழ்ந்திட பேருதவியாக அமையும்...
10-04-2002
சென்னை-24.


முதலில் காமத்துப்பால் திருக்குறள் நாத்திகநூலே எழுதுகிறேன் 

நூல்சுவை அருந்திடுக!...                

      

காமத்துப்பால் - திருக்குறள் நாத்திகநூலே




களவியல்                                                      அதிகாரம் :109.

                               தகையணங்கு உறுத்தல்

அணங்குகொல்  ஆய்மயில்  கொல்லோ     கணங்குழை
மாதர்கொல்  மாலும்என் நெஞ்சு!.                         1081.

அணங்குகொல்
     - ஒய்யார ஒயிலே 
      ஓராயிரம் அழகை 
      ஓருருவாய்க் கொண்ட பேரமுதே...

      நீ 
      பெண்ணினத்தின் பேரெழிலோ 

ஆய்மயில் கொல்லோ 
      -பொன்னே பூவே 
      வண்ணநிலவே - நீ 
      பின்னழகைக்காட்டி 
      சின்னநடை நடந்தால் 
      கொள்ளை அழகாய் 
      அழகுமயிலாய்த் தெரிகிறாய்...

      அழகுமயிலோ நீ 

கணங்குழை மாதர்கொல் 
      -ஒளியுமிழும் 
      விலைமதிப்பில்லா 
      அணியை
      காதில் அணிந்திருக்கும் - நீ 
      செல்வ சீமாட்டியோ

மாலும்என்  நெஞ்சு.
      -நீயாரென 
      யாரிடம் அறிவேன் 
      மயங்குதே - என்நெஞ்சு
      தவிக்குதே!... 



களவியல்                                                 திருக்குறள் நாத்திகநூலே 

நோக்கினாள்  நோக்கெதிர்  நோக்குதல்  தாக்கணங்கு 
தானைக்கொண்  டன்னது  உடைத்து.              1082.

நோக்கினாள்  நோக்கெதிர் 
      -விண்மீன் பெண்ணாய் மாறி 
      மண்மீது நடையிடுமோ 
      வியப்புடன் விழிவிரித்துப் பார்த்தேன்...

நோக்குதல்  தாக்கணங்கு 
      -அவளும் பார்த்தனள் பார்வை...

      பார்வையென்று நான் - மெல்லிய
      ஓரிழையால் சொல்லுவதோ

தானைக்கொண்  டன்னது உடைத்து.
       பார்வையன்று  - அது
      பாய்ந்துவரும் படையென்றுக் 
      கூறின்  மிகையன்று...

      பாவையின் கண்வீச்சில் 
      பட்டென என்னிதயம் 
      அவளடி வீழ்ந்ததே...
---------------------------------------------------


களவியல்             திருக்குறள் நாத்திகநூலே 

பண்டறியேன்  கூற்றென்  பதனை  இனியறிந்தேன் 
பெண்டகையால்  பேரமர்க் கட்டு.                 -1083.

பண்டறியேன்  கூற்றென்  பதனை
      -பாசக்கயிறு வீசி 
      பாவியெமென் வருவான் 
      உயிர்பறிக்கவென்று 
      பலர்சொல்லுவர்...

      பொய்யோ மெய்யோ - நான் 
      கண்டதில்லையொரு நாளும்

இனியறிந்தேன் 
      -இந்நாள் கண்டேன் 
      இதுதானோ கூற்றென்பது...

பெண்டகையால்  பேரமர்க் கட்டு.
     நீளமாய் அகலமாய் 
     பேரழகுடன் விளங்குதே 
      பெண்ணின் இருவிழிகள் 
  
      இருவிழிகளோ - அல்ல!
      இதயந்தனைத் துளைத்திடும்
     ஈட்டிமுனையன்றோ அவை...

      பெண்ணின் அழகு விழிகளையோ 
     கூற்றென்றனர்...    
--------------------------------------------------------

களவியல்                               திருக்குறள் நாத்திகநூலே

கண்டார்  உயிருண்ணும்  தோற்றத்தால்  பெண்டகைப்
பேதைக்கு  அமர்த்தன  கண்.                                1084.

கண்டார்  உயிருண்ணும்
      -காமக்கனல் மூட்டி
      காண்போரை அதில் வீழ்த்தி
      சாகடிப்பது  எதுவெனில்

தோற்றத்தால்
      -கட்டழகியின் - இரு
      கண்களெனில்  மிகையாமோ...

      கண்களல்ல
      காளையர் நெஞ்சம்தனைக் கிழித்து
      கொட்டும்   கொட்டும் இரத்தத்தை - வயிறு
      முட்ட குடித்திடும்
      கொடிய விலங்கன்றோ...

பெண்டகைப்  பேதைக்கு
      -பேதைப் பெண்ணின் முகத்தில் \
   
அமர்த்தன  கண்.
      -கொடியவிலங்கொன்று
      கண்ணின் வடிவில்
      குடி புகுந்தது...
---------------------------------------------------------------


களவியல்           திருக்குறள்  நாத்திகநூலே

கூற்றமோ  கண்ணோ  பிணையோ  மடவரல்
நோக்கம்இம்  மூன்றும் உடைத்து.        -1085.

கூற்றமோ
      -இளந்தளிர்
      இவள் விழியிரண்டும்
      எந்தன் உயிர் பறிக்கிறதே
   
      விழியிரண்டும்
      கொலைக் கருவித்தானோ...

கண்ணோ
      -அல்ல...
      அழகிய வடிவங்கொண்ட கண்களோ

பிணையோ
      -அல்ல...
      மானின் விழியை
      மங்கையிவள் முகத்தில் வைத்தாளோ

மடவரல்  நோக்கம்
      -மையல் பொழியும்
      மரகத சுடரிவள் பார்வையில்
   
இம்  மூன்றும்  உடைத்து.
      -இம்
      மூன்றுவித காட்சிகள்
      ஒன்றன்பின் ஒன்றாய்த் தெரிகிறதே...
--------------------------------------------------------------

களவியல்                        திருக்குறள் நாத்திகநூலே

கொடும்புருவம்  கோடா  மறைப்பின்  நடுங்கஞர்
செய்யல  மன்இவள்  கண்.                                 - 1086.

கொடும்புருவம்
      -பூங்கொடியாள்
      பூவிழியாள்
      தேன்மொழியாளென
      கோதையிவளை  மொழிப் பலவால் மொழிவேன்

      இனியாள்
      இவள் முகத்திலேன் கொடும்புருவம்

கோடா  மறைப்பின்
      வில்போல் வளைந்து
      என்னை அச்சம்  கொள்ளச் செய்கிறதே...

நடுங்கஞர்  செய்யல  மன்இவள்  கண்.
      -வில்லில் இருந்து - காமக்
      கனை யொன்று
      சீறிப் பாய்ந்து வந்து  - என்னைக்
      கோரமாய்க் கொன்றிடுமோவென அஞ்சுகிறேன்...

      வில்போல் புருவம்  வளையாமல்
      நேராய் இருந்திட்டால்
      பாவைவிழிக் கண்டு நானும்
     வீணாய் நடுக்கம் கொள்ள மாட்டேனே...
------------------------------------------------------------------

களவியல்                      திருக்குறள் நாத்திகநூலே.

கடாஅக்  களிற்றின்மேல்  கட்படாம்  மாதர்
படாஅ  முலைமேல்  துகில்.                -1087.

கடாஅக்  களிற்றின்மேல்
       -எதிர்ப்படுவோர்  எவரையும்
      அதம் செய்திடுமாம்
      மதம்கொண்ட யானை
      மதம் பிடித்த யானையின்

கட்படாம்
      -கண்பார்வைதனை
      மறைப்பது போல்
      துணியொன்றால் முகத்தை மூடினால்
      யானையின் வதம் குறையும்...

      அதுப்போல

மாதர் படாஅ  முலைமேல்
      -இளம்பெண்ணிடம்
      எகிறி நிற்கும்
      திமிர் பிடித்த முலையிரண்டையும்

துகில்.
      -துணியால்
      மூடாதுவிட்டால்
      நாட்டில் பல
      காளையர் மாய்ந்து விடுவர்...
---------------------------------------------------------------

களவியல்                திருக்குறள் நாத்திகநூலே.

ஒண்ணுதற்  கோஒ  உடைந்ததே  ஞாட்பினுள்
நண்ணாரும்  உட்கும்என்  பீடு.                  -1088.

ஒண்ணுதற் கோஒ
      -சுந்தரநிலவென்னைச்
      சுண்டியழைத்திடுமோ...

       விண்மீன் போல்
      சுடர்வீசிய
      சுந்தரியின் எழில் நெற்றிக் கண்டு
      நானென்  உறுதித் தளர்ந்தேன்...

ஞாட்பினுள்
      -போர்க்களத்தில்
      தீரமுடன்
      வீரமறவர் வீசும்
      கொலைக் கருவிக் கண்டும்
      நிலைத்தளராத நான்
      பேதைப் பெண்ணின் நெற்றிக் கண்டு
     போதையுற்றேனே...

நண்ணாரும்  உட்கும்என்  பீடு.
      -பாய்ந்துவரும்  படையைப்
      பயமின்றித் தாக்கி அழிப்பேன்...

      பகைவரும்  என்திறம்  கண்டு
     பகை மறந்துப் பாராட்டுவர்...

      இன்று
      சின்னப் பெண்ணொருத்தியின்
      சிறுநுதல் அழகில்
      என்னையிழந்து
      அவள் தாள் பணிந்தேன்...

----------------------------------------------------------------------

களவியல்                        திருக்குறள் நாத்திகநூலே

பிணைஏர்  மடநோக்கும்  நாணும்  உடையாட்கு
அணிஎவனோ  ஏதில  தந்து.                            -1089.

பிணைஏர்  மடநோக்கும்
      -பைங்கிளியே
      பைந்தேனே
      எழில் கொழுந்தே

      மருண்டப் பார்வையால் - நெஞ்சில்
      மயக்கும் மையலே

      மான்தானோ நீ
      பேரழகைப் பொழியுதே உன்விழி நளினம்...

       ஆயினும்
      என்ன நீ செய்கிறாய்...

நாணும்  உடையாட்கு
      -நாணம் கொண்டு நங்கை நீ
      கால்விரலால் கோலம் போடுவாய்...
      வெட்கம்  கொண்டு  நீ
      விரல் நகம் கடிப்பாய்...

      கன்னத்தில் அப்போது
      கமழும்  சிவப்பழகில்
      வண்ண நிலவும்  மெய்மறக்கும்

      அழகுப்பெண்ணே
      ஆயினும்
      என்ன நீ செய்கிறாய்

அணிஎவனோ  ஏதில  தந்து.
      -மருண்டப் பார்வையும்
      மண்பார்த்த நாணமும்
      பெண்ணே உன்னை அழகுச் செய்ய
      என்ன நீ செய்கிறாய்...

      அணிகலன் பூட்டி - உன்னை
      அழகு செய்கிறாயா...
   
      இனியவளே
      இயல்பாகவே நீ பேரழகு!
      இதிலேன் அணிகலன்...

      உன்னை
      அழகுச் செய்யும் தகுதி
      அணிகலனுக்குண்டோ...

----------------------------------------------------------

களவியல்                                திருக்குறள் நாத்திகநூலே

உண்டார்கண்  அல்லது  அடுநறாக்  காமம்போல்
கண்டார்  மகிழ்செய்தல்  இன்று.               -1090.

      "மதுவுண்ணும் பழக்கமுண்டோ
      மன்னவனே சொல்லு" என்றாள்...

      "மாந்தளிரே
      உன் இதழருந்தியதுண்டு...
      எந்நாளும்  நான்  மது அருந்தியதில்லை
      இனிமேலும் அருந்தேன்" என்றான்...

      ஏனென்றாள்

உண்டார்கண்
      -மதுவுண்டால் மயக்கமுண்டு என்பான்
      மங்கையே
      என் தோழன்

அல்லது  அடுநறாக்  காமம்போல்
      -மதுவருந்தா போதில்
      மயக்கம் துளியும்
      மனதில் இல்லை என்பான் மேலும் அவன்...

      ஆனால்  பெண்ணே
      மதுவருந்தாமலே  - நான்
      மயங்குவதுண்டு  அறிவாயா  நீ  என்றான்...

      மதுவின்றி  மயக்கமா
      அறியேன் மன்னவா  என்றாள்...

கண்டார்  மகிழ்செய்தல்  இன்று.
     -உன்னைக் கண்ணால் கண்டாலே
      கண்மணி
      என்நெஞ்சில்  போதையூறுதடி...

      உண்டால்  மயக்கம்  தந்திடுமாம்  மது
      உன்னைக்
      கண்டாலே  போதுமே
      கணக்கின்றி  நெஞ்சில்  போதை  ஏறுதே...

      இனியவளே
      என்னிதயம்  கவர்ந்தவளே!...
-------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------

களவியல்                              அதிகாரம் 110
                     குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண்  உள்ளது  ஒருநோக்கு
நோய்நோக்கொன்  றந்நோய்  மருந்து.          -1091.

இருநோக்கு  இவளுண்கண்  உள்ளது
      -என்னவென்று  சொல்வேன்
      என்தவிப்பை...

      மையுண்ட  விழியிரண்டை
      மங்கையிவள்  கொண்டுள்ளாள்...

      இருவிழியிலும்
      இருவிதப் பார்வையெனில் மிகையில்லை

      விந்தை  என்பேனோ
      விநோதம்  என்பேனோ

ஒருநோக்கு
      -பனியை திரட்டி - இள
      மேனி செய்தனளோ

      பாவையின் எழில்தனை
      பருகிநின்றேன்  நான்  விழியால்...

      நெடுங்கயல்  கண்ணழகி
      நேராய்  ஒருபார்வை  என்னைப் பார்த்தனள்...

      நிலவின்  மடியில்
     நெருப்பை மூட்டி  -  என்
     நெஞ்சில் திணித்ததுப் போல்
      ஒருபார்வையால் என்னுள்
      ஓராயிரம்  காதல்நோய்  தந்தனள்...

நோய்நோக்கொன்  றந்நோய்  மருந்து.
      -காதல்நோயால்  -  நான்
      கடுந்துன்பம்  கொண்டேன்...
      உண்ணவுமில்லை... உறங்கவுமில்லை...

      பெண்ணவளை  நினைத்து
      பெரும்பொழுதோடு  சண்டை செய்கிறேன்...

      என்னைக் கண்டவரெல்லாம் -  பெரும்
      பித்தனென்றனர்...

      கண்வீச்சொன்றால்
      காதல் நோய்  செய்தவளே
      இன்னொருப் பார்வைச் செய்து
      ஏந்திழையே
      என்னிதயத்தைத் தாலாட்டு...

      கண்மணியே  -  உன்
      காதல்பார்வைக்காக
      காத்திருப்பேன்  சாகும்வரை...

      இருப்பார்வை  உன்னிடமுண்டு!
      ஒருபார்வையால் காதல்நோய்த் தந்தாய்
      இன்னொரு பார்வையால்
      காதலைத் தந்துவிடு...

----------------------------------------------------------------------------

களவியல்                                 திருக்குறள் நாத்திக நூலே!

கண்களவு  கொள்ளும்  சிறுநோக்கம்  காமத்தில்
செம்பாகம்  அன்று  பெரிது.               - 1092.

கண்களவு  கொள்ளும்
      -சின்னப்பெண்  தன்
      சிறுபார்வையால்
      மெல்லப் பார்த்தாள் என்னை

      மென்தோகையவள்
      கடைக்கண்ணால்  கண்டாள்...
\
      என்னவென்பேன்
      விந்தைதனை...

சிறுநோக்கம்
      -சின்னப் பார்வைப் பட்டு
      சிந்தை இழந்து  நின்றேன்
   
      இதுதான் நேரமென்று
      என்
      இதயத்தைத் திருடிவிட்டாள்
   
      களவு செய்த கன்னியே
      உன்னை நான்
      உளம் மகிழ வாழ்த்துகிறேன்...

காமத்தில்  செம்பாகம்  அன்று.
      -ஓரப்பார்வையால்
      ஓராயிரம் காதல்  நீ
      எனக்குத்  தந்து  விட்டாய்...

      பார்த்தது கொஞ்சநேரம்  என்பதால்
      பாவையே
      காதலை  முழுதாய்  நீ தரவில்லையென்று
      கூறுவர்  பலர்  -  அறியாமல்!

பெரிது.
      -கண்ணே
      சிறுபார்வையால்
      பெருங்காதல் தந்தாய்...
      பெண்மானே!...  நானறிவேன்  நன்று!...
-------------------------------------------------------------------------------

களவியல்                      திருக்குறள் நாத்திகநூலே

நோக்கினாள்  நோக்கி  இறைஞ்சினாள்  அஃதவள்
யாப்பினுள்  அட்டிய  நீர்.                                 - 1093.

நோக்கினாள்
      -இளமொட்டு விரிவதுப்போல்
      இளங்கிளி - என்னைக்
      கள்ளமாய்க் கண்ணுற்றாள்...

      கண்ணியவள்
      கள்ளப்பார்வையை
      கண்டுவிட்டேன் கணப்பொழுதில்

நோக்கி  இறைஞ்சினாள்
      -நான் கண்டதைக் கண்ட
      நங்கையவள்
      நாணம் கொண்டு
      தலை குனிந்தாள்

அஃதவள்
      நாணம்கொண்டு நங்கைச்
      செய்த
      தலைகுனிவில்
      நான்
      நாலாயிரம் பொருள் புரிந்தேன்...

யாப்பினுள்  அட்டிய நீர்.
      -வெட்கம் கொண்டு
      வெண்ணிலா
      தலைக் குனிந்தது ஏனெனில்
     அது
    காதல் பயிர் வளர
     ஏந்திழையாள் வார்க்கும் நீராகுமே!...
-----------------------------------------------------------------

களவியல்   திருக்குறள் நாத்திகநூலே

யான்நோக்குங் காலை  நிலன்நோக்கும்  நோக்காக்கால்
தான்நோக்கி  மெல்ல  நகும்.                         - 1094.

யான்நோக்குங்  காலை
      -பெண்ணவள் பேரழகை
      கண்ணால்  பருகவே
      காண நின்றேன்...

நிலன்நோக்கும்
      -என் பார்வைக் கண்டு
     மென்மயிலவள்  நாணங்கொண்டு
      தரைப் பார்ப்பாள்...

நோக்காக்கால்
      -காரிகையவள்
      தூரிகையால் தீட்டிய விழியால்
     நான் அவளைப் பார்க்காத
     இமைப்பு  நேரத்தில்

தான்நோக்கி
      -பூவெனத் தலையுயர்த்தி
      பூவையவள்  என்னைப் பார்த்திடுவாள்

மெல்ல  நகும்.
      -நெஞ்சம் கவர்ந்தவனை
      கொஞ்சமும் வெட்கமின்றி
      பார்த்து  நிற்கிறேனே என்று
     பிஞ்சு மொழியவள்
     நெஞ்சோடு புலம்பி நாணி  நகுவாள்...
------------------------------------------------------------------------------------

களவியல்                         திருக்குறள் நாத்திகநூலே

குறிக்கொண்டு  நோக்காமை  அல்லால்  ஒருகண்
சிறக்கணித்தாள்  போல நகும்.                     -1095.

குறிக்கொண்டு  நோக்காமை  அல்லால்
      -என்ன இவள்
      என்னைக் காண  மறுக்கிறாளே
      என்று என்னுள் வருத்தம்
      ஆனால் ;
     நேருக்கு நேர் காண
     நேரிழையாளுக்கு நாணம்...
     அதனால்

ஒருகண்  சிறக்கணித்தாள்
      -கடைக் கண்ணால்
      கன்னியவள் என்னை
     கண்ணிமை நேரமேப் பார்த்து

போல  நகும்.
      -ஒருகோடிப் புன்னகை
      ஒருதுளி நேரத்தில்
     பூத்திடுவாள்...
---------------------------------------------------------------------

களவியல்                         திருக்குறள் நாத்திகநூலே.

உறாஅ  தவர்போல்  சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை  உணரப் படும்.                 -1096.


உறாஅ  தவர்போல்  சொலினும்
      -உள்ளத்தில் ஆசைவைத்து
     உதட்டில் வெறுப்பு  மொழிகிறாயே...
      எனது செல்லக்கிளியே...

      காதல்  கொண்டு      
      நானுன் பாதம்  தொடர்ந்தால்
     கனிமுகம் திருப்பி
     கண்விழியைத் தாழ்த்துகிறாயே...

      நானுன்னைக் காதல் கொள்ளவில்லை
      வீணாய் ஏனெனைத் தொடர்கிறாய்
      என்று என் மாங்கனியே
      சொல்வது  நீயா...

      கார்குழலியே
      தேன்மொழியே
      நீயென் நெஞ்சில்
     நானுன் நெஞ்சில்
     இதுதானே  உண்மை!...

செறாஅர்  சொல்
      -வண்ணநிலவே
      உண்மையை நெஞ்சில் வைத்து
      எதன் பொருட்டு - நீ
      பொய்ப் பேசுகிறாய்...

      நானின்னும்  அறியவில்லை
      ஆயினும்
       நீ  மொழிவது பொய்யென்று

ஒல்லை  உணரப் படும்.
      -உடனே  நான் அறிந்தேன்
     உன்  முகக் குறிப்பறிந்து...
----------------------------------------------------------------------

களவியல்                                      திருக்குறள் நாத்திகநூலே

சேறாஅச்  சிறுசொல்லும்  செற்றார்போல்  நோக்கும்
உறாஅர்போன்று  உற்றார்  குறிப்பு.                - 1097.

செறாஅச்  சிறுசொல்லும்
      -கோபம் கொண்டு
      கோதைப் பேசுகிறாள்...

செற்றார்போல்  நோக்கும்
     -பகைக்கொண்டு
     பார்ப்பதுப் போல்
     பைங்கிளிப் பார்க்கிறாள்

உறாஅர்போன்று
      -அயலானைக் கண்டு
      அடிவிலகி நிற்பது போல்
      நடி செய்கிறாள் நங்கை!...

உற்றார்  குறிப்பு.
      -ஏனிவ்வாறு - என்
      ஏந்திழையாள் செய்கிறாளென்று
      எண்ணம் செய்தேன்...

      அட
      பாசமுள்ளவள் - தன்
      பாசம்தனை வெளிப்படுத்தும்
      பாங்கு இதுவென
      பாங்குடன் உணர்ந்தேன்...

-----------------------------------------------------------------

களவியல்                                      திருக்குறள் நாத்திகநூலே

அசையியற்கு  உண்டாண்டோர்  ஏஎர்யான் நோக்கப்
பசையினள்  பைய  நகும்.                                - 1098.

அசையியற்கு
      -பூங்கொடியொன்று
     நடையிட்டு வந்ததுபோல்
     என் பூவையும்  வந்தனள்...

      அசையும் அவள் இடையைப் பார்த்து
     அசைய மறந்ததோ   மலர்க் கொடியும்

     மெல்லியலாளின்  அசைவில்
     உள்ளம் இழந்தேன் நானெனில் மிகையோ...

உண்டாண்டோர் ஏஎர்
       -அழகின்  நளினங்கள் - அவள்
       அசைவுதனில்  மிளிரும்...

யான்  நோக்கப்
      -இமைக்காது  நான்  - என்
     இனியவளின்  அசைவை
    பார்வையால் பருகிநின்ற என்னை
 
பசையினள் பைய  நகும்.
      -பாசமலரும் பார்த்துவிட்டாள்...

      நாணங்கொண்டு  நங்கையும்
      கோவை இதழ்  குவித்து
      புன்னகைத்தாள் பூப்போல!...
--------------------------------------------------------------------------

களவியல்                           திருக்குறள் நாத்திகநூலே

ஏதிலார்  போலப்  பொதுநோக்கு  நோக்குதல்
காதலார்  கண்ணே  யுள.                        -1099.

ஏதிலார்  போலப்
      -புதுமுகம் ஒருவரைப்
      புதிதாய்ப்  பார்ப்பதுப்  போல

பொதுநோக்கு  நோக்குதல்
      -இருவரும் ஒருவரையொருவர்
      பொது இடங்களில் பார்த்துக் கொள்வார்...

      ஏனெனில் பழகியவர் இவரிருவருமென
      எவர் அறியநேரிட்டாலும்
      காதலுக்குத் தடை  வருமே...

      அதன்பொருட்டே

காதலார்  கண்ணே  யுள.
        -காதலர் கையாளும் வழியிது...
       வாழ்க  காதல்!
--------------------------------------------------------------------------------------------

களவியல்                             திருக்குறள் நாத்திகநூலே

கண்ணொடு  கண்ணினை  நோக்கொக்கின்  வாய்ச்சொற்கள்
என்ன  பயனும்  இல.                                           - 1100.

கண்ணொடு  கண்ணினை
      -அவனிடம் என்னடி பேச்சு
      அடுத்து நீ அவனோடுப் பேசுவதுக் கண்டால்
      அறுத்துவிடுவேன் நாவை
      அதட்டினர்  ஈன்றோர்...

      அஞ்சுமா  இளங்காதல்
      தடைதான்  எடுபடுமா...

      காதலர்  இருவரும்

நோக்கொக்கின் 
      -கண்களால் பேசினர்
   
       கண்கள் என்ன
       காமக்கனைகள்  மட்டுமா  ஏவும்...

       கவிதையும்  பாடும்
       கருத்துமிகுப் பொருளுரையும் தீட்டும்...

வாய்ச்சொற்கள்
       -அதனால்
       வாய்ச்சொற்களுக்கு

என்ன  பயனும்  இல.
      -இங்கே
       பயனில்லை!
------------------------------------------------------------------------------------

களவியல்                                                                           அதிகாரம்:111.

                                      புணர்ச்சி  மகிழ்தல்

கண்டுகேட்டு  உண்டுயிர்த்து  உற்றறியும் ஐம்புலனும் 

ஒண்டொடி  கண்ணே  உள.                                         -1101.

 

உன்னைக்  காணும்  -  என் 

கண்களுக்கு  - நீ 

இன்பம்  தருகிறாய்...

 

உன் சொல் வீச்சில்  சிரிப்பலையில் 

என் 

செவிக்கு  இன்பம்  தருகிறாய்...

 

நாவால்  உன்மேனியைத்

தீண்டினேன்...

நாவும்  பெற்றதம்மா  இன்பம்...

 

முகர்ந்தேன்  உன்  அங்கமெங்கும் 

அங்கெல்லாம்  -  அடியே 

ஆனந்தமாய்  மணம்  நுகர்ந்தேன்...

 

முழுமையாய்  முழுநிலவே  -  உன்னைத்

தழுவினேன் 

இன்பக்கடல்  போல்

எனக்கு  நீ  இனிதாய்...

 

என் ஐம்புலனும் 

ஓரிடத்தில் 

ஓராயிரம்  இன்பம்  காணும்  எனில் 

அது 

சுடரும்  வளையணிந்த 

சுந்தர  சிலையே  உன்னிடத்தில்தான்...

          -------------------------------------------------------------------------

 களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

பிணிக்கு  மருந்து   பிறமன்  அணியிழை 

தன்நோய்க்குத்  தானே  மருந்து.     -1102. 

 

நோயென  வந்தால் 

மருந்து  இதுவென 

மருத்துவர்த்  தருவார்...

 

என்னுள்  எரிவது 

காமநோயன்றோ...

 

பெண்ணே 

பேரழகே 

பூவே  பூங்கொத்தே 

அணிகலன்  அணிந்த 

மணிமகளே 

 

உன்னால் 

விளைந்த  காமநோய்க்கு

பெண்ணே 

நீயே  மருந்து...

 

என்நோய் நீங்க 

உன் மென்தோள் கொடு...

வா...

             -----------------------------------------------------------------------

களவியல்                                                                    திருக்குறள் உரை.

தாம்வீழ்வார் மென்றோள்  துயிலின்  இனிதுகொல் 

தாமரைக்  கண்ணான்   உலகு.                               -1103.

 

கெட்டியாய்  ஒட்டிப்படுத்து   -  என்னைக்

கட்டிப்பிடித்து  

கன்னத்தில்  முத்தமாரிப்  பொழிந்து  -  இன்பக் 

கடலில்  ஆழ்த்தும்  அழகனே 

உன்தோள்  சாய்ந்து 

 

என்  முகத்தை     

உன் பரந்த மார்பில் புதைத்து 

கண்துஞ்சுவேன்... 

 

இதைவிட  இனிமை 

வேறெதிலுண்டு  கட்டழகனே...

 

என்கண்  நிறைந்தவனே 

தாமரை   மலர்ப் போல்

நீள விழிக்  கொண்டவனே

நீயே  எனது  உலகம் 

உனது  நெருக்கமே  எனது  இன்பம்...

       --------------------------------------------------------------------------  

களவியல்                                                              திருக்குறள் உரை.

நீங்கின்  தெறூஉம்  குறுகுங்கால்  தண்ணென்னும் 

தீயாண்டுப்  பெற்றாள்  இவள்.                               -1104. 

 

ஏந்திழை  அவள் 

என்னருகில்  இல்லையெனில் 

என்மேனி சுடுகிறதே...

 

நேரிழையவள் 

என்னை  நெருங்கி  வந்தால் 

என்மேனிக்  குளிர்க்கிறதே...

 

விலகினால்  குளிர்வதும் 

நெருங்கினால்  சுடுவதும் 

நெருப்பின்  இயல்பாகும்..

 

ஆனால் 

நெருங்கினால் குளிர்ச்  செய்யும்

நெருப்பினை 

என்னவள்  கொண்டிருக்கிறாள் 

 

விந்தைச்  செய்யும்  நெருப்பினை 

எங்கு  பெற்றனளோ இவள்...     

        ----------------------------------------------------------------------------

 களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

வேட்ட  பொழுதின்  அவையவை  போலுமே 

தோட்டார்  கதுப்பினாள்  தோள்.             -1105.

 

நிலவினை 

சிறுபூங்கொத்தாக்கி 

திருமகள்  முடியில்  சூட்டிட 

நினைத்தது நெஞ்சமெனில் 

நிறைவேறியது   அதுவும்...

 

சிறுமலர்களை  ஒன்றுதிரட்டி 

சிங்காரிக்கோர்  மாளிகைக்  கட்டிட

சிந்தித்தது  நெஞ்சமெனில் 

நடந்தது  விரைவாய்  அதுவும்...

 

இவ்வண்ணம் 

எவரெவர் எதனை நினைத்தாலும் 

அவரவர்  எண்ணம் 

கைகூடினால் 

அவரவர் ஆனந்தம் கொள்வர்...

 

ஆனால் 

வீண் கற்பனையில் 

நான்  திளைக்கவில்லை 

 

நாணங்கொண்ட  - என் 

நங்கையின் 

பூஞ்சரம் சூடிபுதுமகள் போல் 

என்றென்றும் எழிலாய்த்  திகழும்

என்னவளின் 

எளியதோள் தழுவினாலே 

எனக்குக்  கிட்டும்

பேரானந்தம்  பலகோடி...

        -------------------------------------------------------------------------

 களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால்  பேதைக்கு 

அமிழ்தின்  இயன்றன  தோள்.                                -1106.

 

காமம்  நெஞ்சில் 

ஊறும்போதெல்லாம் 

காரிகையவள்  தோள்  தீண்டுவேன்...

 

தீண்டப்பட்ட

தோளிரண்டும்  -  என் 

ஊனுக்குயிர்த் தருதே

அதனால் 

 

பேதையின் 

தோள் 

அமிழ்தெனும் மருந்தோ 

அறியேன்  நான்...

 

அமிழ்து எனும் மருந்து 

ஆக்கம் தருமென்பர்...   

        ------------------------------------------------------------------------------

 களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

தம்மில்  இருந்து  தமதுபாத்து  உண்டற்றால் 

அம்மா  அரிவை  முயக்கு.                        -1107.

 

சுயமாய்ப்  பொருள்  செய்தே 

சுந்தரமாய் இல்லொன்றுக்  கட்டிஅதில் 

விருந்துண்ணப் பலரை 

விழைந்தழைத்தேன் யான் 

 

விருந்துண்டு  

விருந்தினர்  மகிழ்வுற்றது  போல்

 

அம்மாடி  அரிவையே 

உன்னொருத்தியின் 

உடல் தொட்டு தோள்தழுவி 

அமுதே 

நானும் 

அடைந்தேன்  பெரு மகிழ்வு...

       -----------------------------------------------------------------------------   

 களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

வீழும்  இருவர்க்கு  இனிதே  வளியிடை 

போழப்  படாஅ  முயக்கு.                 -1108.

 மாங்கனியும்  

மாமைந்தனும் 

மஞ்சத்தில்  வீழ்ந்தக்  கோலம்

மயக்குஞ்  சொல்லில் கூறவோ...

 

ஆடை  அணிகலன் 

ஏதுமின்றி 

ஏந்திழையாளும் 

ஏற்றவனும் 

கோலம்   மாறினரே...

 

தடைப்பொருள் தடங்கல் 

துளியின்றி 

இளங்கொழுந்திருவர் மேனிக்கிடையில் 

மென்காற்றும் 

 

போகவே 

தடைச் செய்து

இறுகத் தழுவல்  இனிதென்று 

நொறுங்க  தழுவினரே...  

                           -------------------------------------------------------

 களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

ஊடல்  உணர்தல்  புணர்தல்  இவைகாமம் 

கூடியார்  பெற்ற  பயன்.                          -1109.

சிறுகோபமும் 

சினுங்கலும் 

ஊமைப்  பேச்சும்

ஊடலென்பர்...

ஊடலென்பது 

பாசம்கொண்ட  நெஞ்சினரின் 

உரிமைச் செயலாகும்... 

 

அகத்தில் அன்புதனைப்  பெருக்கும்

அறிந்தாரில்லையேல் 

பிரிவுதான்  வளரும்...

அதனால் 

ஊடலை  ஊதி வளர்க்காமல் 

கொஞ்சும் பேச்சுகள் பேசி 

கொஞ்சி  நின்றால்  

ஊடல்  கரையும்...

ஊடல்  நீக்கிக்

கூடுதல்  செய்தால் 

கூடும்  இன்பம்  கோடி...

ஊடுதலும்  உணர்தலும்  கூடுதலும் 

காதல் நெஞ்சினரின் 

காவியமன்றோ...      

 -------------------------------------------------------

களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

அறிதோறு  அறியாமை  கண்டற்றால்  காமம் 

செறிதோறும்  சேயிழை  மாட்டு.               -1110.

 

நூல்பலப்  பயிலப் பயில  

நுண்ணியப்  புதுமைகள் பல 

புலனாதல்  போல் 

 

காமம்  கொண்டு 

சேயிழை  இவளோடு  கூடக்  கூட 

காமசுவைக்  கரையின்றி

நீளுகிறதே...

 

இன்னும்  இன்பம்  பல 

இவளோடு  கூடும்  போதில் 

புத்தம்  புது  வடிவில் 

புலனாகிறதே...

        -----------------------------------------------------------------------------

 

 

 களவியல்                                                                          அதிகாரம்:112.

                                  நலம்புனைந்துரைத்தல் 

நன்னீரை  வாழி  அனிச்சமே  நின்னினும் 

மென்னீரள்  யாம்வீழ்  பவள்.             -1111.

 

அனிச்சம்பூவே 

அழகுத் தளிரே

வாழி  நீ...

 

பூவில்  நீ  மெல்லியளென்று 

புரியாமல்  சொல்லிடுவர்...

 

மெல்லியள்  யாரென 

சொல்லுவேன்  கேள்  நீ...

 

தளிருடல்   தாரகையவள் 

நின்னினும்  மெல்லியள்என் 

நெஞ்சினிப்பவள்...

 

அவளடி  யான்  வீழ்ந்தேன் 

அறிவாய்  அனிச்சமே... 

       -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

களவியல்                                                                    திருக்குறள் உரை.

மலர்காணின்  மையாத்தி  நெஞ்சே  இவள்கண் 

பலர்காணும்  பூவொக்கும்  என்று.               -1112.

 

நெஞ்சே  என்ன  நீ 

பூவைக்  கண்டு   பூரித்து  மகிழ்கிறாய்...

 

பூவினை 

அழகென  மயங்கி 

மயக்கம்  கொள்வது  ஏனோ... ஏனோ...

 

என் 

காதல்  திருமகளின் 

கண்   விழிகளைக்

காண்போர்

பூவோ இதுவென 

புதுமைக் கொண்டு  மயங்குவர்...

 

மட நெஞ்சே நீயோ 

மலர்களைக்  கண்டு

மயக்கம்  கொள்கிறாயே...

 

மலர்க்  கோடி  பூத்து  நின்றாலும் 

மங்கை  என்னவளின்  

மைவிழிகளுக்கு  ஈடாகுமோ...

                             --------------------------------------------------------

களவியல்                                                  அரங்க  கனகராசன்  உரை.

முறிமேனி  முத்தம்  முறுவல்  வெறிநாற்றம் 

வேலுண்கண்  வேய்த்தோ  ளவட்கு.      -1113.

இளநங்கை  நடைப்பயின்றால் 

 

இடை ஒடியுமோ 

பூமகள்  புன்னகை  செய்தால் 

புதுமுத்துகள்  உதிருமோ...

 

மாங்கனி  மேனியோ 

மயக்குதே  வாசம்

மைதீட்டியவளே 

உன் விழிகள்  வேல்  வீசுவதேன் 

 

மூங்கில்  கொண்டு 

வேயப்பட்டதோ 

முழுநிலவே உனது  தோளிரண்டும்...

            ----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

 

காணிற்  குவளை  கவிழ்ந்து  நிலன்நோக்கும் 

மாணிழை  கண்ணொவ்வேம்  என்று.     -1114.

 

என் 

பேரழகுப்   பெண்ணரசியின்

கூர்விழி  எழில்  கண்டால் 

குவளை  மலரும் 

தலைக்  கவிழும்

நிலம்  பார்க்கும்...

 

இம்மாதரசியின் 

மயக்கும்  விழிகளுக்கு 

நிகரில்லையே  யான்  என்று.

-----------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                  திருக்குறள் உரை.

 

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல  படாஅ  பறை.                                              -1115.

பூவில்  மெல்லியது  எதுவென 

மேலோர்  வரிசைச்  செய்தால்

அனிச்சம்  பூவது  முந்துறும்...

 

அனிச்சம்பூவினும் 

மெல்லியளிவள் 

பூசூடக்  கருதி

பூந்தோட்டம் பூந்தனள்...

 

பூத்து  நின்ற  அனிச்சம் 

பூவொன்றை 

காம்புடன்  கொய்து

கார்குழலில்  சூடினாள்...

 

அந்தோ 

அழகு  மயிலே என்ன செய்தாய் 

சிற்றிடை சிறுநங்கையே 

மென்னுடல்  தாங்குமோ...

காம்புடன்  அனிச்சம்  சூடினாய் 

பாரம் கொள்ளுமோ 

பாவையே  உன்னிடைதான்  என்று 

மங்கையின்  மனம்  ஓலமிட்டதே...

களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

மதியும்  மடந்தை  முகனும்  அறியா 

பதியிற்  கலங்கிய  மீன்.            -1116.

 

முழு  நிலவது 

முகிலிடை  வலம் வர 

வெண்ணிலவின் பேரழகை 

விண்மீன்கள் 

கண்டுக்  களித்த  வேளையில்-

 

காண்போரை  உருகச்  செய்யும்

கட்டழகுப்  பெட்டகமிவள்  முகம் 

பாலில்  வார்க்கப் பட்டதோ  

பசுநெய்யில்  செய்யப்பட்டதோ...

 

பாவையவள் 

மாடம் வந்து  

மனம் கவர்ந்தவனை - எதிர் 

நோக்கி  நிற்க 

விண்கல்லொன்று  விரைந்தே 

மண்  நோக்கிப் பாயக் கண்டு 

மங்கை 

தங்கவிழியிரண்டை 

தாரகை மண்டிய 

வானவீதிக்கு  சுழற்றினாள்...

 

நிலவின் அழகில் மயங்கி 

உலவித்  திரிந்த  மீன்கள் 

மாடம்வந்து 

வானம்  பார்த்து  நின்ற 

வண்ணமங்கை  முகம்  கண்டன...

விழிகள்  விரிந்தன 

வியந்தன  மீன்கள்...

விண்ணில் இருப்பது  நிலவா 

மண்ணில்  மாடத்தில்  தெரிவது நிலவா 

என  அறியாது 

குழம்பின - கலக்கம் கொண்டு 

குழறின...

         ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                   திருக்குறள் உரை.

அறுவாய்  நிறைந்த  அவிர்மதிக்குப்  போல 

மறுவுண்டோ  மாதர்  முகத்து.              -1117.

 

வாடுவதும் 

வண்ணம்  மாறுவதும் 

வான்நிலவின்  குணம்...

 

ஒளிரும்அந்த 

நிலவிலும் 

களங்கமுண்டு...

 

அதுபோல 

குறையேதுமில்லையே 

குளிர்மகள் முகத்தில்...

                 -----------------------------------------------------------------  

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                     அரங்க கனகராசன் உரை மாதர்  முகம்போல்  ஒளிவிட  வல்லையேல் 

காதலை  வாழி   மதி.                                   -1118.

 

பகலவன்  ஒளிதனை 

பாரோர்  இயல்பென்பர்...

 

பகலவன் போல் 

என்னவளின் எழில் முகம் 

என்றுமே  ஒளிதரும்...

 

நிலவே 

என்னவள் போல்  நீயும் 

இயல்பாய்  ஒளிசெய்வாயெனில் 

 

வாழ்த்துவேன் உன்னையும் 

காதல் கொண்டு  - நெஞ்சில் 

ஏற்றி உன்னைப்  போற்றுவேன்  நிலவே... 

                ----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

களவியல்                                                                    திருக்குறள் உரை.

மலரன்ன  கண்ணாள்  முகமொத்தி  யாயின்  பலர்காணத்  தோன்றல்  மதி.                  -1119.

நிலவே 

அழகுமகள்  ஒருத்தியிடம் 

அடிவீழ்ந்தேன்  - அவள் 

விழியழகை  அறிவாயா  நீ...

 

'மைந்தனே 

அவள் 

மலரன்னக்  கண்ணாள்

அறிவேன்  நானும்...

 

மலர்விழி  மங்கையவள் 

எழில்முகம்  போலவே 

எந்தன்  முகமும்...

மெய்தானே  நான்  கூறுவது'

 

யாதுகூறினாய் 

பேதை நிலவே - என் 

பூங்கோதையின் முகம் போல் 

பேரழகுக்  கொண்டவள் நீயெனில் 

ஊர்மக்கள்  யாவரும் - உன் 

சீர்முகம்  காணும்  வண்ணம் 

வான்வீதியில்  நீ வலம்  வரலாகுமோ 

வான்நிலவே!

பேரழகை முகத்தில்  கொண்ட 

நேரிழையாள்  என்னவள் 

நாணமின்றி    வீதியில் 

உன்னைப்போல்  திரிவதில்லை 

உண்மையை உணர்ந்துக்கொள் வண்ணநிலவே

       --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

அனிச்சமும்  அன்னத்தின்  தூவியும்  மாதர் 

அடிக்கு  நெருஞ்சிப்  பழம்.                      -1120.

 

இளங்கொடியவள் 

தளிர்ப்  பாதம் கொண்டு 

தரை மீதில்  சிறு  நடையிட 

 

தடந்தோள்  காளையவன் 

தாவியோடித்  தாரகையைத்  

தூக்கிக்  கொண்டான் நெஞ்சோடு...

 

தரை  மீதில்    நடக்கவே

தாகம் நெடுநாள்...

ஏனெனைத்  தடுத்தாய்

கூறிவிடுக்  காதலனே என்றே 

தேவியவள் கேட்டனள்...

 

பெண்ணே  -  என்  கண்ணே 

என்னச்  செய்தாய்

ஏதும்  நீ  அறியாயோ 

பூவினும்  மெல்லிதன்றோ  -  நின் 

பாதம்...

அனிச்சம்பூ  பட்டாலும் 

அழகே 

அன்னத்தின்  சிறு சிறகுப் பட்டாலும்

நின் தளிர்ப்பாதம் 

நெருஞ்சி முள் பட்டது போல் 

நோகுமே...

இளங்கொழுந்தே 

தரைமீதில் நடையிடாதே 

என்றானே  எழில்மாறன்...      

        -----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                           அதிகாரம்:113.

                                   காதற்  சிறப்புரைத்தல் 

பாலொடு  தேன்கலந்  தற்றே  பணிமொழி 

வாலெயிறு  ஊறிய  நீர்.                        -1121.

 

ஆயக்கலைகள்  அறுபதுக்கும் மேல் 

அதிலொன்று 

இதழோடு  இதழ்கூடுதல் 

 

இதழோடு  இதழ்கூடுதலா 

என் வயிறும்  குமட்டுதே 

இதுவும்  கலையாகுமோ 

 

அய்யமென்ன 

 

ஒருவர் எச்சில் 

பிறிதொருவர்  உண்ணல் 

தருமே  நலக்கேடு...

 

எச்சிலன்று  கேள் நண்பா 

அது 

பாலும்  தேனும்  கூடிய  விருந்து...

 

இளமகள்  -  அவள் 

இதழ்  கூடினால் 

முத்துப்  போல் ஒளிரும் 

சித்திரப்பல் வரியினூடே 

ஊறும்  நீர்தான் 

பாலும்  தேனும் 

 

இதுநாள்  வரையும் 

இதனை  அறியாதுப்  போனேன்

இன்றெனது 

இளங்கிள்ளையின் 

இதழோடு  இதழ்சேர்த்து 

பாலும்  தேனும்  பருகுவேன் 

தோழனே  நன்றி   

                ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

உடம்பொடு  உயிரிடை  என்னமற்  றன்ன 

மடந்தையொடு  எம்மிடை  நட்பு.     -1122.

 

என்மகனே 

இனியாள்  ஒருத்தியை 

உனக்குத்  துணையாக்குகிறேன்...

நீ 

காதல்  கொண்டப்  பெண்ணை 

மறந்துவிடு  மைந்தனே...

 

தந்தையே 

மறந்துவிடு  மைந்தா  என்றீரோ

துறந்துவிடு  உயிரை  என்பீராக...

 

என்னசொல்  சொன்னாய் 

மகனே 

அவளிடத்தில் அழகு 

என்ன  கண்டாய்...

மயக்கம் கொண்டதேன்  

மதியிழந்தவனே...

 

தந்தையே 

உடலுக்கும்  

உயிருக்கும் 

உறவென்ன 

உரைப்பீரா...

 

தந்தையே 

உடலில்லையேல்  உயிரில்லை 

உயிரில்லையேல்  உடலில்லை 

அறிவீரா...

 

அவளில்லையேல் 

நானில்லை 

நானில்லையேல் 

அவளில்லை...   

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­     -------------------------------------------------------------------------------

களவியல்                                                          அரங்க கனகராசன் உரை.

கருமணியிற்  பாவாய்நீ  போதாயாம்  வீழும் 

திருநுதற்கு  இல்லை  இடம்.                        -1123.

 

என் 

இமைக்கு  -  நீ 

சுமையானாய் 

கருவிழியே 

 

போய்விடு  -  என் 

காதல்  நாயகியின் 

நெடும்புருவம் 

வானவில்லோ   என 

வாழ்த்துப்பாடச் செய்யும்...

 

மண்ணில் 

என் 

மங்கையின்  வானவில்தனை 

களவு  செய்திடக்

கயவர்  பலருண்டு...

 

காதலியைக்  காத்தல்  செய்ய 

வேறிடம்  ஏதும்  இல்லை 

இமைக்குள்  வைக்கவே 

இதயம்  கொண்டேன்...

 

அவளோடு  நீயும் 

ஆங்கிருந்தால்  -  என் 

இமை சுமைத்  தாங்காது

 

கருவிழியே  போய்விடு  -  என் 

காதல்மகள்  வாழவே 

நீயிருந்த  இடத்தில் 

தேன்மொழியாளைக்  குடிவைக்க  வேண்டும்...      

            --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                           திருக்குறள்  உரை.

வாழ்தல்  உயிர்க்கன்னள்  ஆயிழை  சாதல் 

அதற்கன்னள்  நீங்கு  மிடத்து.                  -1124.

 

ஆயிழை  எனில் 

அழகின்  ஓருருவம் 

எழிலின்  திருவுருவம் 

என்பேனே...

 

அவள் 

என்னவள் 

என்னருகில்  இருந்தால் 

என்னுயிர்  என்னுள்  வாழ்கிறது...

 

மரணம்  என்னை முத்தமிடும் 

தருணம்  எதுவெனில் 

மங்கை  என்னை  விட்டு 

நீங்கும்  தருணமே...

            ---------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                           அரங்க கனகராசன் உரை.

உள்ளுவன்  மன்யான்  மறப்பின்  மறப்பறியேன் 

ஒள்ளமர்க்  கண்ணாள்  குணம்.                    -1125.

 

மறக்கும்  குணம்  உண்டெனில் 

நினைக்கும்  நிலை  உண்டாகும்...

 

மறதி  என்பதில்லை 

மறந்தும்  என்னிடம்

 

விழியில் ஒளியிருக்கும் 

மொழியில்  காதல் இருக்கும் 

பண்பில்  உயர்விருக்கும் 

நன்மகள் அவளை 

நானா  மறப்பேன்...

            ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                           அரங்க கனகராசன் உரை.

கண்ணுள்ளின்  போகார்  இமைப்பின்  பருவரார் 

நுண்ணியர்எங்  காத  லவர்.                                -1126.

கண்ணுக்குள்  வைத்தேன்  -  என் 

காதலனை 

கண்ணைவிட்டு  -  என் 

காதலர் 

கனவிலும்  போகார்...

 

இமைத்தால் 

என்இனியவர்  மேனி 

புண்ணாகுமென்று 

இமைப்பதில்லை  நான்...

 

என்னைமறந்து 

இமைநேரம்  இமையை 

இமைத்து  விட்டேனெனில் 

அவர்மேனி  புண்ணாகும் 

ஆயினும் 

 

அன்பானவர் 

துன்பமொழி  - என்மீது 

துளியும்  வீசார் 

பண்பில் உயர்ந்தவர் 

பாசமிகு  என்காதலர்...

           ----------------------------------------------------------------------

களவியல்                                            அரங்க கனகராசன்  உரை.

கண்ணுள்ளார்   காத  லவராகக்  கண்ணும் 

எழுதேம்  கரப்பாக்கு  அறிந்து.                -1127.

 

களங்கமில்லை  -  துளிக்

கறையுமில்லை

பொழுதெல்லாம்  -  புது 

மலரெனவே  என்  காதலர் 

விழிக்குள்  விழைந்துள்ளார்...

 

கண்ணுக்கு 

காரிகை  நான் 

மையும்  வரைவதில்லை...

மறைந்து  விடுவாரோ 

என் மன்னவரென்று...

         ------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                           திருக்குறள்  உரை.

நெஞ்சத்தார்  காத  லவராக  வெய்துண்டல் 

அஞ்சுதும்  வேபாக்கு  அறிந்து.                 -1128.

 

நெஞ்சுக்குள்  மஞ்சம்  செய்து  -  என்னைக்

கொஞ்சுங்  குமரனைக்  குடி  வைத்தேன்...

 

பாலமுது  பருகினும் 

பாவை  நான் 

சூடெனில்  பருகேன்...

 

ஏனெனில் 

உள்ளத்தில் உறையும்  -  என் 

நல்லவரை 

சுட்டுவிடுமோ  சூடு  உணவு 

என்றஞ்சி  நான் 

எப்போதும்  சூடாய் 

எதையும்  சுவைப்பதில்லை...

          ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

களவியல்                                                                           திருக்குறள்  உரை.

இமைப்பின்  கரப்பாக்கு  அறிவல்  அனைத்திற்கே 

ஏதிலார்  என்னும்இவ்  வூர்.                                     -1129.

 

விழி  மூடினால்  -  என் 

எழில்  மைந்தன் 

கண்ணிலிருந்து 

காணாமல்  போய்விடுவாரோ 

என்று 

கண்துஞ்சாமல் 

காலங்கழிப்பேன்...

 

இதனை  அறியாமல் 

என்  மன்னவனை 

இரக்கமற்றவன் என்று 

உரைப்பர்...

 

இதயத்தில்  ஏக்கம்தனை  வளர்த்து 

கொடியவன்  இவளுக்கு 

கொடுந்துன்பம் 

கொடுத்துச்  சென்றானே

 

உறக்கமின்றித்  தவிக்கிறாளேயென 

கொடுஞ்சொல் கூறும்  இவ்வூர்...  

              -------------------------------------------------------------------------

 

களவியல்                                                           அரங்க கனகராசன் உரை.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலார்  என்னும்இவ்   வூர்.                                     -1130.

 

என்றும்  என்றென்றும் 

என்காதலர் 

அன்போடு  அகமகிழ்வோடு 

பெண்  எந்தன்  உள்ளத்தில்  

பெருவாழ்வு  வாழ்கின்றார்...

 

குறுமகள்  நான்  -  என் 

திருமகன்  வாழ்வெண்ணி 

மஞ்சத்தில்  மகிழ்ந்து  புரள்வேன்...

 

அறியாமல்  இதனை 

இகழ்மொழிச் 

சொல்லுவார்  ஏராளம்...

 

இவள்  தூங்காமல் 

துவள்கிறாள் 

அவன்  ஆண்மகனோ 

அன்பில்லாமல் 

போனானே  பொல்லாதவன்

என 

பொல்லாப்புச்  சொல்லும்  இவ்வூர்...   

           -------------------------------------------------------------------

களவியல்                                                                                     அதிகாரம்:114.

                                        நாணுத்துறவுரைத்தல் 

காமம்  உழந்து  வருந்தினார்க்கு  ஏமம் 

மடலல்லது  இல்லை  வலி.             -1131.

 

ஏங்கி  நின்றான் 

ஏந்திழையின்  சிறுபார்வைக்காக 

காத்து  நின்றான் 

காரிகையின் கண்ணசைவுக்காக

 

அவள்மீது  காதல்  கொண்டு 

அல்லும்  பகலும்  தேய்ந்தான் 

அவளோ 

கடைக்கண்ணாலும்  காணாமல் 

நடையிடுவாள்  காணாதவளாய்...

 

தவிக்கும்  அவனுக்கு 

தருவாருண்டோ  ஆறுதல் 

ஒருவழியுண்டு  -  அது 

வெண்ணிலவு அவள்மீது 

அவன்  நெஞ்சம்  கொண்ட  காமம் 

அவனுடலை உருக்குதே...

 

பெண்ணவளின்  காதலை 

பெற்றுத்தாருங்கள்  அவனுக்கு  என்றே 

உற்றாரிடமும் 

மற்றாரிடமும்

வெட்கம்தனை விடுத்து 

வேண்டுவது...

 

இதுவன்றி 

காதல்  கைக்கூட 

வேறு வழியில்லை... 

               ---------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                          அரங்க கனகராசன் உரை.

நோனா  உடம்பும்  உயிரும்  மடலேறும் 

நாணினை  நீக்கி  நிறுத்து.                 -1132.

 

இன்னுமா  நீ                                                                  

எனக்குன்  காதல்  தாராய்...

 

மேனி பாதியானதே 

உயிரும் 

நிலைத்  தளர்ந்ததே...

 

கெஞ்சுகிறேன் 

யார்  யாரிடமோ...

 

யாரேனும்  சொல்வீரோ 

என் 

காதல்  மலரவே  என்னவளிடம்...

 

வெட்கம்  கேட்டு 

கேட்கும்  நிலை  எனக்கானதே...

மங்கை அவள்  மீதுக்

கொண்ட  நாணத்தால்...

           ------------------------------------------------------------------------

 

 

 

களவியல்                                                                           திருக்குறள்  உரை.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் 

காமுற்றார்  ஏறும்  மடல்.                                                          -1133.  

 

தன்மானமும்  

தலைநிமிர்ந்த  வாழ்வும் 

முன்னர் நான் 

கொண்டிருந்தேன்...

 

இன்றெனது  நிலைதனை 

என்னவென்று   சொல்வேன்...

 

கன்னியொருத்தியின் 

கடைக்கண்  பாராதா...

புன்னகைச்  செய்து

புத்துயிர்த்  தாராளா 

என்றே 

ஏக்கம்  கொண்டேன் 

ஏங்குகிறேன்...

 

காமுற்றார்  காதல்  பெறவே 

கெஞ்சுவர் வெட்கம் கெட்டு...

நாணங்கெட்டு  நானும் 

கேட்கிறேன்...

கெஞ்சும்  நிலை எனக்கானதே...  

                --------------------------------------------------------------------

களவியல்                                                           அரங்க கனகராசன் உரை.

காமக்  கடும்புனல்  உய்க்குமே  நாணொடு 

நல்லாண்மை  எனும்  புனை.                -1134.

காமம்  எனவொன்று 

கண்ணுக்குப்  புலனாவதில்லை 

மலரினும்  மெல்லிதென்றே 

மனதில்  எண்ணம்  கொண்டிருந்தேன் 

 

அறியாமையோ  அது 

அறிந்தேன்  இன்று 

காமம்  என்பது 

காட்டாற்று  வெள்ளமே...

வெள்ளம்  பெருகிடின் 

எல்லாமும்  அழியுமே 

நாணமும் 

தன்மானமும் 

நல்லதோர் படகெனவே 

நான் கொண்டிருந்தேன்...

 

காமமெனும் 

காட்டாற்று  வெள்ளம் 

அதனை 

சிதைத்ததே...

நாணமும்   தன்மானமும் - இழந்தேன் 

காமத்தால்...

களவியல்                                                                           திருக்குறள்  உரை.

தொடலைக்  குறுந்தொடி  தந்தாள்  மடலொடு 

மாலை  உழக்கும்  துயர்.                                   -1135.

மென்னகை  நங்கையவள் 

பொன்னணியாம்  மேகலைசூடி - பெரும் 

பொலிவுடன்  திகழ்வாள்...

சிறுவளை அணிந்து 

சீருடன்  இருப்பாள்... 

எழில் மங்கை  அவள் 

எனக்குத்  தந்தத்  துயர் 

எதுவெனில் 

மானங்கெட்டு 

மங்கையவள்  காதல்  பெறவே 

எங்கும்  எவரையும் 

எப்போதும் கெஞ்சி  நிற்பேன்...

மாலை நேரத்தில் 

மையல்  பெருகி 

மங்கை  நினைவில் 

மாதுயர்  சூழ  உழல்வேன்...

கடும்பித்தன்  என்றே 

காண்போர் 

கூறுவர்  என்னை...

கன்னியவளால்  விழைந்ததே 

கடுந்துயர்...  

             -----------------------------------------------------------------------

களவியல்                                                          அரங்க கனகராசன் உரை 

மடலூர்தல்  யாமத்தும்  உள்ளுவேன்  மன்ற 

படல்ஒல்லா  பேதைக்கென்  கண்.          -1136.

 

அழகுமயில் 

நடையழகு...

எழில்மகள் 

விழியழகு...

பூமகள் 

புன்முறுவல்...

பேதையவள் 

தோளழகு...

கலைமகள் 

முலையழகென 

நினைவலைகள் 

நெஞ்சில் அறைகளில் 

நித்தம் நித்தம் ஓசையிட 

ஏக்கத்தில்  நான் 

எலும்பானேன்...

 

என் 

ஏந்திழையின் 

காதல்பெறவே 

ஏது வழியென்று  - நடு 

சாமத்திலும் 

எண்ணம் கொண்டு  உழல்வேன்...

 

பஞ்சணையில்  சாய்ந்தாலும் - என் 

நெஞ்சின்  தவிப்பு ஓயாது...

 

பாலமுது  பருகினாலும்

தூக்கமது  நெருங்காது...

 

பாவையின்  நினைவாகவே - விழிப்

பாவை   மூட மறுக்கும்...    

         -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                           அரங்க கனகராசன்  உரை.

கடலன்ன  காமம்  உழந்தும்  மடலேறாப் 

பெண்ணின்  பெருந்தக்கது  இல்.       -1137.

 

அவன்  வருவானா 

அழகு  மார்போடு 

அணைத்துக்  கொள்வானா...

 

திரண்ட  தோள்களில்

ஒட்டி  உறவாட 

கட்டழகன்  கனிவானா...

 

என்னை  எடுத்துக் 

கன்னத்தை  கிள்ளுவானா 

கருங்கூந்தலை  வருடுவானா...

     

அவன்மீது காதல் கொண்டு 

ஏங்கித்  தவித்தாள்

ஏனோ  அவன் 

ஏந்திழையை 

ஏறெடுத்தும்  காணாது  விட்டான்...

 

ஆயினும் 

அவள்  நெஞ்சில் 

கடல்போல்  காமம் 

காலநேரமின்றி  ஏங்கும்...

 

அன்னமவள்  

அழகன்  நினைவாய் 

நிலைமறந்தாலும் 

இழிச்சொல்லுக்கு 

இடந்தரவில்லை...

 

வெட்கம்  கொண்டு  - காதல் 

வேதனைதனை 

வேறெவரிடமும் 

வெளியிட்டாளில்லை...

 

உள்ளத்தோடு  வைத்து 

உழந்தாள் 

 

காமத்தீ  சுட்டெரித்தாலும்

கோடுமாறா 

கொழுந்திவள்  பெருமைக்கு 

உண்டோ  பெருஞ்சிறப்பு வேறு...

          -------------------------------------------------------------------------- 

 

 

 

 

 

களவியல்                                                          அரங்க கனகராசன்  உரை.

நிறையரியர்  மன்அளியர்  என்னாது  காமம் 

மறையிறந்து  மன்று  படும்.                        -1138.

 

காம  உணர்வே  நீ  -  என் 

மானம்  கெடுக்க  முனைவதோ 

 

என் மனவுறுதிதனை  யறிந்தும்  - நீ 

சிறுகச் சிறுக  சிதைப்பதேன் 

 

ஊர்ச்  சொல்லுக்கு  

நான்  பலியாவதோ 

ஈவிரக்கம்  உனக்கில்லையோ...

 

கன்னி  என் நற்புகழ் 

களங்கமாகும்  என்பதை 

விளங்க  மறந்தாயோ  காமமே...

 

காதல்  நினைவால் 

காமம்  உற்றேன் 

உற்றக் காமத்தை 

உள்ளத்தில்  ஒளித்தேன் 

 

ஒளித்து  வைத்ததை 

பலரறியச்  செய்தாயே - என் 

இளங்காம  உணர்வே... 

                 ---------------------------------------------------------------

களவியல்                                           அரங்க கனகராசன்  உரை.

அறிகிலர்  எல்லாரும்  என்றேஎன்  காமம் 

மறுகின்  மறுகும்  மருண்டு.                   -1139.

 

என்நெஞ்சில்  உள்ளவனை 

எவரறிவார் 

என்றிருந்தேன் நான் 

அந்தோ 

என்ன  சொல்வேன்  இப்போது 

 

என் நெஞ்சே 

எனக்கு  வஞ்சம்  செய்வதோ 

யாரறிவர் என் காமத்தை  என்றே 

மூடி வைத்தேன் உள்ளத்தின் மூலையில் 

 

ஏகாந்தமாய் நான் - என் 

வீட்டுத்  தோட்டத்தில்

பூஞ்செடிகளுக்கிடையில் 

புல்வெளிகளின்  நடுவில் 

மெல்ல  நடையிட்டு  இருப்பேன் 

இளையாறி இருப்பேன் 

 

அந்தத்  தனிமையில்   

எந்தன்  இனியக்  காமம்

உள்ளத்திலிருந்து உரக்க  கூவும் 

 

தங்கநிலவென 

தனிமையில்  உலவும்  இவளை 

தாவி வந்து 

மார்போடு  அணைத்து 

இதழிரண்டைக்  கவ்வி

புது இன்பம்  தர 

காதலனே  வா வாவென்றே 

காமநெஞ்சு 

காதல்  மயக்கத்தில்  பேசும்...

 

நெஞ்சோடு 

என் இனிய  இதழ்களும் 

அதனை  முனுமுனுக்கும்...

 

இனிய என்  முனுமுனுப்பு 

இளங்காற்றோடு   ஏகி 

பலரறியச்  செய்திடும்...   

           ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

களவியல்                                                                           திருக்குறள்  உரை.

யாம்கண்ணின்  காண  நகுப  அறிவில்லார் 

யாம்பட்ட  தாம்படா  வாறு.                       -1140.

 

ஆடியின்  எதிரில்  நின்று 

அழகுச்  செய்வேன்

 

உடுத்தியதை  நீக்கி 

புதியதை அணிவேன் 

என்னவனுக்கு - இந்த 

வண்ணம்  பிடிக்குமோ...

 

வண்ணம்  மாற்றி  மாற்றி 

என்னவன்  வரவை 

எதிர்பார்ப்பேன்...

 

தீட்டிய  மையை அழித்து - புது 

கோட்டினை  வரைவேன்...

நுதல்  மீது  படிந்தக்  குழலை

விரல் கொண்டு  வலை  செய்வேன்...

 

இதழுக்கு  வண்ணம்  தடவி - ஆடியை 

இருநூறுமுறையேனும் பார்த்திருப்பேன்...

 

என்செயலை  எவரும் 

கண்டிலரென 

எண்ணம் கொண்டிருப்பேன்

எண்ணமது பொய்யோ...

 

கொல்லென சிரிப்பொலி 

சுள்ளென செவித் தொட

மெல்ல நான் திரை நீக்கிப்  பார்த்தேன்...

 

ஏதடி பேதையே 

காதலதுப்  பித்தானதோ 

காலநேரமின்றி 

ஆடி எதிரில்  நின்று 

அழகுப்  பார்க்கிறாயே 

 

இளையவளே  நீ  -  சித்தம் 

இழந்தாயோ என 

தோழியர்  கூடி நின்று 

ஏளனமாய்  நகைத்தனர்...

 

சிரிக்கும்  தோழியரே 

அறிவில்லை  உம்  எல்லாருக்கும் 

காதல்  எனவொன்று - குளிர்க்  

காற்றோ  கொடுநெருப்போ 

பேதை  நான்  அறியாமல் 

காதலில்  சிக்குண்டேன்...

 

காதல்  செய்தாலன்றோ 

தோழியரே - நீவிர் 

காதல்  நோயறிவீர் 

ஏதும்  அறியாமல் 

ஏளனம்  செய்கிலீரே 

         -----------------------------------------------------------------------------

களவியல்                                                                           அதிகாரம்:115.

                                     அலர்  அறிவுறுத்தல் 

அலரெழ  ஆருயிர்  நிற்கும்  அதனைப் 

பலரறியார்  பாக்கியத்  தால்.        1141. 

 

மயிர்  நீப்பின் 

உயிர்நீக்கும் கவரி 

 

இழிச்சொல்  வரின் 

இன்னுயிர்  நீப்பர்  சான்றோர் 

இவனோ 

இன்னும்  வாழ்கிறானே 

 

செல்வந்தனின்  செல்ல  மகன்  - இவன்தன் 

உள்ளத்தை  இழந்ததோ - வறுமையில் 

உழலும் பெண்ணிடம்...

 

பல்லிளித்துப்  பல்லோரிடம்

கையேந்திப் பிழைக்கும்

கள்ளமிலாக்  குடியில் உதித்தோளிடம் 

உள்ளத்தை  இழந்தானே...

 

அறிவில்லையோ  இவனுக்கு 

அடுக்கினால்  செல்வம்  கோடியுறும் 

அழைத்தால்  அழகி  வரிசையுறும்...

 

என்னக்  கண்டான்

எளியவளிடம் 

சித்தம்  கெட்டவனே  -  உன் 

தந்தை  இதனை  அறிந்தால் 

கட்டிவைத்து 

வெட்டி எறிவாரே 

 

அச்சமில்லையோ - உனக்கு 

வெட்கமில்லையோ 

 

அலரெழ 

     ஊர்த்  தூற்றியும்  -  நீ 

     உயிர்த்  துறவாமல்  வாழ்வதேன்...

 

ஆருயிர்  நிற்கும் 

     தூற்றுதல்  அறிந்தும் - உயிர்த்

     துறவாமல் வாழ்கிறேன்...

 

அதனைப்  பலரறியார் 

     ஏனெனில் 

     எடுத்துச் சொல்வேன்

     எல்லாருக்கும்...

 

பாக்கியத்  தால்

     செல்வம்  கண்டோ 

     கல்விக்  கண்டோ 

     காதல்  மலர்வதில்லை...

 

     கள்ளமில்லா 

     உள்ளத்தில் மலரும்  -  தூய 

     உறவுதான்  காதல்!

 

     களங்கமில்லாக்  காதலின்  பொருட்டே 

     காளைநான்  வாழ்கிறேன்  உயிர்...         

     -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                   அரங்க கனகராசன் உரை.

மலரன்ன  கண்ணாள்  அருமை  அறியாது 

அலரெமக்கு  ஈந்ததிவ்  வூர்.                 -1142.

மலரோ  என 

மயங்கச்  செய்யும்

விழியுடையாள்...

 

என்காதல்  மகளவள்

பண்பானவள்  -  ஒழுக்கத்தில் 

உயர்ந்தவள்...

என் 

அகம் கவர்ந்த  காதலியின்

அருமை  அறியாது 

எளியள் 

துளியும்  தகுதியிலாள் 

இளைஞன்  இவனுக்கு  - என்றே 

இயம்பினர்...

இதோடு 

கொடுஞ்சொல்  பல  கொண்டு 

தொடுத்தனர்  தூற்றுதலெனும்  ஆரம்...

எதுகொண்டு மயங்கினன் 

மதியில்லா  மடையனென்று 

என்னையும் 

என்னவளையும் 

இன்னும்  பல  பேசினர்...   

களவியல்                                                                  திருக்குறள்  உரை.

உறாஅதோ  ஊரறிந்த  கெளவை  அதனைப் 

பெறாஅது   பெற்றன்ன  நீர்த்து.              -1143.

 

கண்ணால்  காண்பாள் 

கண்ணால்  காண்பேன் 

புன்னகைச்  செய்வேன்

புன்னகை  செய்வாள்

 

இதுவே  எம்மிருவர்  நிலை 

என்மனம்  அவளை  விரும்பும் 

அவள்மனம்  யான்  அறியேன் 

ஆயினும் 

ஊரார்ச்  சொல்வதை   

உரைப்பேன்  கேளீர்...

 

அவனும்  அவளும்  -  காதல் 

வயமாயினர்...

வாயிற்கதவுத்  திறந்து  -  பூங்

கோதை  வரும்வரை 

கோமானிவன்  காத்திருப்பான் 

கால்கடுக்கவே  - கண்ணிமைக்க   மறந்துவே...

 

கண்ணால்  பேசி 

இதழால்  சிரித்து 

இருவரும்  நாணுங்காட்சி 

விருந்தாகும்  காண்போருக்கு!

 

கன்னியவள்  முன்னே செல்ல 

காளையவன்  பின்னே  செல்வான் 

எங்கு  செல்வரோ 

ஏது  செய்வரோ

மாலைத் திரும்புவர்...

என்றே 

உண்மையின்றிப்  பேசுவர்...

 

உறாஅதோ 

     மெய்யாகாதோ 

 

ஊரறிந்த  கெளவை 

     மெய்ப்பொருள்  எதுவென 

     மெய்யாய்  அறியாத 

     இம்மேதினியரின் 

     பொய்க் கூற்று 

     மெய்யாகாதோ 

 

அதனைப் 

     காரிகையும்  நானும் 

     காதலர்  ஆனோமென  -  இம் 

     மேதினியர்ச்  சொல்லும்

     பொய்க் கூற்று 

     மெய்யாகுமெனில் 

 

பெறாது  பெற்றன்ன  நீர்த்து.

     எட்டாதப்  பொருளொன்று

     கிட்டியதென 

     கொட்டம்  கொள்ளுமே  நெஞ்சு...        

            ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                   அரங்க கனகராசன் உரை.

கவ்வையால்  கவ்விது  காமம்  அதுஇன்றேல் 

தவ்வென்னும்  தன்மை  இழந்து.               -1144.

 

      நட்போடுப் பழகினேன்

      நங்கையோடு 

      ஆனால் 

      பொன்மகளுக்கும் எனக்கும்  காதலென 

      பொல்லாங்குப்  பேசினர்  ஊரார்...

 

கவ்வையால்  கவ்விது  காமம் 

     அலரெழ 

     மலர்ந்தது  காதல் 

     எம்மிருவரிடை 

 

அதுஇன்றேல் 

     பொல்லாங்கு  எனும் 

     பூந்தோட்டம்  இல்லையேல் 

     காதலெனும் பூ  பூத்திராதே...

 

தவ்வென்னும்  தன்மை  இழந்து.

     நட்பென்னும்  நன்மணியும் 

     நாளடைவில் 

     ஒளி  இழந்திருக்குமே...   

            -------------------------------------------------------------------------

 

களவியல்                                                                   திருக்குறள்  உரை.

களித்தொறும் கள்ளுண்டல்  வேட்டற்றால்  காமம் 

வெளிப்படுந்  தோறும்  இனிது.                              -1145.

 

மயக்கத்திலும் 

மனதில்  ஒருவித  சுகம்...

 

நண்பனோடு 

திருநாள்  ஒருநாளில் 

பருகினேன்  கள்  சிறிதே...

சிதளவு  கள்  - என்னுள் 

பெருமளவு  சுகம்  தந்தது...

 

அதனை  அடிக்கடிப் பெறவே

மனமதுத்  தூண்டும் - நாளும் நாளும் 

மதுவது  அருந்தவே...

 

மதுவருந்திடின் 

மனம்  மயங்குதல்  போல் 

நெஞ்சம்தனில் காமம்  பெருகிடின் 

இதயந்தனில் இனிமை  சுரக்கும்...

            -------------------------------------------------------------------------       

 

 

 

களவியல்                                                    அரங்க கனகராசன் உரை.

கண்டது  மன்னும்  ஒருநாள்  அலர்மன்னும் 

திங்களைப்  பாம்புகொண்  டற்று.         -1146.

 

ஒருநாள் 

ஒரே  ஒருநாளில்  ஒருமுறை 

ஒருமுறை ஒரேயொரு முறை - என் 

திருமகனோடு என்னைத்

தெருமருங்கில்  கண்டனர்...

 

கண்ட  சேதிதன்னை 

கருந்திரையிட்டச்  சொற்களால்

மெய்யறியாது 

பொய்யுரைக்  கலந்து

கண்ணிமை நேரத்தில் 

காடுகழனியன்றி 

ஊரும்  தெருவும்  அறிய 

கூறினரே  ஊரார்...

 

இதற்கோர்  உவமை 

இனிதாய்க்  கூறிடு  எனில் 

 

தெளிந்த  

வான் வீதியில்     

ஞாயிறும்  பூமியும் - ஒரு 

நேர்க்கோட்டில் சுழல 

நேசமாய்  நிலவும் 

இடைவெளியில் நுழைந்து 

இனிய ஒளியை  மறைத்து 

இருள்  செய்திடுமே...

 

இருள்காட்சிதனைக்  கண்டோர்

பெரும்பாம்பொன்று 

நிலவினை 

விழுங்கியதென 

வீணுரை  பகர்வர்...

 

நிலவினை 

விழுங்கியதுப்  பாம்போ...

திருமகனோடு  ஒருநாள் 

தெருமருங்கில் 

பேசி நின்றேன் - அது 

மோசமோ...

 

ஏனிந்த  வீணுரை 

எனக்கின்னும்  புரியவில்லை...   

             --------------------------------------------------------------------

 

 

 

 

களவியல்                                                   அரங்க கனகராசன் உரை.

ஊரவர்  கெளவை  எருவாக  அன்னைசொல் 

நீராக  நீளும்இந்  நோய்.                            -1147.

 

     மனதில்  ஏதுமில்லை 

     மங்கை  எனக்கு!

     கன்னிநான் 

     களங்கமின்றி  -  தாமரைக்

     கண்ணனோடுப்  பழகினேன்  

     இதனை 

 

ஊரவர்   கெளவை  எருவாக 

     காதல்  என்றே 

     தூற்றினர்  ஊரார்...

 

     இதுதான்  காதலோவென  -  என் 

     இதயம் 

     புதியப் பாடல்  படியது...

 

அன்னைசொல்  நீராக 

     அன்னையும்  என்னை 

     அடுத்தவர்ச் சொல்  கேட்டு 

     தொடுத்தனள்  கோபக்கணை 

 

     ஊராரும்   தூற்ற  

     ஈன்றாளும்  ஏச 

     ஏனோ 

     என்னுள்ளம் கேட்டது 

     காதலெனில் - அது 

     கசப்பான  ஒன்றோ 

     

     ஊராரின்  தூற்றுதல்  எருவானதோ 

     நீரானதோ  அன்னையின்  சொல்தான் 

     ஏனோ 

 

நீளும்இந்  நோய்.

     என்நெஞ்சம்தனில் 

     என்னவனை  நினைத்து 

     காதற்பயிர் செழித்தது...     

              -----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                   திருக்குறள்  உரை.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் 

காமம்  நுதுப்பேம்  எனல்.                                             -1148.

 

நெய்ப்பாய்ச்சி  -  ஏரி 

நெருப்பை  அணைத்தல்  கூடுமோ...

 

நெஞ்சறியக் கூறுவீர்

தூற்றுதல்  சொல்லியோ 

ஏசுதல்  மொழிந்தோ 

வீணுரை  பகன்றோ 

 

எம்காதலைத்

தடைச்  செய்தல்  கூடுமோ...   

          ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

களவியல்                                                                    திருக்குறள் உரை.

அலர்நாண  ஒல்வதோ  அஞ்சலோம்பு  என்றார் 

பலர்நாண  நீத்தக்  கடை.                                 -1149.

தூற்றுதல்  செய்தனர்  இன்று 

நான் 

துவண்டு  வீழ்வதோ 

கூறு  நெஞ்சே...

நாணம் கெட்டு 

நான்  வாழ்தல்  கூடுமோ...

   அஞ்சாதே  கண்ணே  - என் 

   கொஞ்சுங் கிளியே 

   ஒருபோதும்  உன்னை  நான் 

   பிரியேன்  என்றார்...

   அன்றோர்  நாள் 

   அதனைக்  கேட்டு  நான் 

   அளவிலா  இன்பம்  கொண்டேன்...

அடுத்தவரெதிரில் நான் 

பெருமிதமாய் இருந்தேன்...

இன்றோ 

பிரிந்தாரே 

   ஏளனப்  பார்வை - பலர்வீச 

   நாணத்தால்  நடுங்கலானேன் 

   நாணம்  கெட்டு 

   நான் வாழ்தல்  கூடுமோ...  

              --------------------------------------------------------------------

களவியல்                                                  அரங்க  கனகராசன்  உரை.

தாம்வேண்டின்  நல்குவர்  காதலர்  யாம்வேண்டும் 

கெளவை  எடுக்கும்இவ்  வூர்.                               -1150.

 

எமது  காதல்  சேதி 

எங்கும்  பரவிடல்  வேண்டும்  என்றே 

என்னவனும்  நானும் 

எல்லாரும்  காணவே 

கொள்ளுவோம்  காதல்...

ஏனெனில் 

 

எம்மிருவர்  நோக்கும் 

எதுவெனில் 

 

ஊரார்  அறிந்திடவே  -  யாம் 

காதல்  கொண்டால் 

ஏது  நிகழும்...

 

ஒன்றெனில் இரண்டென்பது 

ஒருசிலரின்  இயல்பன்றோ...

 

ஊராரின்  தூற்றுதல் - எமது 

வீட்டாரை  எட்டினால் 

'வரம்பு மீறுவரோ என்றஞ்சி 

விரைந்துச்  செய்வர் திருமண  ஏற்பாடு  எமக்கே 

 

இதுதானே எமது நோக்கம் 

இதற்காகவே 

தூற்றுதல்  விரும்பி 

இனியவரும்  நானும் 

இனிதாய்க் கொண்டோம்  - பிறர் 

காணவே  காதல்... 

      ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             அதிகாரம்:116.

                                            பிரிவாற்றாமை 

செல்லாமை  உண்டேல்  எனக்குரை  மற்றுநின் 

வல்வரவு  வாழ்வார்க்கு   உரை.                     -1151.

 

என்ன  சொன்னாய்

என்னுள்ளம்  கொள்ளைக்  கொண்டவனே

 

நெருப்பினுள்  துஞ்சுதல்  கூடுமோ 

அன்பானவனே 

அன்று  என்ன  சொன்னாய்

 

கண்ணே  ஒருபோதும் 

உன்னைப் பிரியேன்  என்றாயே 

இன்று  சொல்வதென்ன

 

பொருளீட்டப்  புறப்படுகிறேன்

புதுமலரே 

விடைக் கொடு என்கிறாயே...

 

கண்ணாளனே 

உன்னைவிட்டு ஒருநாளும் 

என்னால் 

இங்கிருக்க  முடியாது...

 

மரக்கலமும்  மண்மீதில்  செல்லுமோ 

மடிந்தார் உயிர்  பிழைத்தல் நியதியோ 

அல்லவே...

 

எனவே 

என்னுயிரே  செல்லாதே 

 

என்னவளே 

எங்கும் செல்லேன் உன்னைவிட்டு 

என்றெனக்குச் சொல்வதெனில்

என்னோடுப் பேசு...

 

அல்லவெனில் 

செல்வத்துடன் செல்லக்கிளியே 

வில்லம்பு  விரைவது போல்  

விரைந்து  வருவேன் எனில் 

 

உன்னைப் பிரிந்து

உயிர் வாழ்வோரிடம் 

உரைத்திடு  -  சென்றிடு 

என்னிடம் நீ - இனி 

எதுவும்  சொல்லாதே...

              ------------------------------------------------------------------------

 

 

 

 

கற்பியல்                                                     அரங்க கனகராசன்  உரை.

இன்கண்  உடைத்தவர்  பார்வல்  பிரிவஞ்சும் 

புன்கண்  உடைத்தால்  புணர்வு.               -1152.

 

கனிரசம்  பொழியும்  -  என் 

கண்ணாளன்  பார்வை!

எனக்கு  என்றுமே  அவர் 

மணங்கமழும்  பூவிதழ்  என்பேனே...

 

இப்போதெல்லாம் 

ஏனோ  புரியவில்லை

இனியவரின் பார்வை 

இனம்  புரியாப் பொருள் தருவதுபோல் - என் 

இதயம்  அஞ்சுகிறது...

 

உழைப்புத்  தேடி

ஊரில்  பிரிந்துச்  செல்லும்

ஆடவரைப் போல் - எனது 

ஆசை மன்னவனும் 

போவாரோ   -  அவர் 

பார்வை  ஏதேதோ 

கூறுகிறதே  அஞ்சுகிறேன்...

 

ஈருடல் 

ஓருயிராய்க்  கூடி மகிழும் 

வேளையிலும் 

உறவிதுப்

பிரிவின்     

அறிகுறியோ  என்றே 

துன்பங் கொண்டு நெஞ்சுத்

துடிக்கிறதே...       

             ----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

அரிதரோ  தேற்றம்  அறிவுடையார்  கண்ணும் 

பிரிவோ  ரிடத்துண்மை  யான்.                    -1153.

 

பாசங்கொண்ட பைங்கிளியே - என் 

ஆசைக்கிளியே 

ஒன்று சொல்வேன் - நீ 

உள்ளத்தில்  வைத்துக் கொள்!...

 

மணமான  சிலநாளில் 

இனியாளைப்  பிரிந்து 

பொருளீட்டப்  போவர் பலர்...

 

ஆனால் அழகுச் செல்வமே

எதன்  பொருட்டும்  எப்போதும் 

உனைப்  பிரியேன் கனவிலும் என்று 

உறுதிமொழித்  தந்தார் - என் 

உயர்வானவர்...

 

இதனை 

உண்மையென  என் நெஞ்சு 

உளமாற 

ஏற்க  மறுக்குதே...

 

ஏனெனில் 

பிரிவு  நேர்ந்தால் - வேதனைப் 

பெருகுமென        

அறிந்தோர்  வாழ்விலும் 

ஒருநாளுண்டு  பிரிவு 

இது  பொய்யல்ல  மெய்... 

 

எனவே 

என்னவன்  சொன்ன  உறுதிமொழியை 

ஏற்க மறுக்குதே  நெஞ்சு... 

     ------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                     திருக்குறள்  உரை.

அளித்தஞ்சல்  என்றவர்  நீப்பின்  தெளித்தசொல் 

தேறியார்க்கு  உண்டோ  தவறு.                        -1154.

 

கார்குழலி 

சீர் கட்டழகி 

ஓர் சொல் சொல்வேன் உறுதியாய் 

நேரிழையாளே 

கேளிதனை...

எந்த ஒரு  நிலையிலும் 

எழில்  பூவே  - உனைப்பிரியேன் 

என்னவளே  எப்போதும்  நீ 

அஞ்சாதே  என்றவர் 

இன்று 

பிரிந்துவிட்டார் 

பிரிவுத்துயர் - என்னை 

உருக்கியதே...

 

நெருங்கிய  தோழியிடம்

நெஞ்சின்  துயர்ச் சொல்லி

நெடும் பொழுது  அழுதேன்...

 

துணைவன் இருப்பதும்  பிரிவதும் 

துணைவியின்  அன்பு  பொறுத்தன்றோ

துணைவி  நீ என்ன  சொன்னாயோ - நின் 

துணைப்  போனதே என 

தோழியெனை  சாடினாள்       

 

தோழியே 

அன்பு  செய்தவன்  பிரிந்தானே 

அது  தவறா 

 

பிரியேன்  என 

உறுதித் தந்தான்

உறுதிமொழியை 

உளமாற  நம்பினேன் 

இது தவறா 

எதுவெனச் சொல்லடி...   

            -----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

ஓம்பின்  அமைந்தார்  பிரிவோம்பல்  மற்றவர் 

நீங்கின்  அரிதால்  புணர்வு.                          -1155.

ஓம்புதல்  எதுவென  நூல்பல 

கூறுவதை - நீ 

அறியாயோ  தோழி 

   சொல்லோம்பல் 

   நல்லன  ஓம்பல் - உடல் 

   நல்மோம்பல் 

   கலையோம்பல் 

   கருத்தோம்பல் 

   விருந்தோம்பல்  போல் 

ஓம்பல்  பலவுண்டு  தோழியே 

துணையாய்  அமைந்தாரிடை 

துளியும் பிரிவு  நேராவண்ணம் 

துடிப்புடன்  பிரிவோம்பல்  வேண்டும்...

அடித்  தோழியே - இது 

அறியாமல்  இருந்தாயே 

   துணைவர்  நீங்கிடின் 

   தனிமை தாங்குமோ  நெஞ்சு 

 

தவித்தல்  எனும்  துயர் 

தடித்த  புண்ணாகுமே மனதில்...

இனியொரு  முறை சேர நேர்ந்தாலும் 

இதயந்  தருமோ  இடம்...

கற்பியல்                                                            அரங்க கனகராசன்  உரை.

பிரிவுரைக்கும்  வன்கண்ண  ராயின்  அரிதவர் 

நல்குவர்   என்னும்  நசை.                                 -1156.

 

அவர் 

நின்றால்  அழகு 

நடந்தால்  அழகு 

பார்த்தால்  அழகு  

பாடினால்  அழகு 

ஒவ்வொரு அசைவிலும் 

ஓராயிரம்  அழகு...

 

அன்புத்துணைவன்  மீது 

அளவிலா  ஆசைக்  கொண்டுள்ளேன்...

பாசம்  கொண்ட  என்மீது 

நேசமில்லையோ  அவருக்கு...

 

வாசமலரை 

காலில்  மிதிப்பது  போல் - என் 

ஆசை  நெஞ்சில் 

அனல்  செய்தாரே...

 

போகிறேனென்று  -  மிகு 

எளிதில்  கூறுகிறாரெனில் 

கடும்பாறையோ அவர்நெஞ்சு 

கடும்பாறைதானெனில் 

இனி 

எனதாசை  யாவும்  வீணே 

பிரிபவர் 

இனி வருவாரோ...

எனைத்  தழுவுவாரோ 

கட்டிமுத்தம்  தருவாரோ 

நம்பிட  நெஞ்சு  மறுக்குதே... 

             ----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள் உரை.

துறைவன்  துறந்தமை  தூற்றாகொல்  முன்கை 

இறைஇறவா  நின்ற  வளை.                               -1157. 

 

     முழுமதியே  -  நீ 

     துளியும்  வருத்தம்  கொள்ளாதே 

     நெடுந்தொலைவு  -  நான் 

     பிரிந்து  சென்றாலும்  -  என் 

     நினைவெல்லாம் 

     நின்னோடு  உறவாடும்...

 

     கண்ணழகே  -  நீ 

     கலங்கிடாதே 

     பெண்ணழகே 

     உன்னவன்  சொல்கிறேன் 

     உறுதியாய்  விடைக்  கொடு...

 

துறைவன் 

     என்றுச்  சொன்னான்  -  என் 

     தலைவன் 

     மங்கை  நானும் 

     மன்னவனுக்கு 

     இதழோடு  இதழ்  பதித்து

     இருதோள்  தழுவி 

     இனிய முத்தமும்  விடையும் 

     கொடுத்தேன்...

     ஆனால்...

 

துறந்தமை 

      என் தலைவன் பிரிந்து 

      எண்ணிக்கையில்  நாள்  அதிகமில்லை 

      காலம்  பலக்  கடந்ததுபோல் 

      வாடித்  துடிக்குதே  நெஞ்சு...

      சோகத்தில்  முகமும் 

      சோர்வுக்  கொண்டதே...

 

தூற்றார்கொல் 

      தூற்றுதல் செய்வாரோ 

     ஊர்மக்கள்  என்றஞ்சி 

     சோகத்தை - நெஞ்சில்           

     தாளிட்டு மூடினேன் 

     ஆனாலும்

     மேனிமெலிந்து - சிறு 

     நூலானேன்... 

 

முன்னே  இறை 

     முன்கைக்  கட்டும்

     மூட்டும் 

     முழுவீச்சில்  மெலிய 

 

இறவா  நின்ற  வளை.

     பொன்வளையலும்  

     பொலபொலவென 

     கழன்று  வீழ்ந்ததே...

 

      உடல் மெலிந்து 

      வளை விழுந்ததைப்

      பலர்  பார்த்தனரே...

 

     பிரிவெனும்  துயரை 

     குறுமகள்  இவள் நெஞ்சில் 

     கொடுங்கணவன்  தந்தான் - அதனால் 

     கொழுந்திவள்  மெலிந்தாள்  -  என்றே 

     எல்லாரும்  தூற்றுவரே... 

          -------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                           அரங்க  கனகராசன்  உரை.

இன்னாது  இனன்இல்ஊர்  வாழ்தல்  அதனினும் 

இன்னாது  இனியார்ப்  பிரிவு.                              -1158. 

 

துன்பம்  எதுவெனில் 

மானிடநேயம்  இல்லா  ஊரில் 

தனித்து  வாழ்தலாகும்...

 

துன்பத்துள்  துன்பம்  எதுவெனில் 

இன்பத்தை  அள்ளித்தரும் 

இனியக்  காதலரின்

இரக்கமற்றப்  பிரிவாகும்...  

            ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தொடின்சுடின்  அல்லது  காமநோய்  போல 

விடிற்சுடல்  ஆற்றுமோ  தீ.                       -1159.

 

தொட்டால்  சுடுவது  எது 

பட்டெனச்  சொல்வீர் நெருப்பென...

 

தொடாமல்  சுடுமோ  நெருப்பு 

அடாத  கேள்வியிது என்பீர் 

ஆயினும்  கேளிர்  ஒன்று...

 

காதல்  நெஞ்சின் 

சாத்திரம்  அறிவீரோ 

 

காதலன்  விலகிடின் 

காதல்  பெண்ணின்  நெஞ்சுச்  சுடும்

காதல்  மங்கை  விலகிடின் 

காதலன்  மனம்  சுடும்...

 

எட்டச்சென்றாலும் 

சுட்டுவிடும்  காமம்  போல் 

தொடாமலே 

சுடுமோ  நெருப்பு... 

               -------------------------------------------------------------------------

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

அரிதாற்றி  அல்லல்நோய்  நீக்கிப்  பிரிவாற்றல் 

பின்இருந்து  வாழ்வார்  பலர்.                              -1160.

 

சுமையானது 

சுகமற்றது 

எனினும் 

பிரியும்  தலைவனுக்கு 

விடைச்  சொல்வர்...

 

பிரிவை  நினைத்து 

உருகும்  உள்ளத்தை 

ஆறுதலெனும் அணை எழுப்பி 

ஆண்டுகள்  பல  காத்து  நிற்பர்...

 

துணைவனோடு  வாழ்ந்த 

நினைவுகளை 

நெஞ்சில்  நிறுத்தி 

உயிர்வாழும்  மங்கையர் 

உலகில்  பலர்  உண்டு...

 

ஆயினும் 

தோழி 

சோகத்தை  எப்படிச் சொல்வேன் - என் 

தோழன்  பிரிவால் 

சாகிறேன்  நாளும்  நாளும்...  

கற்பியல்                                                                                       அதிகாரம்:117.

                                          படர்மெலிந்திரங்கல் 

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு 

ஊற்றுநீர்  போல  மிகும்.                                                    -1161.

      தோழி 

     உள்ளந்திறந்து 

     உண்மைச்  சொல்கிறேன்

     உறக்கமில்லை  

     உண்ணவும்  இயலவில்லை 

     காமநோய்  -  எனை 

     காட்டுத்தீப்  போல்  சுடுகிறது...

 

மறைப்பேன்மன்  யானிஃதோ  நோயை 

     வெளிப்பட்டால் 

     வெட்கக்  கேடென்று 

     காம  நோயை  -  நெஞ்சோடு 

     மறைக்க  முயல்கிறேன்...

     இயலவில்லைத்  தோழி...

 

இறைப்பவர்க்கு 

     கிணற்றில் 

     நாளும்  நாளும் - நீர் 

     இறைத்தாலும்  

 

 

ஊற்றுநீர்  போல  மிகும்.

     ஊற்றுநீர் 

     ஊறிப்  பெருகுவது  போல 

     மறைக்க  மறைக்க  காமம் 

     திரண்டு  பெருகுகிறதே...  

       ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 

உரைத்தலும்  நாணுத்  தரும்.                                      -1162.

 

கடல்நீரை  எல்லாம் 

கண்ணுக்குத்  தெரியாத ஓரிடத்தில் 

ஒளித்து  வைக்கக்  கூடுமோ 

 

தோழி - என் 

காம நோயை  மறைக்கவும் 

ஓரிடம்  உண்டோ 

அறியாமல்  அல்லல்  படுகிறேன்...

 

காமநெருப்பை  நெஞ்சில் 

மூட்டியவனே  -  நீ 

கோடி முத்தம்  கொடுத்து 

தோள்நோகத்  தழுவிட  வாவென்று 

 

காதலனிடம் கூறிடவும் 

நாணம்  எனைத்  தடுக்கிறதே

தோழி...      

        ------------------------------------------------------------------------------

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

காமமும்  நாணும்  உயிர்காவாத்  தூங்கும்என் 

நோனா  உடம்பி  னகத்து.                                   -1163.

 

காமம்  எனக்கோர்  சுமை 

நாணமும்  எனக்கோர்  சுமை 

இவ்விரு  பெருஞ்சுமைகளும்

 

உயிரென்னும்  காவடியின் 

இருபுறத்திலும்  தொங்குதே...

 

காமமும்  நாணமும் 

கண்ணுக்குப்  புலனாவதில்லை...

ஆயினும் - கடும் 

பாறையைப்  போல் 

கனமாய்  அழுத்துகிறதே...

 

தாங்குமோ  என்  தேகம் 

நூல்போல்  மெலிந்து 

துளியும்  வலுவின்றி 

துவண்டுக்  கிடக்கும்  என்மீது 

கடும்பாறையைப்  போல் 

காமமும்  நாணமும்  அழுத்தினால் 

தாங்குமோ  என்  மேனி...

               ---------------------------------------------------------------------

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

காமக்  கடல்மன்னும்  உண்டே  அதுநீந்தும்

ஏமப்  புணைமன்னும்  இல்.                       -1164.  

 

கடல்  போன்றதோ  காமம் 

கடல்  போன்றதே  காமம்

சீறும் கடல்தனில் 

சிக்கித்  தவிக்கிறேன்...

 

சீக்கிரமாய்  காமக்  கரை

சேர  வேண்டும் 

சேயிழை  எனக்கோர் 

 

ஆண்துணை  எனும் 

தோணி  இல்லையே 

காம  உணர்ச்சியில் 

காரிகை  நான் 

சாகிறேன்...

        ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

துப்பின்  எவனாவர்  மற்கொல்  துயர்வரவு 

நட்பினுள்  ஆற்று  பவர்.                             -1165.

 

     இரக்கமற்றவரென்று    

     இவரை  நான்  கூறுவேன்...

     இவரை  மேலும் 

     கொடியவரென்றும் கூறுவேன் 

     புதிரல்ல  என்  கூற்று 

     புரியும்படிச்  சொல்வேன்  கேள்  தோழி...

 

துப்பின்  எவனாவர்  மற்கொல் 

     கெடுதல் செய்யும்  பகைவரை

     சடிதியில்  கொல்லுந்திறன் 

     கடுநெஞ்சம் கொண்டஎன் 

     காதலருக்குண்டு...

 

     என்ன  சொல்கிறாய்  தலைவி 

     நின்காதலன்  -  ஓர் உயிரைக்

     கொல்லும்  கொடியவனோ 

      நம்பிட  நான்  மாட்டேன் 

 

துயர்வரவு 

     தோழி 

     நம்பிட ஓர்சொல்லும் 

     நான்  சொல்லுவேன்  கேளிதை 

 

      நேசமும்  பாசமும்  கொண்டு 

      நானென் காதலரை 

      நாளெல்லாம்  வாழ்கிறேன்...

 

     பாசம்  கொண்ட  எனக்கே  -  பிரிவு  எனும் 

     மோசம்  செய்யுமென்  காதலன் 

     யாரெனக்  கூறு

 

நட்பினுள்  ஆற்று  பவர்.

     கடும்பாறை  போல் - காதலரும் 

     கடுநெஞ்சர்தானே 

      

     அன்புச்  செய்யும்  மனதில் 

     துன்பம்  செய்யுமிவர் 

     துன்பம்  செய்யும்  எவரையும் 

     துடிக்கச்  செய்யத்  தயங்குவாரோ

     கூறு  தோழி...

           --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                           அரங்க  கனகராசன் உரை. இன்பம்  கடல்மற்றுக்  காமம்  அஃதடுங்கால் 

துன்பம்  அதனிற்  பெரிது.                              -1166.

 

     ஒருகையால் 

     கார்குழல்  வருடுவார் 

     மறுகையால் 

     தோள்தொட்டு  முதுகுத்  தடவுவார்...

 

      இதழால் 

      நுதல்  தொடுவார் 

      இமைமீதில்  மூச்சுத்  தருவார்...

      நாசிதனை  மெலிதாய்க்  கடிப்பார்

      இதழ்கவ்விச்  சுவைப்பார்...

 

      இருகரத்தால்  -  என்னை 

      மார்போடு  அணைத்து 

      மஞ்சத்தில்  சாய்ப்பார்...

 

      வயிறுமீது  அவர்விரல்  நடக்கும்  -  என் 

      உயிரோ  உல்லாச  வானில்  பறக்கும்...

    

      இடைக்கொரு  முத்தமும் 

      தடையின்றி கீழும்  கீழும் 

      அளவின்றி  மேலும் மேலும் 

      ஆசை  முத்தம்  ஆயிரம்  தருவார்...

      நாவில்  நல்ல வீணை மீட்டி  -  என் 

      நாணத்தைப்  புதைகுழியில்  தள்ளுவார்

 

இன்பம்  கடல் 

      அவரோடு  நான்  கூடி  மகிழ்வதை 

      அளவிட்டுக்  கூறின் - அது 

      கடல்போல்  பெரிதென்பேன்...

 

மற்றுக்  காமம் அஃதடுங்கால் 

       காதலன்  ஒருநாள் 

       தொலைவாய்எனைப்  பிரிந்து

       போய்விட்டால் 

       காமம் கொண்டு 

       நான்படும்  வேதனைக்

       கூறிட வேண்டுமோ...

 

துன்பம்  அதனிற்  பெரிது.

       காமத்துயரின் அளவும் 

       கடலினும்  பெரிதென்பேன்...

             ----------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

காமக்  கடும்புனல்  நீந்திக்  கரைகாணேன் 

யாமத்தும்  யானே  உளேன்.                    -1167.

 

     ஆசை  முத்தம்  ஆயிரம்  தந்து 

     காம இன்பத்தில் குளிர்வித்து  -  எனை 

     ஆழ்கடலுக்கே  அழைத்துச்  சென்றவன்

     இன்றில்லை...

 

      காமத்தின்  ஆழத்தைக்  காட்டியவன்

      பேதையெனை  விட்டு 

      போனான்  தொலைவாய்...

      இதென்னக்  கொடுமை - என் 

      இளமையைத் துடிக்கச் செய்யும் கொடுமை 

 

காமக்  கடும்புனல் 

      காட்டாற்று  வெள்ளமாய் 

      காமம்  எனை  சூழ்ந்ததே  

      காமசூட்டில் - என் நெஞ்சு 

      வெந்து  வெடிக்கிறதே 

      பஞ்சணையில்  புரண்டு  -  என் 

      பிஞ்சுடல்  புண்ணாகுதே...

 

நீந்திக்  கரைகாணேன் 

      ஆசை  அளவின்றி  வாட்டுதே 

      காமத்தை  அடக்கி 

      கண்துஞ்ச  முயல்கிறேன் 

      கடுகளவும்  இல்லையே  தூக்கம்...

 

யாமத்தும்  யானே  உளேன்.

      வானும்  மீனும் 

      காடும்  மேடும் 

      ஊரும்  ஊரில்  எல்லா  உயிரும்     

      தூங்கி இருக்க 

      நானோ - நடு 

      சாமத்திலும் 

      காமத்தால் தூக்கமின்றி 

      வாடுகிறேன்  துவண்டு...

         ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள் உரை.

மன்னுயி  ரெல்லாம்   துயிற்றி  அளித்திரா 

என்னல்லது  இல்லை  துணை.             -1168.

 

      இரவே நீ 

      ஆராரோ  ஆரிரரோ 

      பாடினாயோ 

 

மன்னுயி  ரெல்லாம்

       பாலமுது தந்து  - இந்த 

       பூவுலகில்  எல்லாரும் 

 

துயிற்றி  அளித்திரா 

        தூங்கவே

        தாலாட்டுச்  செய்தாயோ   

        சொல் இரவே...

 

        நானொருத்தி  இங்கு 

        காமவேதனைக்  கண்டு  

        தூக்கமின்றித்  தவிக்கிறேன்...

 

        எல்லாரையும்  தூங்கச்  செய்த

        பொல்லாத  நள்ளிரவே 

        என்னை  மட்டும் 

        ஏன் தூங்கச் செய்யவில்லை  நீ 

 

என்னல்லது  இல்லை  துணை.

        சொல் இரவே 

        ஊரில்  எல்லாரும் 

        தூங்கிவிட்டால் 

        உனக்கேதுத் துணை  என்றா 

        என்னைத்  தூங்கச்  செய்யவில்லை...

          ------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

கொடியார்  கொடுமையின்  தாம்கொடிய  இந்நாள் 

நெடிய  கழியும்  இரா.                                                    -1169.

 

     என்ன தவறு செய்தேன்

     என்னைத்  தவிக்கச்  செய்தானே...

 

      தனிமையில்  நான் 

      விரகத்தில்  நான் 

      தவிப்பில்  நான் 

 

கொடியார்  கொடுமையின் 

       காமநெருப்போடு      

       கடுந்துயர்  நான்பட 

       கொடியவனே 

       பிரிந்து  சென்றாய் நெடுந்தொலைவு 

       உருகி  மடிகிறேன் இங்கு நான் 

       எனக்கேன் இந்தக் கொடுமை..

 

        பிரிவுத்துயர் செய்தப் 

        பெருங்கொடியவனே  - நான் 

        உரைப்பது  உனக்கு  கேட்குமோ 

        நீ இழக்கும் கொடுமையைவிட 

 

தாம்கொடிய 

       நானிங்கு 

       மேலுமொருக்  கொடுமைக்கு

       ஆளாகி  தவிக்கிறேன்...

 

இந்நாள்  நெடிய  கழியும்இரா.

         விரகத்தில்  நான் 

         உருகுவதை 

         அருகிருந்து  வேடிக்கைக்  காணுதே

         அன்பற்ற இந்த  இரவு 

 

          விடியாதா 

         விரகம் எனைவிட்டு  விலகாதா 

          இரவே  நீ  மறையாயோ  என நான் 

    

          உறக்கமின்றி 

           உருண்டு  புரண்டு  - மஞ்சத்தில் 

           உளறுவேன்...

 

           இரவும் எனக்கு சதிச்  செய்கிறதோ 

           இன்னும்  விலகாமல் 

           நெடுநேரம்  நீண்டு  வளர்கிறதே...

             ----------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                       திருக்குறள்  உரை.

உள்ளம்போன்று  உள்வழிச்   செல்கிற்பின்  வெள்ளநீர் 

நீந்தல  மன்னோஎன்  கண்.                                   -1170.

 

          காதகன் 

          காதவெளியில்  இருப்பானோ 

           கடல் கடந்து  இருப்பானோ 

 

உள்ளம்போன்று 

           இமைப்போதில்  -  என் 

           இதயம்  போகிறதே  - அவன் 

           இருப்பிடம்  தேடி 

 

உள்வழிச்  செல்கிற்பின் 

            நானுமங்கு  -  ஒரு 

            நாழிகையில்  செல்ல 

            கூடுமெனில் 

 

வெள்ளநீர்  நீந்தல 

             வெள்ளமெனப்  பெருகும்

              விழிநீரில்  மூழ்கி 

              தத்தளிக்குமோ 

 

மன்னோஎன்  கண்.

              என் இருவிழிகள்  தான்...

      --------------------------------------------------------------------

கற்பியல்                                                                                       அதிகாரம்:118.

                                         கண்விதுப்பழிதல் 

கண்தாம் கலுழ்வ  தெவன்கொலோ  தண்டாநோய் 

தாம்காட்ட  யாம்கண்  டது.                                           -1171.

     மங்கை நான் 

     மனதில் கோடித்  துயர் 

     சுமந்தாலும் 

     கண்களே  உமக்குக்

     குறையேதும்  வைத்தேனா...

     மையெழுதி  அழகுச் செய்கிறேனே...

     ஆயினும்   

     

கண்தாம்  கலுழ்வ  தெவன்கொலோ 

     கண்களே  -  நீவிர் 

     கலங்குவதேனோ...

     கண்ணீர்  சிந்துவதேனோ...

     அன்றொருநாள்  

     அமைதியாய்த் தெருவைப் பார்த்து நின்றபோது 

     அழகன் ஒருவன் நடந்து  வருகிறானென்று 

     கண்களே - நீவிரல்லவா...

     அவனை எனக்குக்  காட்டி

     அறிமுகம்  செய்து  வைத்தீர்...

     அவனோடுக்  காதல் வளர 

     கண்களே 

     காரணம்  நீங்களல்லவா...

தண்டாநோய்  தாம்காட்ட 

      அவனை  நினைத்து 

      நெஞ்சில் காமம்  பெருகுகிறதே 

      அதற்குக்  காரணம்

      அவனை  நீங்கள்  காட்டியதால்தானே...      

    

யாம்கண்  டது.

      நீங்கள்  காட்ட         

      நான்  பார்த்தேன்...

     இன்று 

     அவனைக்  காட்டும்படி 

     என்னிடம்  நீங்கள்  அழுவதேன்...

           -----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தெரிந்துணரா  நோக்கிய  உண்கண்  பரிந்துணராப் 

பைதல்  உழப்பது  எவன்.                                             -1172.

 

     மையுண்ட  -  எனது 

     மதுரவிழிகள்  கண்டு 

     மன்னவரும்  மயக்கம்  கொள்வர்  என்றே 

     மமதைக்  கொண்டு  நானிருந்தேன் 

     என் விழிகளோ 

தெரிந்துணரா  நோக்கிய  உண்கண் 

      அழகன் என  ஒருவனைக்  கண்டு

      மயக்கம்  கொண்டு 

      மதிகெட்டது...

      யாரவனென  அவனைத்  

      தெரிந்துக்  கொள்ளாமல்     

      தெருவைப் பார்த்துக்

      காத்திருந்தன  அவன்  வருகைக்காக 

      எனது  கண்கள்...  

      

பரிந்துணராப் 

     என்னவானானோ 

     ஏது நிகழ்ந்ததோ 

     காணவில்லை  அவன் சில  காலமாய் 

     என்ன  ஏதென்று 

     ஆராய்ந்துணராமல்    

பைதல்  உழப்பது  எவன்.

     அவன் நினைவாய் 

     அழுவது  ஏனோ...

     மீண்டும்  அவனைப்

     பார்க்க இயலாதோ  என 

     ஏக்கம்  கொண்டு  உழல்வதேனோ...

         ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

கதுமெனத்  தாம்நோக்கித்  தாமே  கலுழும் 

இதுநகத்  தக்கது  உடைத்து.                     -1173.

 

          நானா 

          காணச்  சொன்னேன் - என்   

          கருவிழிகளே!... 

 

கதுமெனத்  தாம்நோக்கி 

         சட்டென  -  அந்த 

         சந்திர  முகத்தழகனைக் 

         கண்டது  நீங்களல்லவா 

 

        மயக்கம் கொண்டு 

        மைவிழிகளே - அந்த 

        மதியழகனை 

        மீண்டும்  மீண்டும் 

        காணத்துடித்தது  நீங்களல்லவா...

 

தாமே  கலுழும்  

       கட்டழகன்  என்னவானான் 

       எட்டுத்திக்கில்  நோக்கினாலும் 

       மதிமுகம்  தெரியவில்லையே 

       ஏக்கத்தைத் தந்தவன் 

       ஏன் நிறுத்தினான் வருகையை என்றே 

       ஏங்கி  அழும்  என் கண்களே 

இதுநகத்  தக்கது  உடைத்து.

        கண்டது  நீங்கள்  -  ஏக்கம் 

        கொண்டதும்  நீங்கள் 

        என்னவென்று சொல்வேன்

        கண்களே 

        உம்மை  நினைத்து  -  என் 

        உள்ளம்  சிரிக்குது... 

      -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                         அரங்க கனகசராசன் உரை.

பெயலாற்றா  நீருலந்த  உண்கண்  உயலாற்றா 

உய்வில்நோய்  என்கண்  நிறுத்து.                 -1174.

          நீபடும்  வேதனைக்கு 

          நானன்றோ  காரணமென்று - என் 

          கண்கள்  கலங்குகின்றன...

 

பெயலாற்றா  நீருலந்த  உண்கண் 

          அழுது அழுது 

          வறண்டன  நீரின்றி 

 

உயலாற்றா 

           தணிக்க  முடியாத  விரகதாபம் 

           தவிக்கிறேன்  நானும் 

உய்வில்நோய் 

            காமநோயின்  எல்லை  எதுவெனக்

            காரிகை  நானறியேன்...

            ஆயினும் 

            துடித்துத்  துவண்டு

            நெடுந்துன்பம்  நான்  படுகிறேன்...

என்கண்  நிறுத்து.

            எழில்  மைந்தனை 

            எனக்குக்  காட்டி 

            என்னுள்  காமநோய்  வார்த்தது 

            எனது  மை விழிகளன்றோ...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

படலாற்றா  பைதல்  உழக்கும்  கடலாற்றாக்

காமநோய்  செய்தஎன்  கண்.                      -1175.

      இமைமூடி 

      இமை நேரமும் 

      தூங்க முடியாமல் 

      துடிக்கும்  கண்கள்...

         இரவும்  பகலும் 

         இருகண்களும் 

         புலம்பும் புலம்பலோ 

         ஒருகோடி...

      ஆழ்கடல்  அளவென்ன  

      விரிகடல் பரப்பென்னவென 

      விரித்துரைக்கக்  கூடும்...

         ஏந்திழையே - உனக்கு 

         இரு கண்கள் யாம் செய்த 

         பெருந்துயர்த்தனை 

         உரைத்திடக்  கூடுமோ...

      காமம்  எதுவென  அறியாத    

      சிறு கிள்ளை நீ...

      மைத்தீட்டி அழகுச்செய்தாய் 

      எமக்கு  நீ!...

 

       காமத்தீ  மூட்டி  செய்தோமே 

       கடுந்துயர்  யாம்  உனக்கு... 

கற்பியல்                                                                            திருக்குறள்  உரை.

ஓஒ  இனிதே  எமக்கிந்நோய்  செய்தகண் 

தாஅம்  இதற்பட்  டது.                               -1176.       

 

     நினைத்தாலே  இனிக்குது  நெஞ்சு 

     நிம்மதியாய்ப்  பாடுது  மனசு 

     ஏனென்று  என்னைக்  கேட்கிறாயா 

     தோழி  சொல்வேன்  கேளடி...

 

     ஒரு  முத்தம் 

     ஒருத்  தழுவல்

     ஒரு முயக்கம்  இல்லையே 

     இதென்ன  தனிமைத்  தவிப்பு  என்று 

     காமங்கொண்டு  நான்வாட 

 

     என்வேதனைக் கடலினும் பெரிதடி 

     என்னவென்று சொல்வேன்

     இந்நோயை  எனக்குச்  செய்தது 

     என்னிரு  கண்களல்லவா 

 

     அழகன்  இவனென்று 

     ஒருவனை 

     எனக்குக் காட்டியது என் கண்கள் 

     அவன் 

     நினைவில் 

     நான்படும்  வேதனைக் கண்டு - எனது 

     மான்விழிகளும்  மாளாத்  துயரில்

     நீர் சொறிந்து  அழுகின்றனவே 

 

     எனக்குத்

     துன்பம் செய்த  விழிகள் 

     இன்று 

     துன்புற்று  அழுவதால் 

     இன்புற்று 

     என்னிதயம் 

     இசைக்குயில்  போல் 

     பாடுதுத்  தோழி... 

            ---------------------------------------------------------------------------      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

உழந்துழந்து  உள்நீர்  அறுக  விழைந்திழைந்து 

வேண்டி  யவர்க்கண்ட  கண்.                            -1177.

 

         என் கண்ணே 

         ஏமாந்தாயோ 

         அழு!...

         என்ன  ஏதுவென

         சிந்திக்க  மறந்தாயோ 

         அழு!

 

உழந்துழந்து 

         வேதனையால் 

         கலங்கி  கசிந்துருகி அழுகிறாயா 

         அழு!...   

 

உள்நீர்  அறுக

         கண்ணீர்  வற்றட்டும்  -  என் 

         கண்களே 

         விழிகள்  வறண்டு  வீங்கட்டும்...

 

         இன்று 

         அவன்  காதல்  கூடவில்லையே  என்று 

         அழுதிடும்  என்னருமை  கண்களே

         அன்று  நடந்த  நிகழ்வை 

         அதற்குள்  மறந்து  விட்டீரோ 

விழைந்திழைந்து 

         அவனைக்  கண்டவுடன்

         குழைந்தக்  கண்களே

         என்னைக்  கேட்டா  தூது  போனீர்...

         பார்வையால்  கவிதை  எழுதிய  கண்களே 

 

வேண்டி  யவர்க்கண்ட  கண்.

        பாசத்துடன் அவனைப் பார்த்துப் பார்த்துப் 

        பரவசம் கொண்டக் கண்களே

       ஏறெடுத்தும்  காணாமல்  - அவன் 

        வேறெவளோடோ  போகிறானே 

 

        அதனால் 

        அழுகிறீர்களோ 

        அழுதிடுக...

 

        கண்ணீர்  வற்றட்டும்  -  என் 

        கண்களே 

        விழிகள்  வறண்டு  வீங்கட்டும்...

   ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

பேணாது  பெட்டார்  உளர்மன்னோ  மற்றவர்க் 

காணாது  அமைவில  கண்.                            -1178.

 

          ஒருசொல்  திருவாய்  மலர்ந்து 

          அன்பே உன்னைக் காதலிக்கிறேன்

          என்று  சொல்வானா...

 

          என்மீது 

          அன்பே  இல்லையோ 

 

         என்னதான்  நானவனை 

         நெருங்கிச்  சென்றாலும்

 

பேணாது 

          என்னை  அவன் 

          நேசிக்க  மறுக்கிறானே...

 

பெட்டார்  உளர்மன்னோ      

          விலகி  அவன்  சென்றாலும் 

          விரும்பி  மகிழ்கிறதே  என்  நெஞ்சு...

 

          ஓராயிரம்  வைரக்கல்  கட்டி 

          ஒய்யாரமாய்ப்  பந்தலிட்டு

          நடுவினில்  தங்கமேடைச் செய்து

          உள்ளத்தில்  வைத்தேன்  நானவனை...

 

          அவனோ 

          ஆசையாய்  ஒருமொழி 

          பேசினானில்லை  என்னிடம் 

          ஆயினும் 

 

மற்றவர்க்  காணாது 

          அவனைக்  காணவில்லையெனில்

 

அமைவில  கண்.

          தூங்காமல்  துடித்திடுமே 

          எனது  கண்கள்...         

     ------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

வாராக்கால்  துஞ்சா  வரின்துஞ்சா  ஆயிடை 

ஆரஞர்  உற்றன  கண்.                                     -1179.

 

        கால்கடுக்கக்

        காத்திருந்தேன்

        சேதி  மட்டுமே  வந்தது...

 

       காதல்  கணவன்  இன்று  வாராரென்று...

       சோகமானது  எனது  இதயம்...

 

வாராக்கால்  துஞ்சா 

        என்னவன்  வரவில்லையெனில் 

        எனக்குத்தானே  சோகம்...

        கண்களுக்கு  என்னவாயிற்று...

 

        எதையோ  இழந்தக்  குழந்தையைப் போல் 

        எனதுக்  கண்கள் தவித்தன      

        ஏக்கம் கொண்ட  கண்கள் 

        தூங்கவும்  மறுத்தன...

 

வரின்துஞ்சா  ஆயிடை 

        மறுநாள்  வந்தான் 

        மடைதிறந்த  வெள்ளமென 

        மனந்திறந்து  அன்போடு 

        மன்னவனும்  நானும்  பேசினோம்...

   பேசிப்பேசியே 

       பேரிருள்  போனதும் 

       உணர்ந்தோமில்லை...

 

       என்கண்களுக்கு 

       என்ன  வேலை...

       என்னோடு  அவையும் 

       தூங்காது  இருந்தனவே...

 

ஆரஞர்  உற்றன  கண்.

       தூங்காதக்  கண்கள்

       மறுநாள் 

       தூக்கம்  வேண்டித்

       தவித்தன...

       

       நான்  என்னவனோடு 

       பேசி  மகிழ்ந்தேன்...

 

       கண்களே 

       அறிவில்லையோ  உமக்கு...

       இரவெல்லாம் 

       உறங்காமலிருந்து - இப்போது 

       உறக்கம் வேண்டித்  தவித்தல்  தகுமோ...

                -----------------------------------------------------------------------

 

 

கற்பியல்                                                                 திருக்குறள்  உரை.

மறைபெறல்  ஊரார்க்கு  அரிதன்றால்  எம்போல் 

அறைபறை  கண்ணா  ரகத்து.                              -1180.

 

        அவரவர் 

        நெஞ்சின்  உணர்வை 

        அவரவரே  அறிதல்  கூடும்...

 

       ஊரார்  எவ்வாறு 

       அறிதல்  கூடும்...

 

       முரசுக்  கொட்டி - ஊர் 

       முழுதெங்கும்  முழங்கிச்

       செய்தி  அறிவித்தல்  போல் 

 

       ஏந்திழையின்  விடிகாலை 

       விழிகள்  பார்த்து 

       மொழியறிவர்  ஊரார்...

 

       நெஞ்சின்  உணர்வைக்

       கண்கள் காட்டிவிடுதே...

          -------------------------------------------------------------------------

 

 

 

 

கற்பியல்                                                                                       அதிகாரம்:119.

                                         பசப்புறு  பருவரல் 

நயந்தவர்க்கு  நல்காமை  தேர்ந்தேன்  பசந்தஎன் 

பண்பியார்க்கு  உரைக்கோ  பிற.                        -1181.

 

        கொஞ்சும்  மொழிகள்  ஆயிரம்  கூறி  

        மஞ்சத்தில்  நெருங்கினார்...

        மயங்கி  நானும் 

        மார்போடு  ஒட்டினேன்...

 

நயந்தவர்க்கு 

       பெரும்பொருள்  ஈட்டவே 

       பெண்ணே 

       நெடுந்தொலைவுச்  செல்கிறேன்

       விண்மீனே 

       விடைக் கொடு  என்றார்...

 

நல்காமை  தேர்ந்தேன் 

       மயங்கி  மன்னவன் 

       மார்பில்  கிடந்த  நானும் 

       என்னவென்று  அறியாமல் 

       சொன்னேன்  சம்மதம்...

 

பசந்தஎன்  பண்பியார்க்கு 

        பிரிவென்பது 

        பெருந்துன்பச்  செயலோ 

        அருகில்  இருந்தப் போது

        அருவியின்  குளிராய்   இருந்தது...

       பிரிந்தப்பின் 

       நெருப்பென  நெஞ்சு  சுடுகிறதே

       பிரிந்தவன்  நினைவால் 

       உருகுதே  உள்ளம் 

       பசலை  என்  மேனியில் 

       படர்ந்ததே...

 

உரைக்கோ  பிற.

       யாரிடம்  சொல்வேன் 

       கூறிடும்  செயலோ 

       நான்  செய்தது...    

            ------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை. அவர்தந்தார்  என்னும்  தகையால்  இவர்தந்தென் 

மேனிமேல்  ஊரும்  பசப்பு.                                       -1182.

 

       உறவென்பதால் 

       உரிமையுண்டு  அவருக்கு 

 

அவர்தந்தார்  என்னும்  தகையால் 

        அந்த  உரிமையில்  - அவர் 

        தந்தார்ப்  பிரிவு...

 

        பிரிவென்பதை  -  ஒரு 

        பொருட்டாய்க் கொண்டு

         

இவர்தந்  தென்

        பெருங்காமத்தில் உள்ளம் 

        உருகச்  செய்யும்

 

மேனிமேல்  ஊரும்  பசப்பு.

        மேனியில் 

        வளமைப்  போக்கி

        கருமைச்  சாயம்  தடவுமிந்த 

        கொடியப்  பசலை  நோய்...

      ---------------------------------------------------------------------------

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

சாயலும்  நாணும்  அவர்கொண்டார்  கைம்மாறா 

நோயும்  பசலையும்  தந்து.                                     -1183.

 

       கார்குழல்  பெண்ணே 

       கருவிழிப்  பெட்டகமே 

       இரு  கன்னமும் - உனக்கு 

       இரு  நிலவோ....

 

       மதுநிரம்பப்  பெற்ற

       இதழிரண்டு  கொண்டவளே

       மாங்கனியின்  சுவையை  -  இள 

       மார்பில்  கொண்டவளே 

 

      இருளில்  நீ 

      இளநகைப் பூத்தால்

      ஒளிப் பிறக்கும்...

 

      நிலவில்லா  நாளில்  - உன் 

      தளிருடல்  ஒளித்  தரும்...

 

      என்றெல்லாம்  என்னைப்  புகழ்ந்தவனே

      உந்தன்  மொழியழகால் 

      எந்தன்  உள்ளம்  மயக்கி 

      என்னை  ஆட்கொண்டவனே...

 

சாயலும்  நாணும் 

      எங்கே  என்  மேனியழகு 

      எங்கே  என்  நாணம் 

      எல்லாமே 

 

அவர்கொண்டார் 

      நீ  கொண்டாயோ... 

      நீ பிரிந்து  சென்றபின் 

      உன்னை  நான் 

      நெஞ்சில்  பார்க்கிறேன்...

 

      நெருப்பின்  ஒளிபோல் 

      ஒளிர்கிறாய்  அழகாய்...

     என் 

     உள்ளத்தில் நீ 

     உலா  வரும்  போதெல்லாம் 

     அழகனே  என  நான்  அழைப்பேன்...

 

      ஆண்மகனே 

      வெட்கங் கொண்டு நீ 

      தலை  கவிழ்கிறாயே...

      என்னழகை  நீ 

      அள்ளிக்  கொண்டாயோ 

      எனது  நாணத்தையும் 

      எடுத்துச் சென்றாயோ 

கைம்மாறா 

      மாறாய்  நீயெனக்கு 

 

நோயும் 

      காமநோய்த்  தந்தாயோ

      கட்டுக்குள்  அடங்காத 

      காதல்  நோயால்  -  நானும் 

      நாணம்  துறந்து  புலம்புகிறேன்

 

பசலையும்  தந்து.

      உன்னால்  புகழப்பட்ட  -  என் 

      தளிர்மேனியில் இன்று 

      ஒளியில்லை...

 

      பசலைப்  படர்ந்து

      மெலிந்தேன்...

      மெலிவையும்  நீதான் 

      தந்தாயோ...

             -------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

உள்ளுவன்  மன்யான்  உரைப்பது  அவர்திறமால் 

கள்ளம்  பிறவோ  பசப்பு.                                           -1184.

 

     இறுகத்  தழுவி

     இனியபல  பேசுவார்...

     கன்னத்தில்  முத்தமிட்டு

     காதோரம்  கடிப்பார்...

     இதழை  கவ்வுவார்

     இடையைத்  தடவுவார்

     இன்னும் பல செய்து

     இன்பம்  ஊட்டுவார்...

     அதனை  நான் 

 

உள்ளுவன்  மன்யான் 

     அல்லும் பகலும் 

     நினைவில்  கொண்டு  மகிழ்வேன் 

 

உரைப்பது  அவர்திறமால் 

     உல்லாசக்  கட்டிலில்  - இன்பத்தின் 

     எல்லையை 

     எல்லையின்றி  வரைந்தார்...

 

     எவரிடம்  பேசினாலும் 

     அவர்  இயல்புதனை  பேசவே 

     என்னுள்ளம்  விழைகிறது...

கள்ளம்  பிறவோ  பசப்பு.

     எண்ணத்திலும் 

     என் சொல்லனைத்திலும் 

     என்னவரே  இருக்கிறார்...

 

     ஆயினும் 

     கொடியப்  பசலையே - உன் 

     நெஞ்சில்  வஞ்சனையோ - சொல்!

 

     கொஞ்சமும்  இரக்கமின்றி 

     எனை 

     வாட்டுவதேன்...

                 ----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

உவக்காண்எம் காதலர்  செல்வார்  இவக்காண்என் 

மேனி  பசப்பூர்  வது.                                                          -1185.

          நாளெல்லாம்  எனக்கு 

          நலம்பல செய்தார் 

         போய்வருகிறேன்  கண்ணே 

         என்றுச்  சொல்லி

         என்னிடம்  விடைப்  பெற்றுச்  செல்கிறார்

உவக்காண்எம்  காதலர்  செல்வார் 

          அதோபார்  தோழி - என் 

          அன்புக்  காதலர் செல்வதை...

         ஆகா 

         பார்வையிலிருந்து மறைந்தார்...

இவக்காண் 

          அட 

          என் தோழியே 

          இங்கே  பார்...

என்  மேனி  பசப்பூர்  வது.

          என் மேனியைப் பார் 

          என்னவன்  பிரிந்து 

          சிறு நேரத்திலேயே 

          என் மேனி பசந்துவிட்டதே 

          பார்த் தோழி 

          பசப்பூர்வதை...  

             --------------------------------------------------------------------------

கற்பியல்                                                         அரங்க  கனகராசன் உரை.

விளக்கற்றம்  பார்க்கும்  இருளேபோல்  கொண்கன் 

முயக்கற்றம்  பார்க்கும்  பசப்பு.                                  -1186.

 

         ஒளிமறைவது  எப்போதென      

         ஒளிந்து  நின்று  பார்க்குமாமிருள்...

 

         இருளைப்  போல்

         என்னவன் 

         என்னைத் தழுவித் தழுவியே

         எல்லையின்றி  இன்பம்  தருவான்...

 

         அவன்  தழுவா 

         சிறு இடைவெளியை 

         எதிர்பார்த்துக்  காத்திருப்பது

         எதுவெனில் 

         அது பசலைத்தான்...

 

         தழுவாத 

         சிறு இடைவெளியில் 

         விரைந்து  வந்து 

         என்மேனியை      

         வாடச்செய்திடும்  பசப்பு...   

     -------------------------------------------------------------------------

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள்  வற்றே  பசப்பு.                                -1187.  

 

           ஆடை  ஏதுமின்றி 

           அவரும்  நானும் 

           ஓருடலாய்  ஒட்டிக்  கிடந்தோம்...

 

           காற்றும்  நுழைய  இடந்தராமல் 

           காதலனொடு  கெட்டியாய்

           ஒட்டிக்  கொண்டேன்...

 

           என்னிலை  அறியாமல் 

           ஏனிந்த  இயற்கை 

           மோசம்  செய்கிறதோ...

 

           இயற்கைதனை  கழித்திடவே 

           சிறுநேரம்  அவரைவிட்டு  நகர்ந்தேன்...

 

           அவ்வளவில் - அட 

           அந்த சிறுவெளியில் 

           காமவேட்கை 

           நெஞ்சில்  தோன்றி 

           பசலை  நோய் 

           மேனியில்  படர்ந்ததே...

            --------------------------------------------------------------------------

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பசந்தாள்  இவள்என்பது  அல்லால்  இவளைத் 

துறந்தார்  அவர்என்பார்  இல்.                         -1188.

 

           நீராடி  நான் 

           நிலைக்கண்ணாடி எதிரில்  நின்று 

           என்னை  நான்  பார்ப்பேன்...

           பள்ளியறையில் 

           கிள்ளையே உன்னை  நான் 

           அள்ளவா  என்றுக்  கூறிக்

           கிள்ளிக்காயம் பல செய்தான்...

 

           இதழ்  மீதும்  -  என் 

           மார்பின்  மீதும் 

           பல்பதித்து  வடுச்  செய்தான்...

           காயமும்  காயவில்லை 

           வடுவும்  நீங்கவில்லை 

           வடிவழகன்  என்னை  நீங்கினானே...

 

           அவன் செய்தக்  காயம்  ஆடியில்  கண்டு 

           கண்கள்  நாணும்...

           இனியொரு  முறை 

           இதழ்மீது பல் பதிக்க  வருவானோ என 

           இதயம்  ஏங்கும்...

           ஏக்கத்தில்  என்  மேனி 

           நிறமிழந்து 

          உருவும்  மாறியதே...

 

பசந்தாள்  இவள்என்பது  அல்லால் 

           காமம்  கொண்டு  நெஞ்சில்  இவள் 

           ஏங்குகிறாள்  என்றே  என்னை 

           ஏளனம்  செய்வோரே 

           என்ஒரு சொல்  கேளீரோ...

 

இவளைத்  துறந்தார்  அவர்என்பார்  இல்.

           எனைவிட்டு 

          என்னவன்  பிரிந்தான்...

          அதனால் 

          சிதிலமானது  நெஞ்சு 

           சீரிழந்தது  மேனி  என 

           யாரும்  நீவிர்  கூறீரோ...

      -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

பசக்கமன்  பட்டாங்கென்  மேனி  நயப்பித்தார் 

நன்னிலையர்  ஆவர்  எனின்.                         -1189.

 

      தழுவல்  வேண்டி  -  என் 

      தளிர்மேனித்

      தளர்ந்துப்  போகட்டும்...

 

      மஞ்சத்தில்  நான் 

      மன்னவனிடம்  பெற்ற 

      இன்பம்  வேண்டி 

      என்மேனி  நூலாய்  மெலியட்டும்...

 

      என் காதலன்  கரசூடு  வேண்டி 

      இடையும்  இன்னபிறவும் 

      இல்லாமல்  போகட்டும்...

 

      பெண்ணே  பேரழகே 

      பூவே  பூஞ்சிறகே 

      மானே  மயிலே  என 

      மயக்குமொழி ஆயிரம் பேசி - என் 

      மன்னவன் 

      பள்ளியில்  இன்பம் 

      அள்ளித் தந்து 

      பிரிவும்  செய்தான்...

 

      பிரிவுத் துயரில்  நான்  வாடி 

      உருகி  உருமாறினாலும் 

      அவர் வாழ்வு  நலம்  பெறுமெனில் 

      அவர் வாழ 

      நான்  வீழ்கிறேன்...

            ------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                          அரங்க  கனகராசன்  உரை.

பசப்பெனப்  பேர்பெறுதல்  நன்றே  நயப்பித்தார் 

நல்காமை  தூற்றார்  எனின்.                             -1190.

 

           பைங்கிளியென்றும் 

           பால் நிலவென்றும் - என்னைப்

           பேர்  வைத்தழைப்பர்

           இன்றோ 

 

பசப்பெனப்  பேர்பெறுதல்  நன்றே 

          பசலை  நோய்  பீடித்தவள் 

          என்றே  குறி  செய்தனர்... 

          இதுவும் 

          நன்று  என்றே 

          என் நெஞ்சுக் கூறுகிறது...

 

நயப்பித்தார்  நல்காமை 

         நயமாய்  என்னோடுப் பேசி - காதல் 

         வயத்தில்  ஆழ்த்தி 

         பிரிந்தான்  ஒருநாள்...

 

          பிரிந்தவன்  -  என் 

          பெருந்துயர்த்  துடைக்க

          எந்நாளும் 

          வந்தானில்லை...

 

தூற்றார்  எனின்.

          ஆயினும்  அவனை 

          அடுத்தவர்  எவரும் 

          பேதை யொருத்தியின் நெஞ்சைக்

          கெடுத்தவனிவனென்று  

          கெட்டச் சொல் கொண்டு 

          ஏதும்  தூற்றாதிருப்பர்  எனின் 

          பசலை நோய் பீடித்தவள் என்று 

          என்னை  எவர்  அழைத்திடினும்  நன்றே...

           ------------------------------------------------------------------------

கற்பியல்                                                                                       அதிகாரம்:120.

                                                 தனிப்படர்  மிகுதி

தாம்வீழ்வார்  தம்வீழப்  பெற்றவர்  பெற்றாரே

காமத்துக்  காழில்  கனி.                                    -1191.

                                                            காழ் = விதை.

           இரு  சக்கரங்களில் 

           ஒரு சக்கரம் 

           பழுதெனில் 

           பயன்படுமோ  வண்டி...

 

          இருசக்கரமும் 

          சரிநிலையெனில் 

          உருள் பெருநெடுந் தேரும்

          மருவின்றி  ஓடுதற்போல் 

 

தாம்வீழ்வார்            

           அவர்மீது 

           நான்  காதல் கொண்டேன்...

 

தம்வீழப்  பெற்றவர்

           என்மீது 

           அவரும்  காதல்  கொண்டார்...

 

பெற்றாரே

           இருவர்  காதலும்  இனிதே 

           நிறைவேறியது...

காமத்துக் 

         அந்த  காதல்  கலையை 

         எந்த சொல் கொண்டு 

         எப்படி  புகழ்வேன்...

 

காழில்  கனி.

         எளிதில்  சுவைத் தரும் 

         பழம் போல் 

         எம்காதல் 

        இன்பம் கோடி  தருதே...

           ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன்  உரை.

வாழ்வார்க்கு  வானம்  பயந்தற்றால்  வீழ்வார்க்கு 

வீழ்வார்  அளிக்கும்  அளி.                                         -1192.

        மழைத்துளி  இல்லையேல் 

        மண்ணில்  பசும்புல்லும் 

        முளை  விடாதென்பர்...

 

வாழ்வார்க்கு 

        வாழும்  உயிர்க்கெல்லாம் 

 

வானம்  பயந்தற்றால் 

         வானம்  பொழிந்து 

         வாழச்  செய்வதுப்  போல்

 

வீழ்வார்க்கு 

          அன்பே  அமுதே 

          ஆசைக்கிளியே அழகுமயிலேயென 

          கோதையிடம் 

          காதல்  செய்தான்...

         ஆதலால் 

 

வீழ்வார்  அளிக்கும்  அளி.

           கோதையும் 

           காதல்  தந்தாள்...

           அன்பெனும்  மழை 

           ஆங்கே  ஆனந்தமாய்ப்  பொழியுதே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

வீழுநர்  வீழப்  படுவார்க்கு  அமையுமே 

வாழுநம்  என்னும்  செருக்கு.          -1193.

       என்  நெஞ்சின்  நடுவில் 

       அவளை  வைத்தேன்...

       அவளின்றி  நானில்லை 

       அவளே  எனக்கு  வாழ்க்கைத் துணையென்று

       அல்லும்  பகலும் 

       அவள்  நினைவில்  புலம்பினான்... 

 

        அவனது 

        ஆசை  நெஞ்சறிந்த  அவளும் 

        ஆசைக்  கொண்டாள் அவன்பால்...

 

        காதலர்  இருவர் 

        காதலும்  கைக் கூடியது...

        அதுவே  மெய்க்  காதல்...

 

        இனி  காதலிருவர்  வாழ்விலும் 

        இடர் எது வரினும் 

        துணிவுடன்  எதிர்க்  கொள்வர்...

 

        வாழ்வில்  வெற்றிக்

        காண்போமெனும்

        சூளுரை  நெஞ்சில் 

        உறுதியாய்  தோன்றுமே  இருவருக்கும்... 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

வீழப்   படுவார்   கெழீஇயிலர்  தாம்வீழ்வார் 

வீழப்   படாஅர்        எனின்.                            -1194. 

           அவனை  நெஞ்சின் - ஒவ்வோர் 

           அணுவிலும்  கொண்டேன் 

           அவனின்றி  நானில்லை 

           அவனே  எனது  வாழ்க்கைத் துணை...

           காணும்  காட்சி  எதிலும்  -  அவனே 

           கண்ணுக்குத்  தெரிகிறான்

           ஆயினும் 

           என்  தோழி  சொல்கிறாள்...

           உன்காதல் 

           ஒருபோதும் 

           நிறைவேறாது  என்றாள்...

           ஏனென்றேன்...

 

           அன்புடன்  அவனை  நீ 

           காதல்  செய்கிறாய் 

           ஆயினும் 

           அவன்  உன் மீது 

           காதல்  கொண்டானில்லையே...

           இது 

           ஒருதலை  காதலன்றோ 

           ஒருபோதும் 

           நிறைவேறுதல்  ஆகாதே  என்றாள்...

கற்பியல்                                                                            திருக்குறள்  உரை.

நாம்காதல்  கொண்டார்  நமக்கெவன்  செய்பவோ 

தாம்காதல்  கொள்ளாக்  கடை.                             -1195.

 

           ஆசையோடு  ஒருசொல் 

           பேசமாட்டாரா  என்று  -  பெரு 

           மூச்சு  விடுவேன்  நான்...

 

           அன்போடுத் தடவி

           அணைக்க  மாட்டாரா என்று - நெடுங் 

           கனவுக்  காண்பேன்  நான்...

 

நாம்காதல்  கொண்டார் 

           கோபம்  கொண்டு  அடித்தாலும் 

           கோமான்  மீது  -  என் 

           காதல்  மாறாது...

 

           உருட்டு  விழியால்  எனையவர் 

           மிரட்டினாலும் - ஓர் 

           அழகதில்   காண்பேன்...

 

நமக்கெவன்  செய்பவோ 

           விழாவொன்று  வந்தால் 

           பகட்டாய்  ஆடை  அணிகள் 

           பணிப்பெண்ணிடம்  தந்தனுப்புவார்...

 

           ஆடையணி மணிகளிலா - என் 

           ஆசைத்  தீரும் - அவைகள் 

           ஆற்றுமோ  என்  புண்மனதை 

 

தாம்காதல்  கொள்ளாக்  கடை.

          நான்  வேண்டுவது - என்னவனின் 

         காதலல்லவா - அதுவன்றி 

         ஏதும்  நன்மை செய்யா  எனக்கு...

             ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

ஒருதலையான்  இன்னாது  காமம்காப்   போல 

இருதலை  யானும்  இனிது.                              -1196.

 

           தோழி 

           உன்  காதல்  சொன்னேன் 

           அவரோ 

           மறுத்து 

           உன்னை  மறக்கவும்  சொன்னார்...

           கேளடி 

 

ஒருதலையான்  இன்னாது 

           உன்மீது  விருப்பமில்லை  அவருக்கு 

           நீயேன்  விரும்புகிறாய்  அவரை!...

          இதனை 

          ஒருதலைக்காதல் என்பர் 

          பெருந்துன்பம்  தருமே 

          கேளடி  நான்  சொல்வதை 

 

காமம் 

           காதல்  என்பது 

           தோழியே   கூறுகிறேன்

           கேளடி...

 

காப்  போல

           காவடி  அறிவாயே  தோழி 

இருதலை  யானும்  இனிது.

           அதன் 

           இருபுறமும் எடை 

           சரிநிலையிலிருக்கும்...

 

           ஒருபுறம்  சீர்கெடினும் 

           அருமைக்   காவடிப்

           பெருமைப்  போகும்...

 

           காதலும் 

          ஆண்பெண்  இருவரிடைப்

          பூத்தால்  அழகு!...

        -------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பருவரலும்  பைதலும்  காணான்கொல்  காமன் 

ஒருவர்கண்  நின்றொழுகு  வான்.                  -1197.

             காதலே  காதலே 

             கண்பார்வை  என  ஒன்று 

             உண்டோ  இல்லையோ  உனக்கு...

பருவரலும்  பைதலும் 

             அவளை  நினைத்து    நினைத்துத்

             தவிக்கிறேன்   -  ஆசையால் 

             துடிக்கிறேன்...

 

காணான்கொல் 

             காதலே 

             காணாயோ  நீயெனை...

 

காமன் 

           காதலே 

 

ஒருவர்கண்  நின்றொழுகு  வான்.

            எவரேனும்  ஒருவரிடத்தில் 

            நீ  நின்று - அவர் எண்ணத்தை 

            ஈடேற்றுகிறாய்...

 

            எம் போன்றோரைக்

            காணாதுச்  செல்கிறாய்   

            கண் துஞ்சாதுத்  தவிக்கிறோம்  யாம்...

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

வீழ்வாரின்  இன்சொல்  பெறாஅது  உலகத்து 

வாழ்வாரின்  வன்கணார்  இல்.                   -1198.

 

        பேரெழில்  பெண்ணே                               

        வேல்விழி  கண்ணே 

        ஏழிசைப் பண்ணே

        நானுன்  அடிமை 

        கேளொரு சொல் நீயும்...

 

        என்காதல்  நீ  கொள்ளவே 

        உன்பாதம்  நான்  பணிந்தேன் 

 

        உனக்கோரிடரும்  நேராமல் 

        இமைப்போல் காப்பேனென 

        இன்னும் இனிய  பல  சொன்னார்...

 

       செவிமடுத்து  -  அவர் 

       சொல் கேளாது விடுத்தேன்...

       பகட்டும் 

       பல பொய்யும்  பேசியவனை 

       முழுதாய்  நம்பி 

       எனைக்  கொடுத்தேன் - கெடுத்தேன்...

 

       நாடி வந்தவனை 

       நாடாததால்  -  அவன் 

       வேறொருத்திக்குத்  துணையாயினன்

       பார்புகழ வாழ்கிறான்...

   

   நானோ  சீரிழந்து 

      பேரிழந்து - நல் 

      வாழ்வுமிழந்தேன்...

 

     எனைப்போல் - உலகில் 

     எவருமுளரோ...

     ஆயும்  மதியின்றி 

     வாழும்  எனைப்போல் 

     மூடர்  எவருமிலர்...

      -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

நசைஇயார்  நல்கார்  எனினும்  அவர்மாட்டு 

இசையும்  இனிய  செவிக்கு.                   -1199.

          நெஞ்சினை  அவனிடம் 

          தூதுவிட்டு 

          மஞ்சத்தில்  நான்  மயங்குவேன்...

 

         அவனிருக்குமிடம்  தேடிச் சென்று 

         விழிகளை  அவன் மீது 

         உலவ விடுவேன்...

 

         மெல்லியப்  புன்னகையாலவன்

         உள்ளத்தை  அள்ள  முயல்வேன்

         உதறி  மறைவான்...

 

         வாய்த்திறந்தும் ஓர்நாள் 

         காதல் மொழிக்  கூறினேன் 

         காணாதே  கனவு  என்றான்...

 

         ஏங்கி  நான்  அவனிடம்  - என் 

         ஏக்கம் மொழிந்தேன் - அவனோ 

         பேசாதே  போ  என்றவன் 

 

நசைஇயார்   நல்கார் 

         இனி 

         எனைத்  தேடி  வருவானோ 

         என்னிதயம்  தொடுவானோ 

         அன்பு மொழிச்  சொல்வானோ

 

எனினும் 

         மாட்டான்...

         ஆயினும் 

 

அவர்மாட்டு 

         என்னை  ஏற்க  மறுத்துவேறு

        பெண்ணொருத்தியோடு 

         பெருவாழ்வு  வாழ்கிறான்...

 

இசையும் 

          நல்லோர் போற்றும்படி

          இல்லறம்  செய்கிறான் 

          எல்லாரும் நல்மொழிச்  சொல்கின்றனர்...

 

இனிய  செவிக்கு.

           அம்மொழிக் கேட்டு - என் 

           செவியிரண்டும் 

           இன்னிசைக் கேட்டதுப்  போல

           இன்புறுதல்  செய்கிறதே...

 

           எங்கிருந்தாலும் 

           என்னவன்  நலமாய்  வாழட்டும்...

         --------------------------------------------------------------------------

கற்பியல்                                                                      திருக்குறள் உரை.

உறாஅர்க்கு  உறுநோய்  உரைப்பாய்  கடலைச் 

செறாஅஅய்  வாழிய  நெஞ்சு.                      -1200.

 

           பசியேது  தூக்கமேது

           பகலேது  இரவேது

           பாழும்  நெஞ்சே  நீ 

           தூதுபோனாய் அவனிடம் 

           காதல்  சொல்லவே...

          காதிலும்  கொள்ளாமல்  -  உன் 

          கண்ணீரையும்  காணாமல் 

          உன்னை  மறுத்தான்...

 

உறாஅர்க்கு  உறுநோய்  உரைப்பாய் 

          வெறுத்து  ஒதுங்கியவனை - நீ 

          விரும்பிச் சென்று

          உரைத்தாய்  காதல்!...

           ஒருதலைக்காதல் 

           ஒருபோதும்  கூடாதே...

           அறியாமல்  நீ  -  அவனிடம் 

           மீண்டும்  மீண்டும் 

           மன்றாடுதல்  செய்தலைவிட 

 

கடலைச்  செறாஅஅய்  

           கடலலையை அடக்கு 

           கடல்நீரைத்  தூர்த்து 

           கண்கவர்  மாளிகைக் கட்டு...

 

வாழிய  நெஞ்சு.

           இயலுமோ 

           இயம்பிடு  மடநெஞ்சே...

           ஒருதலைக்காதல் 

           உய்வுத்  தராதே அறியாயோ...

          அறியாய்  நீயெனில் 

           கடலைத்  தூர்க்கச்  செல்...

          போநெஞ்சே 

           வாழ்த்துகிறேன்  உன்னை 

          நீ  வாழியவே...

     -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             அதிகாரம்:121.

                                    நினைந்தவர்  புலம்பல் 

உள்ளினும்  தீராப்  பெருமகிழ்  செய்தலால் 

கள்ளினும்  காமம்  இனிது.                    -1201.

 

             ஆலிழை  வயிறோ 

             நானதில்  வரைவேன்  நாவாலொரு 

             ஓவியமென்று  வரைந்தான்...

 

             சொல்லடி  சொக்கத் தங்கமே 

             வெல்லக்கட்டியோ நின்  மார்பென்று

             பல்லால்  கடித்தும்  விட்டான்...

 

             தொப்பூழ்த்  தொடுவான்

             தோகை  என் இடைதனில் 

             வேகமாய்க்  கிள்ளுவான்...

 

             காதலன்  செய்தது  கொஞ்சமா...

 

உள்ளினும் 

             கோடிட்டுச்  சொல்லவோ

             நானதனை 

             நினைக்குந்தோறும் 

 

தீராப்  பெருமகிழ்

             நெஞ்சம்தனில் இன்பம் 

             நெடுநேரம்  ஆனந்தம் 

 

செய்தலால் 

             தடையேதுமின்றி 

             மடை திறந்த  வெள்ளமாய்  -  மன 

             மகிழ்ச்சியில்  திளைப்பேன்...

             நினைத்தாலே 

             நெஞ்சில்  இன்பம்  பெருகுதே...

 

கள்ளினும் 

             குடித்தால்  மட்டுமே 

            குதூகலம்  கள்ளில்...

 

காமம்  இனிது.

            நினைத்தாலே 

            இன்பம்  தருவது  காமமல்லவா

             ஆதலால் 

             காமம்  இனிது 

             காமம்  இனிது 

             காலமெல்லாம்  காமம்  இனிது...

           -----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் 

நினைப்ப  வருவதொன்று  இல்.                           -1202.

            அடிப்பார்  -  செல்லமாய் 

            இடிப்பார் 

            கிள்ளுவார் 

            அள்ளி  அணைப்பார்...

 

           உச்சிக்கும் உள்ளங்காலுக்கும் 

           உதட்டால்  பாதை  சமைப்பார்...

           நாவால் நாவை  நீவி

           மோகவீணை  மீட்டுவார்...

 

எனைத்தொன்று 

           என்னவென்பேன்  -  அவன் 

           எது  செய்தாலும்

 

இனிதேகாண் 

           இன்பங்கோடி  என்பேன்...

 

காமம்தாம்  வீழ்வார்  

           என்னை  மயக்கிய  மன்னவன் 

           ஏழுகடல்  தாண்டி  இருப்பினும் 

 

நினைப்ப   வருவதொன்று  இல்.

           நான் 

           நினைத்த  மாத்திரத்தில் 

           என் 

          எண்ணத்தில்  உலா  வருவான்...

           கன்னல்  போல் 

          இன்பம்  பொழிவான் 

           இதுபோல் 

           இனியச் செயல் எதுவுமில்லை...

               -------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                      திருக்குறள் உரை.

நினைப்பவர்  போன்று  நினையார்கொல்  தும்மல் 

சினைப்பது  போன்று  கெடும்.                               -1203.

             தோழியே  தோழியே 

             பாரடி  என்  நிலையை 

             அடடா 

             என்ன சொல்வேன்...

             என்னிதயம்  தேன் மழையில்  நனைகிறதே...

             அட 

             என்னயிது 

             என்னுள்ளம்  ஏன் வாடுகிறது...

             ...

 

நினைப்பவர்  போன்று 

            என்காதலர் 

            எனை  நினைத்தார்..

            ஆனால்...

நினையார்கொல் 

             நினைத்த  வேகத்தில் - என் 

             நினைவை  மறந்தார்  போலும்...

 

            நினைத்தாரா 

            நினைப்பை  மறந்தாரா 

            பேதைநீ  பேசுவதென்ன...

            ஏதும்  புரியவில்லை  எனக்கு...

           தோழி 

           உணர்வை  நீ உணராமல் 

           குறைக்  கூறுகிறாய்...

           முன்னர் சொன்னாளே நம் தோழி 

           மறந்தனையோ 

           தொலைவில்  இருப்பினும் 

           அழகுமகன்  நினைத்தால் 

          இங்கு 

           அளவின்றித்  தும்மல் வெளிப்படும்  என்பாளே...

 

           ஆம் 

 

தும்மல்  சினைப்பது  போன்று 

          தும்மல்  வருவது போல்

          உணர்ந்தேன்...

          ஆனால் 

 

கெடும்.

         தும்மல்  வெளிப்படவில்லையே 

         சொல் தோழி!

         நினைத்தவர் 

         நினைத்த  மாத்திரத்தில் 

         எனை  மறந்தாரோ..

 

         காமநோய்க் கொண்டு

         வீணில் 

         மனபீதியுற்றுள்ளாய்...

 

         அறிவின்றித் தோழி 

         உரைத்ததை - நீ 

         ஆய்வின்றிக் கொண்டாய்

         உளராமலிரு 

         உறங்கச்  செல்வோம்  வா...

        ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து 

ஓஒ  உளரே  அவர்.                                                   -1204.

               

       அசட்டுக்  கேள்வியென - என் 

       அய்யப்பாட்டை 

       அலட்சியம்  செய்யாதே!...

        

        அன்புத் தோழியே

        சொல்விடை  - நீ 

        கள்ளமின்றி...

 

யாமும்  உளேங்கொல்  அவர்நெஞ்சத்து 

         நாயகி  நானும் 

         நாயகன்  நெஞ்சிலிருப்பேனா...

         நானறியாமல் விழிக்கிறேன் 

         ஆயினும் 

 

எந்நெஞ்சத்து 

         என் நெஞ்சில் 

         என்னவன்  எப்போதும்

 

ஓஒ  உளரே  அவர்

          இருக்கிறாரே 

          ...  குறும்புக்காரன் - என் 

          நெஞ்சில்  புகுந்து 

          ஏதேதோ  செய்கிறான்...

 

          சொல்  தோழி 

          அவர்நெஞ்சில்  நானும் 

          அன்புத் தொல்லை செய்வேனா... 

     ------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் 

எந்நெஞ்சத்து  ஓவா  வரல்.                                   -1205.

           

           தோழி 

           விந்தையை  கேளடி

           வியப்பொருப் புறம்

           விரகமோ  மறுபுறம்...

 

          உருகும்  உள்ளத்தோடு - நான் 

          உரைப்பதைக்  கேள்...

 

          ஆசைக் கொண்டு - அழகன் 

          நினைவாய்  வாடுகிறேன்...

          நேசமாய்  அவன் நெஞ்சில் 

          ஓசையின்றி  நுழைய நான் 

          போனாலும் 

 

தந்நெஞ்சத்து 

            அவர் தம் 

            நெஞ்சின்  கதவை  மூடி 

 

எம்மைக்  கடிகொண்டார் 

            தடைச்  செய்தார்

            தளிர்  நான்  தவிக்கிறேன்...

 

நாணார்கொல்       

           தோழி 

           என்னைத்  தடை  செய்தவரை

           என்னவென்று  சொல்வேன்...

 

           நாணமென்பது  -  என் 

           நாயகனுக்குத்  துளியுமில்லையோ 

 

எந்நெஞ்சத்து  ஓவா  வரல்.

          இருந்தால் 

         கிள்ளை  என்  நெஞ்சில்

          துள்ளிக் குதித்து  நுழைவாரா   

           

         என்னைத்  தடை செய்தவர் 

         என்நெஞ்சில் 

          தடையின்றி நுழைகிறார்...

 

          வெட்கமில்லையோ 

          வெண்மாறனுக்கு...

       ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

மற்றியான் என்னுள்ளேன் மன்னோ அவரொடுயான் 

உற்றநாள்  உள்ள  உளேன்.                                     -1206.

 

           தோழி 

           கண்ணாளன்  வரும்  திக்குநோக்கி 

           கண்கள்  தேய்ந்தன 

           நிறமும்  இழந்தேன் 

           பிரிவால்  மெலிந்தேன்...

 

           உண்ணவும்  மனமில்லை 

           உறக்கமோ  துளியுமில்லை...

 

மற்றியான்  என்னுள்ளேன்  மன்னோ 

           ஆயினும்  தோழி 

           நான் 

           உயிர் வாழ்வதெப்படியென

           அறிவாயா  தோழி 

 

அவரொடுயான்  உற்றநாள் 

           அவரோடு  நான் 

           அகமகிழ்ந்த  நாள்தான்  தோழி 

           அன்பு மொழியால் 

           என்னிதயம்தனை  பூவாக்குவார்...

 

           ஆசையாய்த் தொட்டு - என் 

           மேனிதனில் 

           தேன்  சொறிந்தார்...

 

            இதழைக்கவ்வி இசைச் செய்வார்

            இடையைத் தடவி

            இன்பத்தின் எல்லையைக் காட்டுவார்...

 

            தோழி 

            கால்விரலுக்கும்  முத்தமிடுவார் - தோகை 

            தோள் தொட்டுக் 

           காவியம் வரைவாரடி...

 

உள்ள  உளேன்.

           அவ்வினிய  நாட்களை 

           என்னிதயம்  நினைந்து  மகிழ்வதால் 

            இன்னமும்  நான் 

            உயிர்  வாழ்கிறேன்  தோழி...           

        --------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                     அரங்க  கனகராசன் உரை.

மறப்பின்  எவனாவன்  மற்கொல்  மறப்பறியேன் 

உள்ளினும்  உள்ளம்  சுடும்.                               -1207.

 

             ஆசைமொழி  பல  பேசினான் 

             கூடி  உன்னோடு  நெடுநாளிருந்தான்...

             மோசக்காரன்  போல் 

             போனவன்  போனவன்தான்...

 

             காலம்  பலவானதே 

             கோதை நீயேனின்னும் - அவன் 

             பாதை  நோக்குகிறாய்..

             பேதை  நீயவனை  மறந்துவிடு...

 

             மறந்துவிடச் சொல்கிறாயா - என்னை 

             மடிந்துவிடச் சொல்கிறாயா

             என்னவன்  பிரிவால் 

             என்சோகம்  பலகோடி 

 

             மங்கை  என்  மனதுக்கு 

             நங்கை  நீ  மருந்தாகாமல் 

             மன்னவனை  மறந்துவிடென

             நஞ்சு மொழி  மொழிகிறாயே...

 

மறப்பின்  எவனாவன்  மற்கொல் 

             என்றேனும்  ஒருநாள்  வருவார் 

             என்மேனித் தொடுவார்

             என்தோள்  தடவுவார் 

             என்று நான்  காத்திருக்க 

             என்ன நீ பேசுகிறாய் 

             உன் பேச்சுக் கேட்டு

             என்னவனை  மறந்தால் 

             என்னிலை  என்னவாகும் 

             அறிவாயா...

 

மறப்பறியேன் 

             மாளாத்துயரில் - என்மனம் 

             தேய்ந்தாலும் 

            தேவனை  நான்  மறவேன்...

 

உள்ளினும்  உள்ளம்  சுடும்.

            மறத்தல்  என்பதனைஎன் 

            மனம்  நினைத்தாலும் 

            என்னுள்ளம் 

            என்னைச்  சுட்டுவிடும்...  

       ------------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                                     திருக்குறள்  உரை.

எனைத்து நினைப்பினும்  காயார்  அனைத்தன்றோ 

காதலர்  செய்யும்  சிறப்பு.                                        -1208.

 

              காலையிலும்  மாலையிலும்  நினைப்பேன் 

              பகலிலும் பால்நிலவிலும்  நினைப்பேன் 

              சுடுவெயிலோ  கடுங்குளிரோ 

              அடைமழையோ  அடல் பனியோ

 

எனைத்து  நினைப்பினும் 

             எதுவாயினும்  எந்நேரத்திலும் 

             நினைத்த நேரத்தில் நினைத்தாலும் 

 

காயார் 

             என்னவன்  எப்போதும் 

             என்மீது கொள்வதில்லைக் கோபம்...

 

அனைத்தன்றோ 

            இதுவன்றோ 

 

காதலர்  செய்யும்  சிறப்பு.

            காதலர்  ஒருவர்க்கு  ஒருவர் செய்யும் 

            ஒப்பற்ற   அன்பு...

       -----------------------------------------------------------------------------

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

விளியுமென்  இன்னுயிர்  வேறல்லம்  என்பார் 

அளியின்மை  ஆற்ற  நினைந்து.          -1209.

                                                    விளிதல்  = அழிதல் 

                                                     அளி          = இரக்கம்.

        நிலவே  நிலவே 

        நெடுநாள்  நீ  வாழ்கிறாய்!

        அழகு நிலவே  என்றே 

        என்னையும்  என்னவர்  அழைப்பார்...

 

        நெடுநாள்  வாழும்  நிலவே 

        சிறுநாள்தானே  என் வாழ்நாளும் 

        ஆனால் 

        அழிகிறதே  என்னுயிர்...

 

         பனிப் பொழியும் வானமே - என் 

         தவிப்புனக்குப்  புரிகிறதா 

         கண்ணே 

         கடல் கடந்துச் செல்கிறேன்

 

          கண்மணியே 

          அணிமணி பல ஈட்டிவருவேன்...

          கலங்காதே  கண்ணீர்த்  துளிர்க்காதே

          உன் நெஞ்சம்  துடித்தால் 

          என் நெஞ்சம்  வெடிக்கும்...

 

          நீ வேறு நான் வேறல்ல  என்றார்...

          என்னைத் தனியேவிட்டு

          இதயம்  தவிக்கச் செய்து 

          நெஞ்சை வெடிக்கச்  செய்து சென்றார்...

 

          குளிர்ச் செய்யும்  இரவே - என் 

          குரலோசை கேட்குதா

           

          ஆறுதல்  மொழிதனை 

          ஆசையாய் பலச் சொல்லி

         வேகமாய்ச் சென்றவன்

 

          துடியிடையாள்  ஒருத்தி 

         துக்கங்கொண்டு 

          துடித்திருப்பாளென்ற 

          துளியெண்ணமேனும் - என் 

          துணைவனுக்கில்லையே 

 

          இரக்கமில்லாதவனை எண்ணி 

          என்னுயிர்  அழிகிறதே...

         --------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

விடாஅது  சென்றாரைக்  கண்ணினால்  காணப் 

படாஅதி  வாழி  மதி.                                           -1210.          

              செல்லாதே  -  என்நெஞ்சை   

              கொல்லாதே  என்றேன்...

 

              மாறு 

              சொல்லாதே  -  என்சொல்லை 

              தள்ளாதே  என்றான்...

 

              எல்லை  நீங்கிச் சென்று

              பல்லாயிரம்  ஈட்டுவதேன் 

              என்னருகில்  நீயிருந்தால் 

              பொன்னும்  மணியும்  ஈடாகுமோ 

              கண்ணாளனே 

              எங்கும் செல்லாதே  என்றேன்...

 

விடாஅது 

              என்சொல் கேளாது 

              தன்னிலை  மாற்றாது 

 

சென்றாரைக் 

              என்னைவிட்டுச்  சென்றான்

              என்ன சொல்வேன்

              திங்கள்  பலவாயிற்று...

              திண்ணையில்  நின்று 

              தெருவைப்  பார்த்திருப்பேன்

              வருவோர்  முகத்தை 

              வாஞ்சையுடன் பார்ப்பேன் - என் 

              வடிவழகனோவென்று 

 

              இரவின்  பனிக்காற்று 

              இதயத்தைத் துளையிட

              உறக்கத்தை  நீக்கி  -  சன்னல் 

             திரையிடுக்கில் பார்வையை  நிறுத்தித்

              தெருவைப்  பார்க்கிறேன்...

 

கண்ணினால்  காணப் 

              வந்தாலும்  வருவான் 

              வந்தென் கதவைத் தட்டுமுன்

              கண்ணால்  கண்டு 

              கட்டியணைக்கக்

              காத்திருக்கிறேன்...

              அதனால்  நிலவே 

 

படாஅதி 

              மறைந்துவிடாதே - வான் 

              திரையில் நீ நின்று 

              என்வாசல் மீது 

              பொன்னொளியை  பொழிந்திடு

             ஒய்யாரமாய்  வரும் - என் 

             மெய்யழகனை 

             உறங்காத  என் விழிகளுக்குக் காட்டிவிடு

 

வாழி  மதி.

             மறையாமல்  நீ  நெடுநேரம் 

             என்  வாசல்  மீது 

             ஒளி செய்வாய் என 

             உண்மையாய்  நான் 

             உள்ளத்தால்  நம்புகிறேன்...

 

            நீயும்  பெண்ணல்லவா - நிலவே 

            நானும்  பெண்ணல்லவா...

 

           பெண்மனதறிந்த 

           பொன்நிலவே 

           வாழி  நீ  வாழி நீ...

          ------------------------------------------------------------------------

 கற்பியல்                                                                             அதிகாரம்:122.

                                கனவுநிலை உரைத்தல் 

காதலர்   தூதொடு   வந்த   கனவினுக்கு 

யாதுசெய்  வேன்கொல்  விருந்து. -1211.

 

             ஏங்கும்  இதயம் 

             என்னுயிர்க்கு  சுமையாகுமோ                  

             தூங்காத  விழிகள்       

             சோகத்தின்  கவிதையாகுமோ...

             

            வருவானென 

            விழிப்பார்த்து  நின்ற இடமும் 

            குழியாகுமோ...

      

            இரவில் 

            இமை  மூடாதிருந்தாலும் - அவன் 

            வந்தானில்லை!

 

            பகல் போதெல்லாம்

            பார்த்து நின்றாலும் - அவன்  

            வந்தானில்லை!

 

             அயர்ந்தொருநாள் 

             அப்படியே தூங்கி விட்டாலும் 

             அழகன்  கனவில்  வந்ததில்லை!

             அடியே  தோழி 

             வியப்பொன்றைச்  சொல்வேன்  கேளடி...

 

காதலர்  தூதொடு 

             நேற்றைய  இரவில் - ஒரு 

             மாற்றம்  தெரிந்தடி...

             காதலன்  நலம்  சொல்லவும் 

             கோதை  நலம்  அறியவும் 

             தூது  வந்ததடி..

 

வந்த  கனவினுக்கு 

             தூதாய்  வந்தது 

             எந்தன்  கனவுதானடி...

 

      ஏழிசை பண் கேட்டதுப் போல்

              என்னிதயம்  மகிழ 

              கண்ணுக்குள்  வந்த  கனவே 

              உன்னை  நான்  மகிழச் செய்ய

 

யாதுசெய்  வேன்கொல்    

              என்ன செய்வேன் என்று 

              பொன்விழியில்  பூத்த 

              கனவைக்  கேட்டால் 

              கனவும்  கூறுமோ  விடை...

 

               கார்குழல்  தோழி 

               ஓர்சொல் கூறு!

விருந்து.

                அறுசுவை  உணவுச் செய்து

                அதனோடு 

                நடனமும்  பாட்டும்  தந்து 

                நல்வாழையில்  தூதுவந்தக் கனவுக்கு

                நான்  தரவோ  விருந்து...   

      -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கயலுண்கண்  யானிரப்பத்  துஞ்சிற்  கலந்தார்க்கு 

உயலுண்மை  சாற்றுவேன் மன்.                          -1212.

 

          கண்ணுறங்குக்  கண்ணுறங்கு - என் 

          கயல்விழி நீ  கண்ணுறங்கு...

          கண்ணுறங்குக்  கண்ணுறங்கு 

          என் கண்ணின் மணி - நீ 

          கண்ணுறங்கு...

 

          நீரில்  நீந்தும்  கயலோ - நீ 

          வானில் சுடரும்  மீனோ 

          கண்ணுறங்குக்  கண்ணுறங்கு - என் 

          கண்ணின்  மணி  - நீ

          கண்ணுறங்கு...

 

          ஆசையாய்  உன்னிடம்  -  நான் 

          கேட்பது  யாதெனில் 

          கண்ணுறங்குக் கண்ணுறங்கு - என் 

          கண்ணின் மணி - நீ 

          கண்ணுறங்கு...

 

          கண்ணுறங்கும்  போதில் 

          கனவொன்று  காண்பேன்

          அதனால்  நீ 

          கண்ணுறங்குக்  கண்ணுறங்கு - என் 

          கண்ணின் மணி  நீ கண்ணுறங்கு...

 

         கனவென  ஒன்று  -  என் 

         கண்ணில்  வந்தால் 

         கண்ணாளன்  வருவார்...

 

         கண்ணாளன் - என் 

         கனவோடு  வந்து - என் 

         மனதோடு  இன்பம்  தருவார்...

 

        அன்பே  கயல்விழி  -  அதனால்  நீ 

        கண்ணுறங்குக்  கண்ணுறங்கு

        என்  கண்விழி  நீ  கண்ணுறங்கு...

 

        கனவில்  வந்தவரே  -  என் 

        கார்குழல்  தொடுபவரே

        கட்டிமுத்தம்  தந்து 

        கெட்டியாய்  அணைப்பவரே...

 

        தத்தை  நானின்னும்   

        செத்து மடியாமலும் 

        பட்டுநூல்  போல் 

        பாவை  நான் மெலிந்தாலும் 

 

        உயிரைத்  தாங்கி

        இன்னும்நான் 

        இருப்பது ஏனென 

        பெருமையுடன்  சொல்வேன் 

        திருமகனே  நானுனக்கு...

 

        கனவில்  நீ  வருவதால்தான் 

        கவிதைப் போல் நானின்னும் 

        உயிர் வாழ்கிறேனென்று

 

        என் கண்ணாளனிடம் 

        கூறவேண்டும் - அதனால் 

        கயல்விழி நீ 

        கண்ணுறங்குக் கண்ணுறங்கு

        என் 

        கண்ணின்  மணி  நீ 

        கண்ணுறங்குக்  கண்ணுறங்கு...         

        -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

நனவினால்   நல்கா  தவரைக்  கனவினால் 

காண்டலின்  உண்டென்  உயிர்.               -1213.

 

               இதயராகம்  கேட்கின்றதா  -  என் 

               இதயராகம்  கேட்கின்றதா 

               புதியக் காற்றே வாராயோ - என் 

               இதயராகம்  கேளாயோ 

 

               இறந்தவர்  நெஞ்சில் 

               இன்னுயிர்  வாழுமோ 

               மடிந்துவிட்ட  மங்கைநான் - என் 

               மவுனவரிகள்  இதுதான்...

 

              நெருப்பின்  தணல்போல் 

              தனிமைத்  தவிப்பு  சுடுகிறதே

              இதமாய்  அவன்விரல்  தொட்டாலே  

              பதமாய்  என்மேனி   நலமாகுமே...

 

நனவினால்  நல்கா  தவரைக் 

             ஒருநாளும்  நேரில்  -  என் 

             இளமேனி தொட வரவில்லையே அவன் 

             விரகக்  கொடுமையில் - நான் 

             வெந்து நொந்து  வீழ்ந்தேன்...

 

கனவினால்  காண்டலின் 

             இருகண்களிடம் - என் 

             இருகரம்  கூப்பி 

             கெஞ்சினால் கொஞ்ச  நேரம்  துஞ்சும்...

 

             துஞ்சும்  போதில் - என் 

             துணைவன்  வருவான்  கனவில்...

             கனவில்  கண்டதால் 

 

உண்டென்  உயிர்.

             உயிர் என்னுடலைத் தாங்கி நிற்கிறதே...

             மடிந்துவிட்ட  மங்கைநான் - என் 

             மவுனவரிகள்  இதுதான் 

             புதியக் காற்றே இதயராகம்  கேட்கிறதா... 

           ------------------------------------------------------------------------ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கனவினான்  உண்டாகும்  காமம்  நனவினான் 

நல்காரை  நாடித்  தரற்கு.                                 -1214.

 

            கனவுக் கண்டு  நான் 

            காமம்  பல  கொண்டேன்  தோழி 

            ஏனெனென அறிவாயா 

            என்னருந் தோழியே 

 

             ஆண்டுப் பலவாயிற்று - என் 

             ஆசைநாயகன்  போய்...

             போன  நாள்முதல் - என் 

             பொல்லாத  மேனி 

             நூலாய்  மெலிந்ததடி...

 

             அவன் தொட்டுச் சென்ற

             இடமெல்லாம்  -  மீண்டும்  அவன் 

             தொட வராததால் 

             உருகி உருமாறியதடி...

 

            சின்னஇடைப் பெண்ணே 

            சீக்கிரம்  வந்து 

            உன்னைத்  தொடுவேன்

            உன்னை  அள்ளுவேன் கிள்ளுவேன்  

            உயரத் தூக்கி வீசிப்பிடித்து 

            உனக்கு  முத்தம்  நூறுத் தருவேன்

            என்றுச் சொன்னவன் 

            இந்நாள் வரையும்  வரவில்லை...

       

            வரமறந்தவனைத் தேடி - என் 

            நெஞ்சில்  வசந்தம்  தூவிடவே 

            கனவுக் கண்டுக் 

            காமம்  பல கொண்டேன்  தோழி...                

      ------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

நனவினால்  கண்டதூஉம்  ஆங்கே  கனவுந்தான் 

கண்ட  பொழுதே  இனிது.                                        -1215.

              சிந்தை  என்ன 

              நெஞ்சில்  என்றுச்

              சொல்லு   தோழி

 

              பெரியோர்  சொன்ன 

              உரையே  என்  நெஞ்சில் 

 

              என்ன  உரையோ 

              எனக்கு  உரையாயோ 

 

              நிலையில்லாதது  இந்த  வாழ்வென்று 

              நீரருவிப் போல்

              பெரியோர் சொன்ன  உரைத்தானது...

 

              உரைக்கவில்லை என் நெஞ்சுக்கு 

              உறுதிப்பட  உரைத்திடு  நீயெனக்கு...

               

              தோழி 

நனவினால்    கண்டதூஉம்  ஆங்கே 

              நனவில்  நானவரைத்

              தழுவி  துய்த்தேன்...

              பேரின்பம் இது 

              முடிவிலா  மகிழ்ச்சியிது  என்று 

              தழுவிக் கிடந்த நேரத்தில் 

              தத்தை  நான்  சித்தமிழந்தேன் 

              ஆயினும்...

 

             ஆயினும் என்ன 

             பீடிகையின்றி  சொல்லெனக்கு...

கனவுந்தான் 

              கனவிலும்  காண்பேன் 

             கண்ணிறைந்தவனோடுக் காம இன்பம் 

              கடல்போல் பெரிது 

              குறைவுறாத  பேரின்பமிது  என்று 

             நிறை  நெஞ்சோடு இருந்தேன் 

              ஆனாலும்...

 

              ஆனாலும் 

கண்ட  பொழுதே  இனிது.

              நனவிலும் கனவிலும் 

              நானவரைக் கண்டபோது

              வானளவு இன்பம்  என்னுள்  இருந்தது  தோழி...

              நனவிலும்  கனவிலும் 

              நாயகன்  என்னை  நீங்கினால் 

              நிலையின்றி இன்பமும் நீங்கி  மடிகிறதே..

              நிலையில்லாதது  இந்த  வாழ்வென்று 

              மொழிந்தனரே  பெரியோர்...

              மெய்த்தானடி தோழி மெய்தான்...    

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

நனவென  ஒன்றில்லை  யாயின்  கனவினால் 

காதலர்  நீங்கலர்  மன்.                                       -1216.

 

            பாம்பொன்று  கனவில்  கடித்தால் 

            தீங்கெல்லாம்  நீங்கிடுமாம்...

 

            மலம்  தின்றால் கனவில் 

            நலம் செழிக்குமாம்  வாழ்வில்...

 

            பகல்கனவு  பலிக்காதாம்  -  ஆனால் 

            விடிகாலைக்  கனவு  நனவாகுமாம்...

 

           இன்னும்பல  பலர்  பகர்வர் 

           இதிலென்ன  விந்தை என்கிறாயா  தோழி...

 

           கனவு  என ஒன்று - வரும் 

           காரணம்  என்னவென்று 

           ஊரில்  பலரிடம் கேட்டேன்...

           கேட்டதைச் சொல்வேன் கேளடி...

 

           சாமியும்  பூதமும் கண்ணில்  தோன்றி 

           கனவு  செய்யுமாம்...

           கெட்டவர்  ஆவியும் 

           கெடுதிச்  செய்யவே வருமாம்...

 

           செத்தவர்  நல்லவரெனில் 

           சித்தமினிக்க  கனவு  வருமாம்...

           இளவயதில் பெண்ணொருத்தி 

           மரணம்  எய்திட்டாலும் 

           மோகினாய்  வந்து 

           மோகக்  கனவுத் தருவாளாம்   

           இன்னும்  பல  கேட்டேன்  தோழி...

 

           வள்ளுவன்  சொன்னதையும் 

           சொல்கிறேன்  கேளடி...

          சாமியும்  பேயும் 

           காரணமில்லை...

           கனவு  மலரக் காரணம்

          நினைவலைகளே  என்றான்  வள்ளுவன்...

     பகுத்த  அறிவால் - வள்ளுவன் 

            பகன்றது  

            உண்மை என்றே  -  என் 

            உள்நெஞ்சுக்  கூறுகிறது  தோழி...

 

நனவென  ஒன்றில்லை  யாயின்

           கொஞ்சிப் பேசி  என்னுள் 

           குடிப் புகுந்தானோ 

           ஏறுபோல் நடையிட்டு 

           என்னிதய  பீடம்  ஏறினானோ...

 

           ஓரக்கண்ணால்  பார்த்து 

           ஒளிதந்தானோ நெஞ்சுக்கு...

 

           நினைக்க  நினைக்க - என் 

           நெஞ்சம்  இனிக்கிறதே...

           நினைவலைகள் - என் 

           ஆழ் நெஞ்சில் 

           ஊஞ்சலாடாதெனின் 

 

கனவினால் 

           கனவெனவொன்று தோன்றுமோ 

 

காதலர்  நீங்கலர்  மன்.

           தோன்றிய  கனவில் 

           தோன்றியக்  காதலரும்

           நீங்குவாரோ  கூறு  தோழி...

      ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

நனவினால்  நல்காக்  கொடியார்  கனவினால் 

என்எம்மைப்  பீழிப்  பது.                                     -1217.

 

             போய்விடு  பொல்லாத  நிலவே - நீ 

             தேய்வதுப்  போல் என் நெஞ்சும் 

             தேய்கிறதே...

 

              ஏனென்று  ஒருநாளும் 

              என்னிடம்  நீ  கேட்டதுண்டோ...

 

              அலைகள்  வந்து  வந்து 

              தழுவித்  தழுவிச் செல்வதால்

              மெல்லிய  மணலும் 

              புன்னகை  கொள்ளுதே...

 

நனவினால்  நல்காக் 

               நேரில்வந்து - என் 

               தோள் தழுவா 

 

கொடியார் 

               கொடியவன்  என் காதலன் 

               அவன் 

 

கனவினால்  

               கனவில்  வந்து 

               கன்னி  என்  நெஞ்சில் 

               காமத்தீ 

 

என்எம்மைப்  பீழிப்  பது.

               மூட்டுவதேன்...

               காமவேதனைத்  தந்து  வாட்டுகிறான்...

                 

               வாடும்  மலரெனை 

               வானநிலவே 

               வாய்திறந்தோர் சொல் 

              கேட்டதுண்டோ...

               போய்விடு  பொல்லாத  நிலவே... 

       -------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன்  உரை.

துஞ்சுங்கால்  தோள்மேல  ராகி  விழிக்குங்கால் 

நெஞ்சத்தர்  ஆவர்  விரைந்து.                              -1218.

 

துஞ்சுங்கால் 

        மலர்  மஞ்சமது  -  நானதிலொரு 

        மலர்க்  கொத்துப்  போல்

        விழிமூடித்  தூங்கும்  போதில் 

 

தோள்மேல  ராகி 

        இளந்தளிர்  என்மேனி  மீதில்    

        சுகமானதொரு சுமையாய் 

        தோள் தழுவியிருந்தான்          

        காதலன்  என்னவன்...

                          

விழிக்குங்கால் 

         மைவிழியாள்  என் மீது 

         மையல்  மாறாமல் 

         திங்கள்  பலவாயினும் 

         தினவெடுத்த  தோளோன் 

         எனை கசக்கிப்  பிழியவே 

         எனைத் தேடி வந்தானோ...

 

         வந்தவனைக் கட்டியணைத்து

         கால்கொண்டுப் பிணைத்திட

         கையொடு  காலையும் உயர்த்தி 

         மெய்யாகவே  புரண்டேன்...

 

         புரண்டவள்  நான் 

         தரையில் வீழ்ந்து  விழித்தேன்...

         கண்டது  கனவே!

         காரிகை  நாணம்  கொண்டேன்...

 

நெஞ்சத்தர்  ஆவர்  விரைந்து.

          கனவில் 

          மணக்குமென் தோளில் கிடந்தவன் - என் 

          உறக்கம்  கலைந்தவுடன் 

          விரைந்தோடினான் -  மங்கை என்நெஞ்சுக்குள்...   

           -----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

நனவினால்  நல்காரை  நோவர்  கனவினால் 

காதலர்க்  காணா  தவர்.                                  -1219.

 

            காம 

            முள்மீது  கிடந்து  நான் தவிக்க 

            கல்நெஞ்சுக் கொண்ட காதகன் 

            பெண் மனமறியா  பாதகன் 

            என் செய்கிறானோ 

            எங்குளானோ  என்றே 

            ஏந்திழையாள் நாளும் நாளும் 

            ஏக்கம்  கொண்டு - காதலனை 

            ஏசல்  செய்வாள் - மனம் 

            நோதல்  அடைவாள்...

 

            அவள் 

            கண்மூடித் தூங்கும்  போதும் 

            கனவிலும் 

 

            காதலனைக்

            காணாது  தவித்திடுவாள்

            அதனால் 

            நனவிலும்  நங்கை 

            மனம்  நொந்திடுவாள்...   

         ---------------------------------------------------------------------------

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

நனவினால்  நம்நீத்தார்  என்பர்  கனவினால் 

காணார்கொல்  இவ்வூ  ரவர்.                       -1220.

                 பைங்கிளி  இவள் 

                 பசுந்தளிர்  மேனி வாட 

                 மைமொழி  இவள் 

                 மஞ்சத்தில்  துடிக்க 

                 இளங்கிள்ளையிவள் - காம 

                 நலமின்றி  நலிய 

                 நாயகன்  நீங்கி  நெடுநாளாயிற்றே

                 நயவஞ்சகனோ  அவனென்று 

 

                 நாவால்  பல  பழிச்சொல் 

                 நாளும்  நாளும் 

                 பேசிடுவர்...

 

                 காதலன் 

                 என் கனவில் வந்து 

                 கட்டிமுத்தம்  தந்து 

                 கனத்த  தோளுக்குள்

                 எனையடக்கி  யாள்வான்...

                 இதனைக்

                 காணாமல்

                 கண்டபடி  என் காதலனைப்  பேசுவதேன்

                 இந்த  ஊர்  மக்கள்தான்...    

கற்பியல்                                                                                       அதிகாரம்:123.

                                   பொழுதுகண்டு  இரங்கல் 

மாலையோ  அல்லை  மணந்தார்  உயிருண்ணும் 

வேலைநீ  வாழி  பொழுது.                                       -1221.

 

              குளுகுளுவென வீசுங்காற்று 

              சிறுசிறு பறவையின் பாட்டு 

              தளதளவென வரும் வானின்நிலா - இது 

              நலம்தர  வந்த  மாலையோ 

 

               அல்ல  அல்ல அல்லவென்றுச்

               சொல்லு சொல்லுச் சொல்லு

 

               தனிமையில்  தவிக்கும் 

               மணமகள்  நெஞ்சைத்

               தயக்கமின்றித்  தாக்கிடுமே - இது 

               மயக்கத்தை  மனதிலூட்டி 

               மரணத்தையும்  தந்திடுமே...

 

               நலம் தரும்  மாலை நேரமல்ல - இது 

               உயிர்க் குடிக்கும் வேலாகும்...

 

               மணமக்கள்  நெஞ்சில் - காம 

               மருந்தினைத் தடவும்

               மையல்  பொழுதே - இள 

               மனதினில்  துயரூட்டும்  மாலைப் பொழுதே 

               வணங்குகிறேன்  உன்னை 

               வாழ்த்துகிறேன்  நானும் 

               போய்விடு  மாலையே 

               போக்கிரித்தனம்  செய்யாதே...

     -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.   புன்கண்ணை  வாழி  மருள்மாலை  எம்கேள்போல் 

வன்கண்ண  தோநின்  துணை.                                 -1222.

               மயக்கும்  மாலைப்  பொழுதே  - நீயேன் 

               மனம் கலங்கி  வாழ்கிறாய்...

               இன்னலை  கூறாயோ  - இனிய 

               மாலைப்  பொழுதே - நின்னை 

               வாழ்க  வாழ்க  வாழ்கவென 

               வாழ்த்துகிறேன்...

 

               புத்தம்  புதியத்  துணியணிந்த

               புதுப்பெண்ணின்  புன்னகைப் போல் 

               நித்தம்  நித்தம்  உலாவும்  மாலையே 

               நின்முகம்  இன்றேன்  மங்கியதோ...

 

               உச்சி முதல்  உள்கால்வரை 

               எச்சில்ச் செய்து -என்னுள் 

               எல்லையின்றி  இன்பம்  வார்த்த 

               எந்தன் தலைவன் போல் 

               கொடியவனோ 

               நின்துணைவனும் 

               ஏக்கம்  போக்கிடாமல்  துணைவன் 

               சோகம்  செய்து போனானோ 

               இளமாலைப் பொழுதே  - மனம் 

               கலங்காதே  போ... போ...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் 

துன்பம்  வளர  வரும்.                                                  -1223.

               

              பனியில்  பூத்த 

              பசுந்தளிர்  மாலைப்  பொழுதே - உன் 

              கண்ணிரண்டிலும் 

              காமக்கனைகள் கொண்டு 

              என்னெதிரில்  ஏன் வருகிறாய்...

              நில்லங்கே 

              நின்கோலம்  மாற்று...

 

              மன்னவன்  பிரிவால் 

              மனம் நொந்து  நானிருக்க 

              என் மேனியில் 

 

              காமநெருப்பு  மூட்டவோ 

              பனியில்  பூத்து 

              பாவையென்  வாசல்  நோக்கி 

              வந்தாய்  மாலைப்  பொழுதே... 

    -----------------------------------------------------------------------------

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க  கனகராசன் உரை.

காதலர்  இல்வழி  மாலை  கொலைக்களத்து 

ஏதிலர்  போல  வரும்.                                       -1224.

 

             கூடுத்  திரும்பும்  பறவைகளே - நும் 

             துணையோடு  மாலைப் பொழுதைத் 

             துணிவோடு  வெல்வீராக 

             வாழ்த்துகிறேன்  நான்...

 

            பூவின்  வாசத்தைத் துணையாய்க் கொண்ட

            பூங்காற்றே  

            மாலை  நேரத்தின்   மையலைத்

            தீரமாய் எதிர்க்  கொள்வாயாக...

            வாழ்த்துகிறேன்  இனியக் காற்றே   

           

காதலர்  இல்வழி  மாலை 

           வேல் தூக்கிய

           கள்வனோ  கயவனோ  பகைவனோ 

           மாலைப் பொழுதே நீ 

           காதலன்  இல்லாத  நேரத்தில் - என் 

           வாசல்  வந்ததேன்...

 

கொலைக்களத்து  ஏதிலர்  போல 

           வஞ்சகன்  வாளேந்திப்

           பதுங்கிப்  பதுங்கிப்  பாய்ந்து வந்து 

           முதுகில்  குத்துவதுப் போல 

வரும்.

           வந்தாயே  மாலைப் பொழுதே...

           மன்னவன்  இல்லாத  நேரத்தில் - என் 

           நெஞ்சில்  மையல்  தந்து 

           வஞ்சகமாய்  என்னுயிர்ப்  பறிக்க

           வந்தாயோ  மாலைப் பொழுதே

           எனை  மயக்கவோ 

           மோகவலை  விரித்து  வந்தாய்...

       -------------------------------------------------------------------------     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

காலைக்குச் செய்தநன்று என்கொல எவன்கொல்யான் 

மாலைக்குச்  செய்த  பகை.                                               -1225.  

 

      இருட்டில்  சிக்கித்

      தனிமையில் தவித்த  என்னை 

      இனிய குயிலோசையுடன் மீட்ட 

      புதியக்  காலைப் பொழுதே 

      உனக்கு நான்  செய்த நன்றியென்ன  நானறியேன்...

 

      என்ன சொல்வேன்

      என்னவென்று  அறிவேன் 

      என்னுள்  வேதனைச் செய்யவே 

      கயவன்  போல் 

      கடுங்கோலம் தரித்து வந்த 

      கொடுமாலையே  - நான் 

      கெடுதல்  ஏதும்  செய்தேனா  - சிறு 

      நொடியும்  விலகாமல் - காம 

      நோய்ச் செய்யும்  மாலைநேரமே...   

       -------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

மாலைநோய்  செய்தால்  மணந்தார்  அகலாத 

காலை  அறிந்தது  இலேன்.                             -1226.

 

          பஞ்சணையில்  படுத்தால்      

          படுநெருப்பென சுடுகிறது...

          மலர்சூடிக் கொண்டாலோ

          பள்ளியறை சுடுகிறது...

 

         தெருப் பார்த்து  நின்றாலோ 

         விழித் திரை  சுடுகிறது...

         இளங்காற்றில்  நடந்தால் 

         இதயம்  சுடுகிறது...

 

          பாலமுது பருகினாலும்

          பாழ்நஞ்சாய்  சுடுகிறது

          மாலைநேரத்தில்  - இதென்ன 

          மாளாத  வேதனை...

          மாலையும் - என்மனதில் 

          நோய்ச் செய்யுமென

          மன்னவன்  என்னைவிட்டு 

          மாவெல்லை அகலும் போது 

          அறியாத பேதை  நான் - இன்று 

          ஆழ்ந்தேனேத் துயரில்...         

        --------------------------------------------------------------------------

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

காலை  அரும்பிப்  பகலெல்லாம்  போதாகி 

மாலை  மலரும்இந்   நோய்.                     -1227.

 

               காமக்கிளர்வது நல்மலரோ 

               இது 

               இளங்காலையில் - சிறு 

               அரும்பென  அரும்பி 

               பையப் பைய 

               பகலெல்லாம்  வளர்ந்து 

               மாலையில்  மலர்ந்து 

               மனதினை  மயக்குமே  -  இந்த

               காமநோய்தான்... 

       -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

அழல்போலும்  மாலைக்குத்  தூதாகி  ஆயன் 

குழல்போலும் கொல்லும்  படை.              -1228.

 

             குளிர்த் தரும்  மாலையன்று  - இது 

             உயிர்ப்  பறிக்கும்  நெருப்பு 

             இதம்  தரும்  மாலையன்று - இது 

             இதயம்  சுடும்  நெருப்பு...

 

            சுந்தர   நினைவுகளைச்

            சுண்டி இழுத்து 

            நெஞ்சின்  சுவர்களில்  தீமூட்டும் 

            வஞ்சக  மாலையின்  வன்செயலுக்கு 

            வாழ்த்தும்  தூதுவன் போல் 

            ஆயன் குழலோசைப் படர்ந்தது

            காடு 

            கழனி 

            மேடு 

            மேய்ச்சல் நிலம் 

            வாய்க்கால் வரப்போரமென 

            மேய்ந்து  மேய்ந்து  ஓய்ந்த 

            ஆவினம்  அலுப்பு  நீங்க 

            ஆயன் இசைப்பான்  குழலோசை 

            மாலை நேரந்தனில்...

 

            ஆசையுடன் என்னவனோடு 

            ஆற்றங்கரையில் அள்ளி மணல் தூவி 

            ஆயன் குழலோசையில்  நனைந்து 

            ஆனந்தம்  கொண்டதெல்லாம்  அந்த நாள்...

 

            மன்னவன் என்னருகில் இல்லா 

            இப்போதில் 

            ஏனிந்த 

            ஆயன்  குழலோசை 

           மாலைப் பொழுதோடு  வருகிறதோ... 

           குழலோசையோ - இது 

           குரல்வளை  நெறிக்கும் 

          கூராயுதமோ...  

           ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பதிமருண்டு  பைதல்  உழக்கும்  மதிமருண்டு 

மாலை  படர்தரும்  போழ்து.                         -1229.

 

             மங்கிய  மாலை படர்வால் - ஊர் 

             மவுனமாகும்  -  சோகம் 

             மண்டி  சோர்வுப்படும்...

 

            பதுங்கிப் பதுங்கி வரும் 

            மாலைப் பொழுது

            காமக்கவிதையையும் 

            ஏந்தி வரும்...

 

            காதலர்  நெஞ்சில் 

            ஆயிரம்  ஆசைதனைத் தூண்டி

            மதியை  சிதைக்கும்...   

                                -------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

பொருள்மாலை   யாளரை  உள்ளி  மருள்மாலை 

மாயும்என்  மாயா  உயிர்.                                       -1230.

            மாலையிட்டவன்  போய் 

            மாதம்  பலவாயிற்று 

            ஈட்டிவருகிறேன் பொருளென்று  என்னுள்ளம் 

            வாட்டிச் சென்று  வருடம் பலவாயிற்று...

 

            வாடுகிறேன்  -  சோகம் 

            பாடுகிறேன்...

            மாயவில்லை  இன்னுமென்னுயிர்...

            ஆனாலும் 

 

            மயக்கமூட்டும்  மாலைநேரம் - உள்ளத்தில் 

            கலக்கம்  செய்து  வாட்டுகிறது...

            கண்ணாளன்  பிரிவாலும் 

            கலங்காத  என்னுயிர் 

            பலியாகுதே 

            பாழும்  மாலைப்  பொழுதுக்கே...

              -------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                                                       அதிகாரம்:124.

                                          உறுப்பு  நலன்  அழிதல் 

சிறுமை  நமக்கொழியச்  சேட்சென்றார்  உள்ளி 

நறுமலர்  நாணின  கண்.                                      -1231.                             

                 என்னுள்ளம்  பதற 

                 என்மேனி  மெலிய 

                 என்னவன் சென்றான் தொலைவு...

 

                  அன்னவனை  எண்ணி எண்ணியே 

                  அழுதழுது  அழகிழந்தன  விழிகள்...

                  அன்றொருநாள் 

                  அவன்  சொல்வான்            

                  உன்விழிபோல் 

                  அந்த  மலரும்  அழகென்று...

 

                 ஆணவத்துடன்  அதனைப் பார்ப்பேன்

                 பூத்து நின்ற  மலரும் 

                 பூவை  என் விழியழகில்  நாணும்...

 

                 இன்றோ  என்சொல்வேன் 

                 அழுது  அழகிழந்த  என் கண்கள் - புது 

                 மலர்க்  காணவே நாணுகின்றன...

            ------------------------------------------------------------------------

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

நயந்தவர்  நல்காமை  சொல்லுவ  போலும் 

பசந்து  பனிவாரும்  கண்.                            -1232.

 

             அன்பே  அன்பே  அன்பே 

             என் அன்பே 

             எங்கே  நீ  சென்றாய்...

             உன்னைக்  காணாமல்

             என் நெஞ்சம்  துடிக்கிறதே...

 

            நெஞ்சின்  துடிப்பை  -  நான் 

            அடக்கி   மறைத்தாலும் 

            அன்பே  அன்பே  

            கண்களிரண்டும்  - என் 

            துன்பச்  செய்தியை 

           பிறரறியவே  பறை செய்கிறதே...

 

            என் அன்பே 

            எங்கே  நீ  சென்றாய்...

            உன்பிரிவால் துடிக்கும் 

            நெஞ்சின்  தவிப்பால் 

            விழிகள்  இரண்டும் 

            வேதனைக் கொண்டு

            நீரை  சொறிந்தால்

            யாரும்  அறியாரோ...

 

            இவள் 

            நாயகன் பிரிவால்  -  நாளும் 

            வேதனை யுற்றாளென்று...

 

            அன்பே  அன்பே  அன்பே 

            என் அன்பே 

            எங்கே  நீ சென்றாய்...

        --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                           அரங்க  கனகராசன்  உரை.

தணந்தமை  சால  அறிவிப்ப  போலும் 

மணந்தநாள்  வீங்கிய  தோள்.       -1233.

 

            புன்னகைச் செய்து - பெண்ணே 

            இன்னலை  மறைப்பாயோ  

            கண்ணுக்கு  நீ  மைத் தீட்டினாலும் - தேய்ந்த 

            கன்னத்தில்  ஒளிக்  கூடுமோ 

 

            சாய்ந்த உன் மனகோபுரத்தை 

            தேய்ந்த  உன் இளமேனி 

            சாற்றுதே  ஊருக்கு  பறை!...

 

            அன்னமிவள்  அவன்  நினைவால் 

            உள்ளம் உருகி  உருக்குலைந்து 

            அழகிழந்து பொழிவிழந்தாள்...

 

            மாலையிட்டவன்  செய்த  மாளாத்துயரில் 

            கோலமயில் தீரா  சோகமாயினள்...

            கோதை  நெஞ்சின்  சோகமதை 

            தேய்ந்த  மேனிக் காட்டிவிட

 

            கட்டழகியிவள் மேனி 

            கல்யாண  நாளில் 

            இருந்த  கோலமதைக் கூறவோ...

            மாலையிட்டவன்  மணநாளில் 

            மங்கையிவள்  அழகில்  மயங்கி 

            மனம் கிறங்கி சொன்ன மதுரமொழி யிதோ...

 

            மொழுமொழுவென 

            மெழுகுச் சிலையோ 

            தளதளவென 

            தக்காளி கன்னமோ 

            கிளுகிளுவென 

            வெண்ணையில்  வார்த்த  மார்போ 

           தங்கத்தைத் தகடாக்கி

            வயிராக்கிக்  கொண்டாயோ

            வண்ணநிலவைக்  கிள்ளி

           தொப்பூழ்  செய்தவளே 

 

           சின்ன  இதழால்  சிரித்து 

            என்னை சிறைச் செய்பவளே

            என்று  அன்று  சொன்னவனே 

            இன்று வந்து  இவளைக் கண்டால்

            அவளோயிவள் எவளோ  என்பான்...

       ----------------------------------------------------------------------------               

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பணைநீங்கிப் பைந்தொடி  சோரும்  துணைநீங்கித் 

தொல்கவின்  வாடிய  தோள்.                                     -1234.               ஆழ்கடலில் 

            அழகுக்  காட்டிய  மீனிரண்டை 

            தேன்கொடி  -  நீ 

            கையாக்கிக்  கொண்டவளோ...

            பைங்கிளி - உன் 

            கைவளைக்  கழன்றோடுதே

            மைவிழி 

            செழித்த  உன் கையிரண்டும் 

            மெலிந்ததன்  காரணமோ...

 

            மாலையிட்ட  மைந்தன் 

            மங்கை  உன்னைவிட்டு  நீங்கி 

            மனதுக்குத்  தந்தான்  மாளாத் தொல்லை     

            நெஞ்சின்  சோகம்  தாளா 

            பிஞ்சுப்பூவே 

            கொஞ்சி மகிழ்ந்து  - உன்னை 

            மஞ்சத்தில்  புரட்டியவன் 

            வஞ்சகனோ  கூறு...

            நெஞ்சில்  ஈரமின்றி  நீங்கினான் 

            வஞ்சமின்றி  வனப்புக் காட்டிய

            பஞ்சொத்த  தோளிரண்டும் 

            நஞ்சுண்ட  மான்போல்  வாடியதே...  

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

கொடியார்  கொடுமை  உரைக்கும்  தொடியொடு 

தொல்கவின்  வாடிய  தோள்.                              -1235.

 

              இடையைத் தழுவி 

              இறுகத்  தழுவி 

              இனிக்க இனிக்க  முத்தம்  தந்து 

              இன்னுயிர்ப் பறிக்கும்  நஞ்சுதனையும் 

              பிரிவென்னும்  வடிவில்  தந்த 

              கொடியவனே...

 

              நீதந்த வேதனை - என் 

              நெஞ்சு  மட்டுமே அறியும் 

              என்று  நானிருக்க 

 

              கைவளை  கழன்று விழுந்து 

              கலகலவென  ஒலியும் செய்து 

              நானறிவேன்  உன்  வேதனைதனை 

              என்று 

              கணீர் கணீரெனக்  கூறக் கேட்கிறேன்...

 

              மெலிந்த  என்  தோள்களும் 

              மலிந்த  என் வேதனைதனை 

              பலரறிய 

              பாடல்  பாடுகின்றனவே...    

              ------------------------------------------------------------------------

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தொடியோடு  தோள்நெகிழ  நோவல்  அவரைக் 

கொடியர்  எனக்கூறல்  நொந்து.                      -1236.

               

               தோழி 

               என் சோகம்  நெஞ்சோடு 

               என்மேனிக்கு  என்னானது...

 

தொடியோடு  தோள்நெகிழ  நோவல் 

               கொண்டவன்  பிரிவுத் தந்ததால்

                என்நெஞ்சம்  துயர்க் கண்டது...

                நெஞ்சின்  துயர்க் கண்டு 

                வளைக்கரம்  மெலிந்து 

                இளந்தோளும்  இழைந்தது...

               

                இவள்  துயர்க்  கொண்டுத் துடிக்கிறாள்

                என்றெனைப் பார்த்து

                என்னவனை சுடுசொல் செய்கின்றனர்...

 

அவரைக்  கொடியர்  எனக்கூறல் 

              கொடியவன் 

              கொடும்பாதகன் 

              கொண்டவளைத்

              தவிக்கச்  செய்த  தருக்கன்

              என்றெல்லாம் 

              என்னவனை  எவரெவரோ 

 

நொந்து.

              ஏசுகின்றனர்...

              என் நெஞ்சுத் துடிக்கின்றதே...

              பிறர்  பழிப்பதுக்  கேட்டு  பதைக்கின்றதே...                    -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பாடு  பெறுதியோ  நெஞ்சே  கொடியார்க்கென் 

வாடுதோள்  பூசல்  உரைத்து.                         -1237.

 

                   நெஞ்சே  நெஞ்சே 

                   இளநெஞ்சே 

                   இளங்கொழுந்து  நான் 

                   என்சொல்லொன்று  நீ  கேளாய்...

 

பாடு  பெறுதியோ  நெஞ்சே 

                  தூது  செல்வாயா - என் 

                  காதல்  செல்வனிடம் 

                  சில்லென்ற  காற்றிலேறி

                  சிரித்துத்  திரியும் விண்மீனோடு செல்...

                  குவிந்துக் கிடக்கும்  மேகத்தைத்

                  துணையாய்க் கொண்டு - என் 

                  துணைவனிடம்  தூதுப்  போப் போ 

                  நெஞ்சே  நெஞ்சே  இளநெஞ்சே 

 

                  தூதுச் சொல்லி வந்தால் - நல் 

                  பாடல் கொண்டு உன்னை 

                  வாழ்த்துச் சொல்வேன் இளநெஞ்சே...

 

கொடியார்க்கென் 

                  பிரிவு  எனும் 

                  துயரம்  செய்தவன் 

                  கொடியவன் என் காதலனல்லவா...

                  கொடியவனே - நின் 

 

வாடுதோள்  பூசல்  உரைத்து.

                  பிரிவால் 

                  கோலமயில்  தோளிரண்டும் 

                  வாடின - வளம் மாறினவென்று 

                  இளமகள் என் வருத்தம்  கூறு 

                  நெஞ்சே  நெஞ்சே  நல் நெஞ்சே...

        --------------------------------------------------------------------------- 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

முயங்கிய  கைகளை  ஊக்கப்  பசந்தது 

பைந்தொடிப்   பேதை  நுதல்.           -1238.

             தோளோடு  தழுவி 

             தோகைமயில் பலமுது போல்

             காமவிருந்து  படைத்தாள்...

                  இறுகத் தழுவி இருவரும் 

                  ஒருவர்மீது ஒருவர் புரள

                  வாட்டியக் குளிரும் வழிப் பார்த்து ஓடியது...

             வாகையாய்  சூடும் வந்து குடியேற

             தத்தையின்  தளிருடலில் 

             நீர்த்துளி அரும்பியது...

                மான்விழி  மங்கை - சிறு 

                ஓய்வுக் கொள்ளட்டுமென்று

                ஓசையின்றி - அவன் 

                ஆசைக்கிளியின் தழுவலைத் தளர்த்தினான்...

 

             தழுவல்  தளர 

             தத்தை சித்தம்  கலங்கினாள் 

             வண்ணமுகம்  வாட்டம் கொண்டது...

 

             பசுந்தளிர்  மேனியாள் 

             சோகம் கொண்டு  நெளிந்தாள் 

             சின்னநெற்றி  சீர்கெட்டு 

             சிறுசுருக்கம்  பிறந்தது...

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

முயக்கிடைத்  தண்வளி  போழப் பசப்புற்ற 

பேதை  பெருமழைக்  கண்.                      -1239.                   

 

                  தாரகையின்  தோள்தழுவி -  காமம் 

                  தாளமிசைத்து  மகிழ்ந்தேன்...

 

                  இடை ஒடிந்திடினும் 

                  என்னவனே 

                  இறுகத் தழுவென்றாள்...

 

                  முகிலிடைப்  புகுந்த நிலவு போல் - என் 

                  தழுவிடைக் கிடந்தாள் தளிராள்...

                  சில்லென்று  சிறுகாற்று

                  அவ்வேளை  ஆங்கே  வந்து 

                  ஆடையின்றி யிருந்த - என் 

                  ஆசைக்கிளியின்

                  இளமேனியைத்  தொட்டு புகுந்தது

                  

                  என்மேனி  உனதல்லவா 

                  என்னருகில்  நீயிருக்கையில் 

                  எங்கிருந்தோ வந்த  எழில்காற்று 

                  என்மேனித் தழுவிட இடந்தருவதோ...

 

                  இறுகநீ  தழுவியிருந்தால் 

                  என்னிடை  காற்றும்  சென்றிடுமோ 

                  என்றவள்  புலம்பி  பசந்தாள்...

 

                  கார்மேகம்  சூழ 

                  கடுமழை பொழிவது போல்

                  பேதைப் பெருவிழிகள்                

                  சோகம்  சூழ  சோர்வு செய்தன...  

        ------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கண்ணின் பசப்போ  பருவரல்  எய்தின்றே 

ஒண்ணுதல்  செய்தது  கண்டு.              -1240.

 

           இளங்காலை  விழித்தெழுந்த 

           இளமகள் 

           கண்ணாடிதனில்  தன்முகம் 

           கண்டு  நின்றாள்...

 

கண்ணின்  பசப்போ  பருவரல்  எய்தின்றே 

           அகல விரிந்த இமைகள் 

           சுருங்கி சோகமாயின...

           முழு  தழுவல் முற்றும் 

           இழந்ததால்  

           எழில் பெண்ணின்  ஏக்கத்தினை      

 

ஒண்ணுதல்  செய்தது  கண்டு.

          அழகு நெற்றி 

          அழகின்றிக் காட்டியது...

 

           அதுகண்ட  விழிகளும் பசந்து 

           பெருந்துன்பத்தில்  உழன்றனவே... 

             -----------------------------------------------------------------------

கற்பியல்                                                                                       அதிகாரம்:125.

                                         நெஞ்சோடு  கிளத்தல் 

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய்  தீர்க்கும்  மருந்து.                                                  -1241.

           

           நெஞ்சே  நெஞ்சே  இளநெஞ்சே 

           நெஞ்சே  நெஞ்சே - என்னிள நெஞ்சே

           எனக்கொரு  மொழி  நீ  கூறாயோ 

           என்னாசை  நெஞ்சே 

           எண்ணத்தில்  நீ  ஆயிரம்  கொண்டாய் 

           அதிலொன்று எனக்குச் சொல்லாய் 

                

                ஏகாந்தமாய்  என்னிதயம்  நோகுதே 

                ஏதேதோ சிந்தையில் 

                என்இளமேனித்  துடிக்குதே  

                ஆசை  நெஞ்சே 

                ஓசையின்றி  ஒரு சொல் 

                என்னோடு நீ சொல்லு 

           

     எதிலும் நிலையாமல் 

           என்சிந்தைத் தடுமாறுதே 

           என்னவென்று  என்  நெஞ்சே 

           எனக்கு  நீ சொல்லு 

               

               புதுக்கனவுகள் 

               புதுக்கவிதைகள் 

               புதுராகங்கள் - என்னுள் 

               புகுந்தனவே...

           புலனாகாமல் தவிக்கும்  எனக்கு 

           புது மருந்து சொல்லாய்  நெஞ்சே...  

      ------------------------------------------------------------------------------            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

 

காதல்      அவரில     ராகநீ    நோவது 

பேதைமை  வாழிஎன்  நெஞ்சு. -1242. 

 

                நெஞ்சே  நீ 

                பாடம் படி - திரு 

                காதல் எதுவென அறியாமல் 

                நாளும்  நீ தவிக்காதே...

 

காதல்  அவரில  ராகநீ 

                காதல் கொண்டு - நீ 

                கனிந்து நின்றாய்...

                காதல் மறுத்து - அவர் 

                விலகிச் சென்றார்...

 

              விண்ணோடு  மண்ணும் 

              உறவாடுதல்  கூடுமோ...

              விண்மீனும் நீர்மீதில் 

              வந்து  விளையாடிடுமோ...

 

நோவது 

             என்ன நெஞ்சே 

             என்னிள நெஞ்சே 

             எதுவும்  அறியாமல் - நீ 

             அவர் நினைவில்  வாடுவது...

பேதைமை 

            விருப்பமில்லாமல் 

            விலகிச் செல்பவரை

            விரும்பி நீயும் 

            காதல்  செய்வது 

            மடமையென உணராயோ...

            இலைமீதில்  நீர் ஒட்டுமா 

            சிலையாகுமா  கல் எல்லாமே 

   

வாழிஎன்  நெஞ்சு.

           வழி தெரியாமல்

            இருளோடு  போவதா...

            விடைத் தெரியாமல்

           உரை சொல்வதா 

 

            தவிக்காதே  என்  நெஞ்சே 

            தருணம் வரும் 

            பொறுப்பாய்  என்னிள  நெஞ்சே...                     

      ---------------------------------------------------------------------------                 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

இருந்துள்ளி  என்பரிதல்  நெஞ்சே  பரிந்துள்ளல் 

பைதல்நோய்  செய்தார்கண்  இல்.                  -1243.

 

              சிந்தைக் கெட்டாயோ - நெஞ்சே 

              சிறுமதித்தானோ  உனக்கு!...

 

இருந்துள்ளி 

              என்னுள்  இருந்து 

              என்நலன் பேணாமல் 

 

என்பரிதல்  நெஞ்சே 

              எங்கோ இருக்கும்  அவரை  எண்ணி 

              அவர் நினைவாய் 

              ஏங்கி  உருகுவதேன்  நெஞ்சே...

 

பரிந்துள்ளல் 

               ஒருகணம் 

              அவர் உன்னை  நினைப்பதுண்டா 

              உன் நினைவுதான் 

              அவருக்குண்டா 

 

பைதல்நோய்  செய்தார்கண்  இல்.

             துளியும்  அவருனை  நினைப்பதில்லை 

             துடிக்கிறாயே  அவரை  நினைத்து 

             காதலாசை   

             அவர் உனக்குத் தந்தார்...

 

             கல்நெஞ்சு போல் 

             அவர் அங்கிருக்கிறார்...

             ஒருநாளும் 

             அவர் உனை நினைப்பதில்லை 

             மடநெஞ்சே - அவர்நினைவால் 

             துடிப்பதேன்...  

               ---------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும்  அவர்க்காண  லுற்று.                                -1244.

 

             என்சொல்  கேளாமல் - நெஞ்சே 

             அவர்காண நீ போகிறாய்...

 

             உன்போல்  என் கண்ணும் 

             திமிர்வாதம்  செய்கிறது 

             அதனையும் அழைத்துக் கொண்டு

             அவரிடம் போய் சேர்...

             அல்லவெனில் 

 

              என் கண்கள் என்னைத்

              தின்று விடும்...

              ஏனெனில் 

 

               அவரைக் காண கண்களும் 

               அளவின்றி  ஆசைக் கொண்டுள்ளன...

               ஆசைக்குத் தடைசெய்தால்        

               ஆங்காரம் கொண்டு தின்றுவிடும்                                                            

               என்னைத்தான்...                      

 -----------------------------------------------------------------------------------

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

செற்றா  ரெனக்கை   விடல்உண்டோ  நெஞ்சேயாம் 

உற்றால்  உறாஅ  தவர்.                                                  -1245.

              பகைவன் எனக்  கருதுவேனா

              பண்பல்லவே!... 

              நெஞ்சே  அவன்மீது

              வெறுப்புக் கொண்டு  ஒதுக்கவா...

              சரியல்லவே!

 

              சொல்நெஞ்சே 

              கள்ளமில்லா  என் மனதில் 

              காதல் பூசூடி 

              காலையும்  மாலையும் 

              அவர் நினைவாகவே உள்ளேன்...

 

                  அழகனே 

                  இளமகனே  - என்  

                  காதல் ஏற்பாய்  என்பேன்...

              மறுத்துவிட்டார் - என்மனதை 

              வெறுத்துச் சென்றார்...

              காதல் உணர்வை கலங்கச் செய்தார்...

              அதனை மனதில் கொண்டு                    

              அவரை நான் 

              வெறுத்து ஒதுக்குவது  முறையாகுமோ...

              உரைத்திடு  நெஞ்சே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கலந்துணர்த்தும்  காதலர்க் கண்டால் புலந்துணராய் 

பொய்க்காய்வு  காய்திஎன்  நெஞ்சு.                             -1246. 

              சின்னதாய்க்  கோபம்...

              வரட்டும்  அவர் 

              வாய்த் திறந்து  நாலுசொல் 

              நறுக்கென்று  நான்  கேட்பேன் 

              என்று சொன்னாயே என் நெஞ்சே 

              வந்தவுடன் - அவர் 

              தொட்டவுடன் நீயும் 

              துவண்டு  மடி சாய்ந்தாயே...

 

              கட்டியணைத்தார் - நீ  

              எட்டி விலகாமல்

              ஒட்டிக் கொண்டாயே நெஞ்சே!

                  முத்தம் தந்தப்போது 

                  முகம் சுளிக்காமல் 

                  முழுதும்  ஏற்றுக் கொண்டாயே  நெஞ்சே...      

 

              என்ன நெஞ்சே - நீ 

              சொன்னதை  மறந்தாய்...

              இன்பத்தில் முயங்கினாய் 

              சரியா என  நான்  கேட்டால் 

              பொய்க் கோபம் செய்கிறாய் 

              பொல்லா  நெஞ்சே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

காமம்  விடுஒன்றோ   நாண்விடு  நன்னெஞ்சே 

யானோ  பொறேன்இவ்   விரண்டு.                 -1247. 

 

காமம்  விடுஒன்றோ   நாண்விடு

                கட்டியவன்  மீது 

                என்கோபம்  தீரவில்லை...

                பேசமறுத்து 

                முகத்தைத்  திருப்பிக் கொண்டேன்

                தூக்கமும்  வரவில்லை...

 

               பரந்த  மார்பை  எனக்குக் காட்டி

               பஞ்சணையில்   படுத்திருக்கிறான்...

               உருண்ட  தோள்களோ - என்னை

               சுண்டியிழுக்கிறது...

 

              இதழ் கவ்வும் இதழ்க் கண்ணில் பட்டு

              இதயம்தனைத் துளையிடுகிறது...

              சில்லென்ற  காற்றும் - என் 

              சின்ன மேனிக்குள்  சிலிர்த்தது...

 

            காமத்தீ  சுட்டெரிக்கிறதே...

            உருண்டுச்  சென்று - அவர் 

            உணரா  வண்ணம் 

            பூப்போல்  என் கரத்தை  - அவர் 

            மார்மீது  வைத்திடவா...

            உறக்கத்தில்  தவறி 

            கால்பட்டது போல் 

            அவர்மீது 

            கால் போட்டிடவா...

 

           பாழும்  நாணம் 

           பாவையென்  காமத்துக்குத்

           தடைப் போல் தடுக்கிறதே...

 

நன்னெஞ்சே 

            நெஞ்சே என் நன்னெஞ்சே 

            கெஞ்சிக்  கேட்கிறேன்  உன்னிடம் 

           வஞ்சிக்காதே  -  வாழ்வில் 

            நஞ்சு  செய்யாதே

            நாணத்தை  விரட்டு 

            அல்லவெனில் - என் 

            காமத்தை துரத்து...

யானோ  போறேன்இவ்  விரண்டு.

            நெஞ்சே 

            காமத்தையும்  நாணத்தையும் 

            ஆழமாய் என்னுள்  வைத்தாய்...

            மூழ்கி  நான்  மடிந்து  விடுவேனோ 

            தாங்காது  என்மேனி 

            இரண்டில்  ஒன்றை 

            என்னிலிருந்து  எடு  நெஞ்சே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பரிந்தவர்  நல்காரென்று  ஏங்கிப்  பிரிந்தவர்

பின்செல்வாய்  பேதைஎன்  நெஞ்சு.        -1248.

 

            சிதறும்  சிந்தனைக்கு 

            சொந்தக்காரன்  மானிடன் 

            தெரிந்தோத்  தெரியாமலோ

            செய்துவிட்டான்  தவறு...

 

பரிந்தவர் 

            செய்த  தவறைத் திருத்தித் 

            திருந்தி  வந்தான்...

 

நல்காரென்று 

            திரும்பிவிட்டானே - முகம் 

            திருப்பி நின்றாயே 

            தஞ்சமென்று  வந்தவன் 

            தனித்து  நின்றான்...

 

ஏங்கிப்  பிரிந்தவர்

            தவித்த  நெஞ்சோடு 

            தான்வந்தப் பாதையில் பிரிந்தான்...

 

பின்செல்வாய்  பேதைஎன்  நெஞ்சு.

            பிரிந்து  சென்றவனை எண்ணி 

            உருகும் நெஞ்சே 

            எனக்கொன்றுச் சொல்    

            வந்தவரை வாவென 

            ஒற்றைச் சொல் வரவில்லை - உன் 

            வாயிலிருந்து!

 

            நெஞ்சினில்  பாசம்  மறைத்து 

            பொய் சினம் காட்டிப் போகவிட்டாய் நீ 

            போனவன் பின் - நீயும் 

            போகிறாயே  பேதை  நெஞ்சே... 

         --------------------------------------------------------------------------- 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

உள்ளத்தார்  காத  லவராக  உள்ளிநீ 

யாருழைச்  சேறிஎன்  நெஞ்சு.   -1249.

 

           நெஞ்சே  நெஞ்சே  - உன்னை 

           சினப்பதா  நகைப்பதா  நானறியேன்...

 

உள்ளத்தார்  காத  லவராக 

           மனம் கவர்ந்தவரின் 

           இருப்பிடம் தேடிச் செல்வது

           இயல்பன்றோ  எவருக்கும்...

 

           நெஞ்சே  - நின் 

           காதலரைத் தேடிப்

           போவது  எங்கே கூறு...

 

உள்ளிநீ 

           அவர்நினைவை 

           ஆழ்மனதில்  வளரச் செய்து 

           உன் நினைவை  நீ  இழந்தாயே...

           என் நெஞ்சே 

           உன் நினைவை  எண்ணி 

           சினம்  கொள்வதா 

           நகை செய்வதா...

 

 

யாருழைச்  சேறிஎன்  நெஞ்சு

          என் 

          உள்ளத்தில்  உல்லாசமாய்ப் பாடல்  பாடி 

          என்னவன்  உலாவுகிறான்...

 

           என் 

           உள்ளத்தில்  நின்று  உணர்வுகளை                         

           கிள்ளுகிறான்...

           இதனை 

           உணராமல் வேறெங்குப் போகிறாய்...

 

           என் நெஞ்சே 

           என் சொல்வேன் 

           உன் அறிவின்மையை...                                                         -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

துன்னாத்  துறந்தாரை  நெஞ்சத்து  உடையேமா 

இன்னும்  இழத்தும்  கவின்.                                 -1250.

 

           என் கண்ணீரையும் புறந்தள்ளி 

           பெண்மனதை  நெருப்பிலிட்டாய்...

           என்னிதயதைத்  துளையிட்டு

           இனியவனே  பிரிந்தாய்!...

 

           இன்னுமா  உன்னை 

           என்நெஞ்சு  மறக்கவில்லை...

           நெஞ்சிலிருந்து  நீங்கா 

           உன் நினைவலைகள் 

           நெருப்பாய்ப்  படர்ந்து

           உணர்வுகளைப்  பொசுக்குகிறதே...

 

           கண்ணீரையும் உறிஞ்சி - என் 

           கனவையும்  சுடுகிறது...

           பொல்லாத  நினைவே 

           உள்ளத்திலிருந்துச் சென்றுவிடு

           அல்லவெனில் - என் 

           அழகு யாவும்   அழிந்துக் கெடுமே...    

         -----------------------------------------------------------------------

 

 

 

கற்பியல்                                                                                       அதிகாரம்:126.

                                                    நிறையழிதல் 

காமக்  கணிச்சி  உடைக்கும்  நிறையென்னும் 

நாணுத்தாழ்  வீழ்த்த  கதவு.                             -1251.

 

              காமம்  எனும் 

              கடுங்கோடாரி செய்த

              கொடுஞ்செயல்  கேளடி தோழி...

 

              இரும்பினும்  உறுதிப் பாய்ந்த

              கதவொன்றை 

              உடைத்துத்  துகளாக்கியதடி

 

              நாணமெனும்  பூட்டுக் கொண்டு

              மனவுறுதியெனும்  கோட்டைக்குள் 

              உணர்வுதனைப் பூட்டி வைத்தேன்...

 

             காமமெனும் கடுங்கோடாரி 

             கோட்டையைத் தகர்த்தடி

             நிறையிழந்து  நானும்  நிற்கிறேன் 

             என்னருமைத் தோழியே...       

           ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                          அரங்க கனகராசன் உரை.

காம  மெனஒன்றோ  கண்ணின்றென்  நெஞ்சத்தை 

யாமத்தும்  ஆளும்  தொழில்.                                    -1252.

           காமமென  ஒன்றினை 

           பூவெனக்  கூறுவர்...

           நானதனை  தீயென்பேன்...

               என்னுள்  புகுந்து 

               எந்நேரமென்றும்  பாராமல் 

               என்நெஞ்சத்தை சுடுகிறதே...

               நள்ளிரவிலும் 

               நல்லதோர்  உறக்கம்தனை கெடுத்து 

               காமத்தீ  என் நெஞ்சில்  தாண்டவமாடுகிறது...

            --------------------------------------------------------------------------

மறைப்பேன்மன் காமத்தை  யானோ  குறிப்பின்றித் 

தும்மல்போல்  தோன்றி  விடும்.                                -1253.

             மறைக்க  முயன்றும்  முடியவில்லை  -                 

             காமத்தைத்

             தடுத்து  நிறுத்தவும்  தெரியவில்லை - அது 

             படுத்தும்  பாடு  அளவில்லை...

            சொல்லிவருமா  தும்மல் 

            சொல்லாமலே  வரும்  தும்மல் போல் 

            நெஞ்சில் 

            பட்டெனத்  தோன்றி 

            என்னைப்

            படுத்தும்  ஓராயிரம்  பாடு.

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை. நிறையுடையேன்  என்பேன்மன்  யானோஎன்  காமம் 

மறையிறந்து  மன்று  படும்.                                          -1254.

 

           மனவுறுதி  யுடையவள்  நான் 

           எளிதில்  -  என் 

           நிறையழிந்திடாது என்பேன்...

            

            ஆயினும் 

            மறைந்து  நில்லாமல் 

            என்காமம் 

            நிறை  எனும்  கோட்டையைத் தகர்த்து

            நெஞ்சுக்குள் - காம 

            நெருப்பினை  மூட்டிவிடும்... 

           --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

செற்றார்பின்  செல்லாப்  பெருந்தகைமை காமநோய் 

உற்றார்  அறிவதொன்று  அன்று.                                   -1255.

        என்நெஞ்சை  நோகச் செய்தவன்

        எவன் 

        என்காதல்  தூக்கியெறிந்தவன் 

        எவன் 

        வெறுத்தவன் வெறுப்பைச் செய்தவன்

        எவன்  

        அவன் நினைவை 

        நெஞ்சில்  தங்குவது  அழகோ 

 

        அவன் 

        விழிப்பார்வைக்காக - என் 

        இளநெஞ்சு ஏங்குவது  நன்றோ...

 

        காமநோய்  என்னுள்  புகுந்து 

        பகுத்தறிவைப் பாழ் செய்ததடி...

        பாதகன்  என்று தெரிந்தும் - என்நெஞ்சை 

        நோதல்  செய்தவன் என்றாலும்  அவன் 

        தோள் தழுவிடவே - என்னுள் 

        ஆசை செய்கிறதடி...

              அறிந்தேன்  நானிப்போது 

              நெஞ்சில்  காமம்  வந்திட்டால் 

              அறிவும்  கெடுமென்று...   

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

செற்றவர்  பின்சேறல்  வேண்டி  அளித்தரோ 

எற்றென்னை   உற்ற  துயர்.                         -1256.

              நெருப்பினை  விழியில்  கக்கி 

              நெஞ்சுக்குத்  துயர் செய்தவன்...

              காலடித்  தூசியென  - என் 

              காதலை  மிதித்தவன்...

 

              ஆயினும்  ஆயினும் 

              எனக்கு  அவனே  அவனே 

              அழகன்  அழகன்!... 

    வெறுத்துச் சென்றாலும் - என்னை 

    மறுத்து  விலக்கினாலும்  -  அவனை 

    விரும்பித்  தொடர்கிறதே  நெஞ்சு...

             கண்ணில்லைக்  காமத்துக்கு  என்பர் 

             கண்டேன்  நானிப்போது அதனை 

             வெறுக்கப்பட வேண்டியவனையும் - நெஞ்சு 

             விரும்புகிறதெனில் 

             காமத்துக்குக் கண்ணில்லைத்தானே  

             காமம்  என்னுள்  வளர்வது 

             இதற்காகவோ...

    என்னவென்று  சொல்வது

    காமத்தின்  வலிமைதனை!

    என்னுள்  ஆழ்ந்து 

    என்னைத்  துடிக்கச்  செய்கிறதே...              

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

நாணென  ஒன்றோ  அறியலம்  காமத்தால் 

பேணியார்  பெட்ப  செயின்.                       -1257.

 

            நாணம்  எனும்  ஒன்றை 

            வேரொடுப் பிடுங்கி  எறிவேன்...

            நாணமா - அது எதுவென 

            அறியேன்  என்பேன்...

 

            காமம்  நெஞ்சில்  கனியும் 

            பொழுதெல்லாம் 

            மனங் கவர்ந்தவன் - என் 

            மனம்போல் 

            தழுவித் தாகம்  தணிப்பானெனில் 

            நாணம்  எனும்  ஒன்றை 

            வேரோடு  பிடுங்கி  எறிவேன்...    

    --------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பன்மாயக்  கள்வன்  பணிமொழி  அன்றோநம்  

பெண்மை  உடைக்கும்  படை.                        -1258.

                                     மாயம் = பொய்.

 

          மாயப் பேச்சுப் பேசி  - நம் 

          மனதில்  கள்ளமாய்  நுழைவான் 

          தோழி 

          பேசும் பேச்சு உண்மைப் போலிருக்கும்...

                 வீண் பேச்சையும் 

                 தேன் தொட்டுப் பேசி  - நம் 

                 நெஞ்சில்  ஈரம்  செய்திடுவர்...

          வானத்து நிலவையும் 

          வாய்ச் சொல்லால்  இழுத்து - நின் 

          காலடியில்  வைப்பேன்  என்பர்...

                  தேன்சொட்டும் 

                  மாயச் சொற்களன்றோ

                  தோழி 

                  நம்மைக்  கலங்கச்  செய்கின்றன...

        

        தோழி 

        நம்மை மயங்கச் செய்து  - நம் 

        பெண்மை  சிதறச் செய்யும்

        வன்மைஆண்மகனின் 

        வண்ண  பேச்சிலிருக்குதடி...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

புலப்ப  லெனச்சென்றேன்  புல்லினேன்  நெஞ்சம் 

கலத்த  லுறுவது  கண்டு.                                         -1259.

 

             பிரிந்து சென்று - என்மனதில் 

             வருத்தம்  தந்தவர்  வந்துவிட்டார்...

 

புலப்ப  லெனச்சென்றேன் 

             நான் 

             பட்ட  வேதனைகளை  -  அவரிடம் 

             புலம்பி  - நெஞ்சை 

             கலங்கச்  செய்திடவே சென்றேன்...

 

புல்லினேன் 

             உறுதியிழந்த  நெஞ்சினள் நான் 

             என்னவனைக்  கண்டதும்

             கட்டித் தழுவிக் கொண்டேன்...

நெஞ்சம்  கலத்த  லுறுவது  கண்டு.

             ஊடச்  சென்றது  நான் 

             என்னுள்ளமோ 

             என்னிலும்  வேகமாய்  அவரோடு 

             கூடச் சென்றுவிட்டது...

 

             நெஞ்சின்  நிலையை  மீறி - இந்த 

             பிஞ்சுமகள்  நான் 

             என்செய்வேன்...        

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

 நிணந்தீயில்  இட்டன்ன  நெஞ்சினார்க்கு  உண்டோ 

புணர்ந்தூடி  நிற்பேம்  எனல்.                                     -1260.

 

          நெருப்பில்  நெய்  வார்த்தால் 

          எரியாதோ...

          நெஞ்சில்  காமம்  ஊறினால் 

         பெருகாதோ...

 

          பெருகும்  காமத்தைத்  தடுப்பேனா

         தடுத்து 

         என்னவனோடு  ஊடி  நிற்க 

          எனக்கும்  திறன்  உண்டோ...

 

          ஊடி  நின்றால் 

          உருகும்  என்மேனி 

          வாடி  விடுமடி...

 

          காமத்தில் உருகி 

          காதலன்  மடிமீது சாய்ந்தேன்

          இதுவன்றி 

          என்நிலை  வேறேதடி...   

          --------------------------------------------------------------------------

 

 

 

கற்பியல்                                                                                       அதிகாரம்:127.

                                      அவர்வயின்  விதும்பல் 

வாளற்றுப்  புற்கென்ற  கண்ணும்  அவர்சென்ற 

நாளொற்றித்  தேய்ந்த  விரல்.                          -1261.

 

             இன்று  வருவார் 

              நாளை  வருவார்  -  என்று 

             ஒவ்வொரு  நாளும் 

             ஓயாமல்  வழிப் பார்ப்பேன்... 

 

வாளற்றுப்  புற்கென்ற  கண்ணும்

             ஓய்ந்த  விழிகள் 

             ஒளியிழந்தன...

             மங்கிய  கண்களோடு 

             மண்பாதையை  இன்றும்  பார்க்கிறேன்...

 

அவர்சென்ற  நாளொற்றித் 

             மன்னவன்  சென்ற  நாளை 

             மாடத்துச் சுவற்றில்

             மாத்  தொட்டு

 

தேய்ந்த  விரல்.

               புள்ளியிட்ட  விரலும் 

               இல்லையெனும்படி 

               இறுகத்  தேய்ந்ததே...

        ----------------------------------------------------------------------------  

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

இலங்கிழாய்  இன்று  மறப்பின்என்  தோள்மேல் 

கலங்கழியும்  காரிகை  நீத்து.                             -1262.

                                       இலங்கிழை = பெண்.

 

                 பிரிவுத்  துயர்செய்து 

                 பெருந்துன்பம் இழைத்துச் சென்றவனை

                 மறந்துவிடு  என்கிறாயே...

இலங்கிழாய்  இன்று  மறப்பின் 

               எழில் தோழி 

               என்னவன்  நினைவுகளை 

               என்நெஞ்சு சுமந்துக் கொண்டிருப்பதால்

               இன்னும் நான் அழகுத் தாங்கி  இருக்கிறேன்...

 

               நினைவுகளை  நெஞ்சிலிருந்து 

               நீக்கிவிட்டால் 

  

என்  தோள்மேல் 

              என்னவன்  தொட்ட 

              என் எழில் தோள் மெலியும்...

 

கலங்கழியும்  காரிகை  நீத்து.

               காரிகை  நான் சூடிய  அணிகளும் 

               கழன்று  நழுவும்...

               கட்டிளமேனி  என்மேனி 

               சட்டென  எலும்பாகும்...   

கற்பியல்                                              அரங்க கனகராசன் உரை.

உரன்நசைஇ  உள்ளம்  துணையாகச்  சென்றார்

வரல்நசைஇ  இன்னும்  உளேன்.                    -1263. 

 

               நெஞ்சில்  உறுதியுண்டு  -  கண்ணே 

               நெடுந்தொலைவு  நான்  சென்றாலும் 

               தனியாய்ச்  செல்வதாய்  -  தங்கமே 

               தவிக்காதே...

               

              உள்ளத்தில் உன்னைத் துணையாக்கிச் 

              செல்லுகிறேன்  

              வருவேன் நான்  - வெற்றிவாகையுடன் 

              என்றுச் சொல்லி

              என்னவர் சென்றார்...

 

               சொன்னதைச் செய்வார்

               செய்வதைச்  சொல்வார்...

               எதன்பொருட்டும்  நெஞ்சே  நீ 

               கலங்காதே 

               வருவார்...

 

                வடிவழகனின்  வருகையின்  பொருட்டு 

                வாழ்கிறேன்  இன்னும்  நான்...    

          ---------------------------------------------------------------------------

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கூடிய   காமம்  பிரிந்தார்  வரவுள்ளிக்

கோடுகொ  டேறும்என்  நெஞ்சு. -1264.

             

               ஆசையாய்  நானுமவரும் 

               ஆரத்தழுவி  இன்புற்ற  வேளையில் 

               கோரமாய்ப்  பிரிவும்  வந்ததே...

               போனவர்  வருவார் வந்து 

     

               வந்தெனைத் தழுவி 

               சிந்தைக் குளிர

              முத்தமாயிரம்  தருவார்...

 

               அம்மம்மா 

               அவர் வருகையை 

              உள்ளத்தில்  நினைத்தாலே 

 

              நினைவெல்லாம்  தேனாகுதம்மா...

              நெஞ்சமோ 

              உயர உயரத்  தாவிக்

              குதிக்குதம்மா...       

       ---------------------------------------------------------------------------

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

காண்கமண் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என்  மென்தோள்  பசப்பு.                            -1265.

 

              வாவா 

              கண்ணாளா 

              கண்ணால் உன்னைக் காணவே 

              கயல்விழியாள்  காத்திருக்கிறேன் 

              வா  வா  கண்ணாளா...

 

              காற்றோடு  நான்விட்டத் தூது

              காதோடு கேட்டதா 

              முகில் பார்த்தும்  சொன்னேன்  - இடி 

              முழக்கமாய்  அது சொல்லவில்லையா 

              வா  வா  கண்ணாளா...

              கண்ணார  நானுன்னைக் காணவே!

             

              கண்ணார  நானுன்னைக் கண்டாலே

              பசந்த  என் தோள்கள் 

              வசந்தமாகும்...

 

             இறுகத் தழுவியபோது - என் 

             இளந்தோள்கள்  வலித்தனவே!

             இளந்தோளின்  வலிநீங்க 

             இனியவனே  தழுவிட  வா  வா 

             கண்ணாளா  வா... வா...     

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

வருகமன்  கொண்கன்  ஒருநாள்  பருகுவன் 

பைதல்நோய்  எல்லாம்  கெட.                  -1266.

 

             அதரங்கள்  அழகிழந்தன 

             மதுரவிழிகள்  பொழிவிழந்தன 

             மங்கையிவளைப் பிரிந்து

             கொண்கன்  சென்றதால் 

             மொத்தமாய்  யிவள் 

             மெலிந்துருகினளென்று - ஊரில் 

             மொழிகின்றனர்  பலர்...

 

வருகமன்  கொண்கன்  ஒருநாள் 

             எழில் மைந்தன் 

             என்னைத்தேடி  வருவான்  ஒருநாள் 

             

பருகுவன் 

            அவன்  அதரம் கவ்வி 

            ஆசையமுது பருகி  மகிழ்வேன்...

 

பைதல்நோய்  எல்லாம்  கெட.

            பசந்த என்மென் தோளும் 

            தளர்ந்த  மேனியும் மார்பும் 

            வளம்   கூடிடக் கூடுவேன்

            இளமகனோடு  இனிதாகவே...     

   ----------------------------------------------------------------------------

கற்பியல்                                                                              திருக்குறள் உரை. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் 

கண்அன்ன  கேளிர்  வரின்.                                                     -1267.

 

             காற்று  வீசினால் 

             வாசல்  வந்து  நிற்பேன் 

             தூது  வந்ததோவென்று...

 

             குயிலோசைக் கேட்டால்

             செவிமடுத்துக் கேட்பேன்

             செய்தி  சொல்லுமோவென்று 

 

             மழைத்துளிகள் - என்மேனியை 

             ஈரம்  செய்தாலும்  - மின்னல் 

             கீற்றுப் பார்த்து  நிற்பேன் - என் 

             மன்னவன்  முகம்  தெரிகிறதாவென்று...

 

             நெஞ்சில்  நெருப்பெரிய 

             நெடுந்தெருவைப் பார்த்து நின்ற 

             எனக்கொரு  சேதி 

             இன்று வந்தது...

             இனியவன்  வருவானென்று...

 

புலப்பேன்கொல் 

             இன்முகமேந்தி 

             என்னிடை தழுவ

             என்னவன்  நெருங்கும்போது 

             பொய்க்கோபம் கொண்டு - நான் 

             விலகிப்  படுக்கவோ...

 

புல்லுவேன்  கொல்லோ 

             இனிய  விழியால் 

             என்னை  நோக்கி 

             புன்னகையால் என்நெஞ்சை  தீண்டுவானே

             என்ன செய்வேன்...

 

            என்னிதயம் இசைப்பாட 

             என்னவனை 

             இருகைகளாலும் 

            இறுகத்  தழுவிடவோ...        

                

 கலப்பேன்கொல் 

              ஆசையாய் ஒருசொல்லும் 

              பேசிட இடந்தராமல்  - என் 

              தாகம்  தணியவே - அவனோடு

              கூடிக்  களிப்பேனோ   

 கண்அன்ன  கேளிர்  வரின்.

             எது செய்வேன்  என்று 

             என்நெஞ்சம்  அறியாதே 

             கண்ணின்மணியாம்  - என் 

             கண்ணாளன்  வந்தால்...

கற்பியல்                                                        அரங்க கனகராசன் உரை.

வினைகலந்து  வென்றீக   வேந்தன்  மனைகலந்து 

மாலை  அயர்கம்  விருந்து.                                      -1268.

 

                தீட்டியத் திட்டத்துடன்

                வெற்றிவாகை சூடினேன்

                வேந்தன் மகிழவே...

 

                தாய்மண்  காக்க  - நெடுங் 

                காலம்  இல்லாளை பிரிந்தேன்    

                இனி 

                இல்லம்  திரும்பி 

                இல்லாளைத் தழுவி 

                இமைநேரம்  வீண்  செய்யாமல் 

 

                நெஞ்சில் நாளும்  நாளும் 

                நினைவலைகள்  பொழிந்த 

                இனியமாலைப் பொழுதுக்கு

                சுவையாய் விருந்தும்  தந்திடுவேன்... 

  ------------------------------------------------------------------------                          

 

 

 

 

 

கற்பியல்                                                          அரங்க கனகராசன் உரை.

ஒருநாள்  எழுநாள்போல்  செல்லும்சேட்  சென்றார் 

வருநாள்வைத்து  ஏங்கு  பவர்க்கு.                          -1269.

 

             நாளே  கழியாயோ 

             நானிங்கு  துடிக்கிறேன்...

             ஓராண்டுதானே  கண்ணே 

             ஒருநாள் போல்  கழிந்திடும்...

             வருவேன் உன்னை பருகுவேனென்று

             உரைத்துச்  சென்றான் காதலன்...

 

ஒருநாள்  எழுநாள்போல்  செல்லும் 

              ஆனாலும் 

              நாள் மட்டும் நகர  மறுக்கிறதே 

              ஒருநாள்  எழுநாள் போல்  நகர்ந்தால் 

             என்று காண்பேன் என்னவனை...

 

சேட்  சென்றார் 

              நெடுந்தொலைவுச் சென்ற காதலன்

 

வருநாள்வைத்து  ஏங்கு  பவர்க்கு.

            வருநாள்  பார்த்து 

            வாடிநின்ற 

            வண்ணப்பெண்ணின் - சோக

            சொல்லம்மா   இது...     

 -----------------------------------------------------------------------------

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் 

உள்ளம்  உடைந்துக்கக்  கால்.                                             -1270.

           

           ஈட்டி  வருவேன்  கண்ணே 

           ஆயிரம்  பொருளென்று 

           ஆண்டுப் பலவாயிற்றுச் சென்று  - என் 

           தேகம்  நூலாயிற்று...

 

பெறின்என்னாம் 

            பொன்னும் மணியும் 

            பொருள் பலவும் - இன்னும் 

            பிறவும்  ஈட்டினால்  என்ன...

 

பெற்றக்கால்  என்னாம் 

             ஈட்டப்பொருள் கொண்டு - நிலை 

             நாட்டப்படுவதுதான் என்ன...

 

உறின்என்னாம் 

            வாழவேண்டிய  நாள்யாவும் 

            வீணாயிற்று...

            வாழ்நாளின்  இறுதியில் 

            மாளிகையும் மதுர உணவும்தான்  எதற்கு...

 

உள்ளம்  உடைந்துக்கக்  கால்.

             இளமையின்  நெருப்பில்  சிக்கி 

             இதயம்  சிதைந்து விட்டது - விரகக்

             கொடுமையில்  - என் 

             தளிருடல்  தவிடாயிற்று...

 

            உள்ளம்  உடைந்து 

            உடல்மெலிந்து 

            கொள்ளை நோயும் குடியேறிற்று...

 

            இளமைப் பழமையாயிற்று

            இனியக் காமம் - என்னுள் 

            சாம்பலாயிற்று...

 

             முதுமைக் கண்டு - நிலைத்

             தடுமாறுங்காலத்தில்

             பொருள் ஈட்டி வந்தென்ன

             கருகிய  எனதிளமை 

             ஒருபோதும் மலராதே...

    ----------------------------------------------------------------------------

 கற்பியல்                                                                                       அதிகாரம்:128.

                                               குறிப்பறிவுறுத்தல் 

கரப்பினுங்  கையிகந்  தொல்லாநின்   உண்கண் 

உரைக்க  லுறுவதொன்று  உண்டு.                  -1271.

              உள்ளத்தில்  ஒன்று  வைத்து 

              உதட்டில்  வேறு  சொல்கிறாய் 

              செல்லக்கிளியே - நீ 

              சொல்ல  மறைப்பதென்ன...

கரப்பினுங் 

               மறைத்து நீ  வைத்தாலும் 

கையிகந்  தொல்லாநின் 

               மடைதிறந்த வெள்ளமென 

               தடை  மீறி தகவல் கூறும் 

உண்கண் 

               உந்தன் மைவிழிகள்  தானே 

               மறந்ததேன்  நீ 

உரைக்க  லுறுவதொன்று  உண்டு.

               நெஞ்சுக்குள் - நீ 

               செய்தியைத் தேக்கிக் கொண்டாலும்

               கண்ணுக்குள்  கண்டு - நான் 

               தகவல்  அறிவேன்...

               தகவல் தொடர்பு  மையமோ - உந்தன் 

               மையுண்ட  விழிகள் 

               மங்கை  இதனை  நீ  அறியாமல் 

               மறைத்து  வைப்பதேன்...      

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் 

பெண்நிறைந்த  நீர்மை  பெரிது.                                 -1272.

 

            எழில் மகளுக்கு  எழில் தருவது 

            எதுவென்று கேட்டால்

            கருவிழிகள்தான்  என்பேன்...

 

           கண்ணழகைக் கண்டு நின்றால் 

           நெஞ்சமெல்லாம்  தேனாகும்...

           கண்ணழகியின் 

           இன்னுமோர் அற்புதம் 

           என்னவென்று கேட்டால்

           இளங்குருத்து மூங்கில்போல் 

           இளமயிலவள் தோளழகு  என்பேன்...

 

           பெண்ணவளுக்கு பேரெழில் தருவது 

           கண்ணழகோ - கவின் 

           தோளழகோ  அல்ல...

 

           பெண்தன்மைப் பெரிதும் கொண்டு 

           பேதையிவள்  திகழ்கிறாள்...

           அதுவே 

           அவள் அழகின்  காரணமென்று 

           இதமாய்  இனிதாய்க் கூறுவேன்...    

 ---------------------------------------------------------------------------

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

மணியில்  திகழ்தரு  நூல்போல்  மடந்தை 

அணியில்  திகழ்வதொன்று  உண்டு.   -1273.

 

            மணிமாலையில் 

            திகழும்  நூல்போல் 

            மடந்தையிவள் 

            மதுரஞ் சொறியும் அழகிலும் 

            மறைந்து  திகழும் 

            குறிப்பொன்று உண்டென்பேன்...

  -------------------------------------------------------------------------

 

முகைமொக்குள்  உள்ளது  நாற்றம்போல்  பேதை 

நகைமொக்குள்  உள்ளதொன்று  உண்டு.        -1274.

 

             மலர் மொட்டுக்குள் 

             மனம் மயக்கும் - நறு 

             மனம் இருப்பது போல் 

 

             மங்கையிவள் 

             குறுநகைக்குள் - உள்ளம் 

             குளிர்விக்கும் 

             அரும்பொருளொன்று 

              மறைந்துள்ளது... 

   ------------------------------------------------------------------------------

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

செறிதொடி  செய்திறந்த  கள்ளம்  உறுதுயர் 

தீர்க்கு  மருந்தொன்று  உடைத்து.          -1275.

 

            கைக் குலுங்க

            வளையணிந்த 

            சிலையோ - அல்ல 

            சித்திரமோ - என் 

            சிந்தைக் கவர்ந்தவள்...

 

            அவள்  காட்டியது 

            கள்ளப் பார்வையோ 

            அல்ல...

 

           என் 

           உள்ளத்தில் உறைந்த 

           துயர்தனைத் தீர்க்கும்

           மருந்தல்லவோ  அது...

  ------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பெரிதாற்றிப்  பெட்பக்  கலத்தல்  அரிதாற்றி 

அன்பின்மை  சூழ்வது  உடைத்து.           -1276.

 

              வாரி  வழங்கி 

              வறியவர் துயர் ஆற்றுதல் போல் 

 

பெரிதாற்றிப்  பெட்பக்  கலத்தல் 

              என்னை 

              அள்ளியணைத்து - என் 

              உள்ளத்தில்  துயர்  ஆற்றுவதேன்...

 

அரிதாற்றி 

              மீண்டும்  கொடும்பிரிவை 

 

அன்பின்மை 

              இரக்கமின்றி 

 

சூழ்வது  உடைத்து.

              எனக்கு 

              வேலியாக்கிச் செல்வதற்கோ...

  --------------------------------------------------------------------------- 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

தண்ணந்  துறைவன்  தணந்தமை  நம்மினும் 

முன்னம்  உணர்ந்த  வளை.                           -1277.

             வஞ்சியென் 

             நெஞ்சினை 

             குளிரச்  செய்தத் தலைவன்

                    இரக்கமின்றி இன்று 

                    பிரிந்தானே  மீண்டும்...

                    பிரிவு  எனும்  சேதி - என் 

                    மனமறியுமுன்னரே 

            கைவளை  அறிந்ததோ...

            கழன்று தான் - கீழே 

            வீழ்ந்ததே...

    -----------------------------------------------------------------------------

நெருநற்றுச்  சென்றார்எம்  காதலர்  யாமும் 

எழுநாளேம்  மேனி  பசந்து.                         -1278.

            நெஞ்சுக்குத்  துயர்த் தந்து

            நெடுந்தொலைவுப் பிரிந்தான் என்  காதலன்...

            ஒருநாள்தான்  ஆயிற்று  அவன்  பிரிந்து 

            ஆயினும் 

                   ஏனோ நான் 

                   சோர்ந்து விட்டேன் 

                   சோகத்தில்  மூழ்கி...

            ஒருவாரம்  ஆனது போல் - என் 

            இளமேனிப் பசலை நோயால் 

            மெலிந்ததே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி  அடிநோக்கி 

அஃதாண்டு  அவள்செய்  தது.                                      -1279.

 

            கழன்று  விழும் 

            கைவளையை 

            கண்கொட்டாமல்  பார்த்தாள்...

 

            தழுவப்பட்ட மென்தோளையும்

            தடவிப் பார்த்தாள்

            தாகத்தோடு...

 

            பிரிந்து சென்ற காதலன் 

            வாசலில்  பதித்துச் சென்ற

            பாதச்  சுவடு  நோக்குகிறாள்...

 

           பாவையிவள் 

           என்ன செய்கிறாள்...

           பைத்தியம்  ஆனாளோ...

------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் 

காமநோய்  சொல்லி  இரவு.                                              -1280.      

                என்னருந் தோழனே

                என்னநீ சோகமானாய்...

                ஊரிலிருந்துத் திரும்பி - ஒரு 

                நாளும்  ஆகவில்லை...

                ஏன்நீ  துயரோடு 

                காணப் படுகிறாய்...

 

               என்னருந் தோழனே 

               என் நெஞ்சின் சுமையைக் கூற

               உன்னை விட்டால் - வேறு  எவருண்டு...

               என் மொழிக் கேட்டு

               எனக்கோர்  ஆறுதல்  கூறு...

               ஊருக்குச் சென்று - உடனே

               திரும்பினேன்  இங்குப்

               பணியின்  பொருட்டென்று 

               அறிவாய்  நீயும்...

 

பெண்ணினால்  பெண்மை  உடைத்தென்ப 

              நாணமென்னும்  நன்கலம் சூட்டிப்

              பெண்மைக்குப் பெருஞ்சிறப்புச் செய்பவள்

              பெண்ணல்லவா...

              இதனை  நான்  -  என் 

              இனியாளிடம்  கண்டேன்...

              பணியின் பொருட்டு      

              பைங்கிளியே 

              செல்கிறேன்  விடைக் கொடு என்றேன்...

 

              தழுவி சுகம்  தந்தவனே 

              விலகி நீ  தொலைவுச் சென்றால்

              பொழியும்  காமமழையில் 

              தொலைவேன்  நான்...

 

              காமத்  தொல்லை தாங்காமல்

              கேவி  யழுவேனென்று 

              வாய்த் திறந்து

              வனிதைச் சொன்னாளில்லை...

              நாணம்  கொண்டு  அடக்கி நின்றாள்...

 

              காமவேதனையிலும் 

              காரிகையவள் 

              காட்டவில்லை  நெஞ்சின்  துயரெனில் 

              பெண்மைக்குப் பெருஞ்சிறப்புச்             

              செய்தவளன்றோ 

              என் கண்மணி...

 

            ஆயினும்  நண்பா 

            அவள் நெஞ்சின் துயரைக்

கண்ணினால் 

            கண்டேன்  கண்ணில் 

            என் கட்டழகி  தன் கண்ணிரண்டில் 

 

காமநோய்  சொல்லி  இரவு.

         காமநோய்க் கண்டு

         வானளவுத் துயரடைவேன்

         கண்ணாளா 

        

          பெண்னெனக்குப் பெருந்துயர் தராதே

          போகாதே  பொன்னழகனே  என்று 

          கெஞ்சினாள்...

          கெஞ்சிய விழிகள் - என் 

          நெஞ்சில்  காட்சிகளாய்  விரிந்து 

          நெடுந்துயர்த் தருகிறது தோழனே 

          என்மொழிச் சொன்னேன் 

          எனக்கோர்  ஆறுதல்  கூறு...                

      -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                                                       அதிகாரம்:129.

                                       புணர்ச்சி  விதும்பல் 

உள்ளக்  களித்தலும்  காண  மகிழ்தலும் 

கள்ளுக்கில்  காமத்திற்கு  உண்டு.   -1281.                             

          கண்ணிரண்டை  மூடி 

          காரிருளில்  முடங்கி  -  பெண்ணின் 

          பேரெழில்  மேனியை 

          பேதை  நெஞ்சம்  நினைத்தாலே இனிக்கிறது...

 

          கட்டழகு  மேனியை

          கண்ணிரண்டால் பார்த்தாலும் 

          இன்பம்  அளவின்றி  ஊறுதே...

 

          இந்த இன்பம் மதுவில்  இல்லை 

          காமத்திற்கு மட்டுமே  உண்டெனில் 

          மாறுண்டோ...

           --------------------------------------------------------------------------  

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும்  பனைத்துணையும் 

காமம்  நிறைய  வரின்.                                                                 -1282.

 

             சிறிதளவும்  ஊடுதலும் 

             சிந்தையிலும்  கூடாது...

             கொட்டும்  பனியிலும் 

             குளிர்த்தரு இரவிலும் 

             ஏகாந்தப் பொழுதிலும்

 

             கார்மேகம்  தொடுதல்  போல் 

             வானுயர  வளர்ந்தப்  பனை போல் 

             நெடுங்காமம்  - நெஞ்சில் 

             நிறைய  வருமே...

 

             அதனால் - அதன்போது   

             சிறிதளவு  ஊடுதலும் 

             சிந்தையிலும்  ஆகாது...

      ----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                     திருக்குறள் உரை.

பேணாது  பெட்பவே  செய்யினும்  கொண்கனைக் 

காணாது  அமையல  கண்.                                       -1283.

           ஆசையாய்  ஒருசொல்  பேசுவதில்லை 

           நேசமாய் என்னைத் தொடுவதுமில்லை...

           மனம் போன போக்கில் - என்மன்னவன் 

           நாளும் நாளும் 

           ஏதேதோ செய்கிறான்

           எங்கேங்கோ செல்கிறான்...

           

           ஆயினும்   

           என் கண்ணாளனைக்

           காணாவிட்டால்  

           உறங்காதே  என் கண்கள்...

      --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

ஊடற்கண்  சென்றேன்மன்  தோழி  அதுமறந்து 

கூடற்கண்  சென்றதென்  நெஞ்சு.                  -1284.

 

             என்னதான்  நினைப்பு  அவருக்கு 

             இல்லத்தில்  நானொருத்தி 

             இருப்பதை  மறந்தாரா...

 

             அக்கறையுள்ளவர் போல்

             அழகுமலரோடு  இன்று 

             வந்துள்ளாரே...

 

             தோழி 

             பிரிவு  செய்த  என்னவரிடம் 

             சிறிதேனும்  சிணுங்கி 

             கோபம்  கொண்டு 

             நாலு சொல்

             நறுக்கென்று கேட்டிட  வேண்டுமென்று 

             பள்ளியறைக்குள்  நான்  சென்றேன்...

 

           பாவையெனைக்  கண்டதும்

            பூவிதழ் விரிவதுப் போல்

           புன்னகை செய்தான்...

           அகல  விழிகளை  விரித்து - என் 

            அங்கங்களில்  மேய்ந்தான்...

 

            கோமானைக் கண்டதும்

            பேதை  நெஞ்சம்  

            கோபம்  மறந்து 

            தாபம்  கொண்டது 

            தாவியோடித் தழுவி மகிழத் துடித்தது...

            கட்டியணைத்துக் கன்னத்தில்

            முத்தமழைப்  பொழியவே  விழைந்தது...

       ----------------------------------------------------------------------           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் 

பழிகாணேன்  கண்ட  விடத்து.                                 -1285. 

 

              தோழி 

              கறைப்படிந்த மைக்குச்சியால் 

              கண்ணிமைப்  புருவம் இரண்டுக்கும் 

              மைத் தொட்டுத் தீட்டுவேன்

 

              அழகுக் கொள்வதில்  ஆர்வம்  கொண்ட

              என்னிரு  விழிகளும் 

              குச்சியில்  படிந்த கறையைக்  

              கொஞ்சமும்  கண்டுக் கொள்வதில்லை...

             

             கண்ணைப் போல

             நானும் - எந்தன் 

             கோமான் - எனக்குச் செய்தக்

             கேடுகள்  கோடி யென்றாலும்

             கண்ணாளனை -  நான் 

             பார்த்துவிட்டேனெனில்          

             தாவிச் சென்று தழுவிட  

             தாகம்  கொள்வேன்  நெஞ்சில்...

 

             ஆதலால்    

             குறையும் குற்றமும் 

             தெரிவதில்லை  எனக்கு...

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

காணுங்கால்  காணேன்  தவறாய  காணாக்கால் 

காணேன்  தவறல்  லவை.                                      -1286.

 

              கண்ணாளனைக்

              காண நேர்ந்தால் 

              கார்வேந்தனவன் 

              காரிகை யெனக்கிழைத்த

              வேதனைதனைப்

              பார்க்க  மாட்டேன்...

              கண்ணாளன் மட்டும் - என் 

              கண்ணுக்குத் தெரிவான்...     

 

             அவனைக் 

             காணாமல்  தவிக்கும்  நேரமெல்லாம் 

             அவன் எனக்குத் தந்த

             இன்ப முத்தமும்  காணேன்...

 

             துன்பத்  துயர்த் தந்துத்

             துடிக்கச் செய்துப் பிரிந்தவனின்      

             கல்நெஞ்சு மட்டுமே - என் 

             கண்களுக்குத் தெரியும்... 

         ----------------------------------------------------------------------------

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

உய்த்தல்  அறிந்து  புனல்பாய்  பவரேபோல் 

பொய்த்தல்  அறிந்தென்  புலந்து.           -1287.

 

            சீறிவரும் 

            கோர வெள்ளமதுவென  அறிந்தும் 

            மாய்வதற்கோ - நீ 

            பாய்ந்தாய்  நீரில்...

 

            வீணெனத் தெரிந்தும் 

            நீயேன் 

            ஊடல் கொள்கிறாய்...

     ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                             திருக்குறள்  உரை.

இளித்தக்க  இன்னா  செயினும்  களித்தார்க்குக்

கள்ளற்றே   கள்வநின்  மார்பு.                           -1288. 

            மானம் கெடும் 

            மாண்பு  மடியும் 

            சீர் கெடும் 

            பேரழியும்...

                 உடல்கெடும் 

                 உறவு சிதறும்

                 பழிப் படரும்

                 பண்பழியும் - ஆயினும் 

             மதுவருந்தி மயக்கம்  கண்டவன் 

             மதுவையே  நாடுவான்...

             மதுவும்  நீயும்  ஒன்றுதானே...

 

             என்னுள்ளம்  கொள்ளைக் கொண்டவனே

             மயக்கிடும் மதுப் போல் - நின் 

             மார்பும் என்னை மயக்குதய்யா...

            உன்னைநான் 

            உள்ளத்தில்  தாங்குவதால் 

            என்னை  சூழ்வது துயரம்தான்...

            இருந்தாலும் 

            மயக்கும்  நின்  மார்பழகை 

            என்னால்  மறக்க முடியலையே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

மலரினும்  மெல்லிது  காமம்  சிலர்அதன் 

செவ்வி  தலைப்படு  வார்.                       -1289.

 

               மலரிதழ் போல்

               மென்மையான வொன்றை

               வேறெதிலும்  நான் 

               கண்டேனில்லை...

 

               கண்டேன்  நானிப்போது 

               காமம் எனும்  வடிவிலே...

               காமம்  என்பதொரு கலையாகும்

               அறிந்தவர்  ஒரு சிலரேயாவர்...

 

               காமம்  செய்தலைக்

               கலைநயமாய்ச் செய்திடின்

               மலரினும் இதமாய் 

               இன்பம் நெஞ்சிலே சுரந்திடும்...

     ------------------------------------------------------------------------  

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கண்ணின்  துனித்தே  கலங்கினாள்  புல்லுதல் 

என்னினும்  தான்விதுப்  புற்று.                       -1290.

 

              பிரிவுத் தந்தேன்  நெடுநாள் 

              உருகி  மெலிந்து  நின்றாள்...

              என்னைக் கண்டு

              கலங்கி நின்றாள் - நெஞ்சில் 

              கலக்கம்  கொண்டிருந்தாள்...

 

             பிரிவுசெய்தலால் - என்மீது 

             வெறுப்பும் 

             அவளிடத்தில்  நான்  கண்டேன்...

 

            ஆரத்தழுவி 

            அழகு மயிலை

           ஆறுதல்  செய்ய  நெருங்கினேன்...

 

            அவளோ 

           நான் தழுவுமுன்னரே 

           ஓடிவந்து - என் 

            தோள் தழுவினாள்...

 

            இதயச்சுமையை - என் 

            தோள்மீது இறக்கி வைத்தாள்...

      ---------------------------------------------------------------------------- 

கற்பியல்                                                                                       அதிகாரம்:130.

                                            நெஞ்சோடு புலத்தல் 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே 

நீஎமக்கு  ஆகா  தது.                                                      -1291.

 

               நெஞ்சே  நெஞ்சே  நெஞ்சே 

               நீ 

               என் நெஞ்சம்தானோ 

               சொல் நெஞ்சே...

 

               அவர் நெஞ்சு 

               அவர் சொல் கேட்கிறது 

               அதனை அறிவாயே நீயும்!...

 

               ஏன் நெஞ்சே 

               என் நெஞ்சே 

               நீ என்சொல்  கேள 

               மறுப்பதேன்  நெஞ்சே...

 

               சொல்நெஞ்சே 

               சொல்நெஞ்சே 

               என் நெஞ்சே... 

     --------------------------------------------------------------------------------                 

   

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

உறாஅ   தவர்க்கண்ட  கண்ணும்  அவரைச் 

செறாஅரெனச்  சேறிஎன்  நெஞ்சு.         -1292.   

     

              சொல் நெஞ்சே 

              சொல் நெஞ்சே 

உறாஅ  தவர்க் 

             சொந்தம்  கொள்ள - நீ 

             தூதுச் சென்றாய்

             ஓர்சொல்லும் 

             உன்னிடம் பேசாமல் 

             ஒதுங்கிச் சென்றாரே...

 

கண்ட  கண்ணும் 

             மறந்தாயே  என் மடநெஞ்சே 

 

அவரைச்  செறாஅரெனச்  சேறிஎன்  நெஞ்சு.

              நாளும் நாளும் - நீ அவரை 

              வலம் வலம் வருவதேன்  நெஞ்சே...

 

              ஒருநாளில்லை  யென்றாலும் 

              மறுநாளேனும் 

              இரக்கம் கொண்டு - உன்னை 

              வரவேற்பு செய்வாரென்று   

              உள்ளம் கொண்டு - அவரை 

              நெருங்குகிறாயே  என்  நெஞ்சே...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கெட்டார்க்கு  நட்டார்இல்   என்பதோ  நெஞ்சேநீ 

பெட்டாங்கு  அவர்பின்  செலல்.                        -1293.

 

             கெட்டு விட்டவரை விட்டு 

             உற்ற நண்பரும் 

             ஓடி விலகுதல்  போல் 

        

             சொல்நெஞ்சே 

             கெட்டவரை விட்டு 

             நண்பரும் விலகுதல் போல் 

             காதல்  தோல்வியுற்று 

             உள்ளம் நொந்து கெட்டேன் 

             என்னவென்பது 

             என் நெஞ்சே நீ  

             என்னைவிட்டு  விலகினாயோ 

 

             ஆசையோடு 

             அவரோடு ஒட்டி  உறவாட 

             என்னைவிட்டு 

             போகிறாயே...

       ------------------------------------------------------------------------------

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

இனிஅன்ன  நின்னொடு  சூழ்வார்யார்  நெஞ்சே 

துனிசெய்து  துவ்வாய்காண்  மற்று.             -1294.

 

                உன் துணைவனின்றி 

                உன்னோடு 

                உறவாட எவருண்டு...

 

                நெஞ்சே 

                அவரோடு 

                சிறிதேனும்  ஊடல்  செய்து 

                உள்ளம்  மகிழாமல் 

                உடனே  தழுவிட ஓடுகிறாயே 

 

               ஊடல்  செய்தலிலும் 

                இன்பமுண்டு  என்பதனை 

               அறியாயோ  நெஞ்சே...

 

                துணைவனோடு 

                ஊடாமல் 

               எவரோடு  ஊடி  மகிழ்வாய்...

      ----------------------------------------------------------------------------- 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

பெறாஅமை  அஞ்சும்  பெறின்பிரிவு  அஞ்சும் 

அறாஅ  இடும்பைத்தென்  நெஞ்சு.             -1295.

 

             காதலன் - என் 

             காதலை 

             ஏற்பானோ 

             மாட்டானோவென் றஞ்சும்...

 

             ஏற்றுக் கொண்டானெனினும் - என்னை 

             ஏக்கத்தில் ஆழ்த்திடுவானோ 

             நெடுங்காலம் 

             பிரிவுத் தந்து வாட்டி விடுவானோவென்று 

             திக் திக்கென நெஞ்சு 

 

            அமைதியிழந்து 

            அல்லல் கொண்டு

            அணு அணுவாய் நாளும் 

            துன்பத்தில்  துவள்வது  என் நெஞ்சு...

        -------------------------------------------------------------------------    

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தனியே  இருந்து  நினைத்தக்கால்  என்னைத் 

தினிய  இருந்ததுஎன்  நெஞ்சு.                      -1296.

 

             மூச்சின்  ஓசையும் 

             ஓசையின்றி  வெளியேறும்...

             இரவின்  அமைதியும்  

             அமைதியாய்  நகரும்!...

 

தனியே  இருந்து 

              பள்ளியறையில் 

              பாவை நான் 

              தனியே  இருந்து 

              சன்னல் வழியே 

              சின்ன நிலவைப் பார்த்திருப்பேன்...

 

              நரம்பு  நாளங்கள்  யாவும் 

              விரகவீணை  மீட்டும் 

              என் 

              இளமேனியோ 

              மெழுகாய்  உருகும்...

 

நினைத்தக்கால் 

              காமத்துடிப்பை 

              கட்டில் மீதிருந்து  விரட்ட 

              கண்ணாளன்  இல்லையே...

              காதகன்  போய்  நாள் பலவாயிற்றே - வரும் 

              நாள் நான்  அறியேனேயென்று 

              ஓயாத நினைவில்  நான்  தனித்திருக்க 

 

என்னைத்  தினிய  இருந்ததுஎன்  நெஞ்சு.

               என் நினைவுப் பயணத்தை 

               வேறு திசைக்கு மாற்றாமல்

               அதே திசையில்  பயணித்து 

               நினைவின்  நினைவை மிகையாக்கி 

               என்னைத் தின்னத் துடிக்குதே

               என் நெஞ்சம்...      

     --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை. நாணும்  மறந்தேன்  அவர்மறக்  கல்லாஎன் 

மாணா  மடநெஞ்சிற்  பட்டு.                       -1297.

 

                வெட்கத்தை  மறந்து - நான் 

                வீதியில்  நின்றேன் 

                நாணத்தை  மறந்து - நான் 

                நாளெல்லாம்  புலம்புகிறேன்...

 

               என்னை 

               மறந்தவனை - என்னால் 

               மறக்க முடியலியே 

               தவிக்கிறேன்...

               தாகத்தால்  துடிக்கிறேன்

               மறந்துவிட  வேண்டியவனை 

               மனதோடு கொண்ட

 

              மானங்கெட்ட - என் 

              மடநெஞ்சோடு சேர்ந்து

              நானேன் 

              நாணமின்றி புலம்புகிறேன் 

   ----------------------------------------------------------------------  

 

 

 

 

கற்பியல்                                                      அரங்க கனகராசன் உரை.

எள்ளின்  இளிவாம்என்று  எண்ணி  அவர்திறம் 

உள்ளும்  உயிர்க்காதல்  நெஞ்சு.                     -1298.

 

              கள்ளனோ - அவன் 

              காதகனோ 

              என்னுள்ளத்தை  நோகச் செய்தான் 

              என்னிள மேனி தவிக்கச் செய்தான்

              எவரும் சொல்லாத சொற்களால் 

 

எள்ளின் 

              அவனை எள்ளியாடல்  செய்தல் 

 

இளிவாம்என்று  எண்ணி 

               அழகல்லவே...

               நெருங்கி  அவன் முத்தம்  தந்தப்போது 

               உருகி  நான்  வாழ்த்துவேன்...

 

               பிரிந்து   அவன்  துயர் தந்தபோது

               எரிந்து எள்ளுவது பண்போ 

               இளிவென்று  கருதி 

அவர்திறம்  உள்ளும் 

               என்னோடு 

               என்பொன் மேனியோடு 

               கண்ணாளன்  செய்த 

               அன்புதனை நினைத்து நினைத்து  மகிழும் 

உயிர்க்காதல் நெஞ்சு.

               காதலென்பதனை 

               உயிரெனக் கருதும் - என் 

               நெஞ்சம்தான்...   

      ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

துன்பத்திற்கு  யாரே  துணையாவார்  தாமுடைய 

நெஞ்சம்  துணையல்  வழி.                                      -1299.

                துயர்க் கொண்டு

                தவிக்கையில்  

                துணையாய் 

                வருபவர்  வேறு  யாருண்டு...

 

                துன்பத்தின்போது 

                நமது நெஞ்சமே 

                நமக்குத்  துணையாக  மறுத்தால் 

                துணையாவது  யாரோ... 

        ----------------------------------------------------------------------

தஞ்சம்  தமரல்லர்  ஏதிலார்  தாமுடைய 

நெஞ்சம்  தமரல்  வழி.                           -1300.

                துன்பம்  கொண்டுத் துடிக்கிறேன்

                என் நெஞ்சமே 

                எனக்குத் தஞ்சம்  தாராதெனில் 

                அடுத்தவர்  நெஞ்சோ - எனக்குக்

                கொடுக்கும்  ஆறுதல்...

                         அடுத்தவர் நெஞ்சு - எனக்கு 

                         ஆறுதல்  தராது  என்பதில்  

                         ஏது வியப்பு 

                         என் நெஞ்சமே 

                         எனக்குத் துணையாக  மறுக்கும் போது...  

கற்பியல்                                                                                       அதிகாரம்:131.

                                                       புலவி 

புல்லா  திராஅப்  புலத்தை  அவர்உறும் 

அல்லல்நோய்  காண்கம்  சிறிது.  -1301.

 

                 என்சொல் கேளாத  நெஞ்சே 

                 ஓர்சொல்  மட்டும் 

                 உறுதியாய்க் கேள்

                 தழுவ வருவான்  தங்க மார்பழகன்...

 

புல்லா  திராஅப்  புலத்தை 

               தழுவாமல் நான் கோபமாய் 

               விலகி புரள்வேன்...

               குளிர்க்  கொண்ட - இந்த 

               இரவினில் 

 

அவர்உறும்  அல்லல்நோய் 

              என் தழுவல்  வேண்டி 

              என்னவன்  படும் வேதனை 

 

காண்கம்  சிறிது.

              கண்டு மகிழ்வோம் சிறுது நேரம் 

              உறுதியற்ற  நெஞ்சே 

              உறுதுணை செய்வாய் எனக்கு நீ...

   -----------------------------------------------------------------------------     

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

உப்பமைந்  தற்றால்  புலவி  அதுசிறிது 

மிக்கற்றால்  நீள  விடல்.                  -1302.

                கண்வீங்கி 

                கன்னம் சோர்ந்து 

                உடல் தளர்ந்து  போனதேன்  தோழி 

 

              பொய்க் கோபம் கொண்டு

              புரண்டு  படுத்தேன் நான் 

              கெஞ்சியெனை  நெடுநேரம் 

              மஞ்சத்தில்  மன்றாடினார்...

 

              ஏக்கத்தில்  கெஞ்சினாலும் 

              அதிலோர் இன்பம் கண்டேன் 

              அதனாலென் 

              ஊடலை  நீடித்தேன்...

 

              நீண்ட ஊடல்  கண்டு  -  என்னவன் 

              கோபம் பெரிதாய்க் கொண்டான்

              தழுவலின்றிக் 

              கழிந்ததடி இரவு - உள்ளம் 

              பதைக்கிறது...

 

உப்பமைந்  தற்றால்  புலவி 

              தோழி 

              கூறுவதைக் கேள்

              ஊடல்  என்பது  உப்புப் போன்றது

 

அதுசிறிது  மிக்கற்றால் 

              உப்பு மிகுந்தால் - பண்டம் 

              கெட்டுப் போகுமே...

 

நீள  விடல்.

             ஊடலும்  நீண்டால் கூடல்  கெடும் 

             உணர்வாய்  நீ...

    -----------------------------------------------------------------------------   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                          அரங்க கனகராசன் உரை.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 

புலந்தாரைப்  புல்லா  விடல்.                                    -1303.

               

                துன்பத்தில்  துடிக்கும் போது

               துயர்  நீங்கத் 

               துணைச் செய்தல் வேண்டும்...

               

                       மாறாய் 

                       இடர்த் தந்தால்

                       மேலும் மேலும் 

                       துன்பமன்றோ  சேரும்...

             

             ஊடல் கொண்டு இருப்பவரை - இதமாய் 

             நாடி 

             ஊடல்  நீக்க  வேண்டும் 

             மாறாய் 

 

             ஊடல்  செய்தவரோடு - மேலும் 

             ஊடல்  செய்தால் 

             கூடல்  மலருமோ...

       -------------------------------------------------------------------------

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

ஊடி  யவரை  உணராமை  வாடிய 

வள்ளி  முதலரிந்  தற்று.         -1304.

 

            ஊடல்  ஏனென 

            காரணம்  அறிதல்  வேண்டும் 

            அல்லவெனில் 

            ஊடலென்பது - வாழ்வின் 

            ஊறாகும்...

 

            பயிர்  வாடியதேனென அறிந்து 

            நீரூற்றாமல்

            வேரறுப்பது போலாகுமே  

            ஊடல் ஏனென   அறியாதிருத்தல்...

  ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

நலத்தகை  நல்லவர்க்கு  ஏஎர்  புலத்தகை 

பூஅன்ன  கண்ணா  ரகத்து.                      -1305.

 

            சீரிய  பண்பு 

            யாரிடம்  உண்டோ 

            அதுவே  அவர்க்கு  மகுடம்...

 

            ஊடலென்பது 

            நல் பண்பறிய  

            உதவும்  கோலாகும்...

 

           பூப்போல் 

           இதமான  இதயம் எவருக்குண்டோ 

           அவரோடு 

           ஊடலெனும்  கோலிருக்கும்...

      ---------------------------------------------------------------------------

துனியும்  புலவியும்  இல்லாயின்  காமம் 

கனியும்  கருக்காயும்  அற்று.              -1306.

                 

              சிறுச் சிறு சண்டையும் 

              சின்னச் சின்ன ஊடலும் 

              இல்லையெனில் 

              காமம் இனிக்காது -அது 

              செடியிலேயே கனிந்தும் கனியாத 

              பிஞ்சில்  வெம்பியக்  கருக்காய்ப் போலாகும்...

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

ஊடலின்  உண்டாங்கோர்  துன்பம்  புணர்வது 

நீடுவ  தன்றுகொல்  என்று.                             -1307.

                ஊடல்  செய்தல்  இன்பமென்பர் 

ஊடலின்  உண்டாங்கோர்  துன்பம் 

                உடல் செய்தலிலும்

                துன்பமுண்டு  அறிவீரா 

புணர்வது 

               ஊடல் முடிந்து 

               கூடல்  நேர்ந்தால் 

நீடுவ  தன்றுகொல்  என்று.

               கூடுங்காலம்  குறையுமென்று 

               உள்ளம் கொள்ளுமே  துன்பம் 

               ஆதலினால் 

               ஊடுதல் நேரத்திலும் கூடுதல்  செய்க...

               கூடுதல்  காலம் கூடும்...

      ----------------------------------------------------------------------------  

நோதல்  எவன்மற்று  நொந்தாரென்று  அஃதறியும் 

காதலர்  இல்லா  வழி.                                                 -1308.

                    மனம் நொந்து அழுவதேன்...

                    மனம் நொந்ததேனென்று

                    உண்மையை அறிந்திட 

                    காதலர் இல்லாதப் போது

                    பேதைநீ 

                    மனம் நொந்து  அழுவதேன்...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

நீரும்  நிழலது  இனிதே  புலவியும் 

வீழுநர்  கண்ணே  இனிது.       -1309.

 

                              நிழல்  மீதில் 

                             நீரோடினால்  இனிதே 

 

               ஊடலும் 

               நல் பண்புள்ள 

               நெஞ்சின் மீது  ஓடினால்  இனிதே...

  ---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                            அரங்க கனகராசன் உரை.

ஊடல்  உணங்க  விடுவாரோடு  என்நெஞ்சம் 

கூடுவேம்  என்பது  அவா.                               -1310.

               

               சின்னஞ்சிறு கோபம் கொண்டு 

               என்னவனிடம் ஊடல்செய்தேன் 

               உடல்செய்த என்னை 

             

                செல்லமாய்த் தடவி 

                செம்மொழிப் பேசி

                கண்மலரே கோபம் கூடாதேயென 

                சொல்வார்  என்றிருந்தேன்...

 

               அவரோ     

               ஊடிய  என்னை 

               வாடவிட்டார்...

              

               வாயாலும் ஒருசொல் - இதமாய் 

               பேசவில்லை  என்னிடம் 

               ஆயினும்  அவரோடு 

               என் நெஞ்சம் 

               கூடிமகிழத் துடிக்குதே

               அது 

               நெஞ்சின்  காதல்  மயக்கமோ...   

        -------------------------------------------------------------------------

 கற்பியல்                                                                                       அதிகாரம்:132.

                                                புலவி நுணுக்கம் 

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 

நண்ணேன்  பரத்தநின்  மார்பு.                                   -1311. 

 

                 பெண்ணின் மனதைத் திருடுபவனே

                 கண்ணழகனே 

                 கட்டழகனே 

 

பெண்ணியலார்  எல்லாரும் 

               எழில் நங்கையர்  எல்லாரும் 

 

கண்ணின் பொதுஉண்பர் 

              தெருவில் நீ வருகையிலே 

              கண்ணால்  உன்னை  உண்ணுகின்றனரே...

              பொது மகனோ நீ 

 

நண்ணேன்  பரத்தநின்  மார்பு.

              எல்லார் கண்களுக்கும் 

              விருந்தாகும்  பரத்தனே 

              நின் மார்மீதில் 

              என்தலை சாயாதினி...

   -------------------------------------------------------------------------------   

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

ஊடி  யிருந்தேமாத்  தும்மினார்  யாம்தம்மை 

நீடுவாழ்  கென்பாக்கு  அறிந்து.                   -1312.

            தும்மல்  வந்தால் 

            நெடுநாள்  உயிர் வாழ்வரென

            தப்பானக் கருத்து  நிலவிய  நாளை 

            வள்ளுவன்  காட்டுகிறான்...

ஊடி  யிருந்தேமாத்   தும்மினார்  யாம்தம்மை 

                     ஊடியிருந்தோம் - அவரும் 

                    நானும் 

           தும்மலொன்று தும்மினார்

           தும்மியத் துணைவன்

           துணைவியெனைப்  பார்த்தார்...

                  மூடஎண்ணம் நாட்டின் 

                  மூலைமுடுக்கெல்லாம் 

                  வேர்ப் பாய்ந்திருக்கும்  நேரமிதில் - எந்தன் 

                  நாயகன் நெஞ்சிலும் அது 

                  வேர் விட்டிருப்பதில் வியப்பென்ன...

         தும்மல் கேட்டதும் நான் 

         துணைவனை 

நீடுவாழ்  கென்பாக்கு  அறிந்து.

            நீடு வாழ்கவென 

            வாழ்த்துவேனென - என் 

            வாழ்த்துதலை எதிர்பார்த்தார்...

       ----------------------------------------------------------------------------

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

கோட்டுப்பூச்  சூடினும்  காயும்  ஒருத்தியைக் 

காட்டிய  சூடினீர்  என்று.                                 -1313.

             உச்சி மரமேறி 

             ஆங்கே - கிளைகள்  

             ஏதும்  ஒடியாமல் 

             பூவொன்று பறித்து  வந்தால் 

             பரிசொன்று 

             வெற்றியின்  சின்னமாய்  வழங்குவர்...

கோட்டுப்பூச்  சூடினும் 

              மரமேறிப்  பறித்தப் பூவை 

              வாழ்த்துச் சொல்லி

              தோளில் சூட்டுவர் 

              சூடியப் பூவோடு

              வீதியில்  நடந்து 

              வீடு சேர்கிறேன்...

காயும் 

             என் செவ்விள  இல்லாள் 

             சினம் கொண்டு பேசினாள்...

ஒருத்தியைக்  காட்டிய  சூடினீர்  என்று.

             வீதிவழியே நடந்து 

             வேறு ஒருத்திக்குக் காட்டவோ 

             வீரப்பூவை  சூடி  வந்தாயோவென 

             கோபக் கணை பொழிந்தாள்...         

       ------------------------------------------------------------------------------

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

யாரினும்  காதலம்  என்றேனா  ஊடினாள்

யாரினும்  யாரினும்  என்று.                   -1314. 

 

                பிறரைக் காட்டிலும்

                பெண்ணே உன்னிடம்  நான் 

                கொண்டேன்  காதல் கூடுதலாய் 

                என்றேன்...

 

                உடனே 

                மனதில்  அய்யம் கொண்டு 

                மங்கை என்மீது கோபம் கொண்டாள்...

 

                 பிறரைக் காட்டிலும் என்றால் 

                 பிறரெனில் - இன்னும் 

                 எத்தனைப் பெண்களின் 

                 சித்தம் கெடுத்தாய் - காதல் 

                 வலைதனில் விழவைத்தாய் 

                 சொல் சொல் என்றாள்...

    -----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

இம்மைப்  பிறப்பில்  பிரியலம்  என்றேனாக் 

கண்ணிறை  நீர்கொண்  டனள்.               -1315.

                    இம் = ஒலிக்குறிப்பு.

                    மை = வளம் சூழ்ந்த, பசுமை, இனிய.  

 

              இனியவளே - என் 

              இதயம்  கவர்ந்தவளே 

              கனியமுதே 

              கார்குழல்  பேரழகே 

 

இம்மைப்  பிறப்பில்

               இந்த

              இனியப் பிறப்பு

              மானிடர்ப் பிறப்பு

              மானிடராய்ப் பிறந்திட்ட  யாம் 

              எக்காரணம் கண்டும் 

பிரியலம்  என்றேனாக் 

              இவ்வினியப் பிறப்புதனில்

              பிரிதல்  கூடாது  கண்ணே...

              பிரிதல்  என்பது கொடுமையாகும்  கண்ணே 

              ஆதலால் 

              பிரியோம்  யாம் 

              பிரியோம் யாம் என்றேன் 

              இனியாளை இறுகத் தழுவியே...

கண்ணிறை  நீர்கொண்  டனள்.

            காதலனே 

            கண்ணிறை பேரழகனே

            என்னையாளும்  மன்னவனே 

           

            வாழ்கை என்பது 

            நிலையாமை  என்பதனை  அறிவாயா...

            இன்றில்லை யென்றாலும் 

            என்றேனும் ஒருநாள் - இயற்கை 

            எம்மிருவரைப் பிரித்திடுமே என 

            கண்ணீர்ப் பெருக்கி கலங்கியழுதாள்...

      -----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் 

புல்லாள்  புலத்தக்  கனள்.                                                    -1316.

               கண்ணே - கருவிழிப் பெண்ணே 

               செந்தேனே 

               செம்பவழப் பூஞ்சிட்டே   

உள்ளினேன்  என்றேன்  மற்று 

                உன்னை  நான் நினைத்தேன்  என்றேன் 

               அதற்கவள் சொன்னாள் 

               இதயம்  அதிர 

என்மறந்தீர்  என்றென்னைப் 

               நினைத்தீரா - எனை 

               மறந்து விட்டீரா 

               மறந்தால்தானே - மீண்டும் 

               நினைக்கத் தூண்டும்...

               ஏன் மறந்தீரெனை 

               என்றுச் சொல்லி - என் 

               நெஞ்சு அதிரச் செய்தாள்...

புல்லாள்  புலத்தக்  கனள்.

               தழுவிய  என்னைத் தள்ளிவிட்டு

               விலகிப் படுத்து  ஊடினாள்...

               விம்மி நின்ற மார்பழகை - என் 

               விரல் தொட விடாமல் 

               முரண்டு படுத்தாள்...            

     -------------------------------------------------------------------------

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

வழுத்தினாள்  தும்மினே  னாக  அழித்தழுதாள் 

யாருள்ளித்  தும்மினீர்  என்று.                          -1317.

 

               அறிவிற்கு  பொருந்தா  காரணங்கள் 

               அந்தக் காலத்தில்

               தும்மலுக்கும் கற்பிக்கப் பட்டிருந்தது என்பதை 

               வள்ளுவன் குறள் வழியே கூறுகிறான்...

 

வழுத்தினாள்  தும்மினே  னாக 

              தும்மினேன் - என் 

               துணைவி 

              வாழ்க  பல்லாண்டென  

              வாழ்த்தினாள் என்னை!

              வாழ்த்திய வனிதை 

              என்ன நினைத்தாளோ 

 

அழித்தழுதாள் 

               வாழ்த்திய  வாயால் 

               கதறியழுதாள்...

               ஏன் பெண்ணே... ஏனழுகிறாய் 

               என்றென்னவள்  தோள் தொட்டுக் கேட்டேன்...

 

               தோள்  தொட்ட கரத்தை 

               வேகமாய்  உதறிவிட்டு 

 

யாருள்ளித்  தும்மினீர்  என்று.

               உம் நெஞ்சில்  உள்ளவள் யார் 

               கள்ளனே சொல்!...

               என்னவனே 

               எவள் நினைத்தாள் உம்மை!

               தும்மல் செய்து - என்நெஞ்சை 

               துடிக்கச் செய்தவள் எவள் என்றுச் சொல்லி

               கதறினாள்  - மூடக்

               கருத்தினைக் கருத்தாய் கொண்டவள்... 

   ------------------------------------------------------------------------------                        

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

தும்மச்  செறுப்ப அழுதாள்  நுமர்உள்ளல்

எம்மை  மறைத்தீரோ  என்று.              -1318.

              

               துடியிடையாள் - என் 

               துணையாள் - மூட 

               மனம்  கொண்டவள்!...

               தும்மலுக்கு 

               மருத்துவக் காரணம் என்னவென்று 

               அறியா  பேதையிவள்!

               அதனால் 

               வந்த 

 

தும்மல்  செறுப்ப 

                என் தும்மலை அடக்கிக் கொண்டேன்...

 

அழுதாள் 

                உணர்ந்து  உடனே 

                அழுதாள்  அன்னக்கிளி 

                அழுவதேன்  என்அழகே என்றேன்...

 

நுமர்உள்ளல்   

                 உம்மை  யொருத்தி நினைக்கின்றாள் 

                 அதனால்தானே 

                 உமக்குத் தும்மல்  வந்தது...

 

எம்மை மறைத்தீரோ  என்று.

                 தும்மினால் - நான் 

                 தெரிந்து கொள்வேனென்று

                 அடக்கிக் கொண்டீரே தும்மலை!...

                 அறிந்தேன்  நானதனை

                 ஆசை  நான் உம்மீது வைத்திருக்க 

                 ஆசையாய்  வேறெவளை  நெஞ்சில்வைத்தீர்                    மோசம்  செய்யலாமோ  எனக்குநீர் - என்று 

                 பேசினாள் பல! அழுதாள்  கூடவே...       

    ------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                                              திருக்குறள் உரை.

தன்னை  உணர்த்தினும்  காயும்  பிறர்க்குநீர் 

இந்நீரர்  ஆகுதிர்  என்று.                                -1319.

 

              கோபம்  கொண்டு - என் 

              கோலமயில் 

              சோகமாய் முகத்தை  ஆக்கினாள்...

              பேசமறுத்து - என் 

              பைங்கிளி 

              மைவிழி  மூடினாள்...

 

தன்னை  உணர்த்தினும் 

               ஊடல்  தணிக்க 

               இருவிரலால் 

               இடைதனில் 

               கிசுக்கிசு மூட்டினேன்...

 

காயும் 

             செவ்விதழ்  விரிய சிரித்து

             தளிர்விரலால் என்னைத் தட்டி

             பொன்மேனியை என் பக்கம் திருப்பி

             கண்ணிமை   மலர நோக்குவாளென்று 

             நானிருக்க 

             கோதையோ மேலும் 

             கோபம் கொண்டு சீறினாள்...

 

பிறர்க்குநீர்  இந்நீரர் 

             முன்னர்  இதுபோல் 

             சினம் கொண்டப் பெண்டிரை - இப்படித்தான் 

             சீண்டி 

             சினம்  தணித்தாயோ...

 

ஆகுதிர்  என்று.

             அல்லவெனில் 

             சரளமாக  உன்விரல்கள் - என் 

             இடைதனில் தவழ்ந்து  வீணை  மீட்டிடுமோ 

             இது முன்னர் நீப் பெற்ற பழக்கம்தானே என்று 

             இடியாய் வெடித்தாள்...  

     ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

நினைத்திருந்து  நோக்கினும்  காயும்  அனைத்துநீர் 

யாருள்ளி  நோக்கினீர்  என்று.                                   -1320.

          ஏதோ  நினைவுகள் 

          ஏதோ கனவுகள்

          என்நெஞ்சம் எங்கெங்கோ  அலைப்பாயுதே 

          என் பார்வை  நிலைமாறுதே!...

 

          புதுக் கற்பனைகள்  உலாவர 

          புதுஎண்ணங்கள்  மலர்ந்தெழ 

          விழிமூடி  நான்  - இனந்

          தெரியாத  ஒன்றைப் பார்த்திருப்பேன்...   

                    இதைப் பார்த்த என்இளமயில் 

                   கொடுங்கோபம்  கொண்டாள்...

 

          மெய்மறந்து 

          விழிமூடி 

          எவள் அழகில் 

          இதயம் பறிக் கொடுத்தாய்...

                  அவள் அழகை     

                  நெஞ்சில் நிறுத்தி 

                  கொஞ்சமும்  கூச்சமின்றி 

                  பார்க்கிறாயே  பரத்தனே என்று 

                  பாவை -என்னிதயம் 

                  நோகப் பேசினாள்...

கற்பியல்                                                                                       அதிகாரம்:133.

                                                ஊடலுவகை

இல்லை  தவறவர்க்கு  ஆயினும்  ஊடுதல் 

வல்லது  அவர்அளிக்கு  மாறு.              -1321.

 

           என்னவன்  மீது 

           எந்தத் தவறுமில்லை 

           அறிவேன்  நான்...

 

           ஆயினும் அவனை 

           ஏங்கச்  செய்து சிறிது 

           நேரம்  ஊடுவதால் 

           ஓரின்பம்  உண்டெனக்கு...

 

           எனதிந்தச் செயல்தனால்  

           என்னவன்  என்னை 

           எப்போதும்  நெஞ்சில் கொண்டிருப்பான் 

           முன்னெப்போதும் விட 

           முழுதாய்  அன்பு செலுத்த  முனைவேன்...

       ---------------------------------------------------------------------------- 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

ஊடலில்  தோன்றும்  சிறுதுனி  நல்லளி 

வாடினும்  பாடு  பெறும்.                        -1322.

            முன்னூறு  நிலாக் கொண்டு  

            நின்முகம்  செய்ததா ரென்று 

            பொன்மொழிச் சொல்லி 

            முந்நாளில்  பாடுவேன்...

                       இந்நாளில்  ஏனோ 

                       இவளைப் புகழ்ந்திட

                       என்நெஞ்சம் விழைவதில்லை...

            அதனால்தானே 

            அழகு மயிலிவள் ஊடல் செய்கிறாள்...

            பஞ்சனையில் பாவையின்  ஊடலால் 

            நெஞ்சோரம் காயம் சின்னதாய் 

            உண்டானதே

            ஆனாலும்...

                       ஊடுகிறவளை   நாடி 

                         நெஞ்சின்  சோகத்தை 

                         இதமாய் இன்சொலால் 

                         தடவும்போது 

 

            மங்கை முகம் மலர்கிறாள் 

            தங்கநிலவாய் ஒளிர்கிறாள் 

            மறைந்த  அன்பு  என்னுள் 

            மலர்ந்து  புது நிலவானது...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

புலத்தலின்  புத்தேள்நாடு  உண்டோ  நிலத்தொடு 

நீரியைந்  தன்னா  ரகத்து.                                        -1323. 

 

            சின்னதாய்க்  கோபம் கொள்வதில் 

            இன்பமுண்டுக் கோடி...

            அறிவியல்  நாடு 

            அற்புதமாய்  ஆயிரம் 

            புதுமை செய்தாலும்

            உள்ளம்  மகிழ்வது 

            ஊடலால் அல்லவோ 

            அதுவும்...

 

            நிலத்திற்கு உறவான 

            நீர்ப் போல 

            அன்பானவரோடு 

            நிகழும்  ஊடலால் 

            உள்ளம்  கொள்ளும் 

            உல்லாசம் கோடியாகுமே...

 ------------------------------------------------------------------   

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

புல்லி  விடாஅப்  புலவியுள்    தோன்றுமென் 

உள்ளம்  உடைக்கும்   படை.                       -1324.

                        புலவி=ஊடல், புல்லுதல்=தழுவுதல்.

                என்னவனை  என்தோள்  நோக 

                கட்டித்தழுவ விடாமல் 

                தடுக்கும் 

                கொடிய  ஊடலே 

       உன்னால் உண்டாவது  எதுவென அறிவாயோ 

       படையொன்று  தோன்றி

       இடியென மோதி 

       உடைக்குதே  என்னுள்ளத்தை

       ஊடல்தான்...

---------------------------------------------------------------------------

தவறில  ராயினும்  தாம்வீழ்வார்  மென்றோள்

அகறலி   னாங்கொன்று  உடைத்து.            -1325.   

                 ஊடலின்  போது தழுவிட

                 உள்ளமோ தடைப் போடும்...

                 ஊடலுமில்லை - தவறு 

                 ஏதுமில்லை 

      அதனால் 

      ஆசையோடு தழுவிட  நான் விழைகிறேன் 

      ஆயினும் 

      ஆசைக் கொண்டோரின் தோள் தழுவாமல் 

      நேரம் சிறிதைக் கழித்தால்

      மேலும் மேலும்  ஆசை பெருகுமன்றோ...

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

உணலினும்  உண்டது  அறல்இனிது  காமம் 

புணர்தலின்  ஊடல்  இனிது.                       -1326.    

                 மிகுசுவை என்பதால்  

                 மேலும் மேலும் புசிப்பது நல்லதோ 

                 உண்ட உணவு செரித்தல்

                 உடலுக்கு நலம் பயக்கும்...

    ஈருடல் ஓருடலாய் 

    சேர்ந்துப் புணர்வது இன்பம் என்பதால் 

    ஓயாதிணைவது நல்லதோ...

                 கூடலுக்கு முன் - சிறிதாய் 

                 சிணுங்கி  விளையாடுதல் 

                 சிறப்பாகும்  மனதுக்கு!... 

       ----------------------------------------------------------------------

ஊடலில்  தோற்றவர்  வென்றார்  அதுமன்னும் 

கூடலில்  காணப் படும்.                                       -1327.

                தொடாதே... நெருங்காதே... தழுவவராதே...

                தள்ளிப்போ போவென்று 

                உள்ளத்தில் ஊடலோடுப் பேசியவர்

                இதோ தோற்றார்...

    தோற்றா ரென்பது தவறு

    வென்றா ரென்பதே சரி...

    வென்றாரெனில் - அதனை அறிவதெப்படி 

                 கூடல் காணவே ஊடல் செய்தார் 

                 எண்ணியது கிட்டியதெனில்  

                வெற்றி என்றுதானே பொருள்...

கற்பியல்                                                   அரங்க கனகராசன் உரை.

ஊடிப்  பெறுகுவங்  கொல்லோ  நுதல்வெயர்ப்பக் 

கூடலில் தோன்றிய  உப்பு.                                       -1328.

 

                  ஊடி  இன்பம் 

                  கோடி பெறுதல் கூடுமோ 

                  நெற்றியில் துளிகள் 

                  வியர்த்து பெருகிட 

                  சித்தமினிக்க 

                  கட்டியணைத்தும்  

                  கலைபல செய்தும்

                  காமக்கடலில் மூழ்கி 

                  கோடி இன்பம்  பெறுவோமே... 

          ------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                                             அரங்க கனகராசன் உரை.

ஊடுக  மன்னோ  ஒளியிழை  யாம்இரப்ப 

நீடுக  மன்னோ  இரா.                                -1329.

 

ஊடுக மன்னோ  ஒளியிழை 

                 நிலவில்  மூழ்கி 

                 நிலத்தில் பிறந்து 

                 ஒளியை சிந்தும்

                 ஒய்யாரப் பெண்ணே...

 

                 விழியால்  வீழ்த்தும் 

                 கலையைக் கற்றவளே

                 மொழியில் மவுனத்தைக்

                 கலந்து  மொழிபவளே...

 

                எழில் கொழுந்தே என்பூஞ்சரமே 

                நிழல் தருவே பொன்மேனியாளே 

                பனிமலையில் பூத்தெழுந்து 

                குளிர்விக்கும்  விந்தை சுடரே...

 

                 உன்னைக்

                 கண்ணில்  கண்டாலும் 

                 உள்ளத்தில் நினைத்தாலும் - என் 

                 நரம்பின் அணுக்களும் 

                 குறும்புச்  செய்யத் துடிக்கும்...

 

                அரும்பின்  அரும்பே 

                அழகின் அழகே 

                நிலவின் நிலவே - நீ 

                ஊடல் செய்வாய் செய்வாய்...

 

                செவ்விளந் தோளாய்

                செம்பவள இதழாய் - நீ 

                ஊடல் செய்வாய்...         

 

 யாம்இரப்ப                

                என் 

                 ஆழ் நெஞ்சின்

                 ஆசை இதுதான் 

                பேசுங்கிளியே - நீ 

                 பேசாது  ஊடல்  செய்வாய்...

 

நீடுக  மன்னோ   இரா.

                 இரவே - நீ 

                 விரைந்து விரைந்து ஓடாதே 

                 கயிறுக் கொண்டுக் கட்டி - உன்னை 

                 நெடுநேரம் நிற்க வைக்கட்டுமா 

                 இரவே இரவே நீ போகாதே...

 

                இனியாள் 

                இடைத்தொட்டு

    கனிவாய்க் கனிவாய்

    கன்னம் தொட்டு

    பனியாய்ப் பனியாய்    

    வயிற்றில்  விரல் வரைந்து 

    தொடையில் இதழால்  ஊர்ந்து 

    தொகையாய்த் தோள் தடவி 

    வளைசங்காம் கழுத்தில் இறங்கி 

    வளம்நிறை மார்பில் ஊர்ந்து 

    தொப்பூளுக்குத் தொன்னூறு முத்தம் தந்து - அவள் 

    வெப்பத்தை நான் உள்வாங்கி 

    தப்பாமல் ஊடலை 

    தணிக்க வேண்டும் 

    அதனால் இரவே விடியாதே...

 ----------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

கற்பியல்                                       அரங்க கனகராசன் உரை.

ஊடுதல்  காமத்திற்கு  இன்பம்  அதற்கின்பம் 

கூடி  முயங்கப்  பெறின்.                                  -1330.

           ஊடல் செய்தால் 

              ஊடல் செய்தால் 

              காமத்திற்கு  இன்பம் 

              கணக்கின்றிக் கிட்டும்

              ஊடல் செய்வோம் 

              ஊடல் செய்வோம்...

                      ஊடல் செய்தால் 

                      ஊடல் செய்தால் 

                      நாடிநரம்புகள் யாவும் 

                      விழித்தெழும் விழித்தெழும்...

             விழித்த  நரம்புகள்  நலம்பெற 

            மார்போடு  மார்பும் 

            தோளோடு தோளும்

            தேனிதழோடு இதழும் 

            ஆலிழை வயிறோடு வயிறும் 

            இருவர் கைகளும் விலங்காய் 

            ஈருடலைப்  பிணை செய்திட

            காற்றும்  நுழைய  இடந்தராமல் 

            கூடி முயங்கிடு 

            கோடி இன்பமுண்டு...

      --------------------------------------------------------------------------

          காமத்துப்பால் நிறைவு 

காலை 6.23. சனி, 02-02-2002.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 



     







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்