பாகம் : 3-(2) ( காட்சி - 43 முதல் )நீயன்றோ அரக்கன்
****பாகம் : 3 நீயன்றோ அரக்கன் காட்சி : 1 லிருந்து காட்சி 42 வரையுமான வடிவம் பாகம் :3 நீயன்றோ அரக்கன் பகுதியில் காண்க!
நீயன்றோ அரக்கன் - பாகம் : 3 காட்சி : 43 முதல்
நீயன்றோ அரக்கன் - பாகம் : 3 காட்சி : 43 முதல்
பாகம் : 3. காட்சி :43. மலைக்குகை.
இராமன்
பீடணன்
பீடணன் :
'போர்த் தொடுத்தும், வீரர் பலர் மடிந்துற்றும் இராவணன் மனம் மாறினான் இல்லையோ?... சீதையை விட்டான் இல்லையோ?... இன்னும் படை வேண்டுமென்றாலும் தருகிறோம்... இராவணனைக் கொன்று சீதையை மீட்டிடுக ' என்றனர் நான் யாசித்த குறுநில மன்னரெல்லாரும்!...
இராமன் :
உதவிட வந்த படை வீரர் எங்கே?...
பீடணன் :
பாசறையில்!...
இராமன் :
தீரத்தோடு அவர்கள் படையோடு மோதிட வேண்டும்... ஊக்கம் கொடுத்து, நீ தலைமை வகித்து நாளைப் போருக்குப் புறப்படு!...
பீடணன் :
நீரல்லவா தலைமை வகித்துச் செல்வதாய்ச் சொல்லப்பட்டது...
இராமன் :
இராவணனும் அப்படித்தான் நம்பியுள்ளான்...
பீடணன் :
ஆனால்...
இராமன் :
நீதான் தலைமை வகிக்கவிருக்கிறாய் நாளை!...
பீடணன் :
நீயே தலைமை வகித்துச் சென்றாலும், இராவணனை வெல்ல முடியாது...
இராமன் :
என்னையோ குறைக் கூறினாய் நீ?
பீடணன் :
இதுவரையும் கூறாத ஒன்றை நான் கூறுகிறேன் இன்று... தேரேறி தேவனே வந்தாலும் வெல்லமுடியாது இராவணனை!... உங்கள் தேவனையும் மிஞ்சியவன் வீரத்தில் இராவணன்!... நீ சொன்னாயே, மாயம் கற்றவன் இராவணன் என்று!...
இராமன் :
சொல்வேன்; இராமநாதா!...
பீடணன் :
மாயங்கற்றவன் இராவணன் என்றால், இந்த ஜகத்தில் எவனுக்கும் வீரம் போதாது அவனோடு மோத!... சொன்னேன், உண்மை!... மாயத்தால் அவனை நீ வெல்ல இயலாது என்றால், கேள்; நான் சொல்வதை!...
இராமன் :
என்னடா சொல்வது நீ?... என்னடா கேட்பது நான்!... நீ சாம்பலாகிப் போவாய்; முனிவனை அழைத்து சபிக்கச் சொன்னால்!...நில்லடா; வாய்ப் பேசாது!...
பீடணன் :
இராமநாதா!... யாம் செய்த முயற்சிகள் யாவும் வீணுறலாகுமோ?... ஒரு வழி வகுத்து வந்துள்ளேன்; இராவணனைக் கொல்ல!... சொல்கிறேன்... ஒப்பம் தருக ; சரியெனில்!... அல்லவெனில்; நானே தலைமை வகித்துச் செல்கிறேன் ; உம் சித்தப்படி!...
இராமன் :
சொல்...
பீடணன் :
வெல்ல இயலாது போரில் இராவணனை!... அதனால்...
இராமன் :
அதனால்...
பீடணன் :
தமிழ்ப் பாடி அவனை சாகடி!...
இராமன் :
சூத்திரனே!.... நீசபாஷை நான் தமிழ்ப்பாடி, அவனை சாகடிப்பதா?... என்ன சொல்கிறாய் நீ மூடனே!...
பீடணன் :
அவனை எனக்குத் தெரியும்... தமிழிசையில் மறந்து விடுவான் அவன் தன்னை!... ஊன், உறக்கம் இன்றி தமிழோடு முயங்கி விடுவான்...
இராமன் :
அப்படியா?... ஆமாம்... அப்படித்தான்!... உனக்கு இந்தப் புத்தியை புகுத்தினேன் உன் மண்டையில், என் மாய சக்தியால் நான்!...
பீடணன் :
யாழிசைக்கத் தெரிந்த, பெண்கள் நூறு பேரையும், நான் என்னோடு அழைத்து வந்திருக்கிறேன்... யாழ்க் கருவிகள் நூறும் கொண்டு வந்திருக்கிறேன்... யாழிசைப் பெண்கள் எம்மோடு போர்க்களம் வருவார்கள்... நான் தமிழ்ப்பாட, பெண்கள் யாழிசைக்க, இராவணன் மெய்மறக்க- நீ, அம்பொன்று விடு இராவணன் வீழ்ந்திட!...
இராமன் :
பீடணா, நீயே புத்திமான்!... கொன்றுவிடுகிறேன்; இராவணனை நான்!... நான் கொல்லாவிட்டால், உனக்குக் கிடைக்காது இலங்கை!... உனக்கு நிலைக்காது; உன் உயிரும்!...
பீடணன் :
ஆமாம்; தருணம் பார்த்து நீ அம்பெய்துவிடு!...
இராமன் :
அதற்கு முன்னர் ஒரு வாக்குக் கொடு எனக்கு!...
பீடணன் :
என்ன?...
இராமன் :
நான் முடிசூட்டி வைப்பேன்; இலங்கை வேந்தனாக உன்னை!... நீ இலங்கை வேந்தனாய் அரசவையில் நுழையுமுன்னர் உற்றுக் கேள்; நான் சொல்வதை இப்போது நீ!...
பீடணன் :
உமது சித்தம் அல்லவோ, எனது பாக்கியம்!....
இராமன் :
இலங்கை வேந்தனாய் அவையில் நுழைந்தவுடன், நீ செய்ய வேண்டிய முதல் காரியம், ஆரியர்களை அமைச்சர்களாக்கிக் கொள்!... தமிழ்க் கல்விச் சாலைகளை மூடிவிடு!... தமிழர்களை கல்விக் கற்க விடாதே!... எவன் எந்தத் தொழில் செய்கிறானோ, அவன் குழந்தையும் அதே தொழிலில் ஈடுப்பட வேண்டும்... அவர்கள் ஒரு குலத்தவர்... அது அவர்களது குலத்தொழில் என்று கூறிவிடு... இதுவன்றி கல்வியில் நாட்டம் செலுத்தா வண்ணம் தமிழர்களை கவனித்திடு!... அரசவை நீடிக்க, அதுவே சிறந்த வழி!... தமிழர்கள் கல்வி கற்பது பாவமென்று நீ அரசவிதி வகுத்திடு...
பீடணன் :
அப்படியே இராமா!...
இராமன் :
தமிழ் மொழியில் உள்ள அனைத்து நூல்களையும் தீக்கிரையாக்கி விடு!...
பீடணன் :
தீக்கிரையாக்கி
இராமன் :
நான் சொல்வதைக் கேள் !... தமிழ் நூல்கள் அனைத்தையும் ஆரிய முனிகள் கற்றிட கொடு!... ஆரியமுனிகள் கற்று முடித்தவுடன், தீக்கிரையாக்கி விடு தமிழ் நூல்கள் யாவற்றையும்!... தமிழ் மொழியே ஆரிய மொழியில் இருந்துதான் தோன்றியது எனும்படி ஆரியநூல்களை வடிப்போம்... ஏனென்றால் ஆரியபாஷை, தேவ பாஷையல்லவா!...
பீடணன் :
ஆமாம்; இராமா!...
இராமன் :
நீ வேந்தனானப் பிறகு, செய்ய வேண்டிய ஒரு பணி மிக முக்கியமானது...
பீடணன் :
சொல்லுங்கள் அய்யரே!...
இராமன் :
சீதையின் மீது ஆசை வைத்து இராவணன் தூக்கி வந்தான் என்ற கதையை, நீ உனது மண்ணில் பரப்ப வேண்டும்... ஓவியம் தீட்டியும், சிற்பம் செதுக்கியும் இதனை நிலை நாட்ட வேண்டும்...
பீடணன் :
என்னை அரசனாக்குவது நீயல்லவா!... உன் சொல் அல்லவோ என்னை ஆளும்... மீறுவது பாவமென்று நான் அறிவேன்...
இராமன் :
உன்னை இலங்கையின் வேந்தனாய் ஆக்குவதன் நோக்கத்தையும் கூறுகிறேன்... நீ, கல்விச் சாலைகளை மூடியவுடன், உன்னால் இலங்கையில் ஒரு புது ஆணை தோற்றுவிக்கப்பட வேண்டும் ... நான்கு வருண பேதம் உனது ஆணையால், நிலை நிறுத்தப்பட வேண்டும்... தமிழர்கள் சூத்திரர்கள் என்பதை உனது ஆணை உறுதியிட்டுக் கூற வேண்டும்...
பீடணன் :
சொல்கிறேன் இராமா!
இராமன் :
ஆரியர்கள் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்... தமிழர்கள் சூத்திரர்கள் எனும் கருத்து உனது ஆட்சியில் வேரூன்றப்பட வேண்டும்... கல்வியறிவு என்பதே தமிழர்களுக்குக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறேன் நினைவில் கொள்; உனது நன்மைக்கே!...
பீடணன் :
இதுதவிர எனக்கு வேறேது பணி?...
இராமன் :
கல்விச் சாலைகள் மூடு!... ஆலயங்களை எழுப்பு!... கடவுள் சிலைவைத்து ஆராதனை நடத்து அனுதினமும்...
பீடணன் :
ஆகா!... இதனை நான் செய்யாமல், வேறு எதனைச் செய்வேன்?...
இராமன் :
இன்னும் அரியர்கள் என்ன என்ன சொல்கிறார்களோ அதனை அதனை அவ்வப்போது அவ்வப்போது நீ ஆணையிட்டு, நிறைவேற்ற வேண்டும்... இல்லையேல்; உனது ஆட்சிக்கு மட்டுமல்ல!... உனது உயிருக்கும் என்னால் உறுதிச் சொல்ல முடியாது... தேவர்களை சபித்தால்நரக வேதனை அடைய நேரிடும்!... சரி; நீ புறப்படு!... நாளை நீயே தலைமை வகிக்கிறாய்...
(பீடணன் இராமனது தாள் தொட்டு வணங்க-)
-திரை-
பாகம் :3. காட்சி-44. பாசறை (நிழற்காட்சி)
(இருமுனைப் படையும் களம் நோக்கி, ஆரவாரத்துடன் வருதல்... தேர் மீது நிற்கும் இராவணன்...)
இராவணன் :
சாரதி, தேர் நிறுத்து!... என் தம்பி என்னைக் கொல்ல, தலைமை வகித்து வருகிறான்... வேல் எறிந்து நான் அவனை வீழ்த்தப் போகிறேன் இப்போது...
(வேல் தூக்கிக் குறிப் பார்க்க, அதே நாழிகையில் யாழிசை முழங்க-
பீடணன் தமிழ்ப் பாடல் பாடல்-)
பீடணன் :
தமிழே நானுன்னைப் பாடுகிறேன்...
(குறிப் பார்த்து தூக்கப்பட்ட வேல் அமைதியுற்று, பழைய நிலைக்குத் திரும்புகிறது...
யாழின் இசையிலும், பாடலின் பொருளிலும் தன்னை மறந்து இராவணன் நிற்க-
அம்பொன்று வந்து, இராவணன் மார்பை பிளக்க, கீழே சாய்கிறான் இராவணன்)
இராமன் குரல் :
பீடணா, இராவணன் செத்தான்... அதோ அரக்கர் படைத் தலை சாய்ந்தன... நீ போ!..
பீடணன் குரல் :
எங்கே?...
இராமன் குரல் :
உயிர் பிரிந்துக் கொண்டிருக்கிறது... இவ்வேளையில் சில சடங்குகள் செய்ய வேண்டும்... இந்தப் பழக்கம், உங்கள் தமிழரிடையே இல்லை... நீ, இறந்துக் கொண்டிருக்கும், இராவணன் மூலம் இந்தப் பழக்கத்தை இலங்கை மண்ணில் பரவிடச் செய்!... சிலச் சடங்குகளை இன்று நீ ஆரியன் போல், நின்று செய்!... நாளை எந்த அரக்கன் இறந்தாலும், ஆரியனை வைத்து சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்து விடு... அரக்கர் பிறப்பினும், இறப்பினும் ஆரியரே, சடங்குகள் செய்தல் வேண்டும்... ஆண்டவனுக்குத் தூதுவன் ஆரியன் என்பதை நீயும் அறிவாய்...
பீடணன் குரல் :
அய்யரே, உமது சித்தம்; எம்மை ஆளட்டும்... நான் இப்போது போக வேண்டுமா அவனிடம்!...
இராமன் குரல் :
ஆம்!... நீ போ!... சில மந்திரங்களை நான் இங்கிருந்து சொல்கிறேன்... இல்லையென்றால்; அவனுடைய ஆவி பேய் வடிவங் கொண்டு, உன்னைப் பழி வாங்க வரும்... நீ போ...
-திரை-
பாகம் :3. காட்சி-45. போர்க்களம்.
இராவணன்
பீடணன்
வீரர் சிலர்
.
(வீரர் சூழ்ந்து கண்கலங்கி நிற்க, இராவணன் அருகில் பீடணன் அமர்ந்து...)
பீடணன் :
அண்ணா, வாய்த் திறவுங்கள்... பால் ஊற்றுகிறேன்...
இராவணன் :
என் உயிரைக் குடித்து விட்டு, என்னைப் பால் குடிக்கச் சொல்கிறாய்... இராமன் உனக்காக, காத்திருப்பான் ; போ!... இலங்கையின் வேந்தன் ஆகிவிட்டாய்... உன்னை வாழ்த்துகிறேன்... போ...
பீடணன் :
அண்ணா, நான் தப்புச் செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்... நீங்கள் பேயாகப் பிறந்து வந்து என்னை துன்புறுத்தாதீர்கள்...
இராவணன் :
போ... போ... தமிழ் மண்ணின் மணி வயிற்றில், இனியொரு பீடணன் பிறக்கக் கூடாது... தமிழ் மண்ணே!... தமிழ் மொழியே!...
(இராவணன் மூச்சுத் திணறித் துடிக்க...)
இராவணன் :
தமிழே, உனது மேன்மைக்காக ஆயிரம் பேர் இருந்தாலும், ஒரே ஒரு துரோகியால் உன் மேன்மை சீரழிந்து விடும்!... தமிழே... தமிழே... உன்னை வணங்குகிறேன்... தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க... குழலி எங்கே?... யாழிசைக்கச் சொல்லுங்கள் வீரர்களே!... குழலி... குழலி... தமிழே!...
(மெல்ல மெல்ல மூச்சடங்குகிறது... வீரர் அழல்... பீடணன், நினைவிழந்துக் கொண்டிருக்கும் இராவணனது வாயோரம் பால் வார்க்கிறான்...)
-திரை-
பாகம் : 3. காட்சி - 46. காடு.
இரிசியமுகன்
இராமன்
ஆரியவீரர் இருவர்.
(இராமன் பாறைமீதமர்ந்திருக்க, முனிவன் இராமனது கால்களை, இதமாக தடவிக் கொண்டிருத்தல்...)
இராமன் :
முனிவரே, எமது எண்ணம் ஈடேறிவிட்டது... சுக்ரீவன் ஆரிய முனிகள் சிலரை அமைச்சர்களாய்க் கொண்டு கிட்கந்தகத்தின் அரசனாகி விட்டான்... பீடணனும் இலங்கைப் பேரரசின் மன்னனாய் முடிசூடினான்... இருவரும் படையோடு, எமக்குத் துணை வர, நான் அயோத்திப் போகிறேன்... பரதனை வீழ்த்தி, அயோத்தியைக் கைக் கொள்வேன்...
இரிசியமுகன் :
நீ அவதார நாயகன்!... உன் செயல்கள் யாவிலுமே, ஆரியமே தழைத்தோங்கும்... அரியணையில் இருந்து பரதன் எதனை சாதித்தான்?... காட்டில் நின்று நீ ஆரியம் விதைத்தாய்... நீயன்றோ ஆரியன்... உனக்கல்லவோ எமதுத் துணை என்றுமே!... ஆரியரின் ஆறுதலன்றோ நீ!...
இராமன் :
முனிவா, இனி எமதுப் பழக்க, வழக்கங்களை மாற்றி, - அதாவது - மண்ணுக்கேற்றவாறு நாமும் நம்மை மாற்றிக் கொள்வோம்... மரத்தின் நிறத்துக்கு தன்னை மாற்றிக் கொள்ளும், சிறு விலங்கு போல் நாமும்
இரிசியமுகன் :
புரியவில்லை எனக்கு!...
இராமன் :
ஒன்றை நினைவில் கொள் முனிவா!... எந்த மக்கள் ஏதன் மீது நாட்டம் கொன்டுள்ளனரோ அதனை யாமும் போற்றி நின்றால், எளிதில் அவர்களது அன்பைப் பெற்றுவிடலாம்... ஒருவருக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்யும் போது, அவரின் வெறுப்புக்கு நாம் ஆளாக நேரிடும்... அதனால்; தேனுக்குள் மருந்து போல், புன்னகைக்குள் ஆரியத்தை வைத்துப் பழகிட வேண்டும்... தமிழர்கள் புலால் உண்ணாதவர்கள் அல்லவா... நாமும் எம்மை புலால் உண்ணாதவர்களாக மாற்றிக் கொண்டால், இவர்கள் எம் மீது நெருக்கம் காட்டுவார்கள்... அவர்கள் காட்டும் அன்புத்தான் எமக்கு அடித்தளம்... அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டால், அரக்கர்களை ஆளப்போவது நாம்தானே!... இதனை உணர்ந்தே, சொல்லுகிறேன்... புலால் தின்னுவதை நிறுத்த ஆரியர்களுக்குக் கூறி விடு!...
இரிசியமுகன் :
இயலுமா எம்மால்?...
இராமன் :
ஊரறிய தின்ன வேண்டாம்... யாரும் அறியா வண்ணம் தின்பதில் தவறில்லை!... ஊரின் முன் எம்மை, யாம் புலால் உண்ணாதவர்களாக மாற்றினால் ஒழிய, தமிழ் மண்ணில் எமது ஆரியத்தை நிலை நாட்ட முடியாது... இராவணனைக் கொன்று கோபத்துக்கு ஆளாகி நிற்கிறோம்... இவர்களது கவனத்தைத் திருப்ப, எம்மை யாம் புலால் உண்ணாதவர்களாக ஆக்கி கொள்வதுதான் வழி!... எம்மை யாம் புலால் உண்ணாதவர்களாக வேடம் தரித்துக் கொள்ளும் அதே வேளையில், ஆடு, மாடுகளை பலியிட்டு தின்றால் ஆண்டவனது அருள் கிடைக்கும் என்ற கருத்தினை தமிழர் நெஞ்சில் மெல்ல மெல்ல ஏற்ற வேண்டும்... தமிழர்களும் ஆடு, மாடுகளை ஆண்டவனுக்குப் பலியிட்டுத் தின்ன பீடணன் வழிவகுப்பான்... அதன் பின்னர் யாமே உயர்க் குடியினர்... புலால் தின்னும் தமிழர் புலையர் ஆவர்...
இரிசியமுகன் :
உனக்கன்றி, வேறு எவருக்கு இதுப்போல் திட்டம் உதயமாகும்... நீ அவதார நாயகன்தான்!...
இராமன் :
ஆரியவீரர்களே, இங்கு வாருங்கள்...
(இரு வீரர்கள் வரல்...)
இராமன் :
பீடணனும், சுக்ரீவனும் படையோடு எமக்குத் துணை வருவர்... அநுமனை அனுப்பியுள்ளேன்; அயோத்திக்குத் தூதுரைக்க!... போர் தொடுத்து நான் வருவதாக!... பரதனுக்கு தூதுரைத்து வருவான் அனுமன்!... வந்தவுடன், யாம் பரதனிடம் போருக்குச் செல்ல வேண்டும்... அதற்கு முன்னர் நீவிர் இருவரும் மிதிலைச் சென்று வர வேண்டும்...
வீரன் (1) :
நாதா, தங்கள் உத்தரவு!
இராமன் :
என் மனைவி சீதையின் தங்கை தீங்குழலி என்பாள், மிதிலையில் இருக்கிறாள்... அவளை இட்டு வருக... நான் சொல்வதாகச் சொன்னால், அவளே வந்து விடுவாள்... என் மீது அவளுக்கு மையல் உண்டு!... எவரும் அறியா வண்ணம் அவளோடு நீவிர் வர வேண்டும்...
வீரர் இருவர் :
நாதா, தங்கள் உத்தரவு!...
இராமன் :
சரி; செல்க!...
(செல்லல் )
இரிசியமுகன் :
தீங்குழலியை இங்கு ஏன் அழைத்து வரச் சொன்னாய்?
இராமன் :
இலங்கை மன்னன் பீடணன் சீதையை அசோகவனத்திலிருந்து இங்கு அழைத்து வருவான்...
இரிசியமுகன் :
வருவான்...
இராமன் :
அவளோடு வாழ, எனக்கு விருப்பமில்லை...
இரிசியமுகன் :
உன்னை நினைத்து கண்ணீர்த் துளிர்த்து சீதை நிற்பதாக அநுமன் கூறினானே... அவளையோ நீ ஏற்க மறுக்கிறாய்?...
இராமன் :
தமிழ் மக்களிடையே, என் பால் நல்லெண்ணம் மலர வேண்டுமெனில், சீதையை நான் இழக்க வேண்டும்... வேறு வழியில்லை!...
இரிசியமுகன் :
புரியவில்லை எனக்கு!...
இராமன் :
உனக்கு எதுதான் புரிகிறது?... கண்டவரைச் சுண்டியிழுக்கும் அழகல்லவோ சீதையின் அழகு!... தூக்கிச் சென்ற இராவணன் அவளைச் சுவைக்காமல் விட்டுருப்பானா?...
இரிசியமுகன் :
அய்யம்தான்!...
இராமன் :
இந்த அய்யம் அநேகருக்கு இருக்கக் கூடும்... தீங்குழலி இங்கு வந்து சேரட்டும்... பீடணனும் சீதையோடு வரட்டும்... நான் என்னச் செய்யப் போகிறேன் என்பதை பொறுத்திருந்துப் பாருங்கள்...
-திரை-
பாகம் :3. காட்சி-47. காடு.
இராமன்
சீதை
அநுமன்
இரிசியமுகன்
ஆரியவீரர் மூவர் .
(இராமன் பாறை மீதமர்ந்திருக்க, சீதை இராமனைப் பாராமல், திரும்பி நின்றிருக்க-)
இராமன் :
என்னைப் பார்...
சீதை :
உன்னைப் பார்க்கவும் விருப்பமில்லை; உன்னோடு வாழவும் எனக்கு விருப்பமில்லை!... என்னை சாக விடு!...
இராமன் :
சாகடிப்பதற்காகத்தான் உன்னை வரச் செய்தேன் நான்!...
சீதை :
...............
இராமன் :
ஏன் பேச மறுக்கிறாய்?...
சீதை :
நீ எதற்கும் துணிந்தவன் என்பது எனக்குத் தெரியாதா?...
இராமன் :
கள்ளி, நீயும் துணிந்தவள்தானே!... நீ எத்தனை இரவு இராவணனுக்கு இன்பம் கொடுத்தாய்... சொல்!...
சீதை :
சாகத் துணிந்தவளிடம் கேள்விகள் கேட்பது எதற்கு?... சாகடிக்கத் துணிந்தவனுக்கு இந்த சங்கதிகள் எதற்கு?... என்னை வாழ வை என்று உன்னை நான் கெஞ்சி நிற்கிறேனா... நான் இப்படியெல்லாம் குற்றம் செய்துவிட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்றாடவில்லையே உன்னிடம்!...
இராமன் :
ஓ... கோ... நீ உத்தமியோ?.... உன்னையோ எனக்குத் தெரியாது?... உன்னை இழிவாய் இகழ்ந்தாலும், காமம் நெஞ்சில் கிளர்ந்து விட்டால், அத்தனையையும் மறந்து என்னைக் கட்டியணைக்க இழுப்பாயே!... களைப்பால் நான் தளர்ந்தாலும், கள்ளி நீ, என்னைப் புரட்டி எடுப்பாயே!... காமுகி நீயோ, அசோகவனத்தில் அடங்கி இருந்திருப்பாய்?... காமத்தீ உன் தேகத்தில் சுடர, எத்தனை முறை நீ இராவணனை கட்டியணைத்தாயோ... இப்போது ஒரு சந்தேகத்தை உன் தேகத்தின் மீது சுமந்து நிற்கிறாய்... உன்னைப் பார்ப்பதற்கே எனக்கு அவமானமாக இருக்கிறது... சனகனின் புதல்வியே, உனக்கு எவனோடு விருப்பமோ அவனோடு போய்விடு!... அரக்கன் மடியில் சுகம் கண்ட உன்னை இனி நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்... நான் பழைய இராமன் அல்ல என்பதை நீ தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, உன்னை இங்கு வரவழைத்தேன்... தமிழர்களைக் காட்டிலும் ஒழுக்கத்தில் உயர்ந்தவன் இந்த இராமன் என்பதை நீ புரிந்துக் கொள்... உன்னை அவன் தூக்கிச் சென்றப் போது, நீ தொடையில் வீற்றிருந்ததைப் பலர் கண்டிருக்கின்றனர்... அசோகவனத்தில் நீ எப்படியெல்லாம் சுகம் தந்தாயோ... உன்னைப் பார்ப்பதற்கே கண் கூசுகிறது... உனக்கு விருப்பமானால், பரதனோடு போ... இல்லையேல்; இந்நாள் அரசன் சுக்ரீவனுக்கும் ஆசைநாயகியாய் போ... இல்லையேல்; நீ இருந்த அசோகவனத்தின் அதிபதி பீடணனோடும், போ... இப்போது நீ தாசியாகத்தான் என் கண்ணுக்குத் தெரிகிறாய்... அழகிய அல்குலையும், கூரிய முலைக் காம்புகளையும் கொண்ட, உன்னிடம் அரக்கன் இராவணன் சுகங்காணாமல் விட்டிருப்பானா?... அரக்கனவனிடம்
சீதை :
உனக்கு மானம், மரியாதை இல்லையா?... ஒரு இழிமகன் இழிமகளிடம் பேசுவது போல் பேசுகிறாயே!...
இராமன் :
அல்லாமல்; நீ ஒழுக்கம் வாய்ந்தவளோ?.. அரக்கன் இராவணனிடம் நீ
சீதை :
அன்புத் தெய்வத்தையோ, அரக்கன் என்றுக் கூறுகிறாய்?... அரச மகுடத்திற்காக தந்தையைக் கொன்ற நீயன்றோ அரக்கன்!... ஏதுமறியாத மூதாட்டி தாடகையின் முதுகில் அம்புத் துளைத்த நீயன்றோ அரக்கன்... காமவெறியோடு அலைந்து காமவல்லியைக் கொன்ற நீயன்றோ அரக்கன்... சுவைத்தப்பின் அலைமுகிலின் சுந்தரமேனியை நாறு நாறாய் சிதைத்து தீச்சுடலையில் சுட்டெரித்த நீயன்றோ அரக்கன்... போரில் பகை வெல்லத் திராணியில்லாதவன் நீ!... தூங்கும் போது தலைக் கொய்து வரச் செய்த நீயன்றோ அரக்கன்... தமிழ்ப் பாடலில் மனமுருகி நின்ற இராவணனின் மார்பில் அம்புத் துளையிட்டு மனமகிழ்ந்த நீயன்றோ அரக்கன்... கட்டிய மனைவியைக் கண்டவனுக்குத் தரவும் துணிந்த நீயன்றோ அரக்கன்... அன்பின் உருவமல்லவோ இராவணன்!... அண்ணன், தங்கை என்று பாசந் தவழ என்னை அசோகவனத்தில் வைத்திருந்தான்... இழிச்சொல்லுக்கு இடந்தரக் கூடாது என்பதற்காக, ஒரு நாளும் அவன் என்னை அசோகவனம் வந்து சந்தித்தானில்லை... பண்பில் உயர்ந்த இராவணனை பண்பில்லாத அரக்கன் நீயோத் தூற்றுவது?...
இராமன் :
என்னையோ அரக்கன் என்றாய்?... அரக்கனையோ நீ அண்ணல் என்கிறாய்?... அவனுக்கோ, நீ உனது நெஞ்சில் இடமும் வைத்திருக்கிறாய்!... ஆயின்; எத்தனை முறைத்தான் நீ உன் தொடைகளை விரித்திருப்பாய்... நீசப்பிறவியை நெஞ்சில் வைத்துப் பேசும் நீயும் ஒரு ஆரியச்சியா?... மண்ணில் தானே உன்னைக் கண்டெடுத்தான் சனகன்!... எவனோ அரக்கன் பெற்று, உன்னை புழுதியில் எறிந்துவிட்டுச் சென்றிருப்பான்... அதனால்தான் நீ, ஆரியத்தில் பிறந்தும், உன்னிடத்தில் தமிழ் குணம் மாறவில்லை... உன்னை உயிரோடு விட்டால், என் வாழ்வின் சீர் கெடும்...
(அநுமன் வருதல்)
அநுமன் : அண்ணலே, வாழி!... அவதார நாயகன் உனது தூதேந்தி, பரதனிடம் சென்றேன்... போர் தொடுத்து வருவான் இராமன் என்றுக் கூறினேன்... அவனோ அச்சம் கொண்டு, தீப்பாய்ந்து மாய்ந்தான்...
இராமன் :
நல்லது... தடையேதும் இல்லை எனக்கு!... நேராய்ச் சென்று அயோத்தியின் அரியணையில் நான் அமர்வேன்... நான் போகும் போது, நீயும், சுக்ரீவனும், பீடணனும் என்னோடுத் துணை வர வேண்டும்... அனுமா, நீ போய் இரிசியமுகனையும், அவனோடு இருக்கும் இரு ஆரிய வீரர்களையும் வரச்சொல்... நீயோ, வேறு அரக்கர்களோ வரக்கூடாது... போ...
(அநுமன் இராமன் தாள் பணிந்தப் பின்)
அனுமன் :
சீதாபிராட்டி!... நின் பாதம் பணிந்தேன்... அருள்வாய் எனக்கு!...
(சீதையின் தாள் பணிந்து எழ...)
இராமன் :
போடா சீக்கிரம்...
( அனுமனின் மயிரைப் பிடித்துத் தள்ளிவிட, அனுமன் போதல்...)
இராமன் :
சீதையே, உன்னை தீக்கிரையாக்குகிறேன்... என்னையோ அரக்கன் என்றாய்?
(இரிசியமுகனும், ஆரியவீரர் இருவரும் வருதல்...)
இராமன் :
தீங்குழலி வந்தாளா?...
வீரன் (1) :
வந்தாள்... உம்மைக் காண சித்தம் கொண்டிருக்கிறாள்...
சீதை :
தீங்குழலியா!... அவளை நான் காண வேண்டுமே!..
இராமன் :
வாயை மூடி இரு!... முனிவனே, தீ மேடை ஒன்று எழுப்புங்கள்...
இரிசியமுகன் :
ஏன்?...
இராமன் :
நமக்குப் படை உதவி செய்தப் பல நாட்டரசரும் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள்... அறிவாயோ?... அழகி இவளை அரக்கன் இராவணன் தொடாமல் - சுவைக்காமல் - கலைக்காமல் விட்டிருப்பானா என்றல்லவா அவர் நெஞ்சில் எண்ணமாடும்!... இப்போதும் அவனையே நினைத்து ஏங்கும் இவள் அவன் மடி சாயாமல் இருந்திருப்பாளா?... அடுத்தவனோடு சிலகாலம் வாழ்ந்தவள்தானே இராமனின் மனைவி!... சீர்கெட்ட சீதையோடு திரும்பவும் வாழ்ந்தான் இராமன் என்று வருங்காலம் என்னைக் காரி உமிழாதா?... என்னைக் காரி உமிழ்வதும், ஆரிய இனத்தை உமிழ்வதும் ஒன்றுதானே...
இரிசியமுகன் :
ஆமாம்!...
இராமன் :
இராமன் மனைவி, கற்பில் சிறந்தவள் என்று மெய்ப்பித்தால்தான், ஆரிய இனத்தின் மீது நல்லெண்ணம் மலரும்...
இரிசியமுகன் :
ஆமாம்!...
இராமன் :
ஆரியவீரர்களே, இரிசியமுகனோடு சேர்ந்து தீ மேடை எழுப்புங்கள்... மேடையின் பின்புறத்தே, பொய்க்குழி ஒன்று அமைத்திடுங்கள்... அரக்கர் பலரை அழைத்து, தொலைவில் நிறுத்துங்கள்... தொலைவில் நின்று அரக்கர் காண, நான் ஓசையோடு பேசுகிறேன்... என் மனைவி கற்பில் சிறந்தவள்... இராவணன் சீதையை தீண்டியிருந்தால், இவள் தீயோடு சாகட்டும்... கற்பில் சிறந்தவள் சீதை என்றால், தீயில் பூவாய் பூந்தெழட்டும் என்பேன்... நீவிர் இவளைத் தூக்கி தீயில் போடுங்கள்...
இரிசியமுகன் :
தீயில் இவள் செத்துப் போவாளே...
இராமன் :
வெந்து சாகட்டும்... துடித்து சாகட்டும்... துன்புற்று சாம்பலாகட்டும்... அரக்கரோடு இன்பம் துய்த்தவள்... இவளோடு இனி நான் படுப்பேனா?... அரக்கர் தொட்ட இவள் உடலை இனி நான் தொடுவதுப் பாவமாகாதா?... தீண்டத் தகாதவன், தீண்டினான் இவளை!... இனி நான் இவளை தீண்டினால், என்னால் ஆரியத்தில் புதுமை மலருமோ?... சாகட்டும் இவள்!...
இரிசியமுகன் :
தீங்குழலி எதற்கு?
இராமன் :
அழகில், வடிவில் , உருவில் இவளைப் போலவே தீங்குழலியும் இருப்பாள்... என் மனைவி கற்புடையவள் என்றுக் கூறி, தீயில் இவளை போடுவோம்... தீ மேடையில் இவள் இறக்கப் பட்டவுடன், தீ மேடைக்குப் பின்புறத்தில் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் தீங்குழலி பூப்போல் புன்னகைத்து எழுவாள்... ஓடி நான் தீங்குழலியை அணைத்துக் கொள்வேன்... தொலைவில் நிறுத்தப் பட்டிருக்கும், அரக்கர் கண்ணுக்கு, என் மனைவி சீதைத் தீயில் இடப்பட்டும் பூவாய்ப் பூத்தெழுந்ததுப் போல், காட்சித் தெரியும்... கற்பில் இவளுக்கு நேர் எவள் என்று கேட்பேன்... அரக்கன் தூக்கிச் சென்றும் சீதை, கற்பு இழந்தாளில்லை என்றுச் சொல்வேன்... எனது நாடகம் அரக்கர் நெஞ்சில் அரங்கேற, தீமேடையில் இவள் சாம்பலாவது நன்று!... இழுத்துச் செல்லுங்கள்; இவளை!...
சீதை :
தன்னலத்திற்காக எதற்கும், துணிந்த நீயன்றோ அரக்கன்!... நீயன்றோ அரக்கன்... நீயன்றோ அரக்கன்...
(சீதைக் கூவக் கூவ, ஆரிய வீரர் இருவர் இழுத்துச் செல்லல்...)
இராமன் :
அனுமா...
(இராமன் கூவ, அனுமன் ஓடி வருதல்...)
அநுமன் : அய்யரே, அழைத்தீரா?...
இராமன் :
வண்டார்குழலி உயிரோடு இருந்தால், பீடணனது ஆட்சிக்கு இடர் வரும்... அவதார நாயகன் நான் சொல்லுகிறேன்... இதனை அவனிடம் நீ சொல்லி விடு!... அசோகவனத்தில் இருந்து அவள் யாழ் மீட்ட, துயர்மிகுந்த அவள் கோலம் கண்டு மனம் உருகிச் செல்கின்றனராம் மக்கள் நாள் தோறும்... இதனை வளரவிட்டால், மக்கள் வெகுண்டு, மன்னன் பீடணனை சாகடித்து விடுவார்கள்... எனவே
அநுமன் :
குழலியைக் கொன்று எரியூட்டி விடவா?...
இராமன் :
செய்... போ... பிறகு நீயும், பீடணனும், சுக்ரீவனும் என்னோடு வரவேண்டும்... அயோத்தியில் நான் முடிசூடப் போகிறேன்... ம்... முதலில் குழலியைக் கொன்று வா... அனுமா, அதோ அந்த ஆரிய வீரனை வரச்சொல்!...
(அனுமன் போக, சிறுது நேரத்தில்- ஆரியவீரன் ஒருவன் வருதல்...)
இராமன் :
ஆரியவீரனே!... சற்று முன்னர் என்ன சொன்னாய் என்னிடம்?...
ஆரியவீரன் :
அரக்கன் ஒருவன் தவம் இருக்கிறான்!...
இராமன் :
தவமா?...
ஆரியவீரன் :
'தவமியற்றுவதால்தான் ஆரியருக்கு ஆண்டவன் அருள் பொழிகிறான் என்றால், நானும் தவமிருந்து அருள் பெறுகிறேன்... தவமிருந்தும் நான் அருள் பெறப்படவில்லையென்றால், தமிழர்களே, கடவுள் இல்லை என்று உணருங்கள்... ஆண்டவன் இருப்பதாக ஆரியர் கூறுவதைக் கேட்டு, மனச்சஞ்சலம் கொண்டிருக்கும் சிலத் தமிழர்களின் அய்யம் போக்கவே, நானும் ஆரியரைப் போல் தவம் இருக்கிறேன்...' என்று சொல்லிவிட்டு, அரக்கன் ஒருவன் தவம் இருக்கிறான்...
இராமன் :
ஆ ... நன்மைக்கு உகந்தது அல்லவே... அரக்கன் தவம் இருக்கத் துணிந்தானா?... சோதித்து எம்மை கயமைப் படுத்த துணிந்தானா?... தவம், வேள்வி, யாகம் என்பதெல்லாம் மோசடி என்பதை அரக்கன் வெளிப்படுத்தி விட்டால்?... இத்தனை நாள் யாம் செய்த பொய்மை யாவும் வெளிச்சமாகிப் போகுமே... நமது சூழ்ச்சி பொருளற்றுப் போகுமே... போ... படையொடுப் போய், பாவி அரக்கனைக் கொன்று வா... போ...
(போதல் )
இராமன் :
கொஞ்சம் நில்!...
(நிற்றல் )
இராமன் :
சீதைக் கூவுகிறாளா?...
ஆரிய வீரன் :
இல்லையே...
இராமன் :
கூவுகிறாளே... இதோ... கூவிக்கொண்டே இருக்கிறாள்... 'நீயன்றோ அரக்கன்...' 'நீயன்றோ அரக்கன்...' என்றுக் கூவுகிறாள்... என் செவிக்குத் தெளிவாய்க் கேட்கிறதே...
ஆரியவீரன் :
இல்லையே... என் செவிக்குக் கேட்கவில்லை... அவள் எப்போதோ தீ மேடைக்கு இழுத்துச் செல்லப்பட்டு விட்டாள்...
இராமன் :
இதோ... கூவுகிறாள்... அதோ கூவிக்கொண்டே இருக்கிறாள்... 'நீயன்றோ அரக்கன்...' 'நீயன்றோ அரக்கன்...' என்கிறாள்...
(இராமன் பார்வையை சுழலவிட்டு... செவியை இருக்கரத்தால் மூடி நின்று, கதறுகிறான்...)
-திரை-
பாகம் : 3. காட்சி-48. அசோகவனம்.
வண்டார்குழலி
திரிசடை
பீடணன்.
(வண்டார்குழலி, சோகத்தின் உருவாய் யாழ் மீட்டிக் கொண்டிருக்கிறாள்...
சாமரம் வீசி தூண் சாய்ந்து திரிசடை நிற்க-
இருவர் உடலும் தளர்வுற்று, உயிர் இழையாடியிருக்க-
யாழ் வாசித்த நிலையிலேயே, குழலியின் தலைச் சாய -
தூண் சாய்ந்து நின்ற திரிசடையின் உடலும் தரை சாய-
பின் வழியே, குறுவாளோடு பீடணன் வரல்...
தரை மீதில், குழலியும், திரிசடையும் உயிர்த் துறந்து துறந்துக் கிடப்பதைக் கண்ணுற்று-
திகைப்பெய்தி நிற்கிறான்...)
-திரை-
நீயன்றோ அரக்கன் முற்றிற்று...
*** நீயன்றோ அரக்கன் மொத்தம் மூன்று பாகங்களாகும்... முதல் இரண்டு பாகங்களும், தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன...
மூன்றாவது பாகம் மட்டும் முதல் காட்சி முதல் நாற்பத்திரண்டாவது காட்சி வரை ஒரு தொகுதியாகவும், நாற்பத்தி மூன்றாவது காட்சியிலிருந்து நாற்பத்தெட்டாவது காட்சி வரைக்கும் மற்றோர் தொகுதியாகவும் கொடுக்கப்பட்டுள்ளன...
நன்றி
வணக்கம்
தமிழ்நாடு தமிழருக்கே!***
கருத்துகள்
கருத்துரையிடுக