இராவணன் காவியம் (நீயன்றோ அரக்கன்) - முதல் பாகம்.


இராவணன் காவியம் -நீயன்றோ அரக்கன் - பாகம் : 1. சரித்திர நாடகம்

( மூன்று பாகத்தில் - முதல் பாகம். )
எழுதியவர் :
ஆர். கனகராஜ் (எ ) அரங்க கனகராசன்.

புனை பெயர்கள் : கனகு, மகாத்மா, தென்றல் கனகு, க.ராசன்.

வெளியீடு :
அன்னை ஆறுகுட்டியம்மாள் பதிப்பகம், கோவை.








என்னுரை :
"எதிர்காலம் எனை இகழுமோ " எனக் குற்ற உணர்வுடன் எவனோ, எவனுக்காகவோ, எதற்காகவோ தவறிழைத்து விட்டான்...

அவனது கருத்தைப் புதைக்குழிக்கு அனுப்பிட தமிழறிஞர் பலர் தோன்றினர்...

நான்
எவனுக்காகவும், எவனுடையக் கருத்தை மறுப்பதற்காகவும் இந்நாடகம் எழுதவில்லை...

எனக்காக-
என் நெஞ்சுக்காக-
எனை ஆளும் தமிழுக்காக என் அன்னையின் அன்பு நெஞ்சை முத்தமிட்டு எழுதுகிறேன்...

எனக்கு பத்து வயது என நினைக்கிறேன்...
அப்போதே என்னுள் துளிர்விட ஆரம்பித்தது இக்கரு!...

கற்பனைதான்!...

முழுமையாகவே கற்பனைதான்!...

எனது எண்ணம் எனக்குச் சொந்தம்!...

என் எண்ணத்தோடு உறவாட எனக்கு உரிமையுண்டு!
- ஆர்.கனகராஜ் ( அரங்க கனகராசன்)







நீயன்றோ அரக்கன் சரித்திர நாடகம் - முதல் பாகம்.

காட்சி -1 நிலா முற்றம்!

இராவணன், வண்டார்குழலி, வாயிலோன்.


( யாழ் மீட்டிக் கொண்டிருக்கிறாள் வண்டார்குழலி... யாழில் தவழ்ந்து, தென்னங்காற்றில் மிதந்து வரும் தமிழமுதைப் பருகுவதுப் போல் வான் பிறை வந்தது...


வந்தப்பிறை தென்னங்கீற்றுக்கு, மகுடமாய் இலங்கையின் எழிலுக்கு எழில் சேர்ப்பதுப் போல் தோன்ற-


கருநீல விதானத்தின் கீழ், நிலா மேடையில் அமர்ந்திருக்கும் வண்டார்குழலியின் பொலிவும், யாழின் இனிமையும், பிறையின் எழிலும் இராவணனது நெஞ்சில் பெரு மகிழ்வைச் செய்தன...


அவ்வேளையில் வாயிலோன் வந்து...)


வாயிலோன் :
தமிழினத் தலைவா, வாழி!... எழில்நகர் சமைத்த கலைஞா வாழி!... தண்பொழில் தமிழுலகாளும் கவிஞா வாழி!... விந்தநாட்டின் இளவரசன் வந்துள்ளான், தங்களைக் காண!...
இராவணன் ;
அவையில் இருக்கச்சொல்!...

வாயிலோன் :
நன்று மன்னா!...

(வாயிலோன் செல்ல...)


-திரை -







பாகம் :1. காட்சி :2.
அரசவை.


பீடணன்
காமவல்லி
மாரீசன்
தலைமை அமைச்சர் மூவர்
இராவணன்
வண்டார்குழலி
சாமரம் விசிறுவோர்


( பீடணன் முதலானோர் அவையில் அமர்ந்திருக்க, ஏறு நடையிட்டு வீரமார்பன் இராவணன் நுழைய, தங்கத்தேர் நிலவின் மீது வலம் வருதல் போல், வண்டார்குழலி இராவணனைத் தொடர-

அவையிலுள்ளோர் வணக்கம் கூற-

இராவணனும், குழலியும் மேடையேறி தத்தமது இருக்கையில் அமர- )

மாரீசன் :
மன்னா, தமிழ்த்தாய்க் கொல்லப்பட்டாள்...

( கதறியழுது மாரீசன் தரையில் விழுகிறான்...)

இராவணன் :
மாரீசா...

(அதிர்ச்சியுற்று இராவணன் கூவ-

அனைவரும் இராவணன் முகம் நோக்க- )

-திரை-












பாகம் :1. காட்சி :3.
நதியுடன் கூடிய காடு.

கோசிகன்
இராமன்
இலக்குவன்



(கோசிகன் முனிவன் கோலத்திலும், கருநீல நிறமுடைய இராமன், இலக்குவன் ஆகியோர் குடுமி வைத்தும், துளசிமாலைச் சூடியும், மார்பில் பூனூலைத் தொங்கவிட்டும், கையில் அம்பு, வில் ஏந்தியும், முதுகில் அம்புக்கூடு தாங்கியும் உள்ளனர்...)


( கோசிகன் பாறை மீதமர்ந்திருக்க, இராமனும் இலக்குவனும் பயபக்தியுடன் அருகில் நின்றிருக்கின்றனர்... )


கோசிகன் :
தமிழ்த்தாயாம்... தாடகை என்பது பேராம்...


(சிரிக்கிறான் )


கோசிகன் :
இராமா, அரக்கி வீழ்ந்தனள்... அவனுக்கு படைத்தலைவனாம் சுவாகு!... அவ்வரக்கனும் வீழ்ந்தனன்... மாரீசன் எனும் அரக்கன் இமை நேரத்தில் மறைந்தான்... இல்லையேல்; நரிகளுக்கு நல்விருந்தாகியிருப்பான்... ஆரியர்க் குலம் தழைக்கவேண்டுமென்று எந்த ஒரு ஆரியன் ஆவல் கொண்டுள்ளானோ, அவன் ஆரியரல்லாதாரை அழித்திடத் தயங்கல் கூடாதென்று நான் நவிலும் முன்பே நன்றேவினாய் அம்புதனை!... இராமச்சந்திரா, நீ ஆரியர்க் குலத்தின் விடிவெள்ளி... நன்று!... இராமா, உன் வீரம் மெச்சத்தக்கது... நீ, ஆரியர்க் குலத்தின் அரணாவாய்...


இராமன் :
தமிழ்மொழி பேசும் இந்நாட்டவரை அரக்கர் என்றுக் கூறுகிறீரே... யாம் காரணம் அறியலாமா, முனிவரே!...


கோசிகன்
கேள்; இராமா!... நாளை நீ அயோத்தியின் அரசனாகப்போகிறவன்... அரியணை ஏறுமுன் அறிவது அறிந்திடல்தான் சிறப்பு!... அதன்பொருட்டே, உனது தந்தை என்னோடு இவ்வனாந்திரம் அனுப்பியுள்ளார்... அறிவாயே!...


இராமன் :
ஆம்; பெரியவரே!


கோசிகன் :
ஆரிய இனத்தை அடியோடு அழிக்கும் வல்லமைப் பெற்றவர்களாய் இந்நாட்டவர் உள்ளனர்... அழிக்கும் வல்லமை ஆண்டவனுக்கே உண்டு... அங்ஙனம் நோக்கின், வல்லமையுடைய இந்நாட்டவர் தேவர்களோ?... அல்லர்... மானிடரோ எனில், மானிடருக்கு இவ்வியத்தகு ஆற்றலை ஆண்டவன் அருளான்... தேவரைப் போல் தேகபலம் நிலவும் இந்நாட்டவரை அசுரர், அரக்கர், இராட்சஷர் என விளித்தல் இயல்பன்றோ...


இராமன் :
அய்யா, அசுரர் அடியோடு நம்மவரை அழிக்க முனைவதாகக் கூறினீரே?


கோசிகன் ;
கேள்; இராமா!... ஆரியகுலத்தவரன்றோ நாம்!... நம்முடைய உயர்ந்தக் கலை எது?

இலக்குவன் :
தந்திரம்!

கோசிகன் :
நெறி?

இலக்குவன் :
சூழ்ச்சி!


கோசிகன் :
தந்திரமும், சூழ்ச்சியும் கற்றவனே ஆரியன்... இக்கல்வியைப் போதிப்பவன் இந்திரன்... இச்சீரிய கல்வியைக் கற்பித்த ஆசானாம் இந்திரனுக்கு யாகம் செய்வது எம் போன்ற முனிவர்களின் இயல்பு...


இராமன் :
ஆம்; முனிவரே!...


கோசிகன் :
வேள்வியின் போது ஆடு, மாடுகளை பலியிட்டு, இந்திரனுக்குப் படைக்கிறோம்... வேறு பிற உயிரினங்களையும், வேள்விக்காகக் கொன்று அவற்றை நாம் உண்பதால், அருளைப் பொழிகிறான், இந்திரன்... அவனது அருளால் நம்மவரின் பலம் கூடுகிறது...


இராமன் :
நம்மவரின், பலம் அதிகரிப்பதால் தமிழர்கள் பொறாமைப் படுகிறார்களா?


கோசிகன் :
அரக்கரென்றுக் கூறு... தமிழர்களை தசுயூக்கள் என்று கூறி, மானிட இனத்திலிருந்துத் தாழ்வுப் படுத்து... இந்திரன் அருளால் நாம் பலவான்களாக மாறி அரக்கரை அழித்திடுவோமென்று அரக்கர் அஞ்சுகின்றனர்... அவ்வச்சத்தில் அரக்கர் அறிவிழந்து, பித்தரைப் போல், தத்துப் பித்தென்று உளறுகிறார்கள் ... வேள்விச் செய்வது மூடத்தனம் என்று கூறுகின்றனர்... வேள்வி எனும் பெயரால் மிருகங்களை வதைப்பது காட்டுமிராண்டிகள் செயல் என்று தமிழ் மூடர்கள் கூறுகின்றனர்...
இராமன் :
ஏன் இவ்வரக்கர்கள் புலால் உண்பதில்லையா?


கோசிகன் :
மிருகங்களைக் கொல்லுதல் கூடாதாம்... உயிர்வதை அறமாகாதாம்... புலால் என்பது உடம்பின் புண் - பிணத்தின் சதை - என்று, சுவையுணராதுப் பிதற்றுகின்றனர்... தங்களை சைவம் என்கின்றனர்...


இராமன் :
சைவம் என்றால்?


கோசிகன் :
காய்க்கனிகளை உண்ணுகின்றனர்... அதுதான் சைவமாம்!... காய்க்கனிகள் உயிரற்றப் பொருளிலிருந்தா கிடைக்கிறது?... அல்லவே?... மரம், செடி, கொடிகளுக்கு உயிரில்லையா?...


இராமன் :
உயிருண்டு!


கோசிகன் :
மரம், செடி, கொடிகளின் உயிரைக் கொன்று காய், கனியுண்ணும் அரக்கர்கள், மிருகங்களைக் கொன்றுப் புசிக்கும் நம்மை எதிர்க்கின்றனர்...


இலக்குவன் :
ஆண்டவன் படைப்பில் அனைத்துக்கும் உயிருண்டு... பயிர்களைக் கொல்லுதல் உயிர்வதையாகாதோ?... வேள்வியின் பொருட்டு மிருகங்களை பலியிடுவதைத் தவறென்பது முறையோ?... ஓ... தசுயூக்கள் முரண்பாட்டின் பிறப்புகள் போலும்... அம்பெய்து அனைவரையும் கொன்று விடுவேன் இப்போதே...


கோசிகன் :
இத்தமிழ் வனாந்தரத்தில் இன்சுவை மிகுந்த மிருகங்கள் ஏராளம்... ஏராளம்... இந்திரனுக்கு மிருகங்களை பலியிடப் படுவதை இராவணனது ஆட்சி தடை விதித்துள்ளது... மீறி வேள்விச் செய்தால் தாடகை எதிர்க்கின்றாள்... என் போன்ற முனிவர்களைக் கொல்லவும் செய்தாள்... முனிவர்க்குத் துணை வரும் ஆரியரையும் பிணமாக்குகின்றனர் இவ்வரக்கர்...


இராமன் :
அரக்கர்கள் வேள்வியை நம்புவதில்லையா?


கோசிகன் :
நீர், நிலம், தீ, காற்று, அண்டம் இவைகள் இயற்கையானவை என்று வாதிடுகின்றனர்... இந்திரனை நம்புங்கள் என்றாலோ, ஏளனம் செய்கின்றனர்... 'ஆண்டவன் இருக்கிறான் ' என்றாலோ 'அட அறிவிலிகளா' என்று எள்ளி நகைக்கின்றனர்... 'அரக்கர்களே, கடவுளால் தண்டிக்கப் படுவீர்கள்'... என்று சாபமிட்டால், நமட்டுச் சிரிப்பு செய்கின்றனர்... தசுயூக்கள் எதையும் நம்புவதில்லை...


இராமன் : (கோபமாக)
என்ன... இந்திரனை மறுக்கின்றனரா?... இறுமாப்பு நெஞ்சினர் கடவுளை நம்புவதில்லையா?... வேதம் கற்ற உங்கள் வாக்கு, கேலிச் செய்யப்படுகின்றதா?...
கோசிகன் :

ஆமாம்!... இரிக் வேதத்தை முழங்குகிறேன்... நீங்களும் முழங்குங்கள்... இந்திரன் செவியில் படட்டும்... அரக்கர் கூட்டம் அழியட்டும்... ஓ... இந்திரனே!..
இராமன் }
இலக்குவன் }
ஓ... இந்திரனே!...

கோசிகன் :
இடியை வைத்திருப்பவனே, எங்கள் வேண்டுதல் இதுதான்!...

இராமன் }
இலக்குவன் }
இடியை வைத்திருப்பவனே, எங்கள் வேண்டுதல் இதுதான்!...

கோசிகன் :
தசுயூக்களாம் தமிழர்கள் மீது இடியைப் போடு!...

இராமன் }
இலக்குவன் }
தசுயூக்களாம் தமிழர்கள் மீது இடியைப் போடு!...

கோசிகன் :
ஆரியருடைய பலத்தையும், கீர்த்தியையும் அதிகப் படுத்து!...

இராமன் }
இலக்குவன் }
ஆரியருடைய பலத்தையும், கீர்த்தியையும் அதிகப் படுத்து!...


கோசிகன் :
நன்று!... குழந்தைகளே, இப்பொய்கை ஆற்றங்கரையில் நான் வேள்வி நடத்த விரும்புகிறேன்... என் வேள்விக்கு உதவும் பொருட்டு, உமது தந்தை, தசரத மன்னனிடம் கூறி உம்மிருவரையும் அழைத்து வந்தேன் அல்லவா...
இராமன் }
இலக்குவன் }
ஆம்; முனிவரே!...

கோசிகன் :

அதோ, அப்பன்றிகளை இழுத்து வாருங்கள்... இந்திரனுக்கு பலியிட்டு வயிறார உண்போம்... பிறகு,
இராமன் :
பிறகு?

கோசிகன் :

மிதிலை நாடு செல்வோம்... அங்கு, சனக மன்னன் வேள்வி நடத்துவான்... வேள்வியில் புரவியின் புலால் கிடைக்கும்... சுவையாக இருக்கும்... அதையும் சுவைத்து, இந்திரனின் பலத்தைப் பெறுவோம்...
இராமன் }
இலக்குவன் }
நன்று, முனிவரே!... பன்றிகளைக் கொணர்கிறோம்!...

(செல்கிறார்கள் )

-திரை-









பாகம் - 1. காட்சி-4.

அரசவை

இராவணன்
வண்டார்குழலி
பீடணன்
காமவல்லி
மாரீசன்
தலைமை அமைச்சர் மூவர்
சாமரம் விசிறுவோர்

( காட்சி இரண்டின் இறுதிநிலைத் தொடரால்...)

பீடணன் :
அப்படியா?

இராவணன் :

ஆரிய நரிகள் தமிழ்க் காட்டுக்குள் புகுந்து விட்டனவா?... மீண்டும் ஊளையிடத் தொடங்கி விட்டனவா?. 'தாடகைப் பாட்டி ' என்றும், 'தமிழமுதை ஊட்டியவள்' 'செந்தமிழுக்கு அரணாய் விந்தகத்தில் நிற்பவள்' என்றும், 'தமிழ்த் தாய்' என்றுத் தரணியினரால் புகழப் பட்டவளையோக் கொன்றனர்?... மாலைக் காற்றோடு மனமகிழ்ந்துத் திரியும் மயில் சோலையில் உலாவச் சென்ற, தமிழ் மூதாட்டியையோ கொன்றனர்?... தாடகைப் பாட்டிக்கும், விந்த நாட்டுக்கும் அரனாய்த் திகழ்ந்த படைத் தலைவன் சுவாகுவையும் பாவியவன் மறைந்து நின்று, கொலைப் புரிந்தான்?...


மாரீசன் :
ஆரியர்களால், தாடகைத் தாய்க் கொலை செய்யப் பட்ட செய்தியறிந்தவுடன், நானும் படைத் தலைவன் சுவாகுவும் கேடர்களைத் தேடினோம்... முனிவர்க் கோலந்தரித்த கொடு மதியாளன் கோசிகன் வேள்விச் செய்துக் கொண்டிருந்தான்... அவனுக்குத் துணைப் புரிந்துக் கொண்டிருந்தனர் தசரதனின் இரு புதல்வர்கள்... எங்கள் இருவரையும் கண்டவுடன் வெங்கொடு நெஞ்சினர், அஞ்சி ஆங்கிருந்த மரங்களுக்குப் பின் ஒளிந்தனர்... பலிக்காகக் கட்டப் பட்டிருந்த பன்றிகளை அவிழ்த்துவிட்டு வேள்விக் கூடத்தை வெட்டி எரித்தோம்... மறைந்து நின்றிருந்த இராமன் சுவாகு மீது அம்பெய்திக் கொலைச் செய்தான்... தனித்து நின்ற என்னையும் கொல்லக் கூடும் என்பதால், மின்னல் வேகத்தில் மீண்டேன்...


காமவல்லி :
மன்னா!... விந்தநாட்டின் அடுத்த இளவரசி நான் தானே?...


இராவணன் :
ஆமாம்; காமவல்லி!


காமவல்லி :
எனக்கு முடிச் சூட்டுங்கள்... இப்போதே விந்தகம் செல்கிறேன்... வீணில் வம்பு வளர்க்கும் வட நாடோடிகளுக்கு, பாடம் புகட்டுகிறேன்... இன்று தாடகைப் பாட்டியைக் கொன்ற கயவர்கள், நாளை விந்தநாட்டின் வீடுகளில் புகுந்து, தமிழ் மகளிரைக் கொல்லவும் தயங்கிடுவரோ?... முனிவர் கோலம் தரித்து, பிணம் திண்றுத் திரியும் ஆரியர்களுக்கு, கல்லறைக் கட்டுகிறேன்... விடை கொடு, மன்னவா!


பீடணன் :
காமவல்லி, ஆத்திரம் கொள்ளாதே!... நீ இன்னும் சிறுமி!


காமவல்லி :
யாரைப் பார்த்து, சிறுமி என்றாய் சின்னண்ணா!... இராவணன் தங்கை காமவல்லி நான், அரசியலறியா சிறுமியெனில், இலங்கை மண்ணுக்கே இழுக்கல்லவோ... 'தமிழ்' என்று எப்போது என் நா சொல்லத் தொடங்கிற்றோ, அப்போதே என்னுள் வீரம் வளர்ந்து விட்டதை நீ அறியாயோ?... தமிழ் மண்ணில் பிறந்தப் பெண்களில் எவளையேனும் பேடி ஒருதியைக் காட்டு... நான் உயிர்த் துறக்கிறேன்...


அமைச்சர் (1) :
காமவல்லி, உன் வீரமும், விவேகமும் இலங்கை மண்ணுக்கு புகழ் சேர்க்கும்!... அய்யமில்லை!

காமவல்லி :

நன்றி, அமைச்சரே!... அமைச்சரே, வழிவழியாய் விந்தநாட்டின் அரசுரிமை யாருக்கு வழங்கப் பட்டுவருகிறது?...


அமைச்சர் (2) :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை நோக்கினாலும், விந்தநாட்டின் அரசுரிமை பெண்களுக்குத்தான் வழங்கப் பட்டு வருகிறது... இதில் அய்யமென்ன?...


காமவல்லி :
விந்தநாட்டின் அரசுரிமை பெண்களுக்கே கொடுக்கப் படுவதேன்?...


அமைச்சர் (3) :
விந்தநாட்டின் மக்கள் தொகையில் பெண்கள் அதிகம்... நீண்டக்காலமாகவே, இந்நிலைமை அங்குள்ளது... பெண்கள் அதிகம் உள்ளதால், பெண் ஒருவளால்தான் விந்தகம் ஆளப்படவேண்டுமென்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கை மன்னன் ஒருவன் விரும்பினான்... அவனது விருப்பம் இன்றளவும் மீறப்படவில்லை...


காமவல்லி :
மன்னா, நீ மீறப் போகிறாயா?...


இராவணன் :
பீடணன் உன்னை சிறுமி என்று கூறியதுப் போல், நானுங் கூறி முன்னோர் வழியை மீறிடுவேன் என்று நினைக்கிறாயா?...
காமவல்லி :

இல்லையேல்; விந்தகம் ஆளும் உரிமையைக் கொடு!... சூது நெஞ்சைச் சுமந்து, அண்டிப் பிழைக்க வரும் ஆரியர்க் குலத்தை அழிக்க, எனக்கொரு வாய்ப்புக் கொடு, தமிழ் வேந்தே!...


அமைச்சர் (1) :
தமிழினத் தலைவா, தயக்கமேன்?


இராவணன் :
அமைச்சரே, என் தயக்கம் என் தங்கையின் வீரம் பற்றியதல்ல!...


வண்டார்குழலி :
இளமை நிழல்கள் இதயந்தனில் தவழும் பருவமன்றோ, காமவல்லியின் பருவம்!... இப்பருவத்தில், அரசியல் சுமைத் தாங்கிடுவாளானால், இல்லறச் சுவை இல்லாதுப் போகுமே!...


காமவல்லி :
இன்சுவைத் தமிழ்ப் பொழியும் இலங்கை தேவியே!... இல்லறத்தில் சுவை உண்டென்று பகர்வீராயின், அதனினும் அமுதச்சுவைப் பெறுவேன்; தமிழுக்கு அரனாய் நின்று!...
இராவணன் :
காமவல்லி...

காமவல்லி :

யாகமும், வேள்வியும் அறச்செயல்களென்றுக் கூறி, மிருகக் கொலைப் புரிகின்றனர் ஆரியர்... பெண்ணினதிற்கே பெரும் பொல்லாங்கு செய்து விட்டனர்... தாடகைப் பாட்டியை, பெண்ணென்றும் பாராமல், ஈவிரக்கமற்றோர் கொன்றனர்... இதுதான் ஆரியநெறியோ?... மறைந்து நின்று சுவாகுவைக் கொலைச் செய்தனர்... இதுதான் ஆரிய வீரமோ?... அமைச்சர்களே, கூறுங்கள்!... எந்த ஆரியக்கூட்டம் பெண்ணைக் கொன்றதோ, அதே பெண் இனத்தைச் சேர்ந்த என்னால் ஆரியர்க் கூட்டம் அழிக்கப்பட வேண்டும்... வாழ்த்துக் கூறி, மகுடஞ் சூட்டு, மன்னா!...


இராவணன் : ( காவலனை நோக்கி )
மகுடம் எடுத்து வா!...


( காவலன் மகுடம் கொண்டு வருகிறான்... இராவணன் மகுடத்துடன் காமவல்லியை நோக்கி நடந்த வண்ணம்...)


இராவணன் :
ஓங்கி உயர்ந்து நிற்கும் விந்தமலைப் போல், உயர்ந்து விளங்கும் உனது எண்ணம், இலங்கையின் புகழ்ப் பாடட்டும்... இம்மகுடத்தில் ஒளிரும் வைரமணிப் போல், ஒளிரும் உன் பார்வைப் பட்டு, ஆரிய இருள் விலகட்டும்... வாழ்க தமிழ்!... வாழ்க தமிழர் நாடு!...

(அனைவராலும் வாழ்த்து முழக்கம், முழங்கப்பட-
இராவணன் காமவல்லிக்கு மகுடம் சூட்டுகிறான்...)

- திரை -










பாகம் : 1. காட்சி : - 5 தெரு.

முரசறைவோன்
வாசிப்போன்.

வாசிப்போன்:

இதனால், தமிழ் மக்களுக்குத் தெரியப் படுத்துவது என்னவென்றால், அயோத்தி மன்னன் தசரதனின் புதல்வர்களாகிய இராமன், இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகிய நால்வருக்கும் இரு கிழமைகளுக்கு முன்பு, மிதிலையில் திருமணம் நடந்தது... மன்னன் தசரதனுக்கு வயது மூப்பு ஆகி விட்டதால், மூத்தப் புதல்வன் இராமனுக்கு, அரசுரிமைத் தரத் திட்டமிடப்பட்டுள்ளது... இராமன் ஒரு கொடு நெஞ்சினன்... மூர்க்கன்... முரட்டு குணம் மிக்கவன்... சுய அறிவு அற்றவன்... மிருகங்களைக் கொன்றுத் தின்னும் முனிவர்களின் சொல் கேட்டு நடக்கும் சிறு மதியாளன்... சிறுதும் ஈவிரக்கமற்ற இராமனை அயோத்தியின் அரசனாக்கி, தமிழகத்தின் மீது படையெடுக்க, கோசிகன் முதலான முனிவர்களோடு தசரதன் திட்டமிட்டுள்ளான்... இந்தச்செய்தி நமது ஒற்றர்கள் மூலமாக, இலங்கை அரசுக்கு எட்டியுள்ளது... படையெடுக்கும் முன்னர் ஆரியர்க் கூட்டம் , நண்பர்களைப் போல் தமிழகத்தில் நுழைந்து, பின்னர் நயவஞ்சகம் புரிந்திடவும் சூழ்ச்சி வகுக்கப் பட்டுள்ளது... ஆரியநெறியை எந்தெந்த வகையில் புகுத்தலாம் என்பதற்கான ஆலோசனை நடந்துள்ளதாக, ஒற்றுக் கிடைத்துள்ளது... ஆதலால்; ஆரியச்செயல்களை மிகவும் கண்காணித்திட வேண்டுமென தமிழர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...
- இது அரசர் ஆணை!
- திரை -











பாகம் - 1. காட்சி -6. நூலகம்.


இராவணன்
வண்டார்குழலி
திரிசடை



(ஓலைச்சுவடிகள் மூங்கிற் கயிற்றில் தொங்குகின்றன... இராவணன் இருக்கையில் அமர்ந்து, ஏடு படித்துக் கொண்டிருக்க-


அன்னமென வண்டார்குழலி நுழைகிறாள்...


குழலியின் நுழைவுதனை உணராமல், இராவணன் ஏட்டில் சிந்தனையை மூழ்கச் செய்திருக்கிறான்...


குழலியோ அருகில் சென்று- )


வண்டார்குழலி :
திண்தோள் மறவா!... திகட்டாத் தமிழ்த் தலைவா!... பெண் ஒருவள் வந்துள்ளதையும் உணராது, வெண்முகிலிடை முகிழ்ந்த முழுமதிப் போல், மூழ்கி விட்டனையோ சிந்தைதனில்; சீராளா!...


இராவணன் : ( பொய்ச் சீற்றத்தோடு )
தமிழமுதைப் பருகி இருந்தேன்... தடைச்செய்வதுப் போல் வந்தனையே!...
வண்டார்குழலி :
தடையாய் வந்துற்றவளுக்கு தண்டனையும் உண்டோ?

இராவணன் :
உண்டு!

வண்டார்குழலி :
யாதோ?

இராவணன் : ( பொய்மை கோபமாக )
இடைதனைப் பற்றிடுவேன்...

வண்டார்குழலி :
ஓ...

இராவணன் :
இதழ்தனைச் சுவைத்திடுவேன்...

வண்டார்குழலி :
அம்..மா...

இராவணன் :
மஞ்சம்தனில், மங்கையுனை மயங்கச் செய்திடுவேன்...

வண்டார்குழலி :
அம்...மம்மா...

இராவணன் :
கொஞ்சு மொழிகள் கூறி நெஞ்சோடு

வண்டார்குழலி :
நெஞ்சோடு?

இராவணன் :
சிறைப்படுத்துவேன்...

வண்டார்குழலி :
ஆ... அச்சமாகுதே!... மன்னவா...

( அஞ்சுபவள் போல் பாவித்து, நெஞ்சில் சாய்கிறாள்... சாய்ந்தவளை அரவணைத்து... )

இராவணன் :
குழலி

வண்டார்குழலி :
மன்னா!

இராவணன் :
அச்சத்தோடு அடிக்கடி என்னிடம் நீ ஓடி வரவேண்டும்...

வண்டார்குழலி :
வந்தால்?

இராவணன் :
அன்போடு நானுன்னை

வண்டார்குழலி :
என்னை?

இராவணன் :

காலம் முழுவதும், அணைத்துக் கொள்வேன்... மகுடம் வேண்டாம்... மணி ஆரங்கள் வேண்டாம்... பொன்னும் வேண்டாம்... பெண்ணே, நீ
வண்டார்குழலி :
இலங்கையும் வேண்டாம்?

இராவணன் :
வேண்டாம்...

வண்டார்குழலி :
இலங்கையைக் கோலோச்சும் தமிழும் வேண்டாம்?

இராவணன் :
"-------------------------------------------"

வண்டார்குழலி :

ஏன் மன்னா, மவுனம்? பெண்ணொருத்திக்காக, இலங்கையின் எழிலைப் பாழ்ப் படுத்தினான் இலங்கை வேந்தன் எனும் பழிச் சொல்லுக்கு, மன்னா , என்னால் நீங்கள் இரையாக வேண்டாம்...


இராவணன் : (புன்னகைத்து )
இனம், மொழி, பண்பாடு, இவைகளின் முன்னே, எல்லாமே நிலையில்லாதவை என்பதை உணராதவனா நான்?... விளையாட்டுக்குச் சொன்னதைக் கோணலாய்க் கொண்டு விட்டாயே?...


வண்டார்குழலி :
மன்னவா, மொழி உணர்ச்சி நம்மவரிடையே மேலோங்கி இருப்பதேன்?


இராவணன் :
மொழி, மானிடருக்கு சுயமரியாதையைக் காட்டுகிறது!... மொழி, பகுத்தறியும் உணர்வைத் தருகிறது... மொழி, மானிடருக்கு மானிடர் எனும் தகுதியைத் தருகிறது...
வண்டார்குழலி ;
ஆரியர் பேசுவதும் ஒருவித மொழிதானே?

இராவணன் :
அய்யமென்ன?...

வண்டார்குழலி :

ஆனால்; நம் தமிழ் மொழிப் போல், ஏன் ஆரியமொழி சீருடன் இல்லை?... ஆரியமொழி ஆரியர்களை மானிடர்களாய் மாற்றாமல், நாடோடிகளாகவும், கொள்ளையடிப்பவர்களாகவும், சூது, சூழ்ச்சி நிறைந்தவர்களாகவும், மிருகங்களை வதைப்பவர்களாகவும் வைத்திருக்கிறதே?


இராவணன் :
விலங்கையும், மானிடரையும் வேறுபடுத்துவது மொழி!... இது விலங்கு!... இவன் மானிடன் என்று காட்டுவது பகுத்தறிவு!... பகுத்தறிவைத் தோற்றுவிப்பதும் மொழிதான்!


வண்டார்குழலி :
அந்த பகுத்தறிவு, ஆரியமொழியில் ஏன் இல்லை என்பதுதான் என் கேள்வி?...


இராவணன் :
குழலி, இது மிகப் பெரியக் கேள்வி!... மொழி வல்லுனர்களிடம் கேட்கப்பட வேண்டியக் கேள்வி!... ஆயினும்; எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்...
வண்டார்குழலி :
சொல்லுங்கள்...

( குழலியின் நகையைத் தொட்டு...)
இராவணன் :
இது என்ன பொருள்?

வண்டார்குழலி :
பொன்!

(வாள் உருவி )
இராவணன் :
இது?

வண்டார்குழலி :
இரும்பு!

இராவணன் :
தமிழ், தங்கத்திற்கு நிகரானது!... ஆரியம், இரும்புப் போன்றது...

வண்டார்குழலி :
அங்ஙனம் நோக்கின், தங்கத்தைவிட, இரும்புதானே உறுதியானது?

இராவணன் :

தங்கத்தையும், இரும்பையும் ஓரிடத்தில் வைத்துவிடு!... சின்னாட்கள் கழிந்தப் பின் மீண்டும் அவற்றைக் காண்போம்... தங்கம் தங்கமாகவே இருக்கும்... இரும்பு


வண்டார்குழலி :
துருப்பிடித்து, உருச்சிதைந்துக் காணப்படும்!... இரும்பு வைக்கப் பட்ட இடமும் தன்மைக் கெட்டுக் காணப்படும்... புரிகிறது, மன்னா!... நிலத்தின் இயல்பு நீருக்கு இருப்பதுப் போல், மொழியின் இயல்பு மக்களுக்கும் இருக்கும்!... தங்கத் தமிழின் இயல்பு தமிழர்க்கு இருக்கிறது... துருப்பிடித்த உள்ளம் போல் ஆரியர் காணப் படுவதற்கு ஆரியமொழியின் இயல்பே!... புரிந்துக் கொண்டேன், மன்னா!...


வண்டார்குழலி :
மன்னவா, இன்று பிறக்கும் மானிடன் நாளை மூப்பு எய்திடுவான்... அதே கதிதான் ஏனையப் பொருள்களுக்கும்!... ஆனால்; என்றோப் பிறந்த தமிழ் இன்றும் இளமையுடன் இருக்கிறதே?


இராவணன் :
சொற் வளமும், பொருள் வளமும் அழிக்கவியலாத அரனாய்த் திகழ்கின்றனவே... சொல்லும், பொருளும் ஆலம் விழுதுகளாய் இருக்கையில், தமிழுக்கு அழிவு உண்டாகிடுமோ?... சொல்லும், பொருளும் நிறைந்த தமிழ்ப் பூங்காவில் புதுப்புது இளமலர்கள் பூத்தல் இயற்கைத் தானே? எப்போது நோக்கினும், இளமலர்களன்றோ தமிழ்ப் பூங்காவில்!... அப்பப்பா... தமிழ்ப் பூங்கா, என்றைக்குமே இளமைதான்!... புரிகிறதா குழலி!
வண்டார்குழலி :
புரிகிறது, வேந்தே!...

இராவணன் :

இடர் வந்துற்றப் போதும், இன்னாத செய்யாதே!... துயர் வந்துற்றப் போதும் துணிவுதனை இழந்திடாதே!... எப்பொருள் எத்தன்மைதாயினும் அப்பொருள் மெய்மையை அறிந்திடு... தேரான் தெளிவும், தெளிந்தான் கண் அய்யமும் தீரா இடும்பைத் தரும்... அறிவிற் சிறந்த பெரியாரின் நட்பு, வாழ்வின் ஒளிவிளக்காகும் என ஒரு தாயாய் - தந்தையாய் - நமக்கு அறிவூட்டுவது நமது தமிழல்லவா!... நெல் விதைத்தால், நெற்பயிர் முளைக்கும்... முள் விதைத்தால்?
வண்டார்குழலி :
முள்ளன்றோ முளைக்கும்!...

இராவணன் :

' நீ வாழ, பிற உயிர்களைக் கொன்று விடு!... உன் செயலுக்கு இடையூறாய் எவனாவது வந்தால், அவனையும் அழித்துவிடு!... உன் செயல்களைப் பழிப்பவனை, இழிபிறவியெனப் பகர்ந்திடு... எந்த வாய்ப்பையும் நழுவவிடாதே!... எதையும், உனக்கு ஏற்றதாய் ஆக்கிடத் தவறாதே!... நீயும், உன் குலமும் தழைக்க எந்த ஒரு கொடுஞ் செயலுக்கும் தயாராக இரு' என்று நான் கற்பித்தால்?


வண்டார்குழலி :
நற்பண்புகளற்ற காட்டு மிராண்டி குணமன்றோ என்னுள் குடிபுகும்!...


இராவணன் :
அத்தகையக் குணத்தைத்தான் ஆரியமொழி, ஆரியருக்குக் கற்பிக்கிறது...


வண்டார்குழலி :
தெரிந்துக் கொண்டேன் மண்ணா!... ஆரியமொழியின் வளர்ச்சியின்மையைத் தெரிந்துக் கொண்டேன்... பகலவன் ஒளி போல, பாரினில் மக்களுக்கு அறிவு வளர வளர, இருளாய்க் கிடக்கும் ஆரியக் கருத்துகள் மெல்ல மெல்லக் கரைந்துப் போகும்... ஆரியமொழியும் அழிந்துப் போகும்... பகலவன் ஒளி போல பாரினில் மக்களுக்கு ஒளியூட்டும் தமிழ் மொழி, எல்லாராலும் நேசிக்கப்படும்... தமிழும் இளைமையாய் - வளமையாய் - புதுமையாய் - திகழும்... எங்கும் தமிழ்; எப்போதும் தமிழ் என்ற முழக்கம் எட்டு திக்கும் ஒலிக்கும்... என்றும் இளமையாய் எமது தமிழ் நிலவிடும்!... வாழ்க தமிழ்!...

( ' வாழ்க தமிழ் ' என்றுக் கூவிய வண்ணம், திரிசடை நுழைகிறாள்; நாட்டிய உடை தரித்திருக்கிறாள்...)
இராவணன் :
திரிசடையே, வா!... ( தூக்கி முத்தமிடுகிறான் )

திரிசடை :
பெரியப்பா, வணக்கம்!... பெரியம்மா, வணக்கம்!...

வண்டார்குழலி :
வணக்கம், குழந்தாய்!... அதி அற்புதக் கோலம் தரித்து வந்துள்ளாயே...

திரிசடை :

மொழி ஆராய்ச்சியில் மூழ்கிவிட்ட நீவிர் இருவரும், இன்று என் பிறந்தநாள் விழாவினை மறந்து விட்டீரா... மறதி என்பது, நற்செயல் - நற்புகழ் - இவைகளுக்கு காலன் என்பதையும் மறந்தீரோ?...


இராவணன் :
ஓ... திரிசடையே!... இன்று உன் பிறந்தநாள்!... நன்று; குழந்தாய்!... தமிழ் வாழ, தமிழ் நிலம் செழிக்க, நீ வாழ்க!... வாழ்க; மகளே வாழ்க!... வளரும் குழந்தாய், உன்னோடு தமிழையும் வளர்த்துவாய் குழந்தாய்!...


திரிசடை :
உயிர் மீது ஆணை!...


வண்டார்குழலி :
மகளே, சேயோன் எங்கே?


திரிசடை :
யானையோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்...


வண்டார்குழலி :
( தானே ) என் மகன் வீரனாயிற்றே!...


இராவணன் : ( குழலியை நெருங்கி )
குழலி, சேயோன் உனக்கு மட்டுமல்ல; எனக்கும் மகன்தான்!...


(குழலியின் முகத்தை அன்போடுத் திருப்பி, முகத்தோடு, முகம் பதிக்க முயற்சிக்கையில்- )
திரிசடை :
பெரியப்பா!...

( திரிசடையின் குரலால் இருவரும் விலகிட- )

திரிசடை :

இன்று என் பிறந்த நாலாயிற்றே... இன்று என் நடன அரங்கேற்றம் மறந்து விட்டீரா?... வருவீர்... வருவீர் என அவையே காத்திருக்க, நீவீரோ இங்கு...


இராவணன் :
இதோ..வந்தோம்... வந்தோம்...


( நூலகம் விட்டு வெளியேறுகிறார்கள்... )


- திரை -


பாகம் 1. காட்சி : 7. நடனச்சாலை

பீடணன்
அமைச்சர் மூவர்
சாமரம் விசிறுவோர்
திரிசடை
இராவணன்
வண்டார்குழலி
மாரீசன் .


( திரிசடையின் நடன அரங்கேற்றம் நடந்து முடிய-
மாரீசன் நுழைந்து )

மாரீசன் :

அன்புடை வேந்தே, வாழி!... அருந்தமிழிலங்கை அரசே வாழி!... பண்புடை பைந்தமிழ்த் தலைவா, வாழி!... அயோத்தி நகரிலிருந்து ஒற்று வந்துள்ளது...


இராவணன் :
வாசி


மாரீசன் : (ஓலையை வாசித்தல் )
அயோத்தி நகரில் குழப்பம் நிலவுகிறது... பரதனுக்கு முடிசூட்ட முனைப்பானப் பணி நடந்துக் கொண்டிருக்கிறது...


அமைச்சர் (1) :
பரதனுக்கு முடிசூட்டலா?


அமைச்சர் (2) :
மூத்தவன் இருக்க, இளையவனுக்கா?


அமைச்சர் (3) :
முரண்பாடுதானே ஆரியர்களின் ஒழுங்கு நெறி!... அவ்வண்ணம்தானே செயலும் இருக்கும்?...


மாரீசன் : (தொடர்ந்து வாசித்தல் )
தசரதன், வயது மூப்பு எய்தி விட்டதாலும், ஆரியநெறியை, அகிலம் முழுவதும் பரப்புவதற்கு உரிய மனவலிமை அவன்பால் தளர்ந்து வருவதாலும், அத்தகையச் செயல்கள் செய்தலில் அதி தீவிரப் பற்றுதல் கொண்ட, இராமனை அயோத்திக்கு அரசனாக்குவது அருமையானது என்று முடிவுச் செய்து தசரதனும், வசிட்ட முனிவனும் ஏற்பாடுகளைச் செய்யலாயினர்...


பீடணன் :
மிதிலை நகர ஒற்றும் இச்செய்தியைத்தானே கூறிற்று!...


மாரீசன் : ( மீண்டும் வாசித்தல் )
ஆனால்; தசரதன் மனைவிகளில் ஒருத்தியான கேகயி, தனது மகன் பரதனுக்குத்தான் முடிசூட்ட வேண்டுமென்று தசரதனிடம் வாதிட்டு, வெற்றிப் பெற்று விட்டாள்...

இராவணன் :
அமைச்சரே,

அமைச்சர் (1):

மன்னா, நம் தமிழர்களைப் போல் ஒருவனுக்கு ஒருத்தி எனும் சீரியக் கொள்கை ஆரியர்களிடத்துக் கிடையாது என்பது தாங்கள் அறிந்தது தானே!... ஆரிய மன்னன் தசரதன் காம இச்சை மிகுந்தவன்!... அழகியப் பெண்கள், கண்ணில் பட்டால் பள்ளியறைக்கு இழுத்துச் செல்லும் இழிகுணாளன்... அயோத்தியில் ஒருத்திக்கு திருமணம் செய்விக்கப்படுகிறது என்றால், அவள் முன்னதாக தசரதனின் இன்புறுதலுக்கு உட்பட வேண்டும்... அவன் களித்தப் பின்னரே, கணவன் அவளைத் தொடுதல் வேண்டும்... அயோத்தியின் கன்னியர் முதலில் மனைவியாவது தசரதனுக்குத்தான்!... வரிசைப் படுத்திச் சொன்னால் ஆயிரமாயிரம் மனைவியர் சேருவர்; தசரதனுக்கு!... அயோத்திக்கு அருகில் கவுதுக மங்கல் என்றழைக்கப்பட்ட கேகய நாட்டுக்குச் சென்றான், தசரதன் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர்...


இராவணன் :
போர்த் தொடுத்தா?


அமைச்சர் (1) :
இல்லை;... கேகயநாட்டு மன்னன் சுபமதிக்கு, வாரிசாக கேகயி எனும் மகள் மட்டுமே இருந்தாள்... கேகயியை மணப்பதன் மூலம், கேகய நாட்டை, தான் கவர்ந்து விடலாம் என்று தசரதன் திட்டமிட்டுச் சென்றான்...


அமைச்சர் (3) :
தசரதனுக்கு, தன் மகளை மணமுடித்துக் கொடுத்து விடலாம்; ஆனால்; தன் மகளையும், தன் நாட்டையும் கொடுத்தாலும் தசரதனின் மூத்த மனைவியின் மகனன்றோ, தன்னுடைய கேகய நாட்டையும் ஆள்வான்... தன் மகள் வாரிசு அரண்மனையின் ஊழியனாக ஆகிட நேரிடும்...' என அஞ்சி, தசரதனுக்கு கேகயியைத் தர மறுத்தான் சுபமதி!


அமைச்சர் (1) :
கள்ளத் தூது விட்டான் தசரதன், கட்டழகி கேகயிக்கு!... அறிவிற் சிறந்த கேகயி, ' தசரதா, உமது வாரிசாக அயோத்தியை ஆளும் உரிமையை என் வயிற்றில் பிறக்கும் மகனுக்குத் தருவதாக நீர் வாக்களித்தால், நான் உம்மை மணந்துக் கொள்கிறேன் ' என்றாள்!...


அமைச்சர் (2) :
கவுதுகமங்கள் நாடு அயோத்தியுடன் சேர்த்திடவும், கேகயியின்பால் கொண்ட சிற்றின்ப வேட்கையாலும், பின் நிழ்வைச் சிந்தியது தந்தான் வாக்கு!...


இராவணன் :
அந்தவாக்கின்படி இன்று கேகயி, தன் மகன் பரதனுக்கு அரசுரிமையைப் பெற்றுவிட்டாள் போலும்!...


அமைச்சர் (3) :
ஆம்; அரசே!...


மாரீசன் : ( மீண்டும் வாசிக்கிறான் )
' மூத்தவன் யான் இருக்க, இளையவன் பரதனுக்கு அரசுரிமையைத் தரும் அயோத்தி மன்னா, நீயோர் காமஈனன்' என இராமன் தனது தந்தையைப் பலவாறு ஏசினான்... அரசவையில் தந்தைக்கும், தனயனுக்கும் நடந்த வாய்ச் சண்டை, வாள் சண்டையாக மாறிற்று...


இராவணன் :
என்ன, தந்தையோடு தனயன் மோதலா?


மாரீசன் : (மீண்டும் வாசிக்கிறான் )
இராமன், ஈன்றத் தந்தை என்றும் பாராமல், பாய்ச்சினான் நெஞ்சில் வாள்!... மாண்டான் தசரதன் !...

இராவணன் : (அதிர்ந்து )
தசரதன் கொல்லப்பட்டானா?

மாரீசன் : (வாசித்தல் )

அமைச்சர்களும், வீரர்களும் திகைத்து நின்ற சிறு நாழிகையைப் பயன்படுத்தி இராமன் நழுவினான்... இராமன் எங்கு சென்றான்; எங்கு ஒளிந்துள்ளான்? என சரியானத் தகவல் இல்லை... மரணத்துக்கு முன்னர், தசரதனால் இடப்பட்ட ஆணையின்படி பரதனுக்கு முடிசூட்ட முனைப்பானப் பணி நடந்துக் கொண்டிருக்கிறது...


அமைச்சர் (1) :
வெட்கம்... வெட்கம்... மனித இனமே, வெட்கித் தலை குனியாதோ ஆரியர் நடத்தையால்?... பண்பாடு அறியாத ஆரியர்கள்!...


இராவணன் :
உள்ளம் பண்பட்டிருந்தால் அல்லவா, இனத்தின் பண்பாடு வளரும்!...


அமைச்சர் (3) :
ஆம்; அரசே!...


மாரீசன் : ( மீண்டும் வாசிக்கிறான் )
பரதனின் அன்னையே, இன்று அயோத்தியின் அனைத்து அதிகாரங்களையும் கையகத்தேக் கொண்டவள் போல் திகழ்கிறாள்... பரதன் அரியணை ஏறினும், கேகயிதான் முடிசூடா மகாராணியாய்த் திகழ்வாள் போல் நிலைமை உள்ளது!...


அமைச்சர் (3) :
அயோத்தியை அன்னை ஆண்டாளும், தனயன் ஆண்டாலும் ஆரியர் குலம் ஆரியர்க்குலம்தான்!... தமிழகத்தில் ஆரியநெறியைத் திணிப்பதில், ஆரியர்களிடையே பேதமிருக்காது!...


இராவணன் :
அதனால்; வடநாட்டுச் செயல்களை நுண்மையுடன் கவனித்திட நமது உள்ளான்களிடம் உரைத்திடு!...

மாரீசன் :
அப்படியே, வேந்தே!...

( மாரீசன் செல்லுகிறான்... )

- திரை -













பாகம் - 1. காட்சி - 8. காடு இரவு

இராமன்
இலக்குவன்
சீதை



( இராமனும், சீதையும் மரத்தடியில் அயர்வு மிகுதியுடன் அமர்ந்திருக்க-
குறுக்கும், நெடுக்குமாக இலக்குவன் நடையிட்டுக் கொண்டிருக்கிறான் )


இராமன் :
இலக்குவா, மனதை சாந்தமாக்கு!...


(இலக்குவன், கேளாமல் நடையிடுகிறான் )
இராமன் :
தம்பி, அமைதிக் கொள்!...

( இலக்குவன் தொடர்ந்து நடையிடுகிறான்...)

இராமன் :

கண்ணயர்வோம்... இலக்குவா, சோர்வுற்றிருக்கிறேன் நான்!... கோபத்தின் விளிம்பில் திரியும் உன்னை, சாந்தப் படுத்த என்னுள் தெம்பில்லை... பேசவும் சக்தியற்றவனாகி விட்டேன்... உறக்கம் வேண்டி, நரம்பு நாளங்கள் கூட அழுகின்றன... இந்நிலையில் என்னைப் பேச வைத்து என் வேதனையை வளர்க்கிறாய்... படுத்துறங்கு இலக்குவா!...


(இலக்குவன் பேசாது, தொடர்ந்து நடையிடுகிறான்...)


இராமன் :
சரி; ... சரி;... மேலும் உறக்கமின்றி இடருற இயலாது... நாங்கள் துயில்கிறோம்... உனக்கு எப்போது விருப்பமோ, அப்போதுப் படு!,,, ஆனால்; நானும், சீதையும் சயனித்திருக்க, நீ எங்களைக் காவல் காப்பதுப் போல் இங்கே அலைவது சரியல்ல!... ஆரியர் மரபில் வந்த வீரப்புதல்வன் இலக்குவன், காட்டில் காவலாளியைப் போல் திரிகிறான் என்றச் சொல்லுக்கு ஆளாகாதே!...


சீதை :
இலக்குவா, நடந்தது நடந்து விட்டது... இனி நடக்கக் கூடியதைச் சிந்திப்போம்...

இலக்குவன் :
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

இராமன் :
என்னடா சிந்தனை?

இலக்குவன் :

மழையும், வெயிலும், கடுங்குளிரும், அடல்பனியும் ஈட்டி முனைகளாய் நம்மைத் தாக்க, வெஞ்சாமரமும், வெண்பட்டும், பொன்னூஞ்சலும், புதுப் பெண்களும் பரதனைச் சீர் செய்வதா?


இராமன் :
விதியின் கொடுஞ்செயல்!... இதன்றி வேறு காரணம் உண்டோ?...


இலக்குவன் :
விதியோ?... விதியின் குரல்வளையைக் கொய்து, குருதி அருந்துகிறேன்... ஆணையிடு!...


சீதை :
இலக்குவா, ஆத்திரம் வேண்டாம்... ஆத்திரங்கொண்டு உங்கள் தந்தையாரைக் கொன்று விட்டதாலன்றோ இன்று நம் நிலை இதுவாயிற்று!...' மாமன்னரைக் கொன்ற மாபாதகரை, மாய்ப்போம் ' என்று மக்கள் கொதித்தெழுந்து விட்டனர்... படை வீரர்களும் நம்மைப் பழி வாங்கும் பொருட்டுத் தேடியலைகின்றனர்... அரசமரபினருக்குரிய, ஆடை, அணிகளைக் களைந்து, காட்டுவாசிகளுக்குரிய வேடந்தரித்து, தப்பித்தோம்; பிழைத்தோம் என்று ஓடி வந்திட்டோம்... இனியும் அறிவுக்குப் புறம்பான செயலில் இறங்குவோமானால், இக்காட்டில் கூட தங்குவதற்கு இடங்கிடைக்காது!...


இலக்குவன் :
எத்தனைக் காலத்திற்கு இந்த ஒளிவு வாழ்க்கை?... நான் போகிறேன், அயோத்திக்கு!... வெட்டி வீழ்த்துகிறேன், பரதனை!... அரசனாக்குகிறேன், உன்னை!...


இராமன் : (ஆவலோடு )
இயலக்கூடியச் செயலா?...


இலக்குவன் :
ஏன் இயலாது?... ஆயிரமாயிரம் மனைவிகள் தசரதனுக்கு... அவர்களில் ஒருத்திதானே கேகயி?... ஆயிரமாயிரம் மனைவியரில், மூத்தவள் உன் அன்னை!... மூத்தவன் நீயிருக்க, தேவதாசிப் போல் தசரதனை மயக்கி, வாக்குப் பெற்று வந்தவளின் மகன் அரசாள்வதா?...


சீதை :
இலக்குவா, பரதன் யார்?... அவரும் உங்கள் சகோதரன் தானே?... நம்மில் ஏனிந்த வேற்றுமை?... ஆசை எனும் நச்சு விதையன்றோ நாசப் பயிரை விளைவிக்கின்றது... பரதன் நமக்கு அரண்மனையில் இடமில்லை என்று கூறினாரா?... அல்லவே... கைகேயித்தான் நம்மைக் கடுமொழிகளில் ஏசினாளா?... இல்லையே... வேறென்னக் கொடுமை நிகழ்ந்து விட்டது?...
இலக்குவன் :
கொடுமையா?... அரச பதவியே பறிப் போய் விட்டது...

சீதை :

எங்குப் போயிற்று?... அரசபதவி அயல்நாட்டவனுக்கா போயிற்று?... நம் குடும்பத்தவனுக்குத்தானே?...


இலக்குவன் :
ஆமாம் !... இராமனும் நம் குடும்பத்தவன்தான்... சத்ருக்கனும் நம் குடும்பத்தவன்தான்... பரதனும் நம் குடும்பத்தவன்தான்... நானும் நம் குடும்பத்தவன்தான்... நீயும் நம் குடும்பத்தவள்தான்... ஆனால்; இராமனுக்கு மட்டும் ஏன் மனைவியாக இருக்கிறாய்?...


இராமன் :
தம்பி, உன் கோபத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது... சிறு வினையாயினும், பெரு வினையாயினும் நாம் ஒன்றாய்த் துய்ப்பவர்களாயிற்றே... உணர்வோடு ஒன்றிவிட்டவர்களன்றோ நாம்!... தந்தையின் மதியற்றச் செயலால், இன்று நம் நிலை இதுவாயிற்று!...


இலக்குவன் :
தந்தையாம், தந்தை!... பெண்பித்தன்!... செ... நீ மார்பில் மட்டுமே வாளைப் பாய்ச்சினாய்... நானாக இருந்திருந்தால், தசரதனைக் கண்டந் துண்டமாக, வெட்டியிருப்பேன்... நடுத்தெருவில் நின்று மாங்கிசத் துண்டுகளை, கழுகுகளுக்கு வீசியிருப்பேன்... பயந்து, நாமிங்கு, காட்டுக்கு வந்தது தவறு...


இராமன் :
மன்னன் கொல்லப்பட்டான் எனுஞ் சேதியறிந்து, அயோத்தி அடைந்த ஆவேசத்தை நீ அறியவில்லையா?... மாறுவேடம் நாம் தரித்தோமில்லையேல், நகர எல்லையைத் தாண்டியிருப்போமா?... நம்நாட்டு எல்லையில் இருந்தாலே, ஆபத்து என்பதால்தானே, தமிழக எல்லைக்குள் ஓடி வந்திருக்கிறோம்...
இலக்குவன் :
எத்தனைக் காலத்துக்கு இப்படியே இருப்பது?...

இராமன் :

படைப்பிரிவினரில் சிலர் என்னை நேசிப்பவர்கள்!... அவர்களின் துணையோடு கலகம் விளைவித்து, பரதனைக் கொல்வேன்... பின்னர் அரியணை ஏறுவேன்...


இலக்குவன் :
ஆகா!... அருமையானத் திட்டம்... படைப்பிரிவினரில் எனக்கும் தெரிந்த சிலர் உள்ளனர்...


இராமன் :
தம்பி, நாளை நீ, அயோத்திச் செல்ல வேண்டும்...


இலக்குவன் :
சென்று?...


இராமன் :
நமது நேசவீரர்களை, சந்தி!...

இலக்குவன் :
சந்தித்து, கலகத்திற்கான ஆக்க வேலையில் ஈடுபடுத்த வேண்டும்?...

இராமன் :
ஆமாம்!... இப்போது படு!...

இலக்குவன் :

நீங்கள் படுங்கள்!... நான் நம் திட்டத்திற்கு வேண்டிய வழிமுறைகளை வகுத்து, வெற்றிக் கொள்ளும் வரை, என் விழிகள் உறக்கத்தை நாடாது!...


(இராமனும், சீதையும் விலங்குத் தோல் விரித்து, இணைந்து உறங்க-
இலக்குவன், சிந்தித்த வண்ணம் நடையிட்டுக் கொண்டிருக்கிறான்... )


- திரை -










பாகம் -1. காட்சி - 9. காட்டுக்குடில் ( உதயப்பொழுது )

இராமன்.
சீதை.


( குயில் கூவுகின்றன... காகம் கரைகின்றன... புல்லினங்களின் பல்வேறு இசை எங்கும் தவழ்கின்றன...

இருள் மெல்லிதாக கரைகின்றது...மெல்லிய ஒளிப் படர-

சீதையும் இராமனும் துயில் களைந்து எழுகின்றனர்...

சோர்வு மிகுதியால் இராமன் முனுமுனுக்கிறான்...)

இராமன் :

அப்பப்பா... உடல் வலிக்கிறது... மென்மேகமொத்த பஞ்சணைச் சுகம் என்னவென்பது இந்தக் கல்மேட்டில் துயிலும் போதுதான் தெரிகிறது...


சீதை :
பிரபு, அருகில் நீரோடை இருக்கிறது... மேனி அசதித் தீர நீராடி வாருங்கள்...


இராமன் :
சீதா!... நந்தவனத்தில், மயிற் போல் ஆடி, மாங்குயில் போல் பாடி, மகிழ்ந்திருந்தவள் நீ!... பூவின் மீது நடந்தாலும், உன் பாதம் நோகுமென்று பூவினும் மெல்லியப் பாதைச் சமைக்க நான் எண்ணியிருந்தேன்... அயோத்தியின் அரச பதவிக் கிட்டியவுடன், உனக்கென்று ஓர் உல்லாசபுரி எழுப்பிட எண்ணியிருந்தேன்... விதியைப் பார்!... விலங்குகளுக்கு மத்தியில், அஞ்சிப் பிழைக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது... என் பொருட்டன்றோ, உனக்கும் இத்துயர்...


சீதை :
பிரபு!... என் நாதன் இருக்குமிடந்தான் எனக்கு அயோத்தி!... என் நெஞ்சில் வேதனையின் நிழல் துளியும் இல்லை... சென்று வாருங்கள், பிரபு; நீராடி வாருங்கள்... நான் இங்கிருக்கும் கனிகள் கொய்து வைக்கிறேன்...


இராமன் :
சீதா, பணிப்பெண்கள் புடை சூழ, நீ மணக்கும் சோலையில் வலம் வருவாயே... இன்றோ என்னால் நீ, துணையில்லா மான் போலானாய்!...


சீதை :
பிரபு!... தங்கள் நெஞ்சம் எனக்குத் துணையிருக்கையில் நான் எங்கனம் தனித்தவள் ஆவேன்?... மணக்குஞ் சோலையில் மகிழ்வேது, நாதா?... தங்கள் மடி மீது நான் தலைக் கொள்ளும் போது மனதில் பொங்கும் உவகைக்கு ஈடேது?...


இராமன் :
அமுதுண்டு பசியாறிய நீ,
சீதை :
உங்கள் அன்புண்டு அக மகிழ்ந்திருப்பேன் என்றும்!...

இராமன் :
தேனுண்டு தேவகானம் பாடிய நீ,

சீதை :
உங்கள் தோள் தழுவி, மனமயங்கி தேவகானம் பாடுவேன், பிரபு!...
(இராமனைத் தழுவிக் கொள்கிறாள்... )

இராமன் :
சுகமெனுஞ் சொல்லுக்கு எதிர்ச்சொல் அறியா பைங்கிளியல்லவா, நீ!...

சீதை :
என் சுகமே, தாங்கள்தான் பிரபு!...

இராமன் :

மலர்க் கொய்து வர மங்கையரையும், மாங்கனி ஏந்தி வரப் பெண்டிரையும், கூந்தல் அலைந்துவிட அரிவையரையும், கைநகமதில் கோலந்தீட்டி விடும் கோதையரையும், நல்லிசைப் பாடும் நங்கையரையும், மயிற்தோகை வீசிடும் மகளிரையும், உள்ளங்குளிரக் கூத்தாடும் நாட்டியத்தாரகைகளையும், பிரிந்து என்னோடு சுடுவெயில் வந்தாயே...


சீதை :
நாதா, தாங்கள் அருகில் இல்லையென்றால்தான், இந்த நிழலும் என்னைச்சுடும்!...


இராமன் :
கல்லும், முள்ளும் நிறைந்தப் பாதையில் நடந்து, என் பொருட்டன்றோ, கடுந்துயருற்றாய்?... ஆண்டவன் எனக்கு மாயசக்திக் கொடுத்திருந்தால், பாலையையும் சோலையாக்கி நின் பாதம் நோகாதபடி அழைத்து வந்திருப்பேன்...


(பாதத்தை மடிமீதுத் தாங்கி, தடவிக் கொடுக்கிறான்...)


சீதை :
தங்கள் இதயந்தனில் நான் புகுந்தப் பின்னர், எப்போது இவ்விடர்மிகு பாதையில் நடந்து வந்தேன்?... நாதா, பொழுது நன்குப் புலர்ந்து விட்டது... நீராடி வாருங்கள்... நான் தங்களுக்கு வேண்டிய ஆகாரம் சேகரம் செய்கிறேன்...


இராமன் :
தம்பி இலக்குவன் எங்கே?


சீதை :
ஆமாம்!... இவ்வளவு நேரம் கவனிக்கவில்லையே... நீராடப் போயிருப்பாரோ?..


இராமன் :
நானின்றி, அவன் ஏதும் செய்யானே... ஏதும் உரையாமல் எங்கும் செல்லானே... சீதா, நம் துயர்த் தீர, இந்திரனுக்கு வேள்வி நடத்தி மாட்டிறைச்சி உண்டால்தான் நம் களைப்பு நீங்கும்... இக்கானில் திரியும் மாடொன்றைப் பிடித்துவர, இலக்குவனை ஏவிட நினைத்திருந்தேன்... எங்கே சென்றான்?...


சீதை :
அண்மையில் எங்கேனும் உறங்கிக் கிடக்கிறாரோ?... சென்று காணுங்கள்...
( இராமன் குடிலைச் சுற்றி வந்து-)

இராமன் :

இல்லை; சீதா!... இவ்வதிகாலையில் நீராடவும் மாட்டானே... சொல்லாமல் எங்குச் சென்றிருப்பான்?... சீதா, அவன் கடுஞ்சினத்தவன்... கனல் விழியன்... நிலை மதியில்லாதவன்... நம் துயர்நிலைப் பொறாது, கோபம் கொண்டு எங்கேனும் சென்று விட்டானோ?...


(சோகத்தில் ஆழ்ந்து, அழுதுப் புலம்புகிறான் இராமன் )


இராமன் :
அவனில்லையேல், இவ்வனாந்திரத்தில் நான் என் செய்வேன்?... வலக்கரம் போன்றவனே, இலக்குவனே, எங்குச் சென்றாய்?... நான் நெருப்பாய் உன்னைச் சுட்டாலும், நீ, சாம்பலாய் என்னை அண்டிக் கிடப்பவனாயிற்றே... என் மீது கோபம் கொள்ள மாட்டாயே... என் ஏவலனாய் இருந்து, என்னுயிரின் காவலனாய்த் திரிந்தவனே... என்சொல் புத்தியின்றி, வேறு புத்தியறியா, தீரனே, எங்குச் சென்றாய்?... நீ என்மீது கோபங்கொண்டு, எங்கேனும் சென்றிருப்பதாய் என் நெஞ்சம் கூறினாலும், நான் நம்புவேனா?...
என்னிடம் சொல்லாமல், நீ எங்கும் செல்லமாட்டாயே... இலக்குவா, மிருகம் உன்னைக் கொண்றதுவோ?... இல்லை; தூக்கிச் சென்றதுவோ?... கொடும் அரக்கர் கண்ணில் பட்டாயோ?... அரக்கர்தான் உன்னைத் தூக்கிச் சென்றனரோ?... நானென் செய்வேன்?... அய்யோ, இலக்குவா!...


சீதை :
பிரபு, அழுதுப் புலம்புவதால், உண்மை விளங்கப் போவதில்லை... மன்னர் மரபில் உதித்தத் தாங்கள், உண்மையை அறிந்திடாது, கண்ணீர் உகுப்பது நன்றோ?...


இராமன் :
தேவி, சீதா!... என் தம்பி என் சொல்லின்றி, எங்கும் செல்லான்... அவனில்லை யென்றதும், என் மனம் ஏதேதோ அய்யுறுகிறதே... அய்யோ... அச்சமாகுதே!
சீதை :

துயில் கொண்டிருக்கும் நமக்குத் இடரூட்டுதற் கூடாதென்று, சொல்லாமல் நீராடச் சென்றிருப்பார்... அன்றேல்; அம்புகள் உண்டாக்க, மரக்குச்சிகள் தேடி காட்டின் உட்பகுதிக்குச் சென்றிருப்பார்... கண்கலங்காது, காணுங்கள்; கானெங்கும்!... நான் இங்கிருக்கிறேன்... தம்பி வந்தால், நீர் சென்ற திசைக்கு அனுப்புகிறேன்...


இராமன் :
சரி; கண்ணே!... கானென்ன? வானமே சென்று என் தம்பியைத் தேடுகிறேன்... நீ, குடிலுக்குள் இரு!


(இராமன் இலக்குவனைத் தேடிப் புறப்படுகிறான்..)
-திரை-




























பாகம் -1. காட்சி - 10. மாஞ்சோலை. மாலைப்பொழுது

காமவல்லி
கனகமணி
கரன்
இராமன்


(திரைத் தூக்கப்படவில்லை- )
(குதிரைக் குளம்படி ஓசைகள் தொடர்ந்து, கனகமணி, கரன் பேச்சொலி கேட்கின்றன..

காமவல்லி :
தளபதியாரே!

கரன் :
சொல்லுங்கள், அரசியாரே!

காமவல்லி :
விந்தகமா?... விந்தைகள் நிறைந்த அகமா?... இந்நாடு?

கரன் :
வினா, புதிராயிருக்கிறதே!..

காமவல்லி :
விந்தகமே, எனக்குப் புதிராயிருக்கிறது...

கரன் :

விந்தநாட்டுக்கு, தாங்கள் புதியவராதலால், விந்தகம் புதிராய்த் தோன்றுகிறது போலும்!... புதிருக்குப் பொருள் அறியலாமா, அரசியாரே!


காமவல்லி :
இலங்கையின் எழில் மாடங்களும், ஏற்றமிகு செல்வச்செழிப்பும், செந்தமிழின் செஞ்சொற்கள் போல் இலங்கையின் வீதியழகும், என்னைக் கவர்ந்து மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளன... மலையும், மலையை சூழ்ந்து மரங்கள் மட்டுமே உள்ள இவ்விந்த நாட்டுக்கு, எங்கிருந்து இத்தனை அழகு வந்தது?...அலைத்தொடர் போல் அற்புதமாய், மனதை மயக்குகிறதே... கலைச்செல்வமாய் கண்ணையள்ளும் இவ்விந்தைதான் என்னே?... விந்தநாட்டுக்கு வாய்த்த, இத்தன்மையை யான் எங்ஙனம் புகழ்வேன்... ஆகா... தளபதியாரே, இம்மாஞ்சோலையில், சிறு நாழிகை உலாவ, எனது உளம் அவாவுகிறது!...


( குதிரை குளம்படியோசை நிற்றல் -)


கரன் :
அரசியாரே! தங்கள் விருப்பம் அதுவானால், தாங்கள் இங்கே சிறுது ஓய்வுக் கொண்டிருங்கள்... மாலை சாயும் முன்னர், புரவிகள் தண்ணீர்ப் பருகச் செய்து வருகிறேன்... அருகில்தான் நீரோடை இருக்கிறது...


காமவல்லி :
ஆகட்டும், தளபதியாரே!... நான், தோழி கனகமணியுடன் இம்மாமர நிழலில் இருக்கிறேன்... தாங்கள், சென்று வருக!...
கரன் :
உத்தரவு, அரசியாரே!...

( திரைத் தூக்கப் படுகிறது...)

(காமவல்லியும், கனகமணியும் நடந்து வருகிறார்கள் )

காமவல்லி :
கனகமணி!

கனகமணி :
அரசியாரே...

காமவல்லி :

மாலை நேரத்து மாங்காற்று மேனியைத் தழுவுது... மங்கை, உன் மனதில் மாற்றம் ஏதும் தெரிகிறதா?...


கனகமணி :
ஆமாம்!


காமவல்லி :
என்னவோ?


கனகமணி :
வழக்கமானதுதான்!...


காமவல்லி :
கூறடி, என்னவென்று?


கனகமணி :
மாலை நேரத்து மாங்காற்று என் மனதோடு மயக்கராகம் பாடுகிறது... ஆனந்த உணர்விலே என் நெஞ்சமும் மகிழ்கிறது... என் செவ்விளந் தோள்களிலே சிலிர்ப்பை உண்டாக்குவதும், மாங்காற்றுத்தானடி!... மேனியை மாங்காற்று தழுவும்போதே,... நாணமும் கண்விழிகளிருந்து நீங்கியது!... ஏங்கும் விழியள் ஆனேன்!... என்ன சொல்வேன்?... மாங்காற்றுத் தீண்ட, என் மனமும் தூண்டுகிறதே என்னை; காதலன் வரவுக்காகக் காத்திருக்கும்படி!...


காமவல்லி :
அடியே, கள்ளி!... யாரவன் கூறடி!


கனகமணி :
கூறிவிட்டேன், என் மனதை!... மாங்காற்று உன்னைத் தீண்டும் போது, உன் மனதிலே தோன்றும் எண்ணம்தான் என்னவோ?...


காமவல்லி:
மாம்பூவின் மணத்தை சுமந்து, மனதோடு உறவாட வந்த மாங்காற்று என்னை, தன் நிழலில் தவழச் செய்து, தமிழ்ப் பாட்டுப் பாடும்படித் தூண்டுகிறது...

கனகமணி :
அந்தப் பாட்டு, காதல் பாட்டுத்தானே?...

காமவல்லி :
இல்லை; சாதல் பாட்டு!...

கனகமணி :
சாதலா?...

காமவல்லி :

வீரமுதியவளாய் விந்தகத்தில் வாழ்ந்த, தாடகையின் பாட்டு!... தமிழென்றுக் கூவி, தன் குருதியை ஆரியத்திற்கு எதிராய், இம்மண்ணில் ஓடவிட்டவள் பாட்டு!... என் நெஞ்சோடு, நெஞ்சமாய் நின்று வீர முழக்கமிடும் செந்தமிழுக்காக நான் சிந்தவிருக்கும் செங்குருதிப் பாட்டு!... வாழியத் தமிழ்; வாழியத் தமிழென்று இன்று முளைத்தெழுந்த இளந்தளிர்களும், தமிழுக்கு அரணாய் ஓங்கட்டும்; வாள்!... வீழட்டும்; ஆரியம்!... வீழும் ஆரியத்தின் பாட்டை, விண்ணதிர, இப்போதே செந்தமிழில் பாடென்று மாங்காற்றுக் கூறுகிறது; கனகா!


கனகமணி :
எனக்கோர் அய்யம்?...


காமவல்லி :
இவளும் பாடுவாளா என்றா?


கனகமணி ;
அல்ல!... அருந்தமிழோடு மனதை ஒன்ற விட்டிருக்கிறாய்; நலம்தான்!... ஆனால்; அதற்காக, காதல் உணர்வே உனக்கு இருக்கக் கூடாதா?... அழகிற்கெல்லாம் அழகாய் திகழும் உன் மேனியை மாங்காற்றுத் தழுவியும், நீ காதல் உணர்வுக் கொள்ளாதிருக்கிறாயே?... உன் நெஞ்சம் என்னக் கல்லா?... காமவல்லி என்றப் பேர் கொண்டிருக்கிறாய்... காதல் என்பதிலோ, துளியும் அறியாதிருக்கிறாய்!...


காமவல்லி :
காதல் தெரியாதவளா நான்... காதல் பாடம் நடத்தவா?...


கனகமணி :
வீம்புப் பேச எனக்கும் தெரியும்... காதல் உணர்வு இருக்குமானால், என் கேள்விக்கு விடைச் சொல்லு... உனக்கு, காதலன் இருப்பதாக எண்ணிக்கொள்!... ஒவ்வொரு மாலைப் பொழுதும், காதலனோடு மகிழ்ந்திருப்பது உனது பழக்கம்!... ஒருநாள், பணியின் நிமித்தம் உன்னைப் பிரிந்து நெடுந்தொலைவுச் சென்று விடுகிறான் காதலன்... மாலை நேரம் வந்து விடுகிறது... உன் நிலை என்ன?...


காமவல்லி :
' மாலை நேரமே!... நீ, காமத் தீயேந்தி என் நெஞ்சை மட்டுமாச் சுடுகிறாய்?... என் உயிரையும் உண்ண வந்திருக்கிறாய்... முன்னரே, உன் செயலை நான் அறிந்திருப்பின், காதலன் என்னை விட்டுப் பிரியும்படி செய்திருக்க மாட்டேன்'... என்று புலம்புவேன்...


கனகமணி :
புலம்பிய வண்ணம் படுக்கைக்குச் செல்கிறாய்... படுக்கையில் உன் நிலை?...


காமவல்லி :
என்னவன் உடலால் எனைப் பிரிந்து, நெடுந்தொலைவுச் சென்றிருக்கலாம்... ஆயினும் என்ன?... என் உள்ளத்தைவிட்டு அவன் பிரியவில்லையே... அதனால்; உறக்கத்தின் போது என் விழிகளில் தோன்றி, எனக்கு இன்பமூட்டுவான்... விழிகளில் என்னவனைக் காட்டும் கனவே, நான் உனக்கு என்ன விருந்தளிப்பது?' என்று கனவோடு பேசுவேன்...


கனகமணி :
கனவில் வந்தக் காதலன், உன்னை ஏறெடுத்தும் பாராமல் போகிறான்... அப்போது உன் நிலை?
காமவல்லி :

' ஏய், கண்களே!... நீதானே அவனைப் பார்த்தாய்?... பார்த்ததுமின்றி, நெஞ்சில் காதலும் ஊட்டினாய்... இன்று பார்... அவன் ஏறெடுத்தும் பாராமல் போகிறான்... நினைந்து நினைந்து அழுகிறாயே... பார்த்ததும் நீயே!... அழுவதும் நீயே!... நன்றாக அழு!... செந்நிறமாய் துளிகள் உதிரும்படி அழு ' ... என்று என் கண்களை குறைப் பேசுவேன்...


கனகமணி :
ஆகா... காமவல்லி, வீரத்தோடு பேசவும்; காதலோடு கனிந்துருகவும் நன்றாகவே அறிந்திருக்கிறாய்... ஆ... காமவல்லி, அதோ... பார்... யாரோ ஒருவனை, நமது தளபதியார் தூக்கி வருகிறார்... அவன் மயங்கிய நிலையில் கிடக்கிறான் போலும்...


(காமவல்லி திரும்பிப் பார்க்கிறாள் )


(மயக்கமுற்றிருக்கும் இராமனை, கரன் தன் இரு கைகளால் ஏந்திய வண்ணம் தூக்கி வந்து, மரத்தடியில் கிடத்துகிறான்...)


(மயக்க நிலையில் இராமன், 'தம்பி '... 'தம்பி'... என முனகுகிறான்.)


கரன்:
அரசியாரே!... குதிரைக்கு நீர்க்காட்ட சென்றேனே...


காமவல்லி :
ஆமாம்!


கரன் :
ஆற்றங்கரையில், மயக்கத்தில் கிடந்தான்... மூலிகைச் சாறுப் பிழிந்து, நாசியில் வைத்தேன்... மயக்கம் கலைந்துக் கொண்டிருக்கிறது... சற்று நேரத்தில், விழித்துக் கொள்வான்...


காமவல்லி :
யாரிவன்?


கரன் :
காட்டுவாசிப் போன்றுத் தெரிகிறது...


காமவல்லி :
ஆரியச்சாயல் தெரிகிறதே?...


(இராமன், முனகிய வண்ணம், மெதுவாக எழுந்து அமர்கிறான்... பார்வையை மெல்லச் சுழற்றுகிறான்... பார்வை காமவல்லி மீது பதிய...)


காமவல்லி :
யாரப்பா நீ?


இராமன் :
நா... ந...


காமவல்லி :
தளபதியாரே, மிகவும் களைப்புற்றுள்ளான்... மாம்பழம் பறித்துக் கொடுங்கள்... பசியாறட்டும்... பின்னர் விசாரித்து, ஆவண செய்யுங்கள்... கனகமணி, அதோ, அந்த மயிலைப் பார்... மானோடு விளையாடுகிறதே... வா... அருகில் சென்று காண்போம்!...


(காமவல்லியைத் தொடர்ந்து, கனகமணி செல்லுகிறான்!... )


(காமவல்லியின் பின்னழகிலும், இதமான மேனி அசைவிலும், மதி மயக்கமுற்ற இராமன், 'அவள் யார்?' என, கரனிடம் சைகை மூலம் கேட்கிறான்...


காமவல்லியின் எழில், இராமனின் நெஞ்சில் காமக்கொழுந்தேற்ற, அந்தக் கொழுந்தின் சுடர், விழிகளில் பரவிட-


இராமன் ஏக்க மூச்சு விடுகிறான்...)


கரன் :
தமிழினத் தலைவன் இராவணனின் தங்கை!... விந்தநாட்டின் அரசி!... காமவல்லி என்பது பேர்!...


( இராமன் துணுக்குற்று, கரணை நோக்குகிறான்...)


இராமன் :
தாங்கள்?


கரன் :
விந்த நாட்டின் தளபதி!... என் பெயர் கரன்!... நீ யார்?... ஆ... என்னவாயிற்று உனக்கு?... ஏன் மீண்டும் மயக்கம் வருகிறதா?
(சாயவிருந்த இராமனை கரன், தாங்கிப் பிடிக்கிறான்...)

இராமன் :
ஒன்றுமில்லை... பசி... பசி...

கரன் :
இதோ... தேனும், கனியும் தருகிறேன்... சாய்ந்திரு!

(இராமனை மரத்தில் சாய வைக்கிறான் கரன்... )

-திரை -









பாகம் -1. காட்சி :11 காட்டுக்குடில், நிலவொளி!

சீதை
இராமன்
இலக்குவன்



(காட்டுக் குடிலை ஒட்டிய வெளியில்-
சீதை சோகமாக அமர்ந்திருக்கிறாள்... சாமக்கோழி கூவுகின்றன...
இராமன் தன்னை மறந்த நிலையில், நெஞ்சில் ஏக்க சுமையோடு நடந்து வருகிறான்...
எவரோ நடந்து வருதல் போன்ற உணர்வு, சீதைக்கு உள்ளூர ஏற்பட்டுத் திரும்பிப் பார்க்கிறாள்...
இராமன் நடந்து வருவதுத் தெரிந்ததும், சீதை முகமலர்ச்சியுடன்...)
சீதை :

நாதா, வாருங்கள்... தங்களைத் தேடி தங்கள் தம்பிச் சென்றுள்ளார்... இனி அவரைத் தேடி, நீங்கள் சென்று விடாதீர்கள்... ஒருவரை ஒருவர் தேடித் திரிந்தால், இனி; உங்கள் இருவரையும் நான் தேட வேண்டியதுதான்!...


(சீதை சிரிக்கிறாள் )
(இராமன் எவ்வித முகச்சலனமுமின்றி நிற்கிறான்...)


சீதை :
அன்றிரவு, நாம் உறங்கியவுடன், உங்கள் தம்பி இலக்குவன், அயோத்தி சென்றிருந்தாராம்; படை வீரர்களைச் சந்திக்க!... விடிந்தப் பிறகு, நம்மிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இன்று உங்கள் உடல் நொந்து போயிருக்காது!...


(பேசிய வண்ணம் தோள் தடவ, இராமனோ விலகி நிற்கிறான்...)


சீதை :
உறங்கும் நம்மிருவருக்கும் இடையூறு செய்யக்கூடாதென்று, சொல்லாமல் அயோத்தி சென்றுவிட்டாராம்... சற்று முன்னர்தான் வந்தார்... அவரைத் தேடி, நீங்கள் சென்றிருப்பதாக நான் கூறியவுடன், தம்பி தங்களைத் தேடிச் சென்று விட்டார்... ம்... நல்ல விளையாட்டு!... வாருங்கள் நாதா, உணவருந்துவோம்!...


(கைத்தொட்டு அழைக்க, இராமன் வெடுக்கென சீதையை உதறுகிறான்...)


சீதை :
தம்பியைத் தேடி இரவும் பகலுமாய் அலைந்து, உடல்தான் மிகவும் களைத்துள்ளதே... அமருங்கள் இங்கே!... மருந்துத் தடவி விடுகிறேன்.


(தோள் பற்றி இழுக்க, இராமன் சீதையைத் தள்ளி விடுகிறான்)


சீதை :
சொல்லாமல் சென்று விட்ட தம்பியின் மீது கோபம்... அதனால்தானே, என் மீதும் தூபம்!... தம்பித்தான் வந்துவிட்டாரே... இனி இப்படி இருப்பதால் என்ன இலாபம்?...


(இராமன் மரத்தைப் பிடித்து, நிலவை வெறித்து நோக்குகிறான்...)


சீதை :
மகுடம் போல் உருவெடுத்து, மஞ்சள் நிறமெடுத்து, மாய நடைப் பயின்று வரும் நிலவைப் பார்த்து, என் மன்னவன் காணும் கனவுகள் என்னவோ?...


(இராமன் பெருமூச்சோடு மரம் சாய்ந்து அமர்கிறான்...)


சீதை :
அலைப்பெருக்கால் கடல் நுரைகள் களித்தாடுதற் போல், தென்றலின் வருகையால் மதுமலர்கள் மகிழ்ந்தாடுதற் போல், என் மன்னவன் விழியழகால், என் நெஞ்செல்லாம் நிறைந்தாடுமே!... இன்றோ, துயில் துறந்த விழிகள் போல், துயர்ப் பெற்றுத் திகழும் தங்கள் விழிகள், எந்தன் உயிர்ப் பறிக்கின்றதே... என் உள்ளம் துடிக்கிறதே... மன்னா, காரணங் கூறுங்கள்... எதன் பொருட்டென்று என்னிடம் சொல்லுங்கள்... வாட்டமுற்று நீங்கள் வாடி நின்றால், என் வாழ்வுதான் சோகமாகிப் போகாதோ?... திண்ணியத் தோள்கள் இன்று மண் பார்க்கும் மாயமென்ன?... எண்ணிய முடிக்கும் நெஞ்சில், இன்று என்ன கலக்கமோ?... ஆடவரையும் ஏங்க வைக்கும் நீலவிழிகளில் எதன் பொருட்டு ஏக்கம் குடியேறிற்றோ?... நற்றேனும் நாணுமே தங்கள் இதழ் கண்டு!... இன்றேன் தாகத்தால் தவிக்கும் இதழாயிற்று?... ஓய்தல் இல்லா மேனி சாய்தல் செயின், சாகாதோ என் நெஞ்சு!...


(சீதை இராமனின் தாள் பற்றி அழுகிறாள்... இராமனோ ஊமையாய் வாளாவிருக்கிறான் )


(இலக்குவன் வருகிறான்-
சீதை அழவும், இராமன் சோர்வுற்று மரம் சாய்ந்து இருக்கவும் கண்ட இலக்குவன் உளம் பதைக்க-)
இலக்குவன் :
அய்யோ... அண்ணா, என்னவாயிற்று?...

சீதை :

இலகுவா, இன்முகம் தண்ணிழந்து, தணல் பட்ட மலர்ப் போலாயிற்றே... என்னவென்று கேளுங்கள்... ஈட்டி முனைக்கும் நிலைபிறழா நெஞ்சு, எந்த மாய முனையால் தளர்வுற்றதோ?...


(கேவி அழுகிறாள் )


இலக்குவன் :
அண்ணா... அண்ணா...


( இராமனின் உடல் உலுக்கி கதறுகிறான்)


இராமன் :
காமவல்லி... காமவல்லி... காமவல்லி...


( நெஞ்சின் அடித்தளத்திலிருந்து சொல்லெடுத்து இதழ் முனுமுனுக்கிறான், இராமன் )


இலக்குவன் :
காமவல்லியா?... யாரவள்?


இராமன் :
இலங்கை வேந்தனின் தங்கை!... இவ்விந்த நாட்டின் அரசி!...


இலக்குவன் :
அவள் என்ன செய்தாள்?


இராமன் :
என் இதயம் பறித்தாள்!...


இலக்குவன் :
ஆ... இதயம் பறித்தாளா?... அக்கொடியவளின் உயிர் பறிக்கிறேன்... என் ஆருயிர் அண்ணனின் இதயம் பறித்தவளை, பழிக்குப்பழி வாங்குகிறேன்... அவள் இதயத்தைப் பறித்து, கடித்து மென்றுத் துப்புகிறேன்... இதயத்தைப் பிடுங்கிய அரக்கி எங்கே?... சொல்லுங்கள், அண்ணா!... அவளுடைய இதயத்தைப் பிடுங்கி வந்து, உங்கள் பாத மலர்களுக்குச் சூடுகிறேன்... இயலாமற் போனால், நான் என் நெஞ்சைப் பிளந்து என் இதயத்தைத் தூக்கி எறிந்து வருகிறேன்... எங்கே அரக்கி?... எங்கே அரக்கி?...


(ஆவேசமாக, கத்திய வண்ணம் ஓடுகிறான் இலக்குவன்)


இராமன் :
தம்பி... பொறு!... தம்பி...


இலக்குவன் :
பொறுப்பதா?... பறித்தவள் எங்கே?... கூறு!... அறுத்து வருகிறேன் அவள் இதயத்தை!... முலைகள் கொய்து மூலைக்கொன்றாய் வீசியெறிந்து வருகிறேன்... இல்லையேல்; என் மனம் சாந்தியடையாது... கொல்லுகிறேன்... சொல்லுங்கள், அண்ணா!


இராமன் :
தம்பி, நான் சொல்வதைக் கேள்... கோபமும், ஆத்திரமும் கொண்டு குதிக்கிறாயே... என்ன ஏதென்று, கேட்காமல் ஏனிப்படி மண் மிதிக்கிறாய்?.. நீயென்ன பித்தனா?...


இலக்குவன் :
ஆமாம்;... நான் பித்தன்தான்... அண்ணனை இதயமற்றவளாக்கிய அரக்கியின் ஆணவத்தை அடக்கப் பிறந்த நான் ஒரு பித்தன்தான்!... நான் போகிறேன்... பொல்லாதவளின் மூக்கறுத்து, மூளியாக்கி வீதியெங்கும் ஓடவிட்டு, ஓங்காரித்து வருகிறேன்...
இராமன் :
(சத்தமாக கத்துகிறான் )
தம்பி!

(மீண்டும் )
இராமன் :

உறக்கத்தையும், உணவையும் அவைகளோடு என்னையும் தெரிந்திருக்கிறாய்... ஆனால்; உலகத்தைப் புரிந்துக் கொள்ளாத மூடனாய் நிற்கிறாயே... என் வாய் வார்த்தைக் கேளாமல், நீ பேயாட்டம் போடுகிறாயே... என்ன சொல்கிறேன் என்பதைக் கேளாமலேயே நீ துள்ளியாடுகிறாயே!... என் மனவாட்டத்தைப் புரிந்துக் கொள்ளாமல், குதியாட்டம் போடுகிறாயே... ஏன் நீ என்னோடு இங்கு வந்தாய்?... அயோத்திக்கே போடா... அறிவில்லாதவனே!... மயிருக்குக் கூட சொரணையிருக்கும்... உனக்கோ, துளிக்கூட புத்தியில்லை... உன்னை நினைத்தாலே வெட்கமாகிறது... போடா... என் எதிரில் நிற்காதே!...


(இலக்குவனை இராமன் எட்டி உதைத்தான் )


இலக்குவன் :
காற்றும் நீயே!... கடலும் நீயே!... ஒளியும் ஒலியும் நீயே!... மண்ணும் நீயே!... விண்ணும் நீயே!... எல்லாம் நீயே!... நீதான் எனக்கு எல்லாமும்!... நான் உனக்காக!... உன்னில் ஒரு தீங்கு எனில், என் அங்கம் பதறும்!... உன்னில் ஒரு நலன் எனில் என் மேனிக் குளிரும்... நீயே என் தெய்வம்... நீயே, இந்த மண் உய்க்க உதித்தவன்...


இராமன் :
தம்பி, எழுந்திரடா... விண்ணையும், மண்ணையும் அளந்து விடலாம்... ஆனால்; நீ என் மீதுக் கொண்டிருக்கும் அன்பு அளவிட முடியாதடா...


( கண்ணீர் மல்குகிறான் )


இராமன் :
ஆத்திரத்தில், உன்னை ஏதேதோ பேசிவிட்டேன்... எனக்கு, நீ தம்பி என்பதில் தானடா எனக்கே பெருமை !...


இலக்குவன் :
அண்ணா, அழவேண்டாம்... உங்கள் கண்கள் நீரை சொறிந்தால், என் அங்கம் குருதியை சொறியும்... சொல்லுங்கள், அண்ணா!... யாரவள்?... எங்கே இருக்கிறாள்?...


இராமன் :
தம்பி, இதயத்தைப் பறித்தவள் என்றால், என் உள்ளதைக் கொள்ளைக் கொண்டவள் என்று அர்த்தம்... உனக்குப் புரியவில்லையா?... காமவல்லி... ஆகா... அதிரூப மேனியைப் பார்த்தால், முற்றும் துறந்தவனுக்கும் நாடி சிலிர்க்குமடா...


( சீதை, இடியால் தாக்குண்டவள் போல் அதிர்ச்சியுற்று நெஞ்சுத் துடிக்க, இராமனை நோக்கி )


சீதை :
நாதா!...


இராமன் :
காமவல்லியை நினைத்தால், அந்த நினைவெல்லாம் தேனாகுதடா... நேரில் கண்டால், இந்திரன் மண்ணுலகிற்கே வந்து விடுவானடா... முதியவனுக்கும், இளமை வேகம் பிறக்குமடா... காமவல்லி என்றப் பெயரைச் சொல்லும் போதே என்னுள் சுகம் தவழ்கிறதடா... அவள் மிதித்த மண்ணை முகர்ந்தேன்!... அடடா... ஆயிரங்காலம் அவளோடு பள்ளி கொண்டது போல் உள்ளமெல்லாம் பூரிக்குதடா... மேனியெங்கும் புதுமை மிளிர்கிறதடா... மேகத்தில் தவழ்வது போல் சுக உணர்வு வருகிறதடா... வார்த்தையின்றித் தவிக்கிறேனடா... தென்றலோ; தேனோ; மலரோ; வெண்மேகமோ; பொன்னுருவோ; அடடா... மாஞ்சோலையில்தான் நான் அவளைப் பார்த்தேன்... அவள் விடும் மூச்சுதான், மாஞ்சோலையெங்கும் மணமாய்த் திரிகிறதோ... எப்படிச் சொல்வேன்?... எவ்விதம், அவள் அழகை புகழ்வேன்... ஒரே பார்வையில் என்னுள் ஏக்கத் தீயை ஏற்றிய அவளுடைய எழிலை மீண்டும் நான் காணவில்லையென்றால், - அய்யோ, காணமாட்டேனோ என்ற கேள்வியே என்னை சாகடிக்கிறதடா...


(இராமன் காமவல்லியின் நினைவில், காமமொழியுற-
சீதை வேதனையால் விம்முகிறாள்... கண்ணீர் உகுத்து நெஞ்சோடுப் புலம்புகிறாள்... )


சீதை :
நாதா, இது முறையா?... நெஞ்சு பொறுக்குமா?... உமது எண்ணம் சீரானதுதானா?... நீர் இருக்குமிடமே, எனக்கு அயோத்தியென்று உமது அடித் தொழுது உயிரோடு இருக்கையில், உமது மனம் மாற்றாளை நாடல் சரியோ?. நீர் வேறொருத்தியின் பால் வேட்கை கொண்டிடின் என் மனம் வேதனையுறும் என்றறியீரோ?... என் உயிர் என் மேனியில் தங்கிடுமோ?... நான் செலுத்தும் அன்புக்கு, தாங்கள் தரும் கருணை இதுதானா?... ஈன்றாரையும் நினையாது, இனியார் தாங்கள்தான் என்று தங்கள் தாளொற்றி வந்த என் வாழ்வில், வேல் பாய்ச்சுதல்தான் தங்கள் அறமோ?...

இராமன்

சீதை, உன் இமைகள் அவளை இமை நேரம் நோக்கினால் போதும்... இராமன் கொண்டிருக்கும் ஏக்கத்தின் காரணம் அறிவாய்... காமத்தைப் பொழியும் தேவதை அவள்!... அதனால்தான் காமவல்லி என்று பேர் கொண்டிருக்கிறாள் போலும்...


சீதை :
அய்யோ, அழுகிவிடும் தசையில் மதியிழந்து, தங்கள்பால் உயிரையே வைத்திருக்கும் என் இதயத்தை அழ வைக்கலாமோ?...


இராமன் :
சீதா, கருங்குழலைக் கூறுவேனா?... நெடுங்கயல் விழியை சொல்வேனா?... கோவை இதழைப் புகழ்வேனா?... அவ்விதழ்களில் திரளும் தேனொளியை விளம்புவேனா?... சங்குக் கழுத்தை சரஞ்சரமாய்ப் பகர்வேனா?... கதிரவனையே சுட்டெரிக்கும் கதிருடை மார்பை நான் நவில்வேனா?... மூங்கிலால் வேய்ந்த தோள்களவையென்று முழங்குவேனா?... மணிநீர்ப் போல் ஆலிலை வயிறென்று மொழிவேனோ?... செவ்விளம் மெழுகோ?... தொடையோ?... விரல் நுனியோ?... விண்ணிலிருந்து விழுந்த விண்மீன் கொத்தோ?... தந்தமோ?... தங்கமோ?... பவளமோ?... ஏதுப் பேசுவேன்?... அவ்வனப்பை பிரமன் எங்கிருந்துத் திரட்டினானோ?... மேனியோ?... மது குவளையமோ? இளந்தளிர் மேடையோ?...


( சீதை ஆற்றாமையால் அழுதுக்கொண்டிருக்க -
இலக்குவனோ )


இலக்குவன் :
ஆகா... அந்த அழகுவதியை அகங்குளிர காண வேண்டுமே!... எங்கிருக்கிறாள் அண்ணா ?


சீதை :
அய்யோ... தெய்வமே!... தசரதனின் புதல்வர்களின் பேச்சு உன் செவியில் விழுகின்றதா?... தந்தையைப் போல் தானா தனயர்களும்?... இந்தக் காம லோலர்களிடத்திலா என்னை சேர்த்தாய்?... தெய்வமே, பாவம் இழைத்தாயே... ஆண்டவா, மண்ணின் சுவை நீருக்கும் இருக்கும் என்று அறியா அறிவிலியானேனே... நீரினின்று எழுகின்ற ஆவியிலும் சூடு இருக்குமென்று அறியா சிறுமியானேனே... விதையைப் போல் தான் பயிர் இருக்குமென்று பேதை நான் உணராமல் போனேனே... பரமாத்மா!...


இராமன் :
தம்பி, அந்தச் சனியனை அடக்கு!...


சீதை :
நாதா, வேள்வியில் கலந்துக் கொள்ள, கோசிக முனிவனோடு மிதிலை நாடு வந்ததை மறந்துவிட்டீரா?... அரசக்கூடத்தில் என்னைப் பார்த்து, என் அழகில் மயங்கி என்னை அடைய முனிவன் கோசிகனை தூது விட்டீரே... மறந்து விட்டீரா?... தசரதன் ஒரு பெண்பித்தன்!... அவனது புதல்வனாகிய தங்களுக்கு என்னைத் தர, எனது தந்தை மறுத்தாரே... சீதையை மணப்பேன்; இல்லையேல் மடிவேன் என்று உண்ணா நோண்பு இருந்தீரே வேள்விச் சாலையில்... மறந்து விட்டீரா?... அதற்கும் மசியாத எனது தந்தையிடம், 'அயோத்தி மிதிலை மீதுப் போர்த் தொடுக்கும் ' என்று அச்சுறுத்தினீரே... மறந்து விட்டீரா?... அச்சுறுத்தலுக்கு அஞ்சியல்லவா எனது தந்தையார் என்னை உமக்கு மணமுடித்தார்... என்னை நினைத்து நீங்கள் ஏங்கியதாக அல்லவா, நான் நினைத்து ஏமாந்தேன்... என் மீது அன்புக் காட்டியதும் பொய்!... என்னை மணமுடிக்கத் துடித்ததும் பொய்!... என் தேகத்தின் இளமை செழுமையைச் சுவைக்கத் துடித்தத் துடிப்புத்தானே அது!... அய்யோ, ஆண்டவனே!... தவறாய்க் கணித்தேனே... நெருப்பில் பறவையும் வீழுமோ?... காமவெறியன் என்று கடுகளவு தெரிந்திருந்தால் கூட, என் கால் தூசும் இராமனை விரும்பியிருக்காதே... இருவிழியிருந்தும் கனலெடுத்து கண் எழுதினேனே, தெய்வமே!...


இராமன்
சி... வாயை மூடு, சனியனே!...
சீதை : (கோபமாக )
மிதிலையில் நான் அழகி!... எவளோ காமவல்லியைப் பார்த்தப் பின், நான் சனியன்!... இன்னொருத்தி, கண்ணில் பட்டால் காமவல்லியும் உங்களுக்கு சனியன் ஆகிவிடுவாளே... உங்கள் அகராதியில் எத்தனை சனியன்கள் உள்ளனவோ?...


இராமன் :
தம்பி, இவளை அடக்குகிறாயா?... இல்லையா?...


இலக்குவன் :
ஏய்... குரல்வளையை கொய்துவிடுவேன்... மயிரைப் பிடுங்கி, மொட்டையாக்கி, மரத்தோடு கட்டி எட்டி உதைப்பேன்... என் அண்ணனையா எதிர்த்துப் பேசுகிறாய்?...
(சீதை பயந்து ஒடுங்குகிறாள்)

இராமன் :

தம்பி, அயோத்தியில் அரியணையில் இருப்பதைவிட, காமவல்லியின் காலடியில் இருப்பதையே சுகமாகக் கருதுகிறேன்...


இலக்குவன் :
அண்ணா, அயோத்திச் சென்றிருந்தேனே... முன்னூறு வீரர்கள் நமக்கு உதவிட உள்ளனர்... சில நாட்களில் இங்கு வரவும் ஏற்பாடு செய்துவிட்டு வந்துள்ளேன்...


இராமன் :
தம்பி, வீரர்கள் வரட்டும்... காமவல்லியின் இதய சாம்ராஜ்யத்தில் நான் இடம் பெறவேண்டும்... பெற்றால், விந்தகம் என்னுடையதாகி விடும்... விந்தகம் என்னுடையதானால்; விந்தக வீரர்களையும், இங்கு வரும் நமது நேச வீரர்களையும் இணைத்து அயோத்தி மீது படையெடுத்து பரதனிடமிருந்து அயோத்தியை மீட்டு விடலாம்... கைகேகயியைக் காரி உமிழ்ந்து விடலாம்...


இலக்குவன் :
ஆக்க... ஆறு,அருமையானத் திட்டம்!...


இராமன் :
ஆனால்?


இலக்குவன் :
ஆனால்?


இராமன் :
காமவல்லியை நான் கைப்பிடிப்பது எப்படி?... அவள் கருவிழிகளில் எனது ஓவியத்தைக் காண்பதெப்படி?... அவளுடைய கால் சுவடுகளில் எனது முத்தம் பதிவது எப்படி?...


இலக்குவன் :
எப்படி... எப்படி... என்றால் எப்படி? அண்ணா, காட்டுவாசியைப் போல் இருக்கும் இவ்வேடத்தைக் களையுங்கள்...


இராமன் :
களைந்துவிட்டு?...


இலக்குவன் :
அருகனைப் போல் அழகுப் படுத்தி காமவல்லியின் எதிரில் நில்லுங்கள்... அவள் கண் குளிர்ந்து, மயங்கி விடுவாள் அப்படியே...


இராமன் :
நிச்சயமாகவா?...


இலக்குவன் :
அயோத்தியே உங்கள் அழகுக்கு அடிமையாகும்போது, காமவல்லி எம்மாத்திரம்?... உங்கள் திட்டத்தின் படி, விந்தகம் உங்கள் பாதார விந்தாரங்களைத் தொடவேண்டும்... அதன்பிறகு, அயோத்தி நமதடியில் வீழும்!... ஆகா... அருமையான யோசனை!...


இராமன் :
தம்பி, அழகுப் படுத்திட, ஆடை அணிகலன் ஏதுமில்லையே?...


இலக்குவன் :
உணவருந்தி உறங்குங்கள்... அண்ணா, அணிகலன்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன்...


- திரை-











பாகம் -1. காட்சி : `12. - வெண்திரை!
காமவல்லி
கனகமணி


*(நாட்டின் எல்லைகளை சித்தரிக்கும் வரைப்படங்கள் வெண்திரையில் தொங்கவிடப் பட்டிருக்கிறது...


விந்தநாடு மற்றும் அண்டை நாட்டின் வரைபடங்களை காமவல்லிப் பார்த்து, ஓலையில் குறிப்பு எழுதிக் கொண்டிருக்கிறாள்...)


(ஓசையின்றி நுழைந்த கனகமணி-)


கனகமணி :
அரசியாரே!... அகத்தை மகிழ்விக்கும் அருமைமிகு மாலைப் பொழுது, இன்னுஞ் சிறு நாழிகையில் இருளோடு உறவாடப் போய் விடுமே... ஆராய்ச்சிப்பணி ஆரம்பமானதோ, காலையில்!... முற்றுப் பெறவில்லையே மாலையாகியும்!... காத்திருக்குமோ, பொழுதும் நமக்காக!...


காமவல்லி :
கனகமணி, தளபதியார் வந்துவிட்டாரா?...


கனகமணி :
ஆரியநாட்டின் மீது, படைத் தொடுக்க ஒப்புதல் கேட்டு தளபதியாரை இலங்கை வேந்தனிடம் அனுப்பியுள்ளீரே!... தளபதியார் திரும்பி வர, இன்னும் சில நாட்கள் ஆகலாம்...


காமவல்லி :
ஒப்புதல் நல்கிடுவானா இலங்கை வேந்தன்?


கனகமணி :
ஆரியத்தை அதம் செய்திட, செந்நெறியாளன் படை வகுத்தப் போது, தடுத்தவள் நீயன்றோ... நீயே, தலைமை வகித்து ஆரியத்தைத் தகர்த்தெறிவதாக சூளுரைத்து, சுந்தரநாயகனிடம் விடைப் பெற்று வந்தாயே, அரசியாக!... இப்போது, படைத் தொடுக்க ஒப்புதல் வேண்டி தளபதியாரை அனுப்பியவள் நீயல்லவா... உனக்கோ மறுத்திடுவான், ஒப்புதல்?...

காமவல்லி :
நானும் அப்படித்தான் நினைத்தேன்!... ஆனால்...

கனகமணி :
ஏன் மாட்டானா?

காமவல்லி :

கனியாத காயில் சுவைக் கிட்டுமோ?... வகுக்காதப் பாதையில் பயணம் தொடருமோ?...


கனகமணி :
புரியவில்லை!


காமவல்லி :
ஆரியப்போர் இருள்மயமானது!... இருளகற்றும் அறிவு தீபத்தை நான் நாடாமல், வெறும் படையெடுப்புக்கு ஒப்புதல் கேட்டு நின்றால், தருவானோ இராவணனும் ஒப்புதல்?...


கனகமணி :
புரியவில்லை!...


காமவல்லி :
விழியிழந்தோரல்லவா புதைக்குழியில் சிக்கிடுவர்... விழியிருந்தும்?...


கனகமணி :
புரியவில்லை?...


காமவல்லி :
படையெடுக்கவேண்டும் என்ற எனதுத் திட்டம், அடித்தளமின்றி எழுப்பப்படும் மாளிகையைப் போன்றது!...


கனகமணி :
அடித்தளமில்லா மாளிகையா?...


காமவல்லி :
தமிழ்ப் பயில்பவர்களைப் போல், தமிழகத்தில் நுழைந்து, தமிழைப் பயின்று, தமிழில் ஆரியத்தைக் கலக்கி, ஆரியநெறியைத் திணித்தும், ஆரியர்களுக்குப் புகலிடம் தந்தும் வருகின்றனர், ஆரியமுனிகள்...

கனகமணி :
என்ன?... தமிழில் ஆரியமா?

(நாட்டின் எல்லையைக் குறிக்கும் வரைப்படத்தைக் காட்டி)

காமவல்லி :

இதோ, இந்தப்பகுதி விந்தசாரலின் தென்பகுதி!... இயக்கநாடு எனப் படுவது!.. இது வடக்கு... இது குடக்கு!... இப்பகுதிகள் நாகநாடு என அழைக்கப் படுகின்றன... இலங்கைப் பேரரசுக்குட்பட்டது!... இக்குறுநிலமாளும் இயக்கரும், நாகரும் உழவுத் தொழில், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களோடு, கடல் வணிகமும் செய்து வாழ்கின்றனர்... இத்தமிழர்களிடையே, தமிழ்ச் சிதைவுற்று ஆரியவாடை வீசத் தொடங்கிவிட்டது... ஆய்வுச் செய்த நமது மொழிமன்ற சான்றோர்கள் ஆரியர்களின் சூதைக் கண்டறிந்துள்ளனர்... இன்னும் சின்னாட்களில் இயக்கரும், நாகரும் மொழிவது, தமிழா, வேறு மொழியா என அய்யம் விளைந்திடும்... இப்பகுதியில் கல்விச் சாலைகளும் குறைவு!... கற்றோரும் மிகச்சிலரே!... இதனால்தான் ஆரியம் இங்கே துளிர்விடலாயிற்று!...


கனகமணி :
அதேப் போல் தானா , ஏனையப் பகுதிகளிலும்?...


காமவல்லி :
இதோ, இலங்கையின் குடகுப் பகுதியில் இருப்பது கிட்கந்தகம்!... வாலி இங்கே அரசாள்கிறான்... ஆரியம் எனில் இவன் அரவமாய்ச் சீறிடுவான்... இவனுடைய,தம்பி சுக்ரீவனும், ஆரியம் எனில் அனலைப் பொழிந்திடுவான்... ஆனால்; அண்ணன் தம்பியரான வாலி, சுக்ரீவன் ஆகியோரிடையே வளர்ந்துள்ள உட்பகை...


கனகமணி :
உட்பகையா?


காமவல்லி :
ஆமாம்!... வாலி தோள்வலிமை மிக்கவன்!... வாள் வீச்சாளன்!... சுக்ரீவன் அழகன்!... சுகவாழ்வில் நாட்டம் மிக்கவன்!... தந்தையின் மறைவுக்குப்பின் மூத்தவன் வாலி முறைப்படி அரசேறினான்... செல்லமாய் வளர்க்கப்பட்ட சுக்ரீவனின் மனது,அரியணை ஒரு சுக ஊற்று என நினைத்து, அந்த நினைவின் மயக்கத்தில் ஆழ்ந்து சுக்ரீவனும் அரசேறத் துடிக்கிறான்... 'தமிழரிடையே பிளவு வரின், தரணியில் தமிழ் செழிக்காது... தமிழ்ச் செழிப்புறவில்லை- யாயின் தமிழ் நிலம் பாழாகும்!... பாழ் பட்டநிலமதில், தமிழர் தாழ்வுற, பகைவர் வீறுக் கொள்ள, தமிழர், தமிழ் நிலத்திலேயே உரிமையற்றுப் போவர்... உட்பகையும், பதவி மோகமும் நெருப்பினும் வேகமாய் இனத்தையே சுட்டுவிடும்' என்று இலங்கை வேந்தன் இவர்களுக்கு எடுத்து இயம்பினான் பலமுறை!... கேளா செவியினனாய், வாலியோடு சுக்ரீவன் பகை வளர்த்து வருகிறான்... வளரும் பகையால், கல்வியில் ஒழுங்கு சிதைந்தது அங்கே!... வணிகவீழ்ச்சியும் ஏற்பட்டு, அங்கே வறுமையே அரசோச்சுகிறது... இச்சூழலைச் சாதகமாகக் கொண்டு இரிசியமுகன் எனும் ஆரியமுனி கிட்கந்தகம் மலையில் குடியேறியுள்ளான்... ஆரியமுனியின் வரவால், ஏற்படவிருக்கும் ஆபத்தை அறியாமல், அரசபீடத்தின் மீது ஆவல் கொண்டு வாலியும், சுக்ரீவனும் இருக்கின்றனர்... இரிசியமுகன் குடிலமைத்து, ஆரியப்பயல்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறான்...


கனகமணி :
ஆரியமுனி, ஆரியர்களுக்கு ஆரியம் கற்றுத் தராமல், தமிழைப் பயிற்றுவிக்கிறானா?


காமவல்லி :
தமிழ்ப் பயின்று, தமிழரோடுப் பழகி, தமிழரிடையே ஆரியத்தைத் திணிப்பது...


கனகமணி :
ஓகோ!


காமவல்லி :
விந்தசாரலின் தலைநகர் இது... இடைவள நாடு!... இங்குதான் தாடகைத் தாய்க் கொல்லப்பட்டாள்... இடைவள நாட்டுக்கு அருகில் - குணவாயிலில் - இருப்பது பஞ்சவடி!


கனகமணி :
நாம் நாள்தோறும் உலாவப் போகிறோமே!... மாஞ்சோலை நிறைந்தப் பகுதி!...


காமவல்லி :
ஆமாம்!... அதுதான்... பஞ்சவடி!... பஞ்சவடியை ஒட்டி இருப்பது தண்டவனம்!... தண்டங்கள் மலிந்துள்ள இவ்வனத்தில் அகந்தையோடு அகத்தியன் நுழைந்துள்ளான்... ஆரியம் தூவுவதுதான் அவனதுப் பணி!... இது சித்திரக்கூடமலை!... இம்மலையோரமாய்க் குடிலமைத்து, குடிக் கொண்டுள்ளான் பரத்துவாசன் எனும் ஆரியமுனி!... பஞ்சவடியும், தண்டவனமும் விந்தகத்தின் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதிகளே!... பொய்கை ஆற்றின் மறு கரையில் இருப்பது சிங்கவேர்புரம்!... இக்குறு நிலத்தை, குகன் அரசாள்கிறான்... இவன், அரசாட்சியில் அக்கறையில்லாதவன்... படகோட்டியே பொழுதுக் களிப்பதில்தான் இவனுக்கு ஆனந்தம்!... அரசனாயிருந்து எல்லையைக் காவாது இருப்பின், நுழையும் ஆரியருக்கு மலர்த்தூவி வரவேற்புக் கூறுவது போலல்லவா இருக்கும்!... இவன் சரியான கண்காணிப்பை மேற்கொள்ளாததால், ஆரியர்கள் சரஞ் சாரமாய் இந்நாட்டு வழியாக விந்தக எல்லைக்குள் நுழைந்து விடுகின்றனர்... இதோ... இங்கு மமதையோடு மாதங்கன் குடிலமைத்து உள்ளான்... திட்டமிட்டுத் திருட்டுக் கும்பல் போல் ஆரியக் கும்பல் தமிழகத்தில் நுழைந்துவிட்டது!...


கனகமணி :
நமதுக் காவலர்களால், ஆரிய நுழைவைத் தடுத்திட இயலாதா?...


காமவல்லி :
தமிழ் கற்க ஆவலோடு வருகின்றனரே என்று ஆரியர்களென்றும் பாராமல், நல்வரவுக் கூறினான் இராவணன்!... தமிழ் கற்க வரவில்லை; எம்மை ஏமாற்ற வந்த எத்தர்கள் என்று இப்போதுதானே, தெரியவந்துள்ளது!...
கனகமணி :

பழுதப் பழங்களாய், பாவமேதும் அறியாதவர்களாய். தமிழ் மீதுப் பற்றுக் கொண்டவர்களாய் தமிழகத்தில் நுழைந்த ஆரியமுனிகளின் ஈனச்செயலைக் கண்டப் பின்னர், இனி எந்த ஆரியரையும் எவ்விதத்திலும் நம்ப மனம் இடந்தராதே!...


காமவல்லி :
ஆமாம்!... ஆரியர்கள் சிரித்து வந்தால், அந்தச் சிரிப்பில் நெருப்பிருக்கும்!... ஆரியர்கள் தொழுது வந்தால், தொழுதக் கையினுள்ளே கத்தி இருக்கும்... நெஞ்சம் மயங்கப் பேசிடுவர்... அந்தப் பேச்சினுள் வஞ்சகம் மறைந்திருக்கும்... ஆரியம் தமிழ் எல்லைக்குள் நச்சரவமாய் மண்டிக் கிடக்கின்றனவே... இதனை அழித்திடாமல், படை நடாத்திச் செல்லலாகுமோ?... இங்கிருக்கும் இருளகற்ற விளக்கு ஏற்றிய பிறகல்லவா, பாதைத் தெளிவாகும்!... ஆரியப்போர் என்று அறைக்கூவி, இருவிழிகளை மூடி இருட்டுப் புதருக்குள் போக இராவணன் ஒப்புதல் தர மாட்டான், கனகமணி!...


கனகமணி :
அரசியாரே!


காமவல்லி :
முதலில் பயணப் பாதையை இங்கு சரி செய்திட வேண்டும்... இதோ, இலங்கையின் குணவாயிலில் இருப்பது முல்லைநாடு!... இது எனது தாய்வழி நாடாகும்!... முல்லைநாடு இலங்கைக்கு மதிற்போல் திகழ்வதால், இங்கு கவனிப்பு மேற்கொள்ளவேண்டியதில்லை... ஆரியர்கள் தடையின்றி - எளிதில் - நுழைந்திடும் கோதையாற்றுப் பகுதியும், பொய்கையாற்றுப் பகுதியும், சிருங்கவேர் புரமும், நமது படைகளால் சூழப் படல் வேண்டும்... ஆரியர்கள் குடிலமைத்துள்ள சித்திரக்கூடமலை, தண்டவனம், பம்பாநதி, கிட்கந்தக மலை ஆகியவற்றின் மீது, திடீர்த் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்... தளபதியார் இலங்கை வேந்தனிடமிருந்து எத்தகையத் திட்டத்தை ஏந்தி வருகிறார் என்பதற்காக காத்திருக்கிறேன்... சரி; புறப்படு!... மாலையாகி விட்டது... மாஞ்சோலை சென்று வருவோம்...
(புறப்படுகின்றனர் )

-திரை-









பாகம் :1. காட்சி-13. மாஞ்சோலை!



காமவல்லி
கனகமணி
இராமன்
இலக்குவன்



(பறவைகளின் மெல்லிய ஒலி படர்ந்திருக்க-
காமவல்லியும், கனகமணியும் ஒருவர் முதுகோடு ஒருவர் சாய்ந்து அமர்ந்திருக்கின்றனர்... இருவரிடையே நிலவும் மவுனத்தை, மெல்லியக் குரலால் கலைத்து-)


கனகமணி :
மவுனமோ? அன்றி மயக்கமோ?... மணிமொழியால் எந்தன் வினாவுக்கு விடைத் தாராயோ?...
காமவல்லி :
மயக்கம்தான் இங்கு மவுனமாயிற்று!


(மூச்சை உள்ளிழுத்து, நெஞ்சின் மீது கரம் வைத்து, விழிகளை மூடி விரகதாபத்தோடு- கனகமணி பேசுகிறாள் )


கனகமணி :
ஆமாம்!... கவின்மிகுக் காற்றும், மாங்கனி மணமும், நறுந்தேனின் வாடையும். ஆகா... மேனி மீதில் ஊர்ந்து, மோக சிலிர்ப்பினை உண்டாக்கும்!... மாம்பூக்களும் மெய்யாகவே, நெஞ்சில் சுகமான கிளர்வினைத் தோற்றுவிக்கும்!... இந்த மயக்கம் அரசியாருக்கும் உண்டோ?...


காமவல்லி :
உன் மீதில் சிலிர்ப்புண்டாக்கும் சுந்தரன் எவனடி?... கூறடி!


கனகமணி :
பாரடி!.. என் பூவிதழடி...


(கனகமணி விழியை அகல விரித்துக் காட்டுகிறாள்)


காமவல்லி :
உந்தன் விழி சிறையில் தவிக்கும் சுந்தரன் எந்தன் அழகில் மயங்கி, மீள வழி தேடுவான்... மூடடி!


(காமவல்லி சிரிக்கிறாள் )


கனகமணி :
பொல்லாத ஆசைதான் உனக்கும்!... போகவிடமாட்டேன் சுந்தரனை, என் போதை விழிகளை விட்டு!... ஆமாம்; உன் நெஞ்சம் மயங்கி நின்றதன் மர்மமென்ன?...


காமவல்லி :
அதோ... முழுநிலவு முகில் பாதையில் உலாவுதல் போன்றக் காட்சி!... எதனைக் குறிக்கிறது தெரியுமா?... மெய் மறந்து அன்னை துயின்று கொண்டிருக்கிறாள்... குழந்தையோ, பாலமுது அருந்த துடிக்கிறது... தனது தளிர் விரல்களால் அன்னையின் மேலாடையைப் பற்றி தவழ்கிறது... இல்லையா?... நிலவின் மீது தெரியும் கருங்கோலம் குழந்தையின் வாயில் ஊறும் உமிழ்நீர்ப் போல்...


கனகமணி :
ஆகா... புலவனையும் மிஞ்சி விட்டாய்!... நிலவை மழலையாகவும், முகிலை அன்னையின் மேலாடையாகவும் மாற்றிய உனது கற்பனை , அதி அற்புதம்!... நிலவைக் காதலியாகப் பாவிக்கும் நமதுப் புலவர்களும் உந்தன் கற்பனைக் கண்டு வியப்பெய்திடுவர்...


காமவல்லி :
அக்காட்சியில் மவுனமாக எனது நெஞ்சம், இலயிப்புக் கொள்ளக் கொள்ள, என்னுள் பெருகும் மயக்கத்திற்கு ஈடேது?...


கனகமணி :
அரசியே!... நீ அரசியலை விடு!... அழகுத்தமிழைத் தொடு... மலருக்குள் வாசம் போல், தமிழோடு உன் புகழும் நேசமாய்த் திகழுட்டுமே... பகலும், இரவும் போல் அரசியலும் நிறம் மாறலாம்... உல்லாசக் காற்று என நம்மால் சல்லாபிக்கப் படும் நல்காற்று, வேறு சிலரால் பொல்லாத குளிர் காற்றென குறைப் பேசப் படலாம்... அரசியலும், அவ்வாறுதான்!... தமிழ் உன்னைக் கோலம் மாற்றிக் காட்டாது... அரசியலை விடு!... அழகுத் தமிழைத் தொடு...


(காமவல்லி கடகடவென சிரித்து..)


காமவல்லி :
என்னை நான் உயர்த்த, எனது தமிழை ஏணியாக்கிக் கொள்வதா? எனது இனம் சடலங்களாகிட நான் உயிர் வாழ்வதா?... கனகமணி, நின் எண்ணப்படி எல்லாரும் அரசியலைத் துறந்து, தமிழின் மடியில் துயின்றிட்டோமெனில் ஆள்வது யார்?... தமிழ் மண்ணை தமிழன் ஆளவேண்டும்... தமிழனால், தமிழ் ஆளப்படும்போது தமிழ்மொழி வளம் பல பெறும்... நீரூற்றி எருவிடுதல் போல்தான் தமிழ் வளர, தமிழன் அரசாளுதல்!... குடங்குடமாய் நெய் வார்த்தால் செடி வளருமோ?... நெருப்பினடியில் பூவும் மலருமோ?... பிறமொழியாளனை தமிழ்மண் ஆளவிட்டால், தமிழ்தான் வளருமோ?... நம்மில் அரசு வேறு; மொழி வேறன்று!... அரசும், மொழியும் இன்றி அரசியல் நடவாது... மொழியுணர்ச்சி இல்லையேல், மனிதனும் விலங்கும் ஒன்றுதானம்மா!... நூலகத்தின் காட்சிப்பொருளாய் மாறுவதற்குக் கூட, நமது மொழிக்குத் தகுதி இருக்காது, மொழி உணர்ச்சி ஊட்டுகின்ற அரசு இல்லையேல்!... மொழி உணர்ச்சி மேலோங்க தமிழரசு தேவை!... தமிழ் கோலோச்சினாலன்றி புலவர் நெஞ்சிலும் தமிழ் சதிரோச்சாது!...


கனகமணி :
மெய்தான்!...


காமவல்லி :
மெய்யென்றறிந்தும் பொய்க் கோலம் போட முனைந்ததேன்?


கனகமணி :
தேன்பொழியும் உனது வாய்மொழிக் கேட்கத்தான்!


காமவல்லி :
வாய்மொழியில் சீற்றமும் இருக்குமென்று நீ சிந்தியாததேன்?...


கனகமணி :
சீற்றம் சூடாய் இருக்குமெனில், இக்குளிர் வேளையில் மேனிக்கு இதமாய்த்தானே இருக்கும்?...


காமவல்லி :
குளிர்வாடையென்றும், மேனிக்கு இதமென்றும் நீ காமசாயல் கொண்டு மொழிவதேன்?...

கனகமணி : (காமவல்லியின் நெற்றியில் முத்தமிட்டு)
கன்னியாய் இருப்பதால் தேனே!...


( கனகமணி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, புன்னகைத்தவண்ணம் ஓடுகிறாள்..)


(காமவல்லியும் நகைக்கத்தபடி, தோழியைத் தொடர-



அப்போது ,ஓர் அரசனுக்குரியய ஆடை, அணிகலன்களோடு ஓடி வந்த இராமன், காமவல்லி அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொள்கிறான்... காமவல்லி மிதித்த மண்மீது இதழ் பதித்து, முத்தமிட்டு மெய் சிலிர்க்கிறான்...)


( இலக்குவன் வருகிறான்)


இலக்குவன்:
இராமா, ஒவ்வொரு மாலையும், உனை ஒய்யாரமாய் அழகுப் படுத்தி அழைத்து வருகிறேன்... நீயோ, காமவல்லி மிதித்த மண்ணை முகர்ந்து முயங்குகிறாய்... கட்டழகா!... அழகுப்பெட்டகம் அவள் அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டு வணங்குகிறாய்... கண்ணனைக் கட்டித் தழுவி இன்பம் பெற்ற சிவப்பெருமானைப் போல் கருநிற மேனியழகா உனைத்தொட்டுத் தழுவத் துடிக்கிறேனடா... முட்டையும், சந்தனமும், இளநெய்யும் இட்டு நயமுடன் நீராட்டி, வண்ணம் பூசி வடிவழகா, உனக்கு கண்கவரும் ஆடையணிகளும் பூட்டியுள்ளேன்... அவளெதிரில் நீ தோன்றினால் போதும்... பள்ளியறை ஒன்று புதிதாய் எழுப்பி, எழுபிறவியும் உன்னைவிட்டு அகலாது அணைத்திடுவாள்...


இராமன் :
நாணம் கொண்டு நானும் தடுமாறுகிறேனடா, தம்பி!...


இலக்குவன் :
நாணமதை நசுக்கிவிடு!... நாணம் கொண்டு நாள் கடத்தினால், சுகபோக வாழ்வது சூனியமாகி விடும்!... ஏக்கம் கொண்டு எலும்பாய் தேகமும் கரைவதற்குள், வாய்த் திறந்து வனிதையிடம் பேசிடு!... ஊதிகையை மயக்கிடாது, ஊதா வண்டாய் அலைதல் சிறப்பாகாது!...


இராமன் :
ஆகா!... தம்பி, எதைப் பேசுவேன்?... என்ன பேசுவேன்?...


இலக்குவன் :
குழலோடுப் பேசக் காற்றுக்குப் பாடஞ் சொல்லவா?... கடல் சொல்லியா, கயல் நீந்துகிறது?... பாறையின் வேண்டுதலுக்கோ அருவிப் பாடுகிறது?... எண்ணமதை ஈர்க்கும் ஏற்றமிகு அழகா, நீ எதிரில் செல்!... மங்கை நின் வடிவுக் கண்டு - மையல் கொண்டு - மண்டியிடுவாள் நின் பாதம் தொட்டு!...

மாங்காற்றின் ஓவியமோ - நீ
மாமாலையில் விளைந்த மலரோ?...
கற்பகக் கொடியோ - நீ
கண்ணில் நின்றாடும் ஓதியோ!

வானிலிருந்து இறங்கிய மின்னலோ - நீ
தேனமுது சுமந்துலாவும் முகிலோ
வானத்து மீன்களின் தொகுதியோ - நீ
பாடவந்த பாடலின் ராகமோ...

நிலத்தில் விளைந்த நிலவோ - நீ
பொன்னில் விளைந்தச் சிலையோ!
கனவுத் தீட்டும் கவிதையோ - நீ
அருகனை ஏவும் அரசியோ!...

இன்னிசைப் பாடும் குயிலோ - நீ
குயிலுக்கே குயிலான இராகமோ!
எழிலுக்கு எழிலான எழிலோ - நீ
திருவுக்கும் திருவான திருவோ

பூவுலகில் பூத்த மாதரசியே - உன்
பூப்பாத அணியாய் மாறிடவே
காதலும் பூண்டேன் உன்பால்
ஏலாய் எனையும் தேவியே!...


என்று, இராமா நீ வேண்டிடு!... உன் அழகிலும், உனது மொழியிலும் மயங்கிடுவாள் காமவல்லி!... உன்னால் இயலாதென்றால் கூறு; நானவளைக் காதலிக்கிறேன்...


(இராமன், சோகமும், ஏக்கமும் கலந்தக்குரலில்-)


இராமன் :
நீ யாரடா, எனது காமவல்லியைக் காதலிக்க?... எனது காமவல்லியிடம் நானே எனது காதலை வெளிப் படுத்திடுவேன்... ஆனால்; எனது காமவல்லியோடு, கூடவே ஒருத்தி வருகிறாளே... கூட ஒருத்தி இருக்கையில், நான் எங்ஙனம் குறுகுவேன் எனது காமவல்லியை!... தரைமீதில் விளையாட, துள்ளிவரும் அலையைத் துரத்திடும் கரையென, எனது காமவல்லியின் தோழி எனது காதல் அலைக்கு மதிலாய்த் திரிகிறாளே...


இலக்குவன் :
தயக்கம் இது தானோ?... தகர்க்கிறேன் மதிலை!


இராமன் :
தகர்ப்பா?


இலக்குவன் :
தந்திரமும், சூழ்ச்சியும் நமதுக் கலைகளல்லவா?... தந்திரத்தால் காமவல்லியைத் தனியாக்கி, உனக்குச் சாதகச் சூழ்நிலையை ஏற்படுத்துகிறேன்...


இராமன் :
நிலவும், வானும் போல் வருகின்றனரே... வானிலிருந்து நீ எப்படி, நிலவைத் தனியாக்குவாய்?...


இலக்குவன் :
நாளை மாலை வழக்கம் போல் அவ்வழகியர் இங்கு வந்தி


(இராமன் குறுக்கிட்டு)
இராமன் :
அழகியர் என்று தோழியையும் இணைக்காதே!... எனது காமவல்லிக்கு மட்டுமே, அழகு எனுஞ்ச்சொல் சொந்தம்!... அழகிற்கெல்லாம், அழகானவள்... அவளுக்காகவே அழகெனுஞ் சொல் உதயமாகி உள்ளது!... வேறெவளுமே அழகி இல்லை!... அழகி இல்லை!...


(இலக்குவன் ஓசையுடன் சிரித்து)
இலக்குவன் :
இராமச்சந்திரா, உனது காமவல்லியின்பால் நீ மிகுக் காமம் கொண்டு விட்டாய்... நன்று!... மரத்தின் நிழல் மண் மீது படாமல், விண் மீதோ விழும்?... உனது காதல், காமவல்லியைத் தொடராமல், கருத்திழந்த சீதையையோ தொடரும்?... சரி; கூறுவதைக் கேள்!... உனது அழகி காம


இராமன் :
பேரழகியென்றுக் கூறு!...


இலக்குவன் :
மாபேரழிகியாம் உனது காமவல்லியோடு, தோழி கனகமணியும் நாளை, மாலை ஈங்கு வந்திடுவாள்... அல்லவா?...


இராமன் :
ஆமாம்!...


இலக்குவன் :
வந்தவள், அரசி மாங்கனியுண்ணுதற்காக, தோழி கனகமணி, கனி கொய்து, அலம்பிட


இராமன் :
நீரோடைச் சென்றிடுவாள்...


இலக்குவன் :
சென்றவள் திரும்புமுன்னர், நீ காமவல்லியை அணுகிட வேண்டும்!


இராமன் :
சிட்டெனப் பறந்து சிட்டென திரும்பிடுவாளே அக்காதாகி!... அக்குறு நாழிகையில் நான் எங்ஙனம் குறுகுவேன் குறுமகள் காமவல்லியிடம்?

இலக்குவன் :
திரும்பமாட்டாள்.

இராமன் :
இலக்குவா!

இலக்குவன் :

ஆமாம்!... நாளை, மங்கை மாங்கனியோடு நீரோடைக்கு வரும்போது, நானும் மங்கை வேடத்தோடு அங்கே இருப்பேன்... அவள் நெருங்க நான்


இராமன் :
நீ?


இலக்குவன் :
நாளை அறிவாய்!... நடப் போகலாம், குடிலுக்கு!


இராமன் :
குடிலை நினைத்தாலே, குமுறுகிறது நெஞ்சம்!... சீதையாம் சீதை!... அச்சிறுக்கியின் ஓலமும், ஒப்பாரியும் அளவிலா சினத்தை மூடுகின்றன...


இலக்குவன் :
கேவலம்! பெண்ணின் ஓலத்தைப் பொருட்டாய் மதிப்பதா?... கிடக்கிறாள் சிறுக்கி!... அண்ணா, உங்கள் சுகபோகமே, எனது சுகபோகம்!... எவள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?... எண்ணியதை முடிப்போம்!... ஏற்றமோடு அயோத்தியைக் கைக் கொள்வோம்...
(இராமன் தோள் மீது இலக்குவன் கை வைக்கிறான்...)

-திரை-








பாகம் :1. காட்சி :14. - மாஞ்சோலை -

காமவல்லி
இராமன்
கனகமணி



(தனித்து, காமவல்லி நடந்து வருகிறாள்... அவள் நடந்து வரும் பாதைமீது, காட்டுப் புறாவொன்று பொத்தென விழுந்து, பொல்லா வேதனையோடு வேதனையோடு துடிதுடிக்கிறது...


கண்ணுற்ற காமவல்லி கடிதேகி, பறவையைக் கைக் கொள்கிறாள்... துடிக்கும் புறாவின்பால் நெஞ்சம் விம்மலுற-


விரைவாய், மூலிகையைக் கொய்து, அறுபட்டு இரத்தம் பெருகிடும் காயத்தின் மீது, சாறு பிழிந்து, தனது துகிலின் ஓரத்தைக் கிழித்துக் கட்டிடுகிறாள்...


மரத்தடியில் அமர்ந்து, மடிமீது புறாவைக் கிடத்தி, புறாவின் மேனியைத் தளிர் விரல்களால் வருடுகிறாள்...


கோவை இதழைக் குவித்துக் குளுகுளுவென காற்றூதும் போது-


இளவரசுக் கோலத்தோடு, இன்முறுவலுடன் இராமன் வரல்...


தலைக்குனிந்து புறாவின்பால், எண்ணம் ஆழ்த்தி, வருடிக் கொண்டிருக்கும் காமவல்லி இராமன் வரவை அறியவில்லை...


காமவல்லியின் முதுகுப் புறமாய் இராமன் நின்று- )


இராமன் :
ஒப்பில்லா எழிலரசியே, வணக்கம்!


(குரல் வந்த திக்கில் திரும்பிய காமவல்லி, இமைக்காது இராமனையே கனிவாய் நோக்குகிறாள்...)


இராமன் :
ஆழ்கடலன்ன அகல் விழியுடை விந்தகத்தின் ராணியே, வணக்கம்!


(பேசவும் வலுவிழந்தவள் போல், உலர்ந்து ஒட்டிய இதழ்களை, நுண்மையாய் பிரித்தல் போல், மென்மையாய் இதழ் திறந்து, மெலிதானக் குரலில்...)


காமவல்லி :
வணக்கம்!... தாங்கள்?


(தன்னை மறந்தவள் போல் எழுந்து நிற்கிறாள் )


இராமன் :
விண்ணில் பூத்தப்பூக்கள் விந்தநாட்டின் பொழிலில் மயங்குகின்றனவே... தாய் சேயைத் தாலாட்டுதல் உண்டு... ஆனால், இம்மண்ணில் பிறந்த தென்றல் இம்மண்ணையே தாலாட்டுகின்றதே... இதுதானோ விந்தை!... தாலாட்டின் கீதம் எண்திக்கும் தவழ்ந்து, காற்றுக்கே களிப்பூட்டுகின்றதே... விந்தையிலும், விந்தையல்லவோ!... நிலத்தின் செழுமைக்குக் காரணம் அருகில் ஓடும் ஆறென்றிடுவர்... ஆனால்; இந்நிலத்தின் கண் ஆறு ஓடுவதால், ஆறே பெருமையடைகின்ற விந்தை, விந்தநாடன்றி எந்த நாட்டில் காணவியலும்?...
பூக்கின்ற பூக்களால், பூக்காட்டின் அழகு மிளிர்வதுண்டு... ஆனால்; விந்தநாட்டில் பூப்பதால் பூக்களும் பூரிப்புடன் மிளிர்கின்றனவே... விந்தநாடு எனும் பேர் இதனால்தானோ வந்தது?... குயில் எந்தத் திக்கிலிருந்து கூவினாலென்ன... ஆனால்; விந்தத் திக்கு நோக்கிக் குயில்கள் கூவி மகிழ்கின்றனவே... இவ்வதிசயம் எங்ஙனமோ?... விந்தையிலும், விந்தையன்றோ... இவ்விந்தைகளுக்கெல்லாம் பொருளறிய விந்தநாட்டின் தலைவியே, உம்மைக் காண வந்துள்ளேன்...

காமவல்லி :
இளவரசரே, தாங்கள்?...

இராமன் :
இளவரசன் என, எனை எங்ஙனம் அறிந்தீர்?

காமவல்லி :

வானவில்லின் வர்ணக்கோலத்திற்கு, இணைக் கோலமும் வேறு உண்டோ?... மண்ணின் மைந்தர்களாய் ஆயிரம்பேர்த்தான் இருந்தாலும், அரச மைந்தனின் முகப் பொழிவு அனைவர்க்கும் வருமோ?... இனியவரே, இதற்கு முன்னர் நான் தங்களை எங்கோ, பார்த்துள்ளதாக நினைவு!...


(இராமன் உளம் அதிர, தன்னை மிக நயமாக மறைத்துக் கொள்கிறான்..)


இராமன் :
எங்கள் நாட்டில், என்னை போல் பிறருக்கும், பிறரைப் போல் பலருக்கும், பலரைப் போல் பலருக்கும், பலரைப் போல் சிலருக்கும், சிலரைப் போல் அநேகருக்கும் சாயல் ஒத்திருப்பதுண்டு... என்னைப் போல் சாயலுள்ள என் நாட்டுக் குடிமகன் எவனையேனும் தாங்கள் நோக்கி இருக்கலாம்... அதோ, அந்த மேகத்தைப் பாருங்கள்... வெள்ளை நிறத்தில் ஒரு மேகம்!... அதனருகில் உள்ள மேகத்தின் நிறமும் வெள்ளை!... ஆகா... வெள்ளைநிறங்களில்தான் எத்தனை மேகங்கள்...


காமவல்லி :
மெய்யாகவே சொல்கிறேன்... ஈர்த்துவிட்டன, தங்களின் இதமானச் சொற்கள்! இனிமையானத் தங்கள் சொற்கள் என்னை என்னவோ செய்கின்றன... நயமாகப் பேசி என்னை நளினமாக கவர்ந்து விட்டீர்கள்... இனியவரே, தங்களை நான்


(இராமன் மிகு ஆவலுடன்...)


இராமன் :
சொல்லுங்கள், அரசியாரே!...


காமவல்லி :
தங்களை, நான் சந்தித்ததில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்... நிலவுக்குள் அழகு போல், ஒளிவிடும் இந்த நெஞ்சினுள், ஆகா... எத்தனை நயனங்கள்... உங்களைப் போன்றோரை சந்திப்பதில், எனது அண்ணன் இராவணனுக்கு அளவிலா மகிழ்ச்சி உண்டாகுமே... அவரது தங்கையான யான், தங்களைக் காட்டில் நிற்கச் செய்து, பேசிக் கொண்டிருப்பதைத் தாழ்வாகக் கருதுகிறேன்... வாருங்கள் அரண்மனைச் செல்வோம்!


இராமன் :
கனியிதழ்த் திறந்து அழகிய வனத்தை, காடு என்று தாங்கள் சாடலாகுமோ?... காடெல்லாம் காடுதான்!... ஆனால்; தங்கள் கால் பாதம் பட்டு, இக்காடு அழகிய வனமாய் மாறியுள்ளதே!... அழகியப் பாடலின் வரியாய் மனதுக்கு அமைதியூட்டும் மாஞ்சோலையின் மூலப்பொருள் என்ன?... தங்கள் திருமுகமல்லவோ?... கனவோடு மகிழ்ந்தாடும் மனம் போல், இங்கே மணம் வீசி, மனதில் மகிழ்ச்சியூட்டும் மாஞ்சோலைக்கு மூலப்பொருள் என்ன?... தங்கள் மூச்சல்லவா!... அழகு மயிலின் தோகை போல், கிளைவிரிந்து மாஞ்சோலைத் திகழ மூலப்பொருள் என்ன?... தங்கள் சுரிக்குழல் அல்லவோ!... இளமுகில் போல் பொலிவூட்டும் மாஞ்சோலையின் மூலப்பொருள் என்ன?... தங்கள் பொலிவல்லவா!... வளர்நிலவுப் போல், வனப்போடு இம்மாஞ் சோலைத் திகழ, மூலப்பொருள் என்ன?... தங்கள் திருமுகமல்லவோ!...


காமவல்லி : (சிரித்து)
காற்றிலே ஓவியந்தீட்டவும், காலத்தை உருவம் ஆக்கவும், சூனியவெளியிலே பூந்தோட்டம் சமைக்கவும், உங்களைப் போல் ஒப்பற்றவர்களால்தான் முடியும்!... ஆமாம்; நெடும்புனல் தாண்டி, நெடுங்கானிடை நெடுந்தொலைவுப் பயணம் செய்து ஈங்கு வராமல், நேர்வழியே அரண்மனைக்கு சீராளா, நீர் வந்திருக்கலாமே, எனைக்காண!...
இராமன் :
நானாக வரவில்லை!...

காமவல்லி :
வேறு யாரால்?

இராமன் :
கனவால்!

காமவல்லி :
கனவா?...

இராமன் :

கனவுக்குப் பலனுண்டு!.. இளங்கன்னியே! இதில் உமக்கு நம்பிக்கையும் உண்டோ?...


காமவல்லி :
கனவுக் கண்டு, கன்னியென்னைக் காண வந்த கட்டழகா!... அந்த அற்புதந்தான் என்ன?... அதைச் சொன்னால், நானும் தெரிந்துக் கொள்வேனே...


இராமன் :
ஓ... கனவு மிகவும் வல்லமை வாய்ந்தது... கனவு, அது கரையிலாக் கடல் போன்றது!... ஞானிகளையே வியக்க வைப்பதுக் கனவு!... நாளை நடக்கவிருப்பதை உறங்கும் வேளையில் உரைப்பதுக் கனவு!... கண்மூடும் வேளையெல்லாம் கவிதையாய்க் கனவுகள் இமையிலே மலரும்... கனவு மலர் மீதிலே கன்னி உமதுத் திருக்கோலம் காண்பேன்... ஒரு நாளெனில் மறந்திருப்பேன்... ஒவ்வொரு நாளிலும் கன்னி உமதுத் திருக்கோலம் காண்பேன்!... மகிழ்வேன்!... ஏங்குவேன்!... நேரில் சந்திக்கமாட்டோமா எனத் துடிப்பேன்... துடியிடையாள் உம்மை காணவும் செய்தேன் கனவில்!... மகிழ்ந்தேன்!... ஏங்கினேன்!... துடித்தேன்!... ஆமாம்!... இம்மாஞ்சோலையில் மங்கை தோழி ஒருத்தியோடு மனமகிழ்வோடு உலாவி வரும் உம்மை எம் கனவில் சந்தித்தேன்... பேசினேன்!... மகிழ்ந்தேன்!... இம்மாஞ்சோலைக்கு வரும் வழியையும் கனவுதான் எனக்குக் கூறியது... கனவு காண்பித்தப் பாதையில் வந்தால், அடடா... கனவுக் காட்டியக் காரிகையேதான்!... இதில் அய்யமில்லை... அதிசயிக்கிறேன்... ஆனந்திக்கிறேன்... கனவோ, நனவோ எனத் தவிக்கிறேன்... கனவின் சக்திதான் என்னே!... அரசியாரே, இதோ, தங்கள் கையில் உள்ளதே புறா!...இப்புறாவின் வயிற்றின் கீழ்ப்பகுதியில் அம்பு தைத்தப் புண் இருக்கிறதா?


காமவல்லி : (வியப்போடு)
ஆமாம்!


இராமன் :
இடக்காலின் மூன்றாவது விரல் நகம், மேல்நோக்கி வளைந்துள்ளதா?...


காமவல்லி :
ஆமாம்!


இராமன் :
அடிக் கழுத்துக்கும் கீழாக, மச்சம் போன்று சிறுபுள்ளி தென்படுகிறதா?


(காமவல்லி, புறாவின் கழுத்தை நோக்கி-)
காமவல்லி :
ஆமாம்!...


இராமன் :
அதேப் போல் சிறுப்புள்ளி, புறாவின் மூக்கின் நுனியிலிருப்பதைப் பாருங்கள்...


காமவல்லி :
ஆமாம்!


இராமன் :
புறாவோ தங்கள் கையில்!... ஆனால், அதன் அடையாளங்கள்...


காமவல்லி :
தங்களுக்கு எப்படித் தெரிந்தது?


இராமன் :
கனவுதான்!... புறாவொன்று அடிப்பட்டு வீழ்ந்ததைக் கண்டேன் கனவில்!... வீழ்ந்தப் புறாவை விந்தநாட்டு எழிலரசி கையில் எடுத்ததையும் கண்டேன் கனவில்!... மருந்திட்டு புறாவை மடியில் கிடத்தி, மதுவூறும் இதழால் புறாவுக்குக் காற்று ஊதிய மங்கை உம்மை கண்டேன் கனவில்!... அதோடு புறாவின் குறிகளையும்...


காமவல்லி :
கனவுச் சொல்லியதோ?
இராமன்
ஆமாம்!... கனவு வழியே வந்து, கன்னி உம்மோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்...


(இராமனையே சிறுது நேரம், காமவல்லி உற்றுப் பார்க்கிறாள்)


காமவல்லி :
ஆகா... கேட்கக் கேட்க வியப்போ வியப்பு!... இன்னும் நான் அதிசயிக்கும்படி அற்புதங்கள் நிகழ்ந்துள்ளனவோ, கனவில்?...
இராமன் :

வானிலிருந்து வெண்புகைப் போல் என் முன்னர் தங்கள் உருவம் மலரும்!...


காமவல்லி :
ஓ...


இராமன் :
நான் மயக்கமுற்றுத் தங்களை,
" பூவுலகில் பூத்த மாதரசியே - உன்
பூப்பாத அணியாய் மாறிடவே
காதலும் பூண்டேன் உன்பால்!
ஏலாய் எனையும் தேவியே"
என்று வேண்டுவேன்!...


காமவல்லி :
சொல்தந்தாயா... என் நெஞ்சுக்கு தாகம் தந்தாயா?... கனவுப் பேச வந்தாயா?... கன்னி எனக்கு மோகம் ஊட்ட வந்தாயா?... சொல்லமுதுத் தந்து, என் இதயந்தனை விலைப் பேச வந்தாயா?... உரைத்திடு என் உள்ளம் கவர்ந்தவனே...


இராமன் :
என்ன... நா... நான் தங்கள் உள்ளம் கவர்ந்தேனா!... ஆகா... நான் நிற்பது இங்கா?... இந்திர லோகமா?... பேரழகுப் பெட்டகமே!...


காமவல்லி :
தவறு!... பேரழகனே, தங்களை விடவா நான் அழகு?... கருநிற மேனியழகா!... நாநும்மைக் காணும் போதே, நெஞ்சில் மையல் ஊறுகிறதே!... கட்டழகா!... கனியழகா!... என்னைத் தொட்டு அணைத்திடவா?...


இராமன் :
அய்யோ... இப்போது என் செவியுண்டதுத் தேன்தானோ?... என் மனதில் ஊறுவது மதுவோ?... நான் நான்தானா?... என்னால் நம்பவே முடியவில்லை!


(இராமன் : (தானே)


இலக்குவா! என் தம்பி, இலக்குவா!... நீ ஞானியடா!... உன் சொல் பலித்தடா... என்னை அழகனென்று புகழ்கிறாள்... என் மீது மயக்கம் கொண்டுவிட்டாள்!...


காமவல்லி :
இளவரசரே!... இதென்ன நின்ற நிலையிலே துயிலா?... மூடிய விழிகளைத் திறவுங்கள்!...


இராமன் :
கண்மூடினால், காதல் நாயகியாய் தாங்கள் வருகிறீர்...


காமவல்லி:
ஓ...


இராமன் :
விழித் திறந்தால், மை எழுதா உங்கள் விழியழகுதான் எங்குமே தெரிகிறது.


காமவல்லி :
ஊம்!


இராமன் :
முகமோ நிலவு போல் பொழிகிறது!... விழிகளோ, கதிரவன் போல் சுடர்கிறது... உங்கள் முகமும், விழியும், எனை ஆள்வதால், பகலெது, இரவெது என உணர இயலாதவன் ஆனேன்... உண்டால் மட்டுமே, மது போதைத் தரும்... உங்கள் நினைவே, என்னை போதையாய் மயக்குகிறது...


காமவல்லி :
தங்களைக் கண்டது முதல், என் மனதிலும் எதோ உணர்வு!... அ... காதல் என்றுதான் நினைக்கிறேன்...


இராமன் :
தேவி!


(இராமன் காமவல்லியின் கைத்தொட முயற்சிக்க, அவள் விலகி நின்று...)


காமவல்லி :
விழியாலே மங்கையரை வீழ்த்தும் மாயவா!... செஞ்சொல்லாலே , எனையும் ஈர்த்த நாயகா!... கருநிற மேனியழகிலே காமனைத் தூதுவிடும் கட்டழகா!...
இராமன் :
அருள் எனக்குக் கிட்டியதடா!... பிறவிப் பயனைப் பெற்று விட்டேனடா... ஈரேழ் உலகத்தையும், ஒரே நொடியில் புணர்ந்தவன் போலானேனடா, தம்பி!
(இராமன் தன்னையறியாமல் தனக்குத் தானே கூவுகிறான்...)


காமவல்லி :
ஆனால்...


இராமன் :
ஆனால்?


காமவல்லி :
நம் காதல் நிறைவேறுமா?


இராமன் :
பூவுலகில் பூத்த மாதரசியே - உன்
பூப்பாத அணியாய் மாறிடவே
காதலும் பூண்டேன் உன்பால்!
ஏலாய் எனையும் தேவியே!...
(மண்டியிட்டு மன்றாடுகிறான்)

காமவல்லி ;
அரசகுமாரா, நீயொருக் கள்வன்!

இராமன் :
தேவி?

காமவல்லி :

என்னைக் காண வந்தாயா?... உள்ளத்தை களவாட வந்தாயா? கள்வனே!...


(இராமன் சிரித்தல்)


காமவல்லி :
அழகுத் துறந்த நிலவு போல் உள்ளமிழந்தவள் ஆனேன், நான்!... பாட வந்த வண்டு, பூவையே பறிக்குமா?... பேச வந்தக்கிளிக்கு, பைந்தமிழ்த்தான் அடிமையாகுமோ?... முகில்தான் ஆதவனை அடிமைப் படுத்துமோ?...


இராமன் :
ஆகா... எனது தேவியே!


காமவல்லி :
விழியைப் பார்க்கிறேன்; விழியையே பார்க்கிறேன்!... தங்கள் விழியை ஒருமுறைப் பார்த்தால் மறுமுறையும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கும் விழியினள் ஆனேன்... நெடுந்தோள்ப் பார்க்கிறேன்; தோளையே பார்க்கிறேன்... மகுடத்தில் மணிப் பதிவது போல், உந்தன் தோளில் முகம் புதைக்க, என் தோள் துடிப்பதை நாணம் விட்டு நான் எப்படிக் கூறுவேன்... அகண்ட மார்பைப் பார்க்கிறேன்; மார்பையே பார்க்கிறேன்... மார்போ? பரந்த வான்வீதியோ இது? பாவை என் தேகத்தில்தான், ஏனிந்த வேகமோ?... சூடுக் கண்டு என் இள மேனியும் சுகங்காணத் துடிக்கிறதே!... உன் மார்பைத்தான் எனக்கு மஞ்சமாய் தர மாட்டாயோ?... பாதம் பார்க்கிறேன்; பாதத்தையே பார்க்கிறேன்!... பாதமலர்களைக் கருங்குழலால் நீவிட நான் துடிக்கிறேன்... அழகோ!... அற்புதமோ!... தங்கள் மேனி... நாணமும் எனைவிட்டு ஓடியதே!... நானும்தான் துடிக்கிறேன்; உந்தன் மீது சாய!... ஆசையோடு நான் உனக்கு ஆயிரம் முத்தம் கொடுத்தாலும், உன் பேரெழிலுக்கு ஈடாகுமா?...


இராமன் :
ஆகா... எனது தேவியே!...


(காமவல்லியை அணைத்திட இராமன் முனைய, அவள் விலகி... )


காமவல்லி :
வாழ்ந்தால் உங்களோடு!... இல்லையேல்; மாய்வேன் இம்மண் மீது தங்கள் நினைவோடு!... எனதுக் கண்ணா!... நம் காதலுக்கு...


இராமன் :
உனது அண்ணன் தடை விதிப்பாரோ?...


காமவல்லி :
கண்டிப்பானவன்!... ஆயினும்; என்பால் கனிவானவன்!... அவனொரு அமுதகானம்!... என் ஆசையின் ராகமே என் அண்ணன்தான்!... நான் வாயசைத்தால், அவன் வாயிலிருந்து ஒலி பிறக்கும்!... என் பாதம் அசைந்தால், அவன் நெஞ்சில் சலங்கை ஒலிக்கும்... என் மனம் நினைப்பதை அவன் கைக் கொடுக்கும்!... விந்தகத்தின் அரசியாய், எனக்கு மகுடஞ்சூட்டி மகிழ்ந்தவன்... என் மணநாள் சூட்டவும் மறுப்பானோ, எனது அண்ணன்!...


இராமன் :
ஆகா என் தேவியே!... உடனே ஒப்புதல் பெற்றிடு!


காமவல்லி :
காதல் பறவைகளாய் வானில் நாம் பறப்போம்... அந்தநாளும் விரைவில் வரவேண்டும்... இளவரசரே, தங்கள் நாடு எது?


இராமன் :
ஆகா... எனது நா... ஆ ... தேவி... என்னையும், எனது நாட்டையும் அறிந்தப்பின் நீ என்னை...
காமவல்லி :

நான் உயிரானால், நீ மூச்சல்லவா!... நான் சுடரென்றால், அந்தச் சுடரின் ஒளியல்லவா நீ!... நாடென்றும், மொழியென்றும் இனம் பிரித்து, நான் தங்களை வெறுத்திடுவேனா... சுவரின்றி ஓவியமும் உண்டோ?... சொல், கண்ணா!... வானின்றி முகிலும் உயிர்வாழுமோ?... என் வாழ்வும், சாவும் உன்னோடுதான்!... தயக்கமேன்?... உன்னை நினைத்தே, தவிக்குது என் நெஞ்சமும்... நாடெது என்று சொன்னால், நானும் சொல்வேன் என் அண்ணனிடம்! மணநாள் நம்மைக் கூடும் வேளையில், மனதில் இன்னுமேன் தயக்கம்!...


(இராமன் மெதுவாகத் தயங்கி...)
இராமன்
அயோத்தி எனது நாடு!


(காமவல்லி ஆர்ப்பரிக்கும் கடலெனச் சிரித்து)
காமவல்லி :
இராமன் என்பது உனது பெயர்!


(காமவல்லி தனது உடைவாளை உருவி, இராமனின் மார்பில் பதித்து...)


காமவல்லி :
இராமா, என்னையோ ஏமாற்ற வந்தாய்?... கைக்கொண்டு கதிரவனையோ மறைக்க முயல்கிறாய்?... இருவிழி நீ மூடினால், உலகமே இருண்டுவிடும் என்று தப்பாய்க் கணக்கு போட்டாயே... வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து, வாயிலே காதல் வார்த்தையை சுமந்து வந்து, என்னையோ ஏமாற்ற முனைந்தாய்?. கனவென்றும், முக்காலமென்றும், ஈரேழ் உலகமென்றும் நீ வார்த்தைகளால் அலங்காரம் செய்யும்போதே, நீ ஆரியன்தான் என்பதை அறிந்துக் கொண்டேன்... புறாவை நசுக்கி, அதனை புண்படுத்தி, என் எதிரில் வீசியவனே, உன் கழுத்தை நெரிக்கிறேன்... உன் வேதனையை நீ உணர்ந்தால்தான், புறா பட்ட வேதனையை உன்னால் உணர முடியும்...


(இராமனை எட்டி உதைக்கிறாள்...)


காமவல்லி :
இதோ, உனது அங்கியில் ஒட்டியிருக்கிறதே புறாவின் சிறு சிறகுகள்... இதனைக் காணத் தவறவிட்டு, என்னிடத்தில் புறாவின் அடையாளங்களைக் கூற வந்தாயே... திருடிய வெண்ணையோடு வெயிலில் நின்றால், உருகிய நெய்யின் மணமே, உன்னைத் திருடன் என்று உரைக்குமே...


(காமவல்லி மேலும் சிரித்து...)


காமவல்லி :
மூட இனத்தவனே, கேடு புரிவதையே வாழ்க்கையாய்க் கொண்டவனே!... தாடகையைக் கொன்றவனே!...

(காமவல்லி, இராமனின் மார்மீது எட்டி உதைக்கிறாள்...)

(இராமனோ, " இலக்குவா " என்றலறி, தரைசாய்கிறான்...)

( காமவல்லி வாளோங்கி..)

காமவல்லி :

உன்னைக் கண்டவுடன், உன்னை வெட்டி வீழ்த்தி, அயோத்தியின் வீதியிலே உன் பிண்டத்தை வீசியெறிய என் நெஞ்சிலே ஆத்திரம் இருந்தது... அந்த எண்ணம் இப்போது மாறியது!... கயவனே... ம்... எழுந்திரு!


(இராமன் எழுந்து நிற்க, அவன் மார்பு மீது கத்தியை வைத்து)


காமவல்லி :
காதல் போர்வை போர்த்தி, என் கண்ணெதிரில் வந்துள்ளாய்... உன் கருநெஞ்சிலே மறைந்திருக்கும் வஞ்சகத்தை அறிந்திடாமல் போகுமே, உன்னை இப்போதுக் கொன்றுவிட்டால்?... உன்னைக் கைது செய்து, இலங்கைப் பேரரசின் விசாரணைக்கு உட்படுத்துகிறேன்...


(என்று சொல்லிவிட்டு, காமவல்லி )
காமவல்லி :
கனகமணி


(என்று விளித்த வண்ணம் பார்வையால் துழாவிட, சற்றே திரும்பி)


காமவல்லி :
நீரோடைச் சென்று, நெடுநாழிகையாயிற்றே... இன்னும் என்ன செய்கிறாள்?...


(என்று சொல்லிக்கொண்டே, நீரோடை திக்கினை நோக்கி திரும்புகிறாள்...
அந்தச் சிறு சூழலைப் பயன்படுத்தி, இராமன் பிடரிமீது பாதம் படுமாறு, தப்பித்து ஓடுகிறான்...)


காமவல்லி :
ஆ... தப்பிவிட்டானா?


(காமவல்லி இராமனைப் பிடிக்க ஓடும்போது, நீரோடை திக்கிலிருந்து, நீர் நனைவோடு கனகமணி ஓடி வருகிறாள்...


ஓடிவரும் ஓசைகேட்டு காமவல்லி திரும்பிப் பார்க்கிறாள்...
கனகமணி ஓடிவருவதுத் தெரிகிறது...


காமவல்லி கோபமாக )


காமவல்லி :
கனகமணி, தாமதமேன்? என்னவாயிற்று?... ஏன் ஓடி வருகிறாய்?


(கனகமணி மூச்சிரைக்கப் பேசுகிறாள்)


கனகமணி :
மாங்கனி எடுத்து, கழுவிட நீரோடைச் சென்றேனே...


காமவல்லி :
நீரோடை என்ன ஏழு காதத் தொலைவிலா இருக்கிறது?


கனகமணி :
அரசியாரே, நடந்ததைச் சொல்கிறேன்; கேளுங்கள்...


(என்று சொல்லி நிறுத்தி, மீண்டும் )


கனகமணி :
அரசியாரே, நீரோடைக்குச் சென்றேனே... அங்கு மூதாட்டி ஒருத்தி, நீரில் மூழ்கிட இருந்தாள்... ஓடி நான் தடுத்து, அவளைக் கரைக் கொண்டு சேர்த்தேன்... கதறியழுது, கண்ணீர்ப் பெருக்கி ஓயாமல் ஒப்பாரியும் வைத்தாள்... உருவத்தில் மூதாட்டி தடித்திருந்தாள்!... சிறுகுழந்தைப் போல் அவள் தேம்பி அழுதக் காட்சி, கல்நெஞ்சையும் கரையச் செய்யும்... பூநெஞ்சுக் கொண்ட அரசியே, உன் தோழி நான் நெஞ்சில் ஈரம் கொண்டு, அவளைக் காத்திட முனைந்தது தவறா?... கண்ணீர் சிந்தி, கதறித் துடிக்கும் கொடுங்கோலம் ஏனெனக் கேட்டேன்... நீந்தச் சென்ற மகன், நீர்ச் சுழற்சியில் சிக்கி மாண்டு விட்டானாம்... மகன் போன பாதையில் தானும் போய் மாய்வதாக, பாய முனைந்தாள் நீரோடை நோக்கி!... தடுத்த என்னிடமிருந்து திமிறினாள்... இதுவே நெடுநேரப் போராட்டமாயிற்று... ஆறுதல் கூறியும், அமைதியுற்றாளில்லை... இறந்துப் போகட்டுமென்று விட்டு வரவும் என் நெஞ்சம் இடந்தரவில்லை... இங்கு அழைத்து வந்து, தங்களிடமாவது சேர்த்து ஆறுதல் படுத்தலாம் என்று அழைத்தேன்... உப்பில் நீர்ப்போல் எண்ணத்தில் பிடிவாதாங் கொண்டு வர மறுத்துவிட்டாள்... சற்று முன்னர், 'இலக்குவா' என்றோர் அலறல் ஒலி கேட்டதே... அவ்வொலி கேட்டு, அம்மூதாட்டி திடுமெனத் திமிறி நின்றாள்!... அந்த திமிறல் கண்டு நானே வியந்தேன்... மூதாட்டியா இவள் மூர்க்கங் கொண்ட காளையா என்று அய்யத்தோடு நான் அசந்து நிற்கையில், மீண்டும், 'இலக்குவா' என்றோசைக் கேட்டது... ஓசை வந்த திக்கு நோக்கி, ஓடலானாள்... ஓடும் அவளோடு ஓடிட என்னால் முடியவில்லை... மூதாட்டியல்ல!... வேடந்தரித்த இளைஞன் என்றுதான் தெரிகிறது... இதோ இந்தப்பக்கமாய் ஒருவன் எகிறி குதித்து ஓடினானே... அவனைப் பார்த்ததும் அவனை நோக்கி, மூதாட்டி வேடத்தில் இருந்தவனும் ஓடுவதைக் கண்டேன்... இங்கு வந்தாலோ, தாங்களும் பதட்டமாக இருக்கிறீர்!...


காமவல்லி :
கனகமணி, உடனே புறப்படு... உடனே காவலர்களை அனுப்பி இக்கயவர்களைக் கைது செய்திட வேண்டும்...
(புறப்படுகிறார்கள்)


(காமவல்லியும், கனகமணியும் அகன்ற பின்னர், வேகமாகப் புறப்படும் குதிரைகளின் குளம்படி ஓசையும், பிறகு மெல்ல மெல்ல வேகத்தின் ஓசையும் குறைகிறது...)

-திரை-














பாகம் -1. காட்சி-15. காட்டுக்குடில்.

இராமன்
இலக்குவன்
சீதை


( இராமன், காட்டுவாசிகளுக்குரிய உடையணிந்து, சோகத்தின் உருவாய், குடில் மீது சாய்ந்து, தரையில் அமர்ந்திருக்கிறான்...


இலக்குவன், கோபாவேசத்துடன் நடையிட்ட வண்ணமிருக்கிறான்...)


இலக்குவன் :
அரக்கர் குலத்தவள்... அழிக்கப்பட வேண்டியவள்... இழிகுலத்தவள்... இழிவுபடுத்தப்பட வேண்டியவள்... தமிழ் பேசுங்குலத்தவள் ... அவளோ; ஆரியனுக்கு தாசியாக வேண்டியவள்... தரங்கெட்டவள்... தகுதியற்றவள்... காமவல்லி!... அவளோ உன்னை எட்டி உதைத்தாள்?... எட்டி உதைத்தக் காலை, வெட்டாமல் வெருண்டோடி வந்தாயே... வெட்கங்கெட்டவனே!... கட்டழகி என்றும், கனிமலரென்றும், வண்ண மயிலென்றும் வாயார வர்ணித்தாய்... அவளோ, வஞ்சகனென்று உன்னை உமிழ்ந்தாள்... உமிழ்ந்த வாயை நாறு நாறாய்க் கிழிக்காமல், இழிமகளுக்கு அஞ்சி ஓடி வந்த இராமனே, நீயொரு ஆரியனா?... இளங்காதலிப் போல், இளநகைப் பூண்டு பேசியவுடன், பேதை நீ ஏமாந்தாயே?...


இராமன் :


" பூவுலகில் பூத்த மாதரசியே - உன்
பூப்பாத அணியாய் மாறிடவே
காதலும் பூண்டேன் உன்பால்!
ஏலாய் எனையும் தேவியே" என்று அவளெதிரில் வேண்டி நின்றால் போதும்... பள்ளியறை ஒன்றைப் புதிதாய் எழுப்பி, பாவை எழுப்பிறவியும் எனை விட்டு அகலாது, அணைத்திடுவாள் என்று நீதானே சொன்னாய்... அதைத்தானே நம்பி...


இலக்குவன் :
இனிக்க இனிக்கத்தான் பேசியிருப்பாள்... அவள் பேச்சில் மயங்கிய நீ, வாயை இளித்து, இளித்து நின்றிருப்பாய்!...


இராமன் :
நம்பி நின்றேன்...


இலக்குவன் :
நம்புவதற்கும், நடிப்பதற்கும் வித்தியாசமில்லையா?... காதல் என்று நினைத்து கனிந்துருகி நின்ற உன்னை கத்தி ஓங்கி வெட்ட வந்தாளா?... ஏய்... காமவல்லி, கத்தி ஓங்கிய கையைத் தூண்டிக்காமல் நான் சாக மாட்டேன்... அஞ்சனவிழியாளே என்று உன்னை நெஞ்சார நேசித்தவனை, அஞ்சச்செய்து, ஓடச்செய்தவளே, உன் உடலை வஞ்சிக்காமல் நான் உயிர்விடேன்... இரவென்றும் பகலென்றும் காலமறியாது, 'காமவல்லியே... காமவல்லியே ' என்று கண் துயிலாது வாடி நின்றவனையோ நீ கால் கொண்டு உதைத்தாய்?/... இராமன் வாட்டமுற, காரணம் உனது இளவதனமன்றோ... அந்தவதனத்தை வதைக்காமல், இனி நான் சாக மாட்டேன்... எந்த உடல் எனது அண்ணனுக்கு சொந்தமாக மறுத்ததோ, அந்த உன் உடல் வேறெவனுக்கும் சொந்தமாகிட நான் விடமாட்டேன்... அழகன் எனது அண்ணன்!... அவனை விரும்பாத நீயும் ஒரு பெண்ணா?... மணக்க மறுக்கும் பூவும் ஒரு பூவா?... இனிப்பை ஏற்காத கனியும் ஒரு கனியா?... நீதான் அரக்கியாயிற்றே... ஏய் அரக்கியே!... உன்னை சாகடிக்கும் வரை, இனி எனக்கு உறக்கமில்லை... உணவில்லை... உடையுமில்லை...


(பேசிக் கொண்டே, இலக்குவன் தான் அணிந்திருந்த ஆடையைக் களைந்தெறிய முனைகிறான்...)


இராமன் :
அய்யோ... ஆடையைக் களைகிறானே... காணச் சகிக்காதே... டேய் இலக்குவா, உண்ணாதே; உறங்காதே; உடையையும் கழற்றாதே... என் பேச்சுக் கேளடா... தம்பி, பேசியது போதுமடா... எனக்குப் பசியாகிறதடா... பசியாற ஏதும் கொண்டுவாடா!...


இலக்குவன் :
ஏய் சீதை


(இலக்குவன் சீதையை கத்தி விளிக்கிறான்... சீதை, குடில் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் )


இலக்குவன் :
காலையில்தானே, ஒரு பெரியப் பன்றியைக் கொன்று எடுத்து வந்துக் கொடுத்தேன்... முழுப்பன்றியையும் நீயே முழுங்கி விட்டாயா?... பசியால் வாடும் இராமனுக்கு, பரிமாறாமல், உள்ளே எதனைத் தின்று கொண்டிருக்கிறாய்?...


(மெலிவுற்ற தேகமாய்-
கண்ணீர் உகுத்து வீங்கிய விழியினளாய், பொலிவிழந்த முகத்தினளாய் சீதையின் தோற்றம் மாறியிருக்கிறது...) 

 -திரை-









பாகம்-1. காட்சி-16. காட்டுக்குடில்.

இராமன்
சீதை
இலக்குவன்

(சாமக்கோழி கூவும் ஓசைக் கேட்கிறது-


சீதை தூரமாய் விலகி, துயின்றுக் கொண்டிருக்கிறாள்... இராமன் புறம் மாறி, புறம் மாறி படுக்கிறான்...


யாமக்கோழி கூவும் ஓசைக் கேட்கிறது.


இராமன் உறக்கம் தழுவாது, விரகம் கிளர்த்தும் நெஞ்சோடு எழுந்து அமர்ந்து-


ஆடை சற்றே கலைந்திருந்த - விலகியிருந்த நிலையில் துயின்றுக் கொண்டிருக்கும் சீதையை காமநோக்கோடு நோக்குகிறான்...


மெல்ல மெல்ல நகர்ந்து சீதையை நெருங்குகிறான் இராமன்...


அவளருகில் அமர்ந்து-


சீதையின் முகத்திலும், நாசியிலும் வருடி மேனியைத் தடவுகிறான்... முத்தமிடுகிறான்...


சீதை உறக்கம் கலைந்து விடுக்கென எழுந்து விலகி நிற்கிறாள்...)


( இராமன் விரகத்தோடு )


இராமன் :
சீதா!...


(இராமன் எழுந்து நின்று சீதையை நோக்கி நடக்கிறான் )


இராமன்
பனிக்காற்று, பால்மேனியை பாழ் செய்யுமே என்று தோள் தொட்டேன்... சீதா, சிலுசிலுவென சிறுகாற்றுப் பட்டாலும், உன் சின்ன மேனி, துன்பங் கொள்ளுமே என்று துடியிடையில் இதழ் பதித்தேன், சீதா! இக்குளிர் காற்றில் குறுமகள் சீதையின் தளிர்மேனி நடுங்கிடுமே என்றஞ்சி என்மேனியை உனக்குப் போர்வையாக்கிட, பூ மேனித் தொட்டேன், சீதா!


(இருகைகளாலும் சீதையின் தோள் பற்றிட, இராமன் எத்தனிக்கிறான்...)


(சீதையோ விலகி சிறுது ஓடுகிறாள்... )


இராமன் :
உன் மெல்லியப் பாதம், துள்ளி ஓடும் அழகை நான் நல்ல கவியால் பாடிடவா! சீதா, பாடிட வா!... நிலவது துயலின்றி உலவுது!... நீங்கா விரகத்தில் என் மனமும் அலையுது!... இலைக் கிளையும் நிலை மறந்து நிற்குது!... என் இருவிழி இமையும் உனை நினைத்துத் தவிக்குது... பூவும் வாசத்தை உதிர்க்குது... பூவையை நினைத்து நெஞ்சமும் உருகுது... பாவை வா... பாடவா!.. பாட வா!... பாவாய் வா... கூடவா... கூட வா!...


( இராமன் தாவி சீதையின் கரம் பற்றுகிறான் அவள் அவன் தொடுவதை விரும்பாதவளாய், கரத்தை விடுவித்தவாறு, திரும்பி நிற்கிறாள்...


இராமனோ சீதையின் கரத்தை விடாது-
தோள்வரைக்கும் தடவியவாறு...)


இராமன் :
எல்லையிலா சுகமதை ஊட்டுவதற்காகவே, சுகந்தமாய்க் காற்றும் நம்மை வலம் வருகிறதே... கிள்ளையும் சொல்லெடுத்துப் பேசுமே... முல்லையே, சொல்லம்மா; உன் இதழ் திறந்து!... என் இதழ்த் துடிக்குது; உன் இதழ் ஈரம் கண்டு!... உன் வாயிலூறும் அமுது குடிக்க அன்பே, உன் அடித் தொழுது யாசிக்கிறேன்... யாம நேரத்திலே, காமப்பசி வாட்டுது... கன்னி உன் மேனியோ, என்னை வீணையாய் மீட்டுது... கண்ணீர் உகுத்து கெஞ்சுகிறேன்... பொன்மேனி யில் ஒரு முத்தம் பதிக்க, கண்மணி கனிவுக் கூறு!... உயிர்ப் போகும் போல் உள்ளம் வாடுது!... மனமிரங்கு!... மங்கை, சிறு இடைக் கொடு!... மடிக் கொடு... மரகத அடிக் கொடு!... இல்லையேல், என்னுயிர் எடு!... கால் பிடித்து கெஞ்சுகிறேன்... காமபசியாகுதம்மா... சேலைக்குள் சோலை வைத்து, என் தாகத்தை கூட்டுகிறாய்... அடிக்கரும்பே!... கொம்புத்தேனே!... கனிச்சாறே!... என்னைப் பார்!...


(பேசியப்படியே, இறுக்கமாய் இழுத்து சீதையை நெஞ்சோடு அணைக்கிறான்...)


சீதை :
காமவல்லி காமவல்லி என்று புலம்பிய புலம்பல்தான் என்ன? அவளை நினைத்து, நெஞ்சுருகி நெடுநேரம் துயிலாது துடித்தத் துடிப்புதான் என்ன?... இன்று அவள் கிட்டாதவளானபின் பெருக்கெடுத்தக் காமநோய்க்கு, மருந்தாய் என் மேனியும் வேண்டுமோ?... சி...


(இராமனை உதறித் தள்ளி நகர்கிறாள்...)


இராமன் :
சீதா...


சீதை :
வெட்கமாயில்லை... காமவல்லி மிதித்த மண்ணுக்கு முத்தமிட்டு, அவள் நடந்தப் பாதையிலே புழுதியைத் தொட்டுத் திருநீறு போல் பூசிவிட்டு, அவள் இருந்த இடத்தை நோக்கி மண்டியிட்டு வணங்கிவிட்டு, அதனைக் கதைக் கதையாய்க் கண் துயிலாது பேசி மகிழ்ந்த காமவெறியன் அல்லவா நீ?... உனக்கும் எங்கே இருக்கும் வெட்கம்?...


இராமன் :
அழும் குழந்தையின் பசி போக்காமல், நெருப்பை அள்ளி வாயில் கொட்டுகிறாயே... என் நிலையைப் புரிந்தும் ஏதேதோ பேசுகிறாயே... உனது கோபம் கூட, எனது தாபத்தைக் கூட்டுகிறது... உனது ஊடல் கோலம் எனக்குக் கூடல் காலத்தைக் காட்டுகிறது... இனியவளே, இடையைக் காட்டு... மகிழம்பூப் போல் திகழும் மாசிலா தொப்பூழ் மீது உதடு பதித்து முத்தம் தருகிறேன்... உன் கால் விரல்களை, கனிசாறு கொண்டு கழுவுகிறேன்... யாசிக்கும் எனக்குக் கருணைக் காட்டு... யாமக் கோழிக் கூவுதே!... காதில் கேட்கலையோ... கேட்டும் உனக்கு காமம் பொங்கலையோ... தேகம் துடிக்குதடி, தேவியே!... கோபம் கொஞ்சம் ஒதுக்கடி... காரிகையே!... கனல் சிந்தும் சினத்தை சிறுது துறந்து, சிலிர்ப்புண்டாக்கும் காற்றை சுவாசித்துப் பார்... நீயே என்னைத் தழுவிட ஓடி வருவாய்... ம்... வா...

(சீதையைப் பிடிக்க முனைகிறான்... சீதை விலகுகிறாள்...)

சீதை :

ஆசைக்காக ஆயிரம் பேரையும், ஆடை அணிகலன் போல் மாற்றுகிற குணம்தானே உங்கள் குணம்!... அழகிய பெண் கண்ணில் பட்டால், பள்ளியறைக்கு இழுத்துச் சென்ற தசரதன்தானே உமது தந்தை!... காமம் பெருகிவிட்டால், யார் எவரென்றுக் கூட தசரதனுக்குப் புரியாதே... இலக்குவன் மனைவி ஊர்மிளை தனித்து உறங்கியிருந்த வேளையில், தழுவி மகிழ்ந்தவன்தானே தசரதன்!...தந்தை தசரதனுக்குச் சரிநிகர் புதல்வனல்லவா நீ!... உனது ஆசைக்குப் பலியானப் பெண்கள் எத்தனை எத்தனையோ... ஆடல், பாடல் பெண்களைக் கூடிக் களித்தக் கதையை என்னிடமே கூறி யிருக்கி றாயே... உன்தாய் கோசலையின் வயதொத்தவள் அல்லவா மாந்தரை!... அந்தப்புரத்துப் பணிப் பெண் மாந்தரையைக் கூட, நீ விட்டு வைக்கவில்லையே... திருமணத்துக்கு முன்னரே உன்னைத் தெரிந்துக் கொள்ள எனக்கு வாய்க்கவில்லை!...


(இராமன் தோள் பற்றிட முனைய-)


சீதை :
கக்கியதை நக்கிடுமாம் நாய்!... காலத்துக்கொரு புத்திக் கொண்டு அலையுமாம் பேய்!... வேண்டாமென்று வெறுத்தொதுக்கிய என்னை அணையத் துடிக்கும் நீ நாயோ? பேயோ?... சி... விடு!...


(இராமனிடமிருந்து விடுப்பட்டு விலகி நிற்கிறாள்)


இராமன் :
சீதா, கெஞ்சுகிறேன்!...


சீதை :
கெஞ்சுவதும், கொஞ்சுவதும் காம அரிப்புக்காக!...


இராமன் :
இரக்கம் காட்டு, இனியவளே!... சிறுது இடையைக் காட்டு, புதியவளே!...


சீதை :
வேசியோடுப் பேசுவது போல் பேசும் நீ, விழிகளால் ஒரு மனைவியைப் போலவா பார்க்கிறாய்?... சதையோடு மகிழத் துடிக்கும் நீ சிறுது நேரமேனும் என் மனதை மகிழச் செய்திருப்பாயா?...


இராமன் :
சீதா, நீ மகிழ வேண்டுமென்பதற்காகத்தானே நான் மன்றாடுகிறேன்... மண்டியிட்டுக் கெஞ்சச் சொல்கிறாயா... சொல்... கெஞ்சுகிறேன்...


சீதை :
நெருப்புக்குள் முகம் புதைப்பேனே ஒழிய, இனி உன் மார்பில் முகம் புதைக்க மாட்டேன்...


இராமன் :
சீதேவி!


சீதை :
மூதேவி என்று தூற்றிய வாய், சீதேவி என்று, இன்று கெஞ்சுதல் செய்வது எதற்கு?


இராமன் :
மன்னித்துவிடு சீதா!... 'சந்திர ஒளியே!... சுந்தரக்கொடியே! மந்திர மகளே! மன்மதகொழுந்தே!... மரகதசுடரே! பெரும் போதையூட்டும் பேரல்குல் உடையோளே!... ஆரணங்கே!... தீரா மயக்கம் ஊட்டும் கூரிய முலையினளே!... முத்தே!... மூவுலக தேவியே!... தேரே!... தெய்வமே!...' என்று நூறென்ன , ஆயிரமென்ன... கோடிக் கோடியாய் உன்னை புகழ்வேன்... இனி ஒரு போதும் இகழேன்... செங்கனியே!


சீதை :
சனியனே என்ற வாய் இன்று செங்கனியே என்பதால், நான் என் செருக்கினை இழக்க மாட்டேன்... மயக்குஞ் சொல்லுக்கு விலைப் போக , நான் மதியில்லாதவளல்ல!... நான் அரசமகள்!... இனியும் அடி பிறழ, ஆடல் மகளல்ல நான்!...


இராமன் :
சீதா, இன்னுமா என் மீது கோபம்?... இது கோபமல்ல; என் கண்ணே, தூபம்!...


(பேசிக்கொண்டே சீதையின் இடையை இறுக்கமாகப் பற்றி, இடையில் முகம் பதிக்கிறான் இராமன்.)


இராமன் :
ஆகா... இந்தச் சின்ன இடையின் இதமான சூடு, என்னை தேவலோகத்துக்கே கொண்டுச் செல்கிறது, சீதா!...


(விலகத் துடிப்பவளை விடாது முகம் பதிக்கிறான் இடைதனில் இராமன் )


இராமன் :
ஆகா... கோடிக் கோடியாய் கோமளம் கொட்டினாலும், கோபத்தில் குலுங்கும் முலைக்கு நிகராகுமோ?... ஆசையாய் இரத்தின விரிப்பில் துயின்றாலும் இவ்வழகு வயிறுக்கு ஈடாகுமோ?...


(வயிற்றைத் தடவிக் கிள்ளுகிறான்... சீதை, துள்ளித் திமிரி விலகுகிறாள்)
சீதை :
சி... காமப்பிசாசு!

இராமன் :

மரம் இலையை உதிர்த்தால், இலை எங்கே வீழும்?... மரத்தடியில் தானே?... வீழ்ந்த இலை, சருகாகி மரத்துக்கே எருவாகிறதே... உன் கோபக்கனல் என் மீதன்றி எவர் நெஞ்சைச் சுடும்?... உனக்குத் தவறிழைத்து என் நெஞ்சு புண்ணானது... என் புண்பட்ட நெஞ்சுக்கு, உனது கோப சூடு மருந்தல்லவா!... கோவை இதழ் குவித்து, கோபமாய் என்னைக் காரி உமிழ்ந்தாலும் நீதான் எனது இல்லத்தரசி!... நான்தான் உனது கோவலன்!... இழிவாய் நீ எனை இகழ்ந்தாலும் மனைவி எனும் உரிமை பறித்திட மாட்டேன்... எனையாளும் உரிமை உனக்குத்தானே ஒழிய மாற்றாளுக்கில்லை... காமவல்லியை நான், கைக் கொள்ளத் துடித்தது ஏன்? அவளைக் கருவியாய்க் கொண்டு, விந்தகத்தின் அரசனாக வேண்டும்... பின்னர் அயோத்தியைக் கைப்பற்ற வேண்டும் என்பதல்லவா எனதுத் திட்டம்!... நாளைப் பட்டத்து அரசியாக சீதைதான் அமர்வாளே அன்றி, கேவலம் அந்தச் சிறுக்கி காமவல்லியையா பட்டத்தரசியாக்குவேன்... ஆரியர்க்குல வயிரியை - அரக்கியை - எனது நெஞ்சம் காரணமின்றி நாடாது என்று மூடப்பெண்ணே, அறியாமல் தவிக்கிறாயே... ஆரியனுக்கு தாசியாய் வாழ, பிரம்மனால் படைக்கப் பட்டோர் தானே தமிழ்ப் பெண்கள்!... தாசியை நான் தாரமாக்குவேனா?... அவள் மீது ஆவல் கொண்டவன் போல் நடித்தேன்... ஏன் தெரியுமா?... வைதேகியை உனது கற்பை சோதிக்கத்தான்!...


சீதை :
நாதா...


இராமன் :
சோதனைத் தாளாது நீ, மிதிலைக்கு ஓடி, வேறொருவனை மணந்துக் கொள்ள முனைகிறாயா என்று அறியவே....


சீதை :
அய்யோ நாதா!... தங்கள் அடியே அயோத்தி என்று வந்தவளுக்கா, இந்த சோதனை?...


(சீதை கேவி அழுகிறாள்... அவளைத் தூக்கி நிறுத்தி, கண்ணீரைத் துடைத்து இதமாய் அணைத்துக் கொள்கிறான்...


இராமன் :
அழாதே, சீதா!... இனி நான் உன்னை சோதிக்க மாட்டேன்... என் வாழ்வும், தாழ்வும் தாமரைப்பூவே, உன் மடி மீதுதான்!... சூரியன் சுட்டெரித்தாலும், சூரியனின் பயணத்திற்குப் பாதையாய் வானம் இருப்பதுப் போல், இனி நீ சுட்டெரித்தாலும், நானுன் வாழ்வுக்கு பாதையாய் இருப்பேன்... வைதேகியே, நெருப்புச் சுட்டாலும், நெருப்பினுள் முகிழ்ந்த பன்றி இறைச்சி சுவைப்பதுப் போல், நீ சுட்டாலும் உன்னுள் முகிழ்ந்து நான் உன் வாழ்வுக்கு சுவையாய் திகழ்வேன்... சீதா, கடல் கொந்தளித்தாலும் தரைச் சென்று வாழவிரும்பாத மீன் போல், நீ கொந்தளித்தாலும் நான் வேறெவளிடமும் சென்று தாள் தழுவேன், தளிர்மேனி நங்கையே!...


(கேவிக்கேவி சீதையழ, அவளைத் தழுவியவாறே இட்டுச் செல்கிறான் குடிலுக்குள்)


- திரை -




பாகம் :1. காட்சி - 17. காட்டுக்குடில்.


இலக்குவன்
இராமன்


(இலக்குவன் அவசரமாக வருகிறான்... குடிலுக்கு வெளியே, விலங்குத் தோல் விரிப்பு இரண்டு தனித் தனியாகக் கிடைப்பதைக் காண்கிறான்... உள்ளிருந்து கொஞ்சலும், சிணுங்கலும், சிரிப்பும் ஒலிப்பதை கேட்டு...)


இலக்குவன் :
அண்ணா (அழுத்தமாகக் கூவுகிறான்)


(உள்ளிருந்து இராமன் வருகிறான்...)


இராமன் :
தம்பி, காமவல்லியைக் கொன்று விட்டாயா?


இலக்குவன் :
இல்லை.


இராமன் :
பிறகு?


இலக்குவன் :
காவலர்களை ஏவியுள்ளாள்; காமவல்லி நம்மைத் தேடிப் பிடிக்க...


இராமன் :
ஆ...


இலக்குவன் :
அரக்கர்கள் நம்மைத்தேடி அலைகின்றனர்... ஆசைக் கொண்ட உன்னை அலட்சியம் செய்த ஆணவக்காரி ஏவியுள்ளாள் காவலர்களை!... அழிப்பேன் நான் அவளை!... வெறிக் கொண்டு அலைகிறேன்... வேட்கை அடங்கும்வரை வெட்டுவேன் அவளை!... பார்ப்பானர்கள் எம்மைப் பிடிக்க, படை ஏவியுள்ளாள்... பதறுகிறது நெஞ்சு!... அரக்கி அவள் யார்?... சூத்திரச்சியோ எம்மைத் துரத்திப் பிடிப்பது?... பாததூசிக்கும் கீழான தமிழச்சியோ பார்ப்பானனைக் கேவலம் செய்வது?... நெற்றியில் பிறந்தவன் ஆரியன்!... அவளிதனை அலட்சியம் செய்வதா?... அடங்காது எனது ஆத்திரம்!... பொசுக்குவேன்;... அவளை நசுக்குவேன்!... நக்குவேன் அவள் இரத்தத்தை!... வாளும், வேலும் ஏந்தி சோலையும், காடும் தேடித் திரிகின்றனர் அரக்கர்கள்!... ஆண்டவன் வாரிசுகளன்றோ நாம்?... அனாதைப் பேய்கள் தமிழர்கள் நம்மைப் பிடிப்பதா? ஓ... இந்திரனே!... இதனை நீயேன் காண மறுக்கிறாய்?... குமுறுகிறது நெஞ்சு... அரக்கர் குலத்தையே அதம் செய்வேன்... விலங்குகளை வேட்டையாடுத்தாற்போல் எம்மை வேட்டையாடுவதா?... காட்டையே கொளுத்துவேன்... காமவல்லியவள் கண்ணிரண்டை நோண்டிக் கடித்து தின்பேன்... அரக்க வம்சத்தையே அழிப்பேன்... வாழப்பிறந்தவன் ஆரியன்!... வாழ்வதற்காகவேப் பிறந்தவன் ஆரியன்!... இல்லை... இல்லை... ஆரியன் பிறக்கவில்லை... படைக்கப் பட்டவன்... ஆண்டவனால் படைக்கப் பட்டவன்... படைக்கப்பட்ட ஆரியன் வாழ வேண்டும்... வாழ்ந்தே ஆக வேண்டும்... அண்ணா, புறப்பட்டுவிட்டேன் நான்!... புல்லுருவியாய் ஊடுருவியேனும் உயிர் பறிப்பேன்... அவள் அங்கம் சிதைப்பேன்... நீ சொல்லால் அலங்கரித்தாய் காமவல்லியை!... நான் வில்லால் அலங்கரிப்பேன் அவள் தேகத்தை!...


இராமன் :
இப்போதே போ... போ... கொன்றுவிடு!... எனக்குக் கிடைக்காத அந்த தேகம் இருந்தென்ன?... இறந்தென்ன?... போ...


இலக்குவன் :
போகிறேன்... நான் போனப்பிறகு?


இராமன் :
பிறகு?


இலக்குவன்
நீங்கள் இருவரும் இந்த இடத்தைவிட்டு நீங்கி , அதோ... அந்தப் புதருக்குள் ஒளிந்திருங்கள்...


இராமன் :
ஏன்?


இலக்குவன் :
அரக்கர்கள் நம்மைத்தேடி இங்கும் வரக்கூடும்... நான் இப்போதே போகிறேன்... எப்படியும் அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறேன்...
இராமன் :
அரக்கர்கள் கண்ணில் நீ பட்டால், வெட்டி விடுவார்களடா...

இலக்குவன் :

முட்டாள்தனமாகப் பேசாதே... கண்ணில் படும்படியாகவா நான் போவேன்?...


இராமன் :
கட்டுக்காவல் அதிகமடா...


இலக்குவன் :
அறிந்துதான் இருக்கிறேன்...


இராமன் :
அரண்மனைக்குப் போகும் திட்டத்தை விடு!... மாஞ்சோலைக்கு உலாவ வருவாளே... அப்போது ஏவு அம்பு!


இலக்குவன் :
அறியாமல் உளறாதே... சிறுக்கி வருவதில்லை இப்போது, மாஞ்சோலையில் உலாவிட!...


இராமன் :
பிறகு?


இலக்குவன் :
மாஞ்சோலையில் அரக்கர்கள் உலாவிக்கொண்டிருக்கிறார்கள், நம்மைப் பிடிக்க!...


இராமன் :
பித்தமேப் பிடித்துவிடும் போலிருக்கே... வேறு சித்தமே இல்லையா?... சித்தினியைக் கொல்ல வேண்டுமே!...


இலக்குவன் :
சற்று நீ, கேள்; நான் சொல்வதை!... மூன்றுநாள்!... ஆமாம்... மூன்றே நாளில் முடிக்கிறேன், மூதேவியை!... மூன்று இரவுக்குள் நான் திரும்பவில்லையென்றால்....


இராமன் :
திரும்பவில்லையென்றால்?


இலக்குவன் :
என்னை அவர்கள் கொன்று விட்டதாகப் பொருள்!...


இராமன் :
அய்யோ, பந்தலில்லாமல் கொடியா?... நீரில்லாமல் நதியா?... நீயில்லாமல் நான் வாழ்வதா?... நினைத்துப் பாரடா... என்னால் முடியாதடா...


இலக்குவன் :
ஏன் முடியாது?... ஆரியமுனிகள்தான் அளவின்றி திரிகின்றனரே... மாறுவேடம் பூண்டு மறைந்துத் திரியும் ஆரியமுனிகளிடத்தில் இராமா, நீ தஞ்சம் புகவேண்டியதுதானே!...


இராமன் :
ஆரியமுனிகளிடமா?


இலக்குவன்
ஆமாம்!


இராமன் :
அய்யோ சிங்கத்தின் வாயில் தலை வைக்கச் சொல்கிறாயே... கொதிக்கும் நீரில் நீந்து என்கிறாயே... கொடிய நஞ்சுதனைப்பருகச் சொல்கிறாயே... பாதாளத்தை நோக்கிப் படுவேகமாக பாயச் சொல்கிறாயே... சுடுமணல் தின்று பசியாறு என்கிறாயே... கண்விழிக்குள் மண் தூவிக்கொள் என்கிறாயே... கருமந்தியொடு கண்துயில் என்கிறாயே... அரவம் தொங்கும் மரத்தடியில் அமைதிக் கொள் என்கிறாயே... முள்வேலியில் முதுகை தேய்ப்பதா? ஈட்டிமுனைக் கொண்டு நம் நெஞ்சையே நாம் பிளப்பதா?... எங்கோச் செல்லும் யமனைக் கூவி அழைத்து எம் உயிரை எடுத்துக் கொள் என்று வலிய சொல்வதா?... குளிருக்கு அஞ்சி நெருப்பிடம் தஞ்சம் கொள்வதா...


இலக்குவன் :
புரியவில்லை அண்ணா!


இராமன் :
புத்தியோடுதான் பேசுகிறாயா என்றுக் கேட்டேன்...


இலக்குவன் :
அண்ணலே, என் ஆத்மாவே!... பொன்னடியானே!... பொல்லாதது நான் சொல்லியிருப்பின் பொருத்தருள்வாயே!... இன்னது என்று இயம்பாமல், ஏதேதோ இயம்புகிறாயே?... குழம்புகிறேன்... குணாளனே!... குன்றாவிளக்கே!... தெய்வமே!... என்னுயிரின் உயிரே!... அண்ணனே!... ஆத்மாவே!... ஆரியமுனிகளிடம் தஞ்சம் கொள்ளுங்கள் என்றதில் தவறும் உண்டோ?...


இராமன் :
ஆரியமுனிகளிடத்திலா தஞ்சம் கொள் என்கிறாய்?... யாரிவர் என்று அறியாமல் உளறுவதேனடா?... ஆரியத்தைப் பரப்ப அயோத்தியால் அனுப்பப் பட்டவர்களன்றோ இவர்கள்... தசரதன் இட்ட எச்சிலுக்காக அவனை தெய்வமாய்ப் போற்றித் திரிபவர்களாயிற்றே இந்த ஆரிய முனிகள்... அயோத்தி மன்னவனுக்கு துடிப்பாடி வயிறு வளர்ப்பதுதானே ஆரிய முனிகளின் செயல்!... பரதனிடம் பரிசுப் பெற பரதனைப் பாராட்டுவார்கள்... தசரதனைக் கொன்ற எம்மை பரதனுக்கு காட்டிக் கொடுத்து பொற்காசுப் பெறத் தயங்குவார்களோ, ஆசைப் பிடித்த ஆரியமுனிகள்... ஆதாயம் கிடைக்குமெனில் ஆரியமுனிகள் ஆண்டவனுகேக் குழி வெட்டத் தயங்குவார்களோ... நானென்ன வீட்டில் பூச்சியா; தீபத்திடம் மடிய? நீயென்ன புத்திசாலியா; நானுன் பேச்சைக் கேட்க?


இலக்குவன் : ( சிரிக்கிறான் )
அச்சம் கொண்டு நீ ஆரியமுனிகளிடம் தஞ்சம் கொள்ள மறுக்கிறாய்.... முள்ளுக்குப் பயந்து, மலரைத் தொட அஞ்சிடும் பேதையரும் உண்டோ?... சொல்லுங்கள் அண்ணா!


இராமன் :
பேதை என்று நீ பேசினாலும், பேடி என்று என்னை நீ இகழ்ந்தாலும் போக மாட்டேன் நான் போதை கொண்ட நெஞ்சினர் தம்மிடம்!... ஆரியமுனிகள் யாரென்று நாம் அறிந்தும், அவரை யாம் ஏமாற்றிட இயலுமோ?... ஏன் உனக்கு அறிவில்லையோ?... பாலுக்குள் இட்ட கரித்துண்டுதான் வெள்ளை நிறமாய் மாறுமோ?...


இலக்குவன் :
அம்பெய்து உன்னை அழகு மானா வீழத்தச் சொன்னேன்... பொய்க்குழிப் பறித்து, பொன்மானைப் பிடிக்கச் சொன்னேன்!...


இராமன் :
பிறரை ஏமாற்றுவது என்பது எள்ளில் கலந்த வெல்லம் போன்றது ஆரியருக்கு!... பொருள் ஒன்றின் மீது பொன்முலாம் பூச நான் கண்டிருக்கிறேன்... பொன் மீது வேறு முலாம்தான் பூசிட இயலுமோ?...


இலக்குவன் :
பொன்னுக்கு முலாமா பூசச் சொன்னேன்... பொன்மீது பதியும் சிறுமணியாய் அல்லவா மாறச் சொன்னேன்... பிறரை ஏமாற்றுவது ஆரியன் தொழில்தான் என்றாலும், ஆரியனிடம் ஆரியன் ஏமாந்தக் கதைத்தான் உனக்குத் தெரியாதோ?... மறந்திருப்பாயானால், இராமா ; சொல்கிறேன் நானதனை!... மனதில் கொண்டு நீ மனதிடம் பெறு!... கௌதமன் என்றோர் ஆரியமுனிவன், வாழ்ந்தக்கதை உனக்குத் தெரியாதா?... அகலிகை என்பவள் அவனுக்கு மனைவியாய் இருந்தாள்!... அவள் வதனமோ அழகுப்பெட்டகம் என்று அரசர் பலர் அவளைப் பாராட்டி மகிழ்ந்தனர்... ஆண்மையை சிலிர்த்தும் சிங்காரச் செருக்கு அகலிகையின் நெஞ்சழகிலே இருந்தது... துயில் களைந்து அவள் துடைத்து எறிந்த துகிலையும், மலரிதழ்களையும், மஞ்சத்தில் பரப்பிப் புரண்டு மனம் மகிழ்ந்தவர்கள் கொஞ்சமா?... நீராடி அவள் தேய்த்து விட்ட அழுக்கை அள்ளிப்பருகி ஆனந்தம் கொண்டவர்கள் கொஞ்சமா?... அவளைக் கொஞ்சிக் கொங்கை இரண்டின் மீது கொங்குத் தடவி சுவைத்திட, தவமிருந்த அரசர்கள்தான் எத்தனை?... ஆசை எனும் ஆழ்கடலுக்குள் போதை சுகங் காண, இந்திரனும் இவள்மீது மோகம் கொண்டு தவித்தானென்றால் அழகி அகலிகையின் தொடையின் வனப்பை வார்த்தைக் கொண்டு கூற முடியுமா? முனியின் மனைவியை நினைந்து, உருகி நின்ற இந்திரன், சமயம் பார்த்திருந்தான் அவளை சல்லாபிக்க!... அவளை பள்ளியில் பரப்பிப் பரவசம் கொள்ளத் துடித்தான் இந்திரன்... கோழி கூவுவது போல் கூவி கவுதமனை ஏமாறச் செய்தான் இந்திரன்... கோழிக் கூவிப் பொழுது விடிந்ததுவோ என்று துயில் துறந்து, நீராடுந்துறை நோக்கி, சென்றான் கவுதமன்... நீராட கவுதமன் சென்றப்பின், நேராய் இந்திரனும் நுழைந்தான் அகலிகையின் மஞ்சத்துக்கே!... இந்திரன் பூண்டான் கவுதமனைப் போல் வேடம்!... பூண்ட வேடத்தோடு கூடினான் ஆசைத்தீர அகலிகையோடு!... இந்திரன் யார்?... ஆரியன்!... கவுதமன் யார்?... ஆரியன்!... ஆரியன் ஆரியனையே ஏமாற்றியதற்கு இந்த ஒரு கதை போதாதா?... அதனால்; இராமா, நீ இதனை மனதில் கொண்டு, ஆரிய முனிகளை ஆரியன் நீ ஏமாற்றத் துணிந்திடு!... ம்... சீக்கிரம் போய்விடு புதருக்கு!... சீதையோடு, நீ அங்கே சிந்தை மகிழ்ந்திரு!... காமவல்லியை நான் கண்டந்துண்டமாக வெட்டி வருகிறேன்... மூன்றே நாள்!... மூன்றே நாள்!... மூன்றே நாள்!...


(கூவிய வண்ணம் இலக்குவன் செல்லுகிறான்...)


(இராமனோ... )


இராமன் :
சீதா...


(என்று கூவிக்கொண்டே குடிலுக்குள் நுழைகிறான்...)


(வானம் இருள-
மின்னற் கீற்றுத் தெறிக்க-
இடி முழங்க-
பெருங்காற்று திகிலோசைச் செய்கிறது)


-திரை-










பாகம் - 1. காட்சி-18. கட்டுக்குடில் - நள்ளிரவு-


இராமன்
சீதை
இலக்குவன்


( பொழுது புலர்கிறது...
புல்லினங்கள் பாடுகின்றன....
ஒளி பரவுகிறது...
மீண்டும்-
பொழுது சாய-




சுகமான துயிலூட்ட வரும் இரவுத் தாயை வாழ்த்துவதுப் போல் புல்லினங்கள் மீண்டும் இசைப்பாட...
நீலவிதானத்தில் நிலவு மலர்கிறது....


அமைதி நிலவும் வேளையில்-
நிர்மலமான அமைதியைக் கொலைச் செய்வதுப் போல, நரி ஊளையிடும் ஓசை வர...
நித்திரையில் முகிழ்ந்திருந்த புல்லினங்கள், நரியின் ஊளையால் அதிர்ந்து கூக்குரலிட-

வேறுசில மிருகங்கள் உறும-

சிறுது நேரத்தில்-
பயங்கலந்த அமைதிப் புகுகிறது...

மீண்டும் நரி ஊளையிட-
புல்லினங்கள் அதிர,
சில மிருகங்கள் உறும-

சிறுது நேரத்தில் -
பயங்கலந்த அமைதிப் புகுகிறது...

மீண்டும்-
மூன்றாவது முறையாக நரி ஊளையிட-
புல்லினங்கள் அதிர-
மிருகங்கள் உறும-

சிறுது நேரத்தில் -
பயங்கலந்த அமைதிப் புகுகிறது...)

(இராமன், சீதை பேச்சொலி...)

இராமன் :
சீதா...

சீதை :
நாதா!

இராமன் :
இலக்குவன் திரும்பி விட்டான்... வா; போகலாம்!

சீதை :
அச்சமாகுதே!... நரிதான் ஊளையிடுகிறதோ....

இராமன் :

இல்லை; சீதா!... என் உயிரோடும், ஊனோடும் கலந்தவன் இலக்குவன்!... அவனது ஊளையை என்னால்தான் உணரமுடியும்... இது நரியின் ஊளையல்ல!... என் தம்பியின் ஊளைதான்!... நரியாய் ஊளையிடுவான்... நாயாய் குரைத்திடுவான்... பேய்காய்க் குரல் தொடுப்பான்... பெருங்குரலெடுத்து ஆந்தையாய் அலறுவான்... இரத்தத்தின் நிறம்கூட மாறலாம்... என் தம்பியின் நெஞ்சில் ஆரியக்கலை மாறவே மாறாது!... அவனிடுவது ஊளைத்தான்!... அந்த ஊளையிலே உற்சாகம் தெறிப்பதைக் கவனித்தாயா?... ஊளையல்ல!... கண்ணே, வெற்றிச்சங்கு ஊதி நம்மை வாவென்று அழைக்கிறான்... வா; போகலாம்!...


(இராமனும், சீதையும் குடிலருகே வந்து நிற்கிறார்கள்...
இலக்குவன் அங்கு இல்லாததால் சீதை பயமுற்று...)


சீதை :
நாதா! எங்கே காணோம்!...


( கொக்கரித்தப்படி இலக்குவன் அவர்கள் முன் வந்து நின்று...)


இலக்குவன் :
மூக்கறுத்தேன்; மூளியாக்கினேன்!... முலைகள் கொய்தேன்: மூலைக்கொன்றாய் வீசினேன்!... விழிகள் பெயர்த்தேன்; வீசியெறிந்தேன்!... காதறுத்தேன்; கடித்துத் துப்பினேன்... கன்னம் கீறினேன்; கடைவாயொடு கிழித்தேன்... கையை வெட்டி, காலால் உதைத்தேன்... காலை வெட்டிப் பாறையில் துவைத்தேன்... அல்குலைப் பிளந்து அகங்குளிர அறாவினேன்... வயிறுக் கிழித்து, குடலெடுத்தேன்!... மயிரொடுத் தலைக் கொய்து, மரத்தில் கட்டினேன்... முண்டமதை மூன்று துண்டாக்கினேன்...


(கொக்கரித்தல்)


இராமன் :
ஆகா!... ஆரியக் கொழுந்தே!... அற்புதஞ் சாதித்தவனே!... அகங்குளிர வைத்தவனே!... எனதருமைத் தம்பியே!... வீரமறவனே!... வீணுரை என்மீது வீசிய அரக்கியை அங்கசேதம் செய்த திருவாளனே!... சுகங்காண நாடிய என்னை, சுடுவிழியால் பொசுக்கினாள்... அகமகிழ அணுகிய என்னை அகந்தையோடு மிதித்தாள்... அவளை நீ அடியோடு வேரறுத்துள்ளாய்! உன்னை நான் வேங்கை என்பேனா?... வேழம் என்பேனா?... அரக்கர் மண்ணிலேயே அரக்கியைக் கொன்று, தனியொருவனாய் ஆரியவீரத்தை நிலைநாட்டிய உன்னை நான், 'தம்பி ' என்றழைக்கும்போது என் நெஞ்சம் கள்ளுண்ட போதையாகிறதடா... 'ஆண்டவன் இல்லை' என்றாள்!... ஆரியநெறியைப் பழித்தாள்... யாகத்தைத் தூற்றினாள்... வேள்வியைக் கேலி செய்தாள்... அவளையோ, மூளியாக்கினாய்!... ஆகா!... முண்டமதை மூன்று துண்டாக்கி மீண்டவனே!... ஆண்டு பலவானாலும் ஆரியனே, உன் கீர்த்தி ஒளிவீசுமடா!... என் கண்ணுக்கு இமை நீதானடா!... என் குரலுக்கு ஒளி நீதானடா!... என் குரலுக்கு ஒலி நீதானடா!... என் மூச்சுக்குக் காற்றும் நீதானடா!... இலக்குவா, அரக்கியவள் எனக்கிழைத்தாள் அவமதிப்பு!... சுடுநெருப்புப் பட்ட பாதம் போல் பதறி எழுந்தாய் நீ!... அவமதித்தவளை நீ சிரமறுத்து என் சிந்தைக் குளிரச் செய்தாயே... உன்னை நான் எப்படியடா புகழ்வேன்?... எனது நெஞ்சமே... எனது ஊனே... எனது உயிரே!...


(இராமன் கண்ணீர் கசிய, இலக்குவனை ஆரத் தழுவுகிறான்...)


இலக்குவன் :
அடடா... அண்ணா! இத்தனையோ மகத்துவம் என்று புகழ்வது?... விழிக்கு, இமைக் காவல் செய்வதை விந்தை என்றுப் பகருவது விந்தையன்றோ... ஆசைக்கொண்டு நீங்கள் அவதியுற, நான் இருகண் கொண்டு அதனைக் காணாமல் இருப்பதா?... ஆசைக் கொண்டு அவதியுற்ற ஈசனுக்கு, நேசமாய் காவல் செய்யவில்லையா, கண்ணன்!... தாருகாவனத்து முனிவர் மனைவிகளின் தளதள மேனியைப் பார்த்து, ஈசன் தாகத்தால் தவித்தக் கதை கருநிறமேனியழகா, உனக்கோ தெரியாது?... ஆசையால் உருகி முனிவர் மனைவிமார்களிடம் காமரசம் பருகத் துடித்தவன் எவன்?... ஈசனல்லவா!... முனிவர்களுக்குத் தெரியாமல், முனிவர்களின் வேடத்தில் கள்ளத் தனமாய் பரமசிவனும் பள்ளியறைக்குள் நுழைந்தானே... காமக்கடலில் முனிவர் மனைவிகளோடு ஈசன் மூழ்கியிருந்தக் கதை உனக்குத் தெரியாதா?... சிவப்பெருமானின் திருட்டுப் புணர்ச்சி முனிவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக திருமாளவன் மோகினி வேடமெடுத்து முனிவர்களை மயக்கி நின்றான்... திருமால் சிவனுக்கு ஆற்றிய அரும்பணியை விடவா அண்ணா, நான் தங்களுக்கு ஆற்றிவிட்டேன்...
இராமன் :

இலக்குவா, அரக்கியவள் காமவல்லிக்காக நான் ஏங்கினேன்... என் கண்ணோரம் கசியும் ஈரத்துளிகள்கூட அவளைக் கவிதையாக்கி வாழ்த்தின!... என் நெஞ்சத்தைத் துளையிட்டு, அதில் அவள் ஓவியத்தை ஒட்டி வைத்திருந்தேன்... அரக்கியவள் நினைவோடு அணுவணுவாய் அவளுக்காக வாடி நின்றேன்... ஆனால்; நடந்ததென்ன?... எங்கோ உதிக்கும் சூரியன் இங்கு பூமியைச் சுடுவது போல என்னுள் எழுந்த காமநெருப்பு அசுர இனத்தவளை சாம்பலாக்கிற்றே!... இது தெய்வசங்கல்பமின்றி வேறென்ன?... தெய்வம் காமமாய் என்னுள் புகுந்து காமவல்லிக்கு காலனாயிற்றடா... கண்ணாடி சிமிழைக் கால் கொண்டு மிதித்தால், காலும் காயம் ஆகாதோ?... தெய்வ நிந்தனைப் புரிந்த, நீச நாயை தெய்வமே தண்டித்து விட்டது... அன்பற்றவள்... ஆண்டவனைப் பழித்தவள்;... அரக்கர் குலத்தவள் அல்லவோ அவள்!... அவளை அழித்தமைக்காக இறைவன் நம் மீது என்றைக்கும் கருணை பொழிவான்...
ஓ... இந்திரனே...
இடியை வைத்திருப்பவனே!
எங்கள் பிரார்தனையைக் கேள்...
அரக்கிகளில் ஒருத்தியைக் கொன்று விட்டோம்...
பெருங்கருணைக் கொண்ட இந்திரனே, ஆரியருடைய பலத்தையும், கீர்த்தியையும் அதிகப்படுத்து!... அரக்கர் ,மண்ணில் நின்று அரக்கியைக் கொன்ற எம்மை, ஆரிய இனத்தின் அவதாரிகள் என்று அகிலம் சொல்ல வாய் மலர்ந்திடு!


இலக்குவன் :
அண்ணா, அவளை நான் எப்படிக் கொலைச் செய்தேன் என்பதைக் கூறவா?....


இராமன் :
ஆகா!... அதனை கேளாத செவியும் ஒரு செவியா?... என் சிந்தைக் குளிரட்டும்... அந்தச் சிறுக்கியைக் கொன்ற விதம் கூறு!... நீ சென்ற நாளிலிருந்து முனகிய படியே இருந்தேன்... புதரைவிட்டு தாண்டவில்லையெனினும், நான் வேண்டாத தெய்வமில்லை.... மகிழ்வேது எனக்கு என் நெஞ்சம் நீயின்றி திகில் கொண்டிருக்கையில்?... தழுவிக் கொள்ள சீதை மட்டும் இல்லையென்றால், என் தவிப்பு இன்னும் அதிகமாயிருக்குமடா... தம்பி, உணக்குத் தீங்கு ஏதும் நேரிடவில்லையே?...


இலக்குவன் :
அரக்கி அவளை அடியோடு அழிப்பது எனும் நோக்கம் மட்டுமே என்னுள் இருந்தது... இன்னல் ஏற்படுமா?... மாட்டாதா? என்று என்னை நான் குழப்பிக் கொள்ளவில்லை... குறித் தவறாத அம்பு போல, சிந்தை சிதறாத நான், விந்தநாட்டுக் கோட்டையின் பின்புற மதிற்சுவர் அடைந்தேன்... பெருஞ்சுவர் என்பதாலோ, என்னவோ பின்புற மதில் எல்லையில் காவல் அதிகம் இருக்கவில்லை... நள்ளிரவுக் கடந்துவிட்ட நேரமது... மதிலேறி உள்ளே குதித்தேன்... இருள்மீது இருள் போர்த்தப்பட்டது போல், நான் இருள்மீது இருளாய் தவழ்ந்தேன்... தட்டுத்தடுமாறி நடந்த நான் சிறுசிறு பாறைகள் மீது மோதி நின்றேன்... சில பாறைகளைத் தடவிப் பார்த்தேன்... அவைகள் சிற்பங்கள் போல் இருக்க உணர்ந்தேன்... சிற்ப அரங்கமாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அங்கேயே பதுங்கிக் கொண்டேன்... விடிந்தது... அல்ல; அல்ல!... விண்ணிலிருந்து இந்திரக் கோலம் என்னருகே வந்தது!... ஆகா!... எந்த வார்த்தைகளால் நான் அந்த வித்தையை விளம்புவேன்... இருள் விலகி, ஒளி நடைப் பயின்று வர, நான் கண்டது கனவல்ல.... கற்பனைக்கும் எட்டாத சுகமாடம் அல்லவா அது!... நான் பதுங்கியிருந்த இடம், அதி அற்புதச் சிற்பக்கூடம்!... அது இந்திர லோகமோ!... சிற்பச் சாலையோ!... இன்னமும் எனக்கு வியப்புத் தீரவில்லை... கல்லுருக்கி வார்த்த கற்சிற்பமோ?... நெருப்புருக்கி எடுத்த செம்பொன்னுருவோ?... கருத்தையும் ஆழ்ந்து கற்சிலைகள் என் சிந்தையை மயக்கியது என்றால், என்னவென்று சொல்வேன்?... அரக்கர்களோ!... அவர்கள்; மாயங்கற்ற தேவர்களோ!... தேன் பருகி போதையில் ஆடிடும் வண்டு போல், சிற்பங்கண்டு நான் சிந்தையிழந்து நின்றேன்... அரக்கர்கள் எங்கிருந்து இந்த ஞானத்தைப் பெற்றனரோ?... ஆண்டவனுக்குத்தான் அறிவில்லையோ?... காணுந் திசையெங்கும் தமிழ்ப் புலவர்கள், தமிழ் மொழியியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் பேராளர்கள், யானையொடுப் போர் புரியும் தமிழ் வீரர்கள் என எங்கும் அரக்கர்கள் சிற்பம்!... அடிவயிறு எரிகிறதண்ணா!... ஆண்டவனுக்கு ஒரு சிற்பங்கூட இல்லை என்பதை நினைத்தால் நெஞ்சம் வேகிறது...


இராமன் :
கூறுகெட்டவனே!... கூறடா; கதையை!... காமவல்லியின் வேரறுத்த விதத்தை விளம்படா...


இலக்குவன் :
கூறிக் கொண்டிருப்பதைக் கேளாமல் நீயேன் குதியாட்டம் போடுகிறாய்?... ஆத்திரம் படுவதில் உனக்கு எவன் நிகராவான்?... சொல்லவிடு!... நீ ஏதும் சொல்லாமல் இரு!...


இராமன் :
கொல்லச் சென்ற நீ, கல்லின் கதையைச் சொல்லி நின்றால், நான் துள்ளாமல் துவண்டு நிற்பதா?... ஆசையில் துடிக்கிறது நெஞ்சு!... அவள் கொல்லப்பட்ட விதம் சொல்லு!...


இலக்குவன் :
பாலில் நீந்தும் பூவினை, சிற்பமாய்க் கண்டேன்... தேனில் முகிழ்ந்த மேகத்தை சிற்பமாய்ப் பார்த்தேன்... நெருப்பின் நுனியை - இரவின் நிழலை - சிற்பமாய்க் கண்டேன்... இன்னவிதமென்று இங்கு நான் எதனைக் கூறுவேன்?... என்னை மறந்து சிற்பச்சாலையில் திரிந்தேன்...
இராமன் :

மூடனே!... எண்ணியக் காரியத்தை முடிக்காது, கல்லைக் கண்டு மயக்கமுற்ற மதியற்றவனே!...


இலக்குவன் :
கல் அல்ல; கள்!... அண்ணனே, நான் சிற்பவரங்கில் இருந்ததால் அல்லவா சிறுக்கியை எளிதில் சிதைக்க வழிப் பிறந்தது... கூறுகிறேன்; கேளுங்கள்!... சிற்பச்சாலையின் மையத்தில் பெருமன்றமும், அதனை அடுத்து சிற்ப ஆய்வரங்கமும், சிறுத் தொலைவில் சிற்பஞ் செதுக்கும் பணிமனையும் இருக்கக் கண்டேன்... பணியாளர் குடில்கள் பசுஞ்சோலைக்குள் இருக்கக் கண்டேன்... சோலையின் ஒரு புறத்திலே நீராடு மண்டபம் இருந்தது... நீராடுஞ் சோலையின் தென் புறத்திலே அரண்மனைப் பாதை ஒன்று அழகுற அமைந்திருந்தது!... செதுக்கப்பட்ட சிற்பங்களும், ஆய்வரங்குச் செய்திகளும் அந்தப் பாதையின் வழியாகத்தான் அரண்மனைக்குக் கொண்டுச் செல்லப் படுகின்றன என்பதை என்னால் உணர முடிந்தது!... மாலைக் கவிழ்ந்து, மையிருட்டு சூலுஞ் சமயம், நான் மரத்தின் மீது மறைந்திருந்தேன்... சிற்பங்கள் சுமந்து வண்டியொன்று வந்துக் கொண்டிருந்தது... அம்பு ஏவி, வண்டியோட்டியைக் கொன்றேன்... கொல்லப்பட்ட சடலத்தை வண்டியினுள் ஓரமாகக் கிடத்தினேன்... பிறர் பார்வையில் படாத வண்ணம் சருகுகளால் மூடிவிட்டு, நான் வண்டியோட்டியாக மாறினேன்... சிற்பங் கொண்டுச் செல்வதற்காக அனுமதி ஓலையைக் காட்டியவுடன், அரண்மனைக்குள் செல்ல, வழிக் காட்டினான் காவலன்!... இரவும் எனக்கு சாதகமாக இருந்தது!... அரண்மனையின் வெளிப்புறத்தை வண்டி அடைந்த பொழுது, நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது... மருங்கொன்றில் வண்டியை நிறுத்திவிட்டு, மதிலேறி அந்தப்புரத்துக்குள் குதித்தேன்...


இராமன் :
ஆகா!... ஆரியனுக்கன்றி வேறு எவனுக்கு இந்தத் துணிச்சல் வரும்?...


இலக்குவன் :
அந்தப்புரத்தின் நீராடும் மண்டபத்தை அடைந்த நான், அங்கிருந்த மரமொன்றில் ஏறி மறைந்திருந்தேன்; காமவல்லியின் வரவுக்காக!... இளங்கதிரவன் உதயத்தால், நீராடுஞ்சோலை பூத்ததா? அல்லது காமவல்லியின் நுழைவால் சோலை பூத்ததா என்றறியேன்!... ஓவியத்தில் தோன்றியவளா?... அல்லது ஓவியத்தை தோற்றுவித்தவளா என்றறியேன்!... எழிலுக்கு உரியவளா?... எழிலை உண்டாக்கியவளா என்றறியேன்!... இளமையால் மேனி ஒளிர்கிறதா?... அல்லது அவளால் இளமை இளங்கிற்றா என்றறியேன்... பூங்காற்று அவளைத் தோற்றுவித்ததா? அல்லது அவளால் பூங்காற்றுத் தோன்றியதா என்றறியேன்!... துயில் கலைந்து வருகிறாளா?... அல்லது; கலைந்த துயில் பிரிந்திட மனமின்றி அவளோடு ஒட்டி வந்ததா என்றறியேன்!... இளங்காற்றோடு மென்துகில் அசைந்திட, கனியாய் - கன்னியவள் நீராட வந்தாள்!... நல்லிள முலைகள் நழுவிடாதபடி, வெண்துகில் தாங்கியிருக்கக் கண்டேன்... துகிலாய்ப் பிறந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்!... இடையை நான் இரு கண்களால் துழாவியபோது, இளம்பரிதி போல் தொப்பூழ் ஒளிரக் கண்டேன்... தெள்ளிய நீரில் நிலவு போல் மெல்லிய ஆடையில் பளிங்குத் தொடைகள் பார்த்தேன்!...


(இராமன் மெய் மறந்து)
இராமன் :
மெய்தான்!... அவள் அழகுக்கே அழகானவள்தான்!... அந்த சுந்தர சுவடுகளை உதட்டில், ஒற்றிக் கொள்ளலாம்... உவமைகளுக்கு அப்பாற்பட்ட ஒய்யாரியவள்!...


இலக்குவன் :
ஒய்யாரிதான்!... ஆனால்; அரக்கியாயிற்றே... சூத்திரச்சி ஆயிற்றே... என் அண்ணனை துச்சமாகத் தூற்றியவளாயிற்றே... கடவுளைத் துப்பியவளாயிற்றே... மூடர்கள் என ஆரியர்களைப் பாடியத் தமிழச்சியாயிற்றே... கொதித்தது இரத்தம்!... நீராடவந்த காமவல்லியைப் பின்தொடர்ந்து வந்தாள் தோழியொருத்தி!... அந்தத் தோழியின் நாசியை நசுக்கி, மயக்கமுறச் செய்தேன்... ஓசையின்றி ஒரு நொடியில் முடிந்தது அந்தச் சம்பவம்!...


இராமன் :
ஆகா... சொல்!


இலக்குவன் :
நீராடத் துகில் களைந்தாள்... நீரில் கால் வைத்தாள்... தோழியைப் பார்க்க திரும்பினாள்... தோழிக்கு பதில் நான் நின்றிருந்தேன்... ஆவென அவள் வாயைப் பிளந்தபோது, ஆத்திரங் கொண்ட நான் வாயில் துணியை திணித்தேன்...
இராமன் ;
கொல்வதற்கு முன் காமவல்லியை ஏதும் செய்தாயா?...

இலக்குவன் :
ஆமாம்!

இராமன் :
செய்தாயா?... என்ன...

இலக்குவன் :
காந்தமெனத் திகழும் சந்திர முகத்தை

இராமன் :
சந்திர முகத்தை?

இலக்குவன்
மூளியாக்கிட முதலில் மூக்கறுத்தேன்...

சீதை :

அய்யோ; போதும்!... நிறுத்துங்கள்... கொடியவளோ; கோர இனத்தவளோ; பொல்லாதவளோ; நல்லனத் தெரியாதவளோ; அரக்கியோ; சிறுக்கியோ; ஆகாதவளோ; அசுரியோ; பாவமிழைத்தவளோ; பாருக்கே கேடானவளோ; எவளாயிருந்தாலும் இப்படியாப் பழி வாங்குவது?... இது கோரமில்லையா?... அணுஅணுவாக அங்கசேதம் செய்திருக்கிறீர்களே... அவளது அங்கம் எப்படி பதறியிருக்கும்?... கதறியிருக்கும்?... துடித்திருக்கும்?... விரலை சிறு முள் தைத்தாலும் நெருப்பில் விழுந்தப் புழுவைப் போல் வேதனையால் துடித்திடுவோமே... விழி மீது சிறு மலரிதழ் பட்டாலும், மாளாத வேதனையால் கண்கள் துடித்திடுமே... வெயில் சிறுது கடுத்தால் மயிர்க்கால் கூட அம்மம்மா என்று அலறிடுமே!... அய்யோ அவள் உடம்பு நார் நாறாய் கிழிப்படும் போது நரம்பு நுனிகள் கூட நரகவேதனையால் துவண்டிருக்குமே... ஒரு சிறு சிறகு
ஒடிந்தாலே, சிட்டுக் குருவியும் சிக்கிடுமே வேதனைக் கூட்டில்!... ஒரு அங்கத்தையே நைத்திருக்கையில் அந்த உயிர்க் கொண்ட வேதனையை நெஞ்சில் ஈரம் இருப்பின் அறிந்திருப்பீர்களே... உங்கள் கழுதைக் கயிறுக் கொண்டு சிறுது நேரம் இறுக்கிப் பாருங்கள்... மூச்சுத் திணறி, சாவு முனைக்கேச் சென்று விட்டதைப் போல உயிர் பதறுவதை உணர்வீர்களே!... 'விழிகளைப் பெயர்த்தேன்' எனும் சொல்லைக் கேட்கும் போதே என் விழிகளில் நீர் சுரக்கின்றதே... அணு அணுவாக அங்கசேதம் செய்துவிட்டு கொக்கரிக்கும் உங்கள் கண்களை ஊசியால் குத்திப் பாருங்கள்... செந்நீரோடு பெருகும் வேதனையைச் சொல்ல, வேறு வார்த்தையும் இல்லையே!... நினைக்கவே நெஞ்சு எரிகிறதே... வாய்க்கொண்டு பேசிடா வண்ணம் வயிறும் எரிகிறதே... இதில் வர்ணனை வேறா?... ஈரமில்லாத உங்களிடத்தில் இதனை நான் பேசுவது தவறுத்தான்!... அதர்மத்தை தர்மமாகப் பேசாதீர்கள்...


இராமன் :
சீதா, அரக்கரை கொல்வது அதர்மமாகாது... தர்மமேயாகும்!... ஆரியன் வாழ, யாரையும் கொல்லலாம்!... எந்த வாய்ப்பையும் சாதகமாக்கி ஆரியர்ப் பிழைக்க வேண்டுமென்பது ஆரியநீதி!... ஆரியன் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவன்... அதனால், ஆரியன் சகலத்திலும் சுகவாழ்வு வாழ உரிமையுள்ளவனாவான்... பிரம்மனின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் தான் இந்தத் தமிழர்கள்... தமிழர்கள் ஆரியர்களின் கால் தூசுக்கும் கேவலமானவர்கள்!... ஆரியர்களை எதிர்க்கும் சூத்திரர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று மனு தர்மம் கூறுவதை நீ அறியாயோ?...


சீதை:
சூத்திரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், விரசலர்கள், என்றும் இழிவானச் சொற்களால் தமிழ் மக்களை விளிக்கின்றீர்களே... உங்களால் இழிவானவர்களாகக் கருதப்படும் இவர்களதுப் பெண்களைக் கண்டு மோகிப்பது தர்மமோ?... சூத்திரச்சியை தீண்டுவது தீட்டாகாதோ?... பசிக்காக மலத்தையும் தின்பது சரியோ?...


இராமன் :
சூத்திரனது அழகிய பெண்களை, ஆரியர்கள் அனுபவிக்கலாம்... அழகிய சூத்திரப் பெண்கள் ஆரியர்களின் தாசிகள்!... தாசிகள் எங்களுக்கு இசைந்தே ஆக வேண்டும்!... ஆரியனுக்கு அனைவரும் அடங்கியே நடக்க வேண்டுமென்பது தெய்வநியதி!... ஆரியனின் ஏவலுக்கு எவனொருவன் அடிபணிய மறுக்கிறானோ, அவனுக்கு நரகத்தில் தண்டனையுண்டு!... இதை நாம் அமைதியாகச் சொல்லியும் கேட்க மறுத்தால், ஆரியர்கள் ஆயுதமெடுத்து சூத்திரர்களோடுச் சண்டைச் செய்ய வேண்டுமென்று மனுதர்மம் கூறுவதை நீ மறந்தாயா?...


சீதை :
ஆரியவீரன், கேவலம் ஒரு பெண்ணைக் கொல்வது இழிவல்லவா?...
இலக்குவன் :
பெண்களைக் கொல்லுதல் பாவமாகாது!... இதனை அத்வைதமே கூறுகிறது!...


சீதை :
கொல்லுங்கள்; கொல்லுங்கள்... கொன்று குருதியையும் அருந்துங்கள்... ஆத்திரம் தீர, பிணத்தின் சதையையும் மென்று தின்னுங்கள்... ஆனால்; அங்கசேதம்...


இராமன் :
அங்கசேதம் அங்கசேதம் என்று ஏன் அலறுகிறாய்?... பயனற்ற மரத்தை வேரோடு வீழ்த்துவதில்லையா?... மரத்தினும் இழிவானவர்கள்தானே தமிழர்கள்!... ஆரியருக்குப் பயன்படாத அரக்கர்களை அங்கசேதம் செய்வதில் தவறில்லை... வயல்வெளியில் களையெடுக்கும் காட்சியைக் கண்டதில்லையோ நீ?... ஆரியனைத் திட்டும், சூத்திரனது நாக்கை அறுத்துவிட வேண்டும் என்று மனு தர்மமே கூறுகிறது!... ஆரியனது குலப்பெயரை பழிக்கக் கூடாது... ஆரியனின் செயலையும் பழிக்கக் கூடாது!... பழித்தால் இரும்பை செந்நிறமாய்க் காய்ச்சி சூத்திரனது வாயில் செலுத்த வேண்டும்... ஆரியன் பேசுவதை ஒட்டுக் கேட்டால், கொதிக்கும் எண்ணையை சூத்திரனது காதுகளில் கொட்ட வேண்டும்... ஆரியனை அடித்தால், கையையும், உதைத்தால் சூத்திரனது கால்களையும் வெட்ட வேண்டும்... இதுவே மனுநீதியாகும்!... உலகத்து உயிரெல்லாம் மனுநீதியின்படி ஒழுகுதல் வேண்டும்... அதாவது; ஆரியருக்கு அரக்கர் கீழ்ப்படிந்திட வேண்டும்... இந்தப்பூவுலகு, ஆரியர்கள் பிழைப்பதற்காக, பிரம்மனால் படைக்கப்பட்டது!... பாவம் செய்வோர் நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்... ஆரியர்களை தேவலோகத்திற்கு அழைப்பான் ஆண்டவன்!... மோட்சத்தில் இடந்தருவான் இந்திரன்!...
இலக்குவன் :
பாவம் செய்வோர் யார்? சீதைக்குச் சொல்லுங்கள்...

இராமன் :

ஆரியர்களை எதிர்ப்பவர்கள் - ஆரியர்களின் இச்சைக்கு உடன்படாதவர்கள் - ஆண்டவனைத் திட்டுபவர்கள் - மோட்சமும், மறுபிறவியும் இல்லையெனக் கூறித் திரிபவர்கள் - சிந்திப்பவர்கள் - இவர்கள் எல்லாருமே பாவம் செய்தவர்கள் ஆவார்கள்!...


சீதை :
பாவம் செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமை ஆண்டவனுக்கு மட்டுந்தானே


இராமன் :
ஆரியனுக்கும் உண்டு!... ஆரியனும், ஆண்டவனும் ஒன்று!...


சீதை :
பாவம் செய்கிற ஆரியருக்கும் நரகம் உண்டோ?...
இராமன் :

இல்லை!... ஆரியன் பிரம்மனுடைய நெற்றியிலிருந்து பிறந்தவன்!... அவனுடையச் செயல்கள் யாவும் தர்மத்தின் பாற்பட்டதாகும்!... ஆரியப்பிறவி புண்ணியப் பிறவியாதலால், ஆரியர்களின் செயல் ஒருபோதும் பாவச்செயலாகாது!...


சீதை :
தசரதன் ஆரியன்தானே?


இராமன் :
ஆமாம்!...


சீதை :
தசரதனுடையச் செயலும் தர்மத்தின்பாற் பட்டதுதானே?


இராமன் :
நீயென்ன சொல்கிறாய்?


சீதை :
ஆரியன் செய்வதெல்லாம் தர்மத்தின்பாற் பட்டதென்றால், தசரதன் பரதனுக்கு அரசுரிமைத் தந்ததும் தர்மத்தின்பாற் பட்டதுதானே?... இதனைத் தெரிந்தும், தசரதனை நீங்கள் கொன்றதேன்?... பரதனை கவிழ்க்க முனைவதேன்?... என் கேள்விகளுக்கு மவுனம் சாதிப்பதேன்?


இலக்குவன் :
ஏய், சீதா!... என்னப் பேசுகிறாய்?... ஓடிவரும் மிருகத்துக்கு தாகம் தணிக்கும் நீர்நிலைப் போன்றவள்தான் பெண் என்பவள்!... பள்ளியறையில் ஆண்களின் ஆசைக்குத் தீனியாய் இருக்க வேண்டியது பெண்களின் கடமை!... அதுவன்றி கல்வி, கேள்வி, ஞானம் பெண்களுக்குக் கூடாது என மனுதர்மம் கூறுவதை நீ அறியாயோ?... கேள்விக் கணைகள் தொடுத்து ஆரியமரபை சிதைக்கிறாயா, சீதையே!... மூடு வாயை!... இல்லையென்றால் கிழித்துவிடுவேன் தொண்டையை!...


(இலக்குவன் அகங்காரமாகக் குரல் கொடுக்கிறான்...)


இராமன் :
தம்பி, இவள் சிறுமி!... மன்னித்துவிடு!... ம்... விட்டகதையைத் தொடங்கு...


இலக்குவன் :
மூக்கில் தொடங்கி, முண்டமதை மூன்று துண்டுகளாக்கியப் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியதண்ணா!...


இராமன் :
அவள் கூச்சலிடவில்லையா?...


இலக்குவன் :
வாயைக் கட்டியப் பிறகு எங்கிருந்து வரும் கூச்சல்?


இராமன்:
மீண்டுமிங்கு திரும்புகையில், துன்பம் ஏதும் உனக்கு ஏற்படவில்லையே?...


இலக்குவான் :
காமவல்லியின் கணையாழி!


(இராமனுக்கு கணையாழியைக் காட்டுகிறான்..)


இராமன் :
ஓ...


இலக்குவான் :
ஆமாம்!... காமவல்லியின் கையை வெட்டி காலால் உதைக்கும்போது, கண்ணில் பட்டது இந்தக் கணையாழி!... அரசு முத்திரைப் பதித்த அவளது கணையாழியை நான் காட்ட, காவலர்கள் எனக்கு வழிவிட்டார்கள்... அய்யம் என்பால் ஏதும் எழா வண்ணம், சிற்பியாய்க் கோட்டையை விட்டு, வெளியேறினேன்... இதோஇதையும் பார்.... காமவல்லி அணிந்திருந்த அணிமணிகள்!... அனைத்துமே நவரத்தினங்கள்!...


(இடுப்பின் முடிச்சவிழ்த்து இலக்குவன் நகைகளைக் கொட்டுகிறான்...)


இராமன் :
தம்பி, நிலவு மறைந்தாலும், நிலையான அதன் பேரெழில் கவிதையாய் நெஞ்சுக்கு சுகமூட்டுவதுப் போல், காமவல்லியின் சுந்தரமேனி இப்போதும் என் நெஞ்சுக்குள் காமமாய் சுகமூட்டுகிறது!...


(இராமன் நகைகளை முகர்ந்து நுகர்கிறான்...)

இராமன் :

அவள் அணிந்திருந்த நகைகள் கூட நறுமணம் வீசுகிறதடா... ஆகா!... இலக்குவா, உயிரோடு இருக்கும் வரை அவளை என்னால் தொட இயலவில்லை... கொங்கைகளைக் கொய்து எறிந்தாயே... கொண்டு வந்திருக்கக் கூடாதா? ... அறுபட்ட முலைகளையேனும் ஆசையோடு நெஞ்சோடு அணைத்து மனங் குளிர்ந்திருப்பேனே... முலைகளோ முல்லை மலர்களோ?...


(காமமயக்கத்தில் நினைவிழந்தவனைப் போல், இராமன் மொழியுற-
சீதை 'து ' வென இராமனைக் காரி உமிழ்ந்து விட்டு, குடிலுக்குள் நுழைகிறாள்...)

-திரை-


முதல் பாகம் முற்றிற்று
-அரங்க கனகராசன்

படிப்போர் கருத்திடுக :







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்