இராவணன் காவியம் (நீயன்றோ அரக்கன்) - பாகம் : 2.

நீயன்றோ  அரக்கன் - பாகம் : 2.

                                                        சரித்திர நாடகம் 

                                   ( மூன்று பாகத்தில்  - இரண்டாவது  பாகம். )


எழுதியவர் :
ஆர். கனகராஜ் (எ ) அரங்க கனகராசன்.

புனை பெயர்கள் : கனகு, மகாத்மா, தென்றல் கனகு, க.ராசன்.

வெளியீடு :
அன்னை ஆறுகுட்டியம்மாள் பதிப்பகம், கோவை.




பாகம் - 2.                   காட்சி -1.                நிலாமுற்றம்!


வண்டார்குழலி 
திரிசடை 
இராவணன் 
சேயோன் 
பீடணன் 

( அந்திப் பொழுதைத் தாலாட்டுவதுவது போல், தென்றல் காற்று வலம்வர-

நிலாமாடத்தில் யாழ் மீட்டிக் கொண்டிருக்கிறாள் வண்டார்குழலி!

தென்றல் அவளது கருங்குழலை வருடி, இளந்துகில் மீதில் உராய்வுச் செய்திருக்க-

யாழிசையோடு, பாதம் தாளமிட, நடனமாடிக் கொண்டிருக்கிறாள் திரிசடை!

திரிசடையின் மேனியில் பருவக்கீற்று மின்னலிடுவதைக் கண்டு முயங்கிட, வந்தது போல் நிலாவும் மலர்ந்திருந்தது வானில்!

நடனக் கோலத்தைக் காண ஆவல் மிகுதியுடன் வான்வீதியில் முகில் வரவு அதிகரித்தது போலும்!

யாழிசையோடு நடனமும் இணைந்து, அந்திப் பொழுதை சீராட்டியிருக்கும் போதில்-

மகன் சேயோனுடன் மன்னன் இராவணன் நிலாமுற்றம் வருகிறான்...

நிலாமுற்றத்தின் மற்றோர்த் தளத்தின் மீது, இராவணனும், சேயோனும் அமர்ந்து, நாட்டியக்கலையின்பால் உள்ளம் செலுத்தியிருக்க-

பல்லாயிரமாவர்க் காத்திருந்து, நல்லோர் முகம் கண்டு களி கொள்ளுதல் போல், சீர்மிகு ஆட்சியாளன் இராவணன் திருமுகம் கண்டிட-
விண்மீன்களும் திரண்டன போலும்!...

எழில் சூழலோடு ஆடிய திரிசடை அன்னையின் முன் அமர்ந்து வணங்கி, பின்னர்-
இராவணன் அமர்ந்திருக்கும் தளம் நோக்கி நடைப்பயின்று  வந்து, இராவணனுக்கும் வணக்கம் கூறி நிற்கிறாள்...

இராவணன் :
வாழ்துகள், மகளே!... 

(குழலியைப் பார்த்து இராவணன் ...)
இராவணன் :
குழலி, மதுவருந்திய மதியை நீ பார்த்ததுண்டா?

குழலி :
மதி மதுவருந்திடுமோ?

இராவணன் :
ம்... அந்த நிலாவைப்பார்!... திரிசடையின் நடனமெனும் மதுவருந்தி மயங்கிக் கிடப்பதைப் பார்... 

குழலி :
ஆமாம்; மன்னவா!... மயங்கிய நிலா மண்மீது வீழ்ந்திடாதிருக்க, மேகங்கள் போர்வையாய் விரிந்து நிலவுக்குக் காவல் புரிகின்றதோ?... திரிசடையே, உனது நடனக்கோலம் கண்டு அந்திப் பொழுதும் மெய்யுருகி விட்டது!...

திரிசடை :
ஆகா!... நாட்டை ஆள்வதில் மட்டுமல்ல!... சொற்களை ஆள்வதிலும் வல்லவர்கள்தான் நீங்களிருவரும்!... கள்ளுண்டு கவிபாடும் வண்டுகள் போலல்லவா, உங்கள் சொல்லுண்டு ஒளிப் பாய்ச்சி நிற்கின்றன விண்ணில் மீன்கள்;...காணுங்கள்!...

இராவணன் :
எனது தம்பி பீடணனல்லவா உனது தந்தை!... நான் எது சொன்னாலும், உடனே பீடணன் மாறு கூறுவான்... நீயும் நானொரு உவமைகூற,-  உடனே விண்மீன்களை உவமையாக்கி என்னை உவமானமாக்கி விட்டாயே!..  ஒத்திகை முடிந்ததா?...

திரிசடை :
ஒத்திகையா?...

இராவணன் :
ம்... நாளை அந்திப் பொழிதில், ஆரவாரத்துடன் அயோத்தி நோக்கி ஆற்றல்மிகு நமதுப் படைப் புறப்படுமுன்னர், தமிழச்சி, நீ எழுச்சிமிகு நடனமாடி, வீரர்களை வழியனுப்பிட விழைந்துள்ளாய்... அதன் ஒத்திகைதானே சற்று முன்னர் நடந்தது?...

திரிசடை :
ஆமாம்.பெரியப்பா!... ஆணவமிகுந்த ஆரியர்களின் அறிவற்றப் போக்கை நீக்க, நீங்கள் அடியெடுத்து வைக்க, உமது அடித்தொழுது ஏகவிருக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மறவர்களோடு நானும் ஒருத்தியாக, வாளேந்தி வாயகன்ற கடல் தாண்டி, வஞ்சகர்கள் நெஞ்சம் பிளந்திட, துடிக்கிறேன்... ஆனால்; தாங்களோ?

இராவணன் :
திரிசடை, தீரத்தில் காமவல்லிக்கு நேர் நீ!... பகைவரை கூறாக்க நீ கூர்வாள் ஏந்த வேண்டாம்... மகளே, நீ கூரிய விழிகளில் தீப்பொறித் தெறிக்க வீர நடனமாடினாலே போதும்!... வேங்கையென வீறுகொண்டெழுவர் எமது வீரர்!... ஆட்டு மந்தைகளாம் ஆரியர் அடிபிறழ ஓடிடுவர்!...

திரிசடை :
பெரியப்பா!... நன்றுதான் தங்கள் நல்லுரை!... வென்று வாருங்கள்!... வாளுக்கு முத்தமிடுகிறேன்!!... 

(இராவணன் இடையிலிருந்த வாள் உருவி, வாள் மீது இதழ்ப் பதித்து, திரும்பவும் வாள்தனை இராவணனிடம் தந்து...)

திரிசடை:
ஆயினும்; பெரியப்பா!... பேடிப் பயல்கள் ஆரியர்களைக் கொல்ல, வீரர்கள் படையெடுப்பு எதற்கு?... நகம் கொண்டு கிள்ளி எறிந்திட வேண்டியக் கொடியை, வாள் கொண்டு அறுப்பது விந்தையன்றோ?... என்னைப் போல் ஏழெட்டு இளம்பெண்கள் போதாதா?... எலிக் கூட்டத்தோடுப் போரிட புலி வேண்டுமோ?... சிறு நாகம் சீரினால், சிதறி ஓடிடாதோ எலிக் கூட்டம்தான்!... தினவெடுத்த எம் தமிழ் வீரர்களுக்கு, ஆரியப்பயல்கள் தீனியாவாரோ?...
சீறி தமிழ்ப் பெண்கள் பாய்ந்தால், சிதறிடாதோ ஆரிய சிறுகூட்டம்தான்?... 

திரிசடை :
பெரியப்பா, ஆரியர்கள் நம் எல்லையில் யாகத்தீ மூட்டிட, தாடகைத் தாய், தடையாய் இருந்தாள்... தடைமீறி வந்த, ஆரியரை தீரத்தோடு எதிர்த்தாள்... தாடகையின் கோபக் கனல்விழிக்கு அஞ்சியொளியும் கோசிகனின் வாய்வார்த்தைக் கேட்டு பாவி இராமானும் பதுங்கி நின்று பாய்ச்சினான் அம்புதனை!... இரக்கமோ நெஞ்சில் ஈரமோ இல்லா இராமனால், தாடகை தாய்க் கொல்லப்பட்ட சேதி கேட்டு, கதறி அழுதோம்... கண்ணீர் உகுத்தோம்... நெஞ்சுருகி துவண்டோம்... வேதனையில் உழன்றோம்... செங்குருதி சீற, தமிழினமே ஆர்த்தது!... தாடகைத் தாய் அரசோச்சிய விந்தநாட்டுக்கு, காமவல்லியை அரசியாக்கி விட்டு, அயோத்தி மீது படையெடுக்க தாங்கள் முனைந்ததை மறந்துவிடவில்லை...ஆனால்; நடந்ததென்ன?... ஆரியத்தை யான் வீழ்த்துகிறேன் என சூளுரைத்து, சுடுவிழிகளோடு முன் வந்தாள் காமவல்லி!... விந்தகத்தின் அரசியான போதிலும், விந்தகம் இலங்கைப் பேரரசுக்கு உட்பட்டது என்பதால், அயோத்தி மீதுப் படையெடுப்புக்கு முறையே ஒப்புதல் கேட்டு, விந்தநாட்டு படைத் தளபதி கரனை தங்களிடம் தூது விட்டாளே காமவல்லி!... தூதுவிட்ட காமவல்லிக்கு, தாங்கள்விட்ட மறுமொழியென்ன?... 

இராவணன் :
காமவல்லி, அரசியலுக்குப் புதியவள் என்பதாலும், அவளால் ஆரியசூழ்ச்சியை வெல்வது எளிதல்ல என்று இலங்கை அமைச்சகத்தில் கருத்து நிலவியதாலும், காமவல்லியின் போர்த் தொடுப்புக்கு ஒப்புதல் தர மறுத்தேன்... இளமைக்கே இயல்பானத் துடிப்போடு காமவல்லி ஆரியப்படைத் தொடுப்புக்கு முனைந்தாளே அன்றி, முறையான வியூகம் வகுத்திடவில்லை... தோல்வியைத் தழுவிட நேர்ந்திருக்கும் என்பதால், காமவல்லியின் போர்ப் பணிக்குத் தடை விதித்தேன்... தூது வந்த கரனுக்கும் இதனையே மறுமொழியாய் மொழிந்தேன்... 

திரிசடை :
மொழிந்தீர்கள்... முனைந்தீர்கள்... நாளைப் படையோடுப் புறப்படவும் இருக்கிறீர்கள்... மகிழ்ச்சிதான், மன்னவா!... போருக்குப் புறப்படுவதற்கு முன்னர், எனதுக் கேள்விக்கு விடையொன்று தருவீரோ?... 

இராவணன்:
கேள், மகளே!...

திரிசடை :
கயல்விழியள் காமவல்லியை போர்களம் ஏக தடுத்தீர்... வாளேந்தி வருகிறேன் நாளைத் தங்களோடு என்ற என்னையும் ஏன் தடுத்தீர்?... பெண் என்பதால் தானோ?...

இராவணன் :
மகளே, உனக்கு வாள் வேண்டாம்... வாயே போதும்!... போர்க்களத்தில் வாள்வீச வந்த பகைவர், உன் வாய் வீச்சறிந்து, பதைபதைத்து ஓடிடுவர்... 

திரிசடை :
எரிநெருப்புதனில் பாயவும், வாள் சுழற்றவும், வேல் எறியவும், அம்புத் தொடுக்கவும், பயிற்சித் தரப்படுகிறது இலங்கையிலே பெண்களுக்கு!... ஆனால்; போர்க்களம் ஏக, எம் குலப்பெண்டிர் தடுக்கப் படுவதேன்?... தமிழ்ப் பெண்கள் கோழையர் என்பதுதான் தங்கள் கணிப்போ?...

இராவணன் :
மகளே!... வீரத்தின் விளைநிலமே பெண்களின் வயிரல்லவா... என்னைத் தாங்கிய மணிவயிற்றையோ நான் கோழை என்பேன்?... அல்ல; அல்ல, மகளே!... போர்க்களம் செல்வது மட்டும்தான் நாட்டுப்பணியெனில், களம்கண்டு விழுப்புண் பெற்ற வீரர்களுக்கு ஆற்றிடும் மருத்துவப் பணியை எதனோடு சேர்ப்பது?... மருத்துவமும், மருந்தாக்குதலும், மாவீரர்ப் பசி போக்குதலும், மடிந்துற்ற வீரர் செயல் போற்றுதலும் மகளிர் நாட்டுக்காக ஆற்றும் அரும்பணியன்றோ... நேரம் வரும்; மகளே, நேரம் வரும்!... வளையல் குலுங்கும் இந்தக் கையில் வாளும் மிளிரும்!... வஞ்சகர்கள் குருதிப் பட்டு, மகளிர்ப் பிடித்த வாள் வீரக் கவிதைப் பாடும்!... மகளே!... தமிழ் மகளே... தமிழ்ப் பெண்கள் விடும் மூச்சில் கூட, வீர சூடு இருக்கும்!... தமிழ்ப் பெண்கள் காலடி தூசியிலும் தன்மானச் செருக்கிருக்கும்!... நீங்கள் கோழைகளல்ல!... வீரத்தின் விளைநிலங்கள்!... செந்நெருப்பின் நாக்குகள்!... அகிலத்தையே அதிரச் செய்யும் இடி முழக்கங்கள்!...

(திரிசடையை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிடுகிறான் இராவணன்)

குழலி :
திரிசடையே, வா!... நாம் அங்கு போவோம்... நாளைய விழாவிற்காக உனது நடன நிகழ்ச்சி சிறப்பாக அமைய வேண்டுமே... வா!...

(குழலியும், திரிசடையும் நிலா முற்றத்தின் முதல் தளம் நோக்கிச் செல்கிறார்கள்)

*** முதல் தளத்தின் மீது ஒலி எழும்போது, முதல் தளத்தின் மீது ஒளியும்,
இரண்டாம் தளத்திலிருந்து ஒலி எழும்போது, இரண்டாம் தளத்தின் மீது ஒளியும் மாறி மாறி பரவச்செய்தல் வேண்டும்***

(குழலி, தளத்தின் மீதமர்ந்து, யாழ் எடுத்து மீட்டத் தொடங்க...)

திரிசடை:
அன்னையே!... ஆராவமுதென யாழிசையைக் கூறுவாருண்டு... யாழினும் இனிய இசை வேறு உண்டோ?...

குழலி :
உண்டே!...

திரிசடை :
உண்டா?

குழலி :
ம்... மகவொன்று பெற்றிடு!... 

(திரிசடை நாணம்கொண்டு)
திரிசடை :
 அன்னையே, யான் வினவியது, யாழினும் இனிய இசையை?

குழலி :
செவிமடு, மகளே!... மணநலம் ஏகி, மகவொன்று பெற்றிடு!... மழலையதன் இசை யாழின் இசையையே மயங்கச்செய்திடும்!... உணர்வாய் நீயும்!... 

திரிசடை :
ஓ... (வியப்பு)

குழலி :
ஆமாம்!... திருமணத்திற்கு நாள் குறிக்கவா?...

திரிசடை:
(நாணம் மிகக்கொண்டு)
போங்கள் அன்னையே!...


சேயோன் :
தந்தையே, பெரு யானையோடு போர் புரியும் வீரனாக எனை வளர்த்து விட்டீர்... மலையைத் தகர்க்கும் தோள் வலிமையை நான் தங்களால் பெற்றுள்ளேன்... வாள், வேல், வில் எதனுடைய தாக்குதலையும், தாங்கும் நெஞ்சுரம் கொண்டுள்ளேன்... நிலமின்றி, நீர்மீதிலும் பகைவரோடு மோதிடுவேன்... தந்தையே, தங்களுக்கு மகிழ்ச்சித்தானே?...


இராவணன் :
மகிழ்ச்சித்தான்! மைந்தனே! ஆனால்;

சேயோன் :
ஆனால்?

இராவணன் :
கோழையும் நாளை வீரனாகலாம்... நோயுற்றிருப்பினும் நாளைத் தோள் வலிமை  எய்தலாம்... ஆனால்?

சேயோன் :
ஆனால்?

இராவணன் :
மக்களாய்ப் பிறந்த எல்லாருமே, சான்றோர் ஆவதில்லை!... நீ வீரன் என்பதிலோ, இந்நாட்டு இளவரசன் என்பதிலோ என்னப் பெருமை?... உன்னை ஒரு சான்றோன் எனும் போது இந்த நாடே பெருமிதம் கொள்ளும்!...



திரிசடை :
சான்றோர் எனப்படுபவர் யார்? 

குழலி :
தம் உயிருக்கு இறுதி நெருங்கினும், தாம் கொண்ட நெறியினின்று மாறா தீரர்கள் சான்றோர் எனப்படுவர்!...

திரிசடை:
சான்றோருக்குரிய குணநலன்கள்?

குழலி :
அன்புடையவர்களாக - பழிச்சொல்லுக்கு நாணுந் தன்மையினராக - நடுவு நிலைமைக் கொண்ட பண்பினராய் - முக்காலத்தையும் பகுத்துணரும் கண்ணோட்டத்தினராய்த் திகழ்வது சான்றோர்களின் குணநலன்களாகும்!... இவைகளுக்கும் மேலாக, சான்றோர்க்கு ஒரு குணமுண்டு!... அது; வாய்மையாகும்!... இருளகற்றும் ஞாயிறு போல், மக்களின் மூட இருளகற்றும் திறன் சான்றோரின் வாய்மையில் உள்ளது!...

(திரிசடை வியப்புடன்)
திரிசடை :
ஓ... இத்தகைய அருங்குண நலன்கள் கொண்டிருந்தாலல்லவா, சான்றோராய்த் திகழ முடியும்!...

குழலி :
ஆமாம்!... உன் சந்தன வயிற்றில், பிறக்கப் போகும் குழந்தை சான்றோனாக திகழ வேண்டுமென்பதற்காகவா இக்கேள்வியைக் கேட்டாய்?... மகளே, இன்னும் உனக்கு திருமணம் ஆகவில்லையே... அதன் பிறகல்லவா, உன் சந்தன வயிற்றில் சான்றோன் உதிப்பான்!...

(வண்டார்குழலி சிரிக்கிறாள்... )

(திரிசடை நாணங் கொண்டு)
போங்கள், அன்னையே!... 



சேயோன் :
தந்தையே!

இராவணன் :
மகனே... ம்... கேள்!

சேயோன் :
தனியொருச் சிறு மரமென்றாலும், அதனடியிலும் நிழல் இருக்கும்!... அந்த நிழலிலும் சுகமிருக்கும்!... வறிய நிலையில் சான்றோர் இருப்பினும், அவரது வாய்மொழியில் வாழ்வின் வழிக்காட்டுதல் இருக்கும் என்று நமது தமிழ் நூல்கள் கூறுகின்றன... நாமும் அதனை உணர்கிறோம்... ஆரியர்கள் ஏன் இத்தகைய நூல்களைக்  கற்கத் துணிவதில்லை? ...

இராவணன் :
பொன்னாடையாயினும், நூலாடையாயினும் மானிடருக்கு மானங் காக்கும் தன்மையில் இரண்டுமே ஒன்றுதான்... கல்வி கற்பதில் கிடைக்கும் பலன் நல்லோரின் வாய்மொழிக் கேட்பதிலும் கிடைக்கும்... சந்தன மரத்தில் செய்த ஊன்றுகோல் தான் உதவும் என்றில்லை... உறுதிமிகு எக் கோலும் உதவும்... கற்றிலன் ஆயினும் நல்லோர் வாய்மொழிக் கேட்டல் நன்று மகனே!... ஆனால்; ஆரியர்கள் கருத்தொன்றி, ஓரிடத்தில் வாழ்பவர்கள் அல்லர்... நாடுநாடுகளாய் அலைந்து, நாடோடிகளாய்த் திரிந்து, பிற மக்களை வியப்பில் ஆழ்த்தி ஏய்த்துப் பிழைப்பது - பிற மக்களை ஏமாற்றி, செல்வங்களைக் கொள்ளையிடுவது ஆரியர்களின் குணமாகும்... எங்குத் திரிகிறார்களோ, அங்குள்ள செல்வந்தர்களையும், மன்னர்களையும் காமக் கலைகளால் ஈர்த்து  விடுவார்கள்...  ஆரியப் பெண்களும், உறுதுணையாய் இருந்து, ஏமாறும் மன்னன் - செல்வந்தர் - என எவரையும் தம் வசமாக்கி விடுவார்கள்... இப்படித்தான் ஆரியர்கள் சில நாடுகளில் வேரூன்றி வருகின்றனர்... சில குறுநில மன்னர்களின் அரசையும் தம் வசம் ஆக்கிக்கொள்கின்றனர்... அவர்களின் எண்ணம் தமிழ் எல்லையில், ஈடேறாமல் இருப்பதற்கு, தமிழர்களின் விழிப்புணர்வும், கல்வியறிவுமேயாகும்... உண்மையில், ஆரியர்கள் நாடற்ற - மொழியற்ற - நாடோடிகள் ஆவர்...



திரிசடை 
அன்னையே, நல்லோர் பலர்த் தோன்றி, நல்லன ஓதியும், நாடோடிகளாம் ஆரியர்கள் கள்ளர்களாக - கருணையற்றவர்களாக - வஞ்சகர்களாக - நெஞ்சில் சூது நிறைந்தவர்களாக - நற்பண்புகளின்றி - சுயநலக் கூட்டத்தினராய் திரிகின்றனரே... நல்லோரின் வாய்ச் சொற்கள் ஆரியர்களிடத்தில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லையே... 

குழலி :
வாடியப் பூவின் மீது நீர்த் தெளித்தால், பூ மீண்டும் மலர்ச்சியை அடைந்திடுமோ?

திரிசடை:
மாட்டாது!

குழலி :
மலைக்குகைக்குள் கதிரொளிப் பாய்ந்திடுமா?

திரிசடை :
மாட்டாது!...

குழலி :
மூடஎண்ணமெனும் குகைக்குள் ஆரியர்கள் வாழ்வதால், நல்லோரின் அறிவுரை எனும் கதிரொளி ஆரியர்கள் மீது படுவதில்லை... வாடியப் பூவைப் போல், ஆரியர்கள் செயல் யாவுமே, சருகாக இருப்பதால் நல்லோரின் வாய்ச் சொற்களை, நீராக வார்த்தாலும் வளமேற்படப் போவதில்லை... சருகை எருவாக்கிடுவதன் மூலம் நற்பயிர்ச் செழிக்க வாய்ப்புண்டல்லவா?... ஆரியச் செயல்களை அழிப்பதன் மூலம்தான், மானிடர்  இனம் வாழ்வில் ஏற்றம் காண இயலும்!...

திரிசடை :
அன்னையே, நாளைய ஆரியப் படையெடுப்பறிந்து, அகங்குளிர்ந்திடுவாளே காமவல்லி!... நமது வீரர் காலடிப்பட்டு, தரைமீதில் தாண்டவமாடும் புழுதிப் புகைக்கு நடுவே நின்று, வீரர்களை வாழ்த்த விந்தகத்தின் எல்லையில் நிற்பாள் காமவல்லி!... அம்மம்மா... காமவல்லியின் உள்ளக்கிளர்ச்சிக்கு அளவே இராது, நாளை !

குழலி :
ஆமாம்; மகளே!...




சேயோன் :
தந்தையே!... இன்னும் காலம்கடந்து விடவில்லை... ஆயிரமாயிரம் வீரமறவர் நம்மிடம் உண்டு!... அவர்களுக்குத் தலைமையேற்கும் மன திடம் எனக்குண்டு!... ஒப்புதல் நல்கு ஒப்பற்ற வேந்தே!... தலைமைத் தாங்கி ஆரியத் தலைகள் சீவி வருகிறேன்... நீங்கள், அன்னை மீட்கும் யாழின் இசைப் பருகி இருங்கள்... நான் விழுப்புண்களோடு வெற்றிக்கனி ஏந்தி வருகிறேன்... நானே போகிறேன்... நீங்கள் போர்க்களம் வரவேண்டாம், தந்தையே!... 

இராவணன் :
உனது வீரத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு!... ஆனால்;

( திரிசடையும், குழலியும் இராவணன் உள்ளத் தளம் நெருங்கி... )

திரிசடை :
ஆனால்;... என்ன ஆனால்?... அழகானச் சொற்களை அள்ளி வீசுவதற்காகத்தானே 'ஆனால்' எனும் துணைச்சொல்?

இராவணன் :
அதற்கல்ல மகளே!... ஆனால்...

திரிசடை :
ஆனால்?

இராவணன் :
ஆனால்...

குழலி :
போதும்!... ஆனால்?

(அனைவரும் சிரிக்கிறார்கள்...)

சேயோன் :
தந்தையே!... முடிவெடுக்கும் பணி தங்களுடையதுதான்... நான் மறுக்கவில்லை...

இராவணன் :
ஆனால் மகனே.

திரிசடை :
ஆனால், மன்னவா!... தங்களைவிட்டால் இலங்கைக்கு வேறு யாருமில்லை எனும் எண்ணமோ தங்களுக்கு?

பீடணன் :
அதைத்தான் கேட்கிறேன்...

(பேசிய வண்ணம் பீடணன் வருகிறான்...)

திரிசடை :
இலங்கை எழிலோடுத் திகழ்கிறது;.. இசையோடு வாழ்கிறது என்றால் தமிழினத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றுதான்!... அரும்பணி பல ஆற்றிய அரசே, அரியணையோடும், அழகுத் தமிழோடும் வலம் வாருங்கள்... அதுவே போதும்!... ஆரியத்தை முறித்திட, வீரன் சேயோன் உண்டு!... எனது தந்தையும் உண்டு!... இன்னும் வீரமறவர் பலர் உண்டு!... சேயோனே, ஆரியத்தை சிதைத்து, வீரப்புண்ணோடு வந்து, "மன்னவா, தமிழ் மண்ணுக்கு முத்தமிடுகிறேன்" என இலங்கை வேந்தனுக்கு நீ இயம்பிடு!... வேந்தன் இங்கு மகிழ்ந்திருக்கட்டும்... மனத்துயர் ஏதுமின்றி மஞ்சத்தில் ஓய்வுக் கொண்டிருக்கட்டும்... யாழில் ஏழிசைக் கேட்டும், அழகு நிலாவைப் பார்த்தும் எமது மன்னவன் கவிதைப் பாடியிருக்கட்டும்...

இராவணன் :
நிறுத்து, திரிசடை!... நீ கூறுவது போல், நாளைய ஆரியப்போர் அற்பமான போரல்ல!... அற்புதமனப் போர்!... அறிவைக் கிளர்த்தியப் போர்!... நீ கூறுவது போல், நானிங்கு கனகவீதியில், வலம்வந்து, தென்றலின் மடியில் துயின்றிட்டால்தான் இன்னும் ஒரு நூறாண்டு உயிர் வாழ முடியும் என்றால், அந்த வாழ்வு எனக்கு வேண்டாம்... நாளையப் போரில் நான் கலந்துக் கொண்டால்தான், இந்த இனத்தின் தன்மானச் செருக்கு அழியாமல் காப்பாற்றப்படுமெனில், அந்தச் செருக்குடன் கூடிய வாழ்வுதான் எனக்கு வேண்டும்!... தமிழுக்காக - தமிழினத்திற்காக - பிறந்த என்னிடத்தில் மானம், மரியாதை, தமிழுணர்ச்சி செத்துவிடவில்லை... நாளை நடக்கவிருப்பது சாதாரண போரல்ல!... இனியப் போர்!... இனப்போர்!... தன்மானப் போர்!... ஆமாம்!... 'ஆரியர்களும், ஆரியர்களின் செயல்களும் உன்னதமானவை;... தமிழர்கள் ஆரியர்களின் தாசிக் குழந்தைகள் என்றும், அடிமைகள் என்றும், ஆரியர்களின் பாதத் தூசிக்கும் கீழானவர்கள் தமிழர்கள்' என்றும் கூறித் திட்டமிட்டு, இக்கருத்தைப் பரப்பி வரும் ஆரியர்க்  கொட்டதைப் போக்கும் போர் நாளையப் போர்!... நீ கூறுவது போல் இந்த மானப் போரில் நான் கலந்துக் கொள்ளாது மஞ்சம் கொள்வேனேயாயின், இனத்துக்கே நான் வஞ்சமிழைத்தவனாவேன்!... நாளை, தமிழினத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாவேன்!... மானப்போரில் தமிழ் இரத்தம் பெருக்கெடுத்தோட - தமிழர்தம் தலைகள் சிதறி உருள - இன்னுயிர்த் துறந்து எம்மினத்தவர் மடிந்து வீழ - தமிழர்ப் பிணம் கழுகுகள் தின்ன,  இராவணனோ அந்தபுரத்துக் குளிரோடையில் நீராடிக் கொண்டிருந்தான் என்று தமிழினம் என்னைத் தூற்றாதா?... அப்படியொருத் தூற்றுதலைதான் நீ விரும்புகிறாயா?... பழிச்சொல்லுக்கு நான் ஆளாக வேண்டுமென்பதுதான் உனது விருப்பமா?... 
குழலி :
வெல்லட்டும் தமிழினம்!... வீழட்டும் ஆரியக்கூற்று!...

திரிசடை :
வீழட்டும் ஆரியக்கூற்று!... வெற்றி வேந்தன் இராவணன் புகழ் ஓங்குக!...

சேயோன் :
வெற்றி வேந்தன் புகழ் ஓங்குக!... வெல்லட்டும் தமிழினம்!... வீழட்டும் ஆரியக்கூற்று!...

( வண்டார்குழலி கை உயர்த்த, உயர்த்தப்பட்டக் கையோடு கோர்த்து திரிசடை உயர்த்த, சேயோனும் கோர்த்து  தீப்பந்தம் போல் விளங்கும்படி உயர்த்தி சூளுரைக்கிறார்கள்...)

(-அப்போது 
குதிரைக் குளம்படியோசை வேகமாக வருகிறது...

பீடணன் நிலா மாடத்தில் இருந்து, கோட்டையின் உள்தளத்தைப் பார்த்து...)

பீடணன் :
அண்ணா, அங்கே பாருங்கள்...

(என்று சுட்டிக் காட்டுகிறான்...

பீடணன் சுட்டிக்காட்டியத் திசையில் எல்லாரும் நோக்குகிறார்கள்...)

இராவணன் :
கனகமணியைப் போலல்லவா தெரிகிறது...

குழலி :
ஆமாம்!... காமவல்லியிடமிருந்து அவசரச் செய்திக் கொண்டு வந்திருப்பாளோ?... இதென்னக் கோலம்?... வாரிவிடாதக் கலைந்த தலையுடன் - ஆடையை சரியான விதமாக திருத்தப் படாமல் அலங்கோலமாக - சோகத்தின் உருவமாக - குதிரையில் வேகமாக -  ஆ... நிலா மாடத்தைத்தான் நோக்கி வருகிறாள்... 

இராவணன் :
சில நாட்களுக்கு முன்னர்தானே , விந்தநாட்டின் தளபதி கரன் இங்கிருந்து விடைபெற்றுச் சென்றான்... 

குழலி :
காமவல்லி ஆரியத்தின் மீது போர்த் தொடுக்க வேண்டாமென கரனிடம் சொல்லி அனுப்பினோம்... தளபதி விந்தகத்தை அடைந்திருக்க மாட்டான்... அதற்குள் கனகமணி இங்கு ஏன் வரவேண்டும்?... கனகமணியின் அலங்கோலக் காட்சிக்குப் பொருளென்ன?... ஆ... நிலா மாடத்தின் வாயிலுக்குள் வந்து விட்டாள்...

(சிறுது நேரத்தில்-
கனகமணியின் குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது... )

குரல் :
மன்னா....

( ஏகாந்தமாய் எதிரொலித்த கனகமணியின் குரல் கேட்டு, எல்லாரும் நிலாமாடம் விட்டு-

கீழ்த்தளம் நோக்கி விரைகிறார்கள்...)

                             -திரை -                                                                                      

       


              


பாகம் :2.                                    காட்சி :2. - காடு.

இராமன் 
சீதை 
இலக்குவன் 

( மாலைக்கருக்கல்-
பொழுதை வரவேற்கும் பறவைகளின் குதூகலம்!...

காட்டுவாசிக்கோலத்தில்-
இராமன் அம்பு, வில்லுடன் முன்னே நடக்கிறான்...

ஆடைகள் நிறைந்தச் சுமையை, தலையில் தாங்கி, அயர்வு மிகுதியால் - நடையிட இயலாதவளாய் - கால்கடுத்து வேதனை ஏற்படுத்திட-, இராமனைத் தொடர்ந்து வந்த சீதை, புதர்மீது இடறிவிழுந்து முனக-

இராமன் திரும்பிப் பார்த்து , சீதையைக் காண்கிறான்...

பின்னர் சீதையை நெருங்கி வந்து- )

இராமன் :
கண்ணே!... சீதா, கால்வலியோ?...

(சீதையின் கால் தொட்டு, - தடவி - இதமமாக வருடிவிடுகிறான்...
பின்னர், பாதத்திலிருந்து, கால் முழுவதும் இதழ்களால் ஒற்றுகிறான்...)

(சீதையோ, வேதனை மிகுதியால்-
கால் மீது தலைக் கவிழ்ந்து, கேவி அழுகிறாள்...)

இராமன் :
கருங்குழல் சீதா, கால் வலிக்கின்றதா?... அகல்விழி அணங்கே!... அல்லல் பெற்றாயா ... பூஞ்சோலை மலரே!.... உன் பூவுடல் நோகின்றதா?...

(சீதையின் கண்ணீர்த் துடைத்தும், கால் வருடியும், மேனித்தடவியும் பேசுகிறான்...)

இராமன் :
வண்ணமயிலே, சீதா!... வா... எந்தன் தோள்பற்றி நடக்க வா!... 

(தோள்பற்றி அவளைத் தூக்க-
அவள் அவனை விலக்கி- அழுகையை நிறுத்தாது முனகுகிறாள்...)

இராமன் :
கருக்கல் கூடிவிட்டது!... சீதா, களைப்புற்று இங்கே இருந்து விட்டால், பலியாகி விடுவோமே மிருகங்களுக்கு!... வா சீதா!... ஓசையின்றி ஒருநாழிகை நடந்தால், காட்டின் மையத்துக்கு சென்று விடலாம்... அங்கே,அடர்ந்த புதரில் ஒதுங்கி, ஓய்வுக் கொள்வோம் வா, சீதா!...

(மீண்டும் சீதையைத்தூக்குகிறான்... அவள் மறுக்கிறாள்...)

இராமன் :
சீதா, அழாதே!... நானிருக்கும்போது உன் கண்கள் நீர்சொறியலாமோ?... அரசமாகளாய்ப் பிறந்த நீ, இடர்காட்டில் படும் வேதனை எதனால்?... என்னாலன்றோ!... பாரத்தைப் பொறுத்து,  மண்ணுயிரை வாழ்விக்கும் பூமாதேவி நீதான்!... அழாதே சீதா... தேவி, எந்த அயோத்தி நம்மை விரட்டியதோ, அதே அயோத்தியில் அந்தப் புரத்தில் உன்னை நீராடச் செய்வேன்!...

(மீண்டும் அவளைத் தூக்க, அவள் துவள்கிறாள்...)

இராமன் :
ஓ... இந்திரனே!... ஒரு பறவையைக் கொன்று உன்னை யாசிக்கிறேன்...  என் சீதா தேவிக்கு, பலத்தையும், கீர்த்தியையும் கொடு!...

(இராமன், அம்பெய்கிறான்... பறவையொன்று வீழ்கிறது... வீழ்ந்துபட்ட பறவையை எடுத்து, கழுத்தைத் திருகி, வடியும் இரத்ததைப் பருகுகிறான்... பிறகு, பறவையின் உடல் நைந்துபோகும்படி நசுக்குகிறான்...

மேலும் வடியும் இரத்தம் பிடித்து, சீதையின் மீதுத் தெளிக்கிறான்...)

இராமன் :
சீதா, உன் கொங்கைகள் மீதும், செவ்விள வயிற்றின் மீதும், தொப்புள் மீதும், மாதுளங்கனி போல் பூரித்திருக்கும் பேரல்குல் மீதும், தொடையின் மீதும் பட்ட பறவையின் இரத்தம் சுவைத்து, வைரப்பூவே உனக்கு வலுவூட்டிவிடுவான் இந்திரன்!... வா...

(சீதை தொடர்ந்து அழுகிறாள்...)

இராமன் :
இன்னுமா நீ அழுகிறாய்?... மடல்விரிந்த பூவிழியாளே!... கண்ணீர் உகுக்கலாமோ?... தேன் சொறியும் உன் அதரங்களில் சோகம் சொறியலாமோ?... துள்ளும் மானே!... நீ துவண்டு போகலாமோ?... வா, சீதா!...
(சீதையின் கைப் பிடித்து இழுக்கிறான் இராமன். சீதையோ வெடுக்கென கையை விடுவித்து, தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு)

சீதை :
முடியாது!... என்னால் முடியாது!... ஓரடிக்கூட என்னால் எடுத்து வைக்க முடியாது... முடியாது.... முடியாது...

இராமன் :
உன்னை நான் தூக்கிக் கொள்கிறேன்...

( சீதையைத்தூக்க முயல-
சீதை இராமனை ஒதுக்கி விலகுகிறாள்...)

இராமன் :
சீதா, நீ வேதனையோடுத் துடிக்கிறாயா? அல்லது வேடிக்கைக் காட்டுகிறாயா?... உயிரோடு நம்மைப் பலி கொள்ள வேலோடும், வாளோடும், வில்லோடும் விந்தநாட்டு அரக்கர்கள் திரிகின்றனரே... பாய்ந்து வரும் அம்புகளிடையே பறக்கவியலா பறவைப் போலல்லவா நமது நிலை உள்ளது!... குதிரை மீது, பயணப்பட்டாலும், குதிரையின் குளம்படியோசை பகைவனுக்கு நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்  என்பதால் தானே. காலடியோசையும் எழாதவாறு அடிமேல் அடிவைத்து, புதர் புதராய்ப் பதுங்கி புலருங்காலைத் தொட்டு, புல்லினம் அயரும் நேரம் வரை நடக்கலுற்றோம்... நெடுந்தொலைவுக் கடந்து விட்டோம்... கால் நாழிகை நடந்தால், கண்ணே, விந்தநாட்டின் எல்லையைக் கடந்து விடலாம்... சீதா, நமக்கு முன்னே, இலக்குவன் போய், விந்தநாட்டு எல்லைக்கு வெளியே காத்திருப்பான்... அவன் நமக்குக் குடிலமைத்து, குடிலுக்குள் நானும், நீயும் சயனிக்க சண்பகப்பூக்களால், மேடையும் கட்டியிருப்பான்... கால்வழிப் பாராது, கண்ணே கால்நாழிகை நடந்து வா!... கடந்துவிடுவோம், விந்தநாட்டு எல்லையை!... பூவுக்கு ஒரு பந்தல் போல, இளம்பூவே உனக்கு நான் பந்தலாவேன்... வா, சீதா!...

சீதை :
அய்யா, அடித்தொழுது கெஞ்சுகிறேன்... குற்றுயிராகி விட்டேன்... குலையுயிரும் நீங்குவதற்குள், என்னை மிதிலைக்கு அனுப்பி வையுங்கள்... எனது தந்தை சனக மன்னனையும், எனது தங்கை தீங்குழலியையும் கண்டு உயிர்விடுகிறேன்... என்ன மிதிலைப் போகவிடுங்கள்...

(இராமனின் கால்பிடித்துக் கெஞ்சுகிறாள்...)

இராமன் :
சீதா, நீயில்லாமல் என்னால் வாழமுடியாது!... நான் அயர்ந்தப் பொழுதில், அழகிய சீதா, என்னைவிட்டு நீங்கிடாதே!... உனது இளமையின் தழுவலின்றி, இமை நேரமும் என்னுயிர் என்னிடத்தில் தங்காது... சீதா... சீதா... சீதா... சீதையே!... வைதேகியே!... சானகியே!... மலரின் தேவியே!... பொற்செல்வியே!... திருமகளே நீயல்லவா எனது சொர்க்கம்!...

(சீதையின் இடையில் முகம் புதைத்து, இராமன் கெஞ்சுகிறான்...)

(- அப்போது, இலக்குவன் வருகிறான்... வந்தவன்-
சீதையின் இடையில் இராமன் முகம் புதைத்திருப்பதைப் பார்த்து, ஏளனமாக நகையாடுகிறான்...)

இலக்குவன் :
ம்... நெருப்புத் தீண்டியும், நித்திரையிலிருந்து நீங்க மனம் இல்லையோ?... கழுத்துக்கு நேராய் கத்தி நெருங்கிவிட்டது... காமக்கூத்துக்கோ திரைவிழவில்லை... அண்ணா, நல்லதுதான்!... இராமனும், சீதையும் இன்னும் வரவில்லையே என்று  கவலையோடு காத்திருந்துவிட்டு, இன்னலில்  சிக்கினாரோ; அரக்கர் சூழ்ந்தனரோ என அஞ்சி உம்மிருவரையும் தேடி வந்தேன்... ஆகா!... அழகுதான்!... சீதையே, நீ பெண்தானா?... மோகினிப் பிசாசோ?... உன்னைத் திருமகள் என்று வர்ணிப்பது, பொருத்தமானதுதான்!... காமத்துள்ளல் அடங்காத லட்சுமி, குதிரை வேடமெடுத்து, குதிரையை புணர சென்றாளே... அந்தத் திருமகளின் அவதாரம்தான் நீ போலும்!... உயிருக்கு அஞ்சி, ஓடி - ஒளிந்து - அங்குமிங்கும் ஒண்டி வாழும் நிலையுலுமா, உனக்குக் காமவேட்கை பொங்குகிறது... காலையும், பகலும், மாலையும், இரவும், நள்ளிரவுமென அய்வேளையும் லீலைப்புரியும்படி உன்னை சபித்தானோ இறைவன்?... கணவனதுக் காம இச்சைக்கு உடன்பட வேண்டுமென்பது, பெண்களுக்கு நியதி!... ஆனால்; கணவனது கர்மத்தைக் கெடுக்கலாகாது... நீ பேயோ?... காளிதேவியைப் போல், சீதா தேவி நீ காமக் கூத்தாடிக்கிறாயே?... நானும், இராமனும் அரக்கர்களின் தேடுதலுக்கு அஞ்சிப் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்... அரசகுலத்தில் பிறந்தவளே, அலைகிறாயே ஒழுக்கமின்றி!...

சீதை :
தூ... நீச நாயே!... அளந்து பேசு; அயோக்கியப் பிண்டங்களே... யாரைப் பார்த்து, காமவேட்கைப் பிடித்தவள் என்கிறாய்?... பாவத்தின் மொத்த உருவங்களே!... நான் செய்த பாவமெல்லாம் இராமனுக்கு மனைவியானதுதானடா!... தகுதியும் இருக்கிறதோ உனக்கும் ஒழுக்கத்தைப் பேச?... கட்டிய மனைவியைக் கண்டவனுக்கு விட்டுவிட்டு, காட்டுக்கு வந்த இலக்குவா, நீயும், இராமனும் பெண்ணும், ஆணும் இயங்குவதுப் போல் இயங்கிய அலங்கோலக் கூத்து எனக்குத் தெரியாதா?... நீயா எனக்கு ஒழுக்கம் பேசுவது?... பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் அல்லவா நீங்கள்?... பார்வதியின் தொடையைப் பார்த்து, மோகித்து மானங்கெட்டு நடந்தவன்தானே பிரம்மன்!... தனக்குப் பிறந்தவளை மகளென்றும் பாராமல், புணர்ந்து திரிந்தவன் பிரம்மன்!... மோகவிகாரத்தில் பெண்கரடியைப் புணர்ந்த ஒழுக்கசீலன்தானே பிரம்மன்... ந்த அயோக்கியனின் நெற்றியிலிருந்துப் பிறந்த உங்களுக்கும் அவனது யோக்யதைத்தானே இருக்கும்...

(சீதைப் பேச பேச, ஆத்திரம் கொண்டு இலக்குவன் அவளை அடிக்க முற்பட-
இராமன் இலக்குவானைத் தடுக்கிறான்... சீதையோ அஞ்சாது பேசுகிறாள்...)

சீதை :
கை மணலும் கணக்கிலடங்கும்!... தசரதன் கட்டிலுக்கு இரையான கன்னியர் எண்ணிலடங்குவரா?... காமப்பித்தன் தசரதன் கண்ணை மூடிக் கொண்டு கைகேயிக்கு வாக்கைத் தந்தான்... அதன்படி அரசுரிமை பரதனுக்குப் போயிற்று... அரசபதவி தனக்குத் தர மறுத்ததற்காக தந்தையை வாளால் வெட்டிய உத்தம சிகாமணியல்லா எந்தன் இராமச்சந்திரமூர்த்தி!... தந்தையைக் கொன்ற சீலர்களோ, எனக்கு ஒழுக்கத்தைப் போதிப்பது?... தசரதன் கொல்லப்பட்டசேதி, தீப்போல் பரவ, அந்தத் தீக்குள் சாக பயந்து இங்கே காட்டுக்குள் ஒளிய வந்தது யார்?... வீர ஆரியம் என்று சூளுரைக்கும் இராம இலட்சுமணன் அல்லவா...   


இலக்குவன் :
இப்போதும் நாங்கள் வீரர்கள்தான்!

சீதை :
ஆகா!... அயோக்கியத்திற்கு மறுபெயர் வீரமாம்!... வீரமாகத் தந்தையை சாகடித்தீர்கள்... வீரமாகப் பயந்து காட்டுக்குள் ஓடி வந்தீர்கள்... இராமன் இருக்குமிடமே, அயோத்தியென்று நானும் வந்தேன் உங்களோடு!... உங்களோடு சேர்ந்து நானும் அரசர்குல அணிமணிகளைத் துறந்து  காட்டுவாசிகள் போன்று பொய்வேடம் தரித்தேன்... அயல் மண்ணை அண்டியும், இயல்பான புத்தியில் மாற்றமில்லையே?...பூவோடு இருந்தாலும், முள்முள்தான்!... தமிழகத்தில் இருந்தாலும், நீங்கள் ஆரியர்கள்தான்!... நாடுவிட்டு, நாடு ஓடி வந்தாலும், கூடப்பிறந்த இழிபுத்தி மறைந்ததா?... அப்பனுக்குத் தப்பாதா மைந்தர்கள் என்பதை இங்கும் நிரூபித்த நீச நாய்களா ஒழுக்கத்தை எனக்குச் சொல்வது?...

(சீதையை இலக்குவன் அடிக்க- இராமன் தடுக்கிறான்...)

சீதை :
பெண்ணாய்ப் பிறந்திருக்க வேண்டிய நீ, ஆணாய் பிறந்து விட்டாய்... ஆயினும்; ஆண்மையற்றவன்தானே நீ?... ஆண்மையுள்ளவன் நீ என்றால், அழகுப்பட வாய்த்திறந்து கூறடா... இந்த விந்தநாட்டு எழிலரசியின்பால் மையல் கொண்டு அவள் மிதித்த மண்ணுக்கு முத்தமிட்டப் பித்தன்யாரடா?... அவள் தூக்கி எறிந்த மாங்கொட்டையை அவள் இதழ்ப்பட்டதென்று நக்கிப்பார்த்த நாய் எதடா... காரி அவள் உமிழ்ந்த எச்சிலை சந்தனமாய் உடலில் தடவி மகிழ்ந்த மடையன் யாரடா?... 'அவள் கருவிழிகளில் எனது ஓவியதைக் காண்பது எப்போது '  என்று ஏங்கி துடித்தவன் இந்த இராமன்தானடா!... அண்ணனால் விரும்பப் படுகிறவள் என்றறிந்தும், 'ஆகா அந்தஅதிரூபசுந்தரியை அகங் குளிர காணவேண்டுமே' என்று ஆளாய்ப் பறந்த நீயா எனக்கு ஒழுக்கம் பேசுவது?...

இலக்குவன் :
கதைபேசாதே  

சீதை :
கதையா?... காரி உமிழ்ந்து விடுவார்கள்... தந்தையைக் கொன்றுவிட்டு, அயோத்தியைத் துறந்து, விந்தநாட்டில் ஒண்ட வந்தோம்... வந்த இடத்தில, விந்த நாட்டின் அரசியின் அழகில் மதியிழந்தாய்... கொண்டவள் இருக்க, கண்டவளை மோகிப்பதுதான் ஆரியநெறியோ?   அல்லது; ஆரியர்களுக்கே சாபக்கேடோ?...

இலக்குவன் :
அண்ணா, இவள் அரக்கியா? ஆரியச்சியா?

இராமன் :
தம்பி, இவள் சுகவாசத்தில் இருந்தவள்... இந்தச் சுடுவாசம் மனதை பேதலிக்க செய்துவிட்டது... ஏதேதோபேசுகிறாள் ... பேசட்டும்!...

சீதை 
அரசகுமாரனைப்போல் அழகாய் வேடமும் பூண்டு, காமவல்லியிடம் கள்ள நாடகம் நடத்திய நாதா, பேதலிக்கவில்லை புத்தி எனக்கு!... அரசபதவி 
பரதனுக்கு என்றதும், தசரதனை வெட்டிக் கொன்ற தலைமகன் இராமா, எனக்குப் புத்தி பேதலிக்கவில்லை!... காதல் கிட்டாது  என்று அறிந்ததும், காமவல்லியை கோரமாய்க் கொலை புரியத்துணிந்த நாதா, நான் நிலைப் பிறழாமல்தான் பேசுகிறேன்... நீராட வந்த காமவல்லியின் மூக்கறுத்து, முலையறுத்து, மூளியாக்கி மகிழ்ந்த மனிதரூப குரங்கு யார்?... அறுபட்ட முலைகளை ஆசையோடு தடவத் துடித்தவனுக்கு இளவல் நீயல்லவா?... காமவல்லியைக்கொன்றுவிட்டு காட்டுக்குள்ளும் வாழ அஞ்சி, ஆண்டுகள் பலவாய் அல்லாடுகிறோம்... ஒண்டலும் , ஓட்டமும், பதுங்களுமாய் திரிகிற நிலையிலுங்கூட நீங்கள் ஓராண்டு முன்னர் நடத்திய கொடுஞ்செயல் நினைவிலிருந்து தடம் புரளவில்லை...  உதிரப் பெருக்கெடுத்து நான் உயிர்ப் போகும் வேதனையோடு துடித்து, மண்ணில் சாய்ந்த வேளையில், அவ்வழியே  வந்தாள்  அலமுகிலெனும் வேட்டுவப் பெண்!... வந்தவள் உதவியும் புரிந்தாள் எனக்கு!... அருமருந்திட்டு, மங்கை அவள் நகர்ந்த போதிலே,  நீங்களிருவரும் அவளைப்பின் தொடர்ந்தீர்களே... நான் மறந்துவிடவில்லை... பின்தொடர்ந்த சிறுது நேரத்திலேயே அலைமுகிலின் 'ஆ ' வெனக் கூப்பாடு!... அவளிட்ட அந்தக்கூக்குரல் கேட்டு, நான் ஓடிவந்தப் போது, - அடப்பாவிகளா?... அலைமுகிலை அண்ணன், தம்பி நீங்கள் இருவரும் சேர்ந்து ஈனப்புணர்ச்சி செய்தீர்கள்... தமிழச்சி அவளைத் துடித்துடிக்கப் புணர்ந்து, ஓடும்நீரில் வீசிய நாசக்காரர்கள் நீங்கள்!... நீங்களா எனக்கு ஒழுக்கத்தைப் போதிப்பது?... தூ... என்னைச்சாகவும் விடாமல், வாழவும் விடாமல் இப்படி அலங்கோலம் செய்கிறீர்களே... என்னைவிட்டு விடுங்கள்... நான் மிதிலைப் போகிறேன்... மிதிலைப் போகிறேன்... 

இலக்குவன் :
அண்ணா!... இவள் ஆரியக்குலத்தவள் அல்ல!... நமது வேத ஆகமங்களில் இப்படிபட்டப் பெண் எவளையும் பார்க்கவியலாது... கொண்டவனைச் சொல்லாடி, வார்த்தையால் துள்ளாடி, துடுக்காய் எள்ளாடுகிறாள்... கணவணுக்கு கட்டுப்படாத இவள் ஆரியச்சியே அல்ல!... இவளை இங்கேயே விட்டுவிடுங்கள்... நாயோ, நரியோ, கரடியோ, பேயோ, பிசாசோ அனுபவிக்கட்டும்... ம்... வாருங்கள்...  

சீதா :
ம்... போங்கள்... பிரபுவே! ஏன் தயக்கம்?... தீயச்செயல் தாங்கள் புரியும்போது நான் வாய்மொழியால் தங்களைக் கண்டிப்பதும், அந்த மன வேதனையில் நான் தங்களோடு பேசாதிருப்பதும், பின்னர் தாங்கள் என்னை கண்ணே, மணியே, சீதையே, திருமகளே எனக் கொஞ்சுவதும், கொஞ்சலில் நான் மயங்குவதும், மயங்கிய நான் தங்களுக்கு முந்தானை விரிப்பதும்... எத்தனைக் காலத்துக்கு இந்த ஏமாற்று வாழ்க்கை?.... கத்தியெடுத்து கண்டந்துண்டமாக வெட்டுவது போல், கடுமொழியால் சிடுசிடுவெனத் தங்களை நான் சீறியும், சிலபோதில் காரித்துப்பியும் என்னைக் கற்கண்டு போல் தாங்கள் பாவிக்கும் காரணமென்ன?.. நேரம் காலமறியாது, ஊறும் காமநீரை என்னிடத்தில் சேர்ப்பதற்குத்தானே?... இல்லையெனில், என்னைவிட்டுப் போக தயக்கமேன்?... நான் மிதிலை போகிறேன்... இல்லையேல் மிருகங்களுக்கு பலியாகிறேன்... போங்கள்... போகாமல், ஏனின்னும் நிற்கவேண்டும்?... காமாக்கினி உன் தேகமெங்கும் கொழுந்து விட்டெறிகிறதே... அக்னியை அணைக்க ஒரு யுவதி உங்களோடு எப்போதுமே இருந்திடல் வேண்டும்... அந்த தேவைக்காகத்தானே என்னை வைத்திருக்கிறீர்கள்?... 

இராமன் :
சீதா!... தீம்பூவே!... இலக்குவன் சிறுவன்... அறியாது பேசிவிட்டான்... அவன் பேச்சை ஏற்காதே!...வா; சீதா!... உனது பாதத்தின் அணியாக என்னை ஏற்றுக்கொள்!... முல்லைச்செண்டே!...

(சீதையின் பாதத்துக்கு இராமன் முத்தமிடுகிறான்....)

                                    -திரை-





பாகம் : 2.               காட்சி : 3.               காட்டுக்குடில் 

இராமன் 
சீதை 
இலக்குவன் 


( குடில்-
 வெளியே சிறியப் பாறை -
பாறை மீது இராமன் நின்ற வண்ணம், மர உச்சியைக் குறிப் பார்த்து, வில்லேந்தி அம்பு தொடுப்பு நிலையில் இருக்க-
திரைத் தூக்கப் படல் வேண்டும்...)

(சீதை, மண் கலயத்தில் நீர்ச் சுமந்து வந்தவள், இராமன் நின்றிருக்கும் கோலத்தைப் பார்த்து, குடிலுக்குள் நுழையாது-
இராமன் மீது கேலிப் பார்வைத் தூவி, சிலைப் போல் வியந்து நிற்கிறாள்...)

(அம்புக்கூடு முதுகில் தொங்க, தொழில் வில்லாட, குதித்து எகிறி விரைந்து வந்த இலக்குவன், இராமன் பாறை மீது நிற்பதைத் துளிராக பார்த்து நின்று கொண்டிருக்கும் சீதையை நெருங்கி அவளை ஆய்கிறான்...)

இலக்குவன் :
நீர்,  சுமந்து நிற்பதென்ன?

சீதை :
நீர் சுமைதான்!

இலக்குவன் :
நானா?  எவருக்கு நான் சுமை?... எதற்காக சுமை? ஏன் சுமை?

சீதை :
நீர் சுமைதான் நான் சுமப்பது என்றேன்... 

இலக்குவன் :
சொல்லாட நானும் அறிவேன்!...

சீதை :
சொல்லாட வல்லார், வில்லாடார் வேண்டும் பொழுதினில்!...

இராமன் :
வில்லாடும் வேங்கையரை, நீ எள்ளாடுதல் எதன் பொருட்டு?...
(பாறையின் மீதிருந்து இறங்கி, சீதையை நெருங்கிய  இராமனைப் பார்த்து...)

சீதை :
எள்ளாடுவேனா  எனது நாதனை?... இல்லா ஒன்றினை இருப்பதாய் பாவிப்பது, தவறென்றல்லவா கூறினேன்... ஆறோடிய நில மணலை, அள்ளித் தின்றால், தீருமோ தாகமென்றல்லவா கேட்டேன்... வண்ணம் தீட்டுவதாலேயே, மரப்பாவையும் மயிலாகிடுமோ என்றல்லவா வினவினேன்... மந்தாவைப் பருகினால், வரருணியின் போதையும் கிட்டிடுமோ என்றல்லவா எந்தன் நாதா, உந்தனிடம் கேட்டேன்... அயோத்தி அயோத்தி என்று இங்கு நின்று அரற்றினால் கையகத்தே அரியணையும் வந்திடுமோ?... அதோ, இலக்குவா!... பார்... மர உச்சியினை?... முன்புறம் சாய்ந்தக் கிளையொன்று!... கிளையிலே மூவிலை!... மூவிலையின் முன்னிலையின் மையத்திலே மை பொட்டளவு துளை செய்கிறாராம் அம்புத் தொடுத்து!... 

இலக்குவன் :
ஏன் மாட்டாரா?... சூரிய சூடு மண்ணுக்குள்ளும் பாய்வதுப் போல், ஆரியர், அம்பு விண்ணுக்குள்ளும் பாயும்!...  இலையில் துளையிடுதல் அதி விந்தையோ?... அற்பச்செயல் எமக்கு!

சீதை :
இலையைத் துளைத்து, துளையில் ஓர் ஆலயம் எழுப்புங்கள்... மாறு கூறமாட்டேன்... மண்ணை பிசைந்தால் மண்கலம் உருவாகும்... இந்த இலையைத் துளைத்தால், சருகாகும் என்கிறேன்... ஆனால்; இவரோ, இலையைத் துளையிட்டால் எண்ணம் பலிக்குமென்று கனவு கண்டாராம்... பாறை மீதேறி விட்டார்; அம்புத் தொடுக்க!...

இராமன் :
எண்ணம் பலிக்கும்!... ஆமாம்! எனது எண்ணம் ஈடேறும்!...

சீதை :
இலையைத்துளையிட்டால்?

இராமன் :
எண்ணம் ஈடேறும்!... நான் செய்வது எல்லாமே யாகம்!...  எனது பணிகள் யாவுமே வேள்வி!... எனது எண்ணம் தவத்தின்பாற்பட்டது!... எனது நோக்கம் நோன்பின்பாற் பட்டது ... 

சீதை :
கடல்நீர் மேகமாகும் என்பது இயல்பு!... கடல்நீர் பாம்பாகி, பாம்பு பூவாகும்... பூ மலையாகும்... மலை அண்டமாகும்... அண்டம் உலகமாகும் எனில்,  எவர் நம்புவர்?... உலகமில்லாமல் கடல் எங்கே இருந்தது?... மலை, பூ, பாம்பு இவைகள்  எங்கே?... அண்டம் எங்கே?... தொடர்பின்றி வார்த்தைகள் வந்தால் வாக்கியத்தில் பொருளுமிருக்குமோ?... இலையின் துளையில் அயோத்தியின் அரண்மனை உண்டு என்றால், பொருளுண்டோ?... காரணமுண்டோ?...

இராமன் :
காரணம் கேட்கின்றனையோ காரிகையே!... நேரிழையாளே ... நெடு விழியாளே... சிறு உதடுகள் விரிய வினாத் தொடுத்தனையோ காரணமறிய!... விண்ணுலகில் உறையும் நாதனை நினைத்து மண்ணுலக மீதில் அடர் காட்டில் தவம் செய்கின்றனரே முனிவர்... எதன் பொருட்டு?... எண்ணியன கூடவும், நினைப்பன நடப்பவும், கருதியன காரியமாகலும் வேண்டித்தானே?. இங்கிருந்து இயற்றும் தவத்தால், அங்கிருக்கும் ஆண்டவனது அருள் கிடைப்பதில்லையா? பன்றியைக் கொன்றும், குதிரையை வெட்டியும், நிணமேறிய எருதுவை அறுத்தும் யாகம் செய்து தின்பதேன்?... காரியம் கைகூடத்தான்!... ஆண்டவன் பாதத்தில், வெண்பூ விழுந்தால், கண்நிறை நாயகன் மணவாளனாய் வருவான் என ஆலயம் ஏகி தொழுதிடும் செழுமிகுக் கன்னியரின் காரியம் எதன்பொருட்டு?... காரணம் கேட்பவளே, காரணம் காரியத்தின் பாற்பட்டது... எந்தவொருக் காரியமும் காரணத்தோடு ஒன்றியது என்பதை உணர்ந்திடு!...

இலக்குவன் :
கண்ணனுக்காக ஏங்கிய கங்கையின் கதையைக் கூறுகிறேன்... இராதையும், கண்ணனும் சோலையில் லீலைச் செய்துக் கொண்டிருந்த வேளையிலே வந்தாள் கங்கை!... வந்தவள் கண்டாள் நிர்வாணக்கோலம்!... மங்கை அவள் கங்கை மனதில் மையலூற மோகதாபமுற்றாள்... பந்தலில் படரும் கொடிபோல கண்ணன் மார்பில் படரல் வேண்டுமேயெனக் காமம் கொண்டாள் கங்கை!...  இராதையோடு கூடும் கண்ணனோடுத் தானும், கூடவேண்டுமேயென ஏக்கம் கொண்டாள் கங்கை!... காமக்களிப்பிலே நாணம் துறந்து, கண்ணனை நெருங்கி, 'என்னையும் புணர்ந்திடு' என்று வேண்டினாள்!... இராதை சீறினாள்... கங்கை மாயமானாள்!... 

இராமன் :
மாயமான கங்கை, மாயவன் விரலோடு விரலானாள்... விரலோடு விரலாய் நின்று, விண்ணுலக தேவனவன் கண்ணனை நினைத்து காலம் பல தவமிருந்தாள்... 

இலக்குவன் :
தவம் கைக்கூடியது... கண்ணன் கங்கையைக் கூடினான்... மங்கை மகிழ்ந்தாள்... மனம்போல் கூடினாள் என்றால். தவப்பயன்தான்!... ஆரியமகளே, அறியாயோ நீயிதை!... முதுமைக் கண்டும் தசரதன் மகப்பேறுக் காண்டானில்லை... கோசலைக்கும், கைகேயிக்கும், சுமத்திரைக்கும் குதிரையின் குறியை யோனியில் நுழைத்து அசுவமேத யாகம் அவன் நடத்தினான்...  அதன் பின்னரன்றோ, இராம, இலக்குவப் பிறப்புகள் தோன்றின... தவம், நோன்பு, யாகம் பல வண்ணத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன... 

இராமன் :
நான் நினைப்பதுதான் தவம்!... நான் செய்வதுதான் யாகம்!... நான் ஆற்றுவதுதான் வேள்வி!... அதோபார்!... மர உச்சியினை!... முன்புறம் சாய்ந்தக் கிளையொன்று!... கிளையிலே மூவிலை!... மூவிலையில் முன்னிலையின் மையத்தில், மை பொட்டளவு துளை செய்வதுதான் எனது தவம்... எனது யாகம்... எனது வேள்வி... இது நிறைவேறிடின், ஆகா... அயோத்தியின் அரியணை எனது கையில்!...

சீதை :
அதுதான் எங்ஙனம்?...

இராமன் :
இந்த எனது யாகம் நிறைவு எய்தினால், நான் எந்த வழியில் அயோத்தியை கைக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறேனோ, அந்த வழியில் கைக்கூடும்!... 

சீதை :
அதாவது?... மூவிலையில் முன்னிலையின் மையத்தில் மை பொட்டளவு துளையிட்டால், அரியணை கைக்கூடும்!... 

இராமன் :
ஆமாம்! ஆண்டவன் அருள் மொழிந்தான்  கனவிலதை!...

சீதை :
நாதா, அரசவாழ்க்கையின் சுகம் இப்போதுதான் புரிகிறது... ஆடல் மகளிரும், சாமரம் வீசும் பெண்டிரும், மைத் தீட்டும் தோழியரும் என்னை சூழ்ந்திருக்க, - மயிலாட - மரகதப்பூக்கள் சொறிய - அப்பப்பா... அந்தக்காட்சி என் வாழ்வில் இனி வருமோ?... நகையணிகள் பூட்டி, நவரத்தின மாளிகையில் ஒயிலாய் வலம் வருவேனோ, இனி நான்?... துயிலரங்கில் துயிலாடிய நான், இங்குத் துயிலின்றி, பாறை நிலமீதில், நான் படும் வேதனைத் தீரும் நாள் எந்நாளோ?... எத்தனை சிரமம்?... எத்தனைத் துயரம் இந்தக் காட்டுக்குள்!... விலங்குகளுக்கு அஞ்சி, அசுரர்களுக்கு ஒளிந்து, காற்றையும், மழையையும் தாங்கி...

இராமன் :
துயரமெல்லாம் தீரும் நாள் தொலைவில் இல்லை, சீதையே!...

சீதை :
போதும் இந்தத் துயர்!... எவ்வழியிலேனும் என்னை அரண்மனைக்கு இட்டுச் செல்லுங்கள்... நாதா!... நாதா, நாழிகையாயிற்று வாருங்கள் உணவருந்த!... வெயிலில் காய்ந்த மாட்டிறைச்சியையும், மாதுளங்கனியும், தேனும் உண்டு, பின்னர் மத்யாவைப் பருகி, போதையோடு இந்த பேதையை மஞ்சத்தில்- தங்கள் மடி மஞ்சத்தில் - துயிலூட்டிட வாருங்கள்!...

(சொல்லிவிட்டு, சீதை குடிலுக்குள் போகிறாள்...)

(இராமன், சீதையைத் தொடர)

இலக்குவன் :
அண்ணா!... 

(இராமன் நின்று இலக்குவனைத் திரும்பிப் பார்க்கிறான்...)

இலக்குவன் :
சீதை இருக்கிறாளே என நான் கூறாது விடுத்தேன்...

இராமன் :
எதனை?

இலக்குவன் :
கூறியிருப்பின் சீதை ஓலமிட்டிருப்பாள்... எம்மை மேலும் பேடியாக்கிட ஒப்பாரி வைத்திருப்பாள்...

இராமன் :
கூறு, இலக்குவா கூற்றினை!...

இலக்குவன் :
இராவணன் நம்மைத்தேடி, இந்தக்காட்டுக்குள் வந்து விட்டான்...

இராமன் :
என்ன?

(அதிர்ச்சியுற்று விழிப்பிதுங்கிட இராமன் நிற்கிறான்...)

                                     -திரை-

                  
  


பாகம் : 2.              காட்சி : 4.             காடு.

இராமன்.
இலக்குவன்.
அயோத்தி வீரர் நால்வர்.

(இராமன், குழப்பமும் பேடித்தன்மையும் சூழ்ந்த நெஞ்சோடு-
இவற்றிலிருந்து விடுபடும் வழி கிட்டாத என ஆழ்ந்த சிந்தனையோடு நடையிட்டுக் கொண்டிருக்கிறான்... 

இதே மனநிலையில்-
இலக்குவன் மரத்தடியில் அமர்ந்து, சிறுக் கத்தியால் அம்புக் குச்சியை சீவிக் கொண்டிருக்கிறான்... 

வீரர்களின் வாழ்த்தொலி முழக்கம் தொலைவிலிருந்து கேட்கிறது...

வாழ்த்தொலிக் கேட்டு இலக்குவன் எழ-

இராமன் நடையினை நிறுத்த-

வாழ்த்தொலி முழக்கத்துடன் வீரர்கள் இராமனை நெருங்கி...)

வீரர்கள் :
அயோத்தியின் அடலேறே வாழ்க!... 
அயோத்திப் பேரரசின் பெருந்தலைவா வாழ்க!...
ஆரியர்க்குல ஒளிவிளக்கே வாழ்க!...
அசுரர்தமை வீழ்த்த அவதரித்த திருமகனே வாழ்க!...
அரக்கர் அழிய பிறந்தப் பிறப்பே வாழ்க!
வேதமுனியோடு, முக்காலமிருந்து, எக்காளமிடும் எத்தரைக் கொல்லும் வித்தை கற்ற கருநிறமேனியனே வாழ்க!...
அயோத்தித் திரும்பி, அரண்மனைதனை அலங்கரித்திட வருக வருகவென்றே வாய் மலர அழைத்திட பரதனால் வந்த தூதுவர்கள் யாம்!...
வருகவே, இராமா!...
வருக வருக வருகவே!...

(ஆரியவீரர்கள் வாழ்த்தி-
வணங்கி, முழந்தாளிட்டு இராமனைப் பணிகிறார்கள்...)

இராமன் :
தம்பி!

இலக்குவன் :
இது அழைப்பல்ல!... வலைவிரிப்பு!... நம்மை அழைக்க பரதனால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் அல்லர்; இவர்கள்!... கொல்லவிடப் பட்டக்  கூற்றுவர்கள்!... 

வீரர் (1):
சுமத்திரை ஈன்ற சுந்தரனே!... கூற்றுவர்கள் அல்லர் யாங்கள்!... தூதுவர்கள்தான்!... பரதனின் நல்ல உள்ளத்தில் கள்ளம் இல்லை!... இது சத்தியம்... பால்நிலவது பரதனது நெஞ்சம்!...

இராமன் :
அயோத்தி துறந்து, ஆண்டுப் பலக் கழிந்தப் பின்னர், ஏனழைக்கிறான் எம்மை திரும்பவும் பரதன்!... கூறு, ஆரிய வீரா!...

வீரர் (1):
கோசலையின் குலக்கொழுந்தே, நேசமாய் வளர்த்தத் தந்தையை நீர் செய்த, கொலைப்பாதகம் மிக மோசமானதுதான் என்றாலும், அதனையும் மக்கள் மறந்து விட்டார்கள்!... மன்னன் பரதனும் தங்களை மன்னித்தான்!...

இராமன் :
ஆ... ஏதுக் கூறினாய்?... வேசிமகன் பரதன் மன்னித்தானா?... இனியொருமுறை இதை நீ கூறிடின், அறுத்திடுவேன் நாவினை!... போய்விடு பொல்லாத் தூதுவனே...

இலக்குவன் :
மன்னிப்பு எனும் மண் சுமந்து வந்தவனே!... என்சொல் சுமந்துப் போய், பரதனுக்கு கல்லறைக் கட்டு!... ஆசைநாயகி கேகயியின் அடிவயிற்றை நக்கி மோசம் போன தசரதனின் மகுடத்தை அணிந்திருக்கும் பரதனே, உனது மண்டை நொறுக்கப்படும்... நொறுக்கப்பட்ட மண்டை மீதேறி, மாமகுடம் சூடிட மாவீரன் இராமன் அறிவான் என்று,எடுத்தியம்பிடு... ஓடிடு ஒற்றனே! உதைத்திடுவேன் கள்ளனே!...

வீரர் (1) :
மகுடம் வேண்டி நீங்கள் பரதன் மண்டையைப்  பிளக்க வேண்டாம்... அயோத்தியை இராமனே அரசோச்சிட, அருங்குணாளன் பரதன் விருப்போடு உள்ளான்... கனிகொடா மரமெனில் கல்லடித்தகும்!... அவன் மழைப் பொழியும் மேகமல்லவா?... வருக... பரதனை காண்க!... பகை தீர்த்து, நகைப் பூணுக!...  

இராமன் :
ஆ... ஆ... (ஆவேசமாய் ஓங்காரித்தல்) பரதனிடத்தில் நான் மண்டியிட வேண்டும்... மகுடத்தை யாசகமாய் நான் கேட்க வேண்டும்... அவன் தானமாய் எனக்குத் தருவான்... நானும் அவன் தயவில் ஏற வேண்டும் அரியணை!... அப்படித்தானே?... அடேய் பரதா, ஆரியவீரனடா நான்!... போரில் உனை நான் வீழ்த்துவேன்... பொல்லா கழுகுகளின் அலகுகளுக்கு உனது தசை நார்களை, காணிக்கையாக்குவேன்... வீரர் ஆர்ப்பரிக்க, தேரேறி வந்து, சூடுவேனடா மகுடம்!... வீரனடா நான்!... ஆரியவீரன்!... உன்னைப் போல் பாட்டன் வீட்டில் மரப்பாவையோடு விளையாடி காலங் கழித்தவனல்லடா!... வேதம் கற்ற முனியிடத்தில், நானும் பலக் கற்று, நாட்டை ஆள அரசியலும் கற்றவனடா நான்!...  வீரம் கொண்ட நான், வினை நிகழுமிடத்தில் வெல்ல, சூதும் சூழ்ச்சியும் நிகழ்த்தத் தெரிந்த, புத்திமான் நான்!... நேரில் நீ இங்கு வந்து மன்னித்தேன் என்று கூறியிருந்தால், அந்த வார்த்தை செவியில் விழும் முன்னே, உனது சடலம் தரை வீழ்ந்திருக்கும்... யாரைப் பார்த்து, யார் சொல்வது மன்னிப்பென்று?... சிங்கத்தைப் பார்த்து, சிற்றெலி கூறுவதா?... சிரிப்பு வருகிறது... உனது மன்னன் பரதனை நினைத்து!... அறிவில்லா, பரதனுக்கு ஆசை ஏன் வந்தது அரசபீடத்தின் மீது?... அவனது அன்னையோடு இவனும் அழகாய் சேலையுடுத்தி, அந்தப்புரத்தில் தூங்கச் சொல்!...

வீரர் (1):
அரசபீடத்தின் மீது பரதனுக்கு ஆசையா?... தாங்கள் கூறுவது தவறு...

இராமன் :
தவறெனக்கூறி தர்க்கம் பேசாதே!...

வீரர் (1):
தர்க்கம் பேச எனக்கேதுத் தகுதி?... பரதனின் தவிப்பை நான் எந்த வார்த்தைகளால் விளம்புவேன்... வசந்தத்தை துறந்த மரம் போல், இராமா உன்னைத் துறந்து, பரதன் வாடிக் கிடக்கும் கோலத்தை நான் வரைந்துக் காட்ட ஓவியனல்லவே!... பிரிவை நினைத்து கலங்கும் அவனது கண்களை, தகுந்த உவமைகளோடு கூற நான் கவிஞனுமல்லவே!... தாமரை முகத்தை சூழ்ந்த சோகத்தைப் பாட, நான் பாடகனுமல்லவே!... 'அண்ணன் தம்பியரைப் பிரியச் செய்து இப்பிறவியில் எனக்கேன் துயர் தந்தாய் ஆண்டாவா' என்று அணுதினமும் பரதன் புலம்புங் கோலத்தை நானிங்கு புலம்பிட வந்த தூதுவன்தான் நான்!... எனக்குத் தங்களோடு தர்க்கம் புரியத்  தகுதியேது?...

இராமன் :
இலக்குவா, நல்லதோர்க் கிளிப் பிள்ளையைத்தான் நம்மிடம் அனுப்பியுள்ளான் பரதன்!...

வீரர் (1):
கிளிப் பிள்ளையாய் நானிங்கு வரவில்லை!... நலம் பாடும் குயிலாய் வந்துள்ளேன்... பரதனது அன்பு நெஞ்சை சுமந்து, சுந்தரா, உன்னை நாடி வந்துள்ளேன்...

இராமன் :
ஆண்டு பத்தாக, அவனது அன்பு நெஞ்சு மாண்டு போயிற்றோ?... மாண்ட நெஞ்சுதனில், பாசமழையும் பீறிடுமோ?...
இலக்குவன் :
பாசமழையன்று!... தூதுவன் உருவில் பாசக்கயிறு ! (சிரிக்கிறான் ) அரசுரிமைத் தருகிறேன் வாவென்று ஆசைக் காட்டியவுடன் ஆவென வாய்ப்பிளந்து அவனை நாடுவோம் யாங்கள் என்பதுதானே பரதனது எதிர்ப்பார்ப்பு?...  அரசபதவிக்காக, அயோத்தி நுழைந்துவிட்டால், மக்கள் முன்னிலையில் எம்மைத் தண்டிக்க வேண்டும்; சீதையை சுவைக்க  வேண்டுமென்பதுதான் உமது மன்னவன் திட்டம்!... சூது, சூழ்ச்சி யாமும் அறிவோம்!... போய்விடு!... அரசபீடத்திற்காக ஏங்கி நாங்கள் திரியவில்லை... நேரங்கூடும்போது, பரதனது நெஞ்சை மிதித்து மகுடஞ்சூட்டிக் கொள்ள இராமன் அறிவான்... தசரதனுக்கு வேசியாம், கைகேயியை பழிக்குப்பழி வாங்கியே தீருவேன்... அவளை நானும் தாரமாக்கி, மகிழ்வேன்... அந்த நன்நாளே இராமன் அரியணை ஏறும் திருநாள்!... 

வீரர் (1) :
இலக்குவா, கைகேயி யார்?... உனக்குத் தாயல்லவா?...  தாயை தாரமாக்குகிறாயா?... இதென்னப் பேச்சு?...

இலக்குவன் :
தாயா?...  அவள் அரண்மனையின் ஆசைநாயகிதான்!... வேசிதான்!... 

வீரர் (1) :
சீரின்றி பேசாதே!... ஆரியத்தை பரதன் ஆண்டாலென்ன?... இராமன் ஆண்டாலென்ன?... இருவரும் ஆரியர்கள்தானே?... 

இராமன் :
வீரா, உனது உயிரை ஆண்டவன் பறித்தாலென்ன? ஆரியன் பறித்தாலென்ன?... ஆண்டவனும் ஆரியனும் ஒன்றுதானே?... 

(கூறிக்கொன்டே வீரனின் நெஞ்சில் வாள் பாய்ச்சுகிறான் இராமன்.... வாள் பாய்ச்சப்பட்ட வீரன், துடித்துடித்து மாண்டு போகிறான்...

எஞ்சி நிற்கும் மூன்று வீரர்களில் ஒருவனை நெருங்கி. அவனது கழுத்தில் கத்தியை வைத்து )

 இராமன் :
கூறு!... பரதனுக்கு ஒற்றறிய வந்தாயா?... எமக்கு தூதுரைக்க வந்தாயா?...

வீரன் (2) :
தூதுரைக்கவே வந்தோம்... என்னைக் கொன்று விடாதீர்கள்... 

இராமன் :
உண்மையைக் கூறு! (எட்டி உதைக்கிறான் )

வீரன் (2) :
அயோத்தியின் படை பலம் இப்போது தொய்ந்த நிலையில் உள்ளது!...

இராமன் :
காரணம்?...

வீரன் (2) :
தங்களை நேசிக்கும் பலர், தங்களுக்கு உதவும் பொருட்டு, இங்கு வந்துவிட்டதை மன்னன் பரதன் ஒற்று மூலம் அறிந்துக் கொண்டான்... மேலும் சில படை வீரர்கள், போருக்கஞ்சி படையிலிருந்து விலகி விட்டர்...

இராமன் :
போரா?...

வீரன் (2) :
ஆமாம்!... இராவணன் பெரும்படையோடு அயோத்தி நோக்கி வந்துக் கொண்டிருக்கிறான்... இந்நிலையில் அயோத்தியின் படைபலமோ, மிக பலவீனமாக உள்ளது!... பரதன் மிக அச்சமும், கவலையும் கொண்டுள்ளான்... 

இராமன் :
அதனால், என்னைப் பலியாக்கிட - அரசபதவி என்ற ஆசைத் தீனிக் காட்டியுள்ளான்... 

வீரன் (2):
அல்ல!... உண்மையில் அரசபதவித் தர, பரதன் இயைவுக் கொண்டுள்ளான்... இராவணனை எதிர்க் கொண்டுத் தாக்கும் தகைமைத்  தங்களுக்கு மட்டுமே இருக்கிறது... வாருங்கள் பிரபு!... மன்னனாக மகுடம் சூடிக் கொள்ளுங்கள்... 

இராமன் :
இது, நான் மகுடஞ் சூடிக்கொள்ள விடுத்த அழைப்பா?... இல்லை; எனது மரணத்துக்கு விடுத்த தூதுவா?... என்னை காவுக் கொடுத்து, அவன் அரசாள உன்னை ஏவியுள்ளான், இங்கு!... ஏவப்பட்ட உன்னை  நானிங்குக் காவுக் கொண்டு, பரதனின் அரசுக்கு சாவு மணி அடிக்கிறேன்...

(கூறிக்கொன்டே, வீரனின் குரல்வளை மீது, இராமன் கத்தி பாய்ச்சுகிறான்... இரத்தம் பீறிட, வீரன் துடித்துடித்து மடிகிறான்...)

( எஞ்சி இருந்த இரு வீரர்களும் அஞ்சி ஓடுகிறார்கள்... இலக்குவன் ஓடுவோரை நோக்கி அம்பு ஏவுகிறான்...)

இலக்குவன் 
பேடிகள் ஓடி விட்டனர்... கோழைகள் தப்பினர்... ஓடட்டும்... ஓடட்டும்... ஓடி பரதனிடத்தில், கூறட்டும்; எமது வீரத்தை!

இராமன் :
( கொலையுண்டு சடலமாகக் கிடக்கும் வீரனைக் காட்டி) தம்பி, ஏதுக் கூறினான் இவன்?

இலக்குவன் :
வருக வருகவென்றான்... அணிக அணிக மகுடமென்றான், அற்பன்!...

இராமன் :
அடேய், நான் கேட்பது வேறு!... நீ கூறுவது வேறு!... நேற்றிரவு நீ சொன்னதென்ன?...

இலக்குவன் :
இராவணன் நம்மைத் தேடி விந்தநாட்டுக்கு வந்துவிட்டான் என்றேன்...

இராமன் :
இவன் கூறியதென்ன?...

இலக்குவன் :
அயோத்தியின் மீது படையெடுத்து இராவணன் சென்றுக் கொண்டிருப்பதாக

இராமன் :
சொன்னான்!... எது சரி?... இராவணன் நம்மைத் தேடி இங்கு வந்துள்ளான் என்பதா?... அல்லது; அயோத்தி மீது படையெடுத்து அங்குச் சென்றுள்ளான் என்பதா?... இதில் எது சரி?

இலக்குவன் :
நமது நேச வீரர்கள் சிலரை இலங்கைக்கு ஒற்றறிய அனுப்பினோமே... நமது வீரர் அனுப்பிய ஒற்றுத்தான் சரி!...

இராமன் :
விளக்கமாக் கூறு!...

இலக்குவன் :
அயோத்திமீது படையெடுப்புத்தான் இராவணனது முதல் திட்டம்!... படையெடுப்புக்கு முந்தைய இரவு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டு,

இராமன் :
இராவணன் நம்மை இங்கு தேடி வருவதாக ஒற்று!...

இலக்குவன் :
அதாவது, ஆரியத்தின் மீது படையெடுப்பில், தானே தலைமை வகித்து, நடாத்திச் செல்ல இராவணன் திட்டம் கொண்டிருந்தான்... அந்தத் திட்டத்தில் மாறுதல் செய்து, மகன் சேயோனைத் தலைமைத் தாங்கி வழி நடாத்திச் சென்றிட, இராவணன் ஆணை வகுத்துத் தந்து, அதன்படி அரக்கர் படை ஆரியம் நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது... ஒற்றறியும் திறனற்ற பரதன், இன்னமும் இராவணன்தான் படை நடாத்தி வருவதாக மருண்டுக் கிடக்கிறான்... ஆனால்?

இராமன் :
இராவணன் நம்மை ஏன் தேடி வரவேண்டும்?... ஆரிய இனத்தையே பூண்டோடு அழிக்கவா?... 

இலக்குவன் :
அதுவும் ஒரு காரணம்!... ஆனால்?

இராமன் :
ஆனால்?

இலக்குவன் :
காமவல்லியைக் கொன்றோமே... பழிவாங்கும் பொருட்டு, நம்மிருவரை கொலை புரிய வருகிறான்...

இராமன் :
ஆ... காமவல்லி உன்னால் கொல்லப்பட்ட போது, யாரும் காணவில்லையே?... இராவணன் அறிந்ததெப்படி?...

இலக்குவன் :
கனகமணி எனும் தோழி, மூர்ச்சையானாளே?... அவள்... அவள்தான்... ஆமாம்!... மயங்கி விழும்போது அவள் தோழி!... மயக்கம் தெளிந்த பின்னோ, அவள் மூதேவி!...  மூர்ச்சைத் தெளிந்தவள், அரக்கன் இராவணனிடம் அரற்றியிருப்பாள்... அவனும் அதிசூரன் போல் எம்மைக் கொல்லக் கிளம்பியிருப்பான்... நாமென்ன நேற்றுப் பூத்த காளான்களா?... நாம் அனலைக் கக்கும் ஏரிநெருப்பு என்று புரிய வைப்போம்... எம்மைத் தொட்டால், அவனதுக் குலமே கருகும் என்பதை, உணர வைப்போம்... ஆணையிடு, இராமா!... இராவணனை சுட்டுப் பொசுக்க... தருணம் இதுதான்... நமது நேசவீரர்களுக்கும் கட்டளையிடுகிறேன்... யாகத்துக்கு, வேள்விக்கும் இராவணனே பெருத்தடையாய் உள்ளான்... ஆரியரை அழிப்பதில் அவனே, தீவிரமாய் இருக்கிறான்... இராவணன் நம்மை நெருங்குவதற்கு முன்னர், நமது வீரர்களால் சூழப்பட்டு, சுட்டெரிக்கப்படுவான்... இது சத்தியம்!... இது ஆணை!... இதுவே ஆரிய பேரிகை!... ஆணையிடு!...

இராமன் :
பிண்டமே!... உனது மண்டையில் மண்ணுருண்டையா?... சூளுரைத்து, சூரியக்கதிர்கள் போல் பாய்ந்து வரும் இராவணப் பட்டாளத்தைப் போர்க் கொண்டு வெல்லுதல் இயலுமா? 

இலக்குவன் :
நமது வீரர்கள் போர்முறைக் கற்றவர்கள்தானே?...

இராமன் :
போர் பூண்டால், நாம் பூண்டோடு அழிந்து விடுவோம்...

இலக்குவன் :
வேறு மார்க்கமென்ன?... கூறுங்கள்!... விந்தநாட்டுக்கு வந்த இராவணன், காட்டுக்குள் நம்மைத் தேடி, அலைந்துக் கொண்டிருப்பான்.. மாஞ்சோலையிலும், காட்டின் அகத்திலும் தேடி, பின்னர் வெகு தொலைவிலுள்ள இங்கும் வந்திடுவான் வேகமாய்!... அவன் இங்கு வருமுன்னர், அவன் வரும் பாதைக்கு தீ மூட்டிட நமது படைக்கு ஆனைக் கொடு, இராமா!... 

இராமன் :
மிருகமே... உனக்கு பேசத் தெரியவில்லை... நான் பேசுவதைக் கேள்!... இது அவனது மண்!... இந்த மண்ணின் நான்கு திசையும் அறிந்தவன் அவன்!... புல்லின் நிழலுக்குள்ளும் நாம் ஒளிந்துவிடாதபடி, அவனது படைகளால் நாம் சூழப்பட்டுள்ளோம் என்பதே உண்மை!... இங்கு நம்மிடம் இருக்கும் சொற்பமான வீரர்களைக் கொண்டு, இராவணனோடு மோதி மடிவதைவிட, சூழ்ச்சியால் இராவணனை வீழ்த்தி, நாம் வாழவேண்டும்!... இதுதான் எனது போர்முறை! 

இலக்குவன் :
ஆகா!... வெல்லும் முறை எதுவாயினும் சொல்லு!...

இராமன் 
உதயமாகிவிட்டதுத் திட்டம்!... உனக்கதைக் கூற இதுவே கட்டம்!... 

இலக்குவன் :
உரைக் கொடு; உயிர்ப்பிக்கிறேன்... உரையிடு மாய்கிறேன்!...

இராமன் :
அயல்மண்ணில் இனி நான் ஆரியநாதன்!...  அதனால் கீர்த்தியாகும் எனது நாமம்!... அயல்மண்ணில் ஆரியத்தின் காவலன் ஆவேன்!... அயோத்தி இனி எனதுப் புகழைப் பாடும்!... அயோத்தியில் எனக்குண்டானது அவச்சொல்!... அயல்மண்ணில் என்னால் உண்டாவது அருஞ்சொல்!... இங்கு-  இன்று என்னால், எழுப்பப் படும் அடித்தளத்தின் மீது நாளை இராம ராஜ்யம் எழுப்பப்படும்!... நேற்று என்னை அலர்த் தூவி, மாபாதகன் என்ற அயோத்தி, நாளை என்னை மலர்த் தூவி, 'மாவீரனே' என்றிடும்!... போவென்று விரட்டிய அயோத்தி வாவென்று வாழ்த்துக் கூறும்!... எனது நெறி ஆரிய நெறி!... இனி ஆரியர் நெறி எனது நெறி!... தொடங்கிவிட்டேன் ஆரியப்பணி!... தொய்வில்லை என்றும் இனி ...

இலக்குவன் :
(வெறுப்புடன் )
அரக்கர் குலத்தலைவன் இராவணன், வெறி பூண்டு , வந்துக் கொண்டிருக்கிறான் நம்மை சிதலமாக்க!... ஊழிக்காற்று வீசும் வேளையில், ஓலைக்குடில் வேய்வது போல், அரக்கர் வரும் வேளையிலே ஆரியநெறி, ஆரியப்பணி, கீர்த்தி, இராமராஜ்யம் என சொல் வேய்ந்துக் கொண்டிருக்கிறாயே இராமா!... அரக்கன் இங்கு வந்து தேடிச் செல்லும் வரை, ஏதேனும் புதருக்குள் ஒளிந்திருப்போம் வா, இராமா!

இராமன் :
வீரநடையிட்டு, வெற்றிவாகை சூட வரும் வேங்கை, கூண்டுக்குள் அடைப்படுமோ?... வீரத்திலகம் அணியவிருக்கும் என்னைப் புதருக்குள் ஒளியச் செய்யலாகுமோ?... 

இலக்குவன் :
இராவணனை எதிர்த்துப் போரிட வேண்டாம் என்கிறாய்... மறைந்திருந்து அவன் வரும் பாதைக்கு, தீமூட்டி அவனை, சாம்பலாக்கிடலாம் என்றாலும் மறுக்கிறாய்!... உயிர்வாழ, புதரோடு ஒளிந்திருப்போம் என்றாலும் ஏதேதோ பேசுகிறாய்... எனது இந்த முறைக்கு மேலான எந்த முறையால், நீ இராவணனை வென்று வெற்றி வாகை சூடப்போகிறாய்... அல்லது; அவனிடமிருந்து தப்பித்துப் பிழைக்கப் போகிறாய்?...

இராமன் :
வா!... கூறுகிறேன்!...

 (
'image.png' ஃபைலைப் பதிவேற்ற முடியவில்லை. TransportError: Error code = 7, Path = /_/BloggerUi/data/batchexecute, Message = There was an error during the transport or processing of this request., Unknown HTTP error in underlying XHR (HTTP Status: 0) (XHR Error Code: 6) (XHR Error Message: ' [0]')

இராமன் நடக்க-
இலக்குவன் பின்தொடர...)

                                      -திரை -




பாகம் : 2.                          காட்சி : 5.             குரல் மட்டுமே ஒலித்தல்!

அடர்மிகு காட்டுப்பகுதி-
காற்று அசுரவேகத்துடன் வீசுதல் ஒலி-
இதனூடே வேகமாகப் பாயும் குதிரைக் குளம்படியோசை -

(குரல் மட்டுமே)

இளஞ்செழியன்:
இடும்பா!

இடும்பன் :
சொல் இளஞ்செழியன் ...

இளஞ்செழியன் :
அதோபார்... இரு குதிரைகளில் இருவர் வேகமாகப் போகின்றனர்... தெரிகிறதா?

இடும்பன் :
ம்... தெரிகிறது... அவர்களைப் பின்  தொடர்வோமா?...

இளஞ்செழியன் :
சரி; வேகமாகக் குதிரையைச் செலுத்து!...  

(சிறுது நேரத்துளிகளுக்கு-
குதிரைக்குளம்படியோசை மட்டுமே தரல்-

இடும்பன் :
இளஞ்செழியன், கவனித்தாயா?... நாம் பின் தொடர்வதை அறிந்து, அவர்கள் முன்னிலும் மிக வேகமாக, குதிரை செலுத்துகின்றனர்...

இளஞ்செழியன் :
ஆமாம் !... ம்.... நாமும் வேகமாய் செலுத்துவோம்...

இடும்பன் :
நம்மைக் கண்டு ஏன் இவர்கள் விரைகின்றனர்?...

இளஞ்செழியன் :
பகைவராய் இருக்கக்கூடும்!... இல்லையேல்; அத்துமீறி நுழைந்த, அந்நியராய் இருத்தல் கூடும்... இராமன், இலக்குவனாகவும் இருக்கலாம்!...

இடும்பன் :
வேலெறிந்து வீழ்த்துவோமா அவ்விருவரையும்?...

இளஞ்செழியன் :
கூடாது!... உயிருடன் பிடித்தால்தான் உண்மையறிய இயலும்!...

இடும்பன் :
இளஞ்செழியா!... தாமதம் வேண்டாம்... வலப்புறக் குதிரை மீது, நீ வேலெறி!... நான் இடப்புறக் குதிரை மீது வேலெறிகிறேன்... குதிரை வீழ்ந்தால், அவ்விருவர்களும், தரைமீதில் விழுவார்கள்... நாம் உடனே, இருவரையும் கைதுச் செய்துவிடலாம்!... ம்... எறி!...

(சிறுது நேரத்துளிகளில்-
மிகு இரைச்சலோடு, குதிரைகள் கனைப்பொலி...)

                                                         - திரை -    





பாகம் : 2.                             காட்சி : 6.                காட்டுக்குடில்.


இராமன் 
சீதை.
இலக்குவன்.

(மரத்தில் சாய்ந்து சீதை நிற்கிறாள்...
அவளின் காலடியில் இராமன் அமர்ந்து-

சீதையின் பாதத்திலிருந்து, முத்தம் பதித்து, காலின் மேலாகவும் இதழால் ஊர்ந்து, முத்தம் இடுகிறான்...

இக்காட்சியை வேறோர் மரத்தின் பின்நின்று, இலக்குவன் கண்டுக் களிக்கிறான்...

இடையின் மீது முகம் பதிக்கும் போதில், சீதை நளினமாய், இராமனை விலக்கி சிறு நடையிடுகிறாள்...

சீதை :
ஆ... என்ன இது!... மாலைப்பொழுது வருமுன்னரே, மன்னவனுக்கு இந்த மையப்பொழுதுதனில் ஏனிந்த மையலோ...

இராமன் :
மயில் விரித்த தோகை போல் சீதா, நின் பின்னழகு என்னை மயக்குதடி...

(சிறுநடையிட்டுச் சென்றவளை, செல்ல விடாமல் தாவி இழுத்து, பின்னழகில் முகம் வைத்து மயங்குகிறான்...)

இராமன் :
மகரந்தம்தானடி நினது மேனி!...

சீதை :
இருதுளிதான் வானம் பொழிந்தது!... இளங்காற்று மெல்லெனத் தழுவும் முன்னரே, நீர்குளிர்க் கொண்ட மேனியாய், என்னைத் தழுவுவதென்ன... அந்தி வரட்டும்... ஆகாவென பாடிடும் பறவைகள் உறங்கட்டும்... நிலவது முகிலோடு போகட்டும்... ஆனந்தக் காற்று மீதினிலே நான் கிடக்க, அடிவானம் வெளுக்கும் வரை நீங்கள் என்னைத் தாலாட்டுங்கள், நாதா!... இப்போது என்ன அவசரம்?...

(சீதை இராமனிடமிருந்து இதமாய் விலகுகிறாள்...)

இராமன் :
என்ன செய்வேன் சீதா!... கார்முகிலவன் நீர் வார்த்து எனக்குக் காமக் குளிரூட்டி விட்டான்... நேரங்காலம் பாராது - கார்முகிலவன் புரிந்திட்டக் கோணல் பணியால், நானும் நாணந்துறந்து, நினதடி வீழ்ந்தேன்... பகல் பொழுதென்று விலகிடாது, பாவையே எனக்குப் பாலமுது போர்வையைப் போர்த்து!...

(இறுக்கமாய் இராமன் அணைக்க முற்பட-
சீதை விலகுகிறாள்...)

சீதை :
நெருப்பு வீழ்ந்தால் பூவும் தாங்குமோ?... நாதா, பூவையெனை நெருப்பாய் நெருங்கலாமோ?...

இராமன் :
நெஞ்சத்தில், மை விளக்கிரண்டை  வைத்து, நெருப்பாய் எரிப்பது, நீதானடி!... மையுண்ட உனது விழியிரண்டும் மதுக் குவலமென்று ஏமாந்தேன்... விழியிரண்டும் தீயைப் பாய்ச்சி, எனது நெஞ்சைப்  பொசுக்குதடி, சீதா!...  முகம் பார்க்கும் கண்ணாடியென உனது வயிறை நான் பார்க்க, வயிற்றின் மீது நளினமாய் இருக்கும் உனது தொப்பூழ், என்னை சூரியனாய் சுட்டெரிக்குதடி!... என்ன செய்வேன், சீதா!... சுட்ட உடல் மீது சூடுதணிய உனது உதடுகளால் முத்தம் கொடு!... எனது வேதனையின் மருந்து நீதானடி!...

(சீதையைக் கட்டியணைத்து மடிமீது சாய்த்துக் கொள்ளுகிறான்... 

பாதத்தின் மீதும், பாதவிரல்களின் மீதும் இராமன் முத்தம் தூவுகிறான்...)

சீதை :
நாதா......

இராமன் :
தேன்கனியே!...

சீதை :
சந்திரப்பூ பகல் போதிலும் பூத்திடுமோ?...

இராமன் ;
காரிகை! இது காமப்பூ!... கனவிலும் கள்ளத்தனமாய்ப் பூத்து, கண் மலரை சூடாக்கும்!... பகலில் பூத்தால், பாவையின் நெஞ்சுக்காக மயங்கும்... மாலையில் மையலோடுப் பூத்து, மங்கையின் மடிக்காக ஏங்கும்... இராத்திரியில் பூத்தாலோ, துயிலின்றி துடியிடைக்காகத் துடிக்கும்... யாமத்தில் பூத்தாலோ, மோகத்தின் வெளியில் யாகத்தீயாய் எரியும்!... காலையில் பூத்தால், கடன் மறந்து மடந்தையின்பால் மனம் திரியும்!...

(நெஞ்சில் கைவைத்து இராமனை விலக்கி-)

சீதை :
தூங்கும் எனது நெஞ்சில் தீயை மூட்டலாமோ?...

இராமன் :
தூங்கும் எனது நெஞ்சில் தீயை மூட்டுவது உனது அழகல்லவோ!...

சீதை :
பாட மறுக்கும் குயிலின் குரலை சிறைப் படுத்த எண்ணுவது ஏதமல்லவா?

இராமன் :
என்னை சிறைப் படுத்துவது, இந்தக் குயிலின் குரலல்லவா!...

சீதை :
தண்ணீருக்கே தாகமூட்டும் விசித்திரம்தான் என்னவோ?...

இராமன் :
இந்த இளமேனிக்காக, ஆண்மையடிப் பணியும் விசித்திரம்தான் அதுவும்... தேவலோகத்தில் ஓர் இரத்தின மாளிகை அமைத்து, நேற்றையக் கனவில் இந்திரன் என்னை அழைத்தான்... நான் இந்திரனுக்கு, ஏது இயம்பினேன் என நீ அறிவாயோ, சீதா!...

சீதை :
ம்... நீங்களே சொல்லுங்கள்!...

இராமன் :
எனது சீதையின் மடித் தரும் சுகம் இரத்தின மாளிகையும் தருமோ என்றேன்...

சீதை :
உண்மையாகவா?...

இராமன் :
சீதை, உனது விழியிலே நவரத்தினசுடர் தவமிருக்கையில், எனக்கெதற்கு வேறோர் மாளிகை?... உனது நாசியின் நுனியிலே நூறாயிரம் வைடூரியங்கள், தவமிருக்கையிலே தேவலோகம் எனக்கு எதற்கு?... இந்த இதழ்களில் ஊறும் அமுதத்தை யுகம் யுகமாய்ப் பருகினாலும், எனது நெஞ்சில் தாகம், ஊறிக் கொண்டேயிருக்கும்... அந்த இரத்தின மாளிகையும் உனது அமுதத்துக்கு ஈடாகுமோ?... மெல்லிள முலைகள் தாங்கும் உனது, மார்பழகிற்கு, நான் காலமெல்லாம் மண்டியிட்டு வாழ்த்துப் பாடுவேன்...  அந்த வாழ்த்துப் பாடல் பெறும், தகுதி இரத்தின மாளிகைக்கு இல்லையே, சீதா!... உந்தன் தோள் மீது,எந்தன் இதழ்ப் பதிக்கும் போது, உண்டாகும் ஒய்யார சிலிர்ப்பு, இரத்தினக் கற்களால் உண்டாகிடுமோ?... அம்மாவோவ் !... உனது வயிற்றின் மீது, வாய்வைத்து அய்யிரு விரல்களால் இடைதனைத் தடவி, வரம்பிலா வனப்புமிகு தொடைகளையும் நான் முத்தமிடுகையில் அம்மம்மா... ஆனந்தம் என்பது இதுதானோ?... அந்த இரத்தின மாளிகை வெறும் கல் மண் தானோ?... உனது பாதத்தின் மீது என் கண் மலர்களை வைக்கும் போதினிலே, என்னுள்ளே ஏற்படும் போதைக்கு ஈடாகுமோ, இரத்தின மாளிகையும்?... ஆகா!... சீதையே!... உனது மேனியைத் தழுவிட, எனது தேகம் பாகாய் உருகுதடி!... இரக்கங் காட்டு இன்னமுதே!... ஆசைத்தான் இல்லையோ!... ஆரணங்கே உனக்கும்!...

(சீதையை அணைக்கிறான்.... இராமனது மயக்கும் மொழியில் மயக்கமுற்ற சீதையும்...)

சீதை :
மலையிரண்டைத் தோளாய் கொண்ட மன்னவா!... உனது மார்பும் எனக்கு மஞ்சமாய் இருக்கையில், ஆசைதான் எனக்கும் இராதோ?...  வேறெதைச் சொல்வேன்?... நாணத்தை விட்டேனில்லை!...

இராமன் :
நாணத்தைத்தானே ?... நானதனைத் தானே விரட்டுகிறேன், நங்கையே!...

(இராமன் அணைக்கிறான்-
சீதை மெய்சிலிர்க்கிறாள்...)

சீதை :
நாதா, நாளெல்லாம் என்னிடத்தில் நல்லன்போடு நீங்கள் திகழ்ந்தால் போலும்... எனக்கு வேறெதுவும் வேண்டாம்!...

இராமன் :
சீதா, அரசாளுதலும், அரண்மனையின் சுகபோகமும் நிலயாகுமோ?... அன்பும், அழகும் கொண்ட மனைவியே, நீ என்னைவிட்டு என்றைக்கும் நீங்கா வாக்கினை மட்டும் கொடு!... இதுவே, எனது சுகபோகம்!...

சீதை :
கனவிலும் நான் உங்களைவிட்டு நீங்க மாட்டேன்... நீங்கள் பொழியும் அன்புதான் எனது வாழ்க்கை!...

இராமன் :
ஆகா!... சீதா, எத்தனை எத்தனை அன்பு உனக்கு என்மீது!... இதை அறியா, பாவியானேனே, நான்!... என்னை மன்னித்துவிடு சீதா!...

சீதை :
மன்னா!...

இராமன் :
சீதா, உன் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?... என்னையே, உனக்குக் கொடுத்துவிட்டேன்... நீதான் எனது வாழ்க்கை!...  சீதா, அறிந்தோ, அறியாமலோ அடுத்தப் பெண்களை நான் நாடி, பெருமை இழந்தேன்... இனி அடுத்தவள் எவளையும், நான் ஏறெடுத்தும் பாரேன்... எனது அன்பே!... சீதா, உனது அன்புதான் எனக்கு சொர்க்கம்!... 

சீதை :
நாதா!... பேதைநான் தங்களிடம், கடுமொழிப் பலப் பேசியுள்ளேன்... என்னையும் மன்னியுங்கள், பிரபு!... ஆருயிரே நீர்தான் எனது சொர்க்கம்!... இனியொரு மறுமொழியோ, எதிர்மொழியோ தங்களிடம் பேசமாட்டேன்... அடைமழையென்ன... சுடுவெயிலென்ன... கடுங்குளிரென்ன... இனி உங்கள் வாக்குதான் எனது வேதவாக்கு!...

இராமன் :
இது போதும். தேவி!... இது போதும் தேவி!...  வைதேகியே!... திருமகளே!... மலர்மகளே!... பூங்கொழுந்தே நீதான் எனது செல்வம்!... நமது வேதம் காட்டும் வழியில் இனி நாம் வாழ்வோம்!... வேதத்தின் வழியே வாழ்ந்த வல்லரசி என்று சீதையே, உன்னைப் பார்ப் புகழும்!...

சீதை :
எனது வாழ்வும், சாவும் உங்களோடுதான் பிரபு!...

இராமன் :
மனைவி கணவனிடத்தில் வாழும் நெறியை, வேதம் கூறுகிறது... நீயறிவாயே!... 

சீதை :
அறிவேன், நாதா!...

இராமன் :
மனைவி வாழவேண்டிய நெறியை, மனுதர்மம் கூறுகிறதே... சீதையே, நீ அதனைக்கூறு!...

சீதை :
கணவன் விரும்புகிற விதத்தில் மனைவி அலங்காரம் செய்துக் கொள்ள வேண்டும்... கணவன் விரும்பி அழைக்கும் எந்த நேரத்திலும் கணவனோடு மனைவி படுக்க வேண்டுமென்று மனுதர்மம் கூறுகிறது!... இதை நான் இனி ஒரு போதும் மீற மாட்டடேன், பிரபு!...

இராமன் :
கணவன் கெட்டவனாக இருந்தாலும், அவன் பல பெண்களை அனுபவிக்கும் காமுகனாக இருந்தாலும்...

சீதை :
பதிபத்தினியாய் மனைவியானவள், கணவனைக் கண்கண்ட தெய்வமாக வணங்க வேண்டும்! பிரபு, இதை நான் மீற மாட்டேன்... தங்கள் அன்புதான் இனி எல்லாமும்!...

இராமன் :
சிறுவயதில் தந்தைக்குக் கட்டுப்பட்டும்-

சீதை :
திருமணத்திற்குப் பின்னர், கணவனுக்கு கட்டுப்பட்டு, கணவனது ஏவலுக்குப் பணிந்து, எதிர்ச்சொல் பேசாமல், கணவன் கூறுவதற்கு இணங்கி, மனைவியானவள் நடக்க வேண்டும்!... அல்லாமல்; மனைவியானவள் தன் சொந்தப் புத்தியின்படி வாழக்கூடாது என்று மனுதர்மம் கூறுகிறது!... மனுதர்மத்தை மீறுவது பாவமென்றும், மீறும் பெண்களுக்கு நரகமே என்றும் அறிவேன், நாதா!... 

இராமன் :
இதுபோதும் தேவி!... இது போதும் தேவி!... வைதேகியே!... சீதையே!... மலர்மகளே!... பூங்கொத்தே!... நீதான் சொர்க்கம்!...

( மரத்தின் பின் ஒளிந்திருந்த இலக்குவன், இப்போது , இவர்களின் அருகில் வருகிறான்...)

இலக்குவன் :
அண்ணா!

(இராமனும், சீதையும் நெருக்கத்திலிருந்து விலகுகின்றனர்...)

(இராமன் இலக்குவனை நோக்குகிறான்...)

இலக்குவன்
அண்ணா, நாமழிந்தோம்... நமது வம்சம் அழிந்தது... ஆரிய இனம் பூண்டோடு மாண்டது... அய்யோ... என்ன சொல்வேன்?... ஏது சொல்வேன்?...

(இலக்குவன் ஒப்பாரி வைத்து அழுகிறான்...)

இராமன் :
(பதற்றத்தோடு)
தம்பி!... என்ன... என்னவாயிற்று?...

இலக்குவன் :
அய்யோ... இன்னும் சிறுது நேரத்தில் நாம் சாகப்போகிறோம்...

இராமன் :
என்ன?

இலக்குவன் :
என்ன?

இலக்குவன் :
ஆமாம்!... அரக்கர் படை  அயோத்தி நோக்கிப் போகிறதாம்... மேலும் ஒரு படையுடன், நம்மைக் கொல்ல இங்கு வந்துக் கொண்டிருக்கிறானாம்... 

இராமன் :
அய்யோ...

இலக்குவன் :
இலங்கையிலிருந்து விந்தநாட்டுக்கு, கடலடிப் பாதை வழியாக, மிக வேகமாமாக வந்துவிட்டானாம்... தனது பரிவாரங்களோடு நம்மைத் தேடி திரிகிறானாம்; காட்டுக்குள் இப்போது!...

இராமன் :
தேவி, சீதா!... என்னச் செய்வது?... அரக்கன் இராவணன் கையில் சிக்கினால், புல்லை மிதிப்பதுப் போல, மிதித்துக் கொன்றுவிடுவான்... புழுவை நசுக்குவது போல், நசுக்கி சாகடித்து விடுவார்களே...

சீதை :
நாதா!... பயமாக இருக்கிறதே!...  ஏதாவது செய்யுங்கள்...

இராமன் :
பெரும்படையுடன் வருகிறானாம், இராவணன்!... 

சீதை :
நாதா, இங்கிருந்து தப்பித்து,, ஏதாவது புதருக்குள் ஒளிந்துக் கொள்வோம்!... வாருங்கள்...

இலக்குவன் :
முடியாது... அது முடியாது.... எங்கு தப்பியோடினாலும், நமதுத் தலை மயிர்கூட பிழைக்க முடியாது... நாம் வேட்டையாடுகிறோமே மிருகங்களை;  அரக்கர்களோ வேட்டையாட வருகிறார்கள், நம்மை!... வேரின் சிறு நுனியாய், மாறி ஒளிந்தாலும், ஒழிந்து விடுவோமே அரக்கர்களால்!... அண்ணா, தேடி வருகிறார்கள்... நாமெங்கே ஓடுவது?... கூறுங்கள் அண்ணா!... கொல்ல வருகிறார்கள் கொடியவர்கள்!...

(சீதை, தானே புலம்புகிறாள்...)

சீதை :
தெய்வமே!... பகவானே!... ஆண்டவனே!... நான் சாவதற்குமுன், எனது தந்தையையும், தங்கை தீங்குழலியையும், காண வேண்டுமென்று, துடியாய்த் துடித்து நிற்கிறேனே... தங்கையைக் காண வேண்டுமென்ற ஆசையால் அல்லவோ இன்னும் உயிரோடு இருக்கிறேன்... பகவானே!... தந்தையையும், தங்கையையும் காண்பதற்குள் எனக்கேன் இப்படியொரு சாவை ஏற்படுத்தினாய்... நாதா, வீரமரபல்லவோ, உங்கள் மரபு!... கோழையாய் நடுங்குவதும் சரியோ?... மழைத்துளிகள் கண்டு பெருங்கடலும் அஞ்சிடுமோ?... அரக்கர்த்தானே, வருகின்றனர்... ஆரியன் நீ அஞ்சலாமோ?... வாளெதற்கு?... உறையில் தூங்கவா!... கூர்முனை அம்பெதற்கு?... கூட்டில் உறங்கவா!... திண்ணியத் தோள்கள் எதற்கு?... பெண்ணினத்தோடு முயங்கவா!... பேசுங்கள், நாதா!... பேடியாய் மாறியதும் ஏனோ?... தாயே அஞ்சினால், குஞ்சின் நிலை என்னாவது?...  நீர் அஞ்சினால், நான் என்ன ஆவது?... அரக்கர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்... எனது தந்தையிடம் கொண்டுப் போய், சேர்த்து விடுங்கள்... என்னைக் காப்பாற்றுங்கள்...

(இராமனின் தாள்பிடித்துக் கெஞ்சி  கதறுகிறாள்...
சீதையைத் தாங்கிய வண்ணம்)

இராமன் :
என்னச் செய்வது என்று புரியவில்லை, சீதா!... ஆத்திரத்தில் அறிவிழந்து, காமவல்லியைக் கொன்றோம்... அதனாலன்றோ, இராவணன் பழி வாங்க வருகிறான்... அய்யோ... பயமாகிறதே; நினைக்கவே!...

இலக்குவன் :
வெட்டினோம் காமவல்லியை நாம் கண்டந்துண்டமாக!... வெட்ட வருகிறானே நம்மையும் அதேபோல!... எங்கோ பிறந்த நாம், இங்கு வந்து அரக்கர் மண்ணிலா சாகவேண்டும்?... இந்தக் கோரமான சாவுக்காகவா நாம் பிறவி எடுத்தோம்?... 

சீதை :
அப்போதே சொன்னேன்... உங்கள் வினையே உங்களுக்குப் பழியாயிற்று!... தீயோடு சூடு போல், உங்களோடு எனக்கும் பழியாற்று...

இராமன் :
சீதா, கேளாது  விட்டேன்; உன் பேச்சை!... இன்று அரக்கர்கள் கையில் மாளாது, மீள வழியுமில்லை!... வாருங்கள்... அரக்கர்கள் நம்மைக் கொல்லு முன்னர், நாம் ஆண்டவனைத் தொழுது, அவனடிப் பணிந்து இறந்து விடலாம்!... 

சீதை :
(ஒப்பாரி வைத்தல் )                     
அம்மம்மா... பெண்ணாய்ப் பிறந்த நான் பேயாய்ப் பிறந்திருந்தால், வீணாய் நெஞ்சில் பாசமும் இருக்காதே!... தந்தையையும், தங்கையையும் காண முடியாத பாவியானேனே!... நாதா, இராவணன் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள்... 'இனியொரு தவறு, இலங்கை வேந்தா, கனவிலும் செய்யமாட்டேன்' என்று கால் பிடித்துக் கெஞ்சுங்கள்... நாம் உயிர்ப் பிழைத்துப் போக ஒருவழி காணுங்கள்... அரக்கனென்று பாராமல், அவன் தாள் பணிந்து கண்ணீர் சிந்துங்கள்... எனக்கு, எனது தந்தையையும், தங்கையையும் காட்டுங்கள்.... காட்டுங்கள்...

இராமன் :
சீதா, உனக்காக இராவணன்  காலில் மட்டுமல்ல!... ஒவ்வொரு அரக்கன் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன்... ஆனால்; ஆரியர்கள் என்றாலே, அரக்கர்களுக்குப் பிடிக்காதே... நம்மை அழிப்பதுதானே அவர்கள் தாகம்!...  சின்ன வேள்வி நடத்திய ஆரியர்களை, தாடகை என்பவள் தாட்சண்யமின்றிக் கொன்றாள்... இராவணனும் ஆரியர்களை அழிப்பதில் வெறிப் பிடித்து அலைபவன்... அவனது தங்கை காமவல்லியை, நீ அறிவாயே!... ஆரியன் என்பதால்தானே, என்னை அவளும் காதலிக்க மறுத்தாள் - வெறுத்தாள் - கொல்லவும் முனைந்தாள்... நீ நினைப்பதுப் போல், மன்னிக்க மாட்டார்கள்; மண்டையைப் பிளப்பார்கள்... நாம் மாய்வது உறுதி!... மனதை தேற்றிக் கொள்... கடவுளை வணங்கி, கண்ணீரைத் துடைத்துக் கொள்!... 

சீதை :
தந்தையையும், தங்கையையும் நான் காண வேண்டுமே...  

இராமன் :
சீதா, ஒரேயொருவழி இருக்கிறது...

சீதை :
(ஆர்வத்துடன்)
சொல்லுங்கள், நாதா!...

(இராமன் சற்று தாமதித்து,  பின்னர் பேசுகிறான்...)

இராமன் :
சற்று முன்னர், எனக்கு நீ வாக்குக் கொடுத்தாயே!... "கணவன் மனதறிந்து நடப்பேன்" என்று?

சீதை :
(ஆர்வத்துடன்)
சொல்லுங்கள்... உங்கள் மனதறிந்து நடப்பதுதானே எனதுக் கடமை!... கூறுங்கள்!...

இராமன் :
சீதா, நானும் இலக்குவனும் அருகே உள்ள புதருக்குள், ஒளிந்துக் கொள்கிறோம்...

சீதை :
நான்?

இராமன் :
நீ இங்கே தனியாக இருக்க வேண்டும்!...

சீதை :
இருந்து?

இராமன் ;
இராவணன் நம்மைத் தேடி இங்கு வருவான்!...

சீதை :
வந்தால்?

இராமன் :
அவனை நீ மயக்க வேண்டும்!...

சீதை :
(அதிர்ந்து )
என்ன?

இராமன் :
ஆரியப்பெண்ணே!... நீ பேரெழில் கொண்டவள்... உனது மார்பழகுக் கண்டு,  மன்மதனுக்கும், போதையூறும்... சிறு இதழ் குவித்து, குறுநகை நீ புரிந்தால், நரைக்  கண்டக்  கிழவனுக்கும் நாடி உயரும்... இடையை நீ சிறுது அசைத்தால், பிணமும் சிலிர்ந்தெழும்... உனது தொடையழகில், தொன்னூறாயிரம் சொர்க்கம் இருக்குதடி... அதனை நீ அவனுக்குக் காட்டினால், உனதடியே தஞ்சமென்று வீழ்வான்... சீதா, இராவணனை நீ மயக்கி, அவனோடு போக வேண்டும்... 

(சீதை, கனல் கக்கும் விழியோடு கோபமாக)

சீதை :
தூ... வெட்கமாயில்லை... கட்டிய மனைவியை அடுத்தவனுக்கு, விட்டுக் கொடுத்துப் பிழைக்கத் துடிக்கிறாயே... பசியாகும் போது, உன் கண்ணை நோண்டி சாப்பிடுவாயா?... காமமூறும்போது, உன் தாயோடும் படுப்பாயா?... தூ... வெட்கமாயில்லை... சொன்ன நாக்கு அழுகி நாசமாகட்டும்... தூ....

இலக்குவன் :
சீதா, ஆத்திரம் படாதே!... கணவன் சொல்வதைக் கேள்!...

சீதை :
தூ... தம்பியாகவும், காமமூறும்போது தாரமாகவும் மாறும் மானங்கெட்டவனே... பேசாதடா...

இராமன் :
சீதா, நான் சொல்வதைக் கேள்!...  இராவணனை மயக்கி, அவனை உனது வலையில் விழவைத்து, இலங்கையின் அதிகாரபீடத்தை உன்னுடையதாக்கிக் கொள்... இதுதானே எனதுத் திட்டம்!... இதைப் புரியாமல் ஏனடிக்கிறாய் கொட்டம்?... இலங்கையின் அதிகாரபீடம் உன்னுடையதானால், கொஞ்ச நாளில் இராவணனை செல்லா முத்திரையாக்கிவிடு!... எங்கும், எதிலும், உனது அதிகாரத்தைக் காட்டு... நீ, இலங்கையின் மகாராணியாய், முடிசூடிக் கொண்டால், அந்தப் பெருமைமிகுக் காட்சியை, கற்பனையில் காணவே பெருந்தவம் செய்திருக்க வேண்டும்... நீ, இலங்கையின் மகாராணியானப் பிறகு, உன் மூலம் அயோத்தியை வென்றுவிடலாம்... ஆகா... இரண்டுக்குமே, நீதான் பேரரசியாவாய்... நாடற்ற நமக்கு, பலநாடுகள் கிட்டினால், ஆரிய இனம் வளமோடு வாழுமே... சிந்தித்துப் பார்... சீதா, பெண்ணால் பல பேரரசுகள் வீழ்ந்த வரலாறு உண்டு!... பெண்களால் பல சாம்ராஜ்யங்கள் பிடிபட்ட வரலாறும் உண்டு!... பெண் மயக்கத்தில் முடிதுறந்த அரக்கர்கள் ஏராளம்... பெண்களைப் போற்றும் குணம் அரக்கர்களிடம் உண்டு!... அதனால்; இராவணனை நீ எளிதில் மயக்கிவிடலாம்... 

சீதை :
சி...

இராமன் :
ஆத்திரம் படாதே!... சீதா, என்னுடையத் திட்டம் வெற்றிப் பெற்றால், ஆரிய இனத்துக்கே புதுவாழ்வு மலரும்...  உன்னை இராவணனிடத்தில் மயங்க சொன்னேனா?... அவனை மயக்கச் சொன்னேன்...

சீதை ;
அவனை நான் மயக்குவதா?...  நாதா, சிந்தித்துத்தான் பேசுகிறீரா?... அவன் என்னை சூறையாடிவிட்டால்?...

இராமன் :
தவறில்லை!... முனிவர்களை ஏமாற்றி நமது தெய்வங்கள், முனிவர்களின் மனைவியை சூறையாடவில்லையா?... சூரையாடப்பட்டவள் என்று தெரிந்தும், முனிவர்கள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்திருக்கிறார்கள்... ஆரிய இனத்தில் இது ஒன்றும் புதிதல்ல!... நீதான் ஏதோ செய்யக்கூடாத ஒன்று என்பது போல் பேசுகிறாய்... அவன் உன்னை சூறையாடினாலும், ஒரு சொம்பு ஜலத்தில் நீ புனிதமாகி விடுவாய்... நாங்கள் பிறப்பதற்காக, எங்கள் தந்தையார், தனது மனைவிமார்களை, முனிவர்களுக்கு விட்டுக் கொடுக்கவில்லையா?... முனிவர்கள் கூடி எங்கள் தாயாரை சல்லாபித்தப் பிறகுதான்  நாங்கள் பிறந்தோம்... ஆரியன் வாழ, எதையும் சாதகமாக்கிட வேண்டுமென்று, மனுதர்மம் கூறுகிறது...

சீதை :
எனது முந்தானையை அடுத்தவனுக்கு விரித்து, அதில் உயிர்வாழ 

இராமன் :
சீதா, நிறுத்து!... இந்த முந்தானை ஒரு தெய்வீகப் பொருளல்ல!...  கணவனது மனதறிந்து நடக்க வேண்டும்... அதுதான் தெய்வீக நெறி!... சற்று முன்னர் நீ கொடுத்த வாக்கை மறந்து விட்டாயா?...

              ( குரல் :
                திருமணத்திற்குப் பின்னர், கணவணுக்கு கட்டுப்பட்டு,
                கணவனது ஏவலுக்குப் பணிந்து, எதிர்ச்சொல் பேசாமல்,
                கணவன் கூறுவதற்கு இணங்கி மனைவியானவள் 
                நடக்க வேண்டும்... அல்லாமல்; மனைவியானவள் தன்                                                  சொந்தப் புத்தியின்படி வாழக்கூடாது என்று மனு தர்மம்                                                கூறுகிறது... மனு தர்மத்தை மீறுவது பாவமென்றும்,
                மீறும் பெண்களுக்கு நரகமே என்றும் அறிவேன் நாதா)

இராமன் :
கணவன் சொல்படிதான் மனைவி நடக்க வேண்டும்... அதுதான் மனுநீதி!... 'மயிலே, மயிலே இறகு போடு' என்றால் நீ இணங்க மாட்டாய்!... இன்னும் கொஞ்ச நேரத்தில், இராவணன் தனது பரிவாரங்களோடு, இங்கு வந்து விடுவான்... தம்பி, வா!... நாம் போய் ஒளிந்துக் கொள்வோம்... சீதா, நீ இராவணனை மயக்கி அவனோடு போக வேண்டும்... இல்லையென்றால், உன்னைக் கொன்றுவிட்டு, உனது தங்கை தீங்குழலியையும் கொன்று விடுவோம்...

(சீதைத் துயரம் தாங்காது மரம் சாய்கிறாள்...)

இலக்குவன் :
கணவன் மனதுக்கு விரோதமாய் நடந்தால், நீ நரகத்தில் தள்ளப்படுவாய்... கொதிக்கும் எண்ணெய்யில் இட்டு வேக வைப்பார்கள்... உன்னை செக்கிலிட்டு அரைப்பார்கள்...

இராமன் ;
ஏய், அவனை நீ மயக்கி அவனோடு போகவில்லையென்றால், உனது குலத்தையே நாசமாக்கி விடுவேன்... 

(சீதை மயக்கமுற்று சாய்கிறாள்...)

இராமன் :
தம்பி, நாம் இங்கிருந்து நகர்ந்தவுடன் இவள்...

இலக்குவன் ;
தப்பித்துவிடுவாளா?


இராமன் :
உயிரை மாய்த்தாலும் மாய்த்து விடுவாள்... நமது எண்ணம் ஈடேறாது...

இலக்குவன் :
எனவே?

இராமன் :
இவளை மரத்தோடுக் கட்டு!... 

( மயங்கிய நிலையில் இருக்கும் சீதையை,  மரத்தொடுப் பினைத்து, கயிறுக் கொண்டு  கட்டுகிறார்கள்...)

                                 - திரை -





பாகம் :2.              காட்சி : 7.                  காடு.

இராவணன் 
கரன்.

( இராவணன் மரத்தடியில் நடையிட்டு இருக்க-
கரன் வருகிறான்!)

கரன்:
மன்னா!

(இராவணன் 'கூறு' என்பது போல், பார்வையை கரன் மீது பதிக்கிறான்...)

கரன் :
எண்திசையும் எமது வீரர் அனுப்பப்பட்டனர்... இடைவளநாட்டிலும், பஞ்சவடியிலும் இராமன் இல்லையென எமது வீரர்களால் தகவல் வந்துள்ளது... விந்தசாரலின் தென்பகுதி, குடபகுதி நாடுகளான இயக்கர் நாட்டுக்கும், நாகர் நாட்டுக்கும் செய்தி அனுப்பப்பட்டு, இராமனைத் தேடும் பணித் தொடங்கப்பட்டு விட்டது...  தண்டவனத்திலும், சித்திரக்கூடமலை எல்லை நெடுகிலும், காவல் அதிகரிக்கப் பட்டுள்ளது... கிட்கந்தகம் எல்லையை கண்காணித்திடவும், இராமன் அகப்பட்டால் சிறைச் செய்யவும் வாலிக்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது... கோதையாற்றுப் பகுதியும், விந்தசாரலின் காடும் நமது தேடுதலுக்கு ஆட்படுத்தப்பட்டு, பணி நடந்துக் கொண்டிருக்கிறது... இராமன் தப்பிக்கவோ, பதுங்கிப் பிழைக்கவோ வழியே இல்லை... 

இராவணன் :
ஆகட்டும் பணி!... ஆரியமா?... தமிழினமா?... வாழ்வா?... சாவா?... இதுதான் தமிழினத்தின் கேள்வி, கரன்!...

கரன் :
தமிழினத் தலைவா!...

இராவணன் :
மண்ணை அகழ்ந்து, மறுகோடி சென்றால்தான், மாய ஆரியம் வீழும் எனில் மாவீரனே, தயங்காதே!... நேர்நின்றுப் போர்ச் செய்யும் தீரர் அல்லர்; ஆரியர்!... ஆரியத்தை இன்று நாம் அழிக்கவில்லையென்றால், நாளை எதிர்வரும் தமிழினம் நாசமாகும்!... நாளையத் தமிழர் தமது தன்மானமிழந்து, மரியாதையிழந்து, சுயசிந்தனையற்று நடைப் பிணங்களாய் தமிழின் பெருமை அறியாது, தன்மானமிழந்து வாழ நேரிடும்... நாளையத் தமிழரின் நல்வாழ்வு களங்கமாகாதிருக்க, இன்றே நாம் ஆரியத்தை அழித்தாக வேண்டும்!... இல்லையேல், தமிழ் மொழி நீசமொழியாக்கப்படும்... பிறந்த மண்ணிலேயே உரிமையிழந்து, அடிமைகளாய் எம்தமிழர் வாழிட நாம் வழிகோலுதல் போலாகும்; வாளாவிருந்து வந்தேறிகளைத் தடுத்திடோமெனில்!... கரன்!

கரன் :
வேந்தே!... 

இராவணன் :
இராமனையும், இலக்குவனையும்  கொன்றுவிட்டு, அதே நாழிகையில் அயோத்தி செல்கிறேன்... இனமானங் காக்க, சென்றுள்ளானே சேயோன்!... அவனோடு நானும் அயோத்தியின் மதில் தகர்த்து,  ஆரிய மமதையை சிதைத்து வருகிறேன்... நாடோடிகளாம் ஆரியர், அயோத்தியை தங்கள் வசமாக்கி, அங்கிருந்து நச்சரவமாய், நாலு திக்கும் பரவுகின்றனர்...  நூறாண்டுப் போனாலும் வாழும் அறிஞர் கூற வேண்டும்; தமிழினம் தலைவணங்கா இனமென்று!... நாளைப் பிறக்கும் தமிழ்ப்பூவும், வீரத்தில் புலியாகத் திகழ வேண்டும்... கோழையர் அல்லர் தமிழர்... கொள்கையில் வீரர் என்றே எத்திக்கும் தெரியட்டும்... ம்... புறப்படு... இராமன் , இலக்குவனைத்  தேடிக் கொணருங்கள்!...

கரன்:
அப்படியே, வேந்தே!...

           ( கரன் செல்லுகிறான் )
                                                          - திரை -




பாகம் : 2.                      காட்சி : 8.                    காடு.

இலங்கைவீரர் இருவர்.
இராமன் .
இலக்குவன்.


(அடர்ந்த உரோமங்கள் படர்ந்திருக்கும், கருமந்திகள் போன்று வேடந்தரித்திருக்கிறார்கள் இராமனும், இலக்குவனனும்!...

அப்போது வீரர் இருவர் வரும் சஞ்சாரத்தை உணர்ந்தவுடன், மந்தி  உருவில் 
இருக்கும் இராமன், இலக்குவன் இருவரும் தாவியோடி, மரத்தின் பின் ஒளிகிறார்கள்...) 

*** மனிதக் குரங்குத் தோற்றத்தை, நிழற்காட்சியாகவோ அல்லது மெல்லிள 
ஒளியிலோ நிகழச்செய்தல் வேண்டும்...***

வீரன்  (1) :
அதோபார்... 

வீரன்  (2) :
கவனித்தேன் நானும்!... கருமந்திகள் இரண்டு நம்மைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொண்டன... 

வீரன் (1) : அதோ பார்... உனக்குத் தெரிகிறதா?... வா... இப்படி நின்றுப் பார்... மந்திகள் இரண்டும் கூடிக் களிப்பதை!...

(வீரன் (1) சுட்டிக்காட்டியத் திசையில் வீரன் (2) பார்த்து...)

வீரன் (2) :
என்ன விந்தை!... மனிதர்களைப்போன்றுதான் கூடுகின்றன...

வீரன் (1) :
தோற்றத்தில், இந்தக் குரங்குகள், மனிதர்களைப் போல் இருந்தாலும், கோபத்தில் மூர்க்கமானவை!... அதோ... அவைகள் புணர்ந்திருக்கும் போதில், தடையாய் நாம் ஏதும் செய்தால் தாக்கிவிடும்...

வீரன் (2) :
ஆமாம்; நானும் கேள்விப்பட்டதுண்டு!...

வீரன் (1) :
என்ன விந்தை?... உருவத்தில் வேறுபாடு இருந்தாலும், உயிரினங்களின் உணர்ச்சிகளில்தான் எத்தனை ஒற்றுமை!... பகுத்தறிவு மானிடருக்கு மட்டுமே உரியது என்றாலும், பகுப்புணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாகவே இருக்கிறது... சரி;... நாம் போவோமோ?...

வீரன் (2) :
ஆமாம்; செல்வோம்!... இன்பப் புணர்ச்சியில் ஈடுப் பட்டிருக்கும், குரங்குகளுக்கு நமதுப் பார்வைத் துன்பமாய்ப் படலாம்...

வீரன் (1) :
மானிடர்களாயினும், குரங்குகளாயினும், இந்த உறவு அந்தரங்கமானது!... இங்கே நாம் பார்ப்பதேத் தவறு!... வா; போகலாம்...

( வீரர் இருவரும் செல்லுகின்றனர்...)

(வீரர்கள் சென்றப் பின்னர், குரங்கு வேடங் கொண்ட இராமனும், இலக்குவனும் பதுங்கியபடியே பாறையருகே வருகிறார்கள்...)

இலக்குவான் :
அண்ணா!... நாம் பிழைத்தோம்...

இராமன் :
சத்தமாகப் பேசாதே!... தம்பி, மந்திகளைக் கொன்று, அவற்றின் தோலுரித்து, நாம் தரித்துக் கொண்டிருக்கிறோம்... அரக்கர்களோ, நம்மைத் தேடித் திரிந்துக் கொண்டிருக்கிறார்கள்... நம்மை இப்போது காப்பாற்றுவது இந்த மந்தி வேடம்தான்!... வேடம் சிறுது கலைந்தாலும், தமிழ் மூடர்களால் கொல்லப் பட்டு விடுவோம்... கேடு சூழ்ந்து விட்டது நம்மை!... நமதுநிலை இப்போது நெருப்பில் சிக்கிய, பாம்பின் நிலை... என்னச் செய்வது?...  

இலக்குவன் :
அண்ணா!... எனக்கென்னவோ, மனதில் திகிலாகவே உள்ளது... இங்கே இருந்தால், அரக்கர்கள் கொன்று விடுவார்கள்... அயோத்தித் திரும்பிவிடலாம் என்றாலோ, அங்கேயும் நமக்கு ஆபத்து!... ஒருபுறம் நெருப்பு!... மறுபுறம் வெள்ளம்!... நாம் என்ன செய்வது?... நமக்கேன் இந்த நிலை?... இந்திரா!... தேவாதி தேவனே!... ஆரியகுமாரர்கள் அல்லற்படுவது சரியோ?...  ஆபத்தின்றிப் பிழைக்க வழியேயில்லையா?...

இராமன் :
இருக்கிறது!...

இலக்குவன் :
இருக்கிறதா?.... நான் கேட்டது ஆண்டவனின் அருள்வாக்குத்தானோ?... 

இராமன் :
இல்லை!... என் வாக்குதான்!... வாய்மூடி நான் பேசுவதைக் கேளு!... நாம் இதே வேடத்துடன் மெல்ல மெல்ல இந்த எல்லையைக் கடக்க வேண்டும்...

இலக்குவன் :
கடந்து?

இராமன் :
கிட்கந்தகம் போவோம்...

இலக்குவன் :
கிட்கந்தகமா?


இராமன் :
ஆமாம்!... அங்கே இரிசியமுகன் எனப்படும், ஆரியமுனிவன் வசிக்கிறான்... 

இலக்குவன் :
அய்யோ... இரிசியமுகனா?... அவன் தசரதனது தோழனாயிற்றே... பரதனுக்குப் பக்கத் துணையாய் நின்று அரசியல் கற்றுத் தந்த வித்தகனாயிற்றே... பல தேசங்களில் ஒற்றனாய்ப் பணியாற்றி இனியவன் இரிசியமுகன் என்று நற்பெயர் பெற்றவனல்லவா அவன்...  தசரதனைக் கொன்ற நாம், அவனிடத்தில் தஞ்சமெனச் சென்றால், தசரதனைக் கொன்றமைக்காக முனிவன் நம்மை கொல்லமாட்டானா ?

இராமன் :
மாட்டான்...

இலக்குவன் :
மாட்டானா?... 

இராமன் :
ஆரியமுனிகளை நானறிவேன்... அவர்கள் மனதை மாற்றவும் நானறிவேன்... திகைப்பேனடா இலக்குவா!... திட்டம் வகுத்துள்ளேனடா நான்... பயமேனடா உனக்கு?... இனி பயணம் நோக்கித்தானடா...

இலக்குவன் :
கிட்கந்தகமும் அரக்கன் இராவணன் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதித்தானே?... அங்கும் அரக்கர்தானே வாழ்கின்றனர்... இங்கு நம்மை அரக்கர்கள் தேடுவதுப் போல், அங்கும் அரக்கர்கள் நம்மைத் தேட மாட்டார்களோ?...

இராமன் :
கிடைத்தால் நம்மைப் பிடித்துக் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் கிட்கந்தக ஆரியர்களும்!... ஆனால்...

இலக்குவன் :
ஆனால்?

இராமன் :
அங்குள்ள அரக்கர்களால், ஆரியர்களுக்கு ஆபத்துக் குறைவு!... அங்கே வாலிக்கும், சுக்ரீவனுக்கும் தீராதப் பகை!... அதனால் ஆரியர் நாம் நேராய் போகலாம் உள்ளே!... கேட்பாரும் இல்லை; காண்பாரும் இல்லை; தடுப்பாரும் இல்லை!... நகர எல்லையைவிட்டு நகர மாட்டான் வாலி!... காட்டிலிருந்து நாட்டுக்குள் போகவும் மாட்டான் சுக்ரீவன்... மீறிச் சென்றால், ஒருவரால் பிறிதொருவருக்கு ஆபத்து!... இருவர் நிலைமை இப்படியிருக்க, எமது நிலையோ கொண்டாட்டம்!... வாலியைத் தூற்றி, சுக்ரீவனைப் போற்றி காட்டுக்குள் வாழும் ஆரியமுனிவர் ஆயிரம்!...

இலக்குவன் :
ஆரியர் என்றாலே, அரக்கருக்குப் பிடிக்காது... சுக்ரீவனைப் போற்றி நின்றால், நாம் காட்டில் வாழ இடந்தருவானோ?... சுக்ரீவனும் அரக்கன்தானே?... உன் பேச்சில் இந்த விந்தை ஏனோ?... புரியவில்லையே எனக்கு எதுவும்!...

இராமன் ;
கிட்கந்தகத்தில் தமிழ்க் கற்றுத்தரும் கல்விச்சாலைகள் உள்ளன... அங்கு, தமிழ்ப்பயில அந்நிய தேசத்தவரும் வருவார்களாம்... தமிழ்க் கற்க வந்தவனும் தமிழனாய் தன்னை மாற்றிக் கொண்டு, கிட்கந்தகத்திலேயே வாழ்வானாம்...

இலக்குவன் :
ஏன்?...

இராமன் :
தமிழொழுக்கம் அவர்கள் மனதைக் கவர, அதன்படி வாழ்வதுதான் 

இலக்குவன் :
தமிழ் ஒழுக்கத்தின்படி வாழ்வதா?...

இராமன் :
ஆமாம்!... புலால் உண்ணாதிருப்பது, மிருகங்களைக் கொல்லாதிருப்பது தமிழ்ப்பண்பாடாம்!... 

இலக்குவன் :
(சிரித்து )
மூடர்கள்... ம்... சொல்லுங்கள்!...

இராமன் :
கிட்கந்தகத்தில் தமிழ்க் கற்றுத் தேறிய ஆரிய முனிகள் பலர் அங்குண்டு!... அவர்களுள் ஒருவன்தான் இரிசியமுகன்... அவனும் ஒரு  குடிலமைத்து, குடிவரும் ஆரியர்களுக்கு தமிழ்க் கூறி வருகிறான்... 

இலக்குவன் :
ஒரு ஆரியமுனிவன்,  தமிழ்நெறிக்கு தன்னை அடிமையாக்கிக் கொள்வதா?... அக்கிரமம்!... இது ஆரியத்துக்கு எதிரான ஒன்றல்லவா?... தெய்வமொழியாம் ஆரிய மொழியிருக்க, தேவடியாள் மொழியாம் தமிழைப் போற்றுவதா?

(இலக்குவன் கத்துகிறான் )

இராமன் :
மூடனே,... ஆரியன் என்ன மூடனா?... தமிழைப் போற்ற?...  அறிவில்லையா தமிழ்நெறியைப் பின்பற்ற?... பொய்க்குழி மீதில் சிறுபுல் வேய்ந்து புள்ளிமானை கள்ளமாய்க் கொள்வதுண்டல்லவா?... அதுபோல்தான் தமிழ்ப் பயில்வதுப் போல், தமிழுக்கேக் குழி வெட்டுவதுதான் ஆரியமுனிகளின் வேலை!... இதனை அறியாமல் நீயேன் அனத்துகிறாய்?... அதற்காகவே, மன்னன் தசரதன் அனுப்பினான் ஆரியமுனிகள் பலரை, கிட்கந்தகத்துக்கு!...

இலக்குவன் :
அப்படியா?...

இராமன் :
ஆமாம்!... வெயிலின் எதிரில் சுடரும் வெறுங்கல்!... அதுப்போல் எமது ஆரியரும், அரக்கர் எதிரில் போற்றுவர் தமிழை; ஆகா ஓகோவென்று!... வெயில் நீங்க, சுடரும் கல் வெறுங் கல்லாகும்!... அரக்கர் நீங்க, போற்றும் ஆரியர், தமிழைத்  தூற்றுவர்... தமிழ் மண்ணிலேயே தமிழை அழிப்பதுதான் ஆரியர்ப் பணி!... நாம் இரிசியமுகன் குடிலுக்குள் நுழைந்துவிட்டால், குடிலுக்குள் எந்த அரக்கனும் வரமாட்டான்... தமிழ்க் கல்விக்கூடங்களின் மீது அரக்கர்களுக்கு அய்யமில்லை... மாறாக நேசமிருப்பதுண்டு!... நேசத்தை நாம் நமக்கு, சாதகமாக்கி, அவர்களை மோசமாக்குவோம்... ஆரியனென்றாலும், தமிழ்ப் பயில வந்தால், அன்போடு வரவேற்பார்கள் அரக்கர்கள்... அவர்களது அன்பைக் கொண்டு, அவர்களையே துன்பத்தில் ஆழ்த்துவோம்...

இலக்குவன் :
நீயன்றோ  ஆரியன்!...
நீயன்றோ ஆரியக்காவலன்!...
நீயன்றோ ஆரியத்தின் நாயகன்!...
ஆகா!... வாருங்கள் போவோம் கிட்கந்தகம்!...

(இலக்குவன் நடையிட-)

இராமன் :
நில்லடா!... நீயோ மண் பிண்டமடா!...

இலக்குவன் :
அண்ணா!...

இராமன் :
அவளை மரத்தோடு கட்டிவைத்து வந்தோமே?

இலக்குவன் :
சீதையையா?

இராமன் ;
அவளைப் பற்றி சிந்தித்தாயா?... அவள் என்னவானாள்?... அரக்கர்களின் கண்ணில் பட்டாளா?... சோகம் கலைத்து மோகம் ஊட்டினாளா?... தாகம் கொண்டு அரக்கர்கள் அவளைத் தூக்கிச் சென்றனரோ, இராவணனிடத்தில் என்றறியோம்... ஏந்திழை எனது சீதையைக் கண்டு இராவணனும் ஏக்கம் கொண்டானா என்றறியோம்!... கரடி ஏதும் அவளைக் கண்டு, புணர்ந்து சென்றதோ?... வேறு மிருகம் கண்டு பயந்தாளோ?...

இலக்குவன் :
உன்னையும், என்னையும் கண்டுதான் பயப்படுகிறாள்... மிருகத்தைக் கண்டு அவள் பயந்ததாகத் தெரியவில்லை...

இராமன் :
அடேய், மூடா!... அவள் என்னவானாள் என்று நீ யோசித்தாயா?... 

இலக்குவன் :
எனக்கென்று தனி யோசனை ஏதண்ணா?... நீதான் நான்!... நான்தான் நீ!...

இராமன் :
மரத்தோடு கட்டுண்ட சீதை மயக்கினாளா அரக்கனை!... அல்லது; மாய்ந்தாளா என்பதை நாமறியோம்... மாயையானது பெண்ணினம்!... பெண்களை நம்புவதும், பாம்பைத் தீண்டுவதும் ஒன்றடா... பெண் அவள் இன்பம் தரும் பெட்டகம்தான் என்றாலும், துன்பத்தின் ஊற்றும் அவளே!... பெண் அவளொரு போகப்பொருள்!... அதன்பொருட்டே பெண்ணை பிரம்மன் படைத்தான்... பெண்கள் ஆண்களுக்கு நிகராக மாட்டார்கள்... பொழுதொரு நிறம் மாறும் பூக்கள்தான் பெண்கள்!... இடி விழுந்தாலும் நிலைக்குலையாதவர்கள் ஆண்கள்!... மனதில் கொள்ளடா!...

இலக்குவன் :
ஆமாம்! பெண்களை நம்பி கெட்ட தசரதனே இதற்கு சான்றாவான்!...

இராமன் :
சீதை, என்னவானாள்?... இராவணனது சித்தம் மயக்கினாளா?... அல்லது; அவள் சித்தம் இழந்தாளா?... நாமறியோம்!... பாவையவள் இராவணனை, கைப்பாவையாக்கினாளா?... அல்லது; பாவியவள் கணவன் என்னைக் காட்டிக் கொடுத்தாளா என்றறியேன், நான்!... காரிகையவள் நீர் வார்த்தாளா? நம் வாழ்வுக்கு நச்சு வார்த்தாளா அறியவில்லை!...

இலக்குவன் :
அவளும் பெண்தானே!... பெண்ணை நம்ப வேண்டாம் என்றுச் சொல்லிவிட்டு நீயேன் பித்தனாய் உளறுகிறாய்?... கிடக்கிறாள் சீதை!... அவளொரு மூதேவி!... அவளை எண்ணி ஏனிங்கு மனத்துயர்க் கொள்கிறாய்?...

இராமன் :
மூடனே!... மனத்துயரல்லடா!... வாய் மூடி நீ மவுனமாய் இரு!... என் வாய்க் கிளறி மரணந் தழுவாதே!... என் மனதில் பூத்த அந்தத் திட்டம், நாளை இந்த மண்ணில் ஒரு பிரளயம் செய்யும்!... இதை உணராமல், ஏன் நீ எனை சாடுகிறாய்?... சிந்தனைச் செல்வன் நான்!... என்னை நீ நிந்தித்தல் செய்யாதே!...

இலக்குவன் :
நீயன்றோ சிந்தனையாளன்!... நீயன்றோ இராமன்!...

இராமன் :
இராவணன் இவளைக் கட்டிப் பிடிக்க, அவள் இவனைக் கட்டிப்பிடித்து இச் இச்சென்று ஈராயிரம் முத்தங்கள் பரிமாறிக் கொள்ளட்டும்... என்னை அவள் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் போதும்... சரி; நீ போ!...

(இலக்குவன் போகிறான்)

இராமன் :
அடேய், மூடா!... போவது எங்கேடா?...

இலக்குவன் :
போ என்றாய்; போகிறேன்!... 

இராமன் :
அதுதான் எங்கே என்கிறேன்?... மூடனே, மண்பிண்டமே சீதையிருந்த இடத்துக்கு போடா!... அவள் அங்கு இருக்கிறாளா?... இல்லையா... என்று பாரடா!... அவளை அரக்கர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பாரடா!... பாவியவள் செயலையும் யாரும் பார்த்திடா வண்ணம் பார்த்திடு!... அரக்கர் கண்ணில் நீ பட்டால், அறிவில்லா முண்டமே, உன்னோடு நானும் நாசமாகிவிடுவேன்... நினைவில் கொண்டு, நிகழ்வதைப் பார்த்திடு!... வேடம் கலையாமல் உன்னையும் காத்திடு!...

இலக்குவன் :
ஆகட்டும், அண்ணா!...

(இலக்குவன் போகிறான் )

                                                     - திரை -


பாகம்   :2.              காட்சி : 9.       காடு.

இராவணன்.
கரன்.
*ஆரியவீரர்.
இடும்பன் 

*(இராமனுக்கு தூதுரைக்க வந்து, பின்னர் அஞ்சி ஓடிய ஆரியவீரர்கள்)

(இராவணன் பாறைமீது கால் வைத்து, முழந்தாள் மீது கையூன்றி,... ஊன்றப்பட்ட கை முகம் தாங்கிட, சிந்தனையுற்று இருக்கிறான்)

( கை விலங்கிட்டு இரு ஆரியவீரர்களை கரன் அழைத்து வருகிறான்...)

கரன் :
தமிழினத் தலைவா வாழி!...  ஆரியர்கள் இவர்கள் எமது வீரர்களால் பிடிப்பட்டனர்...

( இராவணன் ஆரியவீரர்களை நோக்குகிறான்...)

கரன் :
சிருங்கவேற்புரம் எல்லையைக் கடந்தோடிய இவர்களை இடும்பனும் இளஞ்செழியனும் விரட்டிப் பிடித்தனர்...

(இராவணன் ஆரியரை நெருங்கி, உற்று நோக்கல் )

கரன் :
அயோத்திலிருந்து வந்தனராம்; இராமனுக்கு தூதுரைக்க!...

(இராவணன் ஆரியவீரகள் மீதிருந்த பார்வையை நீக்கி, கரனை நோக்குகிறான்)

கரன் :
இவர்கள் தூதுரைத்ததாகச் சொல்லப்பட்ட இடத்துக்கு, இடும்பனும் இளஞ்செழியனும் சில வீரர்களோடு சென்றுள்ளனர்... அங்கு, இவர்கள் கூறியப்படி இராமன், இலக்குவன், சீதையிருந்தால் சிறைச் செய்து வர அனுப்பியுள்ளேன்... 

(ஆரியவீரர்களை நோக்கி)

கரன் :
ஆரியவீரர்களே, கூறிவிடுங்கள் நீவிர் இங்கு வந்தக் கூற்றினை!... தூதுவர்தாம் என்று நீவிர் கூறியதையே கூறி  நின்றால், வேறு முறையில் யாம் விசாரிக்க நேரிடும்... வாய்வைத்து உறிஞ்சிக் கடல்நீரை வற்றச் செய்வேன் என்றுச் சொன்னால் ஆரியர் நம்பலாம்... சிந்தையிற் சிறந்த யாம், உமது பொய்க் கூற்றினை ஏலோம்... ஏனின்னும் மவுனம்?... ஏரி நெருப்பில் எண்ணெய் வார்த்தற் போல், துடிக்கும் எமது உள்ளத்தை சூடாக்குகிறது உமது மவுனம்... கூறுகக் கூற்றினை!...

(கரன் தொடர்ந்துப் பேசுகிறான்)

கரன்:
இராமனுக்கு தூதுரைக்க வந்தவர்களா அல்லது இராமனது தூதுவர்களா?... அத்துமீறி இங்கு நுழைந்து சித்து வேலை செய்கிறீர்களா?... இடியோசை, யாழிசையாகுமோ?.. ஆரியர் உமது வரவிலே அன்பும் இருக்குமோ?... சித்தம் இழந்தவர் போல் நீவிர் சலனமற்று இருப்பதன் காரணமென்ன?... எமது விசாரிப்பு முறை தவறு என்பதாலோ?...

(பேசியப்படியே கரன், இரு ஆரியர் நெஞ்சின் மீதும் மின்னலென தனது கால்களை வைத்து உந்த, இருவருமே பந்தென எம்பப்பட்டு, தரைமீது தொப்பென விழுகிறார்கள்...)

(இருவர் மார்புமீதும் கரன் கால்வைத்து நின்று...)

கரன் :
உண்மையைச் சொல்லாது இருந்தால், உம்மிருவரையும் கொல்லாது விடமாட்டேன்...)

( பாதத்தால்  கழுத்தில் நசுக்க, இருவரும் மூச்சுத் திணறித் துடிக்க-
இராவணன் கரன் தோள் மீதுக் கை  வைத்து, 'பொறு, சற்று ' என்பது போல் சைகைக் காட்ட, கரன் விலகி நிற்கிறான்...)

வீரன் (1)  :
மன்னா, தூதுரைக்கவே நால்வர் வந்தோம்... துடித்துடிக்க இருவரைக் கொன்றான் இராமன்!... எஞ்சிய எம் இருவர் நெஞ்சிலும் வாள் பாய்ச்சிடுவான் என்றஞ்சி தாள்பாய்ச்சி ஓடினோம்... இராமனைத் தேடி நின்ற, உமது வீரர் விழியிலே ஓடி வந்த யாம் பட்டோம்... பின்னர் பிடிப்பட்டோம் - இங்கு சிறையும் பட்டோம்... 

வீரன் (2) :
பரதனோ பாசத்தோடு பரிதவிக்கிறான்... மூத்தவன் இராமனோ, மூர்க்கமாய்த் திரிகிறான்...  தூதுரைத்த எமது உயிரறுக்கத் துணிந்தான் எனில், அவனைக் கொடியவன் என்றுச் சொல்லாது, வேறு ஏதுச் சொல்லால் விளிப்பது?... யாம் உரைப்பது மெய்யல்லவெனில், நீரே உம்மிரு விழிக் கொண்டு காண்க!... அங்கு கிடக்கும் இரு சடலங்களை!...

வீரன் (1) :
பூவுக்குள் நாகம் போல்,  இராமன் நெஞ்சுக்குள் வஞ்சகம் குடிக் கொண்டுள்ளது... சிறுவனாய் இராமன் இருந்தப் போது, அவன் செய்த சிறு செயல்களுக்கெல்லாம் துடுக்கு என்று பேரச் சொல்லப்பட்டது... அவன் உள்ளம் துடுக்கல்ல; தேளின் கொடுக்கு என்று இப்போதல்லவா தெரிந்தது!... மன்னன் தசரதனைக் கொன்றதால் அயோத்தி மக்களுக்கு இராமன் மீது அளவிலா பகை!... இங்கும் அவன் வந்து, துன்பச் செயல் பல செய்ததால், இலங்கை வேந்தே, பகைப் பூண்டு நிற்கிறீர்... இராமன் ஆரியன்தான்... அதனால்; எம்மையும் பகைக் கண்ணோடுப் பார்க்காதீர்கள்...

வீரன் (2) :
அத்துமீறி அயல் மண்ணில் நுழைந்து வந்தோம்... இதனைத் தவறென்று உணர்ந்து நிற்கிறோம்... இனி ஒரு போதும், தமிழ் எல்லைக்குள் ஊடுருவ மாட்டோம்... தமிழ்நாடுக் கொண்ட தனிப்பெருந்தலைவா!... எம்மை மன்னித்து விடுதலைச் செய்க...

கரன் :
மன்னிப்பும் கேட்பீர்கள்... மானமிழந்தும் வாழ்வீர்கள்... உயிர்வாழ ஊரையும் கொள்ளையடிப்பீர்கள்... உங்களையும் விற்பீர்கள்... தனக்கொன்று ஆகவேண்டுமெனில், தாயோடு, தாரத்தையும் விட்டுத் தருவீர்கள்...  பேதையோ யாங்கள்; உமது பேச்சை நம்ப!... தேன்போல் வேறொன்றுக்கு வண்டு மயங்காது... வாய்வார்த்தைக் கொண்டு, எம்மை ஏமாற்றலாகாது!... நூற்றுக் கணக்கில் ஆரியர்களைப் பிடித்து, கொட்டடியில் அடைத்துள்ளோம்... சிறைப்படுத்தப்பட்ட அத்தனை பேருமே உங்களைப் போல்தான் மன்னிப்பு கேட்டு நிற்கிறார்கள்... இராமனைக் கொடியவன் என்றுக் கூறி நிற்கிறார்கள்... இராமனைக் கொடியவன் என்பதால், எங்கள் உள்ளம் மகிழ்ந்து, உங்களை விடுவித்து விடுவோம் என்று நன்றாகவே திட்டம் போட்டுப் பேசுகிறீர்கள்... ஆரியன் வாழ, ஆரியனையே காட்டிக் கொடுப்பது, வாழ்வின் தத்துவமா?... தந்திரமா?...

( இடும்பன் வருகிறான் )

இடும்பன் :
இலங்கை வேந்தே வாழி!...

(இராவணன் இடும்பனை நோக்க )

இடும்பன் :
மன்னா, ஆரியர்கள் இவர்கள் கூறிய இடத்திற்கு இளஞ்செழியனும், நானும் சென்றிருந்தோம்...  இவர்களால் கூறப்பட்ட எவருமே அங்கில்லை... ஒரே ஒரு பெண்மட்டும் தனித்திருந்தாள்... தோற்றத்தில் அவள் ஆரியக்குலத்தவள் தெரிகிறது... அவள் மரத்தோடு கட்டப்பட்டிருந்தாள்... அழுது வீங்கிய விழிகளோடு விம்மி நிற்கிறாள்... எம்மைக் கண்டதும் ஓவென கதறினாள்... 'என்னைக் கொன்று விடுங்கள் '  'என்னைக் கொன்று  விடுங்கள் ' என  ஓலமிட்டுத் துடிக்கிறாள்... நெஞ்சொடு புலம்பி, நெடுந்தரையில் வீழ்ந்து அலறுகிறாள்... எதன் பொருட்டென்று பொருள் கூறாது. மருகுகிறாள்... யாரவள்?... பேரென்ன?... ஏதும் கூற மறுக்கிறாள்...


இடும்பன் :
(தொடர்ந்து)
தோற்றத்தில் அவள் ஓர் ஆரியப்பெண் என்பதைத் தவிர, எம்மால் வேறு ஏதும் அறிந்திட இயலவில்லை... அவளைப் பற்றி, ஏதும் அறிந்திடாத நிலையில், அவளைக் கைது செய்யவும் நாங்கள் துணியவில்லை!... அவள், பெண் என்பதால், எமது விசாரிப்பில் வண்மையைக் காட்டவில்லை... அவளைத் துன்புறுத்தி, அவளை அறியவும் நாங்கள் துணியவில்லை!...

வீரன் (1) :
நாங்கள் கூறிய இடத்தில், இராமனுமில்ல; இலக்குவனுமில்லையென்றால், நீங்கள் பார்த்தவள் தோற்றத்தில் ஆரியச்சி போல் என்றால், அவள் நிச்சயமாக சீதையாகத்தான் இருக்கக் கூடும்... ஏதோ நடந்திருக்கிறது இலங்கை வேந்தே!... சூது செய்வதில் மிக தோதானவன் இராமன்!...

கரன் :
இடும்பா, இளஞ்செழியன் எங்கே?

இடும்பன் :
அந்த ஆரியப்பெண் , தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் முனையக்கூடும் என்பதால், இளஞ்செழியனும், சில வீரர்களும் அங்கிருக்கின்றனர்... நான் மட்டும் இங்கு சேதி கூற வந்தேன்...

கரன்:
இங்கு வாவென அவளை அழைத்தீர்களா?...

இடும்பன் :
மறுக்கிறாள்!

கரன் :
மன்னவா, அவளை இங்குத் தூக்கி வருவதென்பது இயலாத ஒன்றல்ல!... ஆயினும், பிறப் பெண்களை முறையின்றித் தொடுவது, தமிழர் நெறியல்ல என்பதால், எமது வீரர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்... ஏது செய்ய? கூறுங்கள் வேந்தே!...

இராவணன் :
நானே வருகிறேன்!... உண்மைநிலை தெரிய வரும்வரை இவர்கள் எமதுக் கொட்டடியில் இருக்கட்டும்...

(இராவணன் முன்செல்ல-
இடும்பன் தொடர-
கரன் ஆரியவீரர்களை வேறு திசையில் நடாத்திச் செல்லுகிறான்...)

                                                          - திரை -




பாகம் : 2.                     காட்சி : 10.           காடு.

சீதை.
இளஞ்செழியன்.
இலங்கை வீரர்.
இராவணன்.
இடும்பன்.

(சீதை முழந்தாள் மீது, முகம் கவிழ்ந்து, இரு கால்களையும் கட்டிப்பிடித்து, தரைமீதில் அமர்ந்திருக்குக்கிறாள்...

இலங்கை வீரர் அவளை சூழ்ந்து நிற்கின்றனர்...

இளஞ்செழியன் நடையிட்ட வண்ணம் இருக்கிறான்...

-புரவிகள் குளம்படியோசை கேட்டு, இளஞ்செழியன் நடையிடலை நிறுத்துகிறான்...

- ஓசை வந்த திக்கில் பார்க்க)

வீரன் ஒருவன் :
இளஞ்செழியன்!... மன்னர் வருகிறார்...

இளஞ்செழியன் :
ஆமாம்!...

(குளம்படியோசை அடங்க-
சிறுது நேரத்தில் இராவணன் வர-
தொடர்ந்து இடும்பன் வர-

இலங்கை வீரர், மன்னன் இராவணன் வருகைக்கு ஒதுங்கி, இருமருங்கும் அணிசெய்து நிற்கின்றனர்...)

(தலைக் கவிழ்ந்து, முழங்கால்களை கட்டிப்பிடித்து உட்கார்ந்திருக்கும் சீதையை நோக்கிய வண்ணம், இராவணன் சிறுது நேரம் நிற்கிறான்....)

இளஞ்செழியன் :
பெண்ணே!... எமது மன்னவர் வந்துள்ளார்...

(தலைக்கவிழ்ந்து உட்கார்ந்திருந்த சீதை, சிறிதே தலையை உயர்த்தி, விழியை மேலேற்றி இராவணனை நோக்குகிறாள்...

சிறுது நேரம் அதே நிலையில் அசையாது இருக்குகிறாள்...

மீண்டும், அவள் விழிகள் தரைப்பார்த்து, விசும்பலானாள்... அழுகை வெடிக்க, எழுந்தோடி மரத்தில் முகம் புதைத்து, தொடர்ந்து அழுகிறாள்...)

இளஞ்செழியன் :
ஆரியப்பெண்ணே!... மானிட அறிவை வியக்கச் செய்யும் இரு விந்தைகள் இந்த உலகத்தில் உண்டு!... ஒன்று; இந்த உலகத்தின் சுழற்சி!... மற்றொன்ன்று உன் போன்ற பெண்களின் கண்ணீர்!...  இரண்டுமே வியப்பூட்டும் விந்தைகள்!... கருநிறமேகங்கள் கூடி, திரையாய் வானில், நிலைக்கொண்டு விட்டால், சூரியன் கூட நமது விழிப்பார்வைக்குப் படாது...  நீ உனதுக் கண்ணீர்த் திரையை விலக்கினாலன்றி, எம்மால் உன்னை அறிய முடியாது!... நதி வெள்ளம் பெருகி, அலைக்கடலை விரட்ட முடியுமா?...  கண்ணீர்த் துளிகளைப் பெருக்கி, மனக்கடலலையை விரட்ட முயல்கிறாயே!... இது வீண் முயற்சியம்மா!... அரவத்தை விரட்ட ஊருக்கே தீயிடுவதைப் போல், உன் துயரரவத்தை விரட்டவோ வாழ்வை நாசமாக்கத் துணிந்தாய்... இது பேதையர் செயலம்மா!... நீ ஆரியபெண்னே யாயினும், உனது துயர்ப் போக்கும் தமிழ்ப்பண்பு எம்மிடத்தில் உண்டு!... இருவிழிகளே இருந்தாலும் இருளின் ஓவியத்தை யாரால் பார்க்க முடியும்?... மவுனமெனும் இருளுக்குள் நீ மனத்துயரை முடக்கி வைத்துள்ளாய்!... இருவிழிகளாய் எம்மிடத்தில் உயர்ப் பண்பு இருப்பினும், இருளாய் நிற்கும் உன் இதயத்தைக் காண்பது எங்ஙனம்?... மவுனத்தை விடுத்து, நீ மனந்திறந்துப் பேசு!... எமது மன்னவன் மனம் பொன் போன்றது... எமது மன்னன் மனம் தாகம் போக்கும் தடாகம் போன்றது!... எமது மன்னவன் மனம் சுகந்தரும் புதுநிலவைப் போன்றது!...நீ யார்?... ஏனழுகிறாய்?... நீ எம் வீரர்களின் விழிப்பார்வையில் படும்விதம், உன்னை மரத்தோடுக் கட்டி வைத்துச் சென்றவர் யார்?... நீ ஏன் மரத்தோடு கட்டப்பட்டாய்?... கூறு!... ஆரியப்பெண்ணே, எமது மன்னன் காத்திருக்கிறார்...

(சீதை மவுனம் செய்ய, இளஞ்செழியன் சற்று கோபமாக...)

இளஞ்செழியன் :
நீ காலங்கடத்தினால், எமது கோணம் மாறுபடும்... நீ அழுகிறாயா?... அழுவது போல் நடிக்கிறாயா?... கூறு, ஆரியப்பெண்ணே!...

இராவணன் :
சீதை!

(சீதை திடுமென அழுவதை விடுத்து, அதிர்ச்சியோடு விழிகளை அகல விரித்து இராவணனை பார்க்கிறாள்...

திடீர் தாக்குதலுக்கு உள்ளானவள் போல், சிலைப் போல் சீதை நிற்கிறாள்...

இலங்கை வீரர்களும் வியப்புசூழ சீதையை நோக்குகின்றனர்...)

இராவணன் :
ஏன் சீதா, விழிக்கிறாய்?... சனகன் உனது தந்தை!... அயோத்திதானே உனது மணவாளன் நாடு!... இராமன்தானே உனது நாயகன்!... ம்... ஏன் விழிக்கிறாய்?... எப்படி உன்னை நான் கண்டுக் கொண்டேன் என்றா?... நீ, காட்டுப்பெண் போல் வேடந்தரித்து இருப்பினும், நீ சீதைத்தான் என்பதை உனது விழி வளைவுகள் காட்டிக் கொடுக்கின்றனவே... எமது ஒற்றர்களால அனுப்பப்பட்ட உனது ஓவியம், இலங்கையின் ஒற்றரங்கத்தில் உள்ளதை எம் வீரர்கள் அனைவரும் அறிவர்...

வீரர் அனைவரும் ஒரு சேர :
(வியப்பு மிக)
ஆமாம்!... இவள் சீதைத்தான்!...

இராவணன் :
இராமனுக்கு வாய்த்த நங்கையே!... உனது நாயகன் எங்கேயோ?... அவன் தம்பி இலக்குவன்தான் எங்கே?... பேசா மடந்தை வேடம் பூண்டு, நீயிங்கு சாதிக்கப் போவதென்ன?... விழிகளில் நீர் சொறிய, ஊமையாய் உன்னை ஆட்டுவிப்பவன் யார்?... ஆட்டுவிக்கிறானா?... இல்லை; நீயே ஆடல் புரிகிறாயா?... கூறு!... அழுகை எனும் நாடகமேடையேறி, ஊமை வேடம் நீ போட்டு நிற்பதென்ன?... நாடகம் என்றோர் அருங்கலை ஆரியத்தில் இல்லை!...என்றாலும்; ஆரியர்கள் எல்லாருமே, நடிகர்களாய்த்தான் திரிகிறார்கள்... வேடந்தரித்து, ஊரை ஏமாற்றுவதில் பெரும் வித்தகர்களல்லவோ ஆரியர்கள்!... 

இடும்பன் :
மூடக்குலத்தவளே!... ஆரியப்பெண்ணே!... ஆத்திரம் பொங்கத் துடிக்கிறேன்; உன்னை அங்கசேதம் செய்யவே!... நீ ஆரியச்சி என்று தெரிந்தும், உன்னை வாளெடுத்து வீசாமல், நான் வார்த்தையால் வினவி நிற்கிறேனே... தமிழூட்டியப் பன்பால், எம்மை நாம் கட்டி நிற்கிறோம்... யாகம் என்ற பேரில் வனவிலங்குகளைக் கொன்று, வயிற்றுப் பிழைத்துத் திரியும், வஞ்சகக் கூட்டத்தவள் நீயென்று தெரிந்தும், வாயால் உன்னை விசாரிக்கிறோம் என்றால், எமதருந்தமிழ் எமக்குத் தந்த நேசம்தான் பெண்ணே!...

இளஞ்செழியன் :
ஏமாந்த வேளையிலே, எம்மரசித் தாடகையை அம்பெய்துக் கொன்ற இராமனின் மனைவியே!... ஏனின்னும் வாய்த் திறவாமல், இருக்கிறாய்?... தமிழுக்கு மகளாய்ப் பிறந்து, தமிழ்ப் புகழ் விந்தகத்தின் ராணியான எமது காமவல்லியை அங்கசேதம் செய்து, அவள் உயிர்க் குடித்த விலங்கு இலக்குவன் எங்கே?... ஆத்திரம் பொங்குகிறது ஆரியப்பெண்ணே!... தீக்கனலை நெஞ்சில் சுமந்து, சீதையே உன்முன் நிற்கிறேன்... கூறு!... இல்லையேல்; சாறுபோல் பிழிந்திடுவேன்... 

இடும்பன் :
மறுமொழிக் கூறாத உன் குரல்வளையைக் கொய்யாமல்

(வாள் உருவி சீதையின் கழுத்தில் பதித்து...)

இடும்பன் :
மன்னவன் மொழிக்காகக் காத்திருக்கிறோம் என்றால், நாங்கள் தமிழ்ப் பன்பைப் போற்றுகிறவர்கள் என்பதால்தான்!...

இளஞ்செழியன் :
உன்னைக் கொல்வது என்பது, சிறு முல்லையைக் கிள்ளுவதுப் போல!... பெண் என்பதால், நாங்கள் காட்டும் தயக்கத்தை, சாதகமாகக் கொண்டு - வாய்ப் பேசாது வாளாவிருந்திட எண்ணாதே!...

இராவணன் :
சீதையே, உனது அழும் ஓசைக்  கேட்கவோ இங்கு நாம் வந்தோம்?... சிந்தையுடன் சிறுதுக் கூறு... உம்மவர் செய்தச் செயல் சரியோ என்று!... சிற்பஞ்செதுக்கும் ஆற்றல், தனக்கு இல்லையே என்று மூடன் ஒருவன், சிதைத்தானாம் சிற்பத்தை அற்பகுணத்தோடு... இது சரியோ?... தன் பிள்ளை அழகில்லை என்பதற்காக, அடுத்தவள் பிள்ளையைக் கிள்ளுவதும் சரியோ?... இதை நீ சரியெனில், இதயமில்லை உனக்கு என்றுதானே பொருள்!... தமிழ்நெறியை பிறரும் புகழ, ஆரியம் அகிலத்தாரால் இகழப் படுகிறதே எனும் ஆற்றாமைதான் ஆரியருக்கு!... தானே வாழவேண்டும்; தனக்கே இந்த உலகம் யாவும் எனும் பேராசைதானே ஆரியருக்கு!... இது சரியோ?... தாடகை கொல்லப்பட்டதேன்?... சரியில்லா உமது நெறிக்கு, தடையாய், தாடகை இருந்தாள் என்பதுதானே... இராமன் கொண்ட பேராசையால், பலியானாள் என் தங்கை காமவல்லி!... இலங்கையின் எழிலுக்கு நிகரான நகர் புவியில் வேறெங்கு உண்டு?... எழில் நகரையே மயங்கச் செய்யும் அழகம்மா காமவல்லியின் அழகு!... அவள் அழகுக் கண்டு நகர் மயங்கியது... அவள் சொல் உண்டு, தமிழ் மயங்கியது!... அவள் வீரம் கண்டு புலியே மிரண்டது!... அவள் கொல்லப்பட்ட சேதி கேட்டு, இலங்கையே அதிர்ந்தது... துடித்தது... துவண்டது... ஆமாம்!... சீதை, அவள் ஆரியன் ஒருவனால் சிதைக்கப் பட்டாள் என்பதைக் கேட்டப் போது, எனது இதயம் மட்டுமா வேதனையால் நெளிந்தது... தமிழினமே வேதனையால் நெளிந்தது... எனது விழிகள் மட்டுமா அழுதது?... எனது இனமே அழுதது!... கொலைகாரனைப் பழிதீர்த்திட தனியொருவன் சூளுரை கொள்ளவில்லை... தமிழினமே சூளுரைக் கொண்டது... ஆமாம்!... இலக்குவன் வெட்டியது காமவல்லியை அல்ல!... அந்த வெட்டு எமது இனத்தின் மீதுப்பட்ட வெட்டு!... அவள் சிந்திய இரத்தத்தில் ஆயிரம் இளம் புலிகள் தோன்றின... ஒருத்தியைக் கொன்று விட்டதால், எமது இனமோ, எமது மொழியோ சிதையாது, சீதையே!... தூங்கிக் கிடந்தப் புலியைத் தீண்டியதுப் போல் உனது இராமன் எமது இனத்தைத் தூண்டிவிட்டான்... சீதை, இது இனமானக் கூற்று!... எங்கே உனது இராமன்?... சொல்... இல்லையேல்; கொல்லென்று நான் சொல்லுமுன்னரே நீ கொல்லப்பட்டு விடுவாய்!... 

சீதை :
அய்யா, அதனைச் செய்யுங்கள்... உடனே கொல்லுங்கள்... என்னை கொல்லுங்கள்... என்னைக் கொன்று விடுங்கள்...

இராவணன் :
இடும்பன்...

இடும்பன் :
மன்னவா!... 

இராவணன்  :
கோரமாய்க் கொலைச் செய்யப்பட்ட காமவல்லியின் துடிப்பை நாம் நேரில் கண்டோமா?... 

இடும்பன் :
இல்லையே...

இராவணன் :
நாம் இவளைக் கொல்லும் முறையை, இராமனும் இவள் தந்தை சனகனும் காண வேண்டாமா?...

இடும்பன் :
ஆகா!... காணவேண்டுமே!...

இராவணன் :
அதனால்; மூங்கில் இலை வேய்ந்துள்ள இச் சீதையின், ஒரு கை, ஒரு கால் வெட்டு!... இப்போதே...

சீதை :
ஆ... (பயந்துக் கூச்சலிடுகிறாள்)

இராவணன் :
வெட்டி சனகனுக்கு  அனுப்பி வை!... சனகன் வரட்டும்... இடும்பன் 

இடும்பன் :
வேந்தே!

இராவணன் :
மனைவியிவளை மரத்தோடுக் கட்டி வைத்துவிட்டு, பாவியவன் இராமன் எங்கோ பதுங்கி இருக்கிறான்... மங்கை இவள் மைவிழிகள் கண்ணீர் சுரக்க, தம்பியவன் இலக்குவனோடு தந்திர வேலையில் ஈடுப்பட்டுள்ளான்... இதிலேதோ சூது உள்ளது... இதனை நாம் அறிந்தாக வேண்டும்... நேருக்குநேர் நின்று வீரம் காட்டுவதில் ஆரியருக்கு தீரமில்லை... கோழைகள் அவர்கள் செய்யும் செயலிலே மானமிருக்காது!... அதனால், நம்மை வீழ்த்த இராமன் வகுத்த சூழ்ச்சியிது!... இதனையும் நாம் ஏற்போம்... இவளையும் கொல்லுவோம்... பெண் என்பதால் தயங்க வேண்டாம்... கொல் என்று இவளே, சொல்லுவதால் கொன்று விடுங்கள்!... ஆனால்;

இடும்பன் :
கூறுங்கள், வேந்தே!...

இராவணன் :
தனியே விடப்பட்டிருக்கும் இவள், ஆரியர் பலர்க் காண, அங்கசேதம் செய்யப்பட வேண்டும்... அலறுவதை இராமனும், இவள் துடித்துடித்து வீழ்வதை சனகனும் காண வேண்டும்... ஓலமிட்டு அலற அலற இவள் உடல் சிறுசிறு துண்டுகளாய் வெட்டப்பட வேண்டும்... வெட்டப்பட்ட துண்டுகளை கண் இரண்டோடு நாம் கண்டு களிக்க வேண்டும்... ம்... வெட்டுங்கள்...

சீதை :
(கூவி)
மன்னா வேண்டாம்!... 

சீதை :
நீர் ஆள்வது அழகு இலங்கையெனில், அன்பு வேண்டுமே உமது நெஞ்சில்!... எழில் நகர் வேந்தா, ஏனிந்த கோரமோ உமது நெஞ்சில்?... உயிர்ப் பிச்சைக் கொடுங்கள் என்று கெஞ்சவில்லை நானும்மை!... தஞ்சமென்று உமதடியிலும்  வீழவில்லை... கொல்லுங்கள் வேந்தே!... கொல்லுங்கள்!.. ஒரே வீச்சில் என் உயிர்ப் போகும்படி கொல்லுங்கள்...  மாறாக; சிறுசிறு கூறாக்க வேண்டாம்!... நினைக்கவே நெஞ்சம் திகில் கொள்கிறது... மன்றாடுகிறேன்... இரக்கங்காட்டு... சாகப்போகும் என்னிடத்தில் மன்னவா, உனக்கு இரக்கம் இல்லையெனில், நீயும் மானிடன்தானே... உன்னிடத்தில் மானிடநேயம் இருக்குமெனில், இரக்கங்காட்டு!... யாசிக்கிறேன்... கருணையோடு என்னைக் கொன்றுவிடு!... கோரக் கொலைச் செய்யாதே!... துன்பமின்றி நான் சாக ஒரேத்  துண்டில் என்னைக் கொன்றுவிடுங்கள்... துடிக்கச் செய்து என்னை மடியச் செய்யாதீர்கள்... என்னை வாட்டி வதைத்து, உயிரைப் பறிக்காதீர்கள்... அந்த வேதனையை என்னால் தாங்க முடியாது... 

இராவணன் :
மரணம் எந்த வடிவில் நிகழ்ந்தாலென்ன?... சாகத்துணிந்த நீ வேதனையை நினைத்துப் புலம்புவதென்ன?... ம்... ஆகட்டும்... ஒரு கை ஒரு கால் வெட்டுங்கள்...

( இடும்பனும், இளஞ்செழியனும் கத்தி ஓங்கி முன் செல்ல-

சீதைப் பாய்ந்து, இராவணனின் கால் பிடித்து அலறுகிறாள்...)

சீதை :
மன்னா, நான் செய்த பாவம் என்ன?... பேசுங்கள், மன்னா!... கடல் பொங்கிக் கரையை சிதைத்தது  என்பதற்காக,  கடல்வாழ் மீனினத்தை கொல்வது முறையோ?... விரல் நுனியை முள் காயம் செய்தது என்பதற்காக பூவை நாசம் செய்வதுதான் நீதியோ?... பாலருந்தும் போது குழந்தைக் குறும்புச் செய்கிறது என்பதற்காக, தாயின் முலையை அறுப்பது அறமாகுமோ?... மன்னா, இராமன் விளைவித்தக் கொடுமைக்கு நான் பலியாவதா?... குற்றம் செய்தவனிருக்க, குற்றமற்ற என்னைத் தண்டிப்பது, உமக்குக் குற்றமாகாதோ?... கூறுங்கள், மன்னா!... இதுதான் உமது தமிழ்நீதியோ?...

சீதை :
(தானே )
பாழ்ப்பட்ட மரணத்தைத் தழுவிடவா, நான் பாவியவனுக்கு வாழ்க்கைப் பட்டேன்... தெய்வமே... இறைவனே.... இருதயமும் இல்லையோ உனக்கும்!... கருணை வடிவானவன் நீயென்று உன்னைக்  கைத் தொழுதமைக்காகவா, என் கழுத்துக்குக் கத்தியைக் காணிகைச் செய்கிறாய்?... என் கழுத்துக்கு கத்தி வந்தும், கண்திறவா நீயும் ஒரு தெய்வமோ?... இறைவா...இறைவா... இறைவா... 

(தேம்பித் தேம்பி அழுகிறாள்...)

இராவணன் ;
கண்ணீராலோ, கவின்மிகு வார்த்தைகளாலோ, பெண்ணே, நீ பிழைத்து விடமுடியாது... சூது புரிவதில், புவியில் ஆரியருக்கு நிகர் எவருமில்லை... ஆரியக்குலத்தில் பிறந்த உன்னோடு சூது இல்லையெனில், பாம்போடு நஞ்சுமில்லை!... இனி நான் ஏது விளம்ப?...  இங்கு நீ எங்கள் கண்ணில் பட, கட்டப்பட்டிருந்தாய் மரத்தோடு!... இதன் பொருள் என்ன?... கண்ணீர் வடித்து நீ காட்டில் நின்று பேசுவது வசனமா?... விசனமா?... பசுந்தோல் போர்த்தி நின்றாலும், புலிக்குப் பேர் மாறாதம்மா!... கண்கலங்க நின்றாலும், நீ ஆரியச்சி என்பதில் வேறுபாடு உண்டோ?... தனித்து நிற்கும் உன்னைக் கொல்ல, பெரும்படையோடு வரவில்லை இங்கு!... நேருக்கு நேர், சரிநிகர் வீரத்தோடு, மோதுவதுதான் எங்களது போர்முறை!... பேடிப்பயல்கள் போல் மறைந்து நின்று தாக்குவது -  ஏமாந்த வேளையில் - பெண்களைக் கொல்வது, ஆரியர்களின் போர்முறையாக இருக்கலாம்... உன்னைக் கொல்லுவதோ உனது ஒரு கை, ஒரு காலை  வெட்டுவதோ எமது நோக்கம் அல்ல!... புதருக்குள், புகை மூட்டுவதுப் போல், உனக்கு எம்மால் பயமூட்டப் பட்டது!... வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து, வாய் திறவாது நிற்கிறாய் சீதை நீ!... பயமூட்டியும் நிலைக்குலையா உன் மன திடம் பாராட்டப்பட வேண்டியதுதான்... பெண்ணே!... உன்னைக் கொல்லும் இழிப்பண்பு இலங்கையில் எவருக்குமில்லை... போ... ஓடிப்போ... பிழைத்துப் போ... நீ கூறா விட்டாலும் இராமன், இலக்குவனைத் தேடிப் பிடிக்கும் வித்தை எமக்கும் தெரியும்... ஓடிப்போ... தமிழ் எல்லையை விட்டு நீங்கிப் போ...!...

சீதை :
அய்யா, நான் நீங்கள் நினைக்கும் சீதையில்லை!... என் சீர் கெடுத்த இராமன், இலக்குவன் எங்கு எந்த வேடத்தில் பதுங்கி இருக்கின்றனரோ; நானறியேன்... அவர்கள் மிதித்த மண்ணில்கூட நஞ்சு மலர்ந்திருக்கும்... அந்த நஞ்சு என்னைக் கொல்ல எமனாய்க் காத்திருக்கும்... அய்யா, என்னை விரட்டாதீர்கள்... என் உயிரைப் பறித்துப் போங்கள்... என்னை கொல்லாமல் போகாதீர்கள்... 

(இராவணன் ஏதும் பேசாமல் நிற்க-)

சீதை :
என்னைக் கொன்று செல்லுங்கள்... இல்லையேல்; என்னை சிறைச் செய்துச் செல்லுங்கள்... சீரழிந்து நிற்கிறேன்; சீரற்றவர்களை நம்பி!... பேர் கொண்ட சனகனுக்கு நான் புதல்வி!... பேர் கெடுத்த இராமனுக்கோ நான் மனைவி!... ஊரிழந்து, உறவிழந்து, இன்று பேரிழந்து பேதையானேனே இராமனால்!... வசந்தக் கனவைப் போல் வாழ்வை நான் நினைத்திருந்தேன்... கசந்தக் கரும்பாயிற்று என் காதல் வாழ்வும்!... கட்டியக் கூடும் காற்று அடித்துப் போனது போல், பறவையாய் நானிங்கு வாடி நிற்கிறேன்... இட்டுச் செல்லுங்கள்... இல்லையேல்; இன்னுயிர் எடுத்துச் செல்லுங்கள்...

(சீதை அழுகிறாள்...)

இடும்பன் :
மன்னா, தொழுத கையில் படையிருக்கும்... ஆரியன் வடிக்கும் கண்ணீரில் வஞ்சம் இருக்கும்... இதனை தாங்கள் அறியாதவரா... என்ன?... துரத்துங்கள் இவளை... மன்னா, ஆணையிடுக இவளைத் துரத்த, நமது எல்லைக்கு வெளியே!... ஓட இவள் மறுத்தால், நான் தூக்கிப் போய் எல்லைக்கப்பால் விட்டு வருகிறேன்...

சீதை :
அய்யா, தாங்கள் என்னை கொல்லாமல் செல்லாதீர்கள்... பொல்லாத இராமனும், இலக்குவனும் பதுங்கி இருக்கும் இடம் எதுவென்று நானறியேன்... பதுங்கியிருக்கும் அவர்களால், என்னுயிர் பறிக்கப்படும்... மன்னா, பாவிகள் கையில் நான் சாகவிரும்பவில்லை... நீங்கள் இங்கிருந்து அகன்றவுடன் இராமன் என்னைக் கொன்று, என் குலத்தையும் நாசம் செய்து விடுவான்... உணவின்றி, குடிக்க நீரின்றி, தவிக்கும் உயிரோடு என் மரணம் நிகழ்ந்தாலும், அதனையே நிம்மதியென என் மனம் கொள்ளும்!... கொடியவன் கை என்னுயிர்க் கொண்டால் மனம்தான் நிம்மதிக் கொள்ளுமோ?... என் பாவம்தான் தீருமோ?... எழுபிறவியும் என்னோடு நிழல் போல் துயரமும் வளருமே!... மன்னா, பாவியவன் கொல்லுமுன்னர் என்னை நீங்கள் கொன்றுவிடுங்கள்... கொன்றுவிடுங்கள்... கொன்றுவிடுங்கள்...

இராவணன் :
ஏன் பெண்ணே!... இராமன் உனது கணவன்  அல்லவோ?... அவனால் நீ எப்படிக் கொல்லப் படுவாய்?... 

சீதை :
அவன் மனம் போல் வாழ, என் மனம் மறுப்பதால்!...

இராவணன் :
ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்வில் இணைந்தபின், ஒருவர் மனதறிந்து ஒருவர் வாழ்வதில் 

சீதை :
தவறில்லை!... ஒருவரை வருத்தி ஒருவர் வாழ்வதும் தவறில்லையோ?... கூறுங்கள், மன்னா!... ஆரியத்தில் பெண்கள் பிறப்பதில்லை; மன்னா!... அடிமைகள்தான் பிறக்கிறார்கள்... அல்லல் என்பது ஆரியப் பெண்களுக்கு மட்டுமே சொந்தம்!... இல்வாழ்வில் எமக்கு அங்கே இடமில்லை... சுவைப்படுபொருள்தான் நாங்கள் அங்கே!... இசைந்திட வேண்டும் ஆடவர் இச்சைக்கு என்றுமே!...  இது மட்டுமெனில், நான் ஒப்பாரி வைப்பேனோ?... இச்சைக்கு இணங்குவதுதான் வாழ்வு;  இதிலில்லைத் தாழ்வு என்று ஒன்றிவிட்டோம் அதிலே!... ஆனால்; எனது தேகம் பகடைக்காயாக மாற்றப்படுவதை என்னால் எப்படி மன்னா, சகிக்க முடியும்?...

(கூறிக்கொண்டே, தலையை மரத்தில் இடித்து அழுகிறாள்... இரத்தம் கசிகிறது...)

இராவணன் :
பெண்ணே, நிறுத்து!... 

(சீதை ஓடிவந்து, இராவணன் காலில் விழுந்து )

சீதை :
இராமன் கூறிய வார்த்தைகள் கூற, கூசுகிறேன் மன்னா!... இராமானுக்குத்தான் நான் நாயகி என்றிருந்தேன்... அவனோ ஆசை நாயகியாய் என்னை அடுத்தவனோடு படுக்கச் சொல்கிறானே... அவன் வாழ என் மேனியை மாற்றானுக்குக் காணிக்கையாக்கு என்கிறானே... இதைக் கேட்டும், பிரியாமல் உயிர் என்னோடு ஏன்தான் இருக்கிறதோ?...

(இராவணனின் தாள்பிடித்து கதறியும், தேம்பியும், அழுகிறாள்...)

இராவணன் :
ஆ... இது என்ன விந்தை நீ பேசுவது?... ஆரியகுலப் பெண்களின் ஒழுக்கம் அறிந்த ஒன்றுதானே?... கணவனுக்கு மட்டுமின்றி, கட்டில் சுகத்தை கண்டவனுக்கும் தந்த முனிவர் மனைவிகளின் கதை எமக்குத் தெரியாதா?  நீ எதேதோ கதைக்கிறாயே!... உயிர்வாழவும், வயிறுப் பிழைக்கவும், குழந்தை வேண்டியும் பள்ளியறையைச் செல்வந்தனுக்கும் விட்டுத் தருவது ஆரியத்தின் இயல்புதானே!... இதனை தவறென்றோ, முறையற்ற செயலென்றோ ஆரியர் இயம்பி இதுகாறும் நான் கேட்டதில்லை...  இனம் பெருக, ஆரியன் தனது மனைவியை அடுத்தவனோடும் கூடச்செய்யும் காட்சி அகிலம் அறிந்தக் காட்சி!... இதனை உமது  நூல்களும் ஓதுகின்றனவே!... இதற்குப் புறம்பாய் நீ புலம்புவது வேடிக்கையல்லவோ...  இதனை நாங்கள் நம்பிட வேண்டுமா என்ன?... நிறத்தில் மாறுதல் இல்லையென்றாலும்; காகம் தன்னைக் குயிலெனில், ஏற்பவரும் உன்டோ?...

சீதை :
செந்தாமரையும் மலராகாதோ; சேற்றிலே பூத்ததெனில்?... சூரியனும் பேர் மாறுமோ; கார்மேகத்தால் மறைக்கப்பட்டதெனில்?... குயிலின் குரலும் கசந்திடுமோ; நிறத்தில் அது கருப்புயெனில்?...முள்ளோடு பூத்த முழுமலரிலும், அழகு இருக்கலாகாதா?... இருளாய் படிந்த நிழல் ஓர் ஓவியமாய் தெரியலாகாதா?... மதுவும் மருந்தாய் மாறக்கூடாதா?... ஆரிய இனத்தவள் நானென்றாலும் ஆரிய சூதுக்கு அப்பாற்பட்டு வாழக்கூடாதா?...   

(குயில்கூவும் ஓசைகேட்கிறது...)

சீதை : (தானே)
பாடுங்குயிலே!... இலங்கை வேந்தனுக்கு, நீ எனது இன்னலைப் பாடாயோ... நிழல் பொழியும் மரமே!... மங்கையிவள் மனம் பொழிவது துயரென்று இலங்கை அரசனுக்கு நீ பொழியாயோ?... ஆடும் மயிலே!... அல்லலுறும் எனது வேதனையை நயம் பிடித்துக் காட்டாயோ?... மணக்கும் பூவே!... மன்னன் மனதுக்கு தூதாய் என் மனத்துடிப்பை சுமந்து, போவாயோ?... மண்ணே!... சீதை நான் மாய்ந்திடும் நிலைக் கொண்டுள்ளேன் என்பதை மாமன்னன் இராவணனுக்கு உணர்த்தாயோ... காற்றே!... கொஞ்சம் நில்லாயோ... என் சொல் சுமந்து இராவணனிடம் சொல்லாயோ.... கல்நெஞ்சகணவனால் காரிகை இவள் கரைந்துருகி நிற்பதை, தூதாய் கூறாயோ?...  வானமே!...  வாய்திறந்தோர் வார்த்தை வாழ்வு இழந்தவள் இவளென்று இயம்பாயோ?... வாடும் பயிருக்கு நீர் வார்க்கும் மேகமே, பாவையிவள் வாழ்வுப் பாலைநிலமாயிற்றென்று ஒரு வார்த்தை வார்த்திடாயோ?...

(தொடர்ந்து கேவி அழுகிறாள்...)

சீதை :
நம்புங்கள் மன்னா!... கொண்டவளை விலைப் பேசி, பிழைக்கத் துடிக்கும் கொடுங்குணாளன்தான் எந்தன் மணவாளன்...

இராவணன் :
கூறியதையே கூறியழுகிறாய்... நீ கூறுவது ஆரியத்தில் புதிதல்லவென்று யாமும் மறுமொழி கூறிக் கொண்டிருக்க இயலாது!... 

சீதை :
என்கூற்றுதனை நம்ப இயலாது உம்மால்!... ஏனெனில்;  பிறப்பால் நான் ஆரியச்சி என்பதால்!... ஆயினும்; மன்னா, தாள்பணிந்து யாசிக்கிறேன்... என்னை கொல்லாமல் செல்லாதீர்கள்... உள்ளத்தால் நான் சவமாகிவிட்டேன்... என் உடலையும் சவமாக்கிவிட்டுச் செல்லுங்கள்... துயரம் என்னைப் பொசுக்குகிறது... 

இராவணன் ;
பெண்ணே!... உண்மையாகவே நீ துயரில் துவண்டிருக்கிறாயெனில்?

சீதை :
உண்மைதான் மன்னா!

இராவணன் ;
பெண்ணையும், நாட்டையும் ஒன்றாய்ப் போற்றுகிறவர்கள் நாங்கள்... பெண்ணை இழிவுப் படுத்துவதும், தாய்நாட்டை இழிவுப் படுத்துவதும் ஒன்றுதான்!... மனைவியை வஞ்சிப்பவனை எங்கள் மண் பொறுக்காது... பெண்ணே, இங்கு வந்த எம் நோக்கத்தையே நீ சிதைத்து விட்டாய்... நீருக்கு அணை எழுப்பிட யான் அறிவேன்... கண்ணீரும் அணையாகி, கனலை தணிக்குமென்று நீ காட்டி விட்டாய்!... பெண்ணே!... பொங்கும் எனது நெஞ்சக்கனலை  உனதுக் கண்ணீர் தணித்து விட்டது... பழிவாங்க வந்த என்னை, பாசம் பொழியச் செய்து விட்டாய்!... பெண்ணே!... எனது தங்கை காமவல்லியின் கண்ணீரைத் துடைக்க இயலாதத் தூரத்தில் அப்போது இருந்தேன்... அருகிலிருந்தும் இன்று உன் கண்ணீரைத் துடைக்க இயலாது போனால், நான் தமிழனாவேனோ?... இன்று உன் கண்ணீரைத் துடைத்து என் தங்கையின் முகம் காண்கிறேன்...

சீதை :
மன்னா! (அழுகிறாள் )

இராவணன் :
ஆரியப்பெண்தான் என்றாலும், அல்லல் என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமோ?... உனது துன்பத்தில் நான் இன்பங் கண்டால், நான் மானிடனாவேனோ?...

சீதை :
மன்னா! (அழுகிறாள் )

இராவணன் :
தங்கையை இழந்து நான் துயர் மிகுந்து தவித்திருந்தேன்... இனி துயர் தீர்ந்தது... அழாதே, சீதா!... நீயும் எனது தங்கையானாய்!... 

சீதை :
மன்னா....

(சீதை ஓடிவந்து, இராவணன் மார்பில் முகம் புதைத்து, தேம்பித் தேம்பி அழுகிறாள்...)

இராவணன் :
தங்கையே, இராமனைப் பழிக்குப் பழி வாங்காது விட்டால், - அதனால் - எனக்கேதும் பழிச்சொல் ஏற்பட்டு விடப்போவதில்லை!... உன் துயர் போக்காது நான் போனால், உலகத்தின் பழிச்சொல் என்னை மட்டுமா சேரும்?... என் இனத்தையே அல்லவா வாட்டும்!... எம் மண்ணில் நின்று இராமன் செய்த கொடுஞ் செயலுக்கு, தண்டனை அவனைக் கொல்வதுதான்!... அதிலே எமது வீரமும், இனமானமும் திகழும்... ஆயினும்; அவனைக் கொல்வதால், இறந்த தாடகையோ, காமவல்லியோ, சுவாகுவோ, கனகமணியோ இனி உயிர்பெற்றெழப் போவதில்லை... இராமனைத் திருத்துவதன் மூலம், உன்னை வாழச் செய்யலாம்... தமிழினத்தின் பண்பையும் பாருக்குக் காட்டலாம்!... ஆமாம்!... சீதை, இராமன் மனதைத் திருத்தி, உன்னோடு வாழச் செய்வேன்... என் தங்கைக்கு இப்படியோர் துயர் வந்திருந்தால்,  துடித்து - தவித்து - அவள்துயர்த் தணிக்கும் பணியில் நான் ஈடுப்பட்டிருப்பேன்... அழாதே, சீதை!... இராமன் திருந்தி வரும் வரைக்கும், நீ தங்கையாக, எழில் கொஞ்சும் இலங்கையின் அசோகவனத்தில் வாழ்ந்திரு!... இராமனை இனித் தேடமாட்டேன்... அவனைக் கொல்லும் முயற்சியிலும் எமது வீரர்கள் இனி ஈடுப்படுத்தப்பட மாட்டார்கள்... இளஞ்செழியன்!...

இளஞ்செழியன் :
வேந்தே!

இராவணன் ;
நாம் இங்கிருந்து சென்றப் பின்னர், நிச்சயமாக, இராமனோ, இலக்குவனோ இங்கே வரக்கூடும்... வந்தால், அவர்கள் பார்வைக்கு சிறு குறிப்பு எழுதி வை!...

இளஞ்செழியன் :
குறிப்பு யாது மன்னவா?

இராவணன் :
'சீதை இலங்கைக் கொண்டு செல்லப் ப்பட்டிருக்கிறாள் '  என்று சிறு குறிப்பு மட்டும் பொறித்து வை!... இராமன் வரட்டும்... அவன் மனதைத் திருத்தி, சீதையின் வாழ்வில் மீண்டும் சுகந்தம் செய்வோம்...

இளஞ்செழியன் :
ஆகட்டும்; மன்னவா!...

இராவணன் :
தங்கையே, வா; போவோம்... அதோ அந்தப் பெட்டகத்தில் அமர்ந்துக் கொண்டால், அது ஆழ்கடல் வழியே ஊர்ந்து, அழகு இலங்கையைச் சிறு நாழிகையில் அடைந்துவிடும்... வா!... செல்வோம்...

(வீரர்கள் வழிவிட, இராவணன் சீதையை முன் நடாத்தி, பின்தொடர்கிறான்....

வேதனையால் துவண்ட சீதை வலுவிழந்து, நடையிடவும் உணர்வற்று இருக்கிறாள்...

சிறிதே நடந்தவள், சோர்வால் துவண்டு சரிகிறாள்...

இராவணன் சீதையை இருக்கரங்களால் தூக்கிச் செல்கிறான்...)

                                                          - திரை -




பாகம் : 2.                        காட்சி :11.         காடு (சீதைக் கட்டப்பட்டிருந்த இடம்)

இராமன்.
இலக்குவன்.
வழிப்போக்கன்.
சடாயு.
சம்பாதி.

(இராமன் மரம் சாய்ந்து நிற்கிறான்...
இலக்குவன் கையில் ஓலைப் பிடித்து, இராமனை நோக்கி நின்றிருக்கிறான்... )

( சிறுது நேரங்கழித்து-
இராமன் சிறு கற்களை கையில் ஏந்தி, ஓரோர் கல்லாக, தரை மீது எறிந்து கொண்டிருக்கிறான்...)

இலக்குவன் :
(எரிச்சலுடன்)
போதும் உனது விளையாட்டு!... சிறுவர்களும் செய்வார்கள் இப்படி சிறுகல்லெறிந்து விளையாடும் விளையாட்டை!... வினையாற்றும் நேரத்தில், நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய்!... சூறையாடிப் போய்விட்டான் சீதையை இராவணன்!... நீயோ, விளையாடிக் கொண்டிருக்கிறாய்   சிறுகல்லெறிந்து!...

இராமன் :
அஃ ... அஃ.... ஆ.... ( சத்தமிட்டு சிரிக்கிறான்)

இராமன் :
நான் எறியும் சிறு கல்மட்டும்தான் உனக்குத் தெரிகிறது!... சீதை எனும் பெருங்கல் இராவணன் மீது எறிந்திருக்கிறேனடா, மடையா!... அது உனக்குத் தெரியாது... 

இலக்குவன் :
எறிந்தக் கல்லா? இல்லை; இராவணனே எடுத்தக் கல்லா?... யாரறிவர்?... அவர்கள் பேசிய சொற்கள் ஏதும், என் செவியில் விழவில்லை!... எனினும்; தொலைவிலிருந்து அந்தக் காட்சியை கண்ணிரண்டால் கண்டேன்... சீதை ஏதேதோ நளினம் காட்டினாள்... நெளிந்தாள்... வளைந்தாள்... நயம்பல செய்தாள்... இறுதியில் இராவணன் அவளைத் தொட, அவளோ மயங்கி சாய்ந்தாள் அவன் மார்பில்!... நீயோ பெரும் வித்தகன் போல் 'அவனை மயக்கி, அவனோடு போ'வென்றுக் கூறினாய் சீதையை!... அவனை மயக்கினாளா?... அல்லது அவனது மார்பழகில் இவள் மயங்கிப் போனாளா?... புரியவில்லை... தசரதனைக் கொன்றதால், அயோத்தியை மட்டுமா இழந்தோம்?.. இப்போது சீதையையும் இழந்தோம்...

இராமன் :
என்ன சொன்னாய்?...

இலக்குவன் :
சீதையையும் இழந்தோம்...

இராமன் ;
சீதையையும்?

இலக்குவன் :
இழந்தோம்!...

இராமன் :
மறுமுறைக் கூறு!...

இலக்குவன் :
சீதையையும் இழந்....தோம்...

( இராமன் திடீரென அழுது புலம்புகிறான்...)

இராமன் :
அய்யோ... நான் சீதையை இழந்தேனா?... என் சீதையை நான் இழந்தேனா?... என் கண்மணி சீதையை நான் இழந்தேனா?... அய்யோ தெய்வமே!... நான் சீதையை இழந்தேனா?... மண்ணே, மரமே, வானமே, சூரியனே கூறுங்கள்; நான் என் சீதையை இழந்தேனா?... கூறுங்கள்!... கடலே, கடலலையே, மேகமே நான் கதறுவது உங்கள் காதில் விழவில்லையோ?.. சீதையை நான் இழந்தேனா?... சீதையில்லாமல் நான் உயிர் வாழ்வேனா?... பூவே, பூவினும் மெல்லிய காற்றே, கனியே நான் கண்ணீர் உகுத்து  கதறுவதுத்  தெரியவில்லையா?... சீதையை நான் இழந்தேனா?... சீதையில்லாமல் நான் உயிர்வாழ்வேனா?... 

( மரத்தில் மோதி கதறுகிறான்...)

இலக்குவன் :
அண்ணா!... அண்ணா!...  வேண்டாமண்ணா...  நான் சொல்வதைக் கேளுங்கள்... 

இராமன் :
சீதா...  என் கண்மணி!... இளங்கொழுந்தே!... இழந்தேனா நானுன்னை!... அய்யோ ... சீதா... சீதா... சீதா...

(வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டும், மரத்தில் மண்டையை இடித்தும் அழுது புலம்புகிறான் இராமன்)

(வழிப்போக்கன் ஒருவன் வருகிறான்... இராமன் அழுவதை கண்ணுற்று...)

வழிப்போக்கன் :
அய்யா, என்னவாயிற்று?... ஏன் அழுகிறாய்?... 

இராமன் :
அய்யா, நான் எப்படிக் கூறுவேன்? இங்கு ஏதேனும் பூதம் இருந்தால், கூறுங்கள்... நான் பூதத்துக்கு இரையாகிறேன்... 

( இராமன் பாறையில் மோதுகிறான்... மண்டையில் இரத்தம் கசிகிறது...)

வழிப்போக்கன் :
அய்யா. என்ன செயலிது?

(வழிப்போக்கன் இராமனைத் தடுத்து)

வழிப்போக்கன் :
கூறும்... உமது துக்கத்தின் பொருள் யாது?...

இராமன் :
அய்யா, நான் சீதையை இழந்தேனா?... சொல்லுங்கள் அய்யா... என் சீதையை நான் இழந்தேனா?... உயிர்ப் போன பின்னே உடலும் ஒரு பொருளாகுமா?...  ஒளி இழந்த பின்னே கண்களும் பார்க்குமோ?... சீதையை இழந்த நானும் உயிர் வாழ்வேனா?... சொல்லுங்கள்; அய்யா!... அவள் எனது கண்மணியாயிற்றே... அவள் எனது உயிராயிற்றே... அவள் எனது மூச்சாயிற்றே... தூக்கமின்றி சிறுது அவள் நெளிந்தாலும், நான் துடித்துப் போவேனே!... சீதையில்லாது இனி நான் துக்கத்தோடு உயிர் வாழ்வேனா?...  ஏதேனும் பூதம் இருந்தால் கூறுங்கள், அய்யா!... நான் செத்துத் தொலைகிறேன்... சீதையில்லாமல் என்னால் உயிர்வாழ முடியாது!... 

வழிப்போக்கன் :
அழுகையால் பொருளும் மீண்டிடுமெனில், உலகத்தில் அழிவே நிகழாதே!... அறிவை நமது மனம் ஆட்கொண்டால், அழிவுக்குத்தான் வழிவகுக்கும்... மனதை நாம் அறிவால், ஆட்கொள்ளும்போது அழிவையும் நாம் தடுத்திட இயலும்... அழுவதை நிறுத்து!... நான் விளங்கிடக் கூறு!... இயலுமானால், நான் உனது துக்கத்தைப் போக்குவேன்...

இராமன் :
அய்யா,  தோள்களிருந்தும் நான் பலமிழந்து நிற்கிறேன்... அய்யா, தோகைமயில் சீதையை இராவணன் தூக்கிக் கொண்டுப் போய் விட்டானய்யா!... இனி நான் என்ன செய்வேன்?...

(வழிப்போக்கன் கோபமாக சீறுகிறான்...)

வழிப்போக்கன் :
என்னக் கூறினாய்?... நாவினை அறுத்து விடுவேன்... நாடோடிப்பயலே!... நன்காய்ந்து பேசு!

(வழிப்போக்கனின் சீற்றத்தில் இராமன் பயந்து விடுகிறான்) 

(தூரத்தே நோக்கி, கைத்தட்டி சடாயுவை விளிக்கிறான் வழிப்போக்கன்)

வழிப்போக்கன் :
சடாயு, இங்கே வா!

(சடாயு வருகிறான்... அவன் கையில் பறவையொன்று இருக்கிறது...)

வழிப்போக்கன் :
சடாயு!... இவன் கூறுவதைக் கேள்!... கேட்டப் பின்னர், இவன் தலையைக் கொய்தெறி!...

(இராமன் பித்தன் போல் நடிக்கிறான்...)

இராமன் :
அய்யா, என் கண்மணி சீதையை நான் இழந்தேனா?... நான் சீதையில்லாமல் உயிவாழ்வேனா?... கூறுங்கள், அய்யா!...

சடாயு :
அப்பனே, நீ சீதையை இழந்தால் என்ன?... நீ உயிர்வாழ்ந்தால்தான் என்ன?... எனக்கு என் தொழில்தான் முக்கியம்... இதோ இன்று ஓர் அற்புதம் கிடைத்த மகிழ்ச்சியில், ஆனந்தமாய்த் திரிகிறேன்... இந்தப் பறவையைப் பார்... ஆகா... இதன் இறகுகளில்தான் எத்தனை எத்தனை நிறங்கள்... இதனை நான் எங்கே பிடித்தேன் தெரியுமா?...  இந்தவழியே நான் வந்துக் கொண்டிருக்கும் போது, எதிரில் ஒரு பல்லக்கு வந்துக் கொண்டிருந்தது... பல்லக்கின் மீது இந்த அற்புதப் பறவை அமர்ந்திருக்க நான் கண்டேன்... உடனே இதன் மீது எனக்கு ஆவல் உண்டாயிற்று!... 

வழிப்போக்கன் :
சடாயு!... உனது கதை இருக்கட்டும்... நான் கூறுவது 

சடாயு :
நான் கூறுவது யாதெனில்,  பல்லக்கை நிறுத்தி, இந்தப் பறவையை எனக்கு வேண்டலானேன்... பல்லக்கில் இருந்தவர் யார் தெரியுமா?... இலங்கை வேந்தன் இராவணன் இருந்தான்... அவன் மடியில் ஒரு மங்கையும் படுத்திருந்தாள்...  ஆகா... மங்கை ஒருத்தியோடு மன்னன் இராவணன் பல்லாக்கில் போனபோது , எனக்குப் பரிசாய் வந்தப் பறவையிது!... வாழ்க இராவணன்!... வாழ்க பறவைகள்!... வாழ்க வாழ்கவே நானும்!...

இராமன் :
இராவணன் மடியில் மங்கை ஒருத்தி மயக்கமுற்றுக் கிடந்தாளா...ஆமாம்!... அவள்தான் என் சீதை!... அய்யோ, சீதையில்லாமல் நான் வாழ்வேனா?... 

சடாயு :
நீ வாழ்ந்தாலென்ன?... செத்தாலென்ன?... பாரினில் எனக்கு கவலைதான் என்ன?... பறவைகளில் பலவிதம்!... ஒவ்வொன்றும் ஒருவிதம்!... விதவிதமாய், நானும் பறவையினங்கள் பற்றிப் பகுப்பாய்வு நடத்துகிறேன்... பறவையினம் வாழவேண்டும்... அதுபோல் நானும் வானில் வலம்வர வேண்டும்... அதுவே சிந்தனை!... வேறு எதன் மீதும் ஏதுமில்லை எனக்கு கவலை!...  நீ அழுதாலென்ன?...  செத்தாலென்ன?... நான் போகிறேன்... அதோ சம்பாதி வருகிறான்... அவனிடம் நீ அழு!... ஒப்புக்கு அவனும் அழுவான்!...

(பேசிக்கொண்டே சடாயுப் போகிறான்...)

இராமன் :
அய்யா, சடாயு சென்ற பிறகுமா உங்கள் மனம் நம்ப மறுக்கிறது... பல்லக்கில் போய்க் கொண்டிருந்தவள் யாரய்யா?...  இராவணன் மடியிலே மங்கை ஒருத்தி மயங்கிக் கிடந்ததாக, சடாயு சொன்னானே... அவள் யாரய்யா?... எனது மனைவி சீதைதானய்யா!... காரிகையவளைக் களவாடிச் செல்வதுதான் தமிழ்ப் பண்போ?...  பிறமனை பெண்டாளும் இழிகுணம்தானோ உங்கள் தமிழ் குணம்?...

வழிப்போக்கன் :
என்னக் கூறினாய்?...

(இராமனின் கழுத்தைப் பிடித்து வழிப்போக்கன் நெறிக்கிறான்...)

(இலக்குவன் பதட்டத்துடன்...)
இலக்குவன் :
அய்யா, இதனைப் படித்துப் பாருங்கள்... இலங்கை அரசின் முத்திரையும் இருக்கிறது... இதைகூடவா, நம்ப மாட்டீர்கள்?... 

( இலக்குவன், ஓலையைக் காட்டுகிறான்... இராமனின் கழுத்திலிருந்து  வழிப்போக்கன்  நெறிப்பதை நிறுத்திவிட்டு, ஓலையை வாங்கிப் படிக்கிறான்...)

வழிப்போக்கன் :
சீதை இலங்கைக் கொண்டு போகப் பட்டாள்...

(வழிப்போக்கன் ஓலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க-
சம்பாதி வருகிறான்)

(அசையாது சிலைபோல் நிற்கும் மூவரையும் பார்த்து...)

சம்பாதி:
விந்தநாட்டு சிற்பரங்கத்தில் விந்தை மிகு சிற்பங்கள் கண்டு நான் வியந்ததுண்டு... இங்கும் எனது சிந்தைக்கு, வியப்பூட்டும் வண்ணம், சிலையாய் நடுக்காட்டில் நீவிர் மூவர் நிற்பதன் பொருளென்ன?... 

வழிப்போக்கன் :
சம்பாதி, இதைப் படித்துப் பார்!...

(சம்பாதி ஓலையை வாங்கி படிக்கிறான்... 
படித்துவிட்டு...)

சம்பாதி :
சீதை என்பவள்தானோ அவள்?...

இராமன் :
என்ன... என்ன... என் சீதையைப் பார்த்தீர்களா?... எங்கே?... எங்கே?... சொல்லுங்கள், சம்பாதி!... அய்யோ... என் சீதை...  என் சீதை... 

வழிப்போக்கன் :
என்னக் கூறுகிறாய்?...

சம்பாதி :
இலங்கைக்கும், விந்தநாட்டுக்கும் இடையே,  ஆழ்கடல்வழி உள்ளது... நீ அறிவாயா?

வழிப்போக்கன் :
அறிவேன்!...

சம்பாதி :
படகின் மூலம் சற்றுத் தொலைவுச் சென்று, ஓர் எல்லையில் மூழ்கினால், ஆழ்கடல்வழி உள்ளது!...  சிறப்புப் பொறிகள் கொண்ட நீர்மூழ்கிப்படகு ஒன்றின் மூலமே, ஆழ்கடலுக்குள் பயணம் செய்ய இயலுமாம்... இராவணனுக்கும், சிலஅமைச்சர்களுக்கும் மட்டுமே ஆழ்கடல்வழி தெரியுமாம்... நான் முத்துக் குளித்து விட்டு,  கரைத் திரும்பிய வேளையில் ஓர் அலங்காரப் பல்லக்கு கரை நோக்கி வந்தது... கரையில் நின்றப் படகின் மீது பல்லக்கு வைக்கப்படும் போது, இடறி பல்லக்கு கீழே சரிந்தது... சரிந்தப் பல்லக்கிலிருந்து, ஓர் ஆணும், ஓர் பெண்ணும் கீழே விழுந்தனர்... நான் உதவிட ஓடிச்சென்றேன்... அந்த ஆண் யாரறிவாயோ?... நமது வேந்தன்தான்!... கீழே சரிந்து விழுந்தப் பெண்ணை, நமது மன்னன் ஒரு கையால் தொடையையும், இன்னோர் கையால் கூந்தலோடு தோள்களையும் பற்றித் தூக்கி, மார்பில் சாய்த்துக் கொண்டான்... மார்பில் சாய்த்தநிலையிலேயே, பல்லக்கினுள் மீண்டும் நுழைந்தான்... அந்தப் பெண்ணை நான் இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை!...

இராமன்:
அய்யா, ஒரு பெண்பித்தன்தானோ உமது நாட்டுக்கு மன்னவன்!... பெண்ணைக் களவாடிடும் கயவன்தான், உமது நாட்டுக்குக் காவலனோ?... அரசனவன் விரும்பினால், அடுத்தவன் மனைவியைத் தூக்கிச் செல்லலாம் என்பதுதான் தமிழர் ஒழுக்கமோ?... மன்னனே பிற மங்கையைக் கவர்ந்துப் போனால், மக்கள் நீங்கள் வாழும் வாழ்வும், அதுபோல்தானே இருக்கும்?... வறுமையோடுக் காட்டில் வாழ்ந்து திரிந்தவள் சீதை!...  அவளிடத்தில் மையல் கொண்டான் உமது மன்னன் எனில், வளம் கொழிக்கும் இலங்கையில் இளம்பெண்களின் வதனம் கண்டு, அவன் காமம் கொள்ளாதிருப்பானோ?...  எத்தனைப் பெண்கள் உமது மன்னவனுக்குப் பலியானார்களோ? இதுதான் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமையோ?... அவனை மன்னன் என்றுக் கூற, உங்கள் மனமும் இடந்தருகிறதோ?... அவன் ஆட்சியில் வாழ்வதில் உங்களுக்கென்னப் பெருமையோ?... பெண்ணை ஒரு போகப் பொருளாய், ஆரியர்க் கொண்டிருக்கின்றனர் என்று உமது மக்கள் எம்மை தூற்றுவார்களே... உமது மன்னன் செய்தச் செயல் மட்டும் போற்றுதற்குரியதோ?...

வழிப்போக்கன் :
அய்யா, எமக்கு எமது மண்ணும், மானமும், மொழியுமே முக்கியம்!... தமிழ்ப் பண்பைக் குலைத்து, தமிழ் மண்ணாளவோ, இராவணனை வேந்தனாய் யாம் கொண்டிருக்கிறோம்?... மன்னவனேயாயினும், அவன் மாசுக் கொண்டவன் எனில், எமது மக்கள் தூசியைத் தட்டுவது போல் தட்டிவிடுவர்!... எமது எழுச்சிக்கு மிஞ்சி, அரசோச்ச, எவனுக்கு இலங்கையில் இதயமுண்டு?... இராவணன் ஒழுக்கம் மீறுகிறான்  எனில், அவனை அரசாள யாம் விடுவோமா?... ஈன்றதாய்க்கு நேரானவர் பிற மனைப்பெண்டிர்!... பிற மங்கையை விரும்பும் அவனுக்கு, இலங்கையின் மகுடம் எதற்கு?... 

சம்பாதி :
அய்யா, நீயார்?... உனது மனைவியை இராவணன் ஏன் தூக்கிச் சென்றான்?...

இராமன் : 
அய்யா, நானோர் ஆரியன்... எனது மனைவி மிக மிக அழகானவள்... அவளது அழகை நான் எவ்விதம் கூறுவேன்?...  அவளது நிறத்திலிருந்துதான் தங்கமே விளைந்தது என்றால், மிகையாகாதய்யா... அவளது வதனம் வீசும் ஒளியை வைர வைடூரியங்களில் கூட நான் கண்டதில்லை!...  அவள் முலையிலிருந்து முல்லை மலர் நாற்றம் வீசும்!... அய்யா, தொடையில் முகம் பார்க்கலாம்...  இடையில் வானவில் பார்க்கலாம்... அழகுவயிற்றில், இளம்பரிதி காணலாம்... ஆகா, அந்த இளந்தளிர்க் கண்டுதான் உமது மன்னன் மயங்கி - அறிவிழந்து - தகாதச் செயல் செய்துள்ளான்... அய்யா, மான்கறி வேண்டுமென்று கேட்டாள் ; நான் வேட்டையாட, எனது தம்பியோடு மான்திரை நோக்கிச் சென்றிருந்தேன்... நான் சென்ற வேளையிலே   அவ்வழியே வந்த இராவணன் எனது மனைவியின் அழகில் மயங்கி, அவளை மூலிகையால் மயக்கமுறச் செய்து, கொண்டுப் போய் விட்டான்!...  என் சீதையை நான் இழந்தேனே, சம்பாதி!... அவன் கொண்டு சென்றதுமில்லாமல், இதோ, இந்த ஓலையை எழுதி வைத்துச் சென்றுள்ளான்... என்ன ஆணவமய்யா... அய்யா, ஏழை நான் அழகு மனைவியோடு வாழ, இந்த நாட்டில் உரிமையில்லையா?...  பிழைக்க வந்த எனக்கு, இப்படியோர் தண்டனையா?...  வேண்டாமென்றால், நாங்கள் ஓடியிருப்போமே... யாருமில்லாத நேரத்தில், எனது மனைவியை  அபகரித்துச் செல்வதுதான் அவனது வீரமோ?... கூறுங்கள்... அய்யா, தமிழினத்திற்கு இது பெருமையாகுமோ?...

வழிப்போக்கன் :
சம்பாதி, பல்லக்கில் பாவையொருத்தியோடு, இராவணனைக் கண்டபோதே யாரவள் என்று நீ கேட்டிருக்க வேண்டாமோ?...  சிறுமைப் படுத்தி விட்டான் எமது இனத்தை இராவணன்!... ஆட்சியின் மாட்சியைப் பாரீர் என்று இலங்கையில் நாம் பெருமிதம் கொண்டு நின்றோம்... பெண்சுகம் வேண்டி நாட்டைக் கேவலம் செய்த இராவணன், இன்று எம்மையும் தலைகுனியச் செய்துவிட்டான்... போற்றப்பட்ட இலங்கை, இனி தூற்றப்படுமே?...  உயிர்ப் பறிக்கும் மரத்தை, யாம் நிழல் தரும் மரமென்று ஏமாந்தோம்... தேனில் முகிழ்ந்த நஞ்சவன்!... இனி அவன் ஆள்வதும் சரியோ?... ஒளித் தரும் விளக்கல்ல: அவன் சுட்டெரிக்கும் நெருப்பு!... இருவிழியால், நாம் நெருப்பை ஒற்றிக் கொள்ள மூடர்களோ?... இனியும் எமது மக்கள், குருடராகிட நாம் விடுவதா?...  மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி ஆவாரே!... ஒழுக்கம் வழுவாத தமிழ் மக்கள், இனி இலங்கை வேந்தனின் வழியைத் தொடர்ந்தால், அய்யோ, இலங்கை மாண்பு என்னாவது?...  மகளிர் வாழ்வுதான் காக்கப்படுமோ?... இதனை நான் தடுத்தேத்  தீருவேன்... மக்கள் மன்றத்தில் மன்னனை நிறுத்துவேன்...

(வழிப்போக்கன் கோபக்கனல் தெறிக்க புறப்படுகிறான்...)

சம்பாதி :
அய்யா, உனது மனைவி உனக்குக் கிடைப்பாள்... அறம் வழுவாது... மாமன்னனைவிட எங்கள் மக்கள்மன்றத் தீர்ப்பே பெரிது!... அதனை நீ காண்பாய்!...

(சம்பாதியும் புறப்படுகிறான்...
சம்பாதிச் சென்றபிறகு-)

இராமன் :
(கொக்கரித்தல்)
அஃ... அஃ... ஆ... இலக்குவா, தெரிந்ததா என்னை?... சிறுகல் எறிந்து விளையாடவில்லை... சீதை எனும் பெருங்கல் எறிந்துள்ளேன்... இனிப் பார் லீலையை!... இலங்கை இனி இருகூறாகும்... ஊர் இரண்டு பட்டால் என்னாகும்?... ம்... ஆடு... கூத்தாடு.... ஆனந்தக் கூத்தாடு!...

(இராமன் குதிக்க-
இலக்குவனும் குதிக்க...)
                                                            - திரை -


நீயன்றோ அரக்கன் மூன்று பாகத்தில், இரண்டாம் பாகம் நிறைவு!

கருத்திடல் செய்க!





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்