குரங்கணி காடு தொடர் கதை

குரங்கணி காடு தொடர் கதை 

குரங்கணி காடு 
                                                                                                        தொடர்கதை 

                                                               -அரங்க கனகராசன்.

       
1 -   உனக்கு நா முத்தம் குடுக்கனும்


" உனக்கு நா முத்தம் குடுக்கனும் "

" என்னாச்சு கயல்... என்ன நடுராத்திரியில... தூக்கம் வரலியா?"

"இல்லைப்பா"

" கயல், குரல் ஒரு மாதிரியா இருக்கு... ஏதாவது பிரச்சனையா?"

"ம்..."

"சொல்லு  கயல் "

" நம்ம காதல் அப்பாவுக்கு தெரிஞ்சிருச்சு...   நா உன்னை மறந்துடனும்... இல்லைனா உன்னைக் கொலை செஞ்சுருவேன்றாரு"

"................................."

"ஏம்ப்பா பேசமாட்டிங்கரே?''

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் கயல்"

" அதைவிட எனக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்... நீயில்லாமெ என்னாலே... "

" நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சா போதுமா?  சாதி வேறுவேறையாச்சே"

" வாழ போறது நாமதானே"

" சொல்லு கயல்... இப்ப என்ன செய்யலாம்?"

" நீ இல்லமே என்னால ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கூடப்  பார்க்க முடியலே... நா செத்துரலாம்னு இருக்கேன்..."

"அய்யோ கயல்... தப்பான முடிவு ஏதும் எடுத்துறாதே"

 " வேற வழியில்லை... சாகறதுக்கு முன்னாடி நா...  உனக்கு... கடைசியா ஒரு முத்தம் குடுக்கணும்... உன் மடியிலே சாகனும்... இளவரசு"

                                                                                          ( தொடரும்)

( கயல்விழியின் தற்கொலை முடிவு நிறைவேறியதா? இளவரசன் என்ன செய்தான்? )








குரங்கணி காடு 
   தொடர்கதை
-அரங்க கனகராசன்.
----------------------------------------------------------
       2 -  உன்னை நேசிக்கிறேண்டா ... 
------------------------------------------------------------

முன்கதை : 
உயர்வகுப்பைச் சேர்ந்த கயல்விழி, தாழ்த்தப்பட்ட இளவரசுவைக் காதலிக்கிறாள்...  கயலின் தந்தைக்குத் தெரியவர-
காதலனின் மடியில் உயிர்துறக்க கயல்விழி விரும்புகிறாள் 
------------------------------------------------------------
இருண்ட இரவினை விழுங்கிய அதிகாலை ஒரு மணி... 

மரங்கள் அடர்ந்த, செல்வந்தர்கள் குடியிருக்கும் ஆர்.எஸ்.புரத்தில்-
பெண்கள் மேநிலைப் பள்ளிக்கு அடுத்தத் தெருவில் சிவப்புநிற காரில் 
அடர்ந்த மரத்தினடியில் இருட்டினூடே இளவரசு காத்திருந்தான்...

அந்த இருளிலும் சோகத்தின் விளிம்புகளை அவன் முகம் காட்டிக் கொண்டிருக்க-

அவன்விழிகள் காரின் கண்ணாடியில் பதிந்திருந்தன...

கண்ணாடியில் கயல்விழி  தெரிந்தாள்...

இளவரசுவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது...

வீட்டு மதிலில் இருந்து கயல்விழி குதித்து, பயந்து பயந்து . ஆனால்; வேகமாக அடியிட்டு, காரை நெருங்கினாள்-

காருக்குள் நுழைந்த கயல் இளவரசுவைக் கட்டிப் பிடித்துத் தேம்பினாள்...

அவளை விலக்கிவிடாமல் , அவளை ஒருகையால் தாங்கிக் கொண்டே காரை ஓட்டினான்...

கார் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைத் தொட்டு மேம்பாலத்தை நோக்கித் திரும்பியபோது கயல்விழி கேட்டாள்: "எங்கே போகப் போறோம்"

இளவரசு ஏதும் பேசாது அவளைப் பார்த்தான்...

"சொல்லுடா"

"கயல், நா  ஒன்னு சொல்லட்டுமா"

"ம்"

"கேப்பியா "

"சொல்லுப்பா"

"உன்னைப் பெத்தவங்களுக்கு நீ துரோகம் செய்றமாதிரி உனக்குத் தோணலியா?"

"எனக்கு பதில் சொல்லத் தெரியலே"

"உன்னைக் காணோம்னு துடிச்சிர மாட்டாங்களா?"

" இளவரசு நா உன்னை நேசிக்கிறேண்டா"

"நீ வீட்டை விட்டு  வரும்போது யாராவதுப் பாத்தாங்களா?" 

" செக்யூரிட்டி கூட பாக்கலே... பின்பக்க வாசல் வழியா வந்து, மதில் குதிச்சு வந்துட்டேன்..."

"நாளைக்குத்  தேடமாட்டாங்களா?  பிரச்சனையை நம்மாலெ சமாளிக்க முடியுமா?"

"இளவரசு  காரை நிறுத்து"

மேம்பாலத்தின் ஓரமாக  கார் நின்றது...

வெறிச்சோடியிருந்தது பாலம்...

பக்கத்தில் ரயில்நிலையத்தை ஒட்டியிருந்த சந்துகளில் இருந்து நாய்களின் குரைப்பு...

சிறுது நேரம் இளவரசுவைக்  கண்கொட்டாதுப் பார்த்த கயல்விழி , "சேலையிலெ நா நல்லாயிருக்கேனா? - என்று புன்னகையோடு கேட்டாள்.

"கயல் நா.."

"ஏன்டா நீ எத்தனைதடவை என்கிட்டே கேட்டிருப்பே... சேலையில என்னைப் பாக்கணும்னு... ம்... சொல்லு நல்லா இருக்கேனா? உனக்காகவே சேலை கட்டிட்டு வந்திருக்கேன்..."

நல்ல மனநிலையில் இருந்திருந்தால் கயல்விழியை சேலையில் பார்த்து, "சந்தனசிலைப் போலிருக்கே " என்றிருப்பான்...

ஆனால்; இன்று?

"சொல்லுப்பா"

மேம்பாலத்தின் மெர்க்குரி வெளிச்சம் கயல்விழியை ஒரு கவிதையாகக் காட்டியது...

அதனைச்  சுவைக்கும் மனநிலையில் இளவரசு இல்லையே...

" என்னைப் பாருடா... என்  கண்ணைப் பாருடா.. உன்னை நினைச்சு அழுதழுது கண் வீங்கியிருக்கே ... உனக்கு தெரியிலியா?"

இளவரசு மவுனத்தைப் பொழிந்தான் அவள்மீது.

"ஏன்டா, என்கிட்டே பேசமாட்டிங்கிறே... "

" கயல் ஒன்னு செய்... வீட்டுவாசல்லே உன்ன இறக்கி விட்டுற்றேன்.. நீ யாருக்கும் தெரியாத மாதிரி வீட்டுக்கு போயிரு... ப்ளீஸ் "

"இளவரசு, எனக்கு ஒரு உதவி செய்றியா?"

"சொல்லு கயல்"

"இதைப் பாரு"

நச்சுக்குப்பியை காட்டினாள்...

"உன்மடியிலே படுத்து, இத நான் சாப்பிட்டுக்குறேன்... கொஞ்ச நேரத்தில நா செத்துருவேன்... நா செத்தவுடனே என்னை இங்கே தெருவோரத்திலே கிடத்திட்டு நீ போயிரு..."

கயல்விழி இளவரசுவின் மடிசாய்ந்தாள்...

கயல்விழியைக் கட்டிப்பிடித்து அழுதான் இளவரசு!

"கயல் இதைப் பாரு... நானும் கொண்டு வந்திருக்கேன்... நீ இல்லாத உலகத்தில என்னால் வாழமுடியாது கயல்...உனக்கு முன்னாடி நா செத்துப்போறேன் "

இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தேம்பலாயினர்...   

                                                                                           ( தொடரும்)














-----------------------------------------------------------------------------

 3 -   சாதியைத் திணிச்ச சதிகான்!


-----------------------------------------------------------------------------

குரங்கணி காடு 
   தொடர்கதை
-அரங்க கனகராசன்.

-----------------------------------------------------------------
முன்கதை : 
காதல்  நிறைவேறாது என்பதால், கயல்விழியும், இளவரசுவும் நஞ்சுருந்தி  மடிய விழைகிறார்கள்... 
------------------------------------------------------------
"இளவரசு நீ சாகக் கூடாது... நீ கல்யாணம் செஞ்சுட்டு, உனக்கு பிறக்கிறக் குழைந்தைக்கு என் பேரு வெக்கணும்..."

அந்த அமைதியான அதிகாலையின்  கயலின் அழுகை,  மிகுந்த வெறுமையை உண்டாக்கியது...

"கயல் என்னைப் பாத்து சொல்லு... என்னைப் பிரிஞ்சு உன்னாலே சாக முடியுமா?... முடியாது... ரெண்டு பேருமே  ஒன்னா செத்துரலாம்..."

"ஏன்டா, நானும் தமிழ்ப்  பேசறேன்... நீயும் தமிழ்ப்  பேசறே... நமக்குள்ளே சாதியைத்  திணிச்சா சதிகான் யாருடா?"

"கயல், உன் அளவுக்கு என்னாலே பேச முடியலே... சரி கிளம்பலாம்... கண்காணாத இடத்துக்கு போய் செத்துரலாம்..."

மகிழுந்து மேம்பாலத்தின் மடியில் தவழ்ந்து, வேகமெடுத்தப் போது கயல், இளவரசுவின் இதழ்களைக் கடித்து ஆழமான முத்தம் பதித்தாள்...

ஓடிய மகிழுந்து முத்த சத்தம் கேட்டு நின்றது...

இருவரது இதழ்களும் அழுந்தி ஆற்றாமையை வெளிப்படுத்தின...\

அந்த இதழ்களின் இணைவில் இச்சை இல்லை...

காதலின் ஆழ்ந்த நட்பும் - பிரிவும் கலந்த சோகமே இதழ்களின் கூடுதலில் தெரிந்தது...

நீண்ட  நேர இதழ்களின் இணைவினூடே, பொங்கிய அழுகையை கண்களால் அடக்கமுடியவில்லை....

சாரைசாரையாக  கண்ணீர்ப் பெருக்கெடுத்தது...

கயல் சொன்னாள் :" எங்கே போய் சாகலாம் இளவரசு?"

"தெரியலே... ஆனா; கண்காணாத இடமா - தூரமா போலாம்..."
"தூரம்னா"

"நீயே சொல்லு"

" குரங்கணிக்குப் போலாம், இளவரசு"   

     ( தொடரும்)

( சாவதற்கு குரங்கனியைத் தேர்ந்தெடுத்தாள் கயல்விழி ஏன்? )











-----------------------------------------------------------------------

 4 - ரொம்ப  அழகா இருக்காண்டி...

----.-------------------------------------------------------------------

குரங்கணி காடு 
   தொடர்கதை
-அரங்க கனகராசன்.

-----------------------------------------------------------------
முன்கதை : 
தற்கொலைச் செய்துக் கொள்வதற்கு, குரங்கணிக் காட்டுக்குப் போக, விருப்பம் தெரிவித்தாள் கயல்விழி, இளவிரசுவிடம்...  
------------------------------------------------------------
" குரங்கணிக்குப் போலாம், இளவரசு"

குரங்கணி என்றவனுடன், இளவரசுவின் கண்கள் பனித்தன!... கயல்விழியின் விழிகளும் நீர்க் கோர்த்தன...

அதற்கும் பொருளிருந்தது...

கயல்விழி செல்வந்தரின் ஒரே மகள், என்றாலும் அவளோடு உடன் படித்த தோழிகளை மிகவும் நேசிப்பவள்...

மேலாண்மைக் கல்வியை முடித்த கயல்விழி வேலைத்தேட வேண்டிய நிலையில் இல்லை...

அவளோடுப் படித்த தோழிகள் பணியில் சேர்ந்தனர்...

தோழிகளை அவ்வப்போது சந்திப்பது கயல்விழிக்குப் பிடித்தமான ஒன்று!

அப்படித்தான், ஒருநாள் -
தேன்மொழியைப் பார்க்க  தேன்மொழி வேலைப் பார்க்கும் அலுவலகம் சென்று உரையாடிக் கொண்டிருந்தாள்-

உள்பேசியில்-
தேன்மொழிக்கு அழைப்பு வந்தது...

" கயல் இரு... மேனேஜர் கூப்பிட்றார் '' என்று சொல்லிவிட்டு மேலாளரின் அறைக்குச்  சென்றாள் தேன்மொழி!

தேன்மொழிப் புகுந்த கண்ணாடி அறையை கயல்விழிப் பார்த்தவுடன் அவளையறியாமலே அவளுடைய இதயத்தில் மின்னல் தோன்றியது... 

சிறுது நேரத்தில் திரும்பிவந்த தேன்மொழியிடம், " என்னடி!... உங்க ஆபீசுக்கு சினிமா ஸ்டார் வந்திருக்கார் போலிருக்கு" - என்றாள்!

" ஓ மானேஜரை சொல்றியா?... பழைய மேனேஜர் மாறுதல் ஆயிட்டார்... இவரு இன்னைக்குதா வந்திருக்கார்..."

" ரொம்ப அழகா இருக்காண்டி"

"எனக்கு அப்படித் தோணலியே"

" போடி ரசனை இல்லாதவளே!... செ... என்ன அழகு!"

 "ஏண்டி ... இப்படி வழியரே... "

"இப்படி ஒரு அழகன் கிடைச்சா,  இப்பவே நா கட்டிக்கிவேண்டி"

" சரி... சரி... வா கேண்டீன் போலாம்" என்று சொல்லி எழுந்தாள் தேன்மொழி!

"அந்த இளவரசனையும் கூப்பிடடி" என்ற கயலை, தேன்மொழி வியப்போடு  பார்த்தாள்...

" என்னடி இப்படிப் பாக்கறே"

" மேனேஜர் பேரு உனக்கெப்படிடி தெரியும்?"

"என்னடி சொல்றே?"

"மேனேஜர் பேர் இளவரசு தாண்டி "

கயல்விழி ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்து, அறையில் மிடுக்கோடு அமர்ந்திருக்கும் மேலாளர் இளவரசுவை மீண்டும் பார்த்தாள்...

கயலின் இதயத்தில் சுள்ளென்று இரத்தக் கீற்று சுண்டி விளையாடியது!...    

( தொடரும்)

( இளவரசுவோடு கயல்விழிக்கு  காதல் மலர்ந்தது எப்படி?)








--------------------------------------------------

 5 - அழகன்... பேரழகன்... 

----.---------------------------------------------

குரங்கணி காடு 
   தொடர்கதை
-அரங்க கனகராசன்.

------------------------------------------------------------------------------------
முன்கதை : 
தேன்மொழியின் அலுவலகம் சென்ற கயல்விழி, அவ்வலுவலகத்தின் மேலாளர் இளவரசுவின் அழகில் ஈர்க்கப்படுகிறாள்...  
-------------------------------------------------------------------------------------
கயலின் இதயத்தில் சுள்ளென்று இரத்தக் கீற்று சுண்டி விளையாடியது!...    

அன்றிலிருந்து அடிக்கடி தேன்மொழியின் அலுவலம் போனாள்...

இன்னமும் அவனோடு பேசும் வாய்ப்பு வாய்க்கவில்லை கயல்விழிக்கு!

ஒருநாள்-
தேன்மொழி விடுப்பில் இருக்கிறாள் என்றுத் தெரிந்தே, அலுவலகம் சென்றாள்...

நேராக, இளவரசுவின் அறைக்குச் சென்று, "சார்... உள்ளே வரலாமா " என்று கேட்டாள் மிகத் தயங்கி!

இளவரசு அவளை உள்ளே வரும்படி தலையசைத்தான்...

உள்ளே வந்தவளை அமரச்சொன்னான்...

"தேங்க் யு சா....."

" தேன்மொழி இன்னைக்கு வர்லியே..."

"சா..."

" உங்களை எனக்குத் தெரியுமே..."

"சா...."

"நீங்க அடிக்கடி தேன்மொழியைப் பார்க்க வருவீங்ளே...."

அடப்  பாவி என்னை கவனிச்சிட்டுதா இருந்திருக்கியா...

" நாளைக்கு தேன்மொழி வந்துருவாங்க... ஏதாவது சொல்லனும்னா  சொல்லுங்க... நான் சொல்லிட்றேன்..." 

"இல்லைங்க சார்... நா பேசிக்கிறேன்... ஆங்... சார், நா போன் மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்... அவளுக்கு ஒரு போன் செய்யணும்..."

" இந்தாங்க...."

இளவரசு நீட்டிய அவனது அலைப்பேசியை அவள் தொட்டு வாங்கியபோது, மல்கோவா மாம்பழத்தின் தித்திப்பை உணர்ந்தாள்...

அலைப் பேசியில் எண்களை அழுத்தி, காதருகே கொண்டுச் செல்லும் சாக்கில், கண்களில் ஒற்றிக் கொண்டாள், இளவரசுவுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாய்!...

மீண்டும் அலைப்பேசியை அவனிடம் நீட்டி, "நம்பர் எங்கேஜ்ட இருக்குங்க, சார்... நா வீட்டுக்கே ... போய் பாத்துக்குறேன்..."

மெல்லியப் புன்னகைத் தவழ, அவன் அவளைப் பார்த்து 'சரி' யெனத்  தலையசைத்தான்...

அவனுடையப்  புன்னகைத் தவழும் முகம்  அவளுள் ஏதேதோ செய்தது...

எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியோடு, துள்ளிக்குதித்து காருக்குள் வந்து அமர்ந்து,

அணைத்துவைக்கப்பட்டிருந்த தனது அலைப்பேசியை எடுத்தாள்...

அதில் பதிவாகியிருந்த, இளவரசுவின் எண்ணை 'அழகன் பேரழகன்' என்று பதிவு செய்துக் கொண்டாள் தனது  அலைபேசியில்!...

 பிறகு தேன்மொழிக்கு அழைப்பை அனுப்பி , " ஏய் ... நான் வாங்கிட்டேண்டி" என்றாள்...

எதிர்முனையில், " என்னடி... என்ன வாங்கிட்டே" என்று தேன்மொழி கேட்டு முடிப்பதற்குள்-

கயல்விழி, " இளவரசனோட நம்பர் நீ தரமாட்டேனு சொன்னியே... நா வாங்கிட்டேண்டி" என்றாள்...

" கயல்! எப்படிடி?"

அவளுக்கு மறுமொழிக் கூறாமலே, அலைபேசியை அடக்கிவிட்டு, மகிழ்ச்சி மிகுதியில் கூவிக் கொண்டே வண்டியை ஓட்டினாள்...

அவனுடைய புன்னகை முகம், அவளுள் குறும்பு செய்துக் கொண்டே இருந்தது...

அன்றிரவு, பத்து மணிக்குமேல்,  படுக்கையில் புரண்டப்படியே-

இளவரசுவின் எண்களைத்  தடவினாள்...

அந்தத் தடவல், இளவரசுவின் இணைப்பை அணைக்க-

அழைப்பேசியின் இணைப்பொலி கயல்விழியின் இதய நரம்புகளைச் சுண்டிவிட-

கயலின் இதயம் மகிழ்ச்சியில்  படபடவென சிறகடித்தது...  

( தொடரும்)

( இளவரசுவிடம்  அலைப்பேசியில் காதலை வெளிப்படுத்தினாளா?)







-------------------------------------------------------------

 6 - காதலைச்  சொல்லிட்டியா?

--------------------------------------------------------------

குரங்கணி காடு 
   தொடர்கதை
-அரங்க கனகராசன்.

------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
இளவரசுவிடம் தன் காதலை வெளிப்படுத்த, கயல்விழி இரவு பத்து மணிக்கு அலைப்பேசியில் அழைப்பை ஏவினாள்...
------------------------------------------------------------------------------------------------------
அலுவலகத்தின் உணவகத்தில் அமர்ந்து, கயல்விழி  தேன்மொழிக்கு அழைப்பு விடுத்தாள்...

எதிர்முனையில் " என்னடி? : என்று தேன்மொழி கேட்டாள்.

கயல்விழி "நா, கேன்டீன்ல இருக்கேன் வா..." - என்றாள்.

அலைப்பேசியை மேசையின் மீது வைத்துவிட்டு தேன்மொழிக்காகக் காத்திருந்தாள் கயல்விழி!

தேன்மொழி வந்தாள்.

"என்னடி... நேர என் கேபினுக்கு வரவேண்டியது தானே.." என்று சொல்லிக்கொண்டே எதிரில் அமர்ந்தாள்...

"இல்லைடி... எனக்கு எப்படியோ இருக்கு..."

"என்னாச்சுடி..."

"தேன், இளவரசு என்னை விசாரிச்சானா?" - என்று கேட்டு, தேன்மொழியை ஆர்வத்தோடுப் பார்த்தாள்  கயல்விழி.

"உன்னைக் கேக்கறதுக்கு என்னடி இருக்கு?..."

"ஒன்னுமே கேக்கலியா?..."

"அங்... நீ நேத்து வந்திருந்ததா, சொன்னாரு!..."

"அவ்வளவுதானா?" - என்ற அவள் பேச்சில் ஏதோ எதிர்பார்ப்புத் தொக்கி நின்றது...

"வேற என்னடி, உன்னைப் பத்தி விசாரிக்கனும்னு  எதிர்பார்க்கரே..."

"இல்லைடி... அது வந்து..."

"கயல், எனக்கு நிறைய வேலை இருக்கு... வா... உள்ளே போலாம்... உன்கிட்ட பேசின மாதிரி இருக்கும்... நானும் வேலைப் பாத்த மாதிரி இருக்கும்..."

"அய்யயோ... இருடி... ப்ளீஸ்... என்னாலே உள்ளே வர முடியாது...
இங்கேயே பேசலாண்டி..."

"ஏண்டி?"

"இல்லைடி... எனக்கு இளவரசுவைப் பாக்க முடியாது... என்னமோ மாதிரி...  கூச்சமா இருக்குடி..."

"என்னாச்சுடி?....  பிக்கப் பண்ணிட்டாரா?"

"அது நடந்திருந்தா , நல்லா இருந்துருக்குமேடி"

"ஓ... ஆபிசுக்கு வந்தியே... அவனுக்கு முத்தம் தந்துட்டியா?"

"சீ... போடி" வெட்கத்தில் நாணினாள்.

"சொல்லுடி"

"நேத்து இராத்திரி..."

"கனவுல வந்தாரா..."

"என் மனசுக்குள்ளே ஓயாமே தொந்தரவுப் பண்ராண்டி.."

"மனசுக்குள்ளே தானே... என்னமோ படுக்கை அறைக்கே வந்துட்ட மாதிரி..."

"என்னைப்  பேச விடுடி..."

"ம்..."

"நேத்து இராத்திரி..."

தேன்மொழி, ஏதும் பேசாமல் கயல்விழியைப் பார்த்தாள்...

" 'உம்' னு சொல்லுடி..."

"உம்... நேத்து இராத்திரி?" 

"நா..."

"நீ?"

"அவனுக்கு போன் செஞ்சேண்டி..."

"ம்... உன் காதலை சொல்லிட்டியா?  என்ன சொன்னார்டி..."

"போடி... போன் செஞ்சேன்... ரிங் போச்சு... அவன் எடுத்து..." 

"எடுத்து?"

" 'அலோ' னு சொன்னாண்டி..."

"நீ என்னடி சொன்னே?"
( தொடரும்)

( கயல்விழி,  இளவரசுவிடம்  என்ன சொல்லியிருப்பாள்?)





-------------------------------------------------------------

 7- தேன்மொழியின் கோபம் !

--------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------------------

முன்கதை : 
இளவரசுவுக்கு, போன் செய்த விபரத்தை கயல்விழி தேன்மொழியிடம் கூறுகிறாள்...
------------------------------------------------------------------------------------------------------
" 'அலோ' னு சொன்னாண்டி..."

"நீ என்னடி சொன்னே?"
அன்றிரவு இளவரசு எண்ணுக்கு தொடர்புக் கொண்டாள்...

அவனிடம், தான் தேன்மொழியின் சிநேகிதி என்றும், தேன்மொழியைக் காண வரும்போது இளவரசுவைப் பார்த்ததாகவும், முதல் பார்வையிலேயே தான் உருகிவிட்டதாகவும் கூறி காதலிப்பதைத் தெரிவித்து விடத் துடித்தாள்...

ஆனால்; இளவரசு அலைபேசியில் "அலோ" என்று இரண்டு, மூன்று முறை அழைத்தும், அவளால் பேசமுடியவில்லை...

வெட்கம் தடுத்தது...

எந்த அறிமுகமும் - பழக்கமும் - இல்லாமல்,  ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் காதல் வயம்பட்டேன் என்று தெரிவித்தால், தன்னை கேவலமாக நினைத்து விடுவானோ என்று படபடத்தாள்... 

அதனால் அவளால் அவனோடுப்  பேசமுடியவில்லை...

இருந்தாலும்; அவனிடம் பேசியிருக்கலாமோ என்று இரவெல்லாம்  தவித்தாள்...

ஒருவேளை அலைபேசி எண்ணை வைத்து, தன்னைக் கண்டுபிடித்திருப்பானோ?...

குழம்பினாள்!

அதற்கான வசதி இருப்பதால், உள்ளூர வெட்கி மருகினாள் ...

அதனாலேயே, இளவரசுவைப் பார்க்க நாணி, உணவகம் வந்து தேன்மொழிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்...

" ஏண்டி... உன் மனசிலே என்னடி நினப்பு?... நீ ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு இருந்தேன்... நீ ... உனக்கு... செ... "

"ஏய்... ஏய்... கோவிச்சுக்காதடி... ப்ளீஸ்... "

" அதுக்கில்லைடி... நீ காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா, மேனேஜருக்கு, அது தப்பா தெரிஞ்சிருந்தா - நினைச்சு பாரு... என்னைக் கூப்பிட்டு செ... ரொம்ப தப்புடி... என்னை விசாரிச்சிருந்தா, நா என்னடி பதில் சொல்லியிருக்க முடியும்?... உன் சிநேகிதியோட இலட்சணம் பாருனு சொல்லி, என்னையும் அசிங்கமா பேசியிருப்பார்டி... வேலை செய்ற இடத்தில இதெல்லாம் தேவையாடி... என் சம்பளத்தை நம்பிதா என் குடும்பமே இருக்குடி"

" தேன் ப்ளீஸ்... அதையெல்லாம் நினைச்சுத்தாண்டி,     எனக்கு  அவங்கூட பேச தைரியம் வரலே... ப்ளீஸ்... என்னைத் தப்பா நினைக்காதடி..."

" செ... செ... உன்னைத் தப்பா நினைக்கலடி... சரி விடு... என்ன சாபிட்றே?"

தேநீர் மட்டும் போதும் என்றாள்...

இரண்டு கோப்பைத்  தேநீர்ருடன் பணியாள் வந்தபோது, இளவரசு உணவகத்தில் நுழைந்தான்...

கயல்விழி பார்த்துவிட்டாள்...

" இன்னொரு டீயும் எடுத்துட்டு வாங்க" என்றாள் பணியாளிடம்!

"எதுக்குடி இன்னொன்னு"

கண்களால் சாடைக் காட்டினாள்...

கயல்விழி காட்டிய சாடையில், தேன்மொழி திரும்பிப் பார்த்தாள்...

இளவரசு வந்துக் கொண்டிருந்தான்...

" ப்ளீஸ்... தேன், அவனை இங்கே கூப்பிடுடி" என்று காதோரமாகக்  கெஞ்சினாள்...

 ( தொடரும்)

தேன்மொழி  இளவரசுவை அழைத்தாளா ? )





----------------------------------------------------------------------

 8- சாதி சங்கத் தலைவரின் மகள் 

-----------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------------------

முன்கதை : 
உணவகத்தில் தேன்மொழியோடு இருக்கையில், இளவரசு உள்ளே நுழைந்தான்... கயல்விழிப்  பார்த்து விடுகிறாள்!
------------------------------------------------------------------------------------------------------

கண்களால் சாடைக் காட்டினாள்...

கயல்விழி காட்டியச்  சாடையில், தேன்மொழித்  திரும்பிப் பார்த்தாள்...

இளவரசு வந்துக் கொண்டிருந்தான்...

" ப்ளீஸ்... தேன், அவனை இங்கே கூப்பிடுடி" என்று காதோரமாகக்  கெஞ்சினாள்...

கயல்விழி மீது  தேன்மொழி  வெறுப்பானப் பார்வையை வீசினாள்!...

அய்யோ இவளால் ஏதாகிலும் ஆகிவிடுமோ என்ற அச்சம் தேன்மொழியிடம் வெளிப்பட்டது...

தேன்மொழி, பேசாமல் தலைக் கவிழ்ந்துக் கொண்டாள்...

அதேநேரம், இளவரசு இவர்களைக் கடக்கும் வேளையில்-

கயல்விழி எழுந்து நின்று " சார்" என்றாள்!

தேன்மொழிக்கு பக் என்றாகி விட்டது!...

இளவரசுவை 'சார்' என்று அழைத்தப் போதிலும், கயலும் உள்ளூர பயந்தாள்...

அவளின் விழிகள் அச்சத்தோடு இளவரசுவை நோக்கின...

போன் செய்த விபரத்தை 'ட்ரு காலரில் ' அறிந்திருப்பானோ?

"ஹாய் " என்று சொல்லிக்கொண்டே கயல்விழியைப் பார்த்துவிட்டு, தேன்மொழியையும் கவனித்தான்.

" தேன் என்னாச்சு? டல்லா இருக்கீங்க?" என்று பேசிக்கொண்டே, தேன்மொழியின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்...

அவன் அமர்ந்தவுடன் கயலும் தயக்கத்தோடு - ஆனாலும் - காதலோடு - இளவரசுவைப் பார்த்தபடியே அமர்ந்தாள்...

" தேன், இவங்க நேத்து உன்னைப் பாக்க நம்ம ஆபிசுக்கு வந்திருந்தாங்க..."

"காலையிலே சொன்னீங்க"

" சரி என்னாச்சு? ஏ டல்லா இருக்கீங்க?''

அவள் ஒன்றும் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள்...

அப்போது மீண்டும் ஒரு தேநீரோடு பணியாள் வந்தான்!...

அதனை வாங்கி, இளவரசுவின் அருகில் வைத்துவிட்டு, " நீங்க உள்ளே வரும்போதே தேன்மொழி உங்களுக்கும் சேத்து டீ சொல்லிட்டாங்க" என்றாள் கயல்விழி!

அடிப்பாவி... அப்படியே திருப்பிவிட்றாளே...

கயல்விழி தேன்மொழியைப் பார்த்து மெல்லிய புன்னகையைப்  பொழிந்தாள்...

அந்தப்  புன்னகையில்-
கோபம் படாதே என்ற சொல்  கெஞ்சி நின்றது...

அந்த அலுவலகத்தில், யாரையும் 'சார்' என்றோ, 'மேடம்" என்றோ விளித்துக் கொள்ளமாட்டார்கள்...

பெயர் சொல்லியே விளிப்பது வழக்கம்!

" இளவரசு, இவ கயல்விழி " என்று அறிமுகம் செய்துவைக்க-

கயல்விழியைப் பார்த்து அன்பானப்  புன்னகையைப் பொழிந்தான்  
இளவரசு!...

' கயல்,  இவர் இளவரசு... எங்க மேனேஜர்"

கயல்விழி ஆழகானப் புன்னகையை  ஏவினாள்!

" இளவரசு, 'கயல்விழி தங்கமாளிகை' கேள்வி பட்டிருக்கீங்களா... தமிழ்நாட்டில் பதினைந்து கடை இருக்கு... அத்தனைக்  கடைக்கும் இவ ஒருத்திதான் வாரிசு"

"ஓ..." என்றவன் மீண்டும், " ரொம்ப சிம்பிளா இருக்கீங்க..." என்றான்.

மீண்டும் அவனே, "உங்க அப்பாவை நான் கேள்விப் பட்டிருக்கேன் ... அடிக்கடி செய்தியிலே காட்டுவாங்களே... சாதிசங்க தலைவர்..."
என்றான்!

சாதிசங்கத்  தலைவரின் ஒரே மகள் கயல்விழி, இளவரசுவுக்கு ஏதும் மறுமொழி கூறாமல், அவனையே பார்த்தாள்...

" நகைக் கடை வச்சிருக்கீங்க... ரொம்ப எளிமையா  இருக்கீங்க..." என்றான் இளவரசு!

"நா எப்பவுமே  இப்படித்தாங்க" என்று சொல்லிவிட்டு மீண்டும் இளவரசுவின் கண்களை நேரடியாகப் பார்த்து, " இளவரசுனு உங்களுக்குப்  பேர் ரொம்பப்  பொருத்தமா இருக்கு... இளவரசன் மாதிரியே இருக்கீங்க" என்று சொல்லி விட்டு, நாணத்தைப்  புன்னகையாக வெளிப்படுத்தினாள்!...

நன்றியாக, இளவரசன் ஒரு மெல்லியக் கோடுப் போல் சிரித்தான்...

தேநீர் கோப்பையை வைத்துவிட்டு, "சரி நா கிளம்பறேன்... " என்று சொல்லிவிட்டு, மூவருக்கமான தேநீர் தொகையை மேசை மீது வைத்து விட்டு, இருவரிடமும் புன்னகைக் காட்டிவிட்டு  நடந்தான்...
அவன் போவதையே பார்த்தாள் கயல்!

அட அதுக்குள்ளே போயிட்டானே...

ஏமாற்றம் கயல்விழியன் பார்வையில் வழிந்தது...

" சிலை மாதிரி உக்காந்தது போதும்... போலாண்டி" என்று எழுந்தாள் தேன்மொழி!

" தேன், எனக்கு என்ன சொல்றதுனு தெரியலே... இளவரசு என் மனசை ரொம்பத்  தொந்தரவுப் பண்ராண்டி..."

இருவரும் நடந்தார்கள்.

"ஏய்... என்னடி சொல்றே? உன்னோட தகுதி என்ன... உங்கப்பா ஏத்துக்குவாரா..."

" மொதல்லே இளவரசு என்னை ஏத்துக்கணும்... அவன்கிட்டை என் காதலை சொல்லனும்டி.... எப்படினு தெரியலே..."

" சரிடி சும்மா இரு... நானே  அவன்கிட்டே உன் காதலை சொல்றேண்டி... அவன்  சம்மதிக்கலைனா, நீ அவனை மறந்துறனும் என்ன?"

"எனக்கு நம்பிக்கை இருக்கு தேன்"

 ( தொடரும்)

( அப்படியென்ன நம்பிக்கை , இளவரசுவின்மீது கயல்விழிக்கு?)










----------------------------------------------------

 9-  பிறந்தநாள் வாழ்த்து!

----------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------------

முன்கதை : 
கயல்விழியின் காதலை இளவரசுவிடம் தான் தெரிவிப்பதாக தேன்மொழி கூறினாள்... 
------------------------------------------------------------------------------------------------
நள்ளிரவு -  பன்னிரண்டை முள் முத்தமிட்டபோது, கயல்விழி தேன்மொழிக்கு அலைபேசியில்- " தேன்... பிறந்த நாள் வாழ்த்துகள் ' என்றாள்.

"தேங்க்ஸ் டி... நா மறந்தாலும் என் பிறந்தநாளை நீ மறக்கமாட்டியே"-  என்றாள் தூக்கக் கலக்கத்தினூடே!

"  தூக்கம் கெடுத்துட்டேனா?"

"இல்லைடி... உன் போனுக்காகத்தா காத்திருந்தேன்... அப்படியே அசந்துட்டேன்..."

"சரி;  என்ன பரிசு வேணும்"

" எதுக்குடி?... ஒன்னும் வேணாம்"

" நாளைக்கு நீ, கிளம்பறதுக்குள்ளே, நா உன்வீட்டுக்கு வந்துருவேன்... சரியா?"

" நாளைக்கு நான் லீவ் போட்ருக்கேண்டி... நீ மெதுவா வா... அவசரமில்லை"

" நாளைக்கு எங்கே போலாம் சொல்லு"

"கயல், நாளைக்கு நீ வீட்டுக்கு வா... முடிவு செஞ்சுக்கலாம் " என்றாள் தேன்மொழி!

மறுநாள்  தேன்மொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற, கயல்விழிக்கு ஓர் இன்பம் காத்திருந்தது, தேன்மொழியின் வீட்டில்!  

(தொடரும்)

அது என்ன இன்பம்?





--------------------------------------------------------------------------

 10-  மலை ஏறும் பயிற்சிக்குப் பரிசு 

-------------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------------

முன்கதை : 
பிறந்தநாள் பரிசாக, என்ன வேண்டுமென்று  தேன்மொழியிடம்  கயல்விழி கேட்டிருந்தாள்... 
------------------------------------------------------------------------------------------------
காரிலிருந்து இறங்கி, தேன்மொழியின் வீட்டைப் பார்த்தாள். வாசல்கதவுத் திறந்தே இருந்தது.

வெளியே நின்று எட்டிப் பார்த்த கயல்விழி பிரமைப் பிடித்தவள் போல், இன்பஅதிர்ச்சியோடு நின்று விட்டாள்!

உள்ளே இளவரசு உட்கார்ந்திருந்தான்... எதிர்பாராத நிகழ்வுப் போல் அவனைப் பார்த்து இன்பத்தில் உறைந்து நின்றாள்... 

உள்ளிருந்து வந்த, தேன்மொழியின் அம்மா, வாசலில் நிற்கும் கயல்விழியைப் பார்த்து, "கயல்விழி, வாம்மா... " என்று அழைத்தப் போது -

இளவரசுவும் கயல்விழியைப் பார்த்து, " ஹாய்" சொன்னான்.

கயல்விழி இன்னும் இன்பத்தின் பிடியிலிருந்து மீளாமல், ஒரு பதுமையப் போல் நடந்துச் சென்று, இளவரசுவிடம் "நீங்க..." என்று தடுமாறினாள்.

"உங்களை நான் எதிர்பார்கலை..." என்றாள்.

"ஏண்டி,என் பர்த்டேக்கு உன்னைமட்டுந்தா இன்விட் பண்ணனுமா?" - என்று கேட்டுக்கொண்டே உள்ளிருந்து தேன்மொழி வந்தாள்.     
அருகில் வந்த தேன்மொழியை ஆரத்தழுவி, "பிறந்தநாள் வாழ்துகள்" என்று சொல்லி, கயல்விழி, தான் கொண்டு வந்திருந்தப் பரிசை தேன்மொழியிடம் கொடுத்தாள்...

பிரித்துப் பார்த்த தேன்மொழி நன்றி சொன்னாள்...
இளவரசுவோ  அந்தப் பரிசுப் பொருளை  வித்தியாசமாகப் பார்த்தான்...

"சார்... தேன்மொழிக்கு மலை ஏறும் பயிற்சினா - ட்ரெக்கிங்னா -  ரொம்ப ஆர்வம்... ஆறு மாதத்துக்கு ஒருதடவை ட்ரெக்கிங் போயிருவா... ஆனா, அதுக்கான சரியான உபகரணம் தேன்மொழிகிட்டே இல்லை... பிறந்தநாள் பரிசா, என்ன கொடுக்கலாம்னு யோசிச்சேன்.. ட்ரெக்கிங் ஞாபகம் வந்திச்சு... வாங்கிட்டு வந்துட்டேன்..."

" நன்றி கயல்"

" ஓ... நீங்க ட்ரெக்கிங் எல்லாம் போவீங்களா" என்று இளவரசு கேட்டான்...

" அடுத்த மாதம் போறேன்... நல்லப்  பரிசு கொடுத்திருக்கே.. நன்றி கயல் " என்று மீண்டும் மகிழ்ச்சிப் பொங்கிடச்  சொன்னாள்  தேன்மொழி!  

கயல்விழி தேன்மொழியைப் பார்த்து, புருவத்தை உயர்த்தினாள், இளவரசு கவனிக்காத வண்ணம்.

அந்தப் புருவத்தின் பேச்சில், தன் காதலை இளவரசுவிடம் சொன்னாயா என்ற கெஞ்சல் தொக்கி நின்றது.

தேன்மொழியும் புருவத்தைக் குவித்து சாடைக் காட்டினாள்...

அந்தச் சாடையில், "பொறு" என்ற மொழி பொதிந்திருந்தது...

கயல்விழி இளவரசுவை ஏக்கத்தோடுப் பார்த்தாள்... 

(தொடரும்)
  
(கய்ல்விழியின் காதலை இளவரசுவிடம்  தேன்மொழி  சொன்னாள்... இளவரசு என்ன சொன்னான்?)  





----------------------------------------------------------------------

 11-   கன்னத்தில் முத்தமிட்டாள்...

----------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-------------------------------------------------------------------------------------------

முன்கதை : 
மலையேறப்  பயன்படுத்தும் உபகரணங்களை, கயல்விழி தேன்மொழிக்கு,பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தாள்... 
-------------------------------------------------------------------------------------------
"தம்பி, தேன்மொழியோட அப்பா இறந்ததிலிருந்து, தேன்மொழி பிறந்தநாள் கொண்டாடறத நிறுத்திட்டா ...  என்னமோ இந்த வருடம்... அதிசயமா கொண்டாடறா.. " என்று அம்மா இளவரசுவை நோக்கி சொல்லிக்கொண்டே, எல்லாருக்குமாய் பருகிடப் பழச்சாறு  கொண்டு வந்து கொடுக்க,

குறுக்கிட்ட தேன்மொழி, " நான் கொண்டாடறதை நிறுத்திட்டேன்... ஆனாலும், இதோ இவா  வந்துருவா..., எங்கேயாவது இழுத்துட்டு போய் என்னை திக்குமுக்காட வெச்சுருவா" என்றாள்.

இளவரசு கயல்விழியை நோக்கி விழியைத் திருப்பினான்.

அவன் பார்த்தப் பார்வை -
அவளுள் காந்தவிசையை ஏவிவிட்டதுப் போல் இன்ப அதிர்வலையில்  கயல்விழியின் நெஞ்சுத் துடித்தது!...

தேன்மொழி அம்மாவைப் பார்த்து, "அம்மா, எல்லாம் வாங்கிட்டு வந்துட்டியாம்மா" என்று கேட்டாள்.

"தம்பி, பேசிட்டு இருங்க! கடைக்கு போயிட்டு வந்துடறேன் " என்று சொல்லிவிட்டு அம்மா வெளியே போனாள்.

சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது!

கயல்விழி நெஞ்சில், திக் திக்...

பரிதாபமாக தேன்மொழியைப் பார்த்தாள்!

தேன்மொழி அந்த அமைதியின் ஓட்டத்தோடு  கரைவது போல்,  மெல்லியக் குரலில் பேசலானாள்.

" இளவரசு"

இளவரசு தேன்மொழியைப் பார்த்தான். பிறகு, " வேற யாரையும் அழைக்கலியா  தேன்" - என்று   கேட்டான்.

" இல்லை இளவரசு!...  இன்னைக்கு உங்களை நா வரச்சொன்னது, என்னோட பிறந்தநாள் மட்டும் இல்லை"

இளவரசு என்னவென்பதுபோல் பார்த்தான்.

தேன்மொழி, "இளவரசு, கயல்விழியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று பட்டெனக்  கேட்டாள்.

"நா... எனக்கு புரியல"

" இவ கயல்விழி... உங்களுக்கு தெரியும்தானே..."

"தெரியும்... நீங்க ரெண்டு பேரும் நெருங்கிய தோழிகள்ன்றதா நீங்களே சொல்லியிருக்கீங்க"

" ஓகே... இப்ப இவளுக்கு ஒரு பிரச்னை" என்று சொல்லி நிறுத்த, கயல்விழி மருண்டாள்!...

"என்ன கயல்!... உங்களுக்குப்  பிரச்னையா? பாத்தா தெரியலியே... "

டேய் காதலா, நீதாண்டா எனக்கு பிரச்னை என்று மனதில் சொல்லிக்கொண்டே தலையைக் கவிழ்ந்தாள்.

"என்ன கயல், பேசாமே குனிஞ்சிட்டீங்க... தலை வலிக்குதுங்களா?" -என்று  கனிவோடு இளவரசு கேட்டான்.

இல்லையென தலையாட்டிவிட்டு எழுந்தாள்.

"ஏண்டி எழுந்துரிச்சிட்டே" என்று தேன்மொழி கேட்க, 

"தாகமாகுதுடி  தண்ணி குடிச்சிட்டு வரேன்" என்று சொல்லி கயல்விழி நழுவமுற்பட -
"உட்காருடி" என்று கயலின் கையைப் பிடித்து இழுத்து அமரச்  செய்தாள்.

" உங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனை" என்று இளவரசு கேட்டான்.

"சார். நானே சொல்லிடறேன்.. "- என்று சொல்லிவிட்டு தயக்கத்தோடு  தேன்மொழியைப் பார்த்தவள், மீண்டும்  தலைக் கவிழ்ந்து கொண்டாள்...

கயல்விழி தலைக்  கவிழ்ந்த நிலையில் இருக்க-

"ஏன்னடி! கயல்,  சொல்லவேண்டியதுதானே... வெட்கமா?" என்று தேன்மொழி கேட்டாள்.

மீண்டும்  தேன்மொழி, "இளவரசு, கயல்விழி உங்களை விரும்பறா...  உங்ககிட்ட சொல்ல பயப்படற "- என்று சொல்லிவிட்டு, ஏடாகூடமாக சொல்லிவிட்டோமோ... இளவரசு  தப்பாக நினைப்பாரோ  என்று மனதுள் லேசான மிரட்சி அடைந்தாள்.

இளவரசு ஒன்றும் பேசாமல் கயலைப் பார்த்தான்.

கயலோ இன்னும் குனிந்த நிலையிலேயே அமர்ந்திருந்தாள்...

" இளவரசு, தப்பா நினைக்காதீங்க!... பிடிச்சா சொல்லுங்க... இல்லைனா நட்பாவே இருந்துக்கலாம் " என்றாள் தேன்மொழி!

" இந்த அழகு தேவதையைப்  பிடிக்கலைனு யாரவது சொல்வாங்களா?... எனக்கும் இவங்களை பாத்ததிலிருந்து..."- என்று இளவரசு பேசி முடிப்பதற்குள்-

திடுமென நிமிர்ந்து, " அடப்பாவி, மனசுக்குள்ளே என்னை  நினைச்சுட்டு, ஊமைமாதிரி இருந்திருக்கியா... ஐ லவ் யூடா  " என்று சொல்லிக்கொண்டே தாவி, இளவரசுவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

  (தொடரும்)
  
(காதல் கூடியது? பின் இருவரும் ஏன் குரங்கணி காட்டுக்கு போகிறார்கள் தற்கொலைச் செய்ய )










-----------------------------------

 12- உடுமலை சங்கர்    

-----------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-------------------------------------------------------------------------------------------------

முன்கதை : 
இளவரசு தன்மீது காதல் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த மாத்திரத்தில், அருகில் சிநேகிதி இருக்கிறாள் என்பதையும் மறந்து, மகிழ்ச்சி மேலூக்கத்தில் தன்னை மறந்து இளவரசுவின் கன்னத்தில் கயல்விழி முத்தமிட்டாள்...  
---------------------------------------------------------------------------------------------------
காதல் வளர்ந்தது!

சாதீயம் தடுக்கும் என்றபோதிலும் அவர்களால் காதலை ப் பிரிக்க இயலவில்லை...

காதலித்துக்கொண்டே இருந்தார்கள்...

ஒரு கட்டத்தில், உடுமலை சங்கரைக் கொன்றது போல், இளவரசுவைக் கொன்றிட, கயலின் தந்தை செய்த சதி தெரியவரவே, வீட்டைவிட்டு வெளியேறினாள் கயல்விழி!

நள்ளிரவைத் தாண்டி, அதிகாலையின்  வடகோவை மேம்பாலத்தின் மீது காரில் இளவரசுவும், கயல்விழியும் இருவருமே தற்கொலை செய்திட முடிவெடுத்தனர்...

இவர்களை சேர்த்து வைத்த தேன்மொழியின் நினைவுகள் இருவரிடமும் இழையோடிற்று!... 

இவர்களின் காதலின் பாலமாய் இருந்தவள் தேன்மொழி!   
இருவரின் காதலையும் சேர்த்துவைத்த தேன்மொழி , மார்ச் மாதம் மலையேற்றப் பயிற்சிக்கு குரங்கணி சென்றிருந்தாள்...

குரங்கணி தீவிபத்தில் சிக்கி தேன்மொழி உயிரிழந்து விட்டாள்.

காதலுக்கு உறுதுணையாய் இருந்த தேன்மொழி, குரங்கணித்தீயில் சிக்கி இறந்து விட்டதால், அவளால் இணைந்த கயல்விழியும், இளவரசுவும் அதே குரங்கணி சென்று அவள் நினைவை சுமந்து, அவள் இறந்த இடத்திலேயே தற்கொலைசெய்திட விரும்பினர்...

வடகோவை மேம்பாலத்தின் வட்டப்பாதையில் வளைந்து, காந்திபுரம் வழியாகத்  திரும்பிய மகிழுந்து, திருச்சிசாலைக்கு வந்து குரங்கணி நோக்கி விரைந்தது.

இளஞ்சிட்டுகள் சாகப்போகின்றன!
  

(குரங்கணியில் இருவரும் மரணத்துயில் கொண்டார்களா?)







---------------------------------

 13-  செவ்வந்தி    

---------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------

முன்கதை : 
காதலுக்கு உதவிய தேன்மொழி குரங்கணி தீவிபத்தில் இறந்துவிடுகிறாள். கயல் - இளவரசுவின் காதலுக்கு கயலின் தந்தைக் கொடூர முடிவு எடுப்பதை அறிந்து , தேன்மொழி உயிர்விட்ட  குரங்கணிக்கே சென்று தற்கொலை செய்திடப்  புறப்பட்டனர் கயலும், இளவரசும்.
---------------------------------------------------------------------------------------------------
ஒரு ஆவணப்படம் - குரங்கணி வாழ் மக்களின் நிலைப்பற்றி எடுத்திட அறிவழகன் எண்ணினான்.

குரங்கணி விபத்தில் இறந்தோரை, தீக்காயமுற்றோரை தொட்டில் கட்டி, பலகாததூரம் தூக்கிவந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தான் அறிவழகன்.

ஒரு விபத்துக் காலத்தில் கூட, சாலைவசதியற்ற அங்கு-
அங்கு வாழ் மக்களின் அன்றாட வாழ்வும். நோயும் - மரணமும் - குழந்தைப்  பிறத்தலும்  - போன்றவற்றை அவர்கள் எப்படி  சமாளிக்கிறார்கள் என்பதை நேரில் கண்டு ஓர் ஆவணப்படம் எடுக்க போடிநாயக்கனுர் வந்திருந்தான் அறிவழகன்.

குரங்கணி மலை அறிந்த ஒருவர் இருந்தால் நன்றாகயிருக்கும் என்பதால், முகநூல் நண்பன் செம்மதியைத்  தொடர்பு கொண்டான் ஆறிவழகன்.

தேனி போடிநாயக்கனூரிலிருந்து எட்டு கல் தூரத்தில் இருக்கும்  முந்தல் எனும் ஊரில் செம்மதி வசிக்கிறான்.

செம்மதிக்கு போடிநாயகனுர் நகராட்சி அலுவலுகத்திற்கு அருகே தனியார் நிறுவனத்தில் வேலை...

அறிவழகன் வருவதாகக் கூறியிருந்ததால் முந்தலில் - வீட்டில் - காத்திருந்தான் செம்மதி!

அறிவழகன் வெள்ளை சதுர உந்தில் வந்து சேர்ந்தான்.

மலைச்சாரலில் பிறந்து தவழ்ந்த மகிழ்வை நுகர்ந்தவண்ணம் அன்றிரவு முந்தலில் செம்மதியின் வீட்டில் தங்கினான் அறிவழகன்.

விடிகாலை-
அறிவழகனையும், செம்மதியையும் சுமந்து அந்த வெள்ளை நிற உந்து மலைவகிடில் சென்றுகொண்டிருந்தபொழுது எதிரில் விறகு சுமையோடு இளம்பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்..

"அறிவு, விறகு சுமந்துட்டு வாரங்களே ஒரு பொண்ணு. அவங்க உள்ளூர்தான்... அவங்க கிட்ட நிறுத்துங்க" என்றான் செம்மதி!

விறகு சுமந்து நடந்து வந்துக் கொண்டிருந்த  இளம் பெண்ணின் அருகே வெள்ளையுந்து நின்றது.

தாவணி கட்டி, மலையின் அழகில் ஓவியமாய் தெரிந்தாள்.

" உண்மையாவே - மலைப் பெண்கள் கிட்ட இயற்கையான அழகிருக்குது செம்மதி!... பாருங்க என்ன அழகு...  எந்த ஒப்பனையும் இல்லாம இது எப்படி சாத்தியம்..." என்று கேட்டான் அறிவழகன்.

" நா இதே ஊருன்றதாலே எனக்கு தெரியிலே... இருந்தாலும் அந்த பொண்ணு அழகுதான்" என்றான் செம்மதி!

"செம்மதி அந்த பொண்ணுகிட்ட பேச்சு குடுங்க... நா கேமரா ஆன் பண்றேன்..." என்றான் அறிவழகன்.  

மலைநாட்டு தேவதை போலிருந்தாள் விறகுக்காரி காமிராவின் 
கண்களுக்கு!

வண்டியிலிருந்து இறங்கிய செம்மதி, "தங்கச்சி, சார் சென்னையிலிருந்து வராரு... " என்று தயக்கத்தோடு பேசினான் செம்மதி!

" குரங்கணி போக வழி தேடரியிலாக்கும்... அங்கிட்டு போவாதீங்க அண்ணே... கொட்டக்குடி பாரஸ்ட் காரனுக இருக்கறத எல்லாம் புடிங்கிக்குவானுக... "


"தங்கச்சி அந்த ஒத்த மரம்"

"ஒத்த மரம்தானே ... வாங்க நா கூப்பிட்டிட்டு போறேன்" -என்றாள் விறகுக்காரி!

திரும்பவும் "எதுக்குன்னே அங்கே போறியா" என்று கேட்டாள்.

" ஒரு படம் எடுக்கனும்... "

"போச்சுடா... படம் எடுக்க வந்திருக்கீங்கனு தெரிஞ்சாலே காக்கிசட்டைக்காரனுவளுக்கு உள்ளங்கை அரிச்சிரும்... பாவிக... எத்தனை உயிர்களை கொலைப் பண்ணிட்டானுவ... ஒன்னுந்தெரியாத அப்பாவிப் பொண்ணுக! நெனைச்சாலே அழுவையா வருதண்ணே  " என்று அங்கலாய்த்தாள்.

அறிவழகனுக்கு ஏதோ உணர்வு தட்டியது...

ஒத்த மரம் என்றவுடன் விறகுக்காரி கொலை என்று  சொல்லுகிறாள் ... மேலும் குரங்கணி ஒத்தை மரத்தின் தீவிபத்தைப் பேச ஆர்வமும் அவளிடத்தில் மிளிர்வதை அறிவழகன் விரும்பினான்... ஆர்வம் என்பதைவிட ஒரு கொந்தளிப்பு அவளிடத்தில் இருப்பதை உணர்ந்தான் 

அறிவழகன் காமிராவோடு இறங்கி "ஹாய்" என்றான்.

"என் பேரு செவ்வந்தி... செவ்வந்தினே கூப்பிடுங்க " என்றாள் செவ்வந்தி!

'அண்ணே நீங்க எதுக்கு வந்திருக்கீங்கனு  எனக்கு சரியா தெரியலே... ஆனா, எங்க மனசிலே ஓராயிரம் இருக்கு... அத்தனையும் யாருகிட்ட சொல்றதுன்னு மனசோட புலம்பிட்டு இருக்கோம்..." என்றாள் செவ்வந்தி!

"சென்னையிலிருந்து வந்திருக்கீக... ஒத்தமரத்தை அப்புறம் பாக்கலாம்... வீட்டுக்கு வாங்க... கஞ்சித்தண்ணி குடிச்சிட்டு, அப்பறம்  எங்க மாரியப்பன் இருக்காரு... அவரையும் கூட்டிகிட்டு ஒத்தமரம் போலாம்"  என்றாள்.

"மாரியப்பனா"

விறகு சுமையை ஓரமாக கிடத்திவிட்டு, "வாங்கண்ணே போலாம்" என்று அழைத்தாள் செவ்வந்தி!

"விறகு? என்று கேட்ட செம்மதியிடம், "இத யாருண்ணே  எடுக்க போறாக... அப்புறமா வந்து எடுத்துக்கிறேன்... டீ கடையிலே கொடுத்த காசு தருவாங்க... எங்க பொழைப்பு இதுதாண்ணே..." என்ற செவ்வந்தியின் கள்ளமற்ற பேச்சு  அறிவழகனை வியப்பில் ஆழ்த்தியது.

மூவரையும் சுமந்து பெண்களின் முந்தானைப் போல் அழகைக் கொட்டியக்  கொட்டக்குடிசாலையில் வெள்ளை உந்து ஊர்ந்தது...

காமிரா, மலையழகில் முயங்கி, தொட்டுச்செல்லும் மேகங்களை படம்பிடித்துக்கொண்டிருந்தது...

கொட்டக்குடி ஆற்றின் வெள்ளந்தியான பயணத்தை இரசித்துக்கொண்டே அடர்ந்த மரக்கிளைகளினூடே காமிராவின் பார்வைத் துள்ளி  குதித்தது...



(செவ்வந்திச் சொன்ன மாரியப்பன் யார்? ஏன் அவனிடம் அழைத்துச் செல்கிறாள்) 











----------------------------------------------------------

 14 -  குரங்கணி  தீ  மூட்டியது யார்?   

----------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------

முன்கதை : 
குரங்கணி மக்கள் வாழ்க்கைக் குறித்து ஆவணப்படம் எடுக்க சென்னையிலிருந்து அறிவழகன் வந்திருந்தான். அவனுக்கு உதவியாக முந்தலில் உள்ள முகநூல்  நண்பன் செம்மதி  சேர்ந்துக் கொண்டான். வழியில், செவ்வந்தியைச் சந்திக்கிறார்கள். செவ்வந்தி மாரியப்பனிடம் அழைத்துச்செல்கிறாள்.   
---------------------------------------------------------------------------------------------------
செங்குத்தானப் பாறையின்  இடுக்குகளை ஒட்டி ஒற்றையடி பாதைகள் வளைந்து வளைந்து சென்றன.

சரிவான  பாதைகளில் இறங்கும் போது மலையின் பள்ளத்தாக்கு பயம்காட்டியது.

வெண்ணிற மேகங்கள் அடர்ந்த கிளைகளினூடே உரசிச் சென்று, வானவீதியில் தவழும் அழகை இருக்கைகளிலில் அள்ளி நிரப்பிக் கொள்ள அறிவழகன் விரும்பினான்.

படக்கருவியில் கண்கொள்ளா காட்சிகளைப்  படம்பிடித்துக் கொண்டிருக்கும்போதே பறவைகள் இறக்கை விரித்து, பறந்து படக்கருவிக்கு விருந்தளித்தன!...
கொஞ்சம் கவனம் சிதறினாலும் பள்ளத்தில் உருண்டு விழுந்து சாக வேண்டியதுதான்!...

மாரியப்பன் முறுக்கு மீசையோடு ஆறடிக்கும் அதிகமான  உயரத்தில் பரந்த தோள்வலிமையோடு இருந்தான். 

தேக்குமரத்தில் வேய்ந்த தோள்கள் போல் உறுதியாகத் திகழ்ந்தான..

மிக லாவகமாகப் பாறைகளைத் தாண்டி சென்றான்.

அவனுக்கு இணையாக செவ்வந்தியும் மேடுபள்ளத்தில் சளைக்காமல் தாவி நடந்தாள்.

ஒவ்வொரு கனமும், அறிவழகனுக்கும், செம்மதிக்கும் உயிர்ப் போய் வந்தது போல்  உணர்ந்தார்கள்...

மலையின் அழகு கண்னுக்குக்  குளிர்ச்சியாக இருந்தாலும். மலையின்  ஈரக்காற்று மனதை இன்பத்தில் ஆழ்த்தினாலும், மாரியப்பனின் வேகத்தோடு பயணிப்பதால்  நெஞ்சில் திக் திக் என்ற அதிர்வலைகள் தோன்றுவதை உணர்ந்து, அஞ்சிக்கொண்டே நடந்தார்கள் அறிவழகனும், செம்மதியும்!

" மாரியப்பண் கொஞ்சம் மெதுவா நடங்க... நாங்க படம்பிடிக்கவும் செய்யனும்...  உங்க ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியல" - என்றான் அறிவழகன்.

"பயப்படாதீங்க... என் உசுரைக் கொடுத்து உங்களைக்  காப்பாத்துவேன்.." என்றான் மாரியப்பன்.

" எங்ககூட - எங்களை நம்பி வந்தவங்க, அன்னைக்கு யாருமே சாகலே... நெருப்புப்  பிடிச்சா  எந்த திசையிலே, எந்த திசைக்கு பரவும்னு தெரிஞ்சுட்டு நாங்க தப்பிச்சிருவோம்... நாங்க மட்டுமில்லே, மிருகங்களுக்கும் நம்மளவிட அறிவு அதிகமண்ணே!... ஒரு மிருகம் கூட நெருப்பிலே சிக்காது ' என்றாள் செவ்வந்தி!

அறிவழகனுக்கு வியப்பாக இருந்தது...

அவர்கள் பேசுவதையெல்லாம் படம் பிடித்துக்கொண்டே உடன்சென்றான்...

" இத பாருங்க தோழர்" என்று நீண்ட புற்களைக் காட்டினான்.

மாரியப்பன் அறிவழகனையும், செம்மதியையும் தோழர் என்றே அழைத்தான்.

" இந்தப் புல்லை முகர்ந்து பாருங்க"

முகர்ந்தார்கள். 

ஒருவித நெடியை உணர்ந்தார்கள்.

"இதை நாங்க தைலப்புல் னு சொல்வோம்... உண்மையிலே சளி, காய்ச்சலுக்கு இந்த புல்லின்  சாறு பிழிஞ்சு தடவினா குணமாயிரும்... " என்றான் மாரியப்பன்.

"அண்ணே  தைலப்புல்னு சாதாரணமா நினைச்சிறாதீங்க... மலைமாதிரி உடம்பு வலி எடுத்தாலும், இந்த தைலப்புல்லை தேய்ச்சு குளிச்சம்னா வலி இருந்த இடம் தெரியாது..." என்றாள் செவ்வந்தி!

" காஞ்சபுல்லை எடுத்து உரசிப் பாருங்க" என்றான் மாரியப்பன்.

செம்மதி, காய்ந்த தைலப்புல்லின் கற்றைகளை எடுத்தது இருகைகைளால் தேய்த்தான்...

புல் சூடேறி, மெதுவாக எரியத் தொடங்கியது.

செம்மதி பயந்து தூக்கி வீசிவிட்டான்.

"அப்போ, இந்த புல் உரசலில்தான் அன்றைக்கு குரங்கணியில் நெருப்பு பிடிச்சதா? - என்று கேட்ட செம்மதியை உற்றுப் பார்த்து உதடுகளில் வெறுமையையான புன்னகையைப்  படரவிட்டான்...

"தோழர் அன்றைக்கு குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தற்செயலானதுனு நினைக்கிறீங்களா? - என்று மாரியப்பன் கேட்டான்.

" பெரும்பாலான ஊடகங்கள் அப்படித்தானே சொன்னாங்க... அடிக்கடி இந்த மாதிரி தீப்பரவல் இருக்குமாமே" என்று கேட்டான் அறிவழகன்.

"தோழர்,   தீப்பரவல் இருக்கும்... ஆனா: அது குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிரும்... இதோ, காய்ந்த தைலப்புல்லில் இருந்து ஒருவித எண்ணெய்க் கசியும்... உரசல் அல்லது வெப்பத்தால் தைலம் தீயாக மாறும்.. அந்தத் தீயின் எல்லை சுமார் அய்நூறு அடிக்குள் மட்டுமே இருக்கும். இடையில் பாறைகள் குறிக்கிட்டாலோ, ஒத்தையடி பாதை பிரிச்சாலோ நெருப்பு அதைத்தாண்டாது... கருகிரும்..."

"கொடூரமா காட்டுத்தீயின் நாக்குகள் பாத்தேனே ஊடகங்களில்"

:உண்மைதான்! அந்தத் தீயின் நாக்குகள், ஏகாதிபத்தியத்தின் நாக்குகள்!... நெருப்பு மழையைப் பொழிச் செய்து, இழுத்துவிடப்பட்ட நாக்குகள்!" - என்றான் மாரியப்பன்.

அறிவழகனும், செம்மதியும் அதிர்ச்சியுற்றார்கள்.

கழுகொன்று கொட்டக்குடி ஆற்றில் முங்கி மீன் ஒன்றைக் கவ்விப் பறந்தது. 

மாரியப்பன் அதை அறிவழகனுக்குக் காட்டினான்.



(குரங்கணியின் நெருப்புக்கு மர்மம் என்ன?) 










------------------------------------------------------------------------------------------------------------------------------

 15 - கருஞ்சிறுத்தையின் பாய்ச்சல்    

------------------------------------------------------------------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------

முன்கதை : 
குரங்கணியில் எரிந்த நெருப்பு தற்செயலானது அல்லவென்றுக் கூறிய மாரியப்பன் கொட்டக்குடி ஆறினைக் காட்டினான். ஆற்றில் கழுகொன்று மீன் கொத்திக் கொண்டு  மேலெழும் காட்சித்தெரிந்தது...   
---------------------------------------------------------------------------------------------------
"கொடூரமா காட்டுத்தீயின் நாக்குகள் பாத்தேனே ஊடகங்களில்" - என்றான்  அறிவழகன்.

"உண்மைதான்! அந்தத் தீயின் நாக்குகள், ஏகாதிபத்தியத்தின் நாக்குகள்!... நெருப்பு மழையைப் பொழியச் செய்து, இழுத்துவிடப்பட்ட நாக்குகள்!" - என்றான் மாரியப்பன்.

மாரியப்பனின் பேச்சில் கோபம் தெறித்தது....

கண்கள் கனலாக சிவந்தன...

ஒரு பாறையின் உச்சியில் நின்று அறிவழகனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்த மாரியப்பன், அறிவழகனின் பின்புறத்தே அழகிய புன்சிரிப்போடு குழந்தையைப்போல தவழ்ந்துச் செல்லும் கொட்டக்குடி ஆற்றினை  எதேச்சையாகப் பார்த்தான்.

அங்கே அவன் கண்டக் காட்சியை அறிவழகனுக்குக் காட்டினான்.

அறிவழகனுக்கு ஒரு ஓவியத்தை தனது உள்ளங்ககையில் சிறைப்பிடித்து விட்ட மகிழ்ச்சியோடு குதூகலித்தான்...

ஆற்றினை நோக்கி காமிராவைத் திருப்பினான்...

ஆகாயத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் கழுகுக் கூட்டத்திலிருந்து ஒவ்வொரு கழுகாக கொட்டக்குடியை நோக்கி பறந்து வந்தன...

வந்த வேகத்தில் ஒரு மீனைக்கவ்வி மீண்டும் மேலே பறக்கத் தொடங்கியது...

அந்த அதியற்புதமானக்  காட்சியை , அறிவழகன் படக்கருவியில் படம் பிடித்துக்கொண்டிருந்தான்...

ஒரு கழுகு வருவதும், அடுத்து இன்னொரு கழுகு வந்து மீன் பிடித்துப் பறப்பதும், ஒரு கட்டுப்பாடுமிக்க படையணியின் ஒழுங்கமைந்தப் பணிபோல்  பிரமித்து படம் பிடித்தான் அறிவழகன்.

படம் பிடித்துக்கொண்டே பாறையின் விளிம்பிற்கு சென்றுவிட்டான் அறிவழகன் தன்னைமறந்து!

மாரியப்பன் தன் மூக்கினை  மெல்ல நுகர்வது போல் அசைத்து, செவ்வந்தியைப் பார்த்தான்.

செவ்வந்தியும் முகர்ந்து, உடனே தன்னை திடநிலைக்கு உட்படுத்தி, சரேலென அறிவழகன் மீது பாய்ந்து தன்பக்கமாக இழுத்தாள்...

செவ்வந்தி இழுத்ததில் நிலைக்குலைந்த அறிவழகன் செவ்வந்தியோடு சேர்ந்து பள்ளத்தில் உருண்டான்...

இருவரும்  ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்த நிலையில், பள்ளத்தின் சரிவில் உருண்டார்கள்...

அறிவழகனை   செவ்வந்தி  இழுத்த கண்ணிமை நேரத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று அறிவழகன் நின்றிருந்த இடம்நோக்கி தாவிப்  பாய்ந்தது...

தாவிப் பாய்ந்து வந்து கருஞ்சிறுத்தை எதிர் பள்ளத்தாக்கில் விழுந்தது... 

இரைத் தப்பி விட்ட கோபத்திலும், இரை கிட்டாத எரிச்சலிலும் உறுமிய கருஞ்சிறுத்தை பள்ளத்தில் இருந்து பாறையின் உச்சியின் பக்கம்  முறைத்து நின்றது...

இங்கே பள்ளத்தாக்கில் அறிவழகனோடு உருண்டுக் கொண்டிருந்த செவ்வந்தி தன் வலக்காலால் மரத்தின் கிளை ஒன்றினை பற்றினாள்... 

மாரியப்பன் இரண்டே தாவலில் பாய்ந்து  மரத்தில்  தொங்கிக் கொண்டிருந்த செவ்வந்தியையும், அறிவழகனையும் மரத்திலிருந்து இறக்கிக்  காப்பாற்றினான்...

அவர்கள் நின்றிருந்த இடமோ கடும் சரிவான பள்ளத்தாக்கு!

செம்மதியை அங்கேயே நிற்கச்சொல்லி சைகை செய்த மாரியப்பன் மீண்டும் தாவி செம்மதி நின்றிருந்த இடம் வந்து சேர்ந்தான்...

அறிவழகனை தனது தாவணியோடு  கட்டி, மரங்களுக்கிடையே தாவி மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேர்ந்தாள்...

அதுவரைக்கும் அறிவழகனால் எதுவும் ஊகிக்க முடியவில்லை...

செம்மதி அறிவழகனுக்கு விளக்கியப்  பிறகே நடந்ததை உணர்ந்தான்...

"மிருகங்களின் நடமாட்டத்தை எங்களால் உணர முடியும்...  அது இருக்க கூடிய தூரத்தின் அளவும் எங்களால் சொல்லமுடியும் " என்றான் மாரியப்பன்.

அறிவழகன் செவ்வந்தியை நன்றிப் பெருக்கோடு  பார்த்தான்...

செவ்வந்தியும் பார்த்தாள்...

அந்த பார்வையில் ஏதோ தேடுதலை இருவரின் இதயங்களும் உணர்ந்தன...

" மலையில் அழகிய வாழ்க்கை - அமைதியான சூழல் - சுத்தமானக் காற்று  என்றுதான் நான் கற்பனையில் கலந்திருந்தேன்... இங்கு வாழ் மக்கள் ஆபத்தான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டியவர்களா இருக்காங்கனு நினைக்கும்போது மனசு திகிலாவும் இருக்கு" என்றான் அறிவழகன்.

செவ்வந்தி மீது  மீண்டும் நன்றிக் கலந்தப் பார்வையைப் பொழிந்தான்...

கொஞ்சநேரம் பாறைமீது அனைவரையும் அமரச்சொன்னான் மாரியப்பன்.

" உண்மையில் மிருகங்கள்தான் மனிதர்களைக் கண்டு பயப்படும்... தற்காப்புக்காகத்  தான் நம்மை தாக்கும் " என்றாள் செவ்வந்தி!

"மாரியப்பன், காட்டில் தீ தானாக பரவலைனு சொன்னீங்க... நெருப்பு எப்படி பிடிச்சதுனு  சொல்லுங்க"  என்று கேட்டான் அறிவழகன்!

"உயிர்தப்பிச்சு - அந்த படபடப்பும் இன்னும் உங்களுக்கு அடங்கல... ஆனா, நீங்க உங்க செயலில் அக்கறையா இருக்கறதை நினைக்க, எனக்குப்  பெருமையா இருக்கு தோழர்" -என்றான் மாரியப்பன்.

செவ்வந்தி, சில கனிகளைப் பறித்து வந்து, எல்லாருக்கும் கொடுத்தாள்.

கனியை செவ்வந்தியிடம் இருந்து பெற்ற போது செவ்வந்தியின் விரல்களின் உரசலில் மின்னல் போல் ஒன்று தாக்கி அறிவழகனின் இதயத்தில் நுழைந்தது...  

அறிவழகன் தன்னை மறந்து செவ்வந்தியின் வல கரத்தைப் பற்றினான்... 

செவ்வந்தி ஏதும் சொல்லாமல், அவனிடமிருந்து கரத்தை இதமாய் விடுவித்து விட்டு, "மாரியப்பண்ணே," என்று விளித்து மாரியப்பனைப் பார்த்தாள்..  
       


(மாரியப்பனை ஏன் விளித்தாள் செவ்வந்தி)   












---------------------------------------------------

 16 -   மரணவண்டுகள் ...  

---------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------

முன்கதை : 
கருஞ்சிறுத்தையிடமிருந்து அறிவழகனைக் காப்பாற்றினாள் செவ்வந்தி!... செவ்வந்தி நீட்டிய கனியை வாங்கும்போது,  செவந்தியின் விரல் உரசலில் மின்னல் போல் உணர்ந்தான் அறிவழகன்...  அவன் செவ்வந்தியின் வலக்கரத்தைப் பற்றினான்... செவ்வந்தி மாரியப்பனை விளித்தாள்... 
---------------------------------------------------------------------------------------------------
அறிவழகன் தன்னை மறந்து செவ்வந்தியின் வல கரத்தைப் பற்றினான்... 

செவ்வந்தி ஏதும் சொல்லாமல், அவனிடமிருந்து கரத்தை இதமாய் விடுவித்து விட்டு, "மாரியப்பண்ணே," என்று விளித்து மாரியப்பனைப் பார்த்தாள்...

மாரியப்பன் செவந்தியைப் பார்க்க-

செவ்வந்தி, "ரீங்காரம்" -  என்று சொல்லி முடிப்பதற்குள், மாரியப்பன் "எல்லாரும் தரையோடு படுங்க" என்று கட்டளையிடும் தொனியில் சொல்லிவிட்டு அவனும் தரையோடு படுத்தான்...

செவ்வந்தியும் படுத்தாள்.

அறிவழகனுக்கும், செம்மதிக்கும் ஏதும் புரியா விட்டாலும், அவர்களும் தரையோடு ஒட்டிப்  படுத்தார்கள்...

சிறுது நேரத்தில் பெரு வண்டு கூட்டமொன்று காற்றைக் கிழிக்கும் ரீங்கார இரைச்சலோடு அவர்கள் தரையில் படுத்திருந்த  மரத்தருகே வந்து வட்டமிட்டன...

கோழி முட்டை அளவில், இருந்த அந்த செந்நிற வண்டுகளின் இரைச்சலில்  அஞ்சாதவனையும் அஞ்சச்செய்யும் அச்சுறுத்தல் கலந்திருந்தது...

செம்மதியும், அறிவழகனும் கலக்கமுற்றனர்.

மாரியப்பனுக்கும், செவ்வந்திக்கும் அது பழக்கமான நிகழ்வாக இருந்ததால், எவ்வித சலனமும் அவர்கள் முகத்தில் தென்படவில்லை...

இரைச்சல் - வண்டுகளின்  ரீங்காரம் - அடங்க சற்று நேரம் பிடித்தது.

ரீங்காரம் குறைந்தவுடன் மாரியப்பன், " யாரும் சட்டுனு எழுந்து நிக்காதீங்க தோழரே! அப்படியே படுத்தநிலையிலேயே, ஊர்ந்துட்டு என்னைப் பின் தொடர்ந்து வாங்க " என்று சொன்னவன் தரையோடு தவழ்ந்து அவர்களுக்கு வழிகாட்டினான்...

மாரியப்பனைத் தொடர்ந்து, செம்மதியும், அறிவழகனும், கடைசியாக செவ்வந்தியும் தரையோடு ஊர்ந்து நகர்ந்தார்கள்.

ஒரு பாறையின் வளைவிலிருந்து அடுத்தப் பாறையின்  சரிவுக்கு நகர்ந்தார்கள்...

எல்லாரும் ஒரு சமத்தளபரப்பில் மரத்தில் சாய்ந்து இளைப்பாறினார்...

அறிவழகனுக்கும், செம்மதிக்கும் சிராய்ப்புகள் அதிகம் ஏற்பட்டிருந்தன...

ஏற்கனவே, செவ்வந்தியோடு உருண்டதில் ஏற்பட்ட சிராய்ப்பும், சிறுகாயங்களும் அவனுள் வழியை அதிகரித்தது...

செவ்வந்தி சற்றும் சலிப்புக் கொள்ளாமல், அருகில் இருந்த புதருக்குள் சென்று சில மூலிகைகைகளைப் பறித்து வந்தாள்...

மூலிகைகளைப்  பிழிந்துக் காயத்தின் மீதும் சிராய்ப்பின் மீதும் தடவச் சொன்னாள்...

அறிவழகன் உருண்டதில் தோள்பட்டையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தது...

தோள்பட்டையின் துணி கிழிந்து காயத்தில் இருந்து இரத்தம் கசிவும் இருந்தது.

தோள்பட்டையில் மூலிகைச் சாற்றினைத் தடவ அறிவழகன் சிரமம் பட்டபோது செவ்வந்தி தடவி விட்டாள்.

செவ்வந்தியின் தடவலில் அறிவனுக்குள் மீண்டும் மின்னல் கீற்று தோன்றியது...

"தோழர் ,இந்த வண்டுகள்  வரும்போது, நாம தரையோடு  படுத்துறனும்... வண்டுகள்  நூறு கல் வேகத்தில் வரும்... தரையிலிருந்து நாலடி உயரத்தில் பறந்து வரும்... எதிரில் யானை நின்னுட்டு இருந்தால்கூட, யானையின் உடலைத் துளைத்து அடுத்தப்பக்கம் வெளியேறிடும்... வண்டு ஓட்டைப்  போட்ட கொஞ்ச நேரத்தில் மயங்கி யானையே இறந்திரும்னா பாருங்க"- என்றான் மாரியப்பன். 

இப்போது அறிவழகனுக்கு உள்ளூர மரணபயம் ஏற்பட்டது...

"எப்படி நீங்க?" -அறிவழகன்.

"நாங்க பழகிட்டோம்... இந்த வாழ்க்கை எங்களுக்கு பழகிருச்சு... ஒன்னு தெரிஞ்சுக்கங்க தோழர், இந்த வண்டுகளால் ஆபத்தும் இருக்கு!...  நன்மையும் இருக்கு"

"நன்மையா?" செம்மதி வியப்போடு கேட்டான்.


( வண்டுகளால்  நன்மையா?) 










-------------------------------------------------------------------------------------------------------

 17 - அம்பானிக்கு குரங்கணியில் என்ன வேலை? 

-------------------------------------------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------

முன்கதை : 
குரங்கணிக் காட்டில்-
யானையின் உடலையும் துளையிட்டுக் கொன்று   விடுமளவுக்கு பெருந்திரளாக இருந்தன வண்டுகள் ...
அந்த மரணவண்டுகளால் நன்மையையும் உள்ளன என்று மாரியப்பன் சொன்னான்...  
---------------------------------------------------------------------------------------------------
"நாங்க பழகிட்டோம்... இந்த வாழ்க்கை எங்களுக்கு பழகிருச்சு... ஒன்னு தெரிஞ்சுக்கங்க தோழர், இந்த வண்டுகளால் ஆபத்தும் இருக்கு!...  நன்மையும் இருக்கு" - என்றான் மாரியப்பன்...

:யானையையே சாகடிக்கும் வண்டுகளால் மனிதர்களுக்கு நன்மையும் ஏற்படுமா?" - என்று செம்மதி வியப்போடு கேட்டான்...

"தோழர், இந்த வண்டுகளின்  கழிவுகள்  வொவாள்கள் இடும் கழிவுகள் போல் இருக்கும்... இந்த மேற்கு தொடர்ச்சி மலை, வளமோடுத் திகழ இந்த வண்டுகளும் ஒரு வகையில் காரணம்னு சொல்லலாம்... "

அறிவழகன் ஏதோ புது செய்தியை தேடுவதுபோல் விழிகளை அகலமாக விரித்தான்...

"இந்த வண்டுகளின் கழிவுகளில்  பாஸ்பரஸ், நைட்ரஜன்  அதிகளவில் கலந்திருக்கும்... இந்த வண்டுகளின் எச்சம் மேற்கு தொடர்ச்சி மலை மரங்களுக்கு உரமாகுது!... இந்த மாதிரி வண்டுகள் நம்ம தேனீ மாவட்டத்திலும், சீனாவின் ஒரு மலைத்தொடரிலும் மட்டுமே இருக்கு!..."

" இந்தவண்டுகள் கூட்டம் கூட்டமாகத்தான்  இருக்குமா?" என்று செம்மதி  கேட்டான்.

அதற்கு செவ்வந்தி, "அண்ணே, வானத்தில் கொக்குகள் அணிஅணியா பறக்கறதைப் பார்த்திருப்பீங்க... இந்த வண்டுகளும் அணி அணியாய்த்தான் பறந்து வரும்... எல்லா மரத்திலும் உட்காராது... இன்றைக்கு ஒரு மரம்னா நாளைக்கு இதே மரத்துக்கு வரும்னு சொல்ல முடியாது..." - என்றாள் .    

"இது எந்த மரத்தில்  உட்காருதோ, அந்த மரம் செழிப்பா இருக்கும்... காய்ந்த மரங்களுக்கிடையில் ஏதாவது ஒரு மரம் மட்டும் செழிப்பா காணப்படுதுனா, அந்த மரத்திலே இந்த வண்டுகள் ஒருஇராத்திரி தங்கியிருந்திருக்குனு நாம தெரிஞ்சிக்கலாம்" என்றான் மாரியப்பன்.

"எங்க குழந்தைகளுக்கு  கடுமையான வலி, காய்ச்சல்னா நாங்க இந்த மாதிரி மரத்தில்  தொட்டில் கட்டி கொஞ்ச நேரம் தாலாட்டி விடுவோம்... குழந்தை குணமாகி சுறுசுறுப்பாயிரும்... அதனால நாங்க  வண்டுகள் உட்கார்ந்த மரத்தை தொட்டில் மரம்னு சொல்வோம் ... மருந்து மரம்னும் சொல்வோம் "  என்றாள் செவ்வந்தி.

அப்போது அவர்கள் அமர்ந்திருந்தப் பாறைக்கு அடுத்த பாறைத் தொடரின் ஒற்றையடிப் பாதையின் வழியே ஒரு கும்பல் சென்றுகொண்டிருந்தனர்...

சுமார் பத்து பேர் அடைங்கியதாக அந்தக்கும்பல் இருந்தது.

அந்தக்கும்பலை அறிவழகனுக்குக் கட்டினான் மாரியப்பன் 

அறிவழகன் அவர்களைப்  பார்த்தான்....

சற்றுத் தொலைவில் இருந்தாலும், அவர்களின் நடமாட்டம் துல்லியமாகத் தெரிந்தது...

"தோழர் அவர்கள் யாரென்றுத் தெரிகிறதா?"

"வெள்ளையர்கள் போல் தெரிகிறது"

"ஆமாம்! அமெரிக்கர்கள்... அவர்களுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்வது யாரென்று சொல்லுங்கள்"

கேமராவை இயக்கிக் கொண்டே, "வனத்துறை அதிகாரிகளா?" என்று கேட்டான் அறிவழகன் !...

"சரியாக சொன்னீர்கள் தோழர்!... வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டிச் செல்கிறார்கள்... அமெரிக்கர்களோடு இராணுவ  உடையில் செல்கிறார்கள்... பாருங்கள்"

அறிவழகன் உற்று நோக்கினான்.

"யாரந்த இராணுவத்தினர்?"

"விஞ்ஞானிகள் என்றப்பெயரில் வரும் அமெரிக்கர்களுக்கு துணைபுரிவது இந்திய இராணுவத்தின் துணைநிலைப் படையினர்..."

"அமெரிக்கர்கள் இந்த மலைக்கு ஏன் வருகிறார்கள்?"

"அமெரிக்கர்களுக்கும். அம்பானி குழுமத்திற்கும்  வளம் மிகுந்த நமது குரங்கணி மலைத் தொடர் தேவைப்படுகிறது..."

" கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்... அம்பானிக்கு இங்கே என்ன வேலை?"

"குரங்கணியில் தீப்பிடித்ததேன் என்று உங்களுக்குத்  தெரியதல்லவா... நாளை அதிகாலை நான்கு மணிக்கு உங்களுக்குச் சொல்கிறேன்... வாருங்கள் போவோம்...  இன்று இரவு நீங்கள் எங்களோடு தங்கிக் கொள்ளலாம் "  என்று சொல்லிவிட்டு மாரியப்பனும், செவ்வந்தியும் நடக்க, படம்பிடி கருவியை சுமந்து கொண்டு அறிவழகனும், செம்மதியும் பின் தொடர்ந்தார்கள்...  


  

( குரங்கணியில் தீப்பிடித்தது எப்படி?)  






-------------------------------------------------

 18 - தேனி வந்து சேர்ந்தனர் ...

-------------------------------------------------


குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------

முன்கதை : 
குரங்கணிக் காட்டிற்கு -
விஞ்ஞானிகள் என்ற பெயரில் அமெரிக்கர்கள் அடிக்கடி வருவதைச் சொன்ன மாரியப்பன், குரங்கணியில்  தீ நிகழ்வு நடந்தது எப்படி  என்பதை நாளைக்கு கூறுவதாக அறிவழகனிடம் சொன்னான் ...   
---------------------------------------------------------------------------------------------------
 தேனி அரசு மருத்துவமனை.
மாலை மங்கும் நேரம்.
மேகமூட்டத்துடன் கூடிய மெலிதான ஒளிக்கரைவு நிகழ்ந்துக் கொண்டிருக்கையில்-
தேனியின்  இதமான  தென்றல் காற்று சிலுசிலுவென உலாவி இருக்க -

நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களும் , பார்த்துவிட்டு செல்பவர்களுமென காட்சிகள் விரிந்திருக்க-

மருத்துவர் செவ்வேள் தனது மருத்துவ மேலுடுப்பைக் கழற்றி தோளில் போட்டுக் கொண்டே , மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த தனது மகிழுந்துவை நோக்கி நடையிட்டான்!...

மகிழுந்துவின் கதவைத் திறந்து தனது மேலுடுப்பை உள்ளே வைத்துவிட்டு, உந்துவில் சாய்ந்து  நின்று அலைபேசியை எடுத்தான்.

எண்களை அழுத்தி தொடர்புக்காகக்  காத்திருந்தான்...

" இளவரசு எங்கே வந்துட்டுருக்கே"


"............................."


"சரி ...  சரி... ம்... அப்படியே இடதுபக்கம் திரும்பி, பாரு... தேனி அரசு மருத்துமனை .... ம்.... ஆமா:  உள்ளே வந்துரு ... ஆங்... உன் காரை நா பாத்துட்டேன்...  அங்... நேரா மரத்தைப்  பாரு ... மரத்தடியில் நின்னுட்டு இருக்கேன்"

செவ்வேளும், இளவரசும் பள்ளித் தோழர்கள்...

இளவரசு ஒரு நிறுவனத்தின் மேலாளர் !

செவ்வேள் அரசு மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றுகிறான்.

அதிகாலையில் -
கோவையிலிருந்து, சாவை நோக்கி புறப்பட்ட இளவரசுவும், கயல்விழியும் தேனி வந்து சேர, மாலை நெருங்கிவிட்டது...

தேன்மொழி இறந்த குரங்கணி  காட்டுக்கு செல்ல வேண்டுமெனில், இன்னும் நாற்பது நிமிடம் பயணிக்க வேண்டும்...

இருட்டியப் பொழுதுதனில், இறந்தத் தோழியின் ஒத்தமரம் தேடிச்செல்வது  ஏற்றக் காலமாக  இருக்காது என்று நினைத்த கயல்விழி, " இளவரசு   இராத்திரி தங்கிட்டு காலையில் போலாமா " என்று கேட்டாள்.

விடுதியில் தங்கலாம் என்று நினைத்த இளவரசு, நண்பன் செவ்வேள் நினைவு வரவே, " சரி கயல்... என் மருத்துவ நண்பன் இருக்கான்... அவன்வீட்டில் நாம் தங்கிக்கலாம்..." என்றான்.

அவளும் சரியென்றாள்.

உடனே செவ்வேளுக்கு தகவல் சொல்ல-
செவ்வேள் இளவரசுவுக்காக காத்திருந்தான்.

இளவரசுவின் மகிழுந்து செவ்வேளின் காரின் அருகே வந்து நின்றது.

வண்டியிலிருந்து இளவரசு இறங்கினான்.

இருவரும் கைகுலுக்கி ஆரத்தழுவி நீண்ட நெடிய நட்பின்  உணர்வை வெளிப்படுத்திக்கொண்டார்கள்...

அப்போது மகிழுந்துவிலிருந்து மெதுவாக இறங்கியவளை கவனித்த செவ்வேள், உடனே தனது முகத்தில் ஓர் அதிர்ச்சியை - புருவத்தை - உயர்த்தி வெளிப்படுத்தினான்...

" டேய், எப்படா கல்யாணம் ஆச்சு? என்று கயல்விழியைப் பார்த்தப்படியே கேட்டான் செவ்வேள்.

" ஏண்டா என் கல்யாணத்துக்கு நா நேரில் வந்து உனக்கு  அழைப்புக் கொடுத்தேன்...  நீ எதுக்கு உன் கல்யாணத்திற்கு என்னைக்கூப்பிடலை ?"

செவ்வேளின் கேள்விக்கு இளவரசு மறுமொழி கூறுவதற்குள் கயல்விழி  "வணக்கம் " என்று சொல்லி இருகரம் கூப்பினாள்!

"கயல்விழி " என்று அறிமுகம் செய்து வைத்தான் இளவரசு.

நாங்களிருவரும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை... சாதி ஆணவம் எங்கள் திருமணத்திற்கு  சாவைப் பரிசாகக் கொடுக்கப் போகிறது... அந்த சாவினைப் பெறவே இருவரும் வந்துள்ளோம் இங்கு என்று சொல்வதா?

அல்லது 

ஆமாம்; திருமணம் ஆகிவிட்டது. உங்களுக்கு சொல்ல அவகாசம் இல்லை... மன்னித்து விடுங்கள்!.. அதனால்தான் உங்களைப்  பார்க்க வந்திருக்கிறோம் நேரில்...  என்று பொய்ச் சொல்லுவதா? என கயல்விழியின் மனதில் ஒரு நொடி ஓடியது ...

அதற்குள் செவ்வேள் தன் மனைவிக்கு  அழைப்புவிடுத்தான் பேசியிலிருந்து!

" செல்வி, நம்ம வீட்டுக்கு விருந்தாளிகளோட வறேன்... இளவரசு மனைவியோடு வந்திருக்கிறான்"

என்று சொல்லிவிட்டு  "சரி... நா முன்னாடி போறேன் ... என்னைத் தொடர்ந்து வாங்க" என்று இளவரசுவிடம் சொல்லி கைகுலுக்கிவிட்டு,
கயல்விழியையும் பார்த்து தலையசைத்துவிட்டு தனது மகிழுந்துவில் புறப்பட்டான்...

அவனது மகிழுந்துவைப்  பின் தொடர்ந்தான் இளவரசு.

செவ்வேளின் வீட்டில் ஓர் இடி இறங்கவிருக்கிறது என்பது அப்போது மூவரும் எதிர்பார்க்கவில்லை.        

  

( செவ்வேள் வீட்டில் இறங்கப்போகும் இடி எது?) 




--------------------------------------

 19 - இடி இறங்கியது!... 

--------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
குரங்கணிக் காட்டிற்கு, சாவைத்தேடி புறப்பட்ட இளவரசுவும், கயல்விழியும் தேனி வந்தடைந்தனர்.

இருட்டாகிவிட்டதால், மருத்துவ நண்பன் செவ்வேள் வீட்டில் தங்கி, நாளை காலை குரங்கணி சென்று தற்கொலை செய்வதென எண்ணி, செவ்வேளின் வீட்டுக்கு வந்தனர். 
---------------------------------------------------------------------------------------------------
 காரிலிருந்து இளவரசனும், கயல்விழியும் இறங்கினார்கள்.

மல்லிகை சூடிய, செவ்வேளின் மனைவி  செல்வி, முகம் மலர்ந்த புன்னகையோடு, ஆரத்தி எடுத்து வரவேற்றாள் இருவரையும்...

"முதல் முதலா வீட்டுக்கு வரீக... வலதுகால் எடுத்து வெச்சு வாங்க"
என்று  தான் வளர்ந்த சிற்றூரின் பண்பு மணக்க வரவேற்றாள் செல்வி!

கடையில் வாங்கி வந்திருந்த இனிப்பு மற்றும் கனி வகைகளை செல்வியிடம் கொடுத்து, தன்னை "கயல்விழி" என்று அறிமுகம் படுத்தி, வணக்கம் தெரிவித்தாள்.

"அடிக்கடி சொல்வார்... கோயமுத்தூர்லே இளவரசுனு நண்பன் இருக்கான்... போய் பார்க்கணும்னு... நீங்களே வந்துட்டீங்க" என்று புன்னகையொடுப் பேசினாள் செல்வி!..

இருவருக்கும் பருக நீர் கொடுத்தாள்...

" சரி நீங்க அசதியா இருப்பீங்க... குளிச்சிட்டு வாங்க... நா, இடியாப்பமும் கோழி குருமாவும் செஞ்சு வெச்சுருக்கேன்" 

" எதுக்குங்க சிரமம்..."

" விருந்தினரை வரவேற்கிறதில் இருக்கிற மகிழ்ச்சி வேற எதிலுங்க இருக்கப் போவுது... சரி குளிச்சிட்டு வாங்க எங்க ஊரு நாட்டுக்கோழி குருமா மாதிரி எந்த ஊரிலும் கிடைக்காது... ம்... சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க " என்று மீண்டும் புன்னகைத் தவழ பேசியப்படியே -

கயல் கொடுத்த இனிப்பு, கனிவகைகளை தொலைக்காட்சியருகில், உள்ள அலமாரியில் வைத்தாள்...

" ஏங்க, அவங்க குளிச்சிட்டு வரட்டும்... நீங்க போய் அவங்க துணிமணிகளை எடுத்துட்டு வந்துருங்க வண்டியிலிருந்து " - என்று கணவன் செவ்வேளிடம் சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் புகுந்தாள் செல்வி!

செல்வியின் சொல்லுக்கு இணங்கி, இளவரசுவின் மகிழுந்துவிலுருந்து, இருவரின் உடைமைகளையும்  எடுத்துவர, செவ்வேள் இளவரசுவிடம் வண்டியின் சாவியைக் கேட்டான்...

ஒருவித தயக்கத்தோடு, "டேய் லங்கேஜ் ஏதும் எடுத்துட்டு வரலேடா" என்றான்.

செவ்வேள் பார்வையில் அய்யம் தெரிந்தது...

" அப்ப நீங்க"

"இன்னும் கல்யாணம் ஆகலைடா"

அதற்குமேல் செவ்வேள் ஒன்றும் கேட்கவில்லை...

"சரி என் துணி இருக்கு... குளிச்சிட்டு மாத்திக்க... இந்தம்மா செல்வி, இங்கே வா"

வந்தாள் செல்வி.

" தங்கச்சிக்கு உன் துணி எடுத்து கொடு... குளிச்சிட்டு வரட்டும் " - என்றாள்.

செல்வியும் இருவரை ஒருகணம் பார்த்துவிட்டு, கயலின் கழுத்தைப் பார்த்தாள். அது வெறுமனே இருந்தது...

"கயல்விழி வாங்க... " என்று கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் செல்வி கயல்விழியை!

சற்று நேரத்தில்-
உணவு சாப்பிட எடுத்து வைத்தாள் செல்வி.

வாடிய மனநிலையில் இருந்தபோதிலும், மனதின் வலியை வெளிப்படுத்திடாமல், செல்வியின் உபசரிப்பில் கட்டுண்டார்கள்...

"செல்வி, டிவி போடும்மா" - என்றான் செவ்வேள்.

"இளவரசு அண்ணே, இவருக்கு சாப்பிடும்போது டிவி பார்த்துட்டே சாப்பிடணும்... அப்படியொரு பழக்கம் பழகிட்டாரு... என்கிட்டயும் பேசமாட்டாரு, சாப்பிடும்போது ! டிவியில்தா கண்ணிருக்கும்" என்று சொல்லிக்கொண்டே தொலைக்காட்சியின் விசையை அழுத்தினாள்...

முக்கியச்செய்தி அடியில் ஓடிக்கொண்டிருந்தது...

பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகள் கடத்தல்!. ஐந்நூறு சவரன் நகைகளுடன், இரண்டு  கோடி பணத்தோடு கடத்திவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கயல்விழியின் படத்தோடு, கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் என்று இளவரசுவின் படத்தையும் தொலைக்காட்சி காட்டி கொண்டிருந்தது...

அந்த அறிவிப்பு வரிகள் கயல்விழியின் இதயத்தை இடியெனத்தாக்க  ஓவென கதறினாள்!

செல்வியும், செவ்வேளும் ஏதும் புரியாமல் திகைத்தார்கள்.

"கயல், உன்னோட அலைபேசி கொடு"

என்று கேட்டான் இளவரசு,

காரில் இருப்பதாக சொன்னாள்.

உடனே சென்று தனது அலைபேசியையும், கயலின் அலைபேசியையும் எடுத்து இணைப்பு அட்டையை ஒடித்து எறிந்தான்...

இளவரசுவை தொடர்ந்து வந்த செவ்வேளுவுக்கும், செல்விக்கும் ஏதும் புரியவில்லை...

"கயல் வா... நம்ம சிம் கார்டு சிக்னலை வெச்சு போலீஸ் இந்நேரம் நம்மளை நெருங்கிட்டு இருப்பாங்க" 
   
" டேய் நில்லுடா... நீ போய்ட்டா மட்டும் போலீஸ் உன்னை விட்டுருவாங்களா?''

"இல்லை செவ்வேள்! என்னாலே உனக்கு துன்பம் ஆயிடக்கூடாது..."

"இப்ப மட்டும் என்ன? நீ என்கூட பேசியிருக்கே... அந்த சிக்னலை தடவி, தேனி அரசு மருத்தவமனையை நெருங்கியிருப்பாங்க... மருத்துவமனை காமிராவில் நாம பேசிட்டிருந்த காட்சியும், நாம புறப்பட்ட காட்சியும் பதிவாயிருக்கும்..."

"அதனால்தான் சொல்றேன்... ப்ளீஸ்... நாங்க கிளம்பறோம்... எங்கனாலை உனக்கு சிரமம் ஏற்படவேண்டாம்..." என்று சொல்லிவிட்டு, காருக்குள் புக இருந்தவனை வெளியே இழுத்து-

"ஏண்டா, முட்டாள் மாதிரி இருக்கே? இங்கிருந்து ஓடிட்டா போலீஸ் விட்டுருமா?... கார் நம்பர் போதுமேடா, பிடிக்க"

"இல்லை! செவ்வேள், நா இங்கிருக்கிற ஒவ்வொரு நொடியும் உனக்கும் சேர்த்து ஆபத்து வரும்... வேண்டாம்... நாங்க போறோம்..."

காருக்குள் கயல்விழி அமர்ந்தாள்.

மகிழுந்துவை  முடுக்கினான் இளவரசு!

வீட்டின் வாசலில் அனைவரும் நின்றிருந்தார்கள்...

ஒரு ஒளி வீட்டின் முகப்பை தொட்டு நீங்கியது!

செவ்வேள் ஒளி வந்த திசையைப் பார்த்தான்...

சரிவான சாலையிலிருந்து, மேல்நோக்கி ஒரு வாகனம் வந்துகொண்டிருப்பதுத் தெரிந்தது...

செவ்வேள் மகிழுந்துவை மறித்து, "டேய் இறங்குடா... நேருக்கு நேரா மோதணுமடா... பயந்துட்டு ஓடுனா,  சிக்கல் தீராது... " என்றான்.

இளவரசு காரில் இருந்து இறங்க மறுத்து காரை ஓட்டிச்செல்வதில் குறியாக இருந்தான்.

"இளவரசு இறங்கு... போலீஸ் வந்துட்டு இறக்குறாங்க... ம்... சீக்கிரம் இறங்கு..." என்று சொல்லியப்படியே வலுக்கட்டாயமாக, இளவரசுவை  இழுத்தான் வெளியே!

" தங்கச்சி, நீயும் இறங்கும்மா " என்று அவளையும் வெளியே இழுத்தான்...

"டேய் இளவரசு... இதோ... வீட்டுக்கு பின்னாடி ஒத்தையடி பாதை போகுது... போயிட்டே இரு... நா போலீசை சமாளிச்சுகிறேன்...." என்று சொல்லி வீட்டின் பின்புறம் தெரிந்த காட்டுக்குள்  விரட்டினான்...


பின்னர், செவ்வேளும், செல்வியும், கதவை சாத்திக்கொண்டு உள்ளே புகுந்தனர்...

சிறுது நேரத்தில்-
வாசல்மணி அடித்தது!

கதவைத் திறந்தான்.

காவல்துறை அதிகாரிகள்...

"என்னங்க டாக்டர், எப்படி இருக்கீங்க? " என்று சொல்லிக்கொண்டே வீட்டில் பார்வையை மேயவிட்டார் காவல் துணை ஆய்வாளர்.

"வாங்க, சார்... என்ன இப்படி"

"உங்ககிட்ட சின்னத்  தகவலுக்காக வந்திருக்கோம்"

"சொல்லுங்க சார்"

"இளவரசு" என்று துணை ஆய்வாளர் கேட்டு முடிப்பதற்குள்-

"இளவரசுவை தேடி வந்திருக்கீங்களா? என் நண்பன்தான்! இங்கேதான் வந்திருக்கான்! இதோ பாருங்க ... அவனோட கார்" -என்று சொல்லி இளவரசுவின் மகிழுந்துவைக் காட்டினான்...

"கூப்பிடுங்க ... ஒரு சின்ன விசாரணை"

என்று சொல்லிக்கொன்டே, "சார் அக்யுஸ்ட் இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சு சார்... ஓகே சார்... நிலையத்துக்கு அழைச்சிட்டு வந்துட்றேன் சார்" என்று மேலிடத்துக்கு தகவல் அனுப்பினார்.

மீண்டும், "டாக்டர், கூப்பிடுங்க... கூட ஏதாவது பொண்ணு வந்திருக்கா" என்று கேட்டார்.

"ஆமா சார்! கயல்விழினு பேர்"

" கரெக்ட்... கூப்பிடுங்க" என்றார் சற்று அதிர்வாக!

செல்வியின் விழிகள்  பின்வழி காட்டை, திகிலாக நோக்கின! 
   
(  தான் சிக்கலில் சிக்கிடாமல் இருக்க, செவ்வேள், இளவரசுவை காட்டிக் கொடுத்திடுவானா?)
  








------------------------------

 20 - நண்பேண்டா   

------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
அய்நூறு சவரன் நகைகளோடும் இரண்டு கோடி ரூபாய் பணத்தோடும் கயல்விழியை இளவரசு கடத்திவிட்டதாக தொலைக்காட்சி ஒளிசெய்துக் கொண்டிருக்க-

இருவரையும் ஒளிந்திருக்கச் சொல்லுகிறான் செவ்வேள்.
சிறிதுநேரத்தில் வந்த காவல்துறை அதிகாரிகளிடம், இளவரசுவும், கயல்விழியும் இங்குத்தான் வந்திருப்பதாக கூறி, இளவரசுவின் மகிழுந்துவையும் காட்டுகிறான் செவ்வேள்... 
---------------------------------------------------------------------------------------------------
 துணை ஆய்வாளர் தன் உயரதிகாரிகளுக்கு உடனே தகவல் பரிமாறினார்.

"சரிங்க சார்" என்று எதிர்முனையில் தகவல் சொல்லிவிட்டு,

"என்ன டாக்டர்... உங்களுக்கு இப்படியொரு நண்பனா?... பெரிய இடத்து விவகாரம்... வீணா நீங்களும் வம்புலே மாட்டப்போறீங்க" - என்று பயமுறுத்தினார்.

செல்வி கொண்டுவந்து கொடுத்த நீரைப்பருகிவிட்டு,
"என்கவுன்டர் லே போட்டுத் தள்ள மேலிடத்து உத்தரவு" என்று சொல்லியவாறே, நீர்க் குவளையை செல்வியிடம் நீட்டிவிட்டு,

மீண்டும், "கூப்பிடுங்க டாக்டர், அவங்களை " என்றார் துணை ஆய்வாளர்.

" சார் தப்பா நினைக்காதீங்க... அவனும், அந்த பொன்னும் இங்கே வந்திருக்காங்க... சாப்பிடப்  போகும்போது, தொலைக்காட்சியில் செய்தியைப் பாத்து எனக்கும்  என்ன செய்றதுன்னு தெரியல..."

" டாக்டர்,.. உங்களுக்குத்  தெரியாத மாதிரி இருந்துருங்க... நாங்க வழியில மடக்கிப் பிடிச்ச மாதிரி கேஸை மாத்தி எழுதிகிட்றோம்... வரச்சொல்லுங்க அவங்களை... என்கவுண்டர்தான்....பாத்தியேளா... கொஞ்ச நாள் கழிச்சு அந்தப் பொண்ணு இன்னொருத்தனுக்கு வாழ்க்கைப்  பட்டு சரியாயிடுவா... நம்ம பயலுக பாடு அவ்வளவுதான்... போலிசைத்  தாக்கித்  தப்பியோடும் போது  கடத்தல்காரன் சுடப்பட்டான்னு நாளைக்கு செய்தி வரும்.. இதெல்லாம் வேணுமா..." என்று கேட்டார் துணை ஆய்வாளர்.

" சார் என் நண்பன் அப்படி..."

:"பட்டவரில்லைனு நீங்க சொல்லலாம்... நானும் நம்பறேன்.. ஆனா, மேலிடம் நம்பாதே... அய்நூறு சவரன் ரெண்டுகோடி ரூபா ... என்ன சும்மாவா? "

"சார்..."

"டாக்டர் கூப்பிடுங்க... இல்லே நானே வீட்டுக்குள்ளே போய் இழுக்கவா சொல்லுங்க:" என்று வீட்டுக்குள் அடிவைத்தார்...

"சார்... ஒரு பத்துநிமிசத்துக்கு முன்னாடி நீங்க வந்திருக்கக்  கூடாதா"

"என்ன டாக்டர் சொல்லிறீயா"

"அவன் மாஜிஸ்ட்ரேட் கிட்ட  சரண் அடைய போயிட்டான்... நான் அனுப்பிவெச்சிட்டேன்... பத்துநிமிசம் ஆகுது..."

"டாக்டர் என்ன சொல்லிரீக... " 

"நீங்க வரும்போது வைட் கார் எதிர்லே போயிருக்குமே""

"என்னவே சொல்லறே"

"ஆமாங்க சார்... வக்கீலும் வந்திருந்தாரு..."

"எந்த வக்கீலுவே... பேரு என்னவே"

"கோயமுத்தூர் வக்கீல் . ராஜா னு பேர்... இளவரசு கையோட கூட்டிட்டு வந்துருக்கான்"

துணை ஆய்வாளர் மேலிடத்துக்கு ," சார் என்கவுண்டர் போடா முடியாது போலிருக்கு சார்... விசயம் வேறமாதிரி போகுது... அக்யூஸ்ட் கையோட வக்கீலையும் கூட்டிட்டு வந்திருக்கான் சார்... மாஜிஸ்ட்ரேட் அய்யாகிட்ட  சரண்டருக்கு போயிருக்கான்.... சரிங்க சார்.. இதோ வந்துடறேன்..."  

துணை ஆய்வாளர் போகும்போது, செல்வி " சார் ஒரு வாய் சாப்பிட்டிட்டு போங்க... இடியாப்பமும் நாட்டுக்கோழி குருமாவும் செஞ்சுக்கிருக்கேன்..."

" டாக்டர் ஒன்னு செய்யுங்க... இப்ப சாப்பிட நேரமில்லை... கமிசனர் வரச் சொல்லிட்டாரு... ஒரு டிபன் பாக்சுலே போட்டு கொடுத்திறியாள... நா காவல் நிலையம் போய் சாப்பிட்டுகிடறேன்..."என்று கேட்க-

செல்வியும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய கொடுத்தனுப்பினாள்...

மழைக் கொட்ட ஆரம்பித்தது...

காவல்துறையினர் புறப்பட்டனர்...   

இடியும் பெருங்காற்றும் மலையோடு மோதி மழையில் பயத்தைக் கொட்டின!

ஒருவழியாக  - இப்போதைக்கு காவல்துறையிடமிருந்து இளவரசுவை காப்பாற்றியதாக நினைத்தாலும், என்கவுண்டரிலிருந்து காப்பாற்றியாக வேண்டுமே

மனத்துடிப்போடு செல்வியை அழைத்துக்கொண்டு, வீட்டின் பின்புறம் காட்டை நோக்கி நடந்தான் செவ்வேள், இளவரசுவைப் பார்க்க! 

காற்று அவர்களை இடரச் செய்தது...

ஆயினும் நண்பனைக் காப்பாற்ற விழைந்தான் செவ்வேள்!   
  
மின்னலினூடே தேடினான்...

"இளவரசு" என்று முதலில் மெதுவாக அழைத்தான்...

எந்த மறுமொழியும் இல்லாததால்-
கையொளியில் தேடினான்..

கையொளி 
பெருங்காற்றில்-
மரங்கள் வளைந்து ஆடினதைக் காட்டியது ...
முகத்தில் ஓங்கி அரை விழுந்த மாதிரி , மழைகொட்டியது...

முடிந்தவரைக்கும் ஓசையிட்டான் 

"இளவரசு"
"கயல்விழி: என்று செல்வியும் கத்தினாள்...

காற்றோடுக்  கலந்தன ...

அவர்கள் கண்ணுக்கு அகப்படவில்லை...



(  காவல்துறையிடம் பிடிப்பட்டனரா? என்னவானார்கள்? )





-------------------------------------------------------------------------------------------

 21 - மரணத்தை நெருங்கிவிட்டார்கள் ...   

------------------------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
காவல் துறையினர் சென்றப் பிறகு, இளவரசுவை  அழைக்க செவ்வேள் வீட்டின் பின்புறம் சென்றான்.

அங்கே இளவரசுவும். கயல்விழியும் இல்லை.  
---------------------------------------------------------------------------------------------------
 இடி 
மின்னல் 
பெருங்காற்றின் பேரிரைச்சல் 
மழை!

இவைகளினூடே கையொளி வெளிச்சத்தில் தேடினர் செவ்வேளும், செல்வியும்....

இருவர் கண்களுக்கும் இளவரசு, கயல்விழி தென்படவில்லை...

முடிந்தவரை சத்தமாக அழைத்தும் பார்த்தார்கள்...

எந்த மறுமொழியும் இல்லை.

செவ்வேள், நண்பனின் நிலைக்குறித்து மிக வேதனைப் பட்டான்... 

செய்வதறியாது, செல்வியோடு வீடு திரும்பும்போது-
நாய் ஒன்றின் குரைச்சல் கேட்டது...

செவ்வேள் செல்வியைப் பார்த்தான்...

செல்வி தலையசைத்தாள்...

நாய் குரைத்துக் கொண்டிருந்த இடம்  அடைந்தார்கள்...

அது சுமார் பதினைந்து அடி ஆழமுள்ள நீரோடை.

மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது...

செவ்வேள் எட்டிப்பார்த்தான்...

"இளவரசு" 

துக்கம் பீறிட கூச்சலிட்டான்...

இளவரசும், கயல்விழியும் பாறை ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்தார்கள்...

இடுப்பளவு நீர் ஓடி கொண்டிருந்தது...

செவ்வேளும் செல்வியும் கதறி விட்டார்கள்... 

மரணத்தின் விளிம்பில் சிக்கியிருந்தார்கள் கயலும், இளவரசுவும்!...



கயல்விழி, இளவரசு காப்பாற்றப் பட்டார்களா? நீரோடு இழுத்துச்செல்லப்பட்டனரா? )




-------------------------------------------------------------------------------------------

 22 - இளவரசுவின் இறுதி நிமிடங்களோ?   

   ------------------------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
பதினைந்தடி ஆழமுள்ள நீரோடையில் ஒரு பாறைமீது கயல்விழியும், இளவரசுவும் தவிப்பதை, மின்னல் வெளிச்சத்தில் கண்டனர் செவ்வேளும், செல்வியும்!
---------------------------------------------------------------------------------------------------

மரணத்தின் விளிம்பில் சிக்கியிருந்தனர்!...

செவ்வேள் பதறினான்...

செல்வியும் துடித்தாள்...
 ஆனாலும்;  ஒரு கண நேரத்தையும் வீணாக்காமல், அருகிலிருந்த கிணற்றை நோக்க்கி ஓடினாள்...

சேந்துக் கயிற்றை எடுத்து வந்தாள்...

ஒரு முனையை மரத்தோடு கட்டிவிட்டு, மறுமுனையில் இடுப்புக்கும், தோளுக்குமாய் கட்டிக்கொண்டாள்... கணவனிடம் கயிரைக்கொடுத்து விட்டு, நீரோடைக்குள் இமை நேரத்தில் பாய்ந்தாள்...

மழை ஓயவில்லை...

மின்னலும் கண் மூடவில்லை...

இடியும் உறுமலை நிறுத்தவில்லை... 

காற்றின் ஊளையோசையும் உச்சமாக இருந்தது...

துணிச்சலுடன் கயிற்றோடு பிணைத்து,  பள்ளத்தின் குறைவான உயரமுள்ள இடத்திற்கு அவர்களை இழுத்துவந்தாள்...

செவ்வேள் கயிற்றைத்  தாங்கிப் பிடித்து இழுக்க, செல்வி இருவரையும் கரை சேர்த்தாள்...

ஓடிச்சென்று செவ்வேள் இருவரின் மூச்சு மற்றும் நாடித்துடிப்பை சோதித்தான்...

மெதுவாக தாங்கிப்பிடித்து  வீட்டுக்குள் தூக்கிவந்து சேர்த்தபிறகுதான் செவ்வேள்  நிம்மதியான மூச்சை சுவாசித்தான்...

இருந்தாலும் அவனுள் தொக்கியிருந்த பயம் செவ்வேளை  பயமுறுத்தியது... 
காவல்துறையினர் கையில் கிடைத்தால், இளவரசு என் கவுண்டரில் கொல்லப்பட்டுவிடுவானே...

உயிர்நண்பனைக் காப்பாற்றுவது எப்படி?

மாஜிஸ்திரேட் முன்னிலையில் சரண் அடைய அடையச் சென்றிருப்பதாகப் பொய் சொல்லி காவல்துறையிடம் தற்காலிகமாய் காப்பாற்றியிருந்தாலும், அது தீர்வாகாதே...

போலீஸ் உண்மையை அறிந்து மீண்டும் இங்குத்தான் வருவார்கள்...

நண்பனைக்  காப்பாற்றவியலாமல் போய்விடுமோ  என்ற மனவோட்டத்தினூடே,
செவ்வேள், இருவருக்கும் முதலுதவி செய்து, இருவரையும்  கண்  திறக்க வைத்து விட்டான்...

இருவரும் காவல்துறையிடம் சிக்காதிருக்க, உடனடியாக இவர்களை பாதுகாக்க வேண்டும் என்று செவ்வேள் நினைக்கையில்- 

வாசலில் வெள்ளையுந்து ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது...

செவ்வேள், செல்வி இருவரின் கண்களிலும் துக்கம் பீறிட்டது...

வெள்ளை வேனின் சத்தத்தை இளவரசு உணர்ந்தான்...
கயல் தேம்பினாள்...

இளவரசுவை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். கயல்விழி!


வெள்ளை வேனில் மீண்டும் காவல்துறையா?  )





 ---------------------------------------------

 23 - மழை ஓய்ந்திருந்தது!...    

  --------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
இளவரசுவோடு கயல்விழியை பதினைந்தடி ஆழமுள்ள நீரோடையில் பாய்ந்து, செல்வி காப்பாற்றினாள்... வாசலில் வெள்ளையுந்து வந்து நிற்கும் ஓசை கேட்டது...
---------------------------------------------------------------------------------------------------

வெள்ளை வேனின் சத்தத்தை இளவரசு உணர்ந்தான்...
கயல் தேம்பினாள்...

இளவரசுவை இறுக்கமாகக்  கட்டிக் கொண்டாள். கயல்விழி!

இளவரசுவை இறுக்கமாக அணைத்து, "அண்ணா, ஒரு உதவி செய்வீங்களா " என்று செவ்வேளைப் பார்த்துக் கேட்டாள்...

செல்வி, கயலின் அருகில் அமர்ந்து,  இதமாகத் தலையைக் கோதி விட்டாள்...

"அண்ணா, போலீஸ் கைக்கு சிக்கக்கூடாது... மரண  ஊசி இருந்தா, எங்கரெண்டுபேருக்கும் போடுங்க... நாங்க செத்துப் போறோம்..."

இளவரசு, கயலின் கண்ணீரைத் துடைத்தான்...

செல்வி அழுதாள்...

வாசல்மணி ஓசை கேட்டது...

செல்வி, செவ்வேளைப் பார்த்தாள்...

"பொறு... தான் போய்ப் பார்த்து விட்டு வருவ'' தாக சாடையால் தலையசைத்து, வாசலுக்குச் சென்றான், செவ்வேள்!

கயல்விழி "இளவரசு " என்று தேம்பினாள் இறுக்கமான அணைப்பினூடே!

 செல்வி, கயல்விழியின் கண்ணீர்க் கண்டு கலங்கினாள்...

செவ்வேள் கதவுத் திறந்தான்...

மழை ஓய்ந்திருந்தது...

வாசலில் -
மாரியப்பன் நின்றிருந்தான்...
கூடவே, குளிரில் நடுங்கி நின்றான் அறிவழகன்...

செவ்வேள் இவர்களை பார்த்து விட்டு, வெளியே நோட்டம் விட்டான்...

வெள்ளையுந்து நின்றிருந்தது! உள்ளுக்குள் யாரோ உட்கார்ந்திருப்பதும் போலவும் உணர்ந்தான்...

"மருத்துவரே, என்ன வெளியே பாக்கறீங்க"

செவ்வேள் ஏதும் பேசவில்லை...

அவர்களை உள்ளே வரச்சொல்லி தலையசைத்தான்...

அவர்கள் உள்ளுக்குள் வந்தவுடன் மீண்டும் செவ்வேள் வெளியே எட்டிப்பார்த்துவிட்டு, கதவை சாத்தினான்...

"மருத்துவரே, எ பதட்டமா இருக்கீங்க" என்று மாரியப்பன் கேட்டான்...

"மாரியப்பன் என்ன ஆச்சு? யார் இவர்?"

"மருத்துவரே, ஏதாவது ஒன்னுனா, உங்ககிட்டெதா வருவோம்... நீங்களும் முகம் சுளிக்காமே, எந்தநேரமா இருந்தாலும், மருந்துத்  தருவீங்க... இப்ப உங்க முகத்தில் என்னமோ கலக்கம்  தெரியுது... உங்களுக்கு சிரமம்னா  சொல்லுங்க...  நாங்க அரசு மருத்துவமனைக்கே போறோம்..." - என்றுச் சொல்லி விட்டு அறிவழகனை, கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு மாரியப்பன் வெளியேற முற்பட்டான்... 

" மாரியப்பன் ஒரு உதவி செய்வீங்களா?" என்று கேட்டு, மாரியப்பனை மறித்தான் செவ்வேள்!...

செவ்வேள் மாரியப்பனிடம் உதவிக் கேட்டது, உள்ளிருந்த செல்விக்கும்  கேட்டது...

" சொல்லுங்க மருத்துவரே!... என்னால என்ன செய்யமுடியுமோ செய்றேன்..."

மீண்டும் செவ்வேள், " ஒரு உதவி நீங்க செய்யனும்" என்றான் அழுத்தமாக!...

செவ்வேள் பேச்சு செல்விக்கு கேட்க, செல்வி நிம்மதி மூச்சு விட்டாள்...

கயல்விழியின் கன்னத்தைத் தடவிக் கொடுத்து, "கயல் உனக்கு ஒன்னும் ஆகாது" என்று வாஞ்சையுடன் பேசி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்...

  "மருத்துவரே. தங்கச்சி அழுகிற சத்தம் கேக்குதே" என்று கேட்டு, மாரியப்பன் உள் கதவின் மீது பார்வையை பதித்தான்...

( மாரியப்பன் இளவரசுவைக் காப்பாற்றுவானா?  காவல்துறையிடம் காட்டிக் கொடுப்பானா?   )




------------------------------------------------------

24 - குரங்கணியில் பற்றவைத்த நெருப்பு!     

------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
செவ்வேள், தனது ஆருயிர் நண்பன் இளவரசுவை காப்பாற்றும் பொருட்டு மாரியப்பனிடம் உதவிக் கேட்டான்...  
---------------------------------------------------------------------------------------------------

அதிகாலை நான்கு மணி -

குரங்கணி காட்டின் சாரல் மழையில் நனைந்துக் கொண்டே ஓடையோராம் நடந்துச் சென்றுக்  கொண்டிருந்தான் மாரியப்பன்...

அவனைப் பின் தொடர்ந்து நடந்தார்கள் அறிவழகனும், செம்மதியும்...

இரவு வேட்டையின் ஓய்வை முடித்து சில மிருகங்கள், நீர் அருந்திவிட்டு காட்டுக்குள் தம் இருப்பிடங்கள் நோக்கித் திரும்பிக்  கொண்டிருந்தன...

பறவைகள் விடியலின் கருக்கலை உணர்த்தும் விதமாக ஆங்காங்கு சலசலத்துக் கொண்டிருந்தன...

ஒன்றிரண்டு மானிடர்களும் தங்கள் காலைக்கடனை முடிக்கும் பொருட்டு மலையோடையின் கரையோரங்களுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்...     

இவர்களும் காலைக்கடனை முடித்தனர்...

"தோழர், இப்ப காய்ச்சல் இல்லையே"

" இல்லைங்க தோழர் '' - அறிவழகன் மாரியப்பனுக்குச் சொன்னான்...

"அது, பாறையிலிருந்து உருண்டீங்க பாருங்க... அப்ப ஏற்பட்ட சிராய்ப்பைவிட அதிர்ச்சி  உங்களை அதிகம் பாதிச்சிருக்கு, அதுவே உங்களுக்குக்  காய்ச்சலாயிருச்சு..."

"ஆமாங்க தோழர்!... நேற்று நீங்க மருத்துவர்கிட்ட அழைச்சிட்டு போனதாலே, காய்ச்சல் இருந்த இடம் தெரியலே"

" பொதுவா, நாங்க மருத்துவர்கிட்ட அதிகமா போகமாட்டோம்... ரொம்ப முடியலைனா போய்தானே ஆகனும்!... நல்ல மருத்துவர்!... செவ்வேள்ன்னு பேர்... பேருக்கேற்ற செழுமையான மனசு அவருக்கு" - என்று புகழ்ந்தான் மாரியப்பன்.

" தோழர் என்ன?...  தண்ணியிலே இறங்கறீங்க"  என்று செம்மதி கேட்டான்.

" ஒன்னும் ஆகாது... இறங்கி குளிச்சிருங்க... அருமையான ஓடை... குளிக்கக்  குளிக்க உடல் நோவு மறைஞ்சிரும்..." - என்று சொல்லிக்கொண்டே ஓடையில் இறங்கினான்.

அறிவழகனுக்கு நேற்று மருத்துவர் இட்டிருந்த காயத்திற்கானக்  கட்டு பிரிப்படாமல் இருந்தது...

அதனை கவனித்த மாரியப்பன், " தோழர் பயம்படாதீங்க... கட்டைப் பிரிச்சிட்டு குளிங்க... தோழர் செம்மதி என்னத்  தயக்கம்?... குதிங்க..."

செம்மதியும் ஓடையில் இறங்கினான்...

அறிவழகனும், படம்பிடி கருவியை இயங்குநிலையில் இருக்கச் செய்துவிட்டு, ஓடையில்  தயக்கத்தோடு இறங்கினான்...

 காமிரா தானாகவே படம் பிடித்துக் கொண்டிருக்க-
" "தோழர், இந்த ஓடைக்கு கிழக்கே இருப்பது குரங்கனிக் காடு!... மேற்கில் இருப்பது கொழுக்குமலை!... அது கேரளாவுக்கு சொந்தம்... ஆனா, கோடு கிழிச்ச மாதிரி தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும் - குரங்கணியில் -  அன்றைக்கு  நெருப்பு  பிடிச்சது"    

" என்ன சொல்றீங்க தோழர்... தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும் எப்படித்  தீப்பிடிக்கும்" - அறிவழகன்.

" குறுக்கே இந்த ஆற்றை  நெருப்பால் கடக்க முடியவில்லையா" - செம்மதி!

" ஓடையும் ஒரு காரணமாயிருக்கலாம்... ஆனால், எல்லை வகுத்து பற்றவைத்த நெருப்பு, எல்லைக்குள்தானே எறிஞ்சாகனும்"

"பற்றவைத்த நெருப்பா?"

அறிவழகன் மாரியப்பனை விந்தையையோடு நோக்கினான்...

செம்மதியும் குளிப்பதை நிறுத்திவிட்டு மாரியப்பனைப் பார்த்தான்...
  


(திட்டமிட்டு நெருப்பு வைக்கப்பட்டதா குரங்கணியில்) 




---------------------------------------------------------------------------------------------------------

25 - குரங்கணியில்  ஆளில்லாத விமானங்கள்!... 

--------------------------------------------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
திட்டமிட்டு தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும் நெருப்பு வைக்கப்பட்டதாக மாரியப்பன் சொல்ல, அறிவழகனும் செம்மதியும் குளிப்பதைவிட்டு விந்தையாக பார்த்தார்கள்... 
---------------------------------------------------------------------------------------------------

"பற்றவைத்த நெருப்பா?"

அறிவழகன் மாரியப்பனை விந்தையையோடு நோக்கினான்...

செம்மதியும் குளிப்பதை நிறுத்திவிட்டு மாரியப்பனைப் பார்த்தான்...
  
" குளிச்சிட்டு வாங்க... நாம பாலத்துக்கு போகலாம்" என்று சொல்லிவிட்டு கரையேறினான் மாரியப்பன்.

மூவரும் கொட்டக்குடி ஆறு - குரங்கணி பாலத்துக்கு வந்தனர்.

ஓரளவு விடிந்துவிட்ட நிலை.

காமிராவை ஓடவிட்டான் அறிவழகன்!

" தோழர், சம்பவம் நடந்த அன்றைக்கு இந்த பாலத்தில் நடைப் பயிற்சி செஞ்சிட்டிருந்தோம்...  அதிகமா ஆட்கள் இல்லை... நானும், அந்த எஸ்டேட் பணியாளர் ஒருத்தரும் மட்டுமே நடைப்பயிற்சி செஞ்சிட்டிருந்தோம்... அப்போ"

என்று சொல்லி நிறுத்தினான்...

அன்றைய தினம்!

அதிகாலை நான்கு மணி இருக்கும்...

வானத்தில் மின்மினி பூச்சிகள் மிதப்பது போல கண்டான் மாரிமுத்து.

உடன், நடைப்பயிற்சியில் இருந்த தேயிலை ஆலையின்  பணியாளரும் கவனித்தார்,

அந்த மின்மினி பூச்சிகள் போன்ற ஒளி திடீரென மலையை உரசுவதுபோல் பறந்து, மீண்டும் மேலே எழும்பியதை மாரியப்பன் கண்டான்.

" என்னங்க மாரியப்பன்... புதுசா இருக்கு?"

"இந்தவாரம் மலையேற்ற பயிற்சிக்கு நிறைய ஆட்கள் வந்திருக்காங்க போலிருக்கு... அங்கே பாருங்க... கூடாரம் அமைச்சு தங்கியிருக்காங்க... அவங்க வெச்சிருக்கிற செல்பேசியின் வெளிச்சம் நமக்கு அப்படி தெரியுதோ என்னவோ?"

"ஆமாமா! நம்ம மாதிரி அவங்களும்  சீக்கிரம் முழிச்சிட்டாங்க போலிருக்கே... பாடலும் ஆடலுமா இருக்காங்க!..."

மீண்டும் மீண்டும் அந்த ஆளில்லாத குட்டி விமானங்கள் குரங்கணி காட்டின் மீது பறப்பதும், மறைவதுமாக இருந்தன.

பாலத்தின் அடியில் இறங்கி, இருவரும் கொட்டக்குடி ஆற்றோரம்  வலம்வந்து, காட்டுக்குள் நுழைந்தார்கள்.

அப்போதும் அந்த குட்டி விமானங்கன் பறந்து வந்தன.

தாழப்பறந்து  மேலே ஏறின அந்த ஓசையில்லாத விமானங்கள்!...

ஏதோ ஒருதுகள் கையில் பட, மாரியப்பன் ஒருகணம் கூவி விட்டான்.

அந்த துகள் பட்ட இடம் இனம் புரியாத எரிச்சலைச் செய்தது!

"ஏதாவது வண்டுக்கடியா இருக்கும்... போறப்போ தைல புல் எடுத்து தேச்சிட்டு போங்க" 

தேயிலை ஆலையின் பணியாளர் ஆலை செல்லும் வழியில் பிரிந்தார்.

மாரியப்பனும்  வீட்டுக்குக்  கிளம்பினான்.

காலை ஏழு மணியளவில் கை எரிச்சல் அதிகமானது.

மூலிகை எடுத்து வைத்தால் சரியாகும் என்றுநினைத்த மாரியப்பன் குரங்கணிக்  காட்டுக்குள் வந்தான்...

ஆங்காங்கே நெருப்புப்  புகைந்து கொண்டிருந்தன...



(நெருப்புக்கும்,  ஆளில்லாத விமானத்திற்கும் தொடர்புண்டா)  




-------------------------------------------------------------

26 - தமிழ்நாட்டுக்கு வைத்த நெருப்பு!

-------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
கை  எரிச்சல் அதிகமாகவே, காலை ஏழு மணியளவில் மூலிகையிட வந்த மாரியப்பன் குரங்கணியில் ஆங்காங்கே நெருப்புப்  புகைந்துக் கொண்டிருப்பதைக் கண்டான்... 
---------------------------------------------------------------------------------------------

காலை ஏழு  மணியளவில் கை எரிச்சல் அதிகமானது.

மூலிகை எடுத்து வைத்தால் சரியாகும் என்று நினைத்த மாரியப்பன் குரங்கணிக்  காட்டுக்குள் வந்தான்...

ஆங்காங்கே நெருப்புப்  புகைந்துக்  கொண்டிருந்தன...

இதில் வியப்பதற்கு ஏதுமில்லை!

அவ்வப்போது தைலப் புற்களின் உரசல் தன்மையால், நெருப்புப் புகைவது வழக்கமான ஒன்றுதான்!...

ஆனால், அத்தகைய நெருப்பானது, பரவாது...

குறிப்பிட்ட வரையறைக்குள் எரிந்து சாம்பலாகிவிடும்.

இப்போது எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்பு ஓர் இனம்புரியாத அச்சத்தை மாரியப்பனுள் தோற்றுவித்தது...

ஏனெனில், நெருப்பின் புகை மூட்டம் ஓர் வரையறைக்குள் இன்றி பரவலாக காணப்பட்டது...

நெருப்பின் எல்லையைக்  கூர்ந்து கவனிக்க, விழிப்படலத்தை  சுருக்கி, கை விரல்களை குடை போலாக்கி, கண்ணருகே வைத்து உற்றுநோக்கிய மாரியப்பன் -

குவித்த தனது கைகளில் இருந்து நெருப்புப்  புகைவதை உணர்ந்துப்  பதறினான்...    

அவனுள் விளங்கி விட்டது...

நெருப்பு, தானாகப்  புகையவில்லை...

திட்டமிட்டு ஏற்படுத்திய சதிவேலை என்பதைப்  புரிந்துக்  கொண்டான்...

ஓடிச்சென்று அருகிலிருந்த மூலிகைக் கொத்து ஒன்றை பிடுங்கி கையின் மீது அழுத்தி புகைந்துக் கொண்டிருந்த நெருப்பை அணைத்தான்..

இப்போது தெளிவாகக்  கணக்குப் போட்டான் மாரியப்பன்...

இன்று அதிகாலை காட்டை உரசிச்சென்ற மின்மினி பூச்சிகள் போன்ற காட்சி, உண்மையில் மின்மினி பூச்சிகள் அல்ல!

அவை ஆளில்லாத விமானங்கள்தான் !

அவைத் தூவிச் சென்றவை வேதியியல் கலவை!

வேதியியல் கலவையின் சிறுதுளி பட்டதால்தான், தன்கையில் எரிச்சல் உண்டாயிற்று என்றும் கணக்கு போட்டான்...

உண்மையாகவே-
மாரியப்பன் கணக்குச்  சரியாகத் தானிருக்கும்!

வேதியியல் கலவை பட்ட மரங்கள் - புற்கள் - செடிகொடிகள் துவண்டு - வாடி - காணப்பட்டன...

பொழுது புலர்வதற்குள் வேதியியல் கலவை பட்ட இடங்கள் ஏறக்குறைய கருகிய நிலைக்கு ஆளானது!

வெயில் பட பட அவ்விடங்கள்  எரியத் தொடங்கியிருந்தன...

மலைச் சரிவாகையால்-
வெயில் பரவலாகப் படாமல்-
வில்போன்று,  மலைமீது வெயில் வளைந்துப் பட்டது...

வெயில் பட்ட இடங்களில் - ஏற்கனவே வேதியியல் கலவை தூவப்பட்டு வாடிநின்ற - மரம் செடி கொடிகள் - நெருப்புக்கு பலியாகிக் கொண்டிருந்தன...          

வெயில் படாத இடங்கள் - வேதியியல் கலவை தூவப்பட்ட மரம், செடி, கொடிகள்  - வாடிய நிலையில் வதங்கி நின்றன..

வேதியியல் கலவைப் பட்ட தனது கை இதுவரைக்கும் எரிச்சலில் தவித்துக் கொண்டிருந்ததையும் வெயில் பட்டவுடன் தனது கையின் குறிப்பிட்ட பகுதி எரிந்ததையும் கணக்கிட்டு நோக்கினான் மாரியப்பன்.

நெருப்பின் வரையறை தமிழ்நாட்டின் எல்லைக்குள் மட்டுமே காணப்பட்டது.

இது ஏதோ சதிச்செயல்தான் என்று நினைத்தவாறே வீட்டுக்கு திரும்பினான்!

இருந்தாலும் அவன் மனம் பதற்றத்திலிருந்து மீளவில்லை.

விறகுப்  பொறுக்கப்  புறப்பட்ட மக்களைத்  தடுத்து நிறுத்தி விபரம் சொன்னான்...

அவர்களும் வேடிக்கை பார்த்தார்கள்...

வெயிலின் தாக்கம்  காலை பத்து மணியளவில் அதிகரிக்க நெருப்பின் நாக்குகள் குரங்கணியை விழுங்கத் தொடங்கின...

அதேநேரம் கூக்குரல் மலையிலிருந்து கேட்டது...

ஓ... மலையேற்ற பயிற்சியில் இருந்தவர்கள் தீயில் சிக்கி விட்டார்கள்...

அவர்களின் கூக்குரல்தான் இது!

மாரியப்பனும், மலை மக்களும் மலைக்குள் தாவினார்கள்...      



( நெருப்பில் சிக்கிய பிஞ்சுகளின் கதி?)    



------------------------------------------------------

27 - நியூட்ரினோவுக்காக வைத்த நெருப்பா?

------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
நெருப்பில் மலையேற்றக் குழுவினர் சிக்கிக்  கூக்கிரலிட்டதை செவியுற்ற மாரியப்பனும், மலைவாழ் மக்களும் கூக்குரல் திசை நோக்கி விரைந்தார்கள்... 
---------------------------------------------------------------------------------------------

மாரியப்பன் விவரித்த சம்பவங்களைக் காட்சியேற்றிக் கொண்டிருந்தான் அறிவழகன் படம்பிடியில்!...

மாரியப்பன் பேசுவதை நிறுத்தி விட்டு, துக்கம் தாளாமல் கண்ணீர் உகுத்தான்!..

அவன் அடுத்து பேசவிருப்பதை படம்பிடியோடு காத்திருந்தான் அறிவழகன்!...

"தோழர், நெஞ்சுக்குள் நெருப்பு இப்பவும் எரியுது... இளைஞர்கள், இளம்பெண்களின் மரண ஓலம் இப்பவும் எனக்குக்  கேட்குது... நெருப்பைப் பார்த்தவுடனே திசைத்  தெரியாமே ஓடி நெருப்புக்குள்ளேயே சிக்கிச்  செத்தாங்க..." - கண்ணீர் கசியப் பேசினான்...   

கசியும் கண்ணீரைத்  துடைத்து எறிந்தான் மாரியப்பன்.

"எங்களுக்கு மலை வழித்தடம் தெரியும்... புதுசா வந்தவங்க தவிச்சாங்க... ஓடுனப் பக்கமெல்லாம் நெருப்பு... தப்பிக்க முடியாம வெந்து விழுந்தாங்க..."

பெருகி வழிந்த  சோகத்தை அடக்கிட  விழுங்கிய போது, மாரியப்பனின் தொண்டைக் குழி நரம்புகள் விம்மி நகர்ந்தன...

" எங்க மலைமக்கள் சிலர்,  கொட்டக்குடி வனத்துறை அதிகாரிகளுக்குத்  தகவல் சொன்னாங்க... அதை அவங்க உள் வாங்கிக்கவே இல்லை!..."

கொஞ்சம் அமைதியாக மலையை வெறித்துப் பார்த்தான்...

" நாங்க, நெருப்புப் படறாத தடத்துக்குள் நுழைஞ்சு, சிலரைக்  காப்பாத்தினோம்... நெருப்புக்கு பயந்துப்  பள்ளத்தில் குதிச்சவங்களைக்  கயிறுக் கட்டி இழுத்து காப்பாத்தினோம்..."

" அரசாங்கம் என்ன செஞ்சது? வனத்துறை ஏதும் செய்யலியா?"

நெருப்பின் தகவல் வெளியுலகத்துக்கு தெரியப்போறதில்ல! நெருப்பில் காட்டுமரங்கள் சாம்பலாகி இடம் சுத்தமாகும்னு நினைச்சாங்களோ என்னவோ... அவங்க எண்ணத்துக்கு மாறா நடந்துச்சு"

" என்ன சொல்றீங்க?"

மலையேற்றக்  குழுவினர் குரங்கணிக்கு வந்திருப்பாங்கனு நெருப்பு வெச்சவங்க எதிர்பார்க்கலைப் போலிருக்கு... வெச்ச நெருப்பில், காடு சாம்பலாகிடும்னு எதிர்பார்த்தாங்கப் போலிருக்கு..."

"காடு சாம்பலாவதால், நெருப்பு வெச்சவங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?"

"நியூட்ரினோ!" - என்று சொல்லி நிறுத்தினான் மாரியப்பன்.

" நியூட்ரினோ  திட்டம் செயல்படுத்த கட்டுமானப் பணியை  கார்பொரேட் நிறுவனங்கள் தானே செய்யும்...  இந்த அரசாங்கத்தில் இதுதானே நடக்குது!"

"புரியல மாரியப்பன்"

"நியூட்ரினோ திட்டம் கட்டுமானம் பணிக்கு காட்டை அழிக்க பலகோடி ரூபாய் செலவாகுமில்லையா?..."

"ஆமாம்"

" ஆனா, பெரிய அளவில் செலவில்லாமல், ஆளில்லாத விமானங்களை ஏவி, பொடித் தூவி, நெருப்பை மூட்டிட்டாங்க.. இயற்கையாகவே ஏற்பட்ட தீ நிகழ்வுனு சொல்ல நினைச்சாங்க போலிருக்கு... ஆனா, மலையேற்றக் குழுவினர் மூலம், தீப்பிடித்தக்  கோரம் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சு"

"எப்படிங்க தோழர்?"

" தோழர், வனத்துறைக்கிட்ட நாங்க சொன்னதை அவங்க பெரிசா எடுத்துக்கலை... நாங்க ஓடி ஓடி சிலரைக் காப்பாற்றிகிட்டு இருந்தோம்... அவங்ககிட்டிருந்த அலைபேசிதான், மாவட்ட ஆட்சியர்க்கும், ஊடகங்களுக்கும், பெற்றோர்களுக்கும்  உதவிக் கோரும் தகவலுக்கு பயன் பட்டது"

அறிவழகன் மாரியப்பன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று விரித்த விழியோடுப் பார்த்தான்!..

"வெளியுலகிற்குத்  தகவல் தெரிஞ்சு உதவி வரதுக்குள்ளே, காடும் மட்டும் சாம்பலாகலை... மனித உயிர்களும் சாம்பலாயிட்டு இருந்துச்சு...  இதில் வேதனை என்னனா,  அமைச்சர் விட்ட அறிக்கைதான், ரொம்ப வேதனையா பட்டது..."                
      


( இந்திய ராணுவ அமைச்சர் தந்த வேதனை?)
-----------------------------------------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------

28 - தமிழன்தானே!... சாகட்டும்!!...

-------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------
முன்கதை : 
நியூட்ரினோவுக்காக மூட்டிய நெருப்போ என மாரியப்பன் அய்யம் எழுப்ப்பினான்... 
-------------------------------------------------------------------------------------------------------

"வெளியுலகிற்கு தகவல் தெரிஞ்சு உதவி வரதுக்குள்ளே, காடும் மட்டும் சாம்பலாகலை... மனித உயிர்களும் சாம்பலாயிட்டு இருந்துச்சு...  இதில் வேதனை என்னனா,  அமைச்சர் விட்ட அறிக்கைதான், ரொம்ப வேதனையா பட்டது..."

" தோழர் அந்த அறிக்கையை நாங்களும் தொலைக்காட்சியில் பார்த்தோம்... இருட்டாகிவிட்டதால், இராணுவம் மீட்பு  பணியில் ஈடுபடாதுனு அமைச்சர் அறிக்கை விட்டிருந்தார்... அந்த அறிக்கையால் மனம் நொந்து போனாங்க தமிழ் மக்கள்!.. தொலைதூரத்தில் இருந்த  எங்களுக்கே அமைச்சரின் அறிக்கைக் கண்டு ஆத்திரம் வந்த்ததுனா, நேரடி களத்தில் இருந்த  மக்களின்  வேதனையைப் புரிஞ்சுக்க முடியுது" - என்றான் அறிவழகன் வேதனையோடு!...

"எங்களுக்கு அங்கமெல்லாம் பதறுச்சு... இதிலே, மற்ற அமைச்சர்களும்  அறிக்கை விட்டாங்க  பாருங்க... 'போர்க்கால அடிப்படையில் மீட்புப்  பணி நடக்குதுன்னு!...' '

மாரியப்பன் கண்கள் சிவந்தன...

" நெருப்பு தகதகனு எரிஞ்சிட்டு இருக்கு... காயம் பட்டவங்க 'தண்ணீர் தண்ணீர்' னு தவிக்கறாங்க... இருட்டும் ஆயிடுச்சு... தாமதிக்கற ஒவ்வொரு துளிநேரமும் உயிர்கள் நெருப்புக்கு  சாம்பலாயிடுமேனு   நாங்கத்  தவிக்கிறோம்... மலையேற்றக் குழுவில் வந்தவங்க உயிருக்கு பயந்து அலறிட்டு இருந்தாங்க... இருட்டில் மீட்புப் பணியை  மேற்கொள்ள முடியாதுனு சொன்னாங்களே!...  சொன்ன நெஞ்சில்  கொஞ்சமாவது  ஈரம்  இருந்திருக்குமா தோழர்... பெற்றவங்க நிலையில் இருந்து வேதனையை உணர்ந்து பாருங்க"

"ரொம்ப வேதனைதான்  மாரியப்பன்"

"இருட்டைப்  பகல் போலாக்கி, படம்பிடிப்பு நடத்தறளவுக்கு தொழிநுட்பம் வளர்ந்திருக்கு... ஒரு நாட்டின்  அமைச்சர் கற்காலத்தில் இருப்பது போல் அறிக்கை விட்றார்... இராணுவம் முயற்சி செஞ்சிருந்தா, அந்த இடத்துக்கு ஒளியூட்டி மீட்புப் பணியை  செஞ்சிருக்க முடியாதா தோழர்... ஒரு மலை கிராமத்திற்கு சரியான சாலைவசதி இல்லை... வெளிச்சம் இல்லை... மருத்தவ வசதியில்லை... கழிப்பிடம் இல்லை... இதுலே சந்திரனுக்கும், செவ்வாயுக்கும் ராக்கெட்!... வெட்கமா இல்லை "

அறிவழகனும் மாரியப்பனின் கேள்வியில் சோகம் ஆனான்!...

தொடர்ந்து மாரியப்பன் : " எங்க மக்கள், வீட்டிலிருந்த கை வெளிச்சத்தைத்  தூக்கிட்டு  வந்துத்  தேடி, மீட்புப்  பணியில் ஈடுபாட்டாங்க... ஒருசிலர்கிட்ட இருந்த அலைபேசியின் வெளிச்சத்தில் ஓலம் வந்த திசை நோக்கி  ஓடி முடிஞ்சளவுக்குக் காப்பாத்தினோம்... தோழர், ஊடக நண்பர்களும் உதவியா இருந்தாங்க எங்களுக்கு!... அரசாங்கம் மனசு  வெச்சிருந்தால், இன்னும் சில உயிர்களைக்  காப்பாற்றியிருக்கலாம்... இதுவே வடநாட்டில் நடந்திருந்தால், போர்க்கால நடவடிக்கை எடுத்திருப்பாங்களோ  என்னமோ..." என்று பெருமூச்சு விட்டான் மாரியப்பன்!

அந்த மூச்சில் நெருப்பின் நாக்குகள் தலைக்காட்டின...

" தமிழன்தானே! சாகட்டும்..."

மாரியப்பன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்... 
விரக்தியும், ஆற்றாமையும் மாரியப்பனின் குரலில் தோய-

அவன்  கவலைப் படர்ந்த கண்கள் செவ்வந்தியைப்  பார்த்தன...

செவ்வந்தி  வந்துக் கொண்டிருந்தாள் தனியே தூரத்தில்!...  
                                


( செவ்வந்தியின் பொறுப்பில் விடப்பட்டிருந்த  இளவரசனும், கயல்விழியும் எங்கே?) 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------





----------------------------------------------
29 - இளவரசு, கயல் எங்கே?...
----------------------------------------------

குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
தமிழர்களின் மரணத்தை துச்சமென பாவிக்கும் அரசை எண்ணி மனம் வெம்பினான் மாரியப்பன்... அப்போது செவ்வந்தி வந்துக் கொண்டிருந்தாள்... 
---------------------------------------------------------------------------------------------------

செவ்வந்தி  வந்துக் கொண்டிருந்தாள் தனியே தூரத்தில்!...  

இளவரசுவையும் , கயல்விழியையும் தனியே விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என்று மாரியப்பன் கூறியிருந்தான் செவ்வந்தியிடம்!...

நேற்று-
கொட்டும் மழையில்-
உடல்நலம் பாதிக்கப்பட்ட அறிவழகனை அழைத்துக்கொண்டு மருத்துவர் செவ்வேளிடம் சென்றதும்,

செவ்வேள் இளவரசுவையும், கயல்விழியையும் காப்பாற்றும்படி மாரியப்பனிடம்  கேட்டுக் கொண்டதும்,

மாரியப்பனுக்கு நினைவில் தோன்றின...

செவ்வேள் தொலைக்காட்சியைக்  காட்டினான்.

அதில் -

முக்கியச் செய்தி அடியில் ஓடிக் கொண்டிருந்தது...

பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகள் கடத்தல்!. ஐந்நூறு சவரன் நகைகளுடன், இரண்டு  கோடி பணத்தோடுக்  கடத்திவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கயல்விழியின் படத்தோடு, கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் என்று இளவரசுவின் படத்தையும் தொலைக்காட்சிக்  காட்டிக்  கொண்டிருந்தது...

செவ்வேள், மாரியப்பனிடம், " காதல் ஒரு குற்றமா? சொல்லுங்க மாரியப்பன்... எவ்வளவு பெரியப்  பழியை என் நண்பன் சுமந்துட்டு இருக்கான்" என்று கண்ணீர் கசிந்தான்!...

தேனியிலிருந்து  மோப்பம் பிடித்து போலீஸ் வந்திருந்ததையும்,  தான் காவல்துறையிடம் உரைத்த பொய்யையும் மாரியப்பனிடம் சொன்ன செவ்வேள், பக்கத்து அறையில் ஒளிந்திருந்த கயல்விழியையும், இளவரசுவையும் காட்டினான்...

"உங்களை நம்பறேன் மாரியப்பன்!... என் நண்பனைக் காப்பாற்றவீங்கனு!..." - என்று சொல்லி மாரியப்பனின் இரு கரங்களையும் பற்றி தளுதளுக்கக்  கெஞ்சினான் செவ்வேள்.

"என் நண்பனை சுட்டுத் தள்ள காவல்துறை தேடிட்டு இருக்கு... காவல்துறைக்குத் தெரியாம, எப்படியாவது ஒரு நீதிபதிகிட்டே இவங்களை ஒப்படிச்சிட்டீங்கன்னா, நீதிபதி இவங்களை  வாழ வெச்சிடுவார்னு நம்பறேன்"   
                                
"மருத்துவரே, கவலைப்படாதீங்க!... தேனிக்கு போறதைவிட, மதுரை நீதிபதி அய்யாகிட்ட போயிட்டம்னா, பாதுகாப்பா இருக்கும்... சரிங்க, மருத்துவரே!... இனிமேலும் இவங்க இங்கிருக்கிறது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்... நா பாதுகாப்பான இடத்திற்கு அழைச்சிட்டு போறேன்... விடிஞ்சதும் மதுரை கோர்ட்டில் இவங்களை ஒப்படைச்சு பாதுகாப்புக்கு வேண்டியதை செஞ்சிட்றேன்..."

செவ்வேளின் அருகே  இளவரசுவும், கயல்விழியும் வந்தார்கள்...

"மருத்துவரே, இவங்களோடக்  காரையும் நாங்க எடுத்துட்டு போறோம்... ஒருவேளை திரும்பவும் போலீஸ் வந்து உங்களைக் கேட்டாங்கன்னா, இளவரசு வந்தார்... தன்னோட கார் எடுத்துட்டு தேனிக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டார்னு சொல்லிடுங்க..." - என்று சொன்ன மாரியப்பன்-

இளவரசுவைப் பார்த்து " வாங்க தோழர்" என்று சொல்லி, கைப்பற்றினான்...   

இளவரசு கயல்விழியின் கரம் பற்றி மாரியப்பனைப் பின் தொடர்ந்தான்...

மாரியப்பன் இவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறும் போது, "மருத்துவரே, இவர் சென்னையிலிருந்து வந்திருக்கார்... காய்ச்சல்... முடிஞ்சா பாருங்க... இல்லைன்னா... " என்று சொல்லி முடிப்பதற்குள்-

" நான் பார்த்துக்கறேன்;  நீங்க புறப்படுங்க" - என்றான் செவ்வேள்!

வெளியே நின்றிருந்த வெள்ளையுந்துவில் செவ்வந்தி அமர்ந்திருந்தாள்...

செவ்வந்தியிடம் சென்று, "தங்கச்சி, இவங்களை அழைச்சிட்டு போ... நம்ம கிடங்கில் இருக்கட்டும்... யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று சொன்னான்...

செவ்வந்தி வெள்ளையுந்துவை ஓட்டினாள்; பின்னிருக்கைக்கு அடியில் இளவரசு, கயல் ஒளிந்திருக்க!
உந்து சென்றவுடன், உள்ளே வந்தான் மாரியப்பன்.  
அதற்குள், செவ்வேள் அறிவழகனுக்கு ஊசி போட்டு, சில மருந்துகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்...

"தோழரே, எப்படியிருக்கு" - என்று அறிவழகனைப் பார்த்துக் கேட்டான் மாரியப்பன்.

அறிவழகனின் முகத்தில் காய்ச்சலின் தாக்கம் குறைந்து, தெளிவு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான் மாரியப்பன்.

மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு, மருத்துவக் கட்டணத்தை மாரியப்பன் கொடுத்தான்...

செவ்வேள் மறுக்கவே, கட்டணத்தை மேசைமீது வைத்து விட்டு-
"புறப்படுங்க தோழர் " என்றான் அறிவழகனைப் பார்த்து!

இளவரசுவின் மகிழுந்துவை எடுத்துக் கொண்டு மாரியப்பன் கிடங்கு  நோக்கிப் புறப்பாட்டன்...   
    


( தனி கிடங்கிலிருந்து  செவ்வந்தி மட்டும் வந்திருந்தாள்... இளவரசு, கயல் எங்கே?)



--------------------------------------------------
30 - தூக்குக் கயிற்றில் காதல்!
--------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
கிடங்கில் பாதுகாப்போடு இளவரசுவையும், கயல்விழியையும் ஒளித்து வைத்து விட்டு, செவ்வந்தியைத் துணைக்கு இருக்கும்படியும், சொல்லியிருந்தான் மாரியப்பன் ...
---------------------------------------------------------------------------------------------------

செவ்வந்தி  அருகில்  வந்தவுடன்,  " நாங்க வரும் வரைக்கும், அவங்களுக்கு துணையா இருக்க சொன்னேனே செவ்வந்தி" என்று கேட்டான் மாரியப்பன்...

" ஒத்தைமரம் பாக்கணும்னாக... ஒத்தமரத்தில் விட்டுட்டு வந்திருக்கேன் " - என்றாள் செவ்வந்தி!

மாரியப்பன் அறிவழகனைப் பார்த்து, " தோழர், நாங்க மதுரைப்  போறோம்... " என்று சொல்லி முடிப்பதுற்குள்-

அறிவழகன் " நானும் மதுரைக்கு வரேன்... அங்கிருந்தே  சென்னைக்குப் போறேன்... போற வழியில் நீங்க சொல்ல வேண்டியதை சொன்னீங்கன்னா, நானும்  பதிவு செஞ்சுக்குவேன்..." என்று சொல்லிவிட்டு,

அறிவழகன் செம்மதியிடம், " ரொம்ப நன்றிங்க செம்மதி!... உங்கனால்தான் மாரியப்பனை சந்திக்க முடிஞ்சது... மாரியப்பன் சொன்ன தகவல்கள் என்னுடைய குறும்படத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்" என்றான் 

செம்மதி, " அறிவழகன், நானும் மதுரை வரேன்... கயல்விழித் திருமணம் நடக்கனும் இல்லையா...  எனக்கும் மதுரையில் நண்பர்கள் இருக்காங்க... மாரியப்பன் கோர்ட் வேலையை முடிச்சிட்டார்னா, நாம எல்லாரும் முன்னின்று கயல்விழித் திருமணத்தை நடத்தி வெச்சுருவோம்..." என்றான்.

"ஆமாம் தோழர், செம்மதியும்  இருந்தா,  நல்லதுதான்... சரி வாங்க... ஒத்தமரம் போயிட்டு, அவங்களையும் அழைச்சிட்டு புறப்படலாம்... "

"எல்லாருக்கும்  இட்லி செஞ்சுருக்கேன்... ஒத்தைமரத்தடியில் சாப்பிட்டுட்டு கிளம்புங்க... வழக்கறிஞருக்கு சொல்லிட்டீங்க இல்லையா?" என்று கேட்டாள்  செவ்வந்தி.

மாரியப்பன், " சொல்லிட்டேன்! செவ்வந்தி நீயும் வா... கயல்விழிக்கு ஆறுதலா இருக்கும்" - என்றான்.

செவ்வந்தி தலையசைக்க, ஒத்தமரம் சென்றனர் எல்லோரும்!...

அங்கே-
ஒத்தமரத்தில் சேலையை தூக்குக் கயிறாக்கி, கயல்விழியின் கழுத்தில் ஒருமுனையை மாட்டிவிட்டு, மறுமுனையில் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தான் இளவரசு... 
    
  

( காதலில் இணைய  இயலாது என்பதால், தூக்கில் இணைந்தார்களா காதலர் இருவரும்...)          



----------------------------------------------------
31 - சாதிக்குப் பயந்துக் கடைசி   முத்தம் ...
----------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
சேலையின்  ஒரு முனையில் கயல்விழிக்கு தூக்கி மாட்டிவிட்டு, மறுமுனையில் தூக்கு மாட்டிக் கொண்டான்  இளவரசு!....
---------------------------------------------------------------------------------------------------

ஒத்தமரத்தில்-
சேலையைத்  தூக்குக் கயிறாக்கி, கயல்விழியின் கழுத்தில் ஒருமுனையை மாட்டிவிட்டு, மறுமுனையில் தன் கழுத்தை  மாட்டிக் கொண்டான்  இளவரசு... 
    
பாறை மீது ஈரடி அகலமுள்ள கல் மீது இருவரும் ஒட்டி நின்றிருந்தார்கள்...

நின்ற நிலையில் பாதத்தின் கீழ் உள்ள கல்லை  மெதுவாக எட்டி உதைத்தால்-

கல் நகர்ந்து விட-
இருவருமே, பாதாளத்தில் தொங்கி உயிர்விட ஏதுவாக அமைப்பு செய்திருந்தான் இளவரசு!...

இருவர் கழுத்திலும் தூக்கு இறுக-
இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி கடைசி முத்தம் பரிமாறிக் கொண்டார்கள்...

பிறகு-
இருவருமே ஒருவரை ஒருவர்ப்  பார்த்து உயிரற்ற புன்னகையை இறுதியாக வெளிப்படுத்திக் கொண்டார்கள்...

கயல்விழியின் இடையைத் தாங்கி பிடித்துக் கொண்டு இளவரசு அடிக்கல்லை நகர்த்தினான்...

கல் நகர -
மரக்கிளை சடசடவென ஒலி செய்ய-
இருவர் கழுத்தையும் தூக்கு, இறுக்கிய அதே வேளையில்-

பாதாளத்தில் - அந்தரத்தில் - அவர்கள் இருவரும் தொங்கிய அதே வேளையில்-

இரண்டு கால்களால் அவர்கள் இருவரையும் பிணைத்து, பின்பக்கமாக இழுத்தாள் செவ்வந்தி!..

செவ்வந்தி இழுத்துக் கொடுக்க, மாரியப்பன் இருவரையும் இரு கைகைளில் ஏந்தி பிடித்து நின்றான்...

எல்லாமே ஒரு கணநேரம்தான்!...

தூக்கில் தொங்கப் போவதை அறிந்த செவ்வந்தியும், மாரியப்பனும் உடனடிச்  செயலில் இறங்கினர்...

தான் கட்டியிருந்த சேலையை மரக்கிளை ஒன்றில் கோர்த்துவிட்டு சேலையின் அடிப்பகுதியை இடுப்பில் கட்டி கொண்டாள் செவ்வந்தி.

வவ்வால் மாதிரி பறந்து, இரு கையால் சேலையைப் பிடித்துக் கொண்டு, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த கயல்விழியையும், இளவரசுவையும் தனது  இருகால்ககளால் பிணைத்து உந்தி பின்பக்கமாக இழுத்து வந்தாள் செவ்வந்தி!...

செவந்தியின் கால்பிடியில் மாட்டிய இருவரையும், மாரியப்பன்  கைகளில் ஏந்தி நின்றான்... 

செவ்வந்தி சேலையில்  தொங்கியபடியே, தூக்கு முடிச்சை அவிழ்த்து விட்டாள்...

அறிவழகன் அவனை அறியாமலே இந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான்...

செம்மதி இருவரையும் தரையில் படுக்கவைத்து முகத்தில் நீர்தெளித்து விட்டான்...

அதற்குள்-
சேலையின் பிடியை விட்டுவிட்டு கீழே குதித்த செவ்வந்தி ஓடிச் சென்று மூலிகையைக் கொண்டு வந்து இருவரின் நாசியிலும் வைத்தாள்...

கயல்விழி கண்களில் நீர்ப் பெருக  " எங்களை எதுக்கு காப்பாத்துனீங்க?...     நீங்க காப்பாத்திட்டா மட்டும் போதுமா?... சாதி எங்களை வாழவைக்காதே..." என்று பொருமினாள்!...

மாரியப்பன் அமைதியாகச் சொன்னான் : "சாதிக்குப் பயந்து,  சாகத் துணிஞ்சிட்டீங்க... சாவுதான் விடிவுனு நினைச்சீங்கனா  செத்துப் போங்க... நானே உங்களை நிம்மதியா சாகடிச்சிட்றேன்... ஆனா; அதுக்கு முன்னாடி என் ஒரு  கேள்விக்கு விடைச் சொல்லிட்டு செத்துப் போங்க..."

மழை பெய்ய ஆரம்பித்தது! 
        

( மாரியப்பன் கேட்கவிருக்கும் கேள்வியென்ன?...)   



------------------------------------------------------------
32 -காதலிக்கும் போது  தெரியிலியா சாதி?...
------------------------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------------
முன்கதை : 
தற்கொலையில் இருந்து, இளவரசும், கயல்விழியும் காப்பாற்றப்பட்டனர்...
----------------------------------------------------------------------------------

மாரியப்பன் அமைதியாகச் சொன்னான் : "சாதிக்குப் பயந்து,  சாகத் துணிஞ்சிட்டீங்க... சாவுதான் விடிவுனு நினைச்சீங்கனா  செத்துப் போங்க... நானே உங்களை நிம்மதியா சாகடிச்சிட்றேன்... ஆனா; அதுக்கு முன்னாடி என் ஒரு  கேள்விக்கு விடைச் சொல்லிட்டு செத்துப் போங்க..."

கயல்விழியும், இளவரசுவும் வெறுப்பானப் பார்வையை மாரியப்பன் மீது உமிழ்ந்தார்கள்...

மழைப்  பெய்ய ஆரம்பித்தது! 

" அண்ணே, இங்கே பேசிட்டு இருக்க முடியாது... கருக்கல் அதிகமாகுது" என்றாள் செவ்வந்தி!

மழையில் எல்லாரும் நனைந்தார்கள்...

"ஒருவேளை காவல்துறை மோப்பம் பிடிச்சு வந்துட்டா, எல்லாருமே மாட்டிக்க நேரிடும்... அண்ணே, சீக்கிரம் முடிவு எடுங்க " என்றாள் செவ்வந்தி!

"நீங்க வாழ நினைக்கிறீங்களா? சாக விரும்பறீங்களா?" - என்று கேட்டான்  மாரியப்பன்.

" நாங்க வாழணும்னு நினைச்சாலும் சாதி எங்களை வாழவிடாது... சாகவிடுங்க" -  என்று கைகூப்பி வேண்டினாள் கயல்விழி!

" மரணத்தை யாராலும் தடுக்க முடியாது... சரி செத்துப் போங்க" என்ற மாரியப்பன். இளவரசுவை நெருங்கி, " நீங்க ரெண்டு பேரும் சாவதால் சாதி ஒழிஞ்சிடுமா?" என்று கேட்டான்.

கயல்விழியையும் நோக்கிக் கேட்டான் : 
" ம் சொல்லுங்க... முடியாதில்ல... அப்புறம் எதுக்கு சாகனும்?"

" சாகாம நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துட்டா மட்டும் சாதி ஒழிஞ்சிடுமா? - என்று எதிர்க் கேள்வி  கேட்டாள் கயல்விழி!

மாரியப்பன் அமைதியாக கயல்விழியைப் பார்த்தான்...

" எங்களை சாகவிடாமல் தடுத்துட்டீங்க... கல்யாணமும் செஞ்சு வெச்சுடுங்க... ஆனால்; ஒழியாத சாதியை எதிர்த்து எங்களால் வாழமுடியுமா? சொல்லுங்க... உடுமலை சங்கர் நிலையை மறந்துட்டீங்களா? அந்த நிலை என் இளவரசுக்கு ஏற்படாதுனு உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"      

" என்னை நம்பியா நீங்க ரெண்டு பேரும் காதலிச்சீங்க?..." 

இருவரும் சுத்தியால் அடிப்பது போல் திடுக்கிட்டார்கள்...

"காதலிக்கும் போது தெரியிலியா சாதினு ஒரு தடைக்கல் இருக்குனு?"

" அண்ணே, மழை..."  என்றாள் செவ்வந்தி!

" காதலர்கள் சாவோடு காதல் சாவதில்லை...  காதல் அழியாது... அது மலர்ந்துட்டே இருக்கும்... யாராலும் அழிக்க முடியாது... ஆனால்;  காதலர்கள் வாழ முடியாது... காதலர்கள் வாழணும்னா  -  சாதி ஒழியனும்... சாதி ஒழியனும்னா, என்னச் செய்யனும்? சொல்லுங்க.." - என்று சொல்லிவிட்டு கொட்டும் மழையில் சரிவில் இறங்கினான்...

செவ்வந்தி அவர்கள் இருவரையும் கைப்பிடித்து சரிவில் இறங்க வைத்தாள்...

செம்மதியும், அறிவழகனும் பின் தொடர்ந்தார்கள்...

ஒத்தமரத்திலிருந்து  சற்றுத் தொலைவில் -
சரிவில் குகை போன்று ஓரிடம் நின்றான் மாரியப்பன்!...

அனைவரும் நின்றார்கள் அங்கே வந்து!

" காதலிச்சோம் ... செத்தோம்... இதுதானா முடிவு? சாதியை ஒழிக்காமல் கிடைக்குமா விடிவு?" _ என்று கேட்டுக் கொண்டே குகைப் போல் நீண்ட புதருக்குள் நுழைந்தான் மாரியப்பன்.

பாறையின் அடியில் அனைவரையும் இருக்கச்  சொல்லிவிட்டு, கயல்விழியையும், இளவரசுவையும்   உள்ளே இட்டுச் சென்றான் மாரியப்பன்!

உள்ளே நுழைந்த கயலும், இளவரசனும் திகில் அடைந்தார்கள்...

குகைக்குள் விடும் மூச்சுக்காற்றில் கூட எதிரொலி ஒலித்தது...

மாரியப்பன் கேட்டான் : "சாதி ஒழியனும்னா  என்னச் செய்யலாம்...  சொல்லுங்க" 

அந்தக் கேள்வி,  குகைப் பாறைகளில் மோதியதால், ஒவ்வொருப் பாறையும் அதே  கேள்வியை எதிரொலித்தன...   


 "சாதி ஒழியனும்னா  என்னச் செய்யலாம்... சொல்லுங்க"   



--------------------------------------------
33 - செத்துப் போனவங்க!...
--------------------------------------------
குரங்கணி காடு 
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
குகைக்குள் இட்டுச்சென்ற மாரியப்பன், "சாதி ஒழியனும்னா  என்னச் செய்யலாம்...  சொல்லுங்க"  என்று இளவரசுவையும், கயல்விழியையும் நோக்கிக் கேட்டான்... 
----------------------------------------------------------------------------------------------

மாரியப்பனின் கேள்விக்கு மவுனமே நிலவியது...

"நூற்றிரண்டு " என்று குரல் கொடுத்தான் மாரியப்பன்.

உள்ளிருந்து, ஒரு இளம்பெண் வந்து, படைத் தளபதிக்கு செலுத்தப்படுவது போல் நிமிர்ந்த வணக்கம் செலுத்தினாள்...

"இவங்க  , ஒரு காவல்துறை அதிகாரியால் சீரழிக்கப்பட்டவங்க... காவல்துறை இவங்களை சீரழிச்சிட்டு, விபச்சாரம் வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிருச்சு... வெளியே வந்தப் பிறகு, இவரை இவருடைய கணவர் ஏத்துக்கலை... மக்கள் பார்வையும் இவர் மீது அருவருப்பானதா இருந்துச்சு... வாழப் பிடிக்காம சாகத் துணிஞ்சாங்க...  செவ்வந்தியால் காப்பாற்றப் பட்டாங்க "  - என்று அந்த இளம்பெண்ணை அறிமுகம் படுத்தினான்....

"இவங்க என்ன  தப்பு செஞ்சாங்க?" - கயல்விழி கேட்டாள்...

"சிநேகிதி வீட்டுக்கு போயிட்டு திரும்பும் போது வழியில் சோதனை...  சோதனையின் போது ஓட்டுநர் உரிமம் இவங்ககிட்ட  இல்லை..." என்று சொன்ன மாரியப்பன் நூற்றிரண்டைப் பார்த்தான்...

நூற்றிரண்டு என விளிக்கப்பட்ட இளம்பெண் தொடர்ந்தாள் :          "உரிமம்  எடுத்துவர மறந்துட்டேன்... தப்புதான்... அபாரதம் கட்டச் சொன்னாலும் கட்டிடறேன்னு கெஞ்சினேன்...  ரொம்ப நேரமா என்னைத்  தெருவில் நிற்க வெச்சான்... நேரம்  இரவு பதினொன்றுக்கு  மேல் ஆயிருச்சு... என்னைத் தப்பான கண்ணோட்டத்தில்  பார்த்தான்... லாட்ஜ்க்கு கூப்பிட்டான்..." என்று சொல்லி நிறுத்தினாள். 

" இராத்திரி நேரம் தனியா ஒரு பெண் போகும் போது, பாதுகாப்பா இருக்க வேண்டிய காவல்துறையே, அத்து மீறியிருக்கு... ஆத்திரத்தில் அந்த அதிகாரியை இவங்க செருப்பால் அடிச்சிட்டாங்க... காவல்துறை சும்மா விடுமா"...

"காவல் நிலையத்திற்கு  என்னை அழைச்சிட்டு போய், மொத்தம் ஏழு  காவலர்களால் நான் ...." - என்று சொல்லும் போது இளம்பெண்ணின் கண்கள் சிவந்து துடித்தன... மனதில் ஏற்பட்ட வடு இப்போதும் நறநறவென பற்களின் கடியினூடே வெளியானது... 

" நூற்றிரண்டு நீங்க போலாம்"

நூற்றிரண்டு  உள்ளே போனாள்...

மீண்டும் மாரியப்பன் பேசினான் : "காவல்துறை இந்த பெண் மீது பொய் வழக்கு போட்டு, விலைமகளாக சித்தரித்து சிறையில் தள்ளியது... இந்த நாட்டில் அதிகாரத் திமிரில்   எது வேணும்னாலும் செய்யலாமா? "  

இளவரசன் கேட்டான் : "அந்த பெண்ணின் பெயர் வித்தியாசமா இருக்கே"

மாரியப்பன் எதுவும் பேசாமல் குகையின் ஓர் வெளிக்கு அழைத்துச் சென்றான் மாரியப்பன் அவர்களை.

அங்கே சில நூறுபேர் இருந்தார்கள் - ஆண்கள், பெண்களென -

சிலர் குழுவாகப்   பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்...

சிலர் சில வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்...

கயல் கேட்டாள் :
"இவங்க எல்லாரும் யார்?... எங்களை எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்தீங்க?"

மாரியப்பன் சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு,  "இவங்க எல்லாருமே செத்துப்  போனவங்க " - என்றான்!

இளவரசு பயத்தோடு கேட்டான் : " மாரியப்பன் எங்களை எதுக்கு இங்கே கொண்டு வந்தீங்க?"    

"சாகனும்னு துடிச்சீங்களே... இப்ப எதுக்கு பயம் படறீங்க?" - நக்கலாக கேட்டான் மாரியப்பன்.


(  இளவரசனும், கயல்விழியும் ஏன் குகைக்கு கொண்டு வரப்பட்டார்கள்?
             



-----------------------------------------------
34 - சாவதற்கான ஏற்பாடு!...
-----------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
குகைக்குள் ஒரு சில நூறு பேர் இருந்தனர்... அவர்கள் யாவரையும் 'செத்துப் போனவர்கள் ' என்றான்  மாரியப்பன்.. இளவரசும், கயலும் பயந்தனர்...
-------------------------------------------------------------------------------------------

இளவரசு பயத்தோடு கேட்டான் : " மாரியப்பன் எங்களை எதுக்கு இங்கே கொண்டு வந்தீங்க?"    

"சாகனும்னு துடிச்சீங்களே... இப்ப எதுக்கு பயம் படறீங்க?" - நக்கலாக கேட்டான் மாரியப்பன்.

" இல்லை மாரியப்பன்... எனக்கு ஏதோ தப்பா தோணுது... எங்களை விட்டுருங்க... நாங்கப் போறோம்..." - இளவரசு.

மாரியப்பன் மெல்லியப் புன்னகையை உதிர்த்துவிட்டு,  "வெளியே போய்? சாகப் போறிங்கிளா... வாழப் போறீங்களா?" என்று கேட்டுவிட்டு,   " பதினேழு" என்று குரல் கொடுத்தான்...

பதினேழு இலக்கமுடைய மங்கை வந்து, வீரவணக்கம் செலுத்தினாள்...

" இவங்க பேர் பதினேழு!... " என்று சொன்ன மாரியப்பன்,  மீண்டும் ஒரு தகவல் சொன்னான்...

அதனைக்  கேட்டு, கயல்விழி வியப்பில்  மூழ்கினாள்...

" இவங்க, ஒரு திருநங்கை" என்று சொன்னதைக் கேட்டு இளவரவும், கயல்விழியும், பதினேழு என்று விளிக்கப்பட்ட திருநங்கையை வியப்போடுப் பார்த்தார்கள்...

முக அழகிலும், உடல் நேர்த்தியிலும் ஒரு பெண் போலவே கச்சிதமாக இருந்தார்...

"திருநங்கையாக இவரிடம் மாற்றம் ஏற்பட்டவுடன், இவங்க வீட்டில் இவரைத்  துரத்தி விட்டாங்க... ரொம்பவும் மனம் நொந்து, ரயிலில் தலைத் தூண்டிச்சு சாக போயிட்டாரு.." - என்ற மாரியப்பன், மீண்டும் பதினேழுவிடம் "இவங்க சாக ஏற்பாடு செஞ்சிட்டிங்களா?" என்று கேட்டான் .

" செஞ்சுட்டேன்"  
ஒற்றைச்சொல் மட்டுமே உதிர்ந்தது பதினேழுவிடம் - அதில் மென்மையும், பெண்மையும் கலந்திருந்தது...

" கயல்விழி, இளவரசு உங்க விருப்பதை நா தடுக்க விரும்பலை... நீங்க சாவதற்கு வேண்டிய ஏற்பாடு செஞ்சாச்சு... போங்க ... உங்க சாவை நீங்களே பாருங்க"

பதினேழு முன் நடக்க-
மாரியப்பன் இருவரையும் பின்தொடரச் சொன்னான்...

தற்கொலைக்கு முயன்ற இருவருமே இப்போது ஒருவித நடுக்கத்துடன் - திகிலுடன் - மிகவும் தயக்கத்தோடு பின் தொடர்ந்தார்கள்; ஒருவர் கரத்தை ஒருவர் கோர்த்தப்படி!  



( சாகவிரும்பியவர்கள், தாம் சாவதை நேரில் காணப்போகிறார்கள்...


  
----------------------------------------------------------
35 - "ரெண்டு பேரும் செத்துட்டீங்க"
----------------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
---------------------------------------------------------------------------------------
முன்கதை : 
"உங்கள் சாவைப்  பாருங்கள்" என்று கயல்விழியையும், இளவரசுவையும் அனுப்பினான் மாரிமுத்து...
---------------------------------------------------------------------------------------

பதினேழு முன் நடக்க-
மாரியப்பன் இருவரையும் பின்தொடரச் சொன்னான்...

இருட்டறை 
சிலர் கணினிமுன் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்... 

 ஓர் அகண்டத் திரை சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது...

எதிரில் கயல்விழியும், இளவரசுவும் அமர்த்தப் பட்டார்கள்...

திரையில்-
வெண்துணி சுற்றப்பட்ட இரு சடலங்கள் தெரிந்தன...

ஒருவன் இரு சடலத்தின் வெண்துணிகளை அகற்றினான்...

 ஒன்று ஆண் சடலம்!...  இன்னொன்று பெண் சடலம்!...  

இன்னொருவன்  கயல்விழியின் புடவையைப் பெண்ணின் சடலத்தில் சுற்றினான்...

ஆண் சடலத்திற்கு இளவரசுவின் ஆடை அணிவிக்கப்பட்டது...

இளவரசுவின் காருக்குள் இரு  சடலங்களையும் - ஒன்றோடுன்று கட்டி அணைத்திருக்கும்  நிலையில் திணித்தனர்...

வேதியல் நீரினை சடலத்தின்மீதும், காருக்குள்ளும் தெளித்தவுடன் புகைய ஆரம்பித்தது! 

கார்க் கதவை மூடினர்...

தூக்கில் தொங்குவதற்கு முன்னர் இருவருமே கழற்றி வைத்திருந்த காலணிகளை எடுத்து, சற்று பரப்பி வைத்தார்கள்...

முதல் நாள் இரவில் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கயல்விழியின் கைப்பை மற்றும் கைக்குட்டை, கடிகாரம் போன்றப்  பொருட்களோடு இணைப்புத்  துண்டிக்கப்பட்டிருந்த இருவரது அலைப்பேசியையும்  செருப்போரம் வீசினார்கள்...

தீக்குச்சியை உரசி, கார் மீது ஒருவன்  வீசினான்...

மகிழுந்துவோடு  இரு சடலங்களும் நெருப்பின் சீற்றத்தில் விரைந்து சாம்பலாகிக் கொண்டிருந்தன...

" இளவரசு, உங்க கதை முடிஞ்சது... நீங்க ரெண்டு பேரும் செத்துட்டீங்க... " என்றான் மாரியப்பன்! 

திரை வெளிச்சத்தில்-  

கயல்விழி - இளவரசுவின் - இருண்ட முகம் தெரிந்தது...
இருவரின் முகமும் சலனமற்றிருந்தன...

(  மாரியப்பன் அடுத்து என்ன செய்தான்?) 



----------------------------------------------------------
36 - வளர்மதி - சோபியா - நந்தினி ...
----------------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
"நீங்க ரெண்டுபேரும் செத்துட்டீங்க" என்றான் மாரியப்பன்!
-------------------------------------------------------------------------------------------

"ஏ... இப்படி செஞ்சீங்க?... நாங்க உயிரோடு இருக்கும்போதே..."
என்று கேட்டான் இளவரசு.

" உங்களை நம்பி வந்தோம்... இப்படி செஞ்சுட்டீங்களே" - என்று கோபமாக கேட்டாள் கயல்விழி!

"வாழணும்னு என்னை நம்பி நீங்க வரலியே... தற்கொலைச்  செய்யப் பாத்தீங்க... நா உங்களுக்கு நல்லதுதானே செஞ்சுருக்கேன்... சாகணும்னு விரும்பினீங்க... நா சாகடிச்சிட்டேன்... இனி இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்க செத்தவங்க... இனி உங்களை போலீஸ் தேடாது... கயல்விழி,  உங்கப்பாவும் உங்களைத் தேட மாட்டார்... இனி நீங்க போகலாம்..." என்று சொல்லிவிட்டு 

"நாற்பத்து  எட்டு " என்று அழைத்தான்...

நாற்பத்து எட்டு என்று அழைக்கப்பட்ட இளைஞன் வந்தான்...

" சொல்லுங்க தோழரே..."

" இவங்க மரணச் செய்தியை, ஊடகங்களுக்குத் தெரியப் படுத்திருங்க"

"ஆகட்டும் தோழரே"

புறப்பட்டான் நாற்பத்தெட்டு!

"இல்லை... இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்" - இளவரசு.

" என்னச் செய்வீங்க?... ஊடகங்களுக்கு முன்னாடி நின்னு 'நாங்க சாகலை' னு பேட்டி அளிக்கப் போறீங்களா?... போங்க... நீங்க,  ஊடகங்களை சந்திக்கும் போதே, காவல்துறை உங்களை என்கவுண்டர்லே போட்டுரும்... அய்நூறு சவரன் நகையோடு, இரண்டு  கோடி ரொக்கத்தோடு கயல்விழியைக்  கடத்திட்டு வந்திருக்கீங்கனு உங்க மேல் புகார் இருக்கு!... சாதிவெறி பிடிச்ச   உங்கப்பா, தேடுதலையும் நிறுத்தமாட்டார்... உங்க காதலுக்கும் ஒப்புதல் தரமாட்டார்... கையூட்டு வாங்கிட்டு என்கவுண்டர் செய்றவங்களும் காவல்துறையில் இருக்காங்க...  போங்க"

" இந்தப்  பொய்யானச்  சாவு எங்களுக்கு வேண்டாம்...  எங்க காதல் உண்மையானது... எங்க காதல் உண்மைனு எங்க சாவு சொல்லும்... நாங்க சாகப்போறோம் விடுங்க - கயல்விழி.

" காதல் உண்மையானதுதான்!... நா மறுக்கலை... ஆனால்; காதலுக்காக மட்டுந்தான் நீங்க உயிரை விடுவீங்களா?"

இளவரசு, கயல்விழி பேசாமல் மாரியப்பனை பார்த்தார்கள்...

" சொல்லுங்க... காதல் மட்டும்தான் உங்களுக்குத் தெரியுமா? இந்த மண்ணுக்காக -  நம் தமிழ் மொழிக்காக - உயிர் நீத்தவர்கள் பற்றி நீங்க கேள்விப் பட்டதில்லையா?..."

மாரியப்பன் பேசிக்கொண்டே திரையில் காட்சியை ஓட விட்டான்...

" வேண்டாம்... வேண்டாம்... ஹைட்ரொ கார்பன் வேண்டாம்"   என்ற முழக்கத்துடன் காட்சியில் மாணவி வளர்மதி தோன்றினார்...

"பாசிசம்  ஒழிக" என்ற  பின்புலத்தோடு மாணவி  சோபியா தோன்றினார்...

"மதுவை ஒழிப்போம்" என்ற முழக்கத்துடன் மாணவி நந்தினி தோன்றினார்...

திரையை நிறுத்திவிட்டு, அதே மெல்லிய இருட்டினூடே கயல்விழியை நெருங்கி, " கயல்விழி சொல்லுங்க... இப்ப நீங்க பார்த்த வளர்மதி, சோபியா, நந்தினி எல்லாருமே இளம்பெண்கள்தான்... அவங்க நினைச்சிருந்தா ஒரு காதல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து குழந்தகள் பெற்று வாழலாம்... தடுக்க முடியுமா... பன்றிகள் வாழும் வாழ்க்கைக்கும், தமிழர்கள் வாழும் வாழ்க்கைக்கும் வேறுபாடு வேண்டாமா?...  இளவரசு சொல்லுங்க" - என்று கேட்டான்...

"மரணிப்பதற்கும்  ஒரு பொருள் இருக்க வேண்டாமா?... நீங்க செத்துட்டா, இந்த நாட்டில் சாதி ஒழிஞ்சிடுமா?"... என்று கேட்டான்  மாரியப்பன்!

"நாங்க சாகமே இருந்தா, சாதி ஒழிஞ்சிடுமா?"

கயல்விழி நறுக்கென்று கேட்டாள்...  


(  மாரியப்பனின் மறுமொழி என்ன?) 



---------------------------------------
37 - இந்தியாவிலிருந்து விலகினால்...   
---------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------
முன்கதை : 
"சாதி ஒழிஞ்சிடுமா" என்று கேட்டாள் கயல்விழி!
-----------------------------------------------------------------------------

"நாங்க சாகமெ  இருந்தா, சாதி ஒழிஞ்சிடுமா?"

கயல்விழி நறுக்கென்று கேட்டாள்...  

மாரியப்பன் அவளை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு சொன்னான் : "ஒழியும்... ஒழியனும்... ஒழிஞ்சிடும்"

"மாரியப்பன், நீங்க அரசியல்வாதி மாதிரி பேசறீங்க... ஒழிக்க முடியாத சாதியை ஒழிப்பேன்னு  வெற்று வாக்குறுதித் தந்து நேரத்தை வீணாக்காதீங்க" - என்றான் இளவரசு!

" வீணாக்கலை இளவரசு!... சாதியை ஒழிப்போம்... ஒழிக்க முடியும்... ஒழிஞ்சே ஆகணும்"

" எப்படி?" - கயல்விழி.

"நோய்நாடி நோய்முதல்  நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி  வாய்ப்பச் செயல்' இந்தத் திருக்குறள் உங்களுக்கு சாதாரணக் குறள்  மாதிரி இருக்கலாம்... ஆனால்;  இதைப்  படிக்கும் எவனையும் போராளியாக மாற்றுகிறான் திருவள்ளுவன் என்பது உங்களுக்குத் தெரியுமா?..."

" திருக்குறளுக்கு விளக்கம் கேட்கும் மனநிலையில் நாங்க இல்லை... எங்களை விடுங்க..." - இளவரசு.

" இளவரசு அமைதியா இருக்கீங்களா?... என்ன கேட்டீங்க?.... சாதி ஒழியுமா?... ஒழியும்!... ஒழியணும்!... ஒழிஞ்சே தீரும்!...''

மாரியப்பன் சற்று அமைதிக்  காத்துத்  திரும்பவும் கயல்விழியை நெருங்கி கேட்டான்...

" சாதி தோன்றியது ஏன்?"

" என்ன சொல்றீங்க"

"சாதி எப்ப தோன்றுச்சு?... ஆரியன் வருகைக்குப் பின்னர் தானே?" 

கயல்விழியும், இளவரசும் ஏளனமாக புன்னகைத்தார்கள்...

" இப்படியொரு பாடம் எடுப்பீங்கனு நாங்க எதிர்பார்க்கலே... பேசாமே எங்களை சாகடிச்சிருங்க" 

"இளவரசு அமைதியா கேளுங்க...ஆரியன் அடியெடுத்து வைத்தப் பிறகுதான் இங்கே சாதி வந்துச்சு... ஆரியன் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்கினால் -  அந்த காலகட்டத்திற்கு நாம் தமிழ்  நாட்டை இழுத்துச் சென்றால் - போதும்... சாதி ஒழிஞ்சிரும்"

"மாரியப்பன், என்ன பேசறீங்க?... நடக்கக் கூடியதைப் பேசுங்க... ஆரியர்களை எப்படி ஒழிக்க "

"முடியும்!... ஆனால்; இந்தியாவோடு தமிழ்நாடு இருக்கும் வரைக்கும் ஆரியர்களை ஒழிக்க முடியாது... இந்தியாவின் பிடியிலிருந்து நாம் விலகி விட்டால் ஆரியத்தின் சுவடுகள் கூட மறைஞ்சிரும்... சாதி ஒழிஞ்சிரும்..."

"இந்தியாவிலிருந்து தமிழ்நாடு?"

"ஏன் விலக வேண்டும்  என்பதற்கு என்னால் ஆயிரம் விளக்கங்களை  அடுக்க முடியும்"   

மாரியப்பனின் விழிகளில் செந்நிறம் ஊர்ந்தது...
  


(  கயல்விழியின் பார்வை மாரியப்பன் மீது கூர்மையாகப் பாய்ந்தது...)



----------------------------------------------
38 - உயிரை யாசிக்கிறேன்...     
----------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
தமிழ்நாடு தனிநாடானால், ஆரியத்தை ஒழிக்க முடியும்... சாதியும் ஒழியும் என்றான் மாரியப்பன்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------

"இந்தியாவிலிருந்து தமிழ்நாடு?"

"ஏன் விலக வேண்டும்  என்பதற்கு என்னால் ஆயிரம் விளக்கங்களை  அடுக்க முடியும்"   

மாரியப்பனின் விழிகளில் செந்நிறம் ஊர்ந்தது...

கயல்விழியின் பார்வை மாரியப்பனை ஊடுருவியது...

"இந்த மண் - தமிழ் மண் - இது குமரிக் கண்டமாய் விரிந்திருந்த போதிருந்தே தமிழோச்சிய மண்!... ஆனால், இந்த மண் மீதான உரிமை இப்போ தமிழனுக்கு இருக்கா?... "

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி' ன்றீங்க... பூகோள ரீதியான மாற்றத்தில், இயற்கை மாற்றத்தை யாரால் தடுக்க முடியும்?"

"இயற்கையைத்  தடுக்கமுடியாது... ஆனா; தமிழ்  இனம் அழிஞ்சிகிட்டிருக்கு... முன் தோன்றிய மூத்தகுடியாம்  தமிழர் அடையாளம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது... சிட்டுக்குருவி இனம் அழிந்துக் கொண்டிருக்கிறது என்று கவலைப் படுகிறோம்... சிறு பூச்சிகள் - விலங்குகள் அழிந்துக் கொண்டிருக்கிறது  என்று கவலைப்படுகிறோம்... ஆனால்; தமிழ் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே...  தமிழன் கவலைப்பட வேண்டாமா?" 

" என்னச் செய்ய முடியும்?... "

" காதிலிக்கத் தெரிஞ்ச உங்ககிட்ட - காதலுக்காக உயிர்விட துணிஞ்ச உங்ககிட்டே  - நான் ஒரு பிச்சைக் கேட்கிறேன்"

இளவரசு, "மாரியப்பன், எங்க கிட்டே என்ன எதிர்பார்க்கிறீங்க? - என்று கேட்டான்...

''ஒருவேளை நீங்க செத்துட்டா, உங்க உடலை - உங்க உறுப்பை - தானம்  செய்ய மறுப்பீங்களா?"

" இதுதானா? உடலுறுப்பு தானம்ன்றது இப்ப சாதாரணம் ஆயிருச்சு... சரி; நாங்க செத்தப் பிறகு எங்க உடலை தானமா எடுத்துக்காங்க... முதலில் எங்களை சாகவிடுங்க"

" சிறுநீரகம்,  இதயம்னு திருடி காசு சம்பாதிக்கிற திருடனா என்னை நீங்க பாத்தீங்கன்னா உங்க எண்ணத்தை மாத்திக்கிங்க...  நான் கேக்கறது உங்க உயிர்!... உயிரை கேட்கிறேன் "

"உயிர்?"

"தற்கொலையில் மாய்க்கும் உயிரை, தமிழ் மண்ணுக்காக நான் யாசிக்கிறேன்"

"மாரியப்பன், விளக்கமா சொல்லுங்க"

"ஆமா!...  இனத்தின் மீட்புக்காக - தமிழின் தொன்மை அடையாளம் காப்பாற்றப்பட உங்க கிட்ட உங்க  உயிரை யாசிக்கிறேன்.." 
"..............................." 

"உங்களைக் கட்டாயம் படுத்தலை... சிந்திச்சுச்  சொல்லுங்க... தமிழ் இனத்தை நெஞ்சில் நிறுத்தி சிந்திங்க... நான் வரேன்"

சொல்லிவிட்டு மாரியப்பன் வெளியே போனான்!


(எங்கே போனான் மாரியப்பன்?) 




---------------------------------------
39 - இதுதான் காதலா ...      
---------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
தமிழ் மண்ணுக்காக உயிரை யாசகம் கேட்ட மாரியப்பன், வெளியே சென்றான்... 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
குகைக்கு வெளியே-
மழை நின்ற வானத்தில், வில்வளைவு ஏழு நிறங்களில் மிக அழகானத் தோற்றத்துடன் விளங்கியது...

அறிவழகன் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தான்...  
செவ்வந்தியிடம் பரபரப்போடு வந்தான் மாரியப்பன்...
அருகில்-
செம்மதி இருந்தான்...

"செவ்வந்தி, அவங்க தப்பிச்சிட்டாங்க"

" அண்ணே என்ன சொல்றீங்க?"

மாரியப்பன் குரல் கேட்டு, அறிவழகனும் அருகில் வந்தான்... 

" எப்படிண்ணே?"

"கொஞ்ச நேரம் அவங்ககிட்ட ஆறுதலா பேசிட்டு இருந்தேன்... 'இனிமேல் தற்கொலைக்கு முயற்சி செய்ய மாட்டோம்... நீதிமன்றத்தில் சரண் அடைஞ்சிட்றோம்... ஏற்பாடு செய்யுங்க' னு சொன்னாங்க...  'மழை நிக்கட்டும் போலாம்'னு சொன்னேன்... அப்படியே பாறைக்கு அடியில் படுத்த  நா என்னை யறியாமலே தூங்கிட்டேன்...  இப்ப கண் முழிச்சு பார்த்தேன்... ரெண்டு பேரையும் காணோம்..."

" இந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியலியே" - என்றான் செம்மதி!

"தோழர், நாங்க ஒதுங்கியிருந்த பாறைக்கடியில் சின்னச் சின்ன சந்துகள் மாதிரி நிறைய வழித் தடங்கள் இருக்கு... "

" ஏண்ணே, அவுகளுக்கு, காட்டுக்குள்ளே வழியும் தெரியாதே..."

" செவ்வந்தி அவங்க எந்த சந்து பொந்துக்குள் நுழைஞ்சாலும் ஒத்த மரத்தைத்  தாண்டித்தான் வெளியே போயாகணும்..."

"ஆமாண்ணே!... நாம ஒத்தை மரம் போனா அவங்களை கண்டுபிடிச்சிறலாம்..."

எல்லாரும் ஒத்த மரம் இருந்த திசை நோக்கி, பாறையில் தவ்வினார்கள்...

ஒத்தை மரம் இருந்த இடத்தை அவர்கள் நெருங்கியபோது-
புகைமூட்டமும் - கருகல் நெடியும் - உணர்ந்தார்கள்...

அருகில் நெருங்க நெருங்க...
கார் ஒன்று முழுதாய் எரிந்து சாம்பலாகியிருப்பதும்-
புகைக் கனன்று கொண்டிருப்பதையும் கண்டார்கள்...

மாரியப்பன் சொன்னான் :
"தற்கொலை செஞ்சிட்டாங்க"       

அறிவழகனும், செம்மதியும் மிரண்டார்கள்...

"தோழர்  குரங்கணி காடுப் பற்றி  குறும்படம் எடுக்க வந்தீங்க... எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துருச்சு... நீங்க புறப்படுங்க... வீணா, விசாரணைக்காக  நீங்களும் அலைய வேண்டிவரும்..."

அறிவழகன் சோகமானான்!

வெள்ளையுந்துவில் புறப்படும் போது -
செவ்வந்தியை ஆசையோடுப் பார்த்தான்...

இதுவே கடைசிப் பார்வை என அவனுள் சோகத்தை ஏற்படுத்தியது...   

செவ்வந்தியின் இதழ்கள் மெலிதாய் முறுவலித்தன... 

அறிவழகனின் கண்ணீர் கசிந்தன...

இதற்குப் பெயர் காதல் என்பதா?  
  


( மாரியப்பன் ஏன் பொய்ச் சொன்னான்?) 




-------------------------------------------------------
40 - மாரியப்பனும், செவ்வந்தியும் யார்?       
-------------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
குரங்கணி பற்றி குறும்படம் எடுக்க வந்த அறிவழகனை அனுப்பி வைத்தான் மாரியப்பன்... 
---------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளையுந்து சென்றவுடன்-

"செவ்வந்தி, அறிவழகன் உன்னை ஒரு மார்க்கமா பாத்துட்டு போறார்"

"நீங்களும் கவனிச்சீங்களா?"

" இந்த காதல் இருக்கே, ரொம்பவும் அதிசியமானது... எந்த இடத்திலே, யார்யாருக்கிடையில் வரும்னு சொல்லவே முடியாது"

" சரி... உள்ளே காதல் கதை எப்படி ஓடிட்டு இருக்கு?"

மாரியப்பன் கைகளை உயர்த்த- செவ்வந்தியும் உயர்த்தி - வெற்றியின் சின்னமாக ஒருவர் கையை ஒருவர் தட்டிக் கொண்டார்கள்...

பாறை சரிவில் இறங்கினார்கள்...

குகைமேடு வந்தது...

உள்ளே-



( மாரியப்பனும், செவ்வந்தியும் யார்?)



----------------------------------------------------
41 - தமிழ்நாட்டை அழிப்போம்...        
----------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
அறிவழகனை வழியனுப்பிவிட்டு மாரியப்பனும், செவ்வந்தியும் குகையை நோக்கித் திரும்பினார்கள்...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
குகைக்குள் -
மெலிதான இருட்டினூடே, கயல்விழி இளவரசு அமர்ந்திருக்க-

அவர்களின் எதிரில் திரை ஓடிக்கொண்டிருந்தது.

அழகிய மேற்குத்தொடர்ச்சி மலை 

அதில் நீரோடை 

மேகம் தழுவிடும் காட்சி 

மூலிகை செடிகள் -

அடர்ந்த மரங்கள்

வனவிலங்குகளின் நடமாட்டம்...

இவைகளினூடே குரல் ஒலிக்கிறது:

"மலையும், மலை சேர்ந்த வளத்தை தமிழன் ஒருபோதும் அழித்ததில்லை. ஏனெனில் மலைவளம் மக்கள் வாழ்வோடு இயைந்தது என்பதால், மலைவளம் காத்தனர் தமிழர்கள்.

உலகின் அழகிய தொடர்ச்சி மலை நமது மேற்கு மலைத்தொடர்!

நியூட்ரினோ என்ற பெயரில் தேனியில் அழகிய  மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டப்போகிறார்கள்.

இதனை இப்போது தமிழர்களால் தடுக்கமுடியாதா?

முடியாது!

அதிகாரமற்றவர்களாக - வளம் மிகுந்த நமது தமிழ்  மலையின் மீது உரிமையற்றவர்களாக - இன்று தமிழர்கள் இருப்பதால்தான், டில்லியிலிருந்து தமிழ் நாட்டின் மலையைத்  தோண்ட தமிழனின் ஒப்புதல் இன்றியே வருகிறான்.

தேனிமலை அடிவாரத்தில் , ஆயிரத்து முன்நூறு  அடி கீழாகவும் இரண்டாயிரத்து ஐநூறு அடி தூரத்திற்கும் மலையை உடைக்கப்போகிறார்கள்.

ஆயிரம் டன் வெடிப்பொருள் உபயோகித்து நமது மலையை தகர்க்கப் போகிறார்கள்...

ஒரு லட்சம் டன் பாறையை வெட்டி எடுக்கும்போது இந்த மலை மட்டுமல்ல மலையைச்சுற்றிலும் நூறு கிலோ மீட்டர் பரப்பில் தூசிகள் படிந்து மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக தமிழனின் மலை மாறிவிடும்.

இப்படி மூன்று சுரங்கங்கள் வெட்டும்போது, இந்த நிலத்திலன்  ஒட்டுமொத்த நிலத்தடி நீர் வளம் அழியும்.

மேற்பரப்பு முழுதும் பாலையாகி விடும்.

இதுபோன்ற திட்டத்தால்தான், வளம் மிகுந்த சோமாலிய நாடு இன்று எலும்பும் தோலுமாய் மாறிவிட்டதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யாருடைய நிலத்தை யார் பாழ்ப்  படுத்துவது?

நியூட்ரினோ என்று அழைக்கப்படும் மின் நுண் துகள் தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தின் மீது மட்டுமே  விண்ணிலிருந்து பொழிவதாக மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உலகின் எந்த ஒரு ஒரு சதுரடி நிலத்தின் மீதும் வினாடிக்கு நாற்பது கோடி நியூட்ரினோ துகள்கள் விண்ணிலிருந்து பூமி மீது விழுகின்றன.

இப்படியிருக்கையில்-
மக்கள் வசிக்காத எத்தனையோ மலைகள் - இடங்கள் - வடநாட்டில் இருக்க,

குறிவைத்து தமிழ்நாட்டை தேர்வு செய்து இந்தத் திட்டத்தை தொடர வேண்டியதேன்? 

முப்பதாயிரம் ஆண்டுகள்  தொன்மைக் கொண்ட தமிழர்களின்  அடையாளத்தை  அழித்து, தமிழன்  என்ற இனமே கிடையாது எனும் நிலையை ஏற்படுத்த வகுக்கப்பட்ட சூழ்ச்சியிதுவன்றி வேறென்ன?

இதோ இங்கே பாருங்கள்..."  
   

( திரையில் மேலும் காட்சிகள் ஓடலாயின ) 




------------------------------------------------------
42 - உலகின் முதல் கப்பல் படை!         
------------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
---------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
நியூட்ரினோவால் தமிழ்நாடு இழக்கப் போகும் வளத்தைக் காட்டியத்  திரையில், மீண்டும்- 
---------------------------------------------------------------------------------------------------------------------------
குகைக்குள் -
செவ்வந்தியும், மாரியப்பனும் நுழைந்தார்கள்...

மெலிதான இருட்டினூடே அவர்களின் நுழைவை  கயல்விழி. இளவரசு இருவரும் அறியவில்லை...

அவர்களின் முழு எண்ணமும் திரையில் பதிந்திருக்க-

திரையில் -

இலெமூரியா கண்டம்  அல்லது குமரிக் கண்டம் காட்டப்பட்டு ஒலியால் விளக்கம் தரப்பட்டது...

"இலெமூரியா கண்டம் கடல்கோள்களால் அழியும் முன்னர் அதன் பரப்பளவு மூவாயிரம் மைல்களுக்கும் மேலாக இருந்தது.

இதன் நிலப்பரப்பு முற்றிலுமாக தமிழர்கள் வாழ்ந்தப்  பரப்பாக விளங்கிற்று...

கடல் கொடுங்கோளுக்குப் பின்னர்- 

எஞ்சிய சிறுபகுதி சேரர், சோழர், பாண்டியர்  மன்னர்களால் ஆளப்பட்டன...

உலகில் முதல்முதலில் கப்பற்படையைத் தோற்றவித்தவர்கள் சோழர்களே!...

சோழர்களின் கப்பற்படையின் ஆதிக்கமும், வணிகமும்  சீனா, எகிப்து, சுமத்திரா, சப்பான்  நாடுகளோடு நீண்டிருந்தது...     
   
ஒரு நாட்டின் மீது படையெடுக்க பல நூறு யானைகளையும், ஆயிரக்கணக்கான படைவீ ரர்களையும், ஆயுதங்களையும், பிற போர் கருவிகளையும் ஆண்டுக் கணக்கிற்கு  தேவையான உணவுப் பொருட்களையும் சுமந்து செல்லும் வலிமைப் படைத்த கப்பற்படை தமிழர்களிடம் சோழநாட்டில் இருந்தது...

சோழநாடு உலகின் பலநாடுகளும் உணவு ஏற்றுமதியில் சிறப்புடன் விளங்கியது...

ஆனால், அந்த சோழப் பெருவளநாட்டின் ஆளுமை தமிழனிடம் இப்போது இல்லாததால், டில்லி ஏகாதிபத்தியம் தமிழனின் சோழ பெருவளநாட்டை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து விட்டது...

யாருடைய நிலத்தை யார் அறிவிப்பது?

மீத்தேன், கைட்ரோ கார்பன் எடுப்பு என்ற பெயரில் சோழப் பெருவளநாட்டின் விளைநிலத்தை, பாலை நிலமாக்கி - வசிக்கத் தகுதியற்ற மண்ணாக்கி -   தமிழ் மக்களை அகதிகளாக்கி-  தமிழ் மண்ணிலிருந்துத்  தமிழரை அகற்றிடும் பேராபத்தினை இந்தியா அரசு செய்து வருகிறது...  
கடல் கொடுங் கோள்களால் தமிழன் பெரு நிலப்பரப்பை இழந்தான்...

இப்போது எஞ்சிய சிறுநிலப்பரப்பையும் அழித்து, தமிழின அழிப்பையும் இந்திய ஏகாதிபத்தியம் கையில் எடுத்துள்ளது...
இதோ இதைப் பாருங்கள்..."    


( திரையில் மேலும் காட்சிகள் ஓடலாயின ) 



---------------------------------------
43 - இந்தியாவின் சதி!...        
---------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
சோழநாடு பாலைநாடாக மாறவிருக்கும் அபாயத்தை உணர்த்தியத்  திரையில், மீண்டும்- 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
குகைக்குள் -
திரையில் படம் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது...

செவ்வந்தி மற்றும்  மாரியப்பனின் வருகையை அறியாமல் திரையில் ஆழ்ந்த கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர், கயல்விழியும், இளவரசும்...

நொறுக்குத் தீனி இருவருக்கும் பரிமாறப்பட்டது...

அதனைத் தொடாமல், திரையில்  சிந்தையை ஆழ்த்தியிருந்தனர்...

திரையில்  ஓடிக் கொண்டிருக்கிறது...பின்னணியில் ஒலி விளக்கம் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது...
"இதோ 

தமிழ் நாட்டின் கடல்வளம்...

நெடிய கடல் வளத்தை எந்த இடையூறுமின்றி தமிழ் மீனவன் நுகர்ந்து வந்தான் தமிழினம் தோன்றியக் காலத்திலிருந்து!...

இப்போது தமிழ்க் கடல் பகுதியின் முழு ஆதிக்கத்தையும்  இந்திய அரசு எடுத்துக் கொள்ளவிருக்கிறது சாகர் மாலா எனும் திட்டத்தின் கீழ்!...

அதாவது தமிழ் நாட்டின் கடல் வாழ்  உரிமை தமிழ் மீனவனிடமிருந்து பறிக்கப்பட்டு, கார்பொரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சியென்பதே தமிழர்களின் குற்றச்சாட்டு!

சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கடற்பரப்பு இனி மீன்பிடிக்கவும் தமிழனுக்கு உரிமையற்றதாக ஆகப் போகிறது...

இந்திய ராணுவத்தின் தளமாகவும் நமது கடற்பரப்பை  மாற்றியமைத்து தமிழனின் தமிழ் மண் மீதான உணர்வை அச்சுறுத்த விருக்கிறது  இந்திய அரசு!... 

இங்கே பாருங்கள் சேலம் சுற்றியுள்ள மலையழகை!...

பசுமை வழிச்சாலை அமைக்கப் போகிறதாம் இந்திய அரசு!

இருக்கும் சாலைகளை மேம்படுத்திடாமல் எட்டு வழி பசுமைவழிச் சாலைக்கு என்ன அவசரம்...

தமிழ்நாட்டின் கனிமவளத்தை ஜிண்டால் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் இந்தியாவின் முயற்சியிது என்பதும் தமிழர்களின் குற்றச்சாட்டு!

எந்தக் காலத்திலும் தமிழர்கள் மலை வளத்தை - இயற்கை வளத்தை அழித்ததில்லை!

இப்போது தமிழ் மக்களின் உணர்வைப் பொருட்படுத்தாமல், நான்காயிரத்து அய்நூறு எக்டேர் விளைநிலம் அழிக்கப் படவிருக்கிறது...

எட்டு மலைகள் உடைக்கப்பட வுள்ளன...

இந்த மலைகளில் கிடைக்கும், இரும்புத்தாது, பிளாட்டினப் பாறைகள், கருங்கற்கள், பாக்சைட், மக்னீசு போன்ற கனிமவளங்கள் சுரண்டப்படுமா இல்லையா இந்த  எட்டு வழிசாலைத் திட்டத்தால்... 

ஜிண்டால் நிறுவனத்தின்  சுரண்டலுக்குத்  தமிழ் மண்ணைத்  தாரை வார்க்கிறது இந்தியா; கச்சத்தீவைத்  தாரை வார்த்தது போல்!...

பசுமைவழிச் சாலை, எனும் பேரில்  பத்து லட்சத்திற்கும் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படும்...

இதனால், தமிழ்மக்களின்  சுவாசக் காற்று அழிக்கப்படும்...

கார்பண்டை ஆக்சைட் அதிகரித்து வாழத் தகுதியற்ற நிலமாகும் தமிழ் நிலம்...

ஆறுகள், குளங்கள், ஏரிகள் கிணறுகள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, தமிழ்நாட்டின்  நிலத்தடி நீர் வளத்தையும் அழித்துவிடும் இந்தியா!... 

இந்தியாவின் சதியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் கடமை தமிழனுக்கு  உண்டா? இல்லையா?

இதோ இங்கே பாருங்கள்..."     


( திரையில் மேலும் காட்சிகள் ஓடலாயின ) 



--------------------------------------
44 -  தமிழ்ப் பினங்கள்...          
--------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
எட்டு வழி சாலைத் திட்டத்தால், தமிழ்நாட்டின் நிலத்தடி நீரும், சுவாசக்காற்றும் அழிந்து விடும் என்றும் காட்டியதுத் திரை!...  மீண்டும் திரையில் - 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிந்தனையைத் தூண்டியது திரை!

கயலும், இளவரசும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

அவர்களையறியாத கோபம் கண்களில் தொற்றியிருந்தது...

பருக தேனீர் தரப்பட்டது...

இளஞ்சூட்டின் தேனீர் தொன்டைக்  குழிக்குள் இறங்கி, 'கடக்' என்று ஒலியை எழுப்பியது இருவருக்கும்...

உதடுகளை கயல் கடித்தாள்.... அது அவள் அறியாத கோபத்தின் வெளிப்பாடு!

திரையில் மீண்டும் காட்சிகள் ஓடின...

பின்னணிக் குரலில் விளக்கம் தரப்பட்டது...

" ஈழத்தைப் பாருங்கள்...

நமது தொப்புள் கொடி உறவுகள்...

அவர்கள் இழைத்தப் பிழை என்ன?

தமிழ்ப் பேசுங்குடியில் பிறந்ததா?

இரசாயண வேதியியல் குண்டுகள் வீசி, நம் தமிழ் மக்கள் இரண்டு லட்சம் பேர்  கொல்லப் பட்டனரே ...

ஏனென ஒருநாடும் கேட்கவில்லையே!...

பாரில் பலநாடுகள் ஆண்ட தமிழன் இன்று ஓரடி நிலத்திற்கும்  உரிமையற்றவனாகி  விட்டான்...     

அதனால், ஈழத்தமிழர்கள் கொண்று குவிக்கப்பட்டதை நினைத்து கண்ணீர் விடவும், ஒப்பாரி வைக்கவும் கூட முடியவில்லை....

ஏனெனில் இந்தியா  எம்மை சிறைப் படுத்திடுமோ என்ற அச்சம்!

தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்தியா, தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்க - தமிழ்மக்களின் வரிப்பணத்தையே பயன்படுத்துகிறது என்பது எத்தனைக் கேவலம்?...

தமிழனுக்கென ஒரு நாடு இருந்திருந்தால், கொத்துக் கொத்தாய் தமிழனைக் கொன்றுக்  குவிக்க சிங்களவன் துணிந்திருப்பானா?

இந்தியன் திமிர் கொண்டுக்  கொக்கரிப்பானா?     

இதோ தூத்துக்குடியைப் பாருங்கள்" 


(  நார்நாராய் கிழிந்துக் கிடக்கும் தமிழ்ப் பிணங்களின் மீதிருந்து, காட்சியை தூத்துக்குடிக்குத் திருப்பியது திரை! ) 



--------------------------------------------------------
45 - இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?...           
--------------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
---------------------------------------------------------------------------------------
முன்கதை : 
ஈழமக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டக்  காட்சி திரையில் ஓடியது...  
தூத்துக்குடிப் பக்கம் காட்சிகள் திரும்பின- 
----------------------------------------------------------------------------------------
காட்சிகள் ஓடின...

துப்பாக்கி குண்டுகளின் வெடிச் சத்தங்களுக்கிடையே கரும்புகைக்குள் மக்கள் சிதறி ஓலமிட்டு ஓடிக் கொண்டிருந்தனர்...

பின்னணிக் குரலில் விளக்கம் தரப்பட்டது...

இவர், சுனோலின் - பதினெட்டு வயது பள்ளிமாணவி!

இவர் செய்த தவறு என்ன?

தமிழச்சியாய்ப்  பிறந்து, தமிழ்மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பிய இந்த சின்னப் பெண்ணின் வாயில் துப்பாக்கியை சொருகி சொட்டுக் கொன்றது யார்?

தமிழ்மக்கள் உரிமைக்காகவும் வாய் திறக்கக் கூடாதா?

உரிமைக்கு குரல் எழுப்பினால், தமிழ்  மக்கள் சுட்டுக் கொல்லப் படுவார்களா?

நச்சுப் புகையை கக்கிக் கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொன்னதற்குத்தான் சுனோலின் சுட்டுக்கொல்லப்பட்டார்...

தமிழன் இப்படித்தான் வாழவேண்டும் என்று நியதியை வரையறுக்க இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கீழடியைப் பாருங்கள்- 

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்தத்  தடயங்கள் அழிக்கப் படுகின்றன இந்திய அரசால்...

ஏன்?

தமிழனின் தொண்மை வெளியுலகிற்கு தெரிந்துவிடக்கூடாது; தமிழ் இனம்  தனிப்பாராம்பரியம் கொண்ட இனம் என்பதை மூடி மறைக்கப்படுகிறது...

கீழடியில் கிடைத்த ஆய்வுகளின் படி ஆரியன் அப்போது  தமிழ் மண்ணில் நுழைந்திருக்கவில்லை...     

அவன் வந்தேறி என்பதற்கு கீழடியே பெரும் சான்றாகத் திகழ்கிறது... 

இதோ சமீபத்திய கொடுமைகள்..."

திரையில் ஓடிய காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன கயல்விழிக்கு! 



(  அது என்ன காட்சி? ) 



---------------------------------------------
46 - கயல்விழி கத்தினாள்...            
---------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி தமிழ் மக்களின் சுவாசத்தை நெறிக்கும் காட்சியும்-
கீழடியின் அகழ்வாய்வினை மூடிமறைக்கும் இந்திய அரசின் நயவஞ்சகத்தையும் காட்டியத்  திரையில்-
செயற்கைப் புயல் குறித்து விளக்கம் தரப்பட்டது... 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

காட்சிகள் ஓடின...

பின்னணிக் குரலில் விளக்கம் தரப்பட்டது...  

"ஒரு தேசிய இனத்தையும், ஒரு நாட்டையும்  நவீனத்  தொழிற் நுட்பத்தின் உதவியோடும் அழிக்கலாம்...

இதோ காவிரிப்படுகையில் வீசிய கஜா புயலில் நாசமான காட்சிகள்...

வேரோடு சாய்ந்த மரங்கள் - வீடுகள் - சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டனர்  காவிரிப் படுகை தமிழ்மக்கள்...

இந்தியாவின் சிறு ஆறுதல் மொழியும் இவர்களுக்குக் கிட்டவில்லை...

இதோ சோறு கொடுக்க வருவோரை ஏங்கிய விழிகளுடன் - பசித்த முகத்தோடு எதிர்ப்பார்த்து அலையும்  தமிழ் மக்கள்...

இதோ அக்கரையிலிருந்து சிறுவன் ஒருவன் நீந்தி வருகிறான் இக்கரைக்கு... பசிக்கு ஏதும் கிட்டாதாவென்று...

மடிந்துற்ற விலங்கினங்களினூடே - அழுகிய இலை தழைகள் சூழ, நோய்த் தொற்றுகளோடு தமிழ் மக்கள் வேதனையில் நொந்திருக்க-

இந்தியாவின் பிரதமர், ஒரு  நடிகையின் மணவிழாவில் மகிழ்ச்சியோடு மகிழ்ந்திருக்கும் காட்சி!...

இந்தியாவிடமிருந்து வருத்தமோ உதவியோ எதிர்ப் பார்ப்பது மடத்தனம் அல்லவா...

காவிரிப் படுக்கையை அழிக்க,  காவிரியைத்  தடுத்து நிறுத்தலாம்...

அல்லது இப்படியோர் செயற்கைப் புயலையும் ஏவிவிடலாம்...

இங்கே பாருங்கள்-

நாகபட்டினத்திற்கும், சென்னைக்கும் நடுவில் முன்னூறு  கல் தொலைவில் புயல் நிலைக் கொண்டிருக்கிறது...

இப்படி ஏவினால்  சென்னையை அழிக்கலாம்... 

இந்தத் திசைக்குப் புயலை  ஏவினால் நாகப்பட்டினத்தில் தொடங்கி, காவிரிப் படுக்கையை முழுதாய் நாசமாக்கி, கொடைக்கானல் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையையும்  தாக்கிட செயற்கையாய்  உருவாக்கப் பட்டதுதான் கஜாப் புயல் என்ற அய்யப்பாடு தமிழர்களின் நெஞ்சில் முளைக்க ஏதுவுண்டல்லவா 

மேற்குத்தொடர்ச்சி மலையை அழித்தால், நியூட்ரினோவுக்கு தடையெழாது... 

காவிரிப் படுகையை அழித்தால், மக்கள் அகதிகளாகி வெளியேறி விடுவார்கள்... 

தடங்கலின்றி தமிழர் நிலத்தை ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு 
தாரை வார்க்கும் முயற்சித்தான் கஜாப்புயல்!...

அதன் முன்னோட்டம் தான் காவிரிப் படுகையை எண்ணெய் மண்டலமாக இந்திய அரசின் அறிவிப்பு!...

 தமிழர் கடல், எண்ணைப் படலாம் ஆனது தற்செயல் நிகழ்வா?

திட்டமிட்டு தமிழ் இனம் - தமிழ் மண் - தமிழர் வளம் அழிக்கப் படுகிறது!...

நாம் என்ன செய்யப் போகிறோம் "

"ஸ்டாப் இட்" - கயல்விழி கத்தினாள்...

திரை நின்றது!        
     

(  கயல்விழி ஏன் கத்தினாள்? ) 


-------------------------------------------------------
47-இந்தியாவுக்கு தமிழனும்  வரி கட்டுகிறானே!  
-------------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
கஜாப்புயலின் கோரத் தாண்டவத்தால் நாசமான தமிழ் மக்களின் பரிதாபம் கண்டு கண்கலங்கிய கயல்விழி,  கத்தினாள்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஸ்டாப் இட்" - கயல்விழி கத்தினாள்...

திரை நின்றது!

எழுந்து நின்றாள் கயல்விழி!        

இளவரசுவின் கையைப் பற்ற -
அவனும் எழுந்து நின்றான்...

"தோழரே"

கயல்விழியின் வாயிலிருந்து முதன் முறையாக தோழரே எனும் சொல் மாரியப்பனை நோக்கிப் பாய்ந்தது...

கயல்விழியின் விழிகள் கலங்கியிருந்தன...

ஆற்றாமையால் இதயத்துடிப்பு அதிகரித்து காணப்பட்டது...

"இதற்குத் தீர்வு என்ன தோழரே"

" தனிநாடு" - மாரியப்பன்.

"தமிழ் மக்களும் வரி கட்டுகிறோம் இந்திய அரசுக்கு!... இந்திய அரசு ஏன் நம்மை வஞ்சிக்கிறது தோழரே" - இளவரசுவின் வினாவில் அனல் படிந்திருந்தது...

"இந்தக் கேள்வியால்தான் நாம் நம் நாட்டை நாம் மீட்டெடுக்கும் சிந்தனை நம்மிடத்தில்  பிறக்கிறது..."  - செவ்வந்தி!

"தோழரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" - கயல்விழியின் தொடுப்பில் கோபம் பொங்கியது!

மாரியப்பன் மீண்டும் சொன்னான் : " தமிழ் நாட்டை மீட்கும் பணிக்கு நீங்கள் உதவ வேண்டும்..."

"மீட்க முடியுமா?" - கயல்விழி.

"அவ்வளவு எளிதானதல்ல!... ஏனெனில், தமிழ்நாட்டின் வருவாய்தான்  இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக விளங்குகிறது... இந்தத் தூணை இழக்க இந்தியா விரும்பாது... கடுமையான சித்திரவதைக்கு நாம் உள்ளாக வேண்டி வரும்..."

" மாற்று?"

"மாற்று... மாற்று என்றால், போராடுவதுதான்"... 

"ஆனால் உயிர்ச்  சேதம் நினைத்துப் பார்த்தீர்களா?" - கயல்விழி.

" இரத்தம் சிந்தாமல் விடுதலைப் பெற முடியாது"

"நாங்கள் இரத்தம் சிந்துகிறோம்... என்ன செய்வேண்டும்?"

"தமிழனின் இரத்தம் சிந்தல் வீணாகக் கூடாது... ஆனால்; அதேநேரம் போரும் இடாமல் நம்நாட்டை மீட்க  முடியாது.... நமது போர் என்பது  தொழிநுட்பம் நிறைந்ததாக இருக்கவேண்டும்... எல்லையில் எதிரியின்  நுழைவை நூறு கல்தூரத்தில் இருந்தே கவனித்து, தகர்க்கும் தொழிற் நுட்பம்"

"வாழ்க தமிழ்நாடு!... வெல்க தமிழ்நாடு " - கயல் முழங்கினாள்!

அப்போது ஐநூற்றி பதினொன்று : "தோழரே, காவல்துறை ஒத்தமரத்தடிக்கு வந்துவிட்டது..."

அய்நூற்று பதினொன்று காட்டிய கணினித்  திரையை மாரியப்பன் பார்த்தான்...

காவல்துறையினரோடு  அறிவழகனும் நின்றிருந்தான்-
கருகியக்காரின் அருகே!        

" இடம் மாறுக" என்று கட்டளையிட்டான் மாரியப்பன்.

குகைக்குள் இருந்தவர்கள் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு, மாற்றுப்பாதையில் வேறு முகாம் நோக்கி வெளியேறினர்...
கயல்விழியும், இளவரசுவும் அவர்களோடு வெளியேறினர்...



(  அறிவழகன் ஏன் வந்தான்... மாரியப்பனின் நடவடிக்கையை காவல்துறையிடம் கூறியிருப்பானோ? ) 



-----------------------------------------------
48 - தமிழ் வீரர்கள் பயிற்சி !...
 ----------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
ஒத்தமரம் அருகே காவல்துறையோடு அறிவழகனும் வந்திருப்பதை கணினி காட்டியது... முகாமிலிருந்து வேறு முகாமுக்கு மாற மாரியப்பன் உத்தரவிட்டான்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனி மலைக்காட்டின் பாறை இடுக்குகளின் ஊடே பதுங்குப் பாதைகளில் நுழைந்து வேறு முகாமை அடைந்தனர்...

அங்கும் சில நூறு தமிழ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்...

தேனி காடெங்கும் நுண்ணிய மின்னோடுகள்  பொருத்தப் பட்டிருந்தன...

நடப்பதைக் காணவும், உரையாடலைக் கேட்டிடவும் அந்த ஒற்று ஓடுகள்  தமிழ் மறவர்களுக்கு உதவின...

"இங்கே நான் யாரை சந்திச்சாலும் மாரியப்பனைக் கேளுங்கனு மட்டும் சொல்றாங்க...  மாரியப்பனை  தீவிரவாதியானு என்னால் உறுதிப் படுத்த முடியலை... ஆனாலும், மாரியப்பன் பேச்சு நக்சலைட் பேச்சு மாதிரிதா  இருக்கு..."

"அறிவழகன் நீங்க  தீவிரவாதிகளுடன் பழகி அவங்க நடவடிக்கையை கண்கணிச்சு  போலீசுக்கு ரொம்ப உதவி செஞ்சிருக்கீங்க... மாரியப்பனைப் பற்றி கூடுதல் தகவல் வேணுமே..." - காவல் ஆய்வாளர்!       

" சார்... அது பிரச்னை இல்லை... நான் பாத்துக்குறேன்... கயல்விழியும், அவள் காதலனும் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க...  இல்லைனா, இன்னும் ஒரு ரெண்டு நாள் மாரியப்பன் கூட இருந்து என்னால் தகவல் திரட்டியிருக்க முடியும்..."

" ம்... கயல்விழியும், காதலனும் தற்கொலை செஞ்சதை நீங்க நேரில் பாத்தீங்களா..."

"இல்லை சார்... மாரியப்பன் எங்களை ஒரு இடத்தில நிற்க வெச்சுட்டு கயல்விழியையும், காதலனையும்  மட்டும் உள்ளே கூப்பிட்டிட்டு போனாரு..."

"அந்த இடத்தைக் காட்டமுடியுமா?"

"கச்சிதமா சூட் பண்ணியிருக்கேன்... வாங்க காட்றேன்..."

காவல் ஆய்வாளரும், சில காவலர்களும் அறிவழகனோடு பாறைச் சரிவில் இறங்கி நடக்கும் காட்சியை, கணிணிக் காட்டிக் கொண்டிருக்க-

அதை மாரியப்பனும், தோழர்களும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்...

" நமது முதல் தாக்குதலுக்கான நேரம் வந்து விட்டது... இப்படியொரு நேரம்தான் நம்மை தமிழ் மக்களுக்கு அடையாளம் படுத்தும்"  - என்றான் மாரியப்பன்!

அதே நேரம்-
செவ்வந்தி ஓரிடத்தில் விறகு பொறுக்கிக்  கொண்டிருப்பதை அறிவழகன் பார்த்தான்...  

செவ்வந்தியும் எதேச்சையாகப் பார்ப்பது போல் பார்த்து, ஒரு திடுக்கிடலை வெளிப்படுத்தினாள்...

அதனைத் தொடர்ந்து மெல்லியப் புன்னகையை அறிவழகனுக்கு காட்டினாள்... 

அந்தப் புன்னகையில் சொக்கினான் அறிவழகன்!   


(  அறிவழகனுக்கு மரணம் காத்திருந்தது...)


-------------------------------------------------
49 - மனசைக் கிள்ளிவிட்டுப் போனவனே.
--------------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
காவல்துறைக்குத்  தகவல் பரிமாறும் வேலைச் செய்து வரும் அறிவழகன், மாரியப்பன் அழைத்துச் சென்ற இடங்களை, காவல் துறையினருக்குக் காட்டிக் கொண்டிருக்கையில் செவ்வந்தியின் சிரிப்பில் கிறங்கினான்... 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வந்தியின் புன்னகை வீச்சு அறிவழகனின் இதயத்தை மின்னல் போல் சுண்டியது...

அடுத்து அவள் வீசிய கண்வீச்சில் அறிவழகனின் இதயம் நொறுங்கியது...

காவலர்களுடன் உடன் செல்ல அவன் கால்கள் தயங்கின...

"அறிவழகன்" - காவல் ஆய்வாளர் திரும்பிப் பார்த்து அழைத்தார்...

"சார், இந்த பாறை அடியில் போங்க... மாரியப்பன் போன இடம் இதுதான்... " என்று ஒரு பெரும் பாறையின் அடி  இடுக்கைக் காட்டினான்...

காவலர்கள் உள்ளே நுழைந்தார்கள்...

அறிவழகன் செவ்வந்தியைப் பார்த்து நின்றான்...

செவ்வந்தி, அறிவழகனை அருகில் வர சைகை செய்தாள்...

அறிவழகனின் இரத்தம் அதிக விசையில் ஓடி இதயத்தைச் சுண்டியது...

அறிவழகன் பேசத் தெரியாதவன் போல் முழித்தான் செவ்வந்தியைப் பார்த்து...

செவ்வந்தி மேலும் சைகை செய்தாள்...

காட்சிகள் யாவும் பாசறையில் தெரிந்தன...

" நூற்று ஏழு " - என்று அழைத்தான் மாரியப்பன் 

நூற்று ஏழு வந்து நின்று " தோழரே " என்றான்.

"நமது சோதனைக் களம் ஆரம்பமாகட்டும்"

கணிணியில் தெரிந்த அறிவழகனின் முகத்தை கணிணி ஒற்று - ஸ்கேன் - படுத்தியது...

என்ன நடக்கிறது என்பதைக் கேட்க ஒருவித தயக்கமும் - அதேநேரம் மனதில் திகிலும் கொண்டிருந்தாள் கயல்விழி...

" தோழரே, அறிவழகனை என்ன செய்யப் போறீங்க"

"சாகடிக்கப் போறோம்... எதிரியைவிட - காட்டிக் கொடுப்பவன் மிக ஆபத்தானவன்"

"அவனை சாகடிச்சிட்டா?"

"நமக்கு வேலை அதிகமாகும்"

"புரியல"

"அமைதியா கவனிங்க " என்றான் மாரியப்பன்...

காவலர்கள் பாறை இடுக்கின் அடியில் இருந்து வெளியே வந்தார்கள்...

"அறிவழகன், இந்தப் பாறைதானா?"

" என்னாச்சுங்க சார்"

"உள்ளே போறதுக்கு வழியில்லையே... நல்லா யோசிச்சு சொல்லுங்க... வேற இடமான்னு"

" சார், அதோ அந்தப் பொண்ணுதா, மாரியப்பன் கூட இருந்துச்சு... "

"விறகு பொறுக்குறவளாச்சே"

"இந்தப் பொண்ணுதா மாரியப்பனை எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சா... நா போய் அவகிட்டே கேட்டுட்டு வரேன் சார்"

"அறிவழகன், ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி மாரியப்பன் நக்ஸலைட்னா, இவளும் அந்த கூட்டத்தை சேந்தவளா இருக்கனும்...  போலீஸ் கூட நீங்க வந்திருக்கிறது தெரிஞ்சா, அவ உண்மையை சொல்ல மாட்டாளே "

அறிவழகன் எதிர்பாராத ஓர் அதிர்ச்சியை அப்போது செவ்வந்தி செய்தாள்...

கண்ணடித்தாள்...

அறிவழகன் திக்குமுக்காடினான்...

" சார் இவ என் ஆளு சார்... கொஞ்சம் பொறுங்க சார்... இப்ப நான் வந்துடறேன்..."

செவ்வந்தியை நோக்கி நடப்பது கணிணியில் தெரிந்த்தது...

"செவ்வந்தியா சாகடிக்கப் போற?"

"மூச்" என்று நூற்றுமூன்று உதட்டில் கைவைத்து கயல்விழியை எச்சரித்தான்...

"கயல்விழி, பயமா இருக்கா... பயம்தான் நமது முதல் எதிரி...
நம்முடைய இலக்கு நம் நாட்டை மீட்பது மட்டுமல்ல... ஆரியர்களையும் ஓட்டுவதுதான்!... ஆரியத்தால் நம் மண்ணை இழந்தோம்... இப்போது நாம் மீட்கவிருக்கும் நமது தேசத்தில் ஆரியர்களுக்கும் இடமில்லை... அவர்கள் வகுத்த சாதிக்கும் இடமில்லை... ஒரே கல்லில் இரண்டு மாங்கனி"

அறிவழகன் செவ்வந்தியின் அருகே வந்தான்...

அணைக்கத் துடித்தான் மனதில்...

ஏனோ அவனுள் தயக்கம் அவனைத் தடுத்தது...

செவ்வந்தி அருகாமையில் வந்து, நாணத்துடன்  " எங்கே நீங்க வரமாட்டீங்களோனு நெனச்சேன்... என் மனசைக்  கிள்ளிட்டு, நீங்கப் பாட்டுக்குப்  போயிட்டீங்க... உங்களைப் பாக்க முடியாதானு நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தா தெரியும்..."

அவள் விழிநளினங்கள்  காமத்தை சுரந்து அறிவழகன் மீது தூவியது...

இதழை மடித்து, அவன் மீது புன்னகையை விசிறினாள்...  

அறிவழகன் தன்னை மறந்து நின்றான்...

செவ்வந்தி மெல்ல மெல்ல அடியெடுத்து நடையிட்டாள்...

அசையும் இடுப்பின் அழகில் அறிவழகன் மயங்கி நின்றான்... 

மெதுவாய்த் திரும்பி அறிவழகனைப் பார்த்து நாணம் செய்தாள் ... 

அப்படியே தாவணி விளிம்பை உயர்த்தி அசைத்தாள்...

அடுத்த சில நொடிகளில் சின்னஞ் சிறிய சிட்டுக்குருவி போல் ஒன்று  சீறிவந்து அறிவழகனின் உச்சியில் இறங்கிய, அதே கணம் அவன் வெடித்துச் சிதறினான்...

ஏற்பட்ட கரும்புகைக்குள் செவ்வந்தி மறைந்தாள்...   
           

(  காவல்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?)



----------------------------------------------
50 - இந்தியனே வெளியேறு 
----------------------------------------------
குரங்கணி காடு  
   தொடர்கதை
    -அரங்க கனகராசன் 
----------------------------------------------------------------------------------------------------
முன்கதை : 
எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டு, அறிவழகனை சிறு சிறு பிசிறாக சிதறடித்தது... கரும் புகைக்குள் செவ்வந்தி மறைந்தாள்... 
-----------------------------------------------------------------------------------------------------

திடீரென்று ஏற்பட்ட வெடிச் சத்தம், காவலர்களுக்கு  திகிலூட்டியதோடு, அச்சத்துடன் பயந்து சிறுது தூரம் ஓடினர்...

ஓடிய வேகத்தில் பாறை சறுக்கலில் விழுந்ததால் ஓரிரு காயங்களும் ஏற்பட்டன காவலர்களுக்கு!

வெடிச்சத்தம் அடங்கி, கரும்புகை மெலிதாகத் தெளிந்த பிறகே, காவல் ஆய்வாளர் பாறை மறைவிலிருந்து எட்டிப்பார்த்தார்...

பிறகு-
மெதுவாக - மிக - லாவகமாக வெடி நிகழ்ந்த இடத்தை நெருங்கி ஆய்ந்தனர் காவலர்!

உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார் :
" ....................................... எஸ் சார்... யாருனு தெரியலே... நம்ம இனபார்மர் செத்துட்டார்... ஆனா பாடி எங்கிருக்குனு தெரியலே... நம்ம இன்பார்மர் கூட ஒரு லேடியும் இருந்தா....................... ஆமாங்க சார்... விறகு பொறுக்கிட்டு இருந்தா... அவளும் செத்துட்டா போலிருக்கு....................... ரெண்டு பேர்  பாடியும் இல்லை... இரத்தக் கறையிருக்கு........................ சின்ன சின்னதா சதைகள் பாறையில் ஒட்டியிருக்கு  ....................... ....... ................ ................ ஓகே சார்..."

பேசிவிட்டு, வெடி நிகழ்ந்த இடத்தை படம் பிடித்து உயரதிகாரிகளுக்கு உடனடியாக கட்செவி வழியே அனுப்பினார் ஆய்வாளர்...

அவர் அனுப்பிய கட்செவியில் இடம் பெற்றிருந்த முக்கிய செய்தியை ஊடகங்கள் ஓயாமல் ஒளிபரப்புச்  செய்துக்  கொண்டிருந்தன...

ஊடகங்களில் வெளியான செய்தி அடுத்தடுத்த நொடிகளில் தமிழ்நாட்டை  மட்டுமின்றி-

இந்தியாவையும் அசுரத்தனமாக உலுக்கியது...  

உலகின் பார்வைக்கும் எட்டியது!

அந்தச்செய்தி இதுதான் :

"வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்த போது சில துண்டறிக்கைகள் கண்டெடுக்கப்பட்டன... 

"இந்தியனே வெளியேறு" என்ற வாசகம்  துண்டறிக்கைகளில் காணப்பட்டன...

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குரங்கணிக் காடு போலீஸ் வளையத்திற்குள் முழுமையாகக்  கொண்டுவரப்பட்டது..."

தொலைக்காட்சிகளில்  ஓயாமல்  ஒளிபரப்பாயின துண்டறிக்கை!...

குரங்கணி அருகில் உள்ள வீடுகளில் சோதனையிட ஆரம்பித்தது காவல்துறை...

தமிழ்நாடெங்கும் தமிழ் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் இளைஞர்கள் குழுக் குழுவாக திரண்டனர் நாடெங்கும்!   
        


(  செவ்வந்தியும் செத்தாளா? மாரியப்பன் சிக்கினானா? போராளிகள் குழுவில் இணைந்த கயல்விழி, இளவரசு நிலையென்ன?)

                                           -முற்றும்- 


கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்