ஆசையாய் கொலை செய்வோமா...
ஆசையாய் கொலை செய்வோமா...
- திகில் கதை -
- அரங்க கனகராசன்
1. வெயிலடிக்குது வாடி
-------------------------------------
இளங்காலை - எதிர்வெயில்!
பழைய மாமல்லபுரம் சாலை - சோழிங்கநல்லூர் டாலர் ஸ்டாப்... திருவான்மியூர் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம்...
சீதாலெட்சுமி காத்திருந்தாள்...
"ஏய் என்னடி இன்னும் வரலை... வெயில் சுள்ளுனு அடிக்குது..."
"பைவ் மினிட்"
அலைப் பேசியை மூடிவிட்டு காத்திருந்தாள் தோழி காத்தரீனா வருகைக்காக...
அதே பேருந்து நிறுத்தத்தில் சற்று இடைவெளி தூரத்தில் இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றிருந்த இளைஞன் கார்த்திக் - ஒரு வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவன் - சிறுதுத் தயக்கத்துடன் சீதாலெட்சுமியை நெருங்கி- "ஹாய்" - என்றான்...
சீதாலெட்சுமி அவனைப் பார்த்து இலேசாக தலையசைத்துவிட்டு ஓரடி பின்நகர்ந்து நின்று கொண்டாள்; அவன் யாரென்ற அறிமுகம் இன்மையால்...
அவன் சிலவினாடிகள் தயங்கி மீண்டும், சீதாலெட்சுமியிடம், 'உங்க சேனல் நான் பார்த்திருக்கேன்... நைஸ்' - என்றான்...
சீதாலெட்சுமி 'நன்றி' என்று சொல்வதுபோல், மெலிதாய்ப் புன்னகைத்தாள்...
திகில் சம்பவங்களை - யு ட்யூப் வலைத்தளத்தில் - சேனலில் பதிவேற்றம் செய்பவள்; சீதாலெட்சுமி!...
''நா கார்த்திக்... நேற்று, நீங்க அப் லோடு செஞ்ச வீடியோ ரொம்ப திகிலா இருந்துச்சு... எப்படிங்க?''
திருவான்மியூர் செல்லக்கூடிய பேருந்து வந்து நின்றது... அதிலிருந்து இறங்கிய காத்ரீனா, சீதாலெட்சுமியைத் தேடினாள்...
அவளைப் பார்த்துவிட்ட சீதாலெட்சுமி, 'காத்ரீனா" என்று விளித்தாள்...
சீதாலெட்சுமியைப் பார்த்து கையசைத்து, 'ஹாய் ' என்று சொல்லி அருகில் வந்தாள்...
அருகில் வந்ததும், காத்ரீனாவோடு சீதாலெட்சுமி கிளம்பினாள்;...
தன் பேச்சுக்கு விடையளிப்பாள் என்று எதிர்ப்பார்த்து நின்றிருந்த கார்த்திக், அவள் கண்டுக் கொள்ளாமல் கிளம்பியமையால் அவனுள் ஏமாற்றம் ஆனது... அதன் வெளிப்பாட்டை முகம் சோகமாய் வெளிப்படுத்தியது...
கார்த்திக் கண்களில் ஏக்கம் இழையோட - நடந்துச் சென்றுக் கொண்டிருந்த சீதாலெட்சுமியையே பார்த்து நின்றான்...
2. காதலனைச் சந்திக்கப் போறேன்
"யாரடி அவன்" - காத்தரீனா
"எவன்?" - சீதாலெட்சுமி
'உன் பக்கத்தில் நின்னுட்டு இருந்தானே "
'நேற்று நா அப்லோடு செஞ்ச வீடியோ பார்த்திருக்கான் போல... ஹாய் னு சொன்னான்"
''வீடியோ வீவர்ஸ நாப்பது கே தாண்டிருச்சுடி..."
''ஆமா நானும் பார்த்தேன்... ஒரு செருப்படி இவ்வளவு ரீச் ஆகும்னு நா எதிர்பாக்கலே '
வாடகைப் பகிர் வண்டியை கைக்காட்டி ஏறிக் கொண்டனர்...
''கண்ணகி நகர் முனை'' - என்றாள் சீதாலெட்சுமி!
பகிருந்து கண்ணகி நகர் எதிரில் நின்றதும், சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் இறங்கிக் கொண்டார்கள்...
அவர்களை இறக்கிய வண்டி நகர்ந்ததும், இருசக்கர வாகனம் ஒன்று வந்து சீதாலெட்சுமியை ஒட்டினாற் போல் நின்றது...
அந்த வண்டியில் இருந்தவன், டாலர் நிறுத்தத்தில் சீதாலெட்சுமியிடம் பேச்சுக் கொடுத்த கார்த்திக்...
அவனை கவனித்த சீதாலெட்சுமி, கண்டுக் கொள்ளாதவளாய், காத்ரீனாவோடு நடையிட்டாள்...
அவர்களை மறித்த கார்த்திக், சீதாலெட்சுமியைப் பார்த்து, 'அலோ' என்றான்... அதற்கு சீதாலெட்சுமி, ஒருகணம் அவன்மீது வேண்டா வெறுப்பினை பார்வையால் உமிழ்ந்து, 'என்ன வேண்டும்' என்பது போல புருவத்தை உயர்த்தினாள்...
''உங்க வீடியோ நல்லா இருந்துச்சு"
''அதுக்காக பின்தொடர்ந்து வருவியா?"
"அதுக்கில்லை..." என்றவனை இடைமறித்து, "நீயார்?... என்ன வேணும்" -என்று சீதாலெட்சுமி கேட்டாள்...
''இல்லை... அதுக்கில்ல... வீடியோ நல்லா இருந்துச்சு..."
''டேய் நீ லூசாடா... "
"இல்லை... அதுக்கில்ல... வீடியோ நல்ல "
'' டேய் என்ன வேணும் உனக்கு"
"நா உங்களுக்கு போன் செய்யலாமா?"
"இதை கேட்கவா பின்னாடியே வந்தே?"
"இல்லே... உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு''
"அதுக்காக?"
"இல்லே..."
"டேய், நெளியாதே... நேரா நின்னு பேசுடா"
"நீங்க..."
"உன் பேர் என்ன?"
"கார்த்திக்"
"கார்த்திக் நெளியறத நிறுத்து... என் போன் நம்பர் யூ ட்யூப்ல் இருக்கு"
"நன்றிங்க... எப்ப நா போன் பண்ணட்டும்"
"எப்பத் தோணுதோ அப்பப் பண்ணு... இப்ப வழிவிடு... காதலனைச் சந்திக்கப் போயிட்டு இருக்கோம்"
" காதலனையா? - என்று கார்த்திக் சற்று அதிர்ச்சியோடுக் கேட்டான்...
"டேய் லூசு... நான் சிங்கிள் தாண்டா... இவளோட காதலனைச் சந்திக்கப் போறோம்..."
"நீங்க சிங்கிள் தானா"
"ஆமா... தைரியமா போன் பண்ணு "
3 - இப்படியும் கொலைச் செய்யலாமா?
காதலன் வீடு.
"அம்மா, அப்பா வெளியூர் போயிருக்காங்க... வந்தியினா நாம தனியா -"
"தனியா"
"இல்லே... நீ வந்தா நல்லாயிருக்கும்" என்று அலைப்பேசியில் தேவராஜ் சொன்னதால் அவனைப் பார்க்க காத்ரீனா வந்தாள்... துணைக்கு சீதாலெட்சுமியையும் அழைத்து வந்தாள்...
கதவுத் திறந்தே இருந்தது...
"தேவராஜ்" - என்று விளித்தபடியே உள்ளே நுழைந்தாள்...
கூடத்தில் யாருமில்லை...
"கதவுத் திறந்தே இருக்குது... வரச்சொல்லிட்டு எங்கே போனான்... தேவராஜ்"
கூடத்தில் நின்று மாடிப் படியைப் பார்த்து அழைத்தாள்...
தொலைக்காட்சி 'நீ வருவாய் என நான்' என்ற பாடல் ஒளித்துக் கொண்டிருந்தது...
"தேவராஜ்"
திறந்திருந்தப் படுக்கையறைக்குள் நுழைந்து, பார்வையை சுழற்றி அழைத்தாள்...
"காணமே"
காத்ரீனா படுக்கையறையை விட்டு வெளியேற முற்படுகையில்-
அவளுக்குப் பின்புறமாக பதுங்கி 'ஓய்' என்று ஊளையிட்டான் தேவராஜ்... காத்ரீனா பயந்து கூச்சலிட, அவளின் கையைப் பற்றி, "காத்ரீனா, பயந்துட்டியா" என்றான்...
அவனைக் கண்டு இதழ் சிவக்கப் புன்னகைத்து, இறுகத் தழுவி முத்தம் தந்தாள் காத்ரீனா...
இன்ப அதிர்ச்சியில் விழிப் பிதுங்கி நின்றான்...
"ஏண்டா, திருட்டு முழி முழிக்கிறே? உள்ளே அம்மா,அப்பா இருக்காங்களா?"
"இல்லே... ஊருக்கு போயிருக்காங்க"
"பின்னே ஏண்டா நடுங்கறே" என்று சொல்லி மீண்டும் அவனது இதழைக் கவ்வினாள் காத்ரீனா...
சீதாலெட்சுமி ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்து அமர்ந்து கொண்டாள்...
அருகில் தோழி இருக்கிறாள் என்றும் பாராமல் தேவராஜ் மீது முத்த மழைப் பொழிந்து, இறுக இறுக அணைத்தாள்...
"போதுமாடா..." என்று கிறக்கத்தில் கேட்டாள்...
தேவராஜின் இதயம் மிக வேகமாக இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது...
"அவங்க" என்று சொல்லி சீதாலெட்சுமியை கை நீட்டி கேட்டான்...
"என்ன உன் ஆளுக்கு, என்கிட்டையும் முத்தம் வேணுமாக்கும்... உதைச்சிருவேன்னு சொல்லு" - எட்டிப் பார்த்து சீதாலெட்சுமி சொன்னாள்...
"இல்லைடி உன்னை யாருனு கேட்டான்... ராஜ், இவா சீதாலெட்சுமி... நம்ம காதல் இவளுக்கும் தெரியும்... யூடியூபில் சீதாலெட்சுமி சேனல் கேள்விப் பட்டிருக்கியா?... " - என்று கேட்டு அறிமுகம் செய்தாள்...
"ஆமாமா... ஏற்கனவே சொல்லியிருக்கியே" என்றவன், சீதாலெட்சுமியைப் பார்த்து, "நேற்று உங்க புது வீடியோ பார்த்தேன்... இன்ஸ்பெக்டரை பளார்னு அறைஞ்சு செருப்பால் அடிச்சிட்டீங்க... எப்படிங்க உங்களால் முடிஞ்சது..."
"சி. எம். மா இருந்தாலும் அடிச்சிருப்பேன்... எதுக்கு பயப்படணும்... பயந்தா வாழ முடியாதுங்க..."
"போலீஸ் தரப்பிலிருந்து உங்களுக்கு பயமுறுத்தல் வரலியா"
"எதுக்கு வரும்? நா அந்த அயோக்கியனை எதுக்கு செருப்பால் அடிச்சேனு வீடியோவில் பார்க்கலியா?" என்று சீதாலெட்சமி கேட்டாள்...
"ஆங்... பார்த்தேன்... பார்த்தேன்... கூட்டத்தை ஒழுங்குப் படுத்த வேண்டிய இன்ஸ்பெக்டர் இப்படி வரம்பு மீறினா செருப்பால் அடிக்கிறதில் தப்பில்லை" - என்றான் தேவராஜ்.
மீண்டும் காத்ரீனாவைப் பார்த்து, " சீதாலெட்சுமி மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும்..." என்று பாராட்டினான்...
"சரி விருந்தாளிக்கு என்ன தரலாம்; காத்ரீனா, சொல்லு; நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்... இல்லைனா ஆர்டர் செஞ்சுறட்டுமா..."
"வேண்டாங்க..." என்றாள் சீதாலெட்சுமி!...
"நோ... நோ... வேண்டாம்னு சொல்லாதீங்க... உங்களப் பத்தி மீடியாவில் எவ்வளவு பெருமையா பேசறாங்க... நீங்க எங்க வீட்டுக்கு வந்தது எனக்குப் பெருமை''
"அப்படியெல்லாம் இல்லைங்க... திகிலான சம்பவங்களை நேரில் போய் படம் பிடிப்போம்... நான் பேசப்படறதுக்கு காத்ரீனாவும் காரணம்... எனக்கு உதவியா காத்ரீனா இருக்கா..."
"சரி... நீங்க தொலைக்காட்சி பார்த்துட்டு இருங்க... நானும் காத்ரினாவும் கடைக்கு போயிட்டு வரோம்... வா, காத்ரீனா!" என்று அழைத்தாள்...
"டேய் வேண்டாண்டா... சீதாலெட்சுமி லைவ் ஷோ ஒன்னு எடுக்க விரும்புறா... அது சம்பந்தமா உன்கிட்ட பேசணும்னு சொன்னா"
"ஆமாங்க... ஒரு குறும்படம் மாதிரி... அதை எடுத்துட்டு, மூணு பேரும் வெளியே போய் ஒன்னா சாப்பிடுவோமே"
"அதுவும் சரிதான்... ஒன்னா போய் சாப்பிடுவோம்... சரி நா என்ன செய்யணும்?"
"நீங்களும் நடிக்கணும்"
"எனக்கு நடிப்பு வராதுங்களே"
"நா சொல்றமாதிரி நில்லுங்க... நான் சொல்றத திருப்பிச் சொல்லுங்க... நா செய்றதை நீங்களும் திருப்பிச் செய்யிங்க... அவ்வளவுதான்..." - என்றாள் சீதாலெட்சுமி!...
காத்ரீனா தேவராஜை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து, "சரினு சொல்லுடா... ரொம்ப ஈசிடா" - என்றாள்...
அவன் சம்மதித்தான்...
அவனுக்குத் தெரியாது;.. இன்னும் சற்று நேரத்தில் அவன் கொல்லப்பட விருக்கிறான்...
4. துடித் துடித்து சாகும் காட்சி
காவல் நிலையம்
ஆய்வாளர், உயர் அதிகாரிக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்...
இரண்டு மாதத்தில் நான்கு தற்கொலைகள்... அண்ணா நகர், வில்லிவாக்கம், அசோக் நகர்... நேற்று கண்ணகி நகர்...
"அம்மா, அப்பா வந்துதுட்டாங்களா"
"உக்கார வெச்சிருக்கோம்"
"விசாரிச்சீங்களா?"
"விசாரிச்சேன்... ஒன்னும் தெரியலென்றாங்க"
"போன் ட்ரேஸ் செஞ்சீங்களா"
"நேற்று ஏழு தடவை போன் செஞ்சிருக்கான்... ஒரு கால் ஆபீசுக்கு லீவ் கேட்டு பேசியிருக்கான்... மீதி ஆறு கால் காத்ரீனா னு ஒரு பொண்ணுக்குப் போயிருக்கு"
"காத்ரீனா..."
"அவனோட காதலி!... 'வீட்டில் யாருமில்லை வா'னு போன் செஞ்சிருக்கான்... காத்ரீனாவும் போயிருக்கா..."
காத்ரீனா உயரதிகாரியிடம் சொன்னாள்...
"நாங்க போனோம் சார்... "
"நாங்க' னா? ..."
"என் தோழி சீதாலெட்சுமியும் என் கூட வந்திருந்தா..."
"உன்னை வரச்சொல்லித்தானே போன் செஞ்சான்"
"ஆமாங்க சார்"
"நீ சீதாலெட்சுமியை எதுக்கு அழைச்சிட்டு போனே?"
"வீட்டில் தனியா இருக்கேன் வா' னு சொல்லியிருந்தான்"
'தனியா இருந்தா, போயிடுவியா?... எத்தனைத் தடவை போயிருக்கே"
"சார்... நா..."
"இன்னொருத்தியையும் அழைச்சிட்டு போனா நிறைய துட்டுக் கிடைக்கும்னு போனியா"
"சார், அவன் என் காதலன்... கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சிருந்தோம்... எங்கக்குள்ளே தப்பு எதுவும் நடக்கல"
"தனியா இருக்கேன்; வா' னு அவன் கூப்பிட்டதுக்கு என்ன அர்த்தம்?"
"எனக்குத் தெரியாது... ஆனா, தப்பா ஏதாவது நடந்துறக் கூடாதுனு நா சீதாலெட்சுமியையும் அழைச்சிட்டுப் போயிருந்தேன்..."
"அப்போ உன் காதலனை நீ நம்பலை"
"நம்பிக்கை வேற... முன்னெச்சரிக்கை வேற சார்"
"என்ன வசனம் பேசறியா?"
காவலர் ஒருவர் வந்து அலைப்பேசியைக் காட்டினார்...
ஆய்வாளர் வாங்கி அலைப்பேசியின் திரையைத் தடவினார்...
சீதாலெட்சுமி பேச ஆரம்பித்தாள் திரையில்-
"மரணத்தை நேரில் பார்த்தேன்... இது மாதிரியான மரணத்தை நான் என் வாழ்நாளில் இனி பார்க்கவே கூடாது... அய்யோ... இப்பவும் என் மனசுப் பதறது... என் தோழியின் காதலனைப் பார்க்க தோழி என்னை அழைத்துச் சென்றாள்... காதலனைப் பார்க்கப் போன நாங்க, அவன் தூக்கில் தொங்கித் துடிச்சிட்டிருந்தான்... உயிர் அவனை விட்டுப் பிரிய மனதில்லாமல் கெஞ்சியக் காட்சியைப் பார்த்து நானும் தோழியும் பதறி விட்டோம்... நீங்களும் பாருங்கள்..." - என்று அவள் சொல்ல மறுநொடி தேவராஜ் தூக்கில் தொங்கி மரணத் தவிப்பில் துடிக்கும் காட்சி ஓடியது...
துடித் துடித்து மெல்ல மெல்ல மரணிக்கும் காட்சி பதிவாகியிருந்தது...
"ஒருத்தனை தூக்கில் தொங்கவிட்டு அதை படம் பிடிச்சு சேனலில் போட்டிருக்கீங்க"
"இல்லைங்க... நாங்க போகும்போது கதவுத் திறந்தே இருந்துச்சு... நா அவனைக் கூப்பிட்டேன்... யாரும் வீட்டில் இருக்கற மாதிரி தெரியல... கொஞ்ச நேரம் கூடத்தில் உட்கார்ந்திருந்தோம்... யாரும் வரல... ஆனா, உள் அறையிலிருந்து வித்தியாசமா சத்தம் கேட்டுச்சு... என்னவா இருக்கும்னு நானும், சீதாலெட்சுமியும் போய்ப் பார்த்தோம்... தேவராஜ் தூக்கில் தொங்கித் தவிச்சிட்டு இருந்தான்..."
"அவனைக் காப்பாத்த முயற்சி எடுக்காமல் படமாக்கிட்டு இருந்தீங்களா"
"இல்லை சார்... எனக்கு என்ன செய்றதுன்னு புரியல... என் தோழிக்கு ஒருபழக்கம் இருக்கு... எதைப் பார்த்தாலும் உடனே படம் பிடிக்க ஆரம்பிச்சிருவா... நா பதட்டத்தில் இருந்தாலும், உடனே ஏதாவது செய்யத் துடிச்சேன்... தெருவுக்கு ஓடி வந்து கூச்சல் போட்டேன்... வண்டியில் போறவங்க, என்னை பார்த்துட்டு போனாங்களே ஒழிய, யாரும் என்ன ஏதுனு விசாரிக்க வரலே... ஆம்புலன்சுக்கு போன் போட்டேன்... போலீசுக்கும் நான்தான் தகவல் தெரிவிச்சேன்..."
5 - உயிரும், உடலும் செய்த பாவம் என்ன?...
யூட்டூப் - சீதாலெட்சுமி வலைத்தளம் காணொலியில்-
தொடர்ந்து விவரித்துக் கொண்டிருந்தாள் சீதாலெட்சுமி : "காதலன் தன் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து என் தோழித் துடிப்பதையும் உதவிக்கு ஓடுவதையும் பாருங்கள்... பார்வையாளர்களுக்கு இப்படி ஒரு துயரமான சம்பவத்தைப் படமாக்கிக் காட்டும் என் மீது நீங்கள் கோபம் கொள்ளலாம்... படம் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஓடிச்சென்று அவனைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாமே என்று நீங்கள் யாராவது என்னிடம் கேள்விக் கேட்டால், அந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதை நான் உணர்கிறேன்... ஆனால்; சோகம் உண்மையானது... அவன் சாவின் விளிம்பை கடந்து விட்டிருந்தப் போதுதான் அவனுடைய வீட்டுக்குள் நாங்கள் நுழைந்திருந்தோம்... பிரச்சனை எதுவாக இருந்தாலும் தற்கொலைத் தீர்வாகாது என்பதே எனது வேண்டுகோள்... உயிரும், உடலும் நமக்கு செய்த பாவம் என்ன?... உயிரும், உடலும் படும் வேதனையைப் பார்த்தாவது தற்கொலை செய்வதுக் கொள்ள விரும்புவோர் அந்த எண்ணத்திலிருந்து விடுப்படவேண்டும் என்று நான் கண்ணீர் மல்க கைகூப்பி என் பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்"
உண்மையில் நடந்தது என்ன?
"ஒரு லைவ் ஷோ! அதாவது; நீங்க தற்கொலை செய்வதுப் போல்" - சீதாலெட்சுமி
"அய்யயோ நான் செத்துட்டா" - தேவராஜ்!
"டேய் நீ சாக மாட்டேடா..." -என்று கூறிய காத்ரீனா, அவன் தோள் மீது, இருகைகளையும் போட்டு முகத்தை நேருக்கு நேர் பார்த்து நெருங்கி நின்றாள்... அவன் மூக்கின் மேல் மூக்கை உரசி, "சினிமாவில் சாகற மாதிரி நடிக்கிறாங்களே... அவங்க உண்மையா செத்தாப் போறாங்க?... எல்லாமே நடிப்புடா" - என்றாள் காத்ரீனா!...
"ஆமா... சரி; இப்ப நான் என்ன செய்யணும்?"
"சாகணும்" - என்றுச் சொல்லி சிரித்தாள் காத்ரீனா!
"சும்மா இருடி... விளையாடாதே!... நீங்க, காத்ரீனா பேக்கில் ஒரு சிரிஞ்சும் நீடிலும் இருக்கு எடுங்க" - என்றாள் சீதாலெட்சுமி...
காத்ரீனாவின் கைப்பையைத் திறந்து, நீடிலுடன் சிரிஞ்சையும் எடுத்து, உறையைக் கிழித்தான்...
"ஊசி போட்ற மாதிரி கையில் இலேசா குத்திக்காங்க" - என்றாள் சீதாலெட்சுமி!
"அய்யய்யோ இரத்தம் வருதுங்க"
"சின்ன ஊசிக்கே இப்படி நடுங்கறியேடா... காலம் முழுக்க எப்படி நீ என்னைக் காப்பாத்துவியோ?" - காத்ரீனா!
"காத்ரீனா, உனக்காக நான் எதுவும் செய்வேன்"
"சரி; உங்கம்மாவோட சேலை ஒன்னு எடுத்துட்டு வா... சீக்கிரம் வாடா சாப்பிட போலாம்... பசியாகுது"
ஓடோடி எடுத்து வந்தான்...
ஒரு ஸ்டூல் மீது இன்னொன்றை வைத்து அதன்மீது ஏறி சேலையை மின்விசிறியில் கட்டச் சொன்னாள்...
கட்டினான்...
தூக்கு கயிறு போல் சேலையின் மறுமுனையை முடிச்சுப் போட்டு கழுத்தில் மாட்டச் சொன்னாள்...
மாட்டிக் கொண்டான்...
"ஓகே... .இவ்வளவுதாங்க... நீங்க உங்க காலால் ஸ்டூலை எட்டி உதைச்சிட்டு, தூக்கில் தொங்கித் துடிக்கிற மாதிரி செய்யுங்க..."
"கழுத்தை இருக்கிச்சுனா நான் செத்துப் போயிருவேனே"
"டேய் பயந்தாங் கொள்ளி! நாங்க ரெண்டு பேருமே நெட்டைக் கொக்கு மாதிரி இருக்கோம்... அப்படியே ஏதாவது ஆனாலும் நாங்க உன்னைத் தாங்கிப் பிடிச்சு, கீழே இறக்கிவிட மாட்டோமா?..."
"சரி காத்ரீனா"
"சீக்கிரம் ஸ்டூலைத் தள்ளி விடுடா... பசியாகுது!"
தூக்கு முடிச்சை கழுத்தில் மாட்டிக் கொண்டு, ஸ்டூலை எட்டி உதைத்தான்...
அதே வேகத்தில் கழுத்தை இறுக்கியது முடிச்சு!...
மூச்சு அடைத்தது
மரணத்தின் விழிகள் காத்ரீனாவைப் பார்க்கத் தவித்து பிதுங்கியது...
காத்ரீனா என்று கத்த முனைந்த குரல்வளை பிய்ந்தது...
உயிர்ப் பிரியும் உச்சத்தில் உதறல் அதிகரித்தபோது, அப்போதுதான் அறைக்குள் நுழைவது போல் அதிர்ச்சியை வெளிப்படுத்தி அலற ஆரம்பித்தாள் காத்ரீனா!
தேவராஜ் தூக்கில் உதறலோடுத் துடிப்பதையும், காத்ரீனா அழுது அரற்றி தெருவுக்கு ஓடிப் புலம்புவதையும் ஓடியோடி படமாக்கினாள் சீதாலெட்சுமி...
ஒரு கொலை, தற்கொலையாக காவல் நிலையத்தில் பதிவானது...
6 - போதைப் பழக்கம்
தேவராஜ் வீடு,
வீடுநிறைய, உறவினர்கள்... சோகத்தில் இருந்தார்கள்...
ஒரேமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது...
மாலை இடப்பட்டிருந்த மகனின் படத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்து அம்மா கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள்...
தன்னிலை மறந்து, தந்தை ஊஞ்சலில் அமர்ந்து இருந்தாலும் ,அவரின் கண்கள் வீட்டின் மேற்பரப்பில் மேய்ந்துக் கொண்டிருந்தன...
சோகத்தின் விளிம்பில் வீடு அமைதியில் ஆழ்ந்திருக்க-
டக்... டக்... ஓசைக் கேட்டு உறவினர்கள் திரும்பிப் பார்த்தார்கள்...
மகனின் படத்தின் மேல் நினைவுகளை உருக செய்துக் கொண்டிருந்த தாயிடம் எந்த அசைவும் இல்லை...
தந்தையும் சலனமின்றி இருந்தார்...
டக்... டக்...
தந்தையின் அருகே வந்து நின்றது டக் டக் ஓசை
"அய்யா" - துணை ஆய்வாளர் அழைத்தார்...
அப்போதும் தன்னிலை உணர்வற்று இருந்தார் தேவராஜின் தந்தை!...
துணை ஆய்வாளர், அவரின் தோள் தட்டி, "அய்யா " என்றார் மீண்டும்...
தந்தை, துணை ஆய்வாளரைத் திரும்பி பார்த்தார்... முகத்தில் எவ்வித சலனமும் வெளிப்படவில்லை...
"உங்க மகனுக்கு போதைப் பழக்கம் இருக்கா?"
தந்தை பதில் ஏதும் பேசாமல் இருந்தார்...
"சொல்லுங்கய்யா... போதைப் பழக்கம் இருந்துச்சா?"
தந்தை பதில் பேசாமல் சோகம் காத்தார்...
"சொல்லுங்க"
"மகனை இழந்த துயரத்தில் இருக்கிறார்...அவர்கிட்ட என்னய்யா கேள்வி கேட்கறீங்க" - உறவினர்களில் ஒருவர்...
"நீங்க யாரு"
"தேவராஜுக்கு தாய்மாமன்"
7 - இதயத்தை கிள்ளினாள்...
சீதாலெட்சுமி அணிந்திருந்த இரவின் மெல்லிய ஆடையை மின்விசிறி, வண்ணத்துப் பூசிச்சியைப் போல் சிறகடிக்க வைத்துக் கொண்டிருந்தது...
வடிவமாக வெட்டப்பட்டிருந்த குறுங்கூந்தலையும் தொட்டுத் தொட்டுத் தடவி மகிழ்ந்ததோ மின்விசிறியின் காற்று...
பாதி சாய்ந்த நிலையில் படுத்திருந்த சீதாலெட்சுமியின் தோற்றம் சற்று தூக்கலான கவர்ச்சியாகவே இருந்தது...
அலைபாயும் கூந்தலை ஒருகையால் கோதிவிட்டு, மறுகையால் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்...
"ஏண்டா, தூக்கம் வரலியா?... இந்நேரத்தில் பேசறே?" - சீதாலெட்சுமி
"இல்லைங்க... ரொம்ப நேரம் போன் செய்ய நினைச்சிட்டே இருந்தேன்... "
"பயமா?"
"இல்லைங்க... நீங்க திட்டிருவீங்களோனு..."
"நா திட்டினா உனக்குப் பிடிக்காதா "
"நீங்க திட்டுங்க... என்னை அடிங்க... எங்கூட நீங்கப் பேசினாலே போதுங்க..."
"பேசினா மட்டும் போதுமா"
"அது வந்து..."
"வந்து?"
"திட்ட மாட்டீங்களே"
"நா திட்னா, உனக்குப் பிடிக்கும்னு சொன்னியேடா"
"ஆமாங்க... அது வந்து.... ஐ லவ் யூங்க"
"ஏண்டா பொறுக்கி, நேற்று காலையில் பார்த்தே... இப்ப இராத்திரியில் லவ் யூ சொல்றியேடா"
"சாரிங்க... சாரிங்க... நா வெச்சிடறேன்"
"டேய் மக்குப் பயலே, லவ்வுனா என்னானு தெரியுமாடா"
"'நா ரொம்ப நாளா உங்களைப் பாத்துட்டே இருக்கேன்... நீங்கதா என்னை கவனிக்க மாட்டீங்க..."
"நீ யாருடா?"
"ஏங்க, பிடிக்கலைன்னா, பிடிக்கலைனு சொல்லிடுங்க... போலீசில் மாட்ட வெச்சீராதீங்க... நா பயந்து பயந்துதா உங்களுக்கு போன் போட்டேன்... சாரிங்க"
"டேய் எருமை... நீ யாருடா?"
"நா எருமை இல்லைங்க... கார்த்திக்... கவர்மெண்ட் பேங்க் பிராஞ்சு மேனேஜர்... "
"வயசென்ன?"
"29"
"எத்தனைப் பேரை லவ்வியிருக்கே "
"உண்மையா நீங்கதா முதல் ஆளு"
"நீ யாருன்னே தெரியாது...காதல் சொல்றியே... என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு?"
"என் பிராஞ்சில்தான் நீங்க அக்கவுண்ட் வெச்சிருக்கீங்க... நீங்க பேங்க் வரும் போதெல்லாம் உயரமான தேவதையா உங்களைப் பார்த்து நா மயங்கிடுவேன்... என் மனசு முழுக்க நீங்க தானுங்க... ஐ லவ் யூங்க"
"வீடியோ கால் போடு... உன்னைப் பார்க்கணும்"
அலைப்பேசியை நேரொளிக் காட்சிக்கு மாற்றி விட்டான், கார்த்திக்...
அலைப்பேசியை சற்று உயர்த்தி வைத்து தனது முழு உருவமும் அவனுக்குத் தெரியும்படி மேசை மீது வைத்தாள்...
"இப்ப சொல்லுடா " - என்றாள்...
மெல்லிய உடையில், தங்கச்சிலைப் போல், நீண்ட மெலிந்தக் கால்களுடன், ஒய்யாரமாய் சாய்ந்து, விழிகளை சுழற்றி, புருவத்தால் அவனை வதைத்தாள்... சீதாலெட்சுமியின் எடுப்பான மார்பு அவனது இதயத்தைக் கிள்ளியது...
"பேசுடா"
அவன் எச்சில் விழுங்கினான்...
"பேசுடா "
"ஐ லவ்...."
"எனக்குப் பிடிக்கலை"
"மேடம்"
"போடா... குட்நைட் " சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்...
8 - காரணமில்லா தற்கொலைகள்...
நீள் வட்ட மேசை-
சுற்றிலும் காவல் அதிகாரிகள்...
இன்ஸ்பெக்டர் தான் எடுத்த நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் முன் வைத்தார்...
"மகனுக்கு குடிப்பழக்கம் இருக்குனு, அப்பா, அம்மா சொன்னாங்க சார்"
தற்கொலை செய்வதற்கு முன், சிரிஞ்சால் தன் கையைக் கீறியிருக்கிறான்...
"போதை மருந்து கிடைக்கலைன்ற விரக்தியில் வெறும் சிரிஞ்சால் கையை கீறியிருக்கலாம் சார்..."
வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதை மருந்து ஏதும் கிடைக்கவில்லை...
சாவதற்கு முன் சிரிஞ்சை எடுத்திருக்கிறான்... போதை ஊசி போடும் பழக்கம் இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் பட்டாலும், உடற்கூறு ஆய்வு உடலில் போதை மருந்து இல்லை என்கிறது...
"அவனை சாகடிச்சு, தூக்கில் தொங்கவிடலைனு ரிப்போர்ட் சொல்லுதுங்க சார்"
அதனால், காத்ரீனா மீது சந்தேகம் பட வாய்ப்பில்லை...
"அவனே தூக்கில் தொங்கியிருந்தாலும், அதுக்கும் ஒரு காரணம் இருக்கணுமே"
காத்ரீனா வரும்போது கதவுத் திறந்தே இருந்தது... கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் அலறிக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள்... அவள் சொன்ன வாக்குமூலமும், சி சி டி வி கேமரா பதிவும் , உடற்கூறு ஆய்வு அறிக்கையும் முரண்படவில்லை...
"அப்படினா, காரணமில்லா தற்கொலைகள்னு வழக்கை நிறுத்திராதீங்க... சமீபத்தில் நடந்த நாலு தற்கொலையிலும், ஒரு துப்பும் கிடைக்கலை "
வெளியேறினார் உயரதிகாரி!...
9 - முதல் கொலை
அண்ணா நகர், தோரண வாயிலுக்கு அண்மையில் இருக்கிறது பூமித்தாய் திருக்கோயில்...
பெண்களின் கூட்டம் கூடுதலாகவே இருந்தது...
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மட்டும் அல்ல... ஒரு கொலை வெற்றிகரமாக நடந்தேறியதும், அம்மனை வழிப்பட வருவார்கள் சீதாலெட்சுமியும், காத்ரீனாவும்!... கோயில் வெளியில் சிறுது நேரம் அமர்ந்து இளைப்பாறிச் செல்வது வழக்கம்...
இளைப்பாறுகையில் -
இக்கோவிலுக்கு அருகில் நடந்தேறிய முதல் கொலை நினைவுகள் அவளுள் எட்டிப் பார்த்தது...
அன்றும் அப்படிதான்!...
மூன்று மாதங்களுக்கு முன்- கோவளம் கடற்கரைச் சென்றிருந்தார்கள் சீதாலெட்சுமியும், அவளது காதலன் ரமேசும்... தோழி காத்ரீனாவும் உடன் சென்றிருந்தாள்...
காதலன் ரமேஷ் மட்டும் கடலில் குளித்துக் கொண்டிருந்தான்... தோழிகள் இருவரும் கடற்கரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தும் படம் பிடித்தும் கொண்டிருந்தார்கள்...
அப்போது ரமேசின் அலைப்பேசிக்கு அழைப்பு வந்தது...
சீதாலெட்சுமி எடுக்கவில்லை...
பிறருக்கு வரும் அலைப்பேசியை எடுப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை...
ஆனால், தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன...
ரமேஷ் வீட்டில் இருந்து அவசரமாக, அவனோடு பேச முயற்சிக்கலாம் என நினைத்து அழைப்பை எடுத்தாள்...
கடல் இரைச்சலினூடே எடுத்த சீதாலெட்சுமி 'அலோ ' என்று சொல்வதற்குள் எதிர்முனையில் - "ஏண்டா, போன் எடுக்க மாட்டீங்கிறே... எங்கே இருக்கே டார்லிங்" என்று கேட்டு இச் கொடுத்தாள்...
சீதாலெட்சுமி அதிர்ந்து அலைபேசியின் தொடர்புகளை அலசினாள்....
ஏராளாமான பெண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தன...
ரமேஷ் கடலுக்கு குளிக்கச் சென்ற பிறகு, தவற விட்ட அழைப்புகளையும் ஆராய்ந்தாள்...
மூன்று பெண்கள் ஓர் ஆண் பெயர் காட்டியது...
"என்னடி ஆச்சு" - காத்ரீனா கேட்டாள்...
"இவன் சரியான பொம்பளைப் பொறுக்கியா இருப்பான் போலிருக்குடி... இவனை எப்படிக் கொலை செய்றதுன்னு ஐடியா சிக்காமல் இருந்துச்சு... ம்... இப்ப கிடைச்சிருச்சு..." - சீதாலெட்சுமி
ஆவேசமாக எழுந்து நின்றாள்...
கடலில் நீராடிக் கொண்டிருந்தவனை நோக்கி, கையசைத்து அழைத்தான்...
அவனோ, "நீயும் வா குளிக்கலாம் " என்றான்...
"த்தூ... செருப்பு பிஞ்சிரும்" என்று சொல்லி செருப்பை ஆட்டினாள்...
கடல் இரைச்சலில் அவனுக்கு அவள் பேசியதுப் புரியவில்லை... என்றாலும்; செருப்பைத் தூக்கி காட்டிய தோரணை அவனுக்கு சுளீர் என்று பட்டது...
என்னவென்று அவன் விளங்கிக் கொள்ளும் முன்னரே, கடற்கரையிலிருந்து புறப்பட்டார்கள் காத்ரீனாவும், சீதாலெட்சுமியும்...
அவர்கள் வெளியேறுவதைப் பார்த்த ரமேஷ் அவசரமாக அவர்களை நோக்கி ஓடிவந்து அவர்களை மறித்தான்...
"சீது, என்னாச்சுடி... எதுக்குக் கிளம்பிட்டே" - என்று கேட்டான்...
"உன் போனும், துணியும் அங்கேயே கெடக்கு... போய் எடுத்துக்க...இனி எங்கூட பேசாதே... வழிவிடுடா" - என்று சொல்லி நடந்தாள்
"சீது ... சீது... பிளீஸ் நில்லுடி... காத்ரீனா என்னாச்சு நீயாவது சொல்லுடி..." - என்று கேட்டான்...
"உனக்கு எத்தனைக் காதலிகள்?" - என்று கேட்டாள் காத்ரீனா...
"சீது, என்னடி இவா இப்படி பேசறா... என் உயிரடி நீ... நா கடலுக்கு போகும்போது நீ மகிழ்ச்சியாத்தானே இருந்தே... உன்னையும் கூப்பிட்டேனே... நீதான் வர்லைன்ட்டே..."
"வழிவிட்ரா... நா போறேன்"
"என்னாச்சுடி... சொல்லுடி... என் மனசு நோகுது... சீது, பிளீஸ்..."
"ஓ மனசு நோக்குதோ... உனக்கேண்டா நோகும்... உனக்குத்தான் போனிலியே முத்தம் கொடுக்க ஆளிருக்காங்களே... எத்தனைப் பேர்டா... போதுண்டா உன் பழக்கம்... ஆளைவிடு" - என்று கோபமாகப் பேசி காத்ரீனாவை இழுத்து நடந்தாள்...
"ஏய் நில்லுடி... நா கெஞ்சிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு நடக்கறே... என்னாச்சு சொல்லுடி" -என்று அவளை தோள் பற்றி இழுத்தான்...
"கையை எட்றா... போன்லெ உனக்கு முத்தம் கொடுத்தாளே... அவளைப் போய்த் தொடு" - என்று சொல்லி தோள் மீதிருந்து அவன் கையைத் தட்டி விட்டாள்...
அவன் ஓடிச்சென்று மணலில் கிடந்த, அவனது போனையும், ஆடைகளையும் தூக்கிக்கொண்டுத் திரும்பினான்...
அதற்குள் அவர்கள் மணற்பரப்பை நீங்கி சாலைக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள்...
"சீது என்னைப் பேச விடு... நீ பாட்டுக்கு கோபிச்சிட்டு போனியினா என்னடி அர்த்தம்"
"நீ பொம்பளைப் பொறுக்கின்னு அர்த்தம்"
அருகில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்...
"மெதுவா பேசுடி... எல்லாரும் பாக்கறாங்க"
"இனி ஒரு வார்த்தை பேசினியினா, உன்னைக் காதலிச்சதுக்கு நா கடலில் குதிச்சு செத்துருவேன்... எ ன் சாவுக்கானப் பழியை நீ சுமக்காதே... போயிரு"
"நா போக மாட்டேண்டி... நீ இல்லைனா நானும் செத்துருவேண்டி.... வாடி ரெண்டு பேருமே குதிச்சு செத்துரலாம்" - என்று சொல்லி சீதாலெட்சுமியின் கையைப் பிடித்து, இழுத்தான்...
"அலோ கையை விடுங்க... சீதாலெட்சுமியை இன்னொரு தடவை இழுத்தீங்க, நா பொல்லாதவளாயிருவே... பொம்பளைகனா உங்களுக்கு விளையாட்டுப் பொருளாயிருச்சா... என்ன சொன்னே... வா ரெண்டு பேரும் கடலில் குதிச்சு செத்துருலாம்னு இழுத்துட்டுப் போய் என் பிரண்ட் சீதாலெட்சுமியைக் கடலில் தள்ளி சாகடிச்சிட்டு, உங்களுக்கு நீச்சல் தெரியும்... நீங்க தப்பிச்சிட்டு ஈஸியா இன்னொருத்தியை இழுத்துட்டு சுத்த ஆரம்பிச்சிடுவீங்க... அதுக்குத்தானே இழுக்கிறீங்க...கை எடுங்க " என்று சொல்லி, ரமேஷின் பிடியிலிருந்து சீதாலெட்சுமியை விடுவித்தாள் காத்ரீனா!
"அப்படியில்லைங்க... நா உயிருக்கு உயிரா சீதாலெட்சுமியை லவ் பண்றேன்... என் மனசைப் புரிஞ்சுக்கங்க"
"உன் மனசு எப்படிப் பட்டதுனு உன் போனில் இருக்கும் தொடர்புகளே சொல்லுது... அடச் சீ நகரு... வாடி " - என்று சொல்லி சீதாலெட்சுமி கத்ரினாவோடு நடந்தாள்...
"சீது... சீது... என்னை நம்புடி... சாமி சாத்தியமா உன் மேல் உயிரை வெச்சிருக்கேன்... நம்புடி..."
"அப்ப அவளுக யாரு?"
"ஜஸ்ட் பிரெண்ட்"
"முத்தம் கொடுக்குறா.... போனில் கொடுக்குறா... சீ... நேரில் என்னென்ன கொடுப்பாளோ... விடு... போதும்... அருவருப்பா இருக்கு நீ தொட்டா... " - கையெடுத்துக் கூப்பினாள்..
"சீது... நீ மட்டும்தா என் வாழ்க்கை... சொன்னா நம்புடி..."
அவனைப் புறக்கணித்து இருவரும் நடந்தார்கள் வேகமாக...
அவன் விடாமல் பின்தொடர்ந்து இடை மறித்து நிறுத்தினான்...
"சீதாலெட்சுமி... ஐ லவ் யூ " என்று சொல்லி கண் கலங்கினான்...
"நீ வேணும்... நீயில்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்... பிளீஸ்..."
"இதைப்பார்... தெருவில் நின்னு அழுது, அனுதாபத்தை வரவழைக்காதே"
"கோயிலுக்கு வேணும்னாலும் வந்து சத்தியம் பண்றேன்..."
"உன்னை நம்ப என் மனசு உடன்பட மாட்டேங்குது... "
"ப்ளீஸ்"
"என் காதல் உண்மையானது... உன் காதலில் உண்மையில்லை... உன்னை நினைச்சு நான் உருகறேன்... உனக்கேத் தெரியும்... ஆனா நீ என்னை ஏமாத்தியிருக்கே "
"நீதா எனக்கு உயிர்"
"உன் போன்லெ ஒன்னு ரெண்டு தவிர, எல்லாமே பொண்ணுகளோட பேர்... செ... வழிவிடு... ஏமாத்தறதெல்லாம் ஒரு பிழைப்பாடா?"
"சீது என்ன செஞ்சா என்னை நம்புவே... ஐ லவ் யூ சீது"
"போடா... போடா... பொறுக்கி"
"சீது அப்படி சொல்லாதே... நீ இல்லைனா நா செத்துருவே... உனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்குனு எனக்குத் தெரியும்... வா சாமிகிட்ட சத்தியம் பண்றேன்"
"சத்தியம் வேண்டாம்... காதல் உண்மையானதுனா, நீ நாலு பேருக்கு கேட்கிற மாதிரி, நடுத்தெருவில் நின்னு 'சீதாலெட்சுமி ஐ லவ் யூ' னு சொல்லுணும்"
"இப்பவே இங்கேயே கூவட்டுமா?"
''இங்கே வேண்டாம்... வெள்ளிக்கிழமை நா உங்கவீட்டுக்கிட்ட, அண்ணா நகர் பூமித்தாய் கோயிலுக்கு வருவேன்... நீ என்னைப் பார்த்தவுடன் அண்ணா ஆர்ச் பிளை ஓவர் மேல் நட்ட நடுவில் நின்னு ஐ லவ் யூனு சொல்லு... அதுவரைக்கும் என்கிட்டே பேசாதே... பேச முயற்சிக்காதே..."
''அய்யோ இன்றைக்கு சன்டே... இன்னும் அஞ்சு நாள் இருக்கே... ப்ளீஸ்... இப்பவே போகலாம் வா... அண்ணா நகர் மேம்பாலத்தில் நின்னு விடிய விடிய 'ஐ லவ் யூ' 'ஐ லவ் யூ' னு சொல்லிட்டே இருக்கேன்... என் வீட்டுக்கும், நீ கும்பிடும் கோயிலுக்கும் கேட்கற வரைக்கும் கத்தறேன்... வா.. இப்பவே..."
"நாம நினைச்ச நேரத்துக்கு கூப்பிட பூமித்தாய் என்ன வேலைக்காரியா? வெள்ளிக்கிழமை வர்ரேன்... நீ போ" - என்று சொல்லிவிட்டு நடந்தாள் சீதாலெட்சுமி...
சிறுது தொலைவுச் சென்றதும், காத்ரீனா கேட்டாள்: "என்னடி பிளான்"
"உண்மையாவே என்னை லவ் செய்றானா இல்லையானு வெள்ளிக் கிழமைத் தெரிஞ்சிரும்... நீ கேமரா வேலையைப் பார்த்துக்கோ... என் திட்டம் சரியா வேலை செஞ்சா என் கண்ணெதிரில் அவன் கொல்லப்படுவாண்டி"
சொன்னதுப் போலவே வெள்ளிக்கிழமை ஆட்டோவில் வந்தாள் சீதாலெட்சுமி...
"அண்ணா, வண்டியை நிறுத்துங்க "- என்றாள் சீதாலெட்சுமி.
10 - டோக்கன் நெம்பர் நான்கு ஒன்பது... கவுண்டர் எண் : மூன்று.
டோக்கன் நெம்பர் மூன்று, ஏழு.
வங்கியில் - காசாளர் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு ஒலித்தது...
முப்பத்தேழாவது எண் பெற்றவர் இருக்கையில் இருந்து எழுந்து, காசாளர் இருப்பை நோக்கி சென்றார்...
சீதாலெட்சுமி தன் கையில் இருந்த எண்ணை மீண்டும் பார்த்தாள்... அது நாற்பத்தொன்பதைக் காட்டியது...
கூட்டம் அதிகமாக இருந்ததால்-
கொஞ்சம் கசமுசாவென இரைச்சலும் இருந்தன...
இரைச்சலினூடே-
"என்ன சொன்னே... நான் உன் வேலைக்காரன் இல்லைம்மா... இந்த வங்கியின் வாடிக்கையாளர்...?" - என்று ஒரு வாடிக்கையாளர் கத்தினார்...
"கூட்டம் நிறைய இருக்குங்க... போயிட்டு இன்னொருநாள் வாங்க"
"நீ சொல்றப்பவெல்லாம் அலையறதுக்கு நீ வெச்ச வேலைக்காரன் இல்லை நான்.... எங்க மாதிரி வாடிக்கையாளருக்கு வேலை செய்றதுக்குதா உன்னை வேலைக்கு வெச்சிருக்காங்க... அதைத் தெரிஞ்சுக்க நீ... என் மூஞ்சியைப் பார்க்காமலே புறங்கையால் என்னை விரட்டறே" - என்று வாடிக்கையாளர் உரக்க கத்தினார்...
"நீங்க பேசறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது... பேசாமே போங்க" - வங்கி ஊழியர்.
" வாடிக்கையாருக்கு வேலை செய்யறதுக்குதா நீ இருக்கே... என்னை வெளியே போகச் சொல்றதுக்கு நீ யாரும்மா?..."
"எதுக்கு கத்தறீங்க... காது அடைக்குது"
"முக்கால் மணிநேரமா கால்கடுக்க நின்னுட்டு இருக்கேன்... எனக்கு பதில் சொல்லாமே, உன் சொந்தக் கதையை போனில் பேசிட்டு இருந்தியே... அப்ப உன் காது அடைக்கலியோ?... போய் தனியார் வங்கியில் பாருங்க... வாடிக்கையாளரை உட்கார வெச்சு எவ்வளவு மரியாதையா பேசறாங்கனு"...
"உங்களை யார் கவர்மெண்ட் பாங்குக்கு வரச்சொல்லி கெஞ்சறாங்க... தனியார் பேங்குக்கே போக வேண்டியதுதானே... இங்கே வந்து உசிரை வாங்கறது..."
"மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் வேலைக்கும் இலாயக்கு இல்லாத உங்களுக்கு, தனியார் வங்கியில் கொடுக்கற சம்பளத்தைவிட மூனு மடங்கு சம்பளத்தை அரசாங்கம் சம்பளமா, மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து கொடுக்குறாங்க... எல்லா பேங்குகளையும் சீக்கிரம் தனியார் மயமா ஆக்கணும்..."
"போய் ஆக்குங்க... இங்கே நின்னு கத்தாதீங்க"...
சச்சரவுச் சத்தம் அதிகரிக்க-
மேலாளர் கார்த்திக் தன் அறையிலிருந்து வெளியே வந்து ஊழியரிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்த, வாடிக்கையாளரின் தோள் தொட்டு, "சார் வாங்க... என்கிட்ட சொல்லுங்க; நான் கவனிக்கிறேன்" என்றுச் சொல்லி, வாடிக்கையாளரை தன் அறைக்கு அழைத்துச் செல்லும்போது, கார்த்திக் எதேச்சையாக பார்க்க நேரிட்டது சீதாலெட்சுமியை...
சீதாலெட்சுமி நடந்துக் கொண்டிருக்கும் வாக்குவாதத்தையும் வாடிக்கையாளரை அழைத்துச் செல்லும் மேலாளரையும் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்...
அப்போது அறிவிப்பு ஒலிபெருக்கி : 'டோக்கன் எண் நான்கு ஆறு' என்றது...
மேலாளர் அறையில்-
"சார் உட்காருங்க... டீ சொல்லட்டுங்களா " என்று சொல்லிவிட்டு மேசை மணியை அழுத்தினான்...
வந்த பணியாளனிடம் "சாருக்கு டீ கொடு" என்று சொல்லிவிட்டு, மீண்டும் வாடிக்கையாளரிடம்,"சொல்லுங்க சார்" -என்றான்...
"என் மகள் கல்விக்கடன் இந்த வங்கியில் வாங்கியிருக்கேனுங்க... மாதாமாதம் கடன் கட்டிட்டு வரேனுங்க... மீதி எவ்வளவு கட்டணும்னு கேட்டேனுங்க... அந்த அம்மா, வரும்போதெல்லாம் கூட்டம் இல்லாதப்ப வானு ஒரு பத்துத் தடைவையாவது அலைக்கழிச்சிருக்காங்க... வயசுக்குக்கூட மரியாதை இல்லைங்களா அரசாங்க வங்கியில்" - என்று கேட்டார் அலுப்புடன்...
"நீங்க என்கிட்டே வந்து சொல்லியிருக்கலாமே... எதுக்கு அலைஞ்சீங்க...சரி டீ குடிங்க... பொண்ணோட கல்விக்கடன் எண் சொல்லுங்க..."
வாடிக்கையாளர், வங்கி வரவு புத்தகத்தை கொடுத்தார்...
அதில் குறிப்பிடப்பட்டிருந்த, கல்விக்கடன் எண்ணுக்குள் போய், "சார், இன்னும் நிலுவை மூவாயிரம் இருக்கு... இதைக் கட்டிட்டா கல்விக்கடன் முடிஞ்சிரும்..." - என்றான் கார்த்திக்.
அறிவிப்பு கருவி : 'டோக்கன் எண் : நான்கு எட்டு'
வாடிக்கையாளர் "வட்டிங்க?"
"எல்லாம் சேர்த்து மூவாயிரம்தான்... இன்னும் ஏதாவது கேக்கனுங்களா... இனிமேல் நீங்க எங்கிட்ட வாங்க... நானே பணம் கட்டி உங்களுக்கு ரசீது வாங்கித் தந்துடறேன்..." - என்றான் கார்த்திக்...
அறிவிப்பு கருவி 'டோக்கன் எண் : நான்கு ஒன்பது கவுண்டர் எண் மூன்று .'
""உங்க மாதிரி ஒன்னு ரெண்டு பேர்தான் மக்களை மதிக்கிறீங்க... பொதுவா, கவர்மெண்ட் வங்கியில் மக்களை மதிக்கறதே இல்லைங்க... நன்றிங்க... அடுத்த வாரம் முழுப்பணத்தையும் கட்டிட்டு, கவர்மெண்ட் வங்கிக்கு பெரிய கும்பிடு போட்டுருவேங்க" - என்று சொல்லிவிட்டு வாடிக்கையாளர் புறப்பட்டார்...
அறிவிப்பு கருவி : டோக்கன் எண் : ஐந்து பூஞ்சியம் கவுண்டர் எண் : மூன்று
மேலாளர் கார்த்திக் மேசைமணியை அழுத்தி பணியாளை வரவழைத்தார்... "சம்பத் மேடத்தை கூப்பிடு" - என்றான் அவரசமாக!
"ரஞ்சிதப்ரியா மேடமா சார்"
"இல்லை சம்பத்... அந்த மேடம்"
"வாணி மேடமா... சார்"
"இல்லை சம்பத், அந்த மேடம்"
"ஓ... திவ்யஸ்ரீ"
"என்ன சம்பத் எனக்குப் பேர் சரியா வரமாட்டேங்குது... இப்ப கவுண்டர்ல பணம் கட்டிட்டு போறாங்க பார்.."
"யாருங்க சார்... என்ன சார் நீங்க... நம்ம பாங்கில் கல்யாணம் ஆகாத மூனு லேடி ஸ்டாப்களும் உங்களை ஓரக்கண்ணில் பார்த்து பார்த்து வழியறாங்க...நீங்க ரோட்டில் போற வாடிக்கையாளரைப் பார்த்து...."
"சம்பத்! அதோ அவங்கதான் சிவப்பு சேலை கட்டிக்கிட்டு அம்மன் மாதிரி அழகா போயிட்டு இருக்காங்க... சீக்கிரம் போய் நான் வரச் சொன்னேனு சொல்லு"
சன்னல் வழியே காட்டினான்...
"தேவதை மாதிரி இருக்காங்க சார்.. இப்படியொரு நல்ல பிகர் இருக்கும்போது நம்ம ஆபிஸ் அட்டபிகர், எப்படிப் பிடிக்கும்"
"பேசிட்டு இருக்காதே... போ..."
"சொல்லுங்க சார் லவ்வுதானே"
"சேகர், அப்படியெல்லாம் இல்லை... அவங்க கம்பெனி செக் க்ளீர் ஆகாம இருக்கு... வரச்சொல்லு ... போ..."
"அதானே, சாருக்கு லவ் சென்ஸ் இருக்குமோனு நான் தப்பா கணக்குப் போட்டுட்டேன்... நம்ம பேங்க் திவ்யஸ்ரீக்கு என்ன சார் குறைச்சல்... உங்களைப் பார்த்து ஜொள்ளறாங்க... என்கிட்டையே சாடைமாடையா உங்களை விசாரிச்சாங்க"
"சேகர்... அதோபார்... அவங்க ஆட்டோவில் ஏறப் போறாங்க..."
"அய்யயோ... " என்று அதிர்ச்சியை வெளிப்படுத்திவிட்டு தெருவுக்கு ஓடினான்... "மேடம்... மேடம்..." - என்று அழைத்து இடதுப் புறமாகத் திருப்பம் போட்ட ஆட்டோவின் குறுக்கே போய் நின்றான்...
"மேடம், உங்களை மேலாளர் வரச் சொன்னாருங்க"
"எதுக்கு"
"உங்க கம்பெனி செக், பாஸ் ஆகலைன்னாரு... அதை விசாரிக்க வரச் சொன்னாருங்க"
"அண்ணே கொஞ்ச நேரம் இருங்க..." என்று ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு, வங்கியுனுள் நுழைந்து மேலாளருக்கு எதிரில் நின்றாள்...
கார்த்திக் எழுந்து நின்று வரவேற்றான்... "ப்ளீஸ் உட்காருங்க"
அமர்ந்தாள் எதிரில்.
"எந்த செக்... பவுன்ஸ் ஆச்சு?"
"சாரி... உங்களை வரவைக்க.."
"என்னச் சொல்லுங்க"
"இன்றைக்கு மாலை, என்கூட ஒரு காப்பி சாப்பிட வர முடியுமா?... நான் காத்திருப்பேன்... உங்க வருகைக்காக"
சீதாலெட்சுமி திட்டுவாள் என்று பயந்தான் கார்த்திக்.
'சிறுது நேரம் அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்... அதில் கோபம் இருப்பதாக நினைத்து கார்த்திக் உள்ளூர நடுங்கினான்...
"காப்பிதானே ... ஓகே... எங்கே?" - மென்முறுவலுடன் கேட்டாள்...
கார்த்திக் உள்ளம் ஆனந்த ஊஞ்சலாடியது...
"என் தோழியும் என் கூட வருவா... தடையில்லையே" - என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள்...
வாசல்வரைச் சென்று வழியனுப்பியதை வங்கி ஊழியர்கள் விந்தையாகப் பார்த்தார்கள்...
11 - சீதாலெட்சுமியிடம் விசாரணையா?
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிலர் அஞ்சி நடுங்கி மூலையில் பம்மிக் கொண்டிருக்க-
விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எல்லாரும் ஒரே ஒரு உள்ளாடையுடன் மட்டும் இருக்க,
அதே அறையில் பெண்காவலர் ஒருவர், இராமனை தடியால் அடித்தும் உதைத்தும் கொண்டிருந்தார்... அவன் முழு பேண்ட் அணிந்திருந்தான்...
அவன் அடித்தாளாமல் கத்திக் கொண்டிருக்க-
உள்ளே நுழைந்த துணை ஆய்வாளர், பெண்காவலரிடம், "என்ன கேஸ்" என்று விசாரித்து விட்டு, "எதுக்கு அவன் துணியோட இருக்கான்... கழட்டச் சொல்லிட்டு அடிக்க வேண்டியதுதானே... கழற்றா" - என்று துணை ஆய்வாளர் அவன் முடியைப் பிடித்து ஆட்டினார்..."
"சார், அவனை கழட்டச் சொல்லாதீங்க" - என்று பெண் காவலர் சொன்னார்.
"ஏம்மா"
"உள்ளே ஒன்னுமே போடலைங்க சார்... துணியை கழட்டுடானு சொன்னேன்... கழட்டிட்டு என் எதிரில் வந்து நின்னு கழட்டிட்டேன்... பாருங்கன்னு காட்றான் சார்"
"ஏண்டா ஜட்டி போடல" என்று துணை ஆய்வாளர் அவனை மிதித்தார்...
"என் ஆளுக்கு பிடிக்காதுங்க சார்" - என்று அலறினான்...
"அடக் கருமமே... என்னம்மா இவன் மேல் கேஸ்"
"கடைக்குள் போய் ஜட்டித் திருடியிருக்கான்"
"ஜட்டி போடாத வெறும் பயல், ஏண்டா ஜட்டித் திருடினே?"
"விலை அதிகமான ஜட்டியைத் திருடி, நடைப் பாதையில் பாதி விலைக்கு வித்துருவேன் சார்... உங்களுக்கு எத்தனை ஜட்டி வேணும் சொல்லுங்க... காசு வேண்டாம் சார்..."
ஓங்கி அறைந்தார்... இராமன் அலறினான்...
"யாரம்மா ரிப்போர்ட் செஞ்சாங்க?"
"சோழிங்கநல்லூர் டீனேஜ் வேர்ஸ் கடை ஓனர்"
"சார் அவர் கடையில் சி சி டி வி இல்லைங்க சார்... ஒரு தேவிடியா நான் திருடரத வீடியோ பிடிச்சு, யூடியூபில் போட்டுட்டா சார்... என் தொழிலையே கேவலம் படுத்திட்டா... அன்னைக்கு நா பத்துக் கடையில் திருடியிருக்கேன்... பத்துக் கடைக்கும் என் பின்னாடியே வந்துருக்கா... எனக்குத் தெரியாம... அவளை நா சும்மாவிடமாட்டேன் சார்..."
"என்ன செய்வே?" - என்று சொல்லி, தடியை அவன் வாய்க்குள் விட்டு நெம்பினார்... "திருட்டு நாயை நல்லா கவனிம்மா... " -என்று துணை ஆய்வாளர் சொல்ல-
"உள்ளே போடா " என்று அவனை லத்தியால் அடித்து, கம்பி அறைக்குள் அனுப்பினாள்...
"இவன் திருடின வீடியோ இருக்கா?" - துணை ஆய்வாளர் கேட்டார் ...
"யூ டுயூப் சீதாலெட்சுமி சானல் சார்" - என்று சொல்லி, அலைப்பேசியை காட்டினாள்...
"இந்த பொண்ணுக்கு எப்படிம்மா, லைவ் ஷோ கிடைக்குது.... திருட்டை நேரா படம் பிடிக்கிறா... சாகறவனையும் சாவோட படம் பிடிக்கிறா... அட நேத்து ஒரு லைவ் ஷோ போட்டுருக்காளே... பேங்க்கில் சண்டைப் போடறதை அப்லோடு செஞ்சுருக்கா... நடந்த நாலு தற்கொலைகளின் நேரடிக் காட்சியும் சீதாலெட்சுமியின் சானலில் பதிவேற்றம் செய்யப் பட்டிருக்கு... சீதாலெட்சுமியை விசாரிக்காமல் இருக்கோமே..."
12 - இரண்டாவது கொலையும் தற்கொலையானது...
சென்னையின் எந்த முனையிலும் இல்லாத குளுமையும், அழகும் அடையாறுப் பகுதிக்கு இருக்கிறது எனில் ஆம் என்றே கூறலாம்...
தெருவின் இரு மருங்கிலும் அடர்ந்த மரங்கள் அடையார்த் தவிர வேறு எங்கும் காணவியலாது...
மரங்களைப் போலவே பெரிய அடுக்குகள் கொண்ட வீடுகள்... அகலமான சாலைகள்... வெயில் பொழுதின் வியர்வையை விரட்டும் மரங்களின் தெளிந்தக் காற்று...
இரவின் அடர்வைக் குறைக்கும் தெருவிளக்குகள் நிறைந்திருந்தாலும்; மரங்களின் அசைவின்போது கிளைகள் நிழல் செய்யும் அற்புதம் அடையாறின் தெருக்களில் உணரலாம்...
அதேபோல் இரவு நேரத்தில் மரங்களில் பூத்துப் பொதிந்திருக்கும் மலர்களின் மணத்தை நுகர்ந்துப் பயணிப்பதில் கிட்டும் இன்பம் அடையாருக்கே சொந்தம்...
மரங்களின் மணம் பொதிந்த தெருவினூடே பயணித்த ஆட்டோ எலியட்ஸ் சாலையில் இருக்கும் உணவகத்தின் முன் வந்து நின்றது...
முதலில் காத்ரீனாவும், அவளைத் தொடர்ந்து சீதாலெட்சுமியும் இறங்கினாள்...
காப்பி சாப்பிட கார்த்திக் அழைத்திருந்தான்...
சீதாலெட்சுமியும் ஒப்புக் கொண்டிருந்தாள்...
அந்த உணவகத்தின் நான்கு பேர் அமரக்கூடிய தனியறையை கார்த்திக் ஒதுக்கீடுப் பெற்றிருந்தான்...
அதன் விபரங்களையும் சீதாலெட்சுமியிடம் தெரிவித்திருந்தான்...
ஏழு மணிக்கு வந்து விடுவதாகக் கூறியிருந்தான்...
ஆனால்; இருபது நிமிடங்களுக்கு முன்னரே காத்ரீனாவை அழைத்துக் கொண்டு சீதாலெட்சுமி வந்துவிட்டாள்...
உள்ளே நுழைந்து, ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் சென்று காத்ரீனாவும், சீதாலெட்சுமியும் அமர்ந்தார்கள்...
கடற்கரையைக் காட்டும் விதமாக அறை இருந்தது...
சாலையில் வாகனங்களின் மினுமினுப்புகள் வெளிநாட்டுக் கோலம் போல் தெரிந்தன...
"சீதா அங்கே பார்"
காத்ரீனா காட்டியதைப் பார்த்தாள்...
பெற்றோர் சிரித்துப் பேசியபடி , பனிக்கூழ் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்... அவர்களின் பத்து வயது மதிக்கத் தக்க சிறுமி நுரை முட்டைகளை மிதக்கவிட்டு சிரித்து மகிழ்ந்துக் கொண்டிருந்தாள்...
அருகில் ஓர் இளைஞன், சிறுமி விடும் நுரை முட்டைகளை கையில் ஏந்தி வந்து, அவள் மீது மோதவிட்டு வேடிக்கைக் காட்டும் சாக்கில் அவளைத் தொட்டுத் தொட்டுத் தடவினான்...
"நீ சூட் பண்ணு... நா அங்கே போயிட்டு வரேன் " என்று சொல்லி கேமராவை காத்ரீனாவிடம் கொடுத்தாள்...
சீதாலெட்சுமி கிளம்புவதற்குள் சிறுமியின் பெற்றோர்கள் ஏதோ சொல்ல, சிறுமியோடு இருந்த இளைஞன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்... சிறுமியோடுப் பெற்றோர்களும் காரில் புறப்பட்டார்கள்...
சீதாலெட்சுமி பழையப்படி தன் இருக்கையில் அமர்ந்து, "காத்ரீனா, நீ வில்லிவாக்கம் வில்லிடி... ஞாபகமிருக்கா? " - என்றாள்
"ஆமாடி... இதைப் பார்த்தப்ப எனக்கு வில்லிவாக்கம் குமார் ஞாபகம்தான் வந்தது"
"எனக்கும் தாண்டி...''
வில்லிவாக்கத்தில் காத்ரீனாவின் இன்னொரு காதலன் குமார்...
வீடுகளுக்கு வண்ணம் பூசும் வேலை செய்பவன்...
கடைசியாக அவன் வண்ணம் பூசிய வீடு வில்லிவாக்கத்திலிருந்து, உட்புறமாக இருந்தது... - ஆள் நடமாட்டம் குறைந்த - இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடு கட்டிக் கொண்டிந்தார்கள்...
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்களுக்கு ஊதியம் கொடுத்துவிட்டு, எல்லாரும் சென்றப் பிறகு காத்ரீனாவை வரச் சொல்லுவான்...
அவளோடுப் பேசுவதில் அவனுக்கு பேரின்பமாக இருக்கும்... இரவெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள்...
சரியானத் தருணத்திற்காக அவனைக் கொலை செய்ய காத்ரீனா துடித்துக் கொண்டிருப்பாள்...
தோழி சீதாலெட்சுமியும் வந்து அதே கட்டிடத்தில் அவனுக்குத் தெரியாமல் ஒளிந்திருப்பாள்...
விரைவில் திருமணம் செய்துக் கொள்வோம் என்று வற்புறுத்துவான்...
"ஏண்டா, கல்யாணம் செஞ்சு என்னை என்ன செய்வே?"
"உன் ரெண்டு கை, ரெண்டு காலையும் கட்டி வெச்சிட்டு"
"கொலை செய்வியா?"
"ஐயோ என் தங்கத்தை நான் கொலை செய்வேனோ.. உன்னை என் உள்ளங்கையில் வெச்சு பாத்துக்குவேன்" - என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டான்...
"அவளும் அவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு,"என் கையை, காலைக் கட்டி வெச்சிட்டு என்னடா செய்வே?... சொல்லுடா" - என்றுக் கொஞ்சினாள்...
"சி போடி... கல்யாணம் நடந்த பிறகு பாரு என் வித்தையை " - என்றுச் சொல்லி அவளை ஆரத்தழுவி அணைத்தான்...
அவனுடைய உதட்டைப் பிதுக்கி, "சொல்லுடா" - என்றுக் கொஞ்சினாள்...
அவன் அவளுடைய உதட்டை தன் உதடுகளால் தடவி, இதைக் கடிச்சு தேன் குடிப்பேன்"
"போடா, இரத்தம் குடிக்கிற காட்டேரி " - என்றாள் காத்ரீனா...
" ஆமா; நான் காட்டேரிதான்.... உன்னைக் கசக்கிப் பிழிஞ்சு உன் உடம்பு முழுசா உறிஞ்சு குடிச்சிருவேன்" - என்று இறுக்கமாய் அணைத்தான்...
"டேய்... உனக்கு சின்ன பொண்ணுகப் பிடிக்குமா"
"ஏண்டி"
"சொல்லுடா"
"............................"
"ஏண்டா பேச மாட்டேங்கிறே"
"எதுக்கு கேட்கிறே?"
" உன்கிட்ட வேலை செய்ற கோபால் வீட்டுக்கு போவியா?"
"போவேன்"
"அவரோட பொண்ணை என்ன செஞ்சே?"
"ஒன்னும் செய்யலியே"
"டேய், பொய்ச் சொல்லாதே... அவளுக்கு வயசு என்ன? ஏழு இருக்குமா?"
"இருக்கும்... "
"எத்தனை சின்ன பொண்ணுகளை நீ ரேப் பண்ணியிருக்கே"
"என்னடி ஏதேதோ கேட்கிறே"
"சும்மா சொல்லுடா... "
"பொம்பளை புள்ளைகள்கிட்டே அன்பா பேசுவேன்... ஆனா; நீ சொல்ற மாதிரி ஒன்னும் இல்லை"
"டேய் டேய் உன்னைப்பத்தி எனக்கும் எல்லாம் தெரியும்... அது இல்லைடா... சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன் ... சரியா?"
"சின்னப் பொண்ணுக கிட்ட நல்லா பழகுவேன்... சாக்லேட் வாங்கித் தருவேன்"
"போடா லூசு... நேற்று கழிவறையில் கோபாலோட பொண்ணை என்ன செஞ்சே"
"என்னடி ஒரு மாதிரி பேசறே?''
"டேய் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பலவீனம் இருக்கும்... பாரே... இருட்டுக்குள்ளே நாம உட்காந்து பேசறோம்... நீ என்னை சீண்டிட்டே இருக்கே... இந்த நேரத்தில், ஒரு பத்து வயசுக்குள் சின்னப் பொண்ணு வந்தா என்ன செய்வே?... எனக்குத் தெரியாமே சின்ன பொண்ணைக் கூப்பிட்டிட்டு போய் சாக்கலேட் வாங்கித் தரமாட்டே?...."
"சாக்லேட் வாங்கித் தரது தப்பாடி"
"தப்பில்லை... ஆனா; எந்த வம்பிலும் மாட்டிராதே... போக்சோ சட்டத்தில் உன்னைப் பிடிச்சுட்டாங்கன்னா, உன்னை நம்பியிருக்கிற என் கதி என்னாகும்னு யோசிடா"
"ஏய் என்னடி சொல்றே?... எனக்கு அப்படி பழக்கம் இல்லை"
"எனக்கு எல்லாம் தெரியுண்டா... பொய் சொல்லாதே"
"என்னடித் தெரியும்? "
"சின்ன பொண்ணுக எத்தனை பேரை கெடுத்துருக்கே..."
"ஏய்... என்னடி?... நா இல்லை இல்லைனு சொல்லிட்டு இருக்கேன்.... நீ என் மேல் பொய் சொல்லிட்டே இருக்கே"
"பொய் இல்லைடா... நமக்குள் ஒளிவுமறைவு வேண்டாம்னு சொல்றேன்... உனக்கு சின்னப் பெண்கள் மீது மோகம் இருக்கு... இது ஒரு மாதிரியான மோகம்... இதனால், உனக்கு என்மேல் உள்ள காதல் தெரியாமல் போயிரும்... இந்த நிலையில் நாம் கல்யாணம் செய்துக்க வேணுமா சொல்லு..."
"என்னடி சொல்றே... உன்மேல் உயிரா இருக்கேன்... என்னைப் பாத்து..."
"குமார்... உன்னைத் தப்பு சொல்லலை... ஆனால் உன்னையறியாமல் உன்கிட்டிருக்கிற மோகம் பல சின்னஞ்சிறு பெண்களை கற்பழிக்க வெச்சு, போக்சோவில் மாட்டி உன் வாழ்க்கையும் போய், என் வாழ்க்கையும் கெட்டு, சரி; வேண்டாம்... இனிமேல் நமக்குள் எதுவுமில்லை... இதை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்... பை... நா போறேன்..." - என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டாள்...
இரண்டடி நகர்வதற்குள்..
"காத்ரீனா... நீ சொல்ற மாதிரி எங்கிட்ட எந்தக் கெட்டப் பழக்கம் இல்லைடி... யாரோ தப்பா உன்கிட்ட சொல்லியிருக்காங்க..."
"குமார்... யாருமே தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டாங்க..."
"நா தப்பே செய்யலடி..."
"நீ ரொம்ப நல்லவன்டா.... ஆனால்; பத்து வயசு ஏழு வயசு மூணு வயசுன்னு நீ நிறைய சின்னப் பெண்களை கெடுத்துருக்கே... அதில் ஒரு போதை இருக்கு உனக்கு... ஆனால்; நம்ம வாழ்க்கைக்கு உன் போதை உதவாதுடா..."
"இல்லை; காத்ரீனா!... உன்னை நா நல்லா பாத்துக்குவேன்..."
"நாம திருமணம் செஞ்சுக்கிட்டாலும், திருமண வாழ்க்கை உனக்குக் கசந்துரும்... ஏன்னா, உனக்கு சின்னக் குழந்தைகள் மேல் ஈர்ப்பு அதிகமா இருக்கு... உன்னைப் பற்றி மருத்துவர்கிட்ட விசாரிச்சேன்... உன் பழக்கத்தை உன்கிட்டிருந்து பிரிக்கிறது ரொம்ப கடினம்னு சொல்லிட்டாரு... நா என்ன செய்ய முடியும்?"
"நில்லு காத்ரீனா... நா என்ன சொன்னாலும் அது பொய்யாத்தான் உனக்குத் தெரியும்... நா என்ன செஞ்சா நீ நம்புவே?"
"சின்னஞ்சிறு மொட்டுக்களை நீ தீண்டியிருக்கே... எல்லாம் தெரிஞ்சுத்தான் கடைசியா உன்னை நா பார்க்க வந்தேன்... நம் நட்பு தூய்மையானது... நா உன்னை மறக்க மாட்டேன்... அதே நேரம், சின்னப் பெண்கள்னு கூடப் பார்க்காமே ... சே...உன்னை திருமணமும் செஞ்சுக்க மாட்டேன்... இதை உனக்குப் புரிய வைக்கத்தான் வந்தேன்... "
"என்னை நம்பலை நீ... நீ, போயிட்டா எனக்கு ஏதுடி வாழ்க்கை?... நா செத்துப் போறேன்... என் சாவுக்குப் பிறகாவது என மனதை நீ புரிஞ்சுக்க" என்று சொல்லிக் கொண்டே, மொட்டை மாடியிலிருந்துக் குதித்து உயிர்விட்டான்...
அதுவும் தற்கொலையாகப் பேசப்பட்டது ஊடகங்களில்...
அந்த நினைவுகளை காத்ரீனாவும், சீதாலெட்சுமியும் பேசிக் கொண்டிருந்தார்கள்...
"அளவுக்கு மீறி என்னைக் காதலிச்சாண்டி லூசு... எப்படி அவனை சாகடிக்கிறதுன்னு தெரியாமல் இருந்தோம்... உண்மையிலேயே நீ அறிவுத் திலகம்டி... என்னமா என்னைப் பேசவிட்டே... அருமையானக் கொலைடி... துடிக்கத் துடிக்க வீடியோ சூட் பண்ணோம்... ஏய் சீதா, கார்த்திக் வராண்டி.."
"யாய்" - சொல்லிக் கொண்டே நுழைந்தான் கார்த்திக்... "குட் ஈவினிங்" சொன்னான்...
"என்ன சாப்பிட்றீங்க"
"ஒரு வாக் போயிட்டு வரலாமா?... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"
"காப்பி குடிச்சிட்டுப் போலாமே"
"போயிட்டு வந்து குடிக்கலாமே"
13 - தனிமரமானான்...
கடற்கரைச்சாலை நிரம்பி வழிந்தது... அதனால்; கடற்கரைக்கு எதிரில் பெசன்ட் நகருக்குள் - அமைதியான ஆளரவமற்றத் தெருவில் நடந்தார்கள்...
"உங்ககூட சேந்து நடக்கறது, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு"
"என்னடா சொன்னே?... சத்தமா பேசுடா"...
"இல்லைங்க... நீங்க நல்லா வீடியோ செய்றீங்க... ஏங்க, இன்றைக்கு, எங்க பேங்கில் நடந்த சம்பவத்தை சானலில் போட்டீங்க?... நிறைய பேர் என்னை விசாரிசாங்க... "
"நான் எதிர்ப்பார்க்கவே இல்லை... உங்க வங்கியில் ஒரு காணொலி கிடைக்கும்னு..."
"உங்க தோழி எதுவுமே பேசாமே வராங்க"
"ஏண்டா, அவளையும் கமிட் பண்ணனுமா"
"அய்யோ எனக்கு நீங்கப் போதுங்க..."
"ஏண்டா என்னைப் பிடிக்கலையா?" - காத்ரீனா.
"இல்லைங்க காத்ரீனா, நீங்க இப்படி பேசறது கூச்சமா இருக்கு..."
"பார்ரா... பின்னாடியே அலையறப்ப கூச்சமில்லையோ"
"மிஸ்டர் கார்த்திக், நீங்க ஒரு வங்கியின் மேலாளர்... நா, உங்களை வாடா, போடானு கூப்பிட்றேன் கோபம் வரலியா?"
"அய்யோ... காலம் முழுக்க என்னை வாடா, போடானு கூப்பிடுங்க... காதில் இன்பமா இருக்கு..."
"ஓ... தேன் பொழியுதாக்கும்... இனி என்னடி... வாடா கார்த்திக், போடா கார்திக்கினே கூப்பிடுடி" - காத்ரீனா
"ஏங்க, என்கிட்டே என்னமோ பேசணும்னு சொன்னீங்க"
"டேய் கார்த்திக், உண்மையைச் சொல்லு... என்னை லவ் பண்றியா?"
"லவ்வுன்னா லவ்வு அவ்வளவு லவ்வுங்க... எப்படி சொல்லறதுனே தெரியலைங்க"
"ஆனா, நான் உன்னை லவ் பண்ணலியே"
"அய்யோ என்னங்க இப்படி சொல்றீங்க?... காப்பி குடிக்கலாமான்னு கேட்டதும் சரினு சொன்னீங்ளே"...
"காஃபி குடிக்க வந்தா லவ்வுனு அர்த்தமா ? போடா லூசு.."
"இல்லைங்க... நீங்க என்னை லவ் செய்யணும்... எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்"
"டேய் உனக்கு சொந்த வீடு இருக்கா?"
"ஓ... ஈ சி ஆர் , மைலாப்பூர், கே கே நகர் கோடம்பாக்கம் னு நாலஞ்சு வீடு இருக்குங்க... ஈ சி ஆர் ல பண்ணை வீடு இருக்குங்க..."
"கார்"
"எனக்கு மூனு... அப்பாவுக்கு ரெண்டு கார்"
"உன்கூட பிறந்தவங்க?"
"நா ஒருத்தன் தாங்க... அம்மா இல்லை... அப்பா மட்டும் இருக்கார்... அதனால், உங்களுக்கு மாமியார் கொடுமை இருக்காதுங்க"
"நீ ஒரு மேலாளர் மாதிரி பேச மாட்டீங்கிறியே... குழந்தைத் தனமா பேசறியே"
"மன்னிச்சிருங்க... எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்... நீங்க சொல்ற மாதிரி நடப்பேங்க.."
"அவளையே பாத்துட்டு நடக்காதே... தெருவையும் பாத்து நட" - காத்ரீனா அவனுடைய மண்டையில் கொட்டினாள்...
"அப்புறம் சொல்லுடா"
"என்னங்க சொல்லனும்...?"
"உனக்கு என்ன சம்பளம்?"
"ஆண்டுக்கு பதினெட்டுக்குமேல் சம்பளம் வாங்குவேணுங்க"
"என் சம்பளம் என்ன தெரியுமா?"
"உங்க சம்பளம் நீங்க சொல்லவே இல்லைங்க"
"மாதம் ஏழாயிரம்"
"........................"
"ஏண்டா பேச மாட்டிங்கிறே?... ஏழாயிரம் சம்பளம், கொஞ்சம் யு டூயூப் வருமானம் ... ஓட்டு வீடு; ஒன்பது வாசல் கேள்விப் பட்டிருக்கியா?"
"அவ்வளவுப் பெரிய வீடுங்களா?"
"டேய் மழை வந்தா வீடெல்லாம் ஒழுகும்டா... ஓலை வீடு! ஆமா; நீ என்னப் படிச்சிருக்கே?"
"எம் பி ஏ"
"என் படிப்பு என்னத் தெரியுமா?"
"நீங்க சொல்லவே இல்லைங்க..."
"பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன்... அதுக்குமேல் படிக்க வசதியில்லை... காத்ரீனாவின் நிலையும் இதுதான்... எனக்காவது வயசான அம்மா, அப்பா இருக்காங்க... காத்ரீனாவுக்கு யாருமே இல்லை... விடுதியில் தங்கியிருக்காள்... என்கூட தான் வேலை..."
"பார்த்தா அப்படித் தெரியலிங்க..."
"எப்படித் தெரியுது"
"டிகிரி முடிச்ச மாதிரித் தெரியுது... பெரிய இடத்து பொண்ணுக மாதிரித் தெரியுது... நீங்க பொய்ச் சொல்றீங்கத்தானே"
"நா ஏண்டா உன்கிட்ட பொய்ச் சொல்லணும்? நா வேலை செய்ற கம்பெனியில் நீ விசாரிச்சுப் பாரு... இதோ கார்த்திக்... உன்னோட தகுதி வேற... என்னோட தகுதி வேற... நான் உனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவள்... அதனால்; நீ என் பின்னாடி சுத்தாதே... சரிப்படாது... சரியா?..."
"ஏங்க சரிப்படாது?... நீங்க வேலைக்கு போக வேண்டாம்... எனக்கு போதுமான வசதி இருக்கு... எனக்கு நீங்க மகாராணியா வந்துருங்க... நா உங்க அடிமையா இருப்பேன்"
"டேய் கார்த்திக்... உன் கண்ணுக்கு நா அழகாத் தெரியறேன்... கண்ணை விரிச்சுப் பாரு... சென்னையில் அழகிகளுக்கு பஞ்சமே இல்லை... சரி... பை... நாங்க வரோம்... ஆட்டோ... " என்று சொல்லி ஆட்டோவை குறுக்காட்டி ஏறிக் கொண்டனர்...
தனியே நின்ற கார்திக்கைப் பார்த்து, "பாத்தீங்களா... நீங்க விதவிதமா கார் வெச்சிருக்கீங்க... எங்களுக்கு இருசக்கர வாகனத்துக்கும் வழியில்லை... " என்று சொல்லச் சொல்ல வண்டி நகர ஆரம்பித்தது...
"என்னங்க " என்று சோகமாக விளித்து, பெரும் ஏமாற்றத்தோடு நின்றான் கார்த்திக்... அவனருகில் போலீஸ் ஜீப் வந்து நின்றது...
"தம்பி அய்யா கூப்பிட்றார் ... வா; "
"எங்கப்பாவா?"
"ஆமா;... வண்டியேறு"
"என் கார் இருக்கு..."
"அதிருக்கட்டும்.... வந்து எடுத்துக்கிடலாம்... இப்ப இதில் ஏறு"
அவன் காவல்துறை வாகனத்தில் ஏறினான்..."
14 - காவல்நிலையம்...
இன்ஸ்பெக்டர் "உட்காருங்க" - என்றார்...
"சார் என்னை எதுக்கு வரச்சொன்னீங்கனு தெரிஞ்சுக்கலாமா?" - கார்த்திக் உட்கார்ந்தான்..
"சீதாலெட்சுமி உங்களைக் காதலிக்கிறாளா?"
"இதை சீதாலெட்சுமிகிட்ட கேட்டுச் சொல்லுங்க சார்"
"என்ன சொல்றீங்க?"
"இதைக் கேட்கவா என்னை அழைச்சிட்டு வந்தீங்க... நான் யாரைக் காதலிக்கிறேன்; என்னை யார் காதலிக்கறாங்கங்கறது தனிநபர் சங்கதி"
"உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன்... சீதாலெட்சுமியைப் பற்றிக் கிடைக்கும் தகவல்கள் சரியில்லை..."
"நன்றிங்க சார்... நான் கிளம்பலாமா?"...
"என்ன தகவல்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?"
"சார் சீதாலெட்சுமியைப் பற்றி தகவல் சேகரிக்கறது உங்க வேலை... என் மனதுக்குப் பிடித்த சீதாலெட்சுமியை காதலிப்பது என் வேலை... காதல் என்பது மென்மையான உணர்வு... காக்கிச் சட்டைகளால் காதலின் மென்மையை உணர முடியாது..."
"அலோ, என்னுடைய திருமணமும் காதல் திருமணம்தான்... எனக்கும் காதல் தெரியும்... ஆனால்; சீதாலெட்சுமி மாதிரியான பெண்களின் காதல் வலையில் விழுந்து செத்துப் போகாதீங்க... அவளைக் காதலிச்சா உங்களை ஏமாற்றி, உங்ககிட்டிருந்து பணம், நகைனு பறிச்சிட்டு உங்களை சாகடிச்சிடுவா... அதாவது காதல் தோல்வியில் உங்களை நீங்களே தற்கொலை செய்துக்குவீங்க..."
"சீதாலெட்சுமி கொலைகாரினா, ஏன் இன்னும் கைது பண்ணாமல் இருக்கீங்க"
"ஆதாரம் கிடைக்கும்... அவளைக் கைது செய்வோம்... அடுத்தக் கொலை நீங்களாவும் இருக்கலாம்... எச்சரிக்கையா இருங்க; ப்ளீஸ் என் அறிவுரையைக் கேளுங்க..."
"அதாவது.."
"அவள் விரிக்கும் காதல் வலையில் விழுந்துறாதீங்க... அவள் ஓரடி நெருங்கி வந்தா, நீங்க ஒன்பதடி விலகனும்... இதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எங்க கடமை... சரி; நீங்க போகலாம்"
"சார், உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?"
"................"
"இதுவரைக்கும் சீதாலெட்சுமி என்கிட்ட காதல் வலையை விரிச்சதில்லை... நான் காதலிக்கிறேன்னு சொல்லியும் என்னை ஒரு தூசி மாதிரி உதறிட்டுப் போயிட்டா..."
"என்ன சொல்றீங்க?"
''சீதாலெட்சுமி என்னைக் காதலிக்கல... நான்தான் சீதாலெட்சுமியின் காதலுக்காக ஏங்கிட்டு இருக்கேன்..." - என்றான் கார்த்திக்.
ஆய்வாளர் வியப்புடன் பார்த்தார்...
"எனக்கு ஒரு உதவி செய்ய முடியும்னா..." - என்று சொல்லி நிறுத்திய கார்த்திக் சற்று இடைவெளியில் ஆய்வாளரை பார்த்தான்...
மீண்டும், "என் காதலை சீதாலெட்சுமிக்குத் தெரிவிச்சு, எங்களை சேர்த்து வைங்க..." - என்று சொல்லிவிட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினான்...
அவன் பார்வையிலிருந்து மறையும்வரை அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர், மெதுவாக அருகில் இருந்த காவலரைப் பார்த்து "நமக்கு கிடைச்ச தகவல்படி, வசதியான பையனை, தன் காதல் வலையில் விழ வைப்பவளாச்சே சீதாலெட்சுமி..." - என்று சொன்னார்... அவரின் நெற்றி சுருங்கியமை சிந்தனை வயப்பட்டிருப்பதைக் காட்டியது...
15- சீதாலெட்சுமி சுட்ட வடை
தேநீர்க்கடை
கூட்டம் குறைவுதான்...
கடை நடத்துகிறவன் சோகமாக தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தான்...
அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், ஒரு வடையை எடுத்துக் கடித்துக் கொண்டே, "இருபது வடை, இருபது போண்டா, பத்து டீ சூடா அனுப்பிவை" - என்றார்...
"அனுப்பறேன்... நீங்க தின்னுட்டிருக்கிற வடைக்கும் சேர்த்து பணம் கொடுத்துட்டுப் போங்க"
"டேய் என்ன, போலீசுகிட்டேயா ?"
"ஆமா!... போலீசுன்னா ஓசி கிராக்கியா சார்?... காசு தந்துட்டு போங்க... டீ யும் வடையும், போ...ண்டாவும் வந்து சேரும்..."
"என்னடா... ஒருமாதிரியா பேசறே?... அய்யாவுக்குத் தெரிஞ்சா, கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவார்... "
"தள்ளுங்கய்யா... அப்படியாவது உள்ளே போய் நிம்மதியா இருக்கேன்... கொரோனாவில் வியாபாரமே இல்லை... கடன் கட்டமுடியலை... கடைக்கு வாடகைக் கட்ட முடியலே... இதுலே கடன் வாங்கியாவது, போலீஸ் ஸ்டேஷனுக்கு தண்டம் அழ வேண்டியிருக்கு... போங்கய்யா... உங்கனால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்க..." - என்று பேசிக் கொண்டே கோபத்தில் வடைத் தட்டைத் தட்டி விட்டான்...
வடைகள் சிதறின...
"ராஸ்கல், கொரோனா விதிகளை மீறி கடைக்குள் இடைவெளியில்லாமல் கும்பல் சேர்த்து ,வியாபாரம் பண்றியா?... " - என்றுச் சொல்லி கடை நடத்துனரை தரதரவென இழுத்துச் சென்று ஆய்வாளருக்கு எதிரில் நிறுத்தி, "கடையில் கூட்டம் அதிகமா சேர்த்து வியாபாரம் பண்ணிட்டு இருந்தானுங்கய்யா... இவனும் மாஸ்க் போடலே... மாஸ்க் போடாதவங்களையும் கடைக்குள் அனுமதிச்சிருக்கான் "
"இவனை மிதிக்கச் சொல்லிட்டு, அடுத்தத் தெருவு டீ கடையில் டீ ஆர்டர் பண்ணிட்டு வா... டீ குடிக்காம அசதியா இருக்கு..."
"அதென்ன சார், காசு கொடுத்து டீ குடிச்சா அசதித் தீராதோ" - என்று சொன்ன கடை நடத்துனரை எட்டி உதைத்தார் ஆய்வாளர்...
அடைப்பு அறைக்குள் விழுந்த கடை நடத்துனரை காவலர்கள் சுற்றி வளைத்து நின்று லத்தியால் தாக்கத் தொடங்கினார்கள்...
"அய்யோ.... ம்ம்மா " என்று கடை நடத்துனர் அலறல் வெளியே கேட்டது...
அப்போது ஆய்வாளரின் அலைப்பேசிக்கு கட்செவி ஓடுபடம் வந்தது... அதைத் திறந்து, படத்தை ஓடவிட்டார்...
அது சீதாலெட்சுமியால் அனுப்பப்பட்ட வீடியோ...
ஓரிருவரைதவிர. ஏறக்குறைய கடை வெறிச்சோடியே இருந்தது... காவலர் ஒருவர் வந்து வடையை எடுத்துக் கடிக்கிறார்...
கடை நடத்துனர் முறையாக முகக்கவசம் அணிந்தே பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார்...
காவலர் அவரிடம், இருபது வடை இருபது போண்டா, பத்து டீ சூடா அனுப்பு என்கிறார்...
கடைக்காரர் மறுக்கிறார்...
கோபமுற்ற காவலர், தேனீர்க் கடை நடத்துனர் அணிந்திருந்த முகக்கவசத்தை பிடுங்கி எரியும் காட்சியும், தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்களைத் தாக்கும் காட்சியும், பின்னர் கடை நடத்துனரின் சட்டையைப் பிடித்து, காவல் நிலையத்திற்கு இட்டுச் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தன...
அக்காட்சிகளைப் பார்த்து அதிர்ந்த, ஆய்வாளர் "ஸ்டாப் இட்... அவனை அடிக்காதீங்க" - என்று கத்தினார்...
உடனே, கடை நடத்துனரை அடிப்பதை நிறுத்திவிட்டு, காவலர்கள் ஆய்வாளரிடம் வந்தனர்...
"வெளியே போய் சீதாலெட்சுமி இருக்கிறாளான்னு பார்" - என்று ஒரு காவலருக்கு உத்தரவிட்டார் ...
இன்னொரு காவலரைப் பார்த்து, "டீ வேண்டாம்னு கான்ஸ்டபிளை திரும்ப வரச் சொல்லுய்யா " - என்றார்...
இன்னொரு காவலரும் தேநீர்க் கடை நோக்கி, காவலரைத் தேடி புறப்பட்டார்...
அடைப்பு அறைக்குள் புகுந்த ஆய்வாளர், அடி வாங்கி வேதித்துக் கொண்டிருந்த கடை நடத்துனரைப் பார்த்து, "எச்சில் டம்பளர் கழுவுற நாய், போலீசையே வீடியோ எடுக்கிறியாடா நாயே" - என்று எட்டி உதைத்தார்...
இந்த தடவை கடை நடுத்துனர், வேண்டுமென்றே அதிக ஓசையுடன் அலறினார்...
அலறல் சத்தம் கேட்டு, காவல்நிலையத்தின் வாயில் முன்பு பொதுமக்கள் கூட ஆரம்பித்தார்கள்...
நிலைமை திசை மாறுவதை அறிந்த, ஆய்வாளர் காவல்நிலையத்தின் வாயில் கதவை அடைக்கச் சொன்னார்...
"டேய் சீதாலெட்சுமி எங்கடா?"
உதைத்தார்
"சீதாலெட்சுமிக்கும், உனக்கும் என்னடா தொடர்பு?"
லத்தியால் விளாசினார்...
"அவ செஞ்சக் கொலைகளுக்கும் நீ உடந்தையா இருந்தியா"
முடியைப் பிடித்து ஆட்டினார்...
"சார் முடியைப் பிடிச்சு மாவு ஆட்றதை நிறுத்திட்டு, இப்ப சீதாலெட்சுமிகிட்ட உடனடியா பேசுங்க... இல்லைனா, இப்ப உங்களுக்கு வந்த வீடியோ யூட்யூப்க்கு போயிரும்... சந்தி சிரிக்கப் போகுது "
"சீதாலெட்சுமி, வெளியே இல்லைங்க... அய்யா"
"அவதான்யா, இவன்கடையில் நின்னு வீடியோ செஞ்சுருக்க... எனக்கும் அனுப்பியிருக்கா... அவளைப் பிடிச்சுட்டு வாங்கய்யா... கதறக் கதறக் கதற வெக்கனுமைய்யா... "
"அய்யா, உங்க ஐடியா அபாரமா இருக்கு... ஆனா; சீதாலெட்சுமி இந்நேரம் கமிஷனருக்கு வீடியோ அனுப்பியிருப்பாங்க... நீங்க கதறப் போறீங்க"
"டேய் " - என்று முறைத்துவிட்டு, "ரைட்டர், சீதாலெட்சுமிக்கு போன் போடு "
இடைமறித்த சீதாலெட்சுமி 'பணம் வரட்டும்... பணத்தை வாங்கிட்டு அவர் பாதுகாப்புடன் போய் சேரட்டும்... வீடியோ பற்றி பிறகுப் பேசலாம்" - என்று சொன்ன சீதாலெட்சுமி மீண்டும், "ஓசியில் வடைத் தின்னும் மிஸ்டர் இன்பெக்டர், நான் சுட்ட வடை எப்படி இருக்கு" என்று கேட்டாள்...
"மேடம்... இனி நான் எந்த டீ கடையிலும் ஓசி டீ குடிக்க மாட்டேன்... வீடியோ டெலிட் பண்ணிடுங்க மேடம்... " என்று சொன்னார் இன்ஸ்பெக்டர்...
"சீதாலெட்சுமி சொன்னதை செய்வா... செய்வதைச் சொல்லுவா..."
"நல்லா வசனம் பேசறீங்க மேடம்... ஆனா; வசனம் பழசு!" - என்றார்...
"புது வசனம் சொல்லவா?... அடிச்சு புடுங்குவான் போலீஸ்.... அவன் ஆயுள் வரைக்கும் திருந்த மாட்டான்... எப்படியிருக்கு புது வசனம்?" - என்று சீதாலெட்சுமி கேட்டாள்...
"அய்யய்யோ மேடம்... இனி தப்புப் பண்ணமாட்டேன்... டீ காரன்கிட்டே ஓசி வடை தின்று டிஸ்மிஸ் ஆனார் இன்ஸ்பெக்டர்னு நாளைக்கு மீடியாவில் வந்துச்சுனா, இதைவிட கேவலம் வேறென்ன இருக்கு?... இதோ பணம் வந்துருச்சு... இந்தாங்க டீ சார்... மேடத்துகிட்ட வீடியோ பத்தி சொல்லுங்க, சார் "
அலைப்பேசியை வாங்கி, "மேடம் சூட்கேசில் பணம் வந்துருச்சுங்க மேடம்.... எல்லாம் புது நோட்டு... சரிங்க மேடம்... நீங்க வீடியோவை டெலிட் பண்ணிருங்க" - என்றான் தேநீர்க்கடை நடத்துனர்...
"அண்ணே, உங்க வேலை முடிஞ்சதா?... நீங்க போங்க"
"நன்றிங்க மேடம்!... 'சின்னதா டீ கடை நடத்தறேன்... போலீஸ் தொந்தரவுத் தாங்க முடியல... கடை வாடகையும் கொடுக்க முடியாம இருக்கேன்... போலீஸ் கிட்ட இருந்து மீள எனக்கு ஒருவழி செய்யுங்கன்னு உங்க வீட்டுக்கு வந்து நா கெஞ்சினேன்... மறுநாள் என் கடைக்கு வந்தீங்க... நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்கிட்டேன்... போலீசும் என் பணத்தை தந்துட்டாங்க... நீங்க, எடுத்த வீடியோவை அழிச்சிட்டிங்கனா நாம கொடுத்த வாக்கை நாம காப்பாத்தினதா இருக்கும்..."
"அண்ணே, உங்க பணம் உங்களுக்கு வாங்கித் தரேன்னு சொன்னேன்... வாங்கித் தந்துட்டேன்... நீங்க போங்க... இன்ஸ்பெக்டர்கிட்ட நா கொஞ்சம் பேச வேண்டியிருக்கு..." -என்று சொல்லிவிட்டு, சற்று அழுத்தமாக, "இன்ஸ்பெக்டர்" - என்றாள்...
"சொல்லுங்க " - என்றார் ஆய்வாளர்!
"அவரை வெளியே அனுப்புங்க"
"என்னை கேனப்பயல்ன்னு நினச்சிட்டியா... அவனை நான் வெளியே விட்டா, உங்கிட்டிருந்து வீடியோவை வாங்க உன் பின்னாடி அலைய சொல்றியா?" - இன்ஸ்பெக்டர் கடுப்புடன் கேட்டார்...
மீண்டும் ஆய்வாளர் ஒரு காவலரைப் பார்த்து, "அந்த பணத்தை பிடுங்கிட்டு, அவனை உள்ளேத் தள்ளுங்க" என்றுக் கத்தினார்...
தேநீர் கடைக்காரரின் கையில் இருந்த பணப் பெட்டியை பிடுங்கிக் கொண்டு, எட்டி உதைத்து உள்ளே தள்ளினார் காவலர்...
அடித்தாளாமல், "எனக்குப் பணமே வேணாங்க... என்னை அடிக்காதீங்க" - என்று தேநீர்க் கடை நடத்துனர் கதறியக் கதறல் அலைபேசியின் பெருக்கியில் கேட்டது...
"இன்ஸ்பெக்டர் " என்று சீறிய சீதாலெட்சுமி, "இனி ஒரு அடி அவர் மேல் விழுந்தது. ஒரு நொடியில் வீடியோ அப்லோட் ஆயிரும்" - என்று கோபத்தைக் கக்கினாள்...
"யோவ் நிறுத்துங்கய்யா அடிக்காதீங்க... " என்ற ஆய்வாளர், "என் வீடியோ ?" -என்று கேட்டார்...
"அவரை வெளியே அனுப்புங்க... நான் உங்ககிட்டே பேசவேண்டியிருக்கு"
"உன்னை எப்படி நம்பறது?"
"வீடியோ அப்லோட் செஞ்சா நம்புவீங்களா"
"கான்ஸ்டபிள், அவனை வெளியே துரத்தி விடுங்க"
"பணத்தோட" - என்றாள் சீதாலெட்சுமி !
"பணத்தையும் கொடுத்து அனுப்புங்க" - என்றவர் மீண்டும், "மேடம் பேசுங்க" என்றார்...
"மிஸ்டர் இன்ஸ்பெக்டர்"
"சொல்லுங்க மேடம்"
"டீ கடைக்காரர் கணக்கு மட்டுந்தான் முடிஞ்சிருக்கு!"
"இனி யார் கணக்கு பாக்கி இருக்கு?"
"என் கணக்கிருக்கு!"
"உங்களுக்கும் நான் தரணுமா? உங்ககிட்ட நா எதுவும் ஓசியில் வாங்கலியே மேடம்..."
"என்னைப் பேச விடுங்க..."
"பேசுங்க மேடம்..."
"சென்னையில் அடுத்தடுத்து நடந்த நாலு தற்கொலையையும் நான்தான் லைவ்வா ஒளிபரப்பினேன்... அது என்னோட கடமை... தற்கொலைகள் எப்படி நடந்ததுனு கண்டுப் பிடிக்க முயற்சி செய்யாமல், பழியை என்மேல் போட பார்க்கிறீங்க?"
"சே... சே... யாரோ உங்ககிட்ட பொய்யா சொல்லியிருக்காங்க..."
"செ... செ ... பொய் சொல்லாதீங்க இன்ஸ்பெக்டர்... நான் முன்பக்கம், பின்பக்கம் இடது, வலது பக்கம்னு கேமராவோட நடக்கறவ.... என்னுடைய உத்தரவுக்கு காத்திருக்காமல் என் கேமிரா சுற்றிலும் நடப்பதை படம் பிடிச்சிட்டே இருக்கும்... "
"பிடிக்கட்டும் மேடம்... நாட்டுக்கு நல்லதுதானே செய்றீங்க"
"இன்ஸ்பெக்டர், நடந்த தற்கொலையோட என்னை ..."
"தொடர்புப் படுத்தலியே மேடம்"
"சி பொய் பேசாதீங்க... பேங்க் மேனேஜர் கிட்டா என்னைப் பற்றி என்னச் சொன்னீங்க?..."
"..................................................."
"என்ன பேச்சையே காணோம்?..."
'போட்டுக் கொடுத்துட்டானே' - என்று ஆய்வாளர் மனதோடு புலம்ப-
"இன்ஸ்பெக்டர், என் வாழ்க்கையை நினைச்சுப் பாத்தீங்களா... இன்னும் சின்னப் பொண்ணு நான்... நீங்க கிளப்பி விட்ற வதந்தி என் வாழ்க்கையைப் பாதிக்கும்னு உங்க அறிவுக்கு எட்டலியா?
"மேடம்..."
"இப்படி வதந்திப் பரப்பி விட்டீங்கன்னா, என்னை எவன் கட்டிக்குவான்... உங்க பையனுக்கு என்னைக் கட்டி வைக்கிறீங்களா?"
"..................................................."
"ம்... சொல்லுங்க... இனிமேல் என்மீது வதந்தி பரப்பி விடக்கூடாது... நடந்த தற்கொலையில் என்னை சம்பந்தம் படுத்தி பேசக்கூடாது... நான் இல்லாதப்ப என்வீட்டுக்கு வந்து எங்க அம்மா, அப்பாவை மிரட்ட கூடாது... இப்படி ஏதாவது நடந்தால், உங்க வீடியோ அப்லோடு ஆயிரும்... என் பாதுகாப்புக் கருதி உங்க வீடியோ உங்ககிட்டே தரமாட்டேன்... நானா இதை வெளியிடவும் மாட்டேன்... என்னை வெளியிட வைக்கிறதும், வைக்காமல் இருப்பதும் உங்க கையில்தான் இருக்கு... வைங்க போனை" - என்று சொல்லிவிட்டு அலைப்பேசியின் தொடர்பைத் துண்டித்தாள்...
சிறுது நேரம் ஏதும் பேச மறந்த நிலையில் நின்ற ஆய்வாளர் ஆத்திரத்தோடு, "ரைட்டர் இத்தனை நேரம் என்கூட பேசிட்டிருந்த நம்பர் எந்த சிக்னல்னு கண்ட்ரோல் ரூமில் கேளுங்க" - என்றார்...
பிறகு, 'வீடியோவும் போச்சு... அஞ்சு லட்சமும் போச்சு' என்று தானே புலம்பினார்.
"சிறுது நேரத்தில் காவலர் வந்து, "அய்யா, அந்த போன் கால் லொகேஷன் கண்டுப்பிடிக்க முடியலையாம்..."
"என்ன?"
"லொகேஷன் மாறி மாறி சிக்னல் ஆகுதுனு சொல்றாங்க.... நிமிடத்துக்கு நிமிடம் கனடா, ஆஸ்திரேலியா, மொரிஷியானு மாறிட்டே இருக்குனு சொல்றாங்க சார்"
"ஓ டிஜிட்டல் விளையாட்டு விளையாடறாளா.... தூக்கறேன்... தூக்கிக் காட்றேன்..." - என்று சொல்லிக் கொண்டே இன்ஸ்பெக்டர், மோவாயைத் தடவிக் கொண்டார்...
16 - ஓலை வீடு ஒன்பது வாசல்
ராஜகோபால் அய்யர்! சீதாலெட்சுமியின் வயதானத் தந்தை!... மூக்கு கண்ணாடியைப் பாதி இறக்கிவிடப்பட்ட நிலையில், அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார் தரையில் அமர்ந்து, ஓலைவீட்டின் வாசல் கதவோரமாக - சூரிய வெளிச்சத்தில்.
அவருக்கு சற்று வயதுக் குறைந்த, நரைத்தட்டிய, முதுமையிலும் அழகும், நிறமும் குன்றாத - நெட்டையான உயரம் கொண்ட - அவரின் மனைவி தேநீர்க் கொண்டு வந்து அவரருகில் வைத்துவிட்டு, கீரையை அரிக்க ஆரம்பித்தார்...
அப்போது-
தெருவோரமாக வந்து நின்ற இரண்டு பெண்களில் ஒருத்தி, " இங்கே சீதாலெட்சுமி வீடு எதுங்க" - என்று கேட்டார்...
"வாங்கம்மா... சீதாலெட்சுமி என் பொண்ணுதான்... உள்ளே வாங்க..." - சீதாலெட்சுமியின் அன்னை அழைத்தாள்...
குனிந்து குடிசைக்குள் நுழைந்தார்கள்...
அமர பாய் விரித்துப் போடப்பட்டது...
"இந்தாங்கம்மா தண்ணீர் குடிங்க" - நீர் கொடுத்தாள் பருகிட சீதாலெட்சுமியின் அன்னை...
நீர்ப் பருகாமல் பெண்கள் இருவரும் வீட்டை நோட்டமிட்டனர்... ஓலை வீடு... மழை வந்தால் ஆங்காங்கு ஒழுகும் வசதியோடு இருந்தது... இரு அறைகளாகக் காட்டும் விதமாக குறுக்கில் திரை சீலைத் தடுப்பு இருந்தது... தடுப்பின் உள்ளே மூலையில் அடுப்படி... அதற்கு எதிர்ப்புறம் ஒரு கட்டில்... ஒரு சிறு மேசை...
வாசலில் கயிறு கட்டில் தெரிந்தது...
"என்னம்மா பார்க்கறீங்க... வீடு ஓட்டை ஒடிசலா இருக்குன்னா... இந்த வீடே போதும்மா... நிம்மதியா இருக்கோம்... வாடகை தரவேண்டியதில்லை... புறம்போக்கு நிலம்... சீதாலெட்சுமி பிறந்த நேரம் எங்களுக்கு இந்த புறம்போக்கு இடம் கிடைச்சது..."
பெண்களில் ஒருத்தி திடீரென மயங்கி இன்னொருத்தியின் மடி சாய்ந்தாள்...
"பார்வதி என்னடி ஆச்சு?... பார்வதி... பார்வதி " - என்று பார்வதியின் கன்னத்தில் இன்னொருத்தித் தட்டினாள்...
கீரை அரிந்து கொண்டிருந்த சீதாலெட்சுமியின் தாய் பதட்டத்துடன் ஓடிவந்து, "என்னம்மா... என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் .கேட்டாள்...
முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டதும், மெதுவாக உணர்வுப் பெற்றவளாக, கண் விழித்தாள் பார்வதி...
உடன் வந்தவள், சீதாலெட்சுமியின் அன்னையிடம், "சீதாலெட்சுமியைப் பார்க்கணும்னு நடந்தே வந்தோம்மா... இவளுக்கு ஏற்கனவே, இரத்தம் அழுத்தம் குறைவுன்னு சொல்லியிருக்காங்க... " என்று சொல்லச் சொல்ல, பார்வதி முனக ஆரம்பித்து மிகுந்த அசதியோடு கால்நீட்டி தரையில் படுத்தாள்...
"ஏம்மா பார்வதி... நா இஞ்சி நீர் வெச்சு தரேன்... சரியாயிரும்... அதுவரைக்கும், பேனுக்கு அடியில் கட்டிலில் படுத்துக்கோம்மா... என் பொண்ணு சீதாலெட்சுமி படுக்கற காட்டில்தான்" - என்றாள்...
உடன் வந்திருந்த பெண், "உங்களுக்கு சிரமம் தந்துட்டோமே அம்மா..." - என்று சொன்னாள்...
"இதிலென்னம்மா இருக்கு... கொஞ்ச நேரத்தில் சரியாயிரும்... கட்டிலில் காற்றோட்டமா படுக்க வைம்மா" - என்று சொல்லிய சீதாலெட்சுமியின் தாயார், சிறு மின்விசிறியின் இறகுகளை ஓட விட்டு விட்டு இஞ்சியைத் தட்டினாள்...
பார்வதியை மெதுவாக நடக்க வைத்து கட்டிலில் படுக்க வைத்தாள் உடன்வந்த பெண்...
இஞ்சி நீர் பருகக் கொடுத்து விட்டு, "கண்மூடி படும்மா... சரியாயிரும்" என்று மீண்டும் சொல்லிவிட்டு, கீரை அரிய ஆரம்பித்தாள்...
அருகில் வந்து அமர்ந்து தானும் கீரையை அரிந்துக் கொடுத்து உதவியா உடன் வந்த பெண்... "சீதாலெட்சுமியைக் கூப்பிடுங்கம்மா" - என்றாள்...
"என்னம்மா, இருக்கிற சின்ன வீட்டுக்குள் சீதாலெட்சுமி இருந்தா தெரியாதா... இப்ப வந்துடறேனு விடிகாலையிலேயே வெளியே போயிட்டா... வந்துருவா..."
இவர்கள் கீரையைக் கிள்ளிக் கொண்டிருக்கும் அதே வேளையில் பார்வதி, மேசை மீதிருந்தப் பொருட்களை ஆய்வு செய்தாள்...
"அமிஞ்சிக்கரையில் இருக்கோம்; அம்மா!... தள்ளுவண்டியில் இளநீர் விக்கறார் பார்வதியோட வீட்டுக்காரர்... வியாபாரம் செய்ய முடியலைன்னு புலம்பறா பார்வதி"
"ஏம்மா"
கீரையை எடுத்து உதறியவள், "அம்மா கீரையில் பூச்சிகள் இருந்தாலும் தெரியாது... நான் அரிஞ்சு தரேன்... நீங்க சும்மா இருங்க..." என்று சொல்லிக்கொண்டு , கீரையை முறத்துடன் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே, வாசலில் சென்று அமர்ந்தாள்...
"என்னம்மா... சீதாலெட்சுமியைப் பார்க்க வந்த உன்னை வேலைச் செய்யச் சொன்ன மாதிரி ஆயிருச்சு... ஆமா; என்னமோ சொல்லிட்டு இருந்தியே" - என்று கேட்டு தானும் கீரையைக் கிள்ளலானாள் தாய்...
உள்ளே, தனியேப் படுத்திருந்த பார்வதி, மெதுவாக மேசையைத் திறந்து எதையோ தேடினாள்... மேசை மீதிருந்த சில மின்னணுப் பொருட்களையும் எடுத்துப் பார்த்தாள்...
வாசலில்-
"ஒரு இளநீர் வித்தா அஞ்சு ரூபா கிடைக்கும்... தெருவில் போற வர போலீசுக காசு தரமா இளநீர் வாங்கிக் குடிக்கிறானுக... முன்னேயெல்லாம் ரவுடிகள்தான் அராஜகம் பண்ணுவாங்க... இப்போ போலீசும் அராஜகம் செஞ்சா குடும்பம் எப்படி நடத்தறதுனு பார்வதிக்கு ஒரே கவலைம்மா"
"என்னம்மா பண்றது, கைநிறைய சம்பாதிச்சும் ஓசிக்கு அலையறானுக..." - என்று மனம் நொந்து சீதாலெட்சுமியின் தாய்ப் பேசினாள்...
"சீதாலெட்சுமியும் நாட்டில் நடக்கும் அநியாயங்களை அடிக்கடி எங்கிட்ட சொல்லுவா"
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சில மின்னணு பொருட்களோடு இன்னும் சில பொருட்களையும் பார்வதி அமுக்கமாக எடுத்து, கைப்பையில் திணித்துக் கொண்டாள்...
இதை அறியாமல், சீதாலெட்சுமியின் தாய் அந்தப் பெண்ணோடு பேசிக் கொண்டே கீரை அரியும் பணியில் கருத்தூண்றி இருந்தாள்...
17 - உளவாளிகள்
அலைப்பேசி அழைப்பைக் கேட்டு எடுத்த ஆய்வாளர், "அலோ" என்றார்
"உங்களுக்கு அறிவே இல்லையா"
"ஏய் யாருடி நீ ?... யார்கிட்ட பேசிட்டிருக்கேன்னு தெரியுமா... போன் போடறதுக்கு முன்னாடி நம்பரை சரிப் பார்த்துப் பேசுடி... இருக்குற டென்சன் போதாதுன்னு ராங் கால் வேற..."
"அலோ அலோ போனைத் துண்டிக்காதீங்க... "
"அலோ நீ யார்?... நீ பேசிட்டு இருக்கறது..." - எனும் போதே ஆய்வாளரை மறித்து, "மிஸ்டர் இன்ஸ்பெக்டர் கிட்ட" - என்றாள் அலைப்பேசியில் சீதாலெட்சுமி
"மேடம்... நீங்களா?... உங்க நம்பர் ஸ்கிரீன் ஆக மாட்டேங்குது..."
"மிஸ்டர் இன்ஸ்பெக்ட்டர்... உங்க போலீசு புத்தியை நிறுத்தலைனா, உங்க வீடியோ இப்பவே வெளியாகும்"
"மேடம், மேடம்... என்ன சொல்றீங்க "
"மிஸ்டர் இன்ஸ்பெக்டர், வீட்டுக்கு உளவுப் பார்க்க, இரண்டு பெண் காவலர்களை அனுப்பியிருக்கீங்க..."
"மேடம், நா அப்படி யாரையும்..."
"பேசாதீங்க... நான் சொல்றதை செய்யலைன்னா இப்பவே..."
மேடம், அவங்க ரெண்டு பேரையும் இப்பவே திரும்ப வரவழைச்சிட்றேன் "
"எங்க வீட்டில் சில பொருள்களையும் திருடிட்டு வரச் சொல்லியிருக்கீங்க... அவங்களும் திருடிட்டு இருக்காங்க..."
"மேடம் நீங்க எங்கே இருக்கீங்க?"
"கேள்விக் கேட்காதீங்க... உடனே அவங்க எங்க வீட்டை விட்டு வெளியேறனும்... அவங்க திருடியப் பொருட்களை.."
"அங்கேயே வெச்சிட்டு வரச் சொல்லிட்றேன்..."
"வேண்டாம் மிஸ்டர் இன்ஸ்பெக்டர்!... அந்தப் பொருட்களை வெச்சு நீங்க ஒன்னும் பிடுங்க முடியாது... நோண்டிப் பாருங்க... எதாவது தடயம் கிடைக்குதான்னு"
"எனக்கு வேண்டாம் மேடம்... "
"நா ஒரு ஊடகவியலாளர்ங்றதை நீங்க மனசில் வெச்சுக்கோங்க..."
"வெச்சிருக்கேன் மேடம்"
"நானும் உங்க போலீஸ்புத்தி எப்படியிருக்கும்னு மனதில் ஆழமா வெச்சிருக்கேன்..."
"நன்றிங்க மேடம்"
"அவ்வளவு எளிதா நீங்க எங்கிட்டிருந்து, தடயத்தைக் கைப்பற்ற முடியாது... மிஸ்டர் இன்ஸ்பெக்டர், எங்க வீடு ஓலை வீடா இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தோட இருக்கு... வீட்டுக்கு யார் வராங்க... என்ன பேசறாங்கனு நான் எங்கிருந்தாலும் எனக்குத் தெரிவிச்சிரும்...தெரிஞ்சுதா"
"இதோ.. இதோ... இப்பவே, அந்த ரெண்டு லேடி கான்ஸ்டபிள்களையும் வரச் சொல்லிட்றேன்... சாரி மேடம்"
அலைப்பேசியை சீதாலெட்சுமி துண்டித்தாள்...
ஆய்வாளர் முகம் இறுக்கமாக- அவர் சீதாலெட்சுமியின் வீட்டிலிருந்த பெண் காவலர்களுக்கு அழைப்பு விடுத்தார்...
18 - கஞ்சா பொட்டலங்கள்...
சரஞ்சரமாக வாகனங்களை வழியனுப்பி வைக்கும் தேனாம்பேட்டை சாலை விளக்கம் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது... வெறிச்சோடிய சாலைப் போல் காணப்பட்டாலும் ஒரு சில வாகனங்கள் எப்போதாவது பயணித்துக் கொண்டிருந்தன...
இரு காவலர்கள் மட்டும், விளக்கம் எதிரில் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்...
எல்டம்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒரு இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது...
வந்துக் கொண்டிருந்தவன் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை... காவி உடை அணிந்திருந்தான்... மேலும் இருகைகளையும் வண்டியின் கடிவாளத்தில் இருந்து எடுத்துவிட்டு, எழிலாக முடியை வாரிக் கொண்டான்...
இதனை கவனித்து விட்ட காவலர் ஒருவர், இன்னொருக் காவலரோடு லத்தியை நீட்டி வண்டியை மறித்தார்...
மறித்த காவலரை இடித்துத் தள்ளுவது போல் வேகமாக சற்றுத் தள்ளி நிறுத்தினான்...
ஒருகாவலர் மிரண்டு தெருவில் விழுந்தார்... விழுந்ததில் அவர் அணிந்திருந்த தொப்பியும் தெறித்து விழுந்திருந்தது...
பின்னால் வந்துக் கொண்டிருந்த ஒரு கார் சட்டென நின்றது...
ஒருகாவலர் காவியுடைக்காரனிடம் சென்று லத்தியால் அடிப்பதுப் போல், "ஏண்டா போலீஸ்காரன் மேலேயே வண்டியை ஏத்துவியா?"
"நான் வரேன்னு தெரியுமில்ல... தெரிஞ்சும் குறுக்கே வந்தியினா இடிக்கத்தானே செய்யும்... நல்லவேளை நான் சாமார்த்தியமா ஒடிச்சு நிறுத்தினேன்.... இல்லைனா உனக்கு சங்குதான்..."
பின்னால் நின்றிருந்த காருக்குள் இருந்த சீதாலெட்சுமி, "டேய் காரை அப்படியே ஓரங்கட்டு... காத்ரீனா, நீ இங்கிருந்தே காமிரா ஒர்க் பாரு... நா என் காமிரா எடுத்துட்டுப் போறேன்" - என்று சொல்லி விட்டு கரை விட்டு இறங்கினாள்...
"ஓ... தாறுமாறா இவரு வண்டியை ஓட்டுவாரு... நிறுத்தச் சொன்னா போலீசை இடிப்பாரு... " -என்றுச் சொல்லி அடிக்க கை ஓங்கினார்...
"என்னைத் தொடாதே"
"என்னடா செய்வே?... " என்று மீண்டும் பிடிக்க கையை நீட்டினார்...
அவன் பின் நகர்ந்துச் சென்று, "நா சொல்லிட்டே இருக்கேன்... என்னைத் தொட வரியே..." - என்று பின்னால் நடந்துக் கொண்டே இருந்தான்...
கீழே விழுந்த காவலர் அவனைப் பார்த்து, "முகக்கவசம் போடுடா" - என்றார்...
"நான் போட மாட்டேன்"
"ஏண்டா " என்று கேட்டு அவனைப் பிடிக்கத் தாவினார்..
அவன் வேகமாக நகர்ந்து, "நான் போடமாட்டேன்... நான் சாமி உடை போட்டிருக்கேன்... அதனால் முகக்கவசம் அவசியமில்லை"- என்றான்...
அவன் நிறுத்தியிருந்த வண்டிச் சாவியை ஒரு காவலர் எடுத்தார்...
"என் வண்டியைத் தொடாதே... " - என்று கத்தினான்...
அதனைக் கேளாமல், சாவியை எடுத்தார்...
"நான் சொல்லச் சொல்ல வண்டியைத் தொட்டு சாவி எடுக்கிறே... கொரோனா பரவாதா... நீ தொட்ட இடத்தை சானிடைசர் போட்டு கழுவு " - தூரத்தில் நின்றே கத்தினான்...
"நீ முகக்கவசம் போடுடா"
"நான் போடமாட்டேனு சொல்லிட்டே இருக்கேன்... முகக்கவசம் போடுனு ஓயாமே சொல்றியே... நான் யார் தெரியுமா... இப்ப போன் போடட்டுமா... எங்க ஆளுக எத்தனைப் பேர் வராங்கனு பாக்கறியா"
"பாக்கலாம்... பாக்கலாம்... முதலில் காவல்நிலையத்துக்கு வா " - என்று சொல்லி அவனைப் பிடிக்க முயன்ற காவலரிடம் இருந்து விலகினான்...
"யோவ் நான் யார் தெரியுமா... நீ போலீசா... கொஞ்சம் கூட சட்டம் தெரியல... ஒருத்தனை ஸ்டேஷனுக்கு கூப்பிட உனக்கு என்ன தகுதி இருக்கு? தொப்பி போடாமே நீ டூட்டி பாக்கிறியா... போன் போட்டு உன்னை வேலையில் இருந்து தூக்கட்டுமா... சட்டத்தை மதிக்காதவனுக்கு போலீஸ் வேலையா?" என்று மிரட்டினான்...
"நீயென்ன வக்கீலா? "
"ஆமா"
"ஐ டி கார்டு காட்டு..."
"வக்கீலையே கேள்வி கேக்கறியா?... இப்ப டில்லிக்கு போன் போடட்டுமா?... உன்னை வேலையிலிருந்துத் தூக்கட்டுமா? - என்று மீண்டும் மிரட்டினான்...
படம் பிடித்துக் கொண்டிருந்த சீதாலெட்சுமி கத்திக் கொண்டிருந்த காவியுடைக்காரனைக் காமிராவோடு நெருங்கி, "சார் உங்க பிரச்னை என்ன" என்று கேட்டாள்...
"நீயார்?... பக்கத்தில் வராதே ... தள்ளி போ" - என்றாள்...
"அப்படி சொல்லக் கூடாதுங்க சார்... நான் ஊடகத்துறையில் இருக்கேன்... செய்தி சேகரிக்க எனக்கு உரிமை இருக்கு" - என்று சொன்னாள் சீதாலெட்சுமி!
"தொப்பி போடாம போலீஸ் வேலை பார்க்கிறான் .. .அவன்கிட்ட போய் செய்தி சேகரி... போ"
"முகக்கவசம் போடாமல் வந்தா, பிடிக்க போலீசுக்கு அதிகாரம் கொடுத்திருக்கு அரசாங்கம்... நீங்க அரசாங்கத்தைத் தட்டி கேட்காமல், போலீசை மிரட்றது சரிங்களா சார்..."
"கையில் உறை மாட்டாமல், என் வண்டியைத் தொட்டிருக்கான் போலீஸ்காரன்... இன்னும் சானிடைசர் போட்டு சுத்தம் செய்யலே... கொரானா பரவாதா... இதைப் படம் பிடிச்சு, ஊடகத்தில் போடுங்க..."
"போலீஸ் உங்க வண்டி சாவி எடுக்கறதையும், வண்டியை ஓட்ட முயற்சி செஞ்சதையும் நா சூட் பண்ணியிருக்கேன்... பாக்கறீங்களா" என்று சொல்லி அவனிடம் காமிராவை நீட்டி பார்க்கச் சொன்னாள்...
காவியுடைக்காரனின் பார்வை காமிராவின் திரைப் பக்கம் திரும்பியதும், சுற்றி நின்றிருந்தவர்களால் கூட கணிக்க முடியாத ஒரு வேலையை படு வேகமாகச் செய்தாள்...
அது-
காவியுடைக்காரன் கட்டியிருந்த வேட்டியை கணநேரத்தில் உருவி அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கச் செய்தாள்...
உருவப்பட்ட வேட்டியின் இடுப்பு மடிப்பிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் சிதறின...
அவனை ஓங்கி அறைந்தாள்...
காவலர்கள் ஓடி வந்து அவனை மடக்கிப் பிடித்து அவன் அணிந்திருந்தத் துண்டுக் கொண்டு அவன் கைகளைப் பின்புறமாகக் கட்டினார்கள்...
"ஏண்டா, சாமியார் டிரஸ் போட்டுக்குவீங்க... எது கேட்டாலும் தெனாவெட்டா பேசுவீங்க... போலீஸ் நிறுத்துனா, நின்னு பேசாமாட்டீங்க... போலீசைப் பக்கத்தில் நெருங்கவும் விடாமல் நகர்ந்துட்டே இருப்பீங்க... நீயும் போலீஸ் பக்கமா போகவும் மாட்டே... அவனைத் தெரியும், இவனைத் தெரியும்னு பம்மாத்துக் காட்டி, பொறுக்கிகளை வரவழைச்சு, ஊரில் மதக் கலவரத்தை உண்டாக்கி, அந்த சந்தடி சாக்கில் கஞ்சா, அபின், போன்ற போதை பொருட்களை கடத்துவீங்க... "
காத்ரீனாவும் அருகில் வந்திருந்தாள்; நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பில் விட்டாள்...
அப்போது காவல் வாகனம் ஒன்று ஒன்று வந்தது வேகமாக!...
வாகனத்தில் இருந்து இறங்கிய காவல் துணை ஆணையாளர், "வெரி குட் காத்ரீனா, போன் செஞ்சதுக்கு!... சீதாலெட்சுமி வெரி வெரிகுட்... உங்க சானலில் நேரடி ஒளிபரப்பை பார்த்துட்டே வந்தேன்... எனக்காக ஒன்னு செய்ய முடியுமா" என்று காவல் உதவி ஆணையாளர் சீதாலெட்சுமியிடம் கேட்டார்...
"சொல்லுங்க சார்"
"இவனை எந்தக் கன்னத்தில் அறை விட்டீங்க"
"அய்யய்யோ மறந்துட்டேனே"
"எனக்கு ஞாபகம் இருக்கு சீதாலெட்சுமி!... வலது கன்னத்தில் அறை அறைஞ்சிருக்கீங்க... இப்ப இடது கன்னமும் வெற்றிடமா இருக்கே"
"அதனாலென்ங்க சார்" - என்று பேசிக் கொண்டே சுளீரென்று இடது கன்னத்திலும் அறைந்தாள்....
காவியுடை தரித்தவன் அலறினான்...
அறைந்த வேகத்துடன், சீதாலெட்சுமி கார் நோக்கி நடக்க, காத்ரீனாவும் பின்தொடர்ந்தாள்...
இருவரையும் ஏற்றிக் கொண்டு கார் புறப்பட்டது... கூட்டத்தினர் திகைப்பு அடங்குமுன்னரே...
19 - சீதாலெட்சுமிக்கு வீடு!
காருக்குள் பதட்டமாக இருந்தான் கார்த்திக்...
அவனுக்கு வியர்த்துக் கொட்டியது...
"ஏண்டா, இப்படி வியர்க்குது..." - என்று கேட்ட சீதாலெட்சுமியின் பேச்சை முந்திக் கொண்டு அவனுடைய வியப்பு வெளிப்பட்டது...
"எப்படிங்க... எப்படிங்க... நீங்க, புரியாதப் புதிரா இருக்கீங்க" - என்று கேட்டான் கார்த்திக்.
"ஏண்டா"
"உங்க வீடியோ எல்லாமே, லைவ் ஆ அமையுது... அதைவிடுங்க... அந்த பொறுக்கியை ஓங்கி அறைஞ்சீங்க பாருங்க... எனக்கு உள்ளூரக் காய்ச்சல் வந்துருச்சுங்க..."
சீதாலெட்சுமி சிரித்தாள் ...
"என்னங்க சிரிக்கிறீங்க... அந்தப் பொறுக்கித் திருப்பி உங்களை..."
"அடிச்சிருந்தா எட்டி உதைச்சிருப்பேன்..."
"அய்யோ... எனக்கு பயமாயிருச்சுங்க... அவன் உங்களைத் திருப்பி அடிக்கக் கூடாதுனு நான் கடவுளை வேண்டிகிட்டே இருந்தேன்..."
சீதாலெட்சுமி சிரித்துக் கொண்டே, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "எனக்காக கடவுள்கிட்ட வேண்டிகிட்டத்துக்கு " -என்றாள்...
சட்டென்று காரை நிறுத்தினான்...
"என்னங்க செஞ்சீங்க?" என்று கன்னத்தைத் தொட்டு வியப்புடனும் ஆனந்தமாகவும் கேட்டான்...
"ம்... சின்னப் பாப்பா ஒன்னும் தெரியாம முழிக்குதடி... இன்னொரு முத்தம் கொடுத்துருடி..." - என்றாள் காத்ரீனா!...
"டேய்... உனக்கு முத்தம் கொடுத்ததால், நான் உன்னை காதலிக்கிறேன்னு தப்பா நினைக்காதே... இப்பவும் சொல்றேன்... உனக்கும் எனக்கும் இடைவெளி ஆகாயத்தைவிட பெரிசு..." - சீதாலெட்சுமி.
"அப்படிச் சொல்லாதீங்க" - என்றான் கார்த்திக்.
"நான் ஓலை வீடு... நீ ஒய்யார மாளிகை..."
"அப்படிச் சொல்லாதீங்க"
"நான் பத்தாம் வகுப்பு... நீ பட்டப் படிப்பு"
"அப்படிச் சொல்லாதீங்க"
"எப்படி சொல்றது... நா வேண்டாம்னு சொன்னாலும், என்னைத் தேடி வர்ரே...?"
"என்னங்க முழு அடைப்பு... வீட்டில் சும்மாதானே இருக்கப் போறீங்க"
"சீதாலெட்சுமி சும்மா இருந்தா உனக்கென்னடா"
"காத்ரீனா, நீங்களும் அப்படிச் சொல்லாதீங்க... சீதாலெட்சுமியை நான் ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்..."
"அவளே, இது சரிப்படாதுனுத் தெளிவா சொல்றா... புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே... கிறுக்குப் பயலாட நீ"
"ஆமா; சீதாலெட்சுமியை நினைச்சு நினைச்சு கிறுக்குப் பயலா ஆகிட்டேன்... சீதாலெட்சுமி, ஐ லவ் யூ "
"நீ தலை கீழா நின்னாலும், என் முடிவில் நான் தெளிவா இருக்கேன்... நீ உன் வசதிக்கு ஏற்றப் பெண்ணைப் பார்த்து மணம் முடிச்சுக்கோ... அதுதா உனக்கு நல்லது..."
"எனக்கு நல்லது உன்கூட நான் வாழப்போகும் வாழ்க்கைத்தான் சீதாலெட்சுமி"
"டேய் கார்த்திக்... நான் ராசி இல்லாதவ... என்னைக் காதலிச்ச ரெண்டு பேருமே தற்கொலைப் பண்ணிட்டாங்க... உனக்கும் அந்த மாதிரி ஆயிருமோனு எனக்கு பயமா இருக்குடா... புரிஞ்சுக்கோடா"
"சீதாலெட்சுமி, உன்னைக் காதலிச்சு, உன்கூட ஒரு நொடி வாழ்ந்தால் கூட போதும்... நான் சாகணும்னு விதி இருந்தா, அந்த ஒரு நொடி வாழ்க்கை ஒரு கோடி நாள் வாழ்க்கைக்கு ஈடான மகிழ்ச்சியை எனக்குத் தரும்... அந்த மகிழ்ச்சியில் உன் மடியில் தலை வெச்சு உயிர் விட்ருவேன்... ஐ லவ் யூ... உன்னை காதலிக்கிறேன் சீதாலெட்சுமி... ரொம்ப... ரொம்ப..."
காத்ரீனா, சீதாலெட்சுமியைக் காரில் இருந்து இறங்கச் சொல்லி கண்மொழியால் சைகை செய்து, தானும் இறங்கினாள்...
காரின் பின்பக்கம் சென்று நின்ற காத்ரீனாவின் அருகில் வந்த சீதாலெட்சுமி : "என்னடி இவன் ரவிக்குமார் மாதிரியே பேசறான்..."
"உனக்கும் தோணுச்சா... சொல்லி வெச்ச மாதிரியே, இவனும் பேசறாண்டி" - என்றாள் காத்ரீனா!
"என் மடியில் தலைவெச்சு சாகணும்ங்கிறான்..."
"சாக வெச்சுருவோம்... ரவிக்குமாரை சாக வெச்ச மாதிரியே" என்று ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டினாள் காத்ரீனா...
சீதாலெட்சுமியும் ஆட்காட்டி விரலை உயர்த்தி, 'இவனையும் கொன்னுட்டா, நம்ம டார்கெட் முடிவுக்கு வந்துரும்..." என்றாள் மகிழ்ச்சி பொங்க!...
காரிலிருந்து இறங்கி வந்த கார்த்திக்கை கவனித்த சீதாலெட்சுமி, அவன் வருகையை, புருவத்தை உயர்த்தி சாடைச் செய்துக் காட்டினாள் காத்ரீனாவுக்கு!
காத்ரீனா உடனே பேச்சை மாற்றி, " கொஞ்சம் யோசிச்சுப் பாருடி... கார்த்திக் ரொம்ப நல்லவண்டி... .நீ நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது... சும்மா விதி, ராசினு உளறாதே" - என்றாள்...
காத்ரீனாவின் பேச்சை செவிமடுத்த, கார்த்திக், "நன்றி, காத்ரீனா... சீதாலெட்சுமிக்கு நீங்களே சொல்லுங்க... போலீசை எதிர்க்கிற சீதாலெட்சுமி - ரவுடியை ஓங்கி அறைஞ்ச சீதாலெட்சுமி - சானல் உலகத்தில் நல்ல பேரும் புகழுடன் இருக்கும் சீதாலெட்சுமி, இப்படி மூட நம்பிக்கையோட இருக்கலாமான்னு கேளுங்க காத்ரீனா" - என்று பேசி காத்ரீனாவை கெஞ்சுவதுப் போல் கேட்டான்...
"கார்த்திக், உன்னைப் பிடிக்காமல் இல்லை... என்னைக் காதலிச்சவங்களுக்கு நேர்ந்த கதியை நினைச்சு நா ஒவ்வொரு நாளும் அழுதுட்டு இருக்கறது உனக்குத் தெரியாது" - என்று கண்கலங்கினாள்...
அவளை மார்போடு, அணைத்து, "அழாதீங்க... நீங்க அழுதா என்னால் தாங்க முடியாது" - என்று சொல்லி சீதாலெட்சுமியின் கண்ணீரைத் துடைத்தான்... அவளுடையத் தலையை மார்போடு சாய்த்து வருடினான்...
சீதாலெட்சுமி அவன் மார்பில் கேவினாள்...
"கார்த்திக், இப்ப எதுக்கு எங்களை தேனாம்பேட்டைக்கு அழைச்சிட்டு வந்தீங்க" - என்று கேட்டாள் காத்ரீனா!...
"ஒரு இன்ப அதிர்ச்சி உங்க ரெண்டு பேருக்கும் நா தர போறேன்... காரில் ஏறுங்க... வாங்க நீங்களும் " - என்று சொல்லி, கேவிக் கொண்டிருந்த சீதாலெட்சுமியை, கைத்தாங்கலாக நடத்திச் சென்றான் காருக்கு!...
இவனுக்கு தெரியாது; இவன் சீதாலெட்சுமியால் சாகடிக்கப்படுவான் என்று!...
தெரிந்திருந்தால், சீதாலெட்சுமியை அரவணைத்துக் கொண்டு கார் ஒட்டிக் கொண்டிருப்பானா?...
குடிசையில் இருக்கும் சீதாலெட்சுமியை, குடிப் பெயர்த்தி கோடம்பாக்கத்தில் குடிவைக்க அவனுடைய வீடுகளில் ஒன்றை அலங்கரித்திருப்பானா?...
வீட்டின் அலங்கரிப்பை முடித்து, சாவியை எல்டாம்ஸ் சாலை ஏ ஆர் கே நகரில் இருக்கும் அவனுடைய நண்பன் வைத்திருந்தான்... அவனிடம் சாவியை வாங்கி, பெருமகிழ்ச்சியோடு சீதாலெட்சுமியிடம் கொடுக்க முனைவானா?...
கார் ஏ. ஆர். கே நகரினுள் நுழைந்தது...
20 - அசோக் நகர் ரவிக்குமார் மரணம்
ரவிக்குமார் கோவையில் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்...
மாணவனாக இருக்கும்போதே தன் அறிவியல் கண்டுப்பிடிப்புகளால் கோவை மக்களின் கவனத்தை ஈர்த்தவன்...
எளிய தொழிற் நுட்பத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தில் சில திருத்தங்களை செய்து அதிவேக இருசக்கர வாகனமாக கோவையின் தெருக்களில் வலம் வந்தான்...
எரியெண்ணையில் இயங்கிக் கொண்டிருந்த இருசக்கரத்தை நீரில் இயக்கிக் காட்டினான்...
சிறியரக பொம்மை விமானங்களில் சில மாற்றம் செய்து, வானில் பறக்க விட்டு அசத்தினான்...
இவனுடைய ஆற்றல் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டப் போதிலும் காவல்துறையினர் போதிய உரிமம் இல்லை எனச் சொல்லி இவனது அறிவியல் ஓட்டத்திற்குத் தடை விதித்தனர்...
இவனுடைய செய்திகள் வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்தன... அதனால் சீதாலெட்சுமி, ஒரு நேரலை நிகழ்வுக்கு ரவிக்குமாரிடம் ஒப்புதல் கேட்டாள்...
அவன் தந்த ஒப்புதலின் பேரில், கோவை வந்து ரவிக்குமாரை சந்தித்தாள்...
குதிரைப் பந்தய சாலையான ரேஃச் கோர்ஃச்சில் நேரலை செயற்பாட்டுக்கு ரவிக்குமார் ஏற்பாடு செய்திருந்தான்...
அதிகபட்சம் என்பது கிலோ மீட்டர் செல்லக் கூடிய வாகனத்தை இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தக் கூடியதாக வடிவமைத்திருந்தான்...
காவல்துறையின் அனுமதியும் போக்குவரத்து பாதுகாப்பும் பெற்றாள் சீதாலெட்சுமி .
குதிரைப் பந்தயம் சாலையிலிருந்து சூலூர் வரைக்கும் வழித்தடமெங்கும் கேமரா பொருத்தி, நேரலைக்கு ஏற்பாடு செய்திருந்தாள்...
சுமார் பத்தொன்பது கிலோ மீட்டர் தூரத்தை நான்கு நிமிடங்களில், இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் அடைந்து அதிரவைத்தான்...
இந்த நேரலை காட்சியின் மூலம், ரவிக்குமார் உலகோரின் பார்வைக்கு உள்ளாக்கப் பட்டான்...
உலகின் பல்வேறு அமைப்புகளின் பதக்கங்கள் பல அதிவேக பந்தயத்தின் மூலம் பெற்றான்...
அன்றைய நாளில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியால் சீதாலெட்சுமிக்கும், ரவிக்குமாருக்கும் இடையே பெரிய அளவில் நட்பு மலரவில்லை... என்றபோதிலும்; எப்போதாவது இணையத்தில் தங்கள் நலம் தெரிவித்தும் அறிந்தும் வந்தனர்...
படிப்பை கோவையில் முடித்துவிட்டு சென்னைக்கே திரும்பியிருந்தான்... ஆனாலும் அவனோ, சீதாலெட்சுமியோ நேரில் சந்தித்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்குள் இன்னமும் புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை...
ரவிக்குமார், பந்தயங்களிலும், சீதாலெட்சுமி நேரலை ஒளிபரப்புகளிலும் தத்தமது பணியை ஆற்றிக் கொண்டிருந்தார்கள் என்றே சொல்லாம்...
உதயம் திரையரங்கின் முன்னே, நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான் ரவிக்குமார் ஒருநாள்!...
நண்பர்களில் ஒருவன் வலையொளிக் காட்சியை ரவிக்குமாரிடம் காட்டி, திகிலாகப் பேசினான்...
"என்னடா இது! சாகனும்னா அமைதியா, ஏதாவது குடிச்சு வீட்டுக்குள்ளேயே சாக வேண்டியதுதானே...."
"யாருடா மச்சி"
"எந்தப் புறம்போக்குனு தெரியல... அண்ணாநகர் ப்ளைஓவெரிலிருந்து குதிச்சு தற்கொலை செஞ்சிருக்கான்... பாரு ... மண்டை சிதறி செ... பெத்தவங்க மனம் எப்படித் துடிக்கும்... பாக்கறவங்க நமக்கே பதறுதேடா" என்று அங்கலாய்த்தான்...
ரவிக்குமார் அந்த சானலைப் பார்த்தான்...
"என்ன சி சி டி வி பதிவா?" - என்று ஒரு நண்பன் கேட்டான்...
"சானல் நேரடி வீடியோ பண்ணியிருக்கான்"
"அடடே... இந்த சானல் எனக்குத் தெரியும்டா... கோயமுத்தூரில் என்னோட ரேஸிங் லைவ்வா டெலிகாஸ்ட் செஞ்சாங்களே... அவங்கதான் இதையும் செஞ்சிருக்காங்க"
"ஏண்டா, உன்னோட ரேஸிங் முன்கூட்டியே திட்டமிட்டு நடந்தது.... உனக்கும் தெரியும்... சானல்காரனுக்கும் தெரியும்... ஆனா; இது?... தற்கொலைச் செஞ்சுக்கப் போறவன், 'நா தற்கொலை செஞ்சுக்க போறேன்... லைவ் ஷோ போடு'னு சொல்லி அழைப்பு விட்டிருப்பானா?"
"இது எப்படி நடந்ததுன்னு தெரியனும் அவ்வளவுதானே?... இப்ப நா கேட்டுச் சொல்றேன்..." என்று சொல்லிவிட்டு அலைப்பேசியில் அழைப்பு விட்டான்... அழைப்பு தொடர்பு கிடைத்தது...
"சீதாலெட்சுமி, நான் ரவிக்குமார் பேசறேன்... கோயமுத்தூரில் நீங்க..."
"தெரியும்... சொல்லுங்க... எப்படி இருக்கீங்க?"
" நா நல்லா இருக்கேன்... நீங்க?"
"மனசு வெறுமையில் இருக்கேன் ரவிக்குமார்... சரி எதுக்கு கூப்பிட்டீங்க?"
"உங்க சானல் இப்ப பார்த்தேன்... "
"நன்றி! ரவிக்குமார்... நா வெச்சிரட்டுமா?"
"சீதாலெட்சுமி... என்ன ஆச்சு? சோகமா பேசறீங்க?"
"நத்திங்.. ரவிக்குமார்!... நான் வெக்கட்டுமா"
"அலோ... சீதாலெட்சுமி!... என்கிட்டே சொல்லக் கூடாதா?"
"இப்ப என் சானல் பார்த்ததா சொன்னீங்களே... அதில் ஒரு தற்கொலை.."
"ஆமா... அதை கேட்கத்தான் நா உங்களை கூப்பிட்டேன்"
"போங்க ரவிக்குமார்... என்ன சொல்றது?... அண்ணாநகர் மேம்பாலத்தில் ஒரு விபத்து நடக்கப் போகுதுனு தகவல் வந்துச்சு... மூலைக்கு மூலை கேமிராவை வெச்சிட்டு காத்திருந்தேன்..." - சொல்லிவிட்டு கேவினாள்...
"சீதாலெட்சுமி..."
""தற்கொலை செஞ்சுக்கிட்டது.... செஞ்சுக்கிட்டது... " - மீண்டும் கேவினாள்...
"சொல்லுங்க சீதாலெட்சுமி"
"என்னை உயிருக்கு உயிரா காதலிச்சக் காதலனின் தற்கொலையை, நானே லைவ் வீடியோ போட்ட பாவி நான்..." - அழுதாள்...
உடனே, சீதாலெட்சுமியைப் பார்க்க போனான்... பார்த்தான்... ஆறுதல் கூறினான்... சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது... அவனுக்கும் அவளுக்கும் இடையே ஓர் இணக்கம் உருவானது...
அதன்விளைவாக வெளியே செல்ல ஆரம்பித்தார்கள்... அவர்களோடு காத்ரீனாவும் போவாள்...
ஒருநாள் சொன்னான் : "உன் சிநேகிதி சீதாலெட்சுமியின் அறிவும் அழகும் என்னை அடிமையாக்கிருச்சு"
"லவ்வா?"
"சீதாலெட்சுமி என்னை ஏற்றுக் கொள்ளுவாங்களா?"
"அவகிட்டையே கேட்க வேண்டியதுதானே" - காத்ரீனா.
"பயமா இருக்கு?"
"பார்ரா... உலகின் அதிவேகத்தில் பறக்கக் கூடிய வீராதி வீரனுக்கு, சாதாரண சீதாலெட்சுமி கிட்ட பயமா?"
"உண்மையாவே பயமா இருக்கு, காத்ரீனா"
அப்போது சீதாலெட்சுமியும் வந்து சேர்ந்தாள்...
"அடியே, சார் உன்னை லவ் பண்றார்டி... சொல்ல பயமா இருக்காம்..."
பனிக் குழைவை சுவைக்கக் கையில் எடுத்த சீதாலெட்சுமி, மெல்லிதாய் கண்களை உயர்த்தி, ரவிக்குமாரை ஒருநொடிக்கும் குறைவாகப் பார்த்துவிட்டு திடீரென எழுந்து நின்று, "வாடி போகலாம்" என்று சொல்லி நடந்தாள்...
ரவிக்குமார் ஓடிவந்து அவள் நடையை நிறுத்தி, "உங்க காதலனின் பிரிவை இன்னும் எத்தனை நாளைக்கு மனதில் வெச்சுட்டு இருப்பீங்க... இப்படியோர் அறிவும் அழகும் உள்ள ஒருத்தியை தவிக்க விட்டுட்டு அவன் தற்கொலை செஞ்சுருக்கான்னா அவன் கோழைங்க... " - என்றான்...
மீண்டும் அவன், "ஒரு கோழையை மனதில் நினைச்சு - கவலைப்பட்டு - வாழ்க்கையை வீணாக்கும் நீங்களும் ஒரு கோழைதானுங்க... உங்களுக்கு எதுக்கு மீடியா? மீடியான்றது மக்களை நேர்வழிப் படுத்தி வீரத்தின் பக்கம் நிறுத்தணும்... நீங்களே வீரமில்லாத, ஒரு நடைப் பிணமாய் வாழ்ந்தீங்கனா, இன்னும் நீங்க உண்மையைத் திரும்பிக் கூட பார்க்கலைன்றதுதான் உண்மை!... உங்களைக் காதலிக்க ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சா, நா சாகற வரைக்கும் உங்களுக்குத் துணையா இருப்பேன்... நா சாகும்போதுகூட உங்க மடியில் தலைவெச்சுத்தான் உயிர்விடுவேனே ஒழிய, உங்களை விட்டு - உங்களைத் தவிக்கவிட்டு - நான் சாகமாட்டேன்" - என்றான்...
நடப்பதை நிறுத்தி, அவனுக்கு எதிரில் நின்று அவனைப் பார்த்தாள்... அவள் விழிகள் பெருக்கிய கண்ணீரைத் துடைத்து விட்டான்...
அவன் மாரில் சாய்ந்து, கண்ணீர் பெருக்கிக் கொண்டே, காத்ரீனாவைப் பார்த்துக் கண்ணடித்தாள்
பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்கள் இருவரும் காதலர்களாகவே பழகினர்...
ஒருநாள் அவன் சொன்னான் : "சீதாலெட்சுமி, ஒரு குட் நியூஸ்...
பட்டினப்பாக்கம் கடற்கரையில் சீதாலெட்சுமியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான்...
தலைமுடியை கோதிவிட்டபடியே கேட்டாள் சீதாலெட்சுமி : "என்ன?"
"நம்ம காதலை அம்மாகிட்ட..."
"சொல்லிட்டீங்களா?"
"நாளைக்கு சொல்லப் போறேன்... உன்னை என் பக்கத்தில் நிற்க வெச்சிட்டு"
"புரியல"
"நாளைக்கு என் பர்த்டே"
"வாழ்த்துகள் ரவிக்குமார்" - என்று சொல்லிக் குனிந்து - இதழ் குவித்து - அவனுடைய இதழ் கவ்வி முத்தமிட்டாள்...
மெய்சிலிர்த்து எழுந்து அமர்ந்த ரவிக்குமார், சீதாலெட்சுமியை ஆரத்தழுவி முத்தமிட்டான்...
பிறகு-
"நாளை மாலை மறக்காமல் வந்துரு சீதாலெட்சுமி" - என்றான் ரவிக்குமார்.
அவள் அவனையே இமைக்காதுப் பார்த்தாள்...
"பார்காத அப்படி... உன் பார்வை என்னை உருக்குது"
"நீ உருகிட்டியினா நா உதிர்ந்துப் போயிருவேன்"
"போதும்... போதும்... நா தனியா இருக்கேன்..." - காத்ரீனா.
"ஏண்டி, உனக்கு பொறாமையா?"
"இருக்காதா... என்னைப் பக்கத்தில் வெச்சிட்டே.."
"நீ ஏண்டி பார்க்கறே..."
"நா பார்கலைடி... பார்க்கா வெக்கிறீங்க... நா கிளம்பிப் போகட்டுமா"
"சாரி காத்ரீனா!... நீங்களும் நாளைக்கு வாங்க"
"என்னை நீங்க லவ் பண்ணலியே"
"காத்ரீனா, சீதாலெட்சுமிதான் எனக்கு உலகம்... சீதாலெட்சுமி மட்டுந்தான், என் நெஞ்சுக்குள் இருக்க முடியும்... சீதாலெட்சுமியின் சுவாசத்தில்தான் என் இருதயமே ..."
"துடிக்குதாக்கும்... போதுமப்பா உங்கக் கவிதை... நாளைக்கு என்னன்றதை சொல்லுங்க" - என்றாள் காத்ரீனா!...
"சீதாலெட்சுமி, நாளைக்கு என் பிறந்த நாளில், நம்ம காதலை... " - என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து ,"உங்கம்மாகிட்ட சொல்லப் போறீங்க" - என்றாள் காத்ரீனா!
"ஆமா!... உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"வந்ததிலிருந்து இதைத்தான் சொல்லிட்டிருக்கீங்க? எத்தனை தடவைக் கேட்கிறது... அலுப்பா இருக்குப்பா எனக்கு" - என்றாள் காத்ரீனா...
"எனக்கு ஆனந்தமா இருக்கு... என் சீதாலெட்சுமியை என் அம்மாவுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கப் போறேன்... மகிழ்ச்சியா இருக்கேன் சீது"
"அம்மாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டீங்களா?"
"இல்லை... உன்னை என் பக்கத்தில் நிற்க வெச்சு, உன் தோளில் நான் கைப் போட்டு, 'என் காதலியைப் பாருங்கம்மா' னு சொல்லப் போறேன்... நாளைக்கு வீடு அலங்காரமா இருக்கும்... அலங்காரம் என் பிறந்தநாள் விழாவுக்காக அல்ல... என் காதலி முதல்முதலா என் வீட்டுக்குள் அடி எடுத்து வெக்கப் போறா... அவளுக்காக - என் சீதாலெட்சுமிக்காக!" - என்றான்...
"என் மேல் உனக்கு அவ்வளவுக் காதலா? - என்று சொல்லி இறுக்க அணைத்து முத்தமிட்டாள்...
"திரும்பவும் ஆரம்பிச்சாச்சா?" என்று காத்ரீனா சொல்லும் போது பாய்ந்து வந்த அலை அவர்களை நனைத்து விட்டு, அதே வேகத்தில் கடல்நீரில் மறைந்தது...
மறுநாள் மாலை நான்கு மணியளவில் காத்ரீனாவோடு ரவிக்குமாரின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள், சீதாலெட்சுமி!
அவர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன...
சீதாலெட்சுமியை மலர்ப்பாதை மீது அழைத்துச் செல்ல வந்தான் ரவிக்குமார்!...
அவன் தொட முயற்சித்ததை நாசுக்காக தடுத்து, காத்ரீனாவின் கரம் பிடித்து நடந்துச் சென்றாள் சீதாலெட்சுமி!
பெரியக் கூடம் அலங்காரத்தில் மின்னியது!
மிக அழகு வாய்ந்த ஊஞ்சலில் ரவிக்குமாரின் தாய் அமர்ந்திருக்க, சீதாலெட்சுமி அவரருகே சென்றாள்...
அப்போது ரவிக்குமார் "அம்மா இவங்க சீதாலெட்சுமி" என்று சொல்லி சீதாலெட்சுமியின் தோள் மீது கைப் போட வந்தவனிடம் விலகி நின்று, "மேடம், ரவிக்குமார் என்னைப் பற்றி ஏதாவது சொன்னாருங்களா" என்று கேட்டாள்...
"ஒருத்தரை அறிமுகம் செஞ்சு வெக்கப் போறேன்னு சொல்லிட்டிருந்தான்... அவ்வளவுதான்... வேற ஒன்னும் சொல்லலையேம்மா" - என்றாள் ரவிக்குமாரின் தாய்!
"என்னை வாழ்த்துங்க மேடம்" என்று சொல்லி சீதாலெட்சுமி, கால் தொட்டு வணங்கினாள்...
ரவிக்குமார் உள்ளத்தில் ஏற்பட்ட இனம் புரியாத கலக்கம் அவன் முகத்தில் நிழலாடியது...
"நல்லா இரும்மா" என்று வாழ்த்திய ரவிக்குமாரின் தாயிடம், "மேடம் எனக்கு நிச்சயம் ஆயிருச்சு... மாப்பிளை வீட்டுக்காரங்க வந்தாங்க... அவங்களுக்காக பிரியாணி செஞ்சிருந்தோம்... ரவிக்குமாருக்கும் இன்றைக்கு பிறந்தநாள் ஆச்சே!... ரவிக்குமாருக்கும் உங்களுக்கும் சேர்த்து பிரியாணி கொண்டு வந்தோம்... சாப்பிடுங்க மேடம்" - என்று சொல்லிக் கொண்டே ரவிக்குமாரை ஓரக் கண்ணால் பார்த்தாள்...
அவன் முகம் இருண்டு வந்தது...
பிரியாணி நிரம்பிய பாத்திரத்தை காத்ரீனா நீட்ட, வேலைக்காரி பெற்றுக் கொண்டாள்...
"ஏம்ப்பா, ரவி!... இனி யாராவது வரணுமா... கேக் வெட்டிரலாமா?" - என்று கேட்ட அன்னையிடம், சீதாலெட்சுமியைப் பார்த்து "அம்மா இவங்க" என்று பேச வாயெடுத்தவனை பேசவிடாமல், "கேக் வெட்டுங்க" - என்று சொல்லி, சீதாலெட்சுமி ரவிக்குமாரின் கையைப் பிடித்து அவன் கையில் கேக் வெட்டும் கத்தியும் கொடுத்து, கேக்கை வெட்ட வைத்தாள்...
உண்மையில் கேக் வெட்டியது சீதாலெட்சுமிதான்!
கச்சிதமான நாடகத்தை யாரும் அறிவதற்குள், கேக்கை எடுத்து ரவிக்குமாரின் வாயில் ஊட்டி, 'ஹாபி பார்த் டே ட்டு யூ'' - என்றும் அழகான குரலில் ஈரடி பாட்டும் பாடினாள்....
உடனிருந்தோரும் பாடி கரவோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்...
மகிழ்ச்சிச் சூழல் மாறுவதற்குள் சீதாலெட்சுமி, மேடத்திடம் விடை பெற்றுக் கொண்டு, காத்ரீனாவோடு புறப்பட்டாள்...
புறப்படும்போது, ரவிக்குமாரின் காதில் மட்டும் கேட்கும்படி, 'பிரியாணி சாப்பிடு...' - என்று சொல்லி நகர்ந்தாள்...
ரவிக்குமாருக்கு ஏதும் விளங்கிக் கொள்ள இயலவில்லை... வாசல்வரைக்கும் வழியனுப்ப வந்தவனை கண்டுக் கொள்ளாமல், ஆட்டோ ஏறிப் புறப்பட்டனர் இருவரும்...
ரவிக்குமாரின் மனம் அலையாய் தவித்தது... எதையோ இழந்து விட்டதுப் போல் இதயம் படபடத்தது... நரம்பு மண்டலம் இயங்க விடாமல் தளர்த்தியது...
அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்... இருப்புத் தாங்க முடியாமல் மனம் தவிப்போடு அலைப்பேசியை எடுத்து சீதாலெட்சுமியை அழைத்தான்...
"ரவிக்குமார் பிரியாணி சாப்பிட்டீங்களா" - என்று முந்திக் கொண்டு கேட்டாள்...
"சீதாலெட்சுமி என்னங்க... இது!"
"பிரியாணி நல்லா இல்லைங்களா?"
"சீதாலெட்சுமி விளையாடாதீங்க... என்ன நாள் தெரியுமா இன்றைக்கு? "
"என்னைப் பெண் பார்க்க வந்தாங்க... நல்ல நாள்தானே இன்றைக்கு?"
"அப்ப நம்ம காதல்?"
"அவ்வளவுதான்... ஓகே பிரியாணி சாப்பிடுங்க" - என்று பேசிவிட்டு அலைப்பேசியின் தொடர்பைத் துண்டிக்கவும், அதே நேரம் வேலைக்காரி பிரியாணித் தட்டோடு நுழையவும் சரியாக இருந்தது...
பிரியாணித் தட்டை எட்டி உதைக்க எண்ணினான்... வேலைக்காரியின் முன்னிலையில் தனக்கேற்பட்ட இழுக்கை வெளிப்படுத்த வெட்கம் பட்டு, வெறுமனே தலையாட்டினான்...
வேலைக்காரித் தட்டை மேசை மீது வைத்து விட்டு போய்விட்டாள்...
இரவு பதினொரு மணிக்கும் அழைத்தான் சீதாலெட்சுமியை...
"தூக்கம் வருதுங்க.... பிரியாணி சாப்பிட்டீங்களா?... சரி நான் தூங்கறேன்... குட் நைட் " என்று சொல்லி அலைப்பேசியைத் துண்டித்தாள்...
சுளீர் என்று இதயம் வலித்தது...
உண்மையா? நாடகம் நடத்துகிறாளா? நெஞ்சம் கதறியது...
அவளால் நான் ஏமாற்றப்பட்டுவிட்டேனா?... கண்ணீர்த் ததும்பியது... தாயைத் தவறவிட்டக் குழந்தையைப் போல் தேம்பினான்...
இரவெல்லாம் தூங்கவில்லை... விடிகாலை அய்ந்து மணிக்கு மீண்டும் அழைத்தான் சீதாலெட்சுமியை!...
"ஏங்க ரவிக்குமார்... நீங்க படிச்சவர்தானே... நிச்சயமான பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா?... மாமா பையனுக்கும் எனக்கும் நிச்சயம் ஆயிருச்சு... ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க"
"அப்ப நம்ம காதல்?"
"கதைப் படிக்கிறோம்... அத்தியாயம் திசை மாறுதுனா என்னச் செய்வோம்?... ரெண்டு நிமிடம் கதையை நினைச்சுப் பாப்போம்... அப்புறம், அடுத்த வேலையை நாம பார்க்கத்திறதில்லையா... விடுங்க ரவிக்குமார்... அடுத்த வேலையைப் பாருங்க" - என்று தனது நிலையை உறுதிப் படுத்தி அலைப்பேசியை வைத்தாள்...
அவனால் எளிதாகக் கடந்து செல்ல இயலவில்லை... நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் சீதாலெட்சுமியை மறக்க மறுத்தது மனம்...
அம்மாவின் அறைக்குச் சென்றான்... அம்மா விடிகாலைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்...
மேசை மீதிருந்த மருந்துக் குப்பியை எடுத்து சென்றான்...
தன்னால் காதிலிக்கப்பட்ட ஆசைக் காதலி கொடுத்துச் சென்ற பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து, சீதாலெட்சுமி ஊட்டுவதாகப் பாவித்து உண்டான்...
மருத்துவர்களின் கடும் முயற்சியைத் தோற்கடித்தான்... இரண்டாவது நாள் நினைவுத் திரும்பாமலேயே உயிர்ப் பிரிந்தது...
'அதிவேக வாகனம் பந்தயப் போட்டியாளர் தற்கொலை' என்ற செய்திக் கேட்டு, சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் மகிழ்ச்சியில் மிதந்தார்கள்...
21 - சோதிடர் குறித்துக் கொடுத்த திருமணநாள்!
கோடம்பாக்கம் மின்ரத நிலையத்திற்கு அருகில் - நான்கு திடல் அளவில் - இருந்த பெரிய மாளிகையின் எதிரில் கார் நின்றது...
தானியங்கி மென்பொருள் தட்டின் விசையில் விரல் ரேகையைப் பதித்தான்... மாளிகையின் மதில் பெருங்கதவுத் திறந்தது...
வண்டி உள்ளே நுழைந்ததும் கதவுத் தானாக மூடிக் கொண்டது... அழகியப் பூஞ்செடிகள் அசைந்து வரவேற்பு செய்ய கார் நின்றது...
காரிலிருந்து சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் இறங்கி மாளிகையின் பிரமாண்ட அழகில் இலயித்துக் கொண்டு நிற்க, கார்த்திக் மிகவும் பணிவுடன் இரு கை நீட்டி "அழகே, வருக வருக'' என்று சொன்னான்...
கையில் இருந்த மென்பொருள் கடிவாளத்தில் விரல் ரேகையைத் தடவினான்... ஓசையின்றி - மின்மினி - விளக்குகள் ஒளிரத் திறந்தது வாசற்கதவு!... வீட்டினுள் தரை வழவழப்புடன் பளிச்சிட, அப்போது ஓர் அதிசயம் கண்டனர் தோழிகள் இருவரும்...
சீதாலெட்சுமியின் தாயும், தந்தையும் ஓர் அறையிலிருந்து வெளிப்பட்டார்கள்...
"அம்மா. அப்பா" - ஆசையும், வியப்பும் பொழிய நெருங்கி, அம்மாவை அணைத்துக் கொண்டாள்...
கார்த்திகைப் பார்த்து, "என்னடா இது?" - என்று கேட்டாள் சீதாலெட்சுமி!
"என் தேவதைக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த வீடு... என் மனதை ஆட்கொண்டவள் இருக்கும் இடத்தில்தானே தேவதையைப் பெற்றவர்களும் இருக்கணும்... என் வருங்காலத் துணைவியின் தோழியும் இனி இங்கேயே இருக்கணும்... தனியா விடுதியில் தங்க வேண்டாமே" - என்றான் காத்ரீனாவையும் பார்த்துக் கொண்டு!...
கார்த்திக்கின் கைப் பிடித்து இழுத்து, " நீ செய்றது ரொம்பத் தப்பு!... இன்னும் நாம வாழ்க்கைத் துணைவர்கள் ஆகலை..." -என்றாள்...
"என்னங்க நீங்க... நமக்குத் திருமணம் நடக்கத்தானே போகுது?"
"அதுக்குள்ளே நமக்குள் கருத்து வேறுபாடு வந்து நமக்குத் திருமணம் ஆகாமல் போச்சுன்னா; இல்லைங்க... இது சரிப்படாது... திருமணம் நடக்காமல் போய் இந்த வீட்டிலிருந்து நான் வெளியேறக் கூடிய சூழல், உருவாவதைவிட நமக்குத் திருமணம் நடக்கும் வரைக்கும், நா குடிசை வீட்டில் இருக்கறது கேவலமில்லைங்க..."
"ஆமாங்க, தம்பி!... உங்க ரெண்டுப் பேர் திருமணம் நடக்கட்டும்... அதுக்குப் பிறகு நாங்களும் மருமகன் வீட்டில் இருக்கோம்னு நாலுபேருகிட்ட சொல்றதில் பெருமை இருக்கும்... அப்பவே நான் சொன்னேனே, தம்பி!... சீதாலெட்சுமி ஒத்துக் கொள்ள மாட்டாள்னு" - என்று சீதாலெட்சுமியின் அம்மா சொன்னாள்...
காத்ரீனா பெற்றோர்கள் இருவரையும் இருக்கையில் அமர வைத்து அமைதியாக இருக்கும்படி செய்தாள்...
"சீதாலெட்சுமி, ஊரில் பேசுவாங்கான்றதுதான் உங்கப் பிரச்சனையா?"
"இல்லை... திருமணம் நடக்காமல் போனால் - ஒருவேளை அந்த சூழல் ஏற்பட்டால், 'சீதாலெட்சுமி எனக்குப் பிடிக்கல... நீ குடும்பத்தை அழைச்சிட்டு வெளியே போ'னு நீங்க சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டால் அப்ப, சீதாலெட்சுமிக்கும் மட்டுமல்ல எனக்கும்தான் அவமானம்..." - என்றாள் காத்ரீனா!
"இதெல்லாம் நீ சிந்திக்கவே மாட்டியா கார்த்திக்" - என்று கேட்டாள் சீதாலெட்சுமி!...
"நா எவ்வளவு மகிழ்ச்சியா, இந்த வீட்டுக்கு உங்களை வரவழைச்சேன்; தெரியுமா?... என் மகிழ்ச்சி ஒரு நொடிக் கூட இல்லாமல் போச்சு.." - என்று வருத்தப் பட்டான் கார்த்திக்!
"டேய் கார்த்திக்... நீ செய்றது ஒருவித மகிழ்ச்சியின் உந்துதலில்... ஆனா; எதார்த்தம்னு ஒன்னு இருக்கேடா..."
"எனக்கு நீ வேணும்... அதுமட்டும்தான் எனக்குத் தெரியும்" - என்றுக் கூறி கண்ணீர்க் கசிந்தான்...
"சீதாலெட்சுமி நா ஒன்னு செய்யட்டுமா?... இப்பவே வழக்கறிஞரை வரவழைக்கிறேன்... இந்த வீட்டை உன் பேருக்கு எழுதி வெச்சிட்றேன்... நாளைக்கு எது நடந்தாலும், இந்த வீட்டை விட்டு, வெளியே போக வேண்டியிருக்காது..." என்று சொன்னவன், சீதாலெட்சுமியின் பெற்றோர்கள் பக்கம் திரும்பி, "என்னங்க நான் சொல்றது சரிதானுங்களே" - என்றான்...
"டேய் கார்த்திக் " - சீதாலெட்சுமி
திரும்பிப் பார்த்தான் கார்த்திக்.
"என்ன சொன்னே? என் பேருக்கு எழுதி வெக்கறியா?"
"சீதாலெட்சுமி"
"நா சொத்துக்கு அலையறவளாடா?..."
"சீதாலெட்சுமி"
"உன் தகுதியும் என் தகுதியும் வேற... பணத்தையோ, சொத்தையோ காட்டி என்னை விலைப் பேச நினைச்சிட்டே இல்லே... இந்த சீதாலெட்சுமிக்கு விலை இல்லைடா... வாடி போகலாம்... அம்மா, அப்பா வாங்க..." - என்றுப் புறப்பட எத்தணித்த சீதாலெட்சுமியின் கால் பிடித்தான் கார்த்திக் மடாரென்று...
"என்னை மன்னிச்சிரு சீதாலெட்சுமி... நா தப்பான எண்ணத்தில் இதைச் செய்யலை... எனக்கு நீ வேணும்... நாளைக்கோ இல்லை; நீ எப்ப விரும்பறியோ அப்ப திருமணம் செஞ்சுக்கலாம்... உன்கூடவே நானும் குடிசையில் இருப்பேன் சீதாலெட்சுமி!... என்னை நீ ஒதுக்கிறாதே...." - என்று கெஞ்சினான்...
"கார்த்திக்!... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா... உன்னைப் போல் ஒருத்தன் எனக்குக் கிடைக்க நா என்ன புண்ணியம் செஞ்சேனோ... நீ நினைக்கிற மாதிரி நம்ம திருமணம் நடந்தா, உன்னைவிட எனக்கு மகிழ்ச்சி அதிகம்னு உனக்குத் தெரியுமாடா"
"சீதாலெட்சுமி இப்ப நான் செய்யணும்... நீயே சொல்லு... என் விருப்பத்துக்காக, ஒரு ரெண்டு நாளாவது இந்த வீட்டில் விருந்தாளியா இருக்கக் கூடாதா?"
"கார்த்திக் உன் விருப்பப்படியே இருக்கேண்டா... அதுக்காக திருமணத்திற்கு அவசரம் படுத்தக்கூடாது"
"மாட்டேன்... சோதிடர் குறிச்சுக் கொடுத்திருக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன்... என்ன சாப்பிடறீங்கன்னு மகாராணி சொன்னீங்கன்னா, சமையல் ஆட்களிடம் சொல்லிருவேன்"
"சாப்பிட சீதாலெட்சுமி மாதிரி நான் கூச்சம் பட மாட்டேன்... எனக்கு தந்தூரி ரொட்டி... கிரில் சிக்கன் ரொம்ப பிடிக்கும்..." - என்றாள் காத்ரீனா!...
"கார்த்திக்!... உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யச் சொல்லுங்க... சாதாரணமா இருந்தா போதும்" - என்றாள் சீதாலெட்சுமி!
"என் துணைவியின் உத்தரவு" - என்று சீதாலெட்சுமியிடம் பணிவுக் காட்டினான்...
22 - காவல் கட்டுப்பாட்டு அறை
அறை முழுவதும் கணினி நிறைந்திருக்க , ஒவ்வொரு கணினி முன்பும் காவலர்கள் கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்...
"என்னப்பா உன் பிரச்னை"
"நான் விளையாடலை, முரளி"
"பாலு, நீ விளையாடலை... ஆனா; நீ சொல்றதுக்கு ஆதாரம் வேணாமா?"
"டேய், நான் சொல்றதில் எதுவுமே ஆதாரமே இல்லைனு சொல்றியா?"
"அட போடா... கமிஷனரே அவளைப் பாராட்டிப் பேட்டிக் கொடுத்துருக்கார்"
"அதே கமிஷனர், ஆதாரமில்லாத தற்கொலைகள்னு வழக்கை முடிச்சிறாதீங்கன்னு சொல்லியிருக்கார்"
"சீதாலெட்சுமியை நீ சந்தேகம் பட்றே"
"சந்தேகமில்லாமல்.."
"என்னடா ஆதாரம்... நடந்த தற்கொலைகளை அவளோட சானலில் போட்டிருக்கா.... அப்படிப் பாத்தா சன் டி வி யைக்கூட நீ சந்தேகம் படணும்... அவங்களும்தானே செய்தியை வாசிச்சாங்க..."
"முரளி, முட்டாள் மாதிரி பேசாதே... நாலு தற்கொலையையும் சீதாலெட்சுமி செய்தியா மட்டும் வாசிக்கலை... தற்கொலை ஆனவர்களை இவளும் இவளோட ஒருத்தி இருக்கா... ஆங்... காத்ரீனாவும் காதலிச்சிருக்காங்க..."
"ரெண்டு பேருக்கு நாலு காதலர்களா?"
"இல்லை... ஒருத்தன் கதையை முடிச்சிட்டு இன்னொருத்தனைக் காலிச்சிருக்காங்க"
"பாலு சிரிப்பு வருதுடா... ஒருத்தனைக் காதலிச்சிட்டு இருக்கும்போதே வேறொருத்தன் கிடைச்சா, அவனை கழட்டி விட்டுட்டு இன்னொருத்தனை காதலிக்கிறாளுக... ஆனா; இவங்கச் செஞ்சது அப்படியில்லையே... காதலித்தவன் செத்துடறான்... செத்தவனை நினைச்சு அழுதுட்டு இருக்காமே, வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து போயிருக்காங்க ... ஒருத்தன் செத்தப் பிறகு மனதுக்கு பிடிச்சவனைக் காதலிக்கறதுத் தப்பாடா?... நீ நூறு வருசத்துக்கு முன்னாடி இருக்கே... காலம் மாறிட்டு வருதுடா...சரி; வா... டீ குடிச்சிட்டு வரலாம்" - என்ற முரளி ஆய்வாளர் பாலுவை தேநீரகத்துக்கு அழைத்துச் சென்றான்...
உள்ளேயே காவலர் உணவகம் இருந்தது...
ஆளுக்கொரு வடையும், தேநீரும் எடுத்துக் கொண்டு உணவகத்தின் ஓர் மூலையில் உட்கார்ந்தார்கள்...
"டேய் பாலு!... அவள் மேல் சந்தேகம் இருக்குன்னா, காவல்நிலையத்துக்கு இழுத்துட்டு வந்து, நாலு கும்மு கும்ம வேண்டியதுதானே... உண்மையைக் கக்கிடப் போறா..."
"அது முடியாதுடா"
"ஏண்டா?"
வடையைக் காட்டி "இதுதான் பிரச்சனை" - என்றார் ஆய்வாளர் பாலு!
"ஓ புலம்புனியே... அது எப்பிட்ற அய்ந்து லட்சம் ரூபாய்க்கு வடைத் தின்னீங்க... பாவம்டா; டீ கடைக்காரனுக"
''இதை கேடயமா வெச்சிட்டு எனக்குத் தண்ணிக் காட்டிட்டு இருக்காடா"
"ஏரியாவே, உன்னைக் கண்டா மிரளுது... உன்னையே மிரள வெச்சுருக்காள்னா அவ கில்லாடி தாண்டா"
"டேய் எனக்கு அவளைக் கண்டு பயம்னு சொல்ல முடியாது... ஆனா; அவளுக்கும் நடந்த நாலு தற்கொலைக்கும் சம்பந்தம் இருக்குனு நிரூபிச்சிட்டா, எனக்கு புரமோசன் கிடைச்சிருண்டா"
"ஏன்டா, உன் பதவி உயர்வுக்கு, ஒருத்தியை பலிக்கடா ஆக்கறே"
"முரளி, காவல்துறையில் உள்ளவங்க பேசற மாதிரி நீ பேசறே... என் நண்பனாச்சே... நீ உதவிச் செய்வேனு வந்தா..."
"சரி; சரி... கோபம் படாதே... வா கண்ட்ரோல் ரூமுக்கு போலாம்"
கட்டுப்பாட்டு அறையின் இருக்கையில் அமர்ந்தார்கள்...
"அவளோட நம்பர் சொல்லு"
"டேய், நம்பர் டிஸ்பிளே ஆக மாட்டேங்குது"
"இன்டர்நெட் செட்டிங் மாத்தியிருப்பா... சீதாலெட்சுமியோட போன் சிக்னல், இந்தியாவுக்கு வெளியே வேற வேற நாட்டிலிருந்து காட்டுதுடா... ஆமா, அவளோட ஒருத்தி சுத்தறாள்னு சொன்னியே அவ நம்பர் கொடு"
" ..........................."
"அவளோட நம்பரும் சிக்னல் ஆக மாட்டேங்குது..."
"சீதாலெட்சுமியும் அவளோட சிநேகிதியும் யார் யார்க்கூட தொடர்பில் இருந்தாங்க; என்ன பேசுனாங்கனு கண்டுப் பிடிக்கணும்னா அவங்க நம்பர் ட்ரேஸ் ஆகணும்... ஆகமாட்டேங்குது... ஏண்டா தற்கொலை செஞ்சவங்களோட நம்பர் ட்ரேஸ் செஞ்சாச்சா?
"செஞ்சாச்சு... நோ தகவல்"
"நாலு பேரைக் காதலிச்சத்தில் உள்நோக்கம் இருக்குனு சொல்றியா?"
"ஆமாடா... எதுக்கு காதலிச்சாளுக... எதுக்கு செத்தானுக... அது தெரிஞ்சாகணும்"
"இது என்னடா கேள்வி? நீ உன் முதல் மனைவியைக் காதலிச்சுத்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்ட... எதுக்குடா காதலிச்சே?"
"எங்க ரெண்டுப் பேருக்கும் பிடிச்சது... காதலிச்சோம்..."
"இதுவும் அப்படித்தான்... இரண்டு பக்கமும் ஈர்ப்பு ஏற்பட்டதால்தான் காதல் உருவாகியிருக்கும்... இது ஒரு கேள்வி... இதுக்கு ஒரு வழக்கு... இதுக்கு ஒரு ஆபிசர்... "
"சரிடா... இவர்களால் காதலிக்கப்பட்ட நாலுபேருமே பெரிய இடத்துப் பசங்க... பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவங்க?"
"பணத்துக்காகக் காதலிச்சிருப்பாளுகளோ... பேங்க் அக்கவுண்ட் பாத்தீங்களா"
"அப்படியேதும் இல்லடா... ஒருத்தன் தூக்கில் தொங்கியிருக்கான்..."
"ஒருத்தன் மாடியிலிருந்து குதிச்சு செத்துருக்கான்... இன்னொருத்தன் அண்ணாநகர் மேம்பாலத்தில் இருந்து குதிச்சிருக்கான்... ஒருத்தன் பிரியாணியில் தூக்க மாத்திரைக் கலந்து செத்துருக்கான்... இது ஊரறிஞ்சச் செய்தி... இதில் எங்கடா வழக்கின் தகவல் இருக்கு?"
"இந்த ரெண்டு வீடியோவையும் பாரு..."
ஒரு வீடியோ கோவளத்தில் கடைகளில், சி சி டி வி கேமராக்களில் இருந்து பதிவிறக்கியது... ரமேஷ் கெஞ்சுகிறான்... அவனைப் பொருட்படுத்தாமல், சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் போகிறார்கள்...
இன்னொன்றில் ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன் அண்ணாநகர் மேம்பாலத்தின் அருகே காரில் சாய்ந்து நின்றுள்ளான்... அப்போது ஆட்டோவில் சீதாலெட்சுமி வந்து இறங்குகிறாள்... அவனிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து போய் விடுகிறாள்... இதுவும் கடைகளில் உள்ள சி சி டி வி கேமராக்களில் பதிவிறக்கியது...
இன்னொன்று, ரவிக்குமாரின் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறாள்; சீதாலெட்சுமி காத்ரீனாவோடு!... அதே காட்சியில்-, சிறுது நேரம் கழித்து சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் வந்து ஆட்டோவில் ஏறி புறப்படுகிறார்கள்... ரவிக்குமார் ஆட்டோவுக்கு பின்னல் சிறுது தூரம் ஓடி நிற்கிறான்...
"பாலு, என்னடா இருக்கு? எதைவெச்சு நீ சீதாலெட்சுமியை சந்தேகம் பட்றே ?..."
"காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாற்றியிருக்காளுக..."
"பாலு நீ லூசு! காதலிச்சு ஏமாத்தறவ, எதுக்குடா வீட்டுக்கு வந்து போகணும்...? பணம், நகைனு எதுவும் பிடுங்கியிருக்காளுகளா? அதுக்கும் ஆதாரம் இல்லைங்கிறே..." - என்ற முரளி மீண்டும், "பணக்காரப் பசங்களை கேர் பண்ணாமல் - இன்னும் பச்சையா சொல்லனும்னா, அவளுக மயிருக்கு சமமாக்கூட இவனுகளை மதிக்கலை... இவனுக கொழுப்பு எடுத்து செத்துருக்கானுவ... நீ சீதாலெட்சுமியை கோர்த்து விட்றே... உனக்குத்தான் கெட்டப் பேர் வந்து சேரும்... ஒன்னு செய்... சீதாலெட்சுமிங்கிற ஆங்கிள் அப்படியே இருக்கட்டும்... வேறு ஏங்கிளிலும் யோசிச்சுப் பாரு " - என்றுச் சொல்லிவிட்டு, "வா; டீ குடிக்கலாம்" என்று நடக்க-
ஆய்வாளர் பாலுவின் முகத்தில் ஏமாற்றம் மேலோங்கியது...
23 - சீதாலெட்சுமியின் வீட்டில் பகல் உணவு!
மூன்று நாட்கள் விருந்தினராய் கோடம்பாக்கத்தில் - கார்த்திக் வீட்டில் இருந்து விட்டு இன்று காலை ஓலை வீட்டுக்குத் திரும்பி விட்டனர் காத்ரீனா உட்பட!...
காலையில் நீச்சல் குளத்தில் நீராடும்போது, கார்த்திக் சீதாலெட்சுமியையும் அழைத்தான்... அவளுக்கு நீச்சல் பழக ஆர்வம் இருந்த போதிலும், முதலில் மறுத்தாள்... அவளை நீருக்குள் தள்ளிவிட்டு, பயத்தைப் போக்கி, நீரிலிருந்து இருக்கரங்களில் ஏந்தி வந்து நீச்சல் குளத்தின் வெளியே விட்டான்...
இப்போது அவளே நீரில் இறங்க முற்பட்டபோது, கார்த்திக் தடுத்து நீச்சல் குளத்தின் எதிரில் உள்ள அறைக்கு இட்டுச் சென்றான்... உடன் காத்ரீனாவையும் அழைத்துச் சென்றான்...
இருவருக்கும் நீச்சல் மற்றும் நீச்சல் பழகும்போது அணியும் பாதுகாப்பு கவசமும் கொடுத்து அணியச் சொல்லிவிட்டு நீச்சல் குளத்திற்கு வந்துவிட்டான்...
வானிலிருந்து இரு தேவதைகள் வந்தால் எப்படி விழி மூடாது வியப்புக் கொள்வோமோ; அதுபோல் நீச்சல் உடையில் வந்த சீதாலெட்சுமியை விழிமூடாது அவள் அழகில் திணறினான்...
டூ பீஸ் எனப்படும் ஈராடைகள் மட்டும் அணிந்திருந்தனர்.... புடலை போல் நீண்ட கைகளும், தண்டு போல் நீண்டிருந்த நீண்ட கால்களும் அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது...
"போதுண்டா அப்படிப் பார்க்காதே... பார்க்கறதா இருந்தால் என்னையும் பார்" - என்று சொல்லி புன்னகைச் செய்தாள் காத்ரீனா!...
குளத்தில் இறக்கி இருவருக்கும் கற்றுக் கொடுத்தான் நீச்சல்... சீதாலெட்சுமியின் தொடுதல் படும்போதெல்லாம் கிரங்கினான்... மயங்கினான்... நினைவில் முயங்கினான்...
மூன்று நாட்கள் அங்கிருந்தாலும், அவ்வப்போது செய்தி சேகரிப்புக்கும் சென்று வந்தனர்... அவர்களோடு, ரவிக்குமாரும் சென்றான்...
சீதாலெட்சுமி செய்தி சேகரிப்பு நுணுக்கமும், செய்திகளை அனுப்பும் வேகமும், ஆட்களுக்கு உதவும் பண்பும் ரவிக்குமாருக்கு மிகவும் பிடித்தது... அதனால்; அவள்மேல் காதல் அதிகரிக்கவே செய்தது...
சுவாசக் காற்று தட்டுப்பாட்டால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தப் பெண்மணியை சீதாலெட்சுமி படம் பிடித்துக் கொண்டே மருத்துவரிடம் காத்ரீனாவை ஏவினாள்...
மருத்துவர் என்ன செய்வார்? உயிர்க்காப்பு சுவாசக் காற்று இருப்பு இல்லை என்பது மடியும் உயிர்கள் அறியுமா? என்று கேள்வி எழுப்பினாள்...
ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், முகக்கவசம் அணியாமல் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் காட்சியைப் படமாக்கி வெளியிட்டாள்...
சாலையோரத்தில் பசியால், துவண்டுக் கிடப்போருக்கு உதவ வேண்டும் என்றாள்...
உடனே, கார்த்திக் ஆயிரம் பேருக்கு உணவு, நீர், முகக்கவசம் ஏற்பாடு செய்தான்... அவற்றை, கார்த்திக் கைப்பட வழங்க வைத்துப் படமாக்கி ஒளி பரப்பினாள்...
அவனுள் அவள் பரந்து விரிந்துக் கொண்டே இருந்தாள்... அதேபோல்; கார்த்திக்கின் நல்ல உள்ளம் சீதாலெட்சுமியின் அம்மாவையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது...
"சீதா, மாப்பிளையும் பகலுக்கு சாப்பிட வரேனு சொல்லியிருக்கார்"
"யாரும்மா மாப்பிள்ளை?" - என்று சற்றுக் கடிதலோடு கேட்ட சீதாலெட்சுமி, அதே வேகத்தில் நாக்கை அடக்கி, 'ஏம்மா, அவரோட வசதிக்கு நம்ம சாப்பாடு ஒத்து வருமாம்மா?... நீ ஏம்மா கூப்பிட்டே" சீதாலெட்சுமி...
"ஏய், அம்மா கூப்பிடல... 'அம்மா, பகல் உணவுக்கு இங்கேதான் வருவேன்... எனக்கும் சேர்த்து செஞ்சு வைங்க' னு சொன்னது அவன்தாண்டி" என்றாள் காத்ரீனா...
"சரிம்மா நாங்க கிளம்பறோம்" - என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பும் போது, அலைப்பேசி அழைத்தது...
"ம்... சீதா, வேலையை முடிச்சிட்டு எங்கே இருப்பீங்கனு சொல்லுங்க... நா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..." என்றவன் "ஆங்... சீதா, என்னைப் பார்க்க இன்ஸ்பெக்டர் வராரு... அவர் போனப் பிறகு கூப்பிட்றேன்" - என்றுச் சொல்லி அலைப்பேசித் தொடர்பைத் தூண்டிக்க இருந்தவனை; சீதாலெட்சுமி அவசரமாக "டேய் கார்த்திக் போனை ஆப் பண்ணாதே... வீடியோ ஆன் பண்ணிரு... இன்ஸ்பெக்டருக்குத் தெரியாம, போனை மறைச்சு வை... சைலண்ட்டில் வை" - என்றாள்...
கார்த்திக்கிடம் பேசிவிட்டு கட்டில் மீது அமர, அவளருகில் காத்ரீனாவும் அமர்ந்தாள்...
செவி வாங்கியின் இருமுனைகளையும் ஆளுக்கொன்றாக காதில் மாட்டிக் கொண்டார்கள்...
24 - அதுதான் சீதாலெட்சுமி!
அறையில் இருந்து கண்ணாடி வழியே, எதேச்சையாகப் பார்த்தான் கார்த்திக்!...
தன்னை காவல்நிலையம் வரவழைத்து விசாரித்த ஆய்வாளர் வங்கியை நோக்கி வருவதைக் கண்டான்...
கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் ஆய்வாளர் பாலு.
"வணக்கம் சார்"
"வாங்க சார்!... உட்காருங்க " - என்று கார்த்திக் எழுந்து நின்று பணிவோடு வரவேற்றான்...
"பையனுக்கு கல்விக்கடன் கிடைக்குமானு விசாரிக்க வந்தேன்"
"கல்விக்கடன்தானே... எந்த காலேஜ் சார்"
"இன்னும் முடிவு பண்ணலே... இருந்தாலும் முன்கூட்டியே தெரிஞ்சிக்குறது நல்லதுதானே"
"நல்லதுங்க சார்... கடைசி நேரத்தில் அலைய வேண்டியதில்லை..."
"நீங்க எந்த கல்லூரியில் படிச்சீங்க..."
"லயோலா"
"அட நானும் அங்கேதான் பட்டப்படிப்பை முடிச்சேன்... அது மட்டுமில்லை என் மனைவியும் அதே கல்லூரியில்தான் படிச்சாங்க... அந்த கல்லூரியில்தான் எங்களுக்கும் காதல் ஏற்பட்டுச்சு"
"ஓ"
"எனக்கு அப்ப சரியான வசதியில்லை... இருந்தாலும் காதலிக்கு ஏதாவது வாங்கித் தரணுமேன்னு வீட்டில் காசுத் திருடி வாங்கித் தந்துருவேன்... காதலிக்குப் பரிசு வாங்கித் தருவதில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி, அப்பல்லாம் ரொம்ப பெருமையா இருக்கும் சார்... இப்ப நினைச்சாலும் வெட்கமாத்தான் இருக்கு... " - என்று சொல்லி வெட்கம் பட்டார் ஆய்வாளர் பாலு!
கார்த்திக் மெலிதாய்ப் புன்னகைத்து விட்டு, தன் பணியில் ஈடுபாடுக் காட்டிக் கொண்டிருந்தான்..
"சாருக்கு, கல்லூரி காதல் எப்படி?"
"கல்லூரியில், காதல் எதுவும் இல்லைங்க சார்"
"ஆமாமா... ஒரு சிலருக்கு கல்லூரியில் காதல் அமையாது... கல்லூரிக் காலத்திற்குப் பிறகு காதல் அமையும்... ஆமா; சாருக்கு, இப்ப எப்படிப் போயிட்டிருக்கு காதல்?"
கார்த்திக் எதுவும் பேசவில்லை... முகத்தில் வெறுப்பும் காட்டவில்லை... பணியும் பார்த்துக் கொண்டிருந்தான்...
"காதலிக்குப் பரிசும் வாங்கித் தந்திருப்பீங்களே... இல்லைனா காதலிப்பதில் சுவை இருக்காதே... சாரோட வசதிக்கு வைரம், வைடூரியம்னு வாங்கித் தந்து அசத்தியிருப்பீங்க... ம்... நான் கண்ணாடி வளையல் வாங்கித் தரதுக்கே காசு இல்லாமல் அல்லாடியிருக்கேன்..."
"கண்ணாடி வளையலா இருந்தாலும் காதல் பரிசுதானே சார்... அன்போடு வாங்கித் தந்திருக்கீங்க... அந்த அன்புதானே காதலுக்கு அடிப்படை!..."
"சார், என்னென்ன வாங்கித் தந்தீங்கன்னு சொல்லவேயில்லை"
"என் காதலிக்கு, நான் என்ன பரிசு வாங்கித் தந்தேனு நீங்க தெரிஞ்சுக்கணும்... இதை கேட்கவா வந்தீங்க... போன்லியே கேட்டிருக்கலாமே..."
"என்ன சார் என்னைத் தப்பா புரிஞ்சிட்டீங்க... நான் வரேன் சார்"
"சார்... சார்... நானும் வேடிக்கையாத்தான் சொன்னேன்... உட்காருங்க..."
அலுவல் உதவியாள் வந்து தேநீர் வைத்துச் சென்றான்...
"ஏங்க, ராமமூர்த்தி எனக்கு ஒரு வடை... சாருக்கும் வடைக் கொண்டு வாங்க " என்று கார்த்திக் சொன்னப் போது, 'வடை' என்ற சொல் ஆய்வாளர் பாலுவின் முகத்தில் சுளீர் என்று ரேகைப் போல் தோன்றி மறைந்தது...
அதைக் கண்டது போல், காட்டிக்கொள்ளாத கார்த்திக் : " சார், காதல் பரிசுன்றது நாம உயிரோடு இருக்கற வரைக்கும் இனிமையான நினைவுகளை நமக்குத் தந்துட்டே இருக்கும்" - என்றான்!
"காதலிக்கு மிகப் பெரிய பரிசுத் தந்துட்டீங்க போலிருக்கு" - என்று பேசிய ஆய்வாளரின் பேச்சில் ஆவல் மிகுந்திருந்தது...
"ஆமாங்க!... எங்க பூர்வீக சொத்து இருக்கு... இன்றைக்கு மதிப்பு சுமார் நூறு கோடி தேறும்... ஐந்து கிரவுண்டு அப்படியே என் காதலி சீதாலெட்சுமிக்கு காதல் பரிசாத் தந்துட்டேன்... "
"காதல் பரிசா?"
"அப்புறம்.... எங்கே போனாலும் ஆட்டோவில் போறாங்க... எனக்குப் பிடிக்கலை... ஒரு ஆடி கார் வாங்கித் தந்துருக்கேன்"
"அடேங்கப்பா... உங்கக் காதலிக்கு ரொம்ப யோகம்" - என்றார் நக்கலாக!
"ஒரு நெக்லஸ்... வைர நெக்லஸ் எங்கம்மாவோடது... ஒரு கோடி மதிப்பிருக்கும்..."
"அதையும் பரிசா தந்துட்டீங்களா?... அம்மாவோடது?"
"வருங்கால மனைவிக்குத்தானே சார்... "
ஆய்வாளர் பாலு மிக வருத்தம்பட்டு பேசினார் : "மேனேஜர் சார், சீதாலெட்சுமிக்கும் எனக்கும் எந்தப் பகையும் கிடையாது... அவங்க யாரோ?... நான் யாரோ?... ஆனா; என்னோட போலீஸ் கண்ணுக்கு அந்தப் பொண்ணு பயங்கரமான கிரிமினல்... இதை ஏற்கனவே நான் உங்ககிட்ட சொன்னப்போ, அப்படியே சீதாலெட்சுமிகிட்ட போட்டு கொடுத்தீங்க... இருந்தாலும்; காவல்துறையில் நான் பணியாற்றுவதால் உங்க உயிருக்கு உள்ள ஆபத்தை நான் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்..."
"உங்க கடமைக்கு எனது பாராட்டுக்கள்..."
"பாராட்டுக்கள் வேணாம் சார்... உங்களைக் காதலிச்சு என்னென்ன பறிச்சிருக்காள்னு ஒரு புகார் கொடுங்க... ஒரு புகார் போதும்... சீதாலெட்சுமியைக் கைது செஞ்சு யார்யார்கிட்ட எத்தனையெத்தனைப் பறிச்சிருக்காள்னு கண்டுப் பிடிக்கிறேன்... என் மனசுக்குப் பட்டது இதுவரைக்கும் பொய்த்துப் போனதில்லை"
"வடை நமத்து போயிரும் சார்... உட்காருங்க "
"அதென்ன சார்... வடை வடை..."
"சார் உட்காருங்க... வடை மேல் கூடவா எரிச்சல் படுவீங்க... என்னை முழுமையா பேசவிடுங்க..."
"இன்னும் என்னென்ன கொடுத்தீங்கன்னு சொல்லப் போறீங்களா... சொல்லுங்க... சொல்லுங்க"
"என் பூர்வீகச் சொத்து - நூறு கோடி மதிப்புள்ள வீட்டு சாவியை நான் சீதாலெட்சுமிக்கு கொடுத்தப்ப, சீதாலெட்சுமி அதை வாங்கிக்கலை..."
'சாவியைக் கொடுத்தா போதுமா... சீதாலெட்சுமி பேரில் பத்திரம் எழுதித் தந்திருந்தீங்கனா, மகிழ்ச்சியா வாங்கியிருப்பாங்க... பத்திரம் பண்ணிட்டீங்களா?"
"தன்னுடைய உழைப்பில் வராத எதுவும் வேண்டாம்னு சொன்னாங்க... அதுதான் சார் சீதாலெட்சுமி!... "
"கார்?"
"அவங்களுக்கு வாங்கின கார் எங்க வீட்டில் மூடி வெச்சிருக்கேன்... கார் வேண்டாம்னு சொல்லிட்டாங்க... டூ வீலராவது வாங்கிக்கன்னு கேட்டேன்... அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா சார்"
"டூ வீலர் கொடுத்தா போதுமா?... தினமும் பெட்ரோலுக்கு ஒருத் தொகையை கேட்டிருப்பாங்க"
"இல்லைங்க... டூ வீலர் வாங்கணும்னா லோன் போட்டும் எடுத்துறலாம்... ஆனால்; அதை நிறுத்த தன் வீட்டில் இடமில்லை... தெருவில் நிறுத்துனம்னா வண்டித் திருட்டுப் போயிரும்... திருட்டுப் போகும்னுத் தெரிஞ்சும் டூ வீலர் வாங்கணுமா?... அதனால் வண்டி வேண்டாம்னு சொல்லிட்டாங்க... அதுதான் சீதாலெட்சுமி"
"அது சொத்தைக் காரணம்... நெக்லெஸ் வேண்டாம்னு சொல்லலியே"
"வேண்டாம்னு சொல்லிட்டாங்க... நகைகள் மீது தனக்கு விருப்பமில்லைனு ஒற்றை வரியில் சொன்னாங்க... அதுதான் சீதாலெட்சுமி..."
"உண்மையாவா?"
"சீதாலெட்சுமியோட சேனலை நேற்றுப் பார்த்தீங்களா... கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிச் செய்யணும்னு விரும்புனாங்க... உடனே நான் ஏற்பாடு செஞ்சேன்... உங்க உதவி உங்க பேரில்தான் நடக்கணும்னு சொல்லி என் கையால் உதவியை செய்ய வெச்சாங்க... இன்னொருத்தரா இருந்தா நான் கொடுத்ததை வாங்கி, அவங்க விளம்பரம் தேடியிருப்பாங்க... சீதாலெட்சுமி சுய விளம்பரம் தேடிக்கலை... அதுதான் சீதாலெட்சுமி!... என் சீதாலெட்சுமி!... போங்க சார்... ஆதாரமில்லாமல் சீதாலெட்சுமி மேல் பழிப் போடாதீங்க... உங்க நேர்மையை நீங்களே கெடுத்துக்காதீங்க"
"மேனேஜர் சார்! என் பேச்சில் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம்... என் போலீஸ் கனக்குத் தப்பானதில்லை" - என்றுச் சொல்லிவிட்டு, மறுப் பேச்சுக்கு இடந்தராமல் சென்றுவிட்டார்...
எவரால் கொலை செய்யபட இருக்கிறானோ, அவர்களைப் பற்றி ஆய்வாளரால் சொல்லப்பட்ட தகவல்கள் குறித்து கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கத் தவறி விட்டான் என்பதைவிட, அவர்களால் கொல்லப்படவிருக்கிறான் என்பது மட்டும் உண்மை...
25 - சதித் திட்டம் உருவானது...
ஆய்வாளரும், கார்த்திக்கும் பேசிக் கொண்டதை திரைக் காட்சியாய் அலைப்பேசியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...
சீதாலெட்சுமி மெலிதாய் புன்முறுவல் செய்து, "மோப்பம் பிடிச்சிட்டாண்டி" - என்றாள்!...
"நெருங்கிருவான் போலிருக்குதேடி" -காத்ரீனா!...
"கிழிச்சான்... போடி... நம்மகிட்டய்யா...?" - என்று நமட்டுச் சிரிப்பு செய்தாள்...
"என்னடி, கார்த்திக் உன்னை இப்படித் தாங்கறான்..."
"ஆடு, வெட்டப் போறவனை நம்பத் தானே செய்யும்"
"கார்த்திக்கை எப்பப் போட்டுத் தள்ளறது"
"இன்றைக்கு நீச்சல் குளத்தில்?"
"ஆமாடி!... நீ அவனை அணைச்சிட்டு படுத்திரு... நா அவனுக்குத் தெரியாமா மயக்கமருந்துத் தடவுனா கைக்குட்டையை மூக்கில் வெச்சிடறேன்... அவனோட மூச்சை நிறுத்திட்டு, நீச்சல் குளத்தில் போட்டுரலாம்..."
"கதவுத் திறக்க"
"நேற்றே செஞ்சுட்டேண்டி... ரிமோட் கண்ட்ரோல் பாஸ்வார்ட் கண்டுபிடிச்சிட்டேன்.... இப்ப அவனோட ரேகை மட்டுமல்ல, என்னோட ரேகை பதிவானாலும் கதவுத் திறந்துரும்..."
"அம்மா, நாங்க கிளம்பறோம்... மாப்பிள்ளை வந்தார்னா நல்லா கவனிம்மா"
"சரிம்மா... சாப்பாட்டுக்கு நீங்க வருவீங்கத் தானே?"
"வந்துருவோம்மா... எங்களுக்காக காத்திருக்காம மாப்பிளையை கவனிச்சு அனுப்பிரும்மா"
"சரிம்மா"
"அப்புறம்; அம்மா, யாருக்கும் தெரியக் கூடாது... மாப்பிள்ளைக்கும் தெரியக் கூடாது... என்னனு கேட்கக்கூடாது..."
"சொல்லும்மா"
"மாலை ஆறு மணிக்குமேல் நீயும் அப்பாவும் கோவளத்துக்கு வந்துருங்க... அந்த வீடு தெரியுமில்லே..."
"தெரியும்மா நீங்க புறப்படுங்க"
"புறப்படுங்க"
புறப்பட்டனர் சதித் திட்டத்தோடு!...
26 - சீதாலெட்சுமியின் வீட்டில் கிடைத்தத் துண்டு சீட்டு
"டேய் முரளி நான் பாலு பேசறேன்"
"சொல்லுடா"
" நம்பர் உனக்கு அனுப்பியிருக்கேன்... எந்த சிக்னல்னு பார்த்து சொல்லு"
"இரு... டேய் பெரும்பாக்கம் மேடவாக்கம் சிக்னல் காட்டுதுடா "
"நல்லா பாருடா... "
"சரியா சொல்லனும்னா, பேங்க் கட்டிடத்தைக் காட்டுது"
"சரிடா... மேனேஜர் இன்னும் வெளியே போகலே... அடிக்கடி பாருடா... நம்பர் போற இடத்தைச் சொல்லுடா"
"சரிடா"
தொடர்பைத் துண்டித்து விட்டு, "யோவ் வடையும் டீயும் சொல்லுய்யா" - என்றார் ஆய்வாளர் பாலு...
"ஐயா என்கிட்டே காசு.." -என்று தலை சொரிந்தார் காவலர்.
"ஆமா காசு வாங்கிட்டு போக மறந்துறாதே..." - என்று சொல்லி பணத் தாள் உருவும்போது, ஒரு துண்டுக் காகிதம் விழுந்தது...
அதை எடுத்தார்... "ஓங்காரமிடு
ஓலமிடு
காதகனடா நீ
காணாதாவாயாடா "
துண்டு சீட்டு!.. சீதாலெட்சுமியின் வீட்டில் கிடைத்தது என்று, அன்று காவலர்கள் கொடுத்தது...
அன்று படித்துப் பார்த்து பொருள் விளங்கவில்லை... கசக்கித் தூக்கி வீச நினைத்தவர், அப்படியே பணத்தாள் வைப்போடு வைத்தார்...
"ஏம்மா, உனக்கு கவிதை எழுத வருமே... இதைப் படிச்சு பொருள் சொல்லும்மா"
பெண் காவலர் வாங்கிப் .பார்த்து விட்டு... 'ஓங்காரமிடு... ஓலமிடு.. காதகனடா நீ... காணாதாவாயாடா... சார், நீங்க தப்பா நினைக்கலைனா..."
"சொல்லும்மா"
"டேய் காதகனே, நீ ஓங்காரமிட்டு ஓலமிட்டு வந்தாலும் உன்னால் என்னைப் பிடிக்க முடியாது... காணாமல் போயிருவே... னு"
"என்ன என்ன... என்னைத் தொலைச்சிருவாளா... யோவ் வண்டி எடுய்யா... அவளைத் தெருவில் நார்நாரா கிழிச்சு..."
ஆய்வாளரின் ஆவேசம் கண்டு, காவல் நிலையத்தில் அடைக்கப் பட்டிருந்தக் கைதிகளும் அஞ்சினர்...
"சார் சார் வேண்டாம் சார்... அவகிட்ட வடை வீடியோ இருக்கு... அது நம்ம கைக்குக் கிடைக்கிற வரைக்கும் நாம அவசரம் பட்டு ஏதும் செஞ்சிற வேண்டாம்" - என்றார் பெண் துணை ஆய்வாளர்!...
தொலைபேசி அடித்தது .
காவலர் எடுத்தார்...
'சார், கண்ட்ரோல் ரூம்..." -என்று சொல்லி, நீட்டினார்...
27 - வெட்டப்படும் முன் ஆட்டுக்கு மாலை
மிகப் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் பேட்டியை நேரலை செய்து விட்டு, பிற்பகல் மூன்று மணிக்கு, வெளியே வந்தார்கள் சீதாலெட்சுமியும், காத்ரீனாவும்...
அவர்களை உரசுவதுபோல் கார் வந்து நின்றது... ஏறி உட்கார்ந்தார்கள்...
"ஏண்டா, சாப்பிட்டியாடா" - சீதாலெட்சுமி...
"இல்லை; சீதா!... வேலை நிறைய இருந்துச்சு... சாப்பிட போக முடியல..."
"நீ வருவேன்னு அம்மா, மீன் வறுத்து வெச்சு காத்திருக்காங்க..."
"சாரி... வேலை அதிகமா இருந்துச்சு... போக முடியலை... நீயும் மூனு மணிக்கு வேலை முடிஞ்சிரும்னு சொன்னியே... சரி உங்களை பிக்கப் செய்ய இப்படியே வந்துட்டேன்... சரி; எங்கே போகலாம்..."
"நீ சாப்பிடலையேடா"
"நீக்க சாப்பிட்டீங்களா"
"இன்டெர்வியூ முடிசிட்டு அங்கேயே சாப்பிட்டோம்... சரி ஒன்னு செய்வோம்... வீட்டுக்குப் போறோம்... நீ சாப்பிடறே... சாப்பிட்டபிறகு கோடம்பாக்கம்"
"கோடம்பாக்கமா?"
"ஆமாடா நீச்சல் அடிக்க ஆசையா இருக்கு"
'ஆகா; காதல் மனைவியோடு நீச்சல் கும்மாளம் ... தலைப்பு எப்படி இருக்கு"
"நான் உன் கூட வந்தா, நீ உன் பசியைக் கூட பொருட் படுத்த மாட்டிங்கிறியே... செல்லம்!" - என்றுச் சொல்லி, கொடுத்தாள் முத்தம் உதட்டோடு...
"விடுடி... வண்டி எடுக்கட்டும் " -என்று சொல்லி, சீதாலெட்சுமியை விடுவித்தாள் காத்ரீனா, கார்த்திக்கிடமிருந்து!
"உனக்குப் பொறாமை" - என்றுச் சொல்லி கைக்குட்டையால் உதட்டைத் துடைத்துக் கொண்டு, கார்த்திக்கின் உதட்டையும் துடைத்து விட்டாள்...
வண்டி புறப்பட்டது...
நீச்சல் குளத்தில் மூழ்கடிக்கப் பட்டு கொல்லப்பட இருப்பவன் தான்தான் என்று உணராமல் குதூகலத்துடன் வண்டி ஓட்டினான்...
28 - போலீஸ் பின் தொடர்கை
"டேய் பாலு எங்கே இருக்கே?... ?'
"ஈ சி ஆர் "
"பாலு, வண்டி ஈ சி ஆர் லிருந்து ஓ எம் ஆர் வழியா பல்லாவரம் சாலையில் போயிட்டுருக்கு"
'டேய் வண்டி நம்பர் கலர் சொல்ல முடியுமா?"
"சொல்றேண்டா"
ஆய்வாளர் தனிக் குழுவுடன், ஓ எம் ஆர் சாலையில் விரைந்தார் கார்த்திக் வண்டியை பின் தொடர...
29 - கார் நின்றது
வேளச்சேரி நூறடி சாலை வெறிச்சோடி இருந்தமையால், கார்த்திக் உற்சாக மிகுதியில் மிக வேகமாக ஓட்டினான்...
"கார்த்திக் நீ, நீயா இல்லை... வண்டியை நிறுத்து..."
"எதுக்கு சீது"
வண்டியை நிறுத்தினான்...
வண்டி சிறப்பு வசதிகள் கொண்டதால், ஆட்கள் கீழே இறங்கி பின்பக்க இருக்கைக்கு வரவேண்டியதில்லை...
ஓட்டுனர் மற்றும் ஓட்டுநர் அருகில் உள்ள இரு இருக்கைகளை சுருக்கினால் படுக்கை போல் படிந்துவிடும்.
"காத்ரீனா நீ ஒட்டு" - என்றாள்
சீதாலெட்சுமியும் கார்த்திக்கும் அப்படியே நகர்ந்து பின் இருக்கைக்கு வந்தனர்... காத்ரீனா முன் இருக்கைக்கு நகர்ந்து இருக்கையை சரி செய்து ஓட்டுநர் ஆனாள்...
30 - நெருங்கவில்லை
"பாலு வண்டியை பார்த்துட்டியா?..."
"அவங்களுக்கும் எனக்கும் எத்தனை மீட்டர் இடைவெளி இருக்கு?"
''பாலு மூனு கிலோ மீட்டர் காட்டுது... டேய்... வேளச்சேரி நூறடி சாலையில் முருகன் கல்யாண மண்டபத்துக்கு பக்கத்தில் வண்டி நின்னுட்டிருக்குடா"
'சரிடா;... யோவ் வண்டியை வேகமா ஒட்டுய்யா..."
"இதுக்குமேல் இழுக்கமாட்டேங்குதுங்க அய்யா"
"நான் கீழ் இறங்கி இழுக்கட்டுமா?'
"சார் வண்டி சரியில்லை... ட்ரைவரை திட்டி என்ன செய்றது? தெரிஞ்சிருந்தா நான் என் காரை எடுத்துட்டு வந்திருப்பேன்" - பெண் துணை ஆய்வாளர்.
"என்கிட்டையும் சொந்தக் கார் இருக்கு... சப் இன்ஸ்பெக்டர் மேடம்"
"தெரியும் சார்"
மாற்று உடுப்பில் விரைந்துக் கொண்டிருந்தனர்... கார்த்திக்கின் காரை நெருங்க முடியவில்லை...
31 - காத்ரீனாவின் குறும்பு
"ஏண்டா அப்படிப் பார்க்கிறே?"
"மடியில் சாஞ்சுகிடட்டுமா "
"ம்... சாஞ்சுக்க... சாஞ்சுக்க... அதனால்தானே வசதியா உட்காந்திருக்கீங்க பின்னாடி?" - என்றாள் கார் ஓட்டிக் கொண்டே காத்ரீனா!...
"உனக்கேண்டி பொறாமை... என் கார்த்திக்... என் செல்லம்... நீ படுடா" - அவனை மடியில் படுக்க வைத்து, தலையைக் கோதி விட்டாள்... கன்னத்தைத் தடவினாள்... மீசையை - தாடியை வருடி விட்டாள்...
சீதாலெட்சுமியைக் கண்ணாடி வழியே பார்த்து, "குழந்தைக்கு பசி எடுக்கும்டி... பால் ஊட்டிவிடு" - என்றாள் நமட்டுச் சிரிப்புடன்...
"சும்மா இருடி " - என்ற சீதாலெட்சுமி நாணினாள்...
அவனுடைய மொறு மொறு தாடி முகத்தை தடவிக் கொண்டே அவனுடைய கீழ் உதட்டை இழுத்து விட்டாள்...
"ஏண்டி வண்டியை நிறுத்திட்டு நான் வெளியே போயிறட்டுமா? - காத்ரீனா கண்ணாடியில் பார்த்து கேட்டாள்...
"பாரு கார்த்திக்... அவா என்னென்னமோ பேசறா" - என்று சிணுங்கினாள் சீதாலெட்சுமி...
கார்த்திக் வலது கையால் சீதாலெட்சுமியின் பாதங்கள் நீவி விட்டு, "அசதி காத்ரீனா... இல்லைனா படுக்க மாட்டேன்" - என்றான் கார்த்திக்!
"படு ராசா... நல்லா அணைச்சுப் படு" என்று நக்கலாக சிரித்துக் கொண்டே, காண்ணாடியில் பார்த்து பேசினாள் காத்ரீனா!
"ஏய் வழியை பார்த்து வண்டி ஒட்டுடி"
"ஆமாமா... நான் வண்டியைத்தானே ஓட்ட முடியும்" - என்று குறும்பாகக் கேட்டாள்...
32 - ஆய்வாளரின் உறுதி!
கட்டுபாட்டு அறையிலிருந்து முரளி : "என்னடா செய்றீங்க?... அந்த கார் சைதாப்பேட்டை வழியா போகுது... பார்த்துக்க... நான் டீ குடிக்கப் போறேண்டா"
"டேய் , போகாதே... இன்னும் நாங்க வண்டியைப் பார்க்கலை..."
"சரி; சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பி வண்டியை மடக்கச் சொல்லட்டுமா"
"சொல்லாதே... சீதாலெட்சுமி அவனை எங்கே கூப்ட்டிட்டுப் போறானு தெரிஞ்சுக்க வேணாமா? என் பிளானை கெடுத்துருவே போலிருக்கு"
"என்னடா உன் பிளான்?"
"பேங்க் மானேஜரை எப்படி சாகடிக்கப் போறாறாங்கனு கண்டுப் பிடிச்சாகனும்... அதே நேரம் மேனேஜரையும் காப்பாத்தியாகணும்டா "
"அவனை சாகடிக்கத்தான் போயிட்டு இருக்காள்னு எதை வெச்சு உறுதியா சொல்றே?"
"நீ அதிகமா கேள்வி கேட்காதே... எனக்கு தகவல் அனுப்பும் வேலையை மட்டும் செய்"
"சரிடா.. உன் கணக்குப் படி இன்றைக்கு கொலை செய்யலைனா?"
இருபத்து நாலு மணி நேரமும் அவள் என் கண் வளையத்திலிருந்து தப்ப முடியாதுடா..."
"இப்ப நா டீ குடிக்கப் போகணுமேடா"
"நம்பிக்கையான ஆள் நீதாண்டா... எங்கேயும் போகாதே... கண்காணிச்சிட்டே இரு"
முரளி சோர்வாக கைப்பேசியை வைத்தான் கட்டுப்பாட்டு அறையில்!
33 - கார்த்திக் என்னவாயிற்று?
தியாகராயர் நகரிலிருந்து அபிபுல்லா சாலையில் திருப்பினாள் காத்ரீனா... நீண்டநேரம் பின் இருக்கையிலிருந்து எந்த சலசலப்பும் கேட்காததால், கண்ணாடி வழியே பின்னிருக்கையைப் பார்த்தாள்...
சீதாலெட்சுமி இருக்கையில் பின் பக்கமாக தலைச் சாய்த்து கண்ணயர்ந்திருந்தாள்... மெதுவாக விழிகளை சாய்த்து, கார்திக்கைப் பார்த்த காத்ரீனா திடுக்கிட்டாள்...
அமைதியாக வண்டியை ஓரம் கட்டிவிட்டு, முன்னிருக்கையை படுக்கைப் போல் மடக்கிவிட்டு, மெதுவாக சீதாலெட்சுமியிடம் நகர்ந்து ஓசையின்றி எழுப்பினாள்...
கண்விழித்த சீதாலெட்சுமி காத்ரீனாவைப் பார்த்து 'வந்துட்டமா?" - என்று கேட்டாள்...
காத்ரீனா, கார்த்திகைக் காட்டினாள்... சீதாலெட்சுமி விழிகள் விரிய அதிர்ந்தாள்...
34 - அபிபுல்லா சாலை
கண்ட்ரோல் ரூமிலிருந்து முரளி : "ஏண்டா சைதாப்பேட்டையில் நிக்குது?"
"வண்டி நின்னுருச்சுடா... இன்ஜின் புகை வருது"
"ஒரு இன்வெசிட்டிகேசன் போகும்போது இப்படி ஓட்டை வண்டியாடா?"
"காலையில் நல்லா இருந்துச்சு..." .
"என்னமோ செய்... அவங்க வண்டியும் அபிபுல்லா சாலை நடிகர் சங்கத்தில் நிக்குது"
"நடிகர் சங்கமா? ஏண்டா?"
"எனக்கென்னடா தெரியும்... போய்ப் பாரு"
35 - மரண வியர்வை!
"சீதாலெட்சுமி, முடிச்சிட்டியா?"
"இல்லைடி... என்னாச்சுன்னு தெரியலே...."
கார்த்திக் மூச்சறை வேகமாக இரைத்துக் கொண்டிருந்தது... உடலெல்லாம் வியர்த்து தண்ணீராய் வழிந்துக் கொண்டிருந்தது...
சீதாலெட்சுமி பபடப்பின்றி ஒரு கணம் யோசித்தாள்...
அந்த நேரத்தில்- காத்ரீனா, அலைப்பேசியில், "கார்த்திக்கின் கதையை இன்றைக்கு முடிச்சிடலாம்னு போயிட்டு இருந்தோம்... திடீர்னு அவன் மூர்ச்சையாயிட்டான்... மயங்கி இருக்கான்... என்ன செய்றது?"
"என்ன கேள்வி.... அவனோட மூச்சை நிறுத்திட்டு ரெண்டு பேரும் வந்து சேருங்க" - எதிர் முனையில் குரல் கேட்டதும், சீதாலெட்சுமி காத்ரீனாவின் அலைப்பேசியைப் பிடுங்கி வைத்துவிட்டு, " சன்னல் இறக்கு" -என்றுக் கத்தினாள்...
சன்னல் இறக்கப் பட்டது... சீதாலெட்சுமி, கார்த்திக்கின் நாடியை சோதித்தாள்.... "ரொம்ப வேகமாக துடிக்குது" என்றவள், "காரை விஜயா மருத்துவ மனைக்குத் திருப்பு" - என்றாள்
கார்த்திக்கின் நெஞ்சின்மீது இருக்கரங்களையும் வைத்து அமுக்கி அமுக்கி .விட்டாள்...
அவன் வாய்க்குள் வாய் வைத்து காற்று ஊதினாள்...
ஓசை எழுப்பிக் கொண்டே கார் மேம்பாலம் ஏறி வடபழனி நோக்கி அசுர வேகத்தில் பறந்தது...
36 - இடைவெளிப் புதிரானது
"கட்டுப்பாட்டு அறையிலிருந்து முரளி : "டேய் பாலு, அவங்க கார், வந்தவழியே திரும்பிப் போயிட்டுருக்குடா"
"எங்கடா போகுது?... என்னடா நடக்குது?"
"அதைத் தெரிஞ்சு உன்னால் என்னடா செய்ய முடியும்"
"என்னடா சொல்றே?
"நீ கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கே... வைடா... டீ குடிச்சிட்டு வந்து பேசறேன்" - என்று சொல்லிவிட்டு கணினியின் திரையை மூடிவிட்டு தேநீர் அகம் நோக்கிச் சென்றான்...
37 - மருமகள் ஆன சீதாலெட்சுமி
நகரும் படுக்கையில் கிடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டான் அவசர சிகைச்சைப் பிரிவுக்கு!
கூடவே, ஓடினார்கள் காத்ரீனாவும், சீதாலெட்சுமியும்...
அவர்களில் சீதாலெட்சுமியை, "மேடம் நீங்க வாங்க'' என்று அழைத்து ஒரு படிவத்தை நீட்டி 'நீங்கதானே மனைவி? இதில் விபரம் எழுதுங்க" என்று சொல்லிவிட்டு, சீதாலெட்சுமி, ஏதோ சொல்ல வந்ததையும் கவனிக்காமல், இன்னொரு நோயாளியிடம், "ரெண்டாவது மாடி, லெஃப்ட் ஏழாம் நம்பர்' என்று மருத்துவமனை பெண் .ஊழியர் பேசிக்கொண்டிருந்தார்...
படிவத்தை நிரப்புகையில் அவளையறியாமல் மனைவி என்று எழுதி விட்டாள்...
காத்ரீனாவும் அப்போது அருகில் வந்து, "என்னடி இது" என்று சுட்டிக் காட்டும் போதுதான் தவறை உணர்ந்தாள்...
மீண்டும் படிவத்தைத் திருத்த முற்பட்டபோது, ஒரு செவிலியர் வந்து படிவத்தை வாங்கிக் கொண்டு, "சீக்கிரம் இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க" என்று மருந்து சீட்டோடு, அலைப்பேசி, பணம் தாளுறை, சில நகைகள், இன்னும் சிலவற்றைக் கொடுத்து "இந்தாங்க... இதெல்லாம் நோயாளிகள் கிட்ட இருந்தது...." என்றுக் கூறிக் கொடுத்தார்...
அவைகள் என்னவென்றுக் கூட சோதிக்காமல், வாங்கி கைப்பைக்குள் வைத்துக் கொண்டு மருந்தகம் நோக்கி விரைந்தார்கள்...
மருந்து எடுத்து வைத்துவிட்டு மருந்தாளுனர், "ஏழாயிரத்து முன்னூற்று ஒன்பது " - என்று சொல்லும் போது சீதாலெட்சுமி எந்த சலனமும் காட்டிக் கொள்ளாமல், தனது பண அட்டையை எடுத்து நீட்டினாள்...
மருந்து வாங்கிக் கொண்டு, அவரச சிகிசைப் பிரிவு நோக்கிச் செல்லும் போது, காத்ரீனா சொன்னாள் : " இவனைப் பற்றி நமக்கு ஒன்னும் தெரியாது... இவனுக்கு எதாவது ஆச்சுன்னா, நாமதான் பதில் சொல்லணுமா?"
"யோசிக்கிலாண்டி... அதுக்காக நாம இவனை இப்படியே விட்டுட்டுப் போக முடியாது"
அவசர கிகிச்சைப் பிரிவை அடைந்து மருந்துகளை கொடுத்தப் போது, செவிலியர், "அவரை ஐ சி யூ சிறப்பு வார்டுக்கு மாற்றியிருக்கோம்... வாங்க " என்றுச் சொல்லி அழைத்துச் சென்றார் ...
ஐ சி யூ க்கு வெளியே "இங்கே நில்லுங்க" - என்று நிறுத்தி விட்டு, செவிலியர் மட்டும் மருந்துகளுடன் சென்றார் உள்ளே...
"ஏண்டி நாலு பேர் கதையும் எளிதா முடிச்சோம்... அஞ்சாவது இப்படி ஆயிருச்சேடி..."
"விடு... புலம்பாதே... எல்லாத்தையும் எதிர்க் கொள்ளணும்... அதுதான் வாழ்க்கை! நாம செய்றது உயிர் பலி!... பதட்டம் அடையாமல் செய்தால் யாவும் எளிது "
"பிழைச்சிருவானா... செத்துருவானா...? "
"செத்தா நமக்கு நல்லது! பிழைச்சா அவனுக்கு நல்லது!"
செவிலியர் வந்து, "இந்தப் பணத்தைக் கட்டிட்டு வந்துருங்க" என்று ஒரு தாள் நீட்டினாள்...
மூன்று லட்சம் கட்டச் சொல்லியிருந்தது...
"என்னடி!... மூனு லட்சத்துக்கு நாம எங்கே போறது?"
"பொறு ... பொறு... கார்த்திக் அவனுக்கு அப்பா இருக்கறதா சொல்லியிருந்தான்... ஞாபகமிருக்கா?"
"ஆமாடி... " என்று சொல்லிக்கொண்டே கார்த்திக்கின் அலைப்பேசியை கைப்பைக்குள் இருந்து வெளியே எடுத்தாள்...
அலைப்பேசி பதிவேட்டைப் புரட்டிய போது, 'அப்பா' என்று ஆங்கிலத்தில் பதிவாகியிருந்தது... அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்...
மறுமுனை, "அலோ" என்றது...
"அப்பா, நான் சீதாலெட்சுமி பேசறேன்... கார்த்திக் பிரெண்ட்"
"அடடே மருமகளே..."
அலைப்பேசி புறஒலியில் இருந்ததால் காத்ரீனாவுக்கும் கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...
"என்னம்மா மருமகளே..."
"ஆங்... அப்பா..."
"உன்னைப் பற்றி கார்த்திக் நல்லா சொல்லி இருக்கான்ம்மா... இந்த வெள்ளிக்கிழமை உங்க வீட்டுக்கு உன்னைப் பெண் பார்க்க வரோம்..."
"அப்பா ''
"சொன்னானா?"
"அப்பா அது வந்து..."
"ஒன்னுஞ் சொல்லாதே... நீதான் எங்க வீட்டுக்கு மருமகள்..."
காத்ரீனா தலையில் அடித்துக் கொண்டாள்...
"சரினு சொல்லும்மா மறும...."
"அப்பா, கார்த்திக் உடம்பு சரியில்ல... மருத்துமனையில் சேர்த்துருக்கோம்"
"என்னம்மா ஆச்சு?"
"சீக்கிரம் வாங்கப்பா, தனியா இருக்க மனசு என்னமோ மாதிரி இருக்கு..."
"அம்மம்மா, இதோ வந்துடறேன்... கார்த்திக் நல்லா இருக்கானா"
"அப்பா மருத்துவமனையில் மூனு லட்சம் கட்ட சொல்றாங்கப்பா... சீக்கிரம் வாங்கப்பா"
"புரியுது... புரியுது... நா வரும் வரைக்கும் காத்திருக்காதேம்மா... கார்த்திக் ஏ டி எம் அட்டையிலிருந்து பணம் கட்டிரும்மா... பதினேழு பதினாறு பின் நம்பர்... தயவு செஞ்சு கட்டிரும்மா..."
"நான் கட்டிட்றேன்... நீங்க வடபழனி விஜயா மருத்துவமனைக்கு வந்துருங்கப்பா" - என்று சொல்லி அலைபேசியைத் துண்டித்தாள்"...
பண அட்டையை எடுத்துக் கொண்டு, சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் பணம் கட்ட விரைந்தார்கள்... இவர்களின் விரைவு நோயாளிகள் செவிலியர் என கவனத்தை ஈர்த்தது...
38 - சீதாலெட்சுமி தலைமறைவு
வண்டி பழுது சீராளர் வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்...
பெண் ஆய்வாளர் தெருவோரமாக நின்று அலைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்...
ஏனைய காவலர்களுக்கும் மரக்கட்டைகள் போல் பவ்வியமாக வண்டிக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள்...
ஆய்வாளர் பாலு ஓட்டுனரின் இருக்கைக்கு அருகில் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார்...
பழுது சீராளர் ஓட்டுனரிடம் "ஸ்டார்ட் பண்ணி ஆக்ஸிலேட்டர் கொடுங்க " - என்றார்...
வண்டி சரியாகிவிட்டது...
எல்லாரும் வண்டியில் ஏறினார்கள்...
கட்டுப்பட்டு அறைக்கு தொடர்புக் கொண்டு, "முரளி, வண்டி ரெடி ஆயிருச்சு..." - என்றார் பாலு!
"அவங்க சிக்னல் விஜயா மருத்துவ மனையைக் காட்டுது... ஒரு மணிக்குமேல் அங்கதான் சிக்னல் காட்டுது... "
"என்னாச்சுடா... அவனை முடிச்சிட்டாளுகளா?"
"போய் பாருடா"
"டிரைவர் வண்டி எடுப்பா"
ஓட்டுநர் வண்டி எடுப்பதற்கு முன்பாக அருகில் வந்து ஆய்வாளர் பாலுவிடம், "சார் பணம்" - என்று பழுது சீராளர் கேட்டார்...
பழுது நீக்கியமைக்கான கூலியைக் கேட்ட சீராளனை முறைத்து "பணம் வேணுமா? - என்று எரிச்சலோடுக் கேட்டார்...
"ஆமா... நானூறு ஆச்சு! ஸ்பேர் வாங்கினதெல்லாம் சேர்த்து" - என்றார் பழுது சீராளர்...
"நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக்க"
"வந்துட்டாலும்..." என்று முனகியது ஆய்வாளரின் காதுக்கு எட்டியது...
"டேய் என்ன சொன்னே? பக்கத்தில் வந்து சொல்லு" - என்று பழுது சீராளரை மிரட்டினார் பாலு!
சீராளர் பயந்து, "ஒன்னுமில்லைங்க சார்" என்று பின்வாங்கினான்...
"முட்டியைப் பேத்துருவேன்" என்று சொல்லி மிரட்டிவிட்டு, "டிரைவர் வண்டி எடு" - என்று கட்டளையிட்டார்...
ஓட்டுநரிடம் பெண் துணை ஆய்வாளர், "கொஞ்சம் பொறுங்க" என்று வண்டி எடுப்பதை நிறுத்தி, வண்டியிலிருந்து இறங்கி பழுது நீக்கியிடம் நானூறு ரூபாய் தாள்களை தந்து விட்டு, வண்டி ஏறி, "வண்டி எடுங்க" என்றார்...
வண்டி நகர்ந்தது.
"வடபழனி விஜயா மருத்துவமனைக்கு விடுப்பா" என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு, "என்ன சப் இன்ஸ்பெக்டருக்கு மாமூல் அதிகம் போலிருக்கு" - என்று பெண் துணை ஆய்வாளரிடம் கேட்டார்...
"சார் என் சொந்தக் காசிலிருந்துக் கொடுத்தேன்... தர்லைன்னா, அவன் உடனே சமூக வலைத்தளங்களில் போடுவான்... ஆதாரத்துக்கு, சி சி டி வி கேமரா, நாம பழுது நீக்கின இடத்திலேயே இருக்கு... ஏற்கனவே வடை மேட்டர் சீதாலெட்சுமி கிட்ட இருக்கு "
பாலு, ''வேகமா ஒட்டுப்பா" என்றார்
விஜயா மருத்துவமனைக்கு இருநூறு அடிக்கு முன்னதாகவே வண்டி நிறுத்தப்பட்டது...
வண்டியில் இருந்து இறங்கிய அனைவரிடமும், "தனித் தனியா போறோம்... தனித்தனியா அலார்ட்டா இருங்க" - என்று சொல்லிவிட்டு பாலு நடந்தார்... பிறகு ஒருவர் பின் ஒருவராக இடைநேரம் விட்டு தனித் தனியே மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள்"
தேடலைத் தொடங்கினார்கள்... மருத்துமனைக்குள் சீதாலெட்சுமியும் இல்லை... காத்ரீனாவும் இல்லை... கார்த்திக்கின் காரும் இல்லை...
குழம்பிய ஆய்வாளர் பாலு, துணை பெண் ஆய்வாளரை வரவேற்பில் சென்று விசாரிக்கச் சொன்னார்...
வரவேற்பு மேசைக்கு சென்று வரவேற்பாளரிடம், "இங்கே கார்த்திக்னு யாராவது அட்மிட் ஆயிருக்காங்களா" - என்று கேட்டார்...
"ஆமா! அவருடைய மனைவிகூட இங்கே நின்னுட்டு இருந்தாங்களே... பாருங்க"
"நான் பேஷண்டை பாக்க முடியுமா?"
"பேஷண்ட் ஐ சி யூ வில் இருக்கார்... பார்க்க முடியாது... நீங்க அவங்க மனைவியைப் பாருங்க... பேஷண்ட் பற்றி சொல்லுவாங்க"
தூரத்தில் நின்று ஒற்று மூலம் கேட்டுக் கொண்டிருந்த, ஆய்வாளர் அருகில் வந்து, "டாக்டரைப் பார்க்கணும்" - என்று சொன்னார்...
"எந்த டாக்டர்?"
"கார்த்திக்குனு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆக வெச்சிருக்காங்க"
"ஆமா"
"அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரைப் பார்க்கணும்"
"டாக்டரை இப்பப் பார்க்க முடியாது... வெயிட் பண்ணுங்க... "
"இப்பப் பார்கணும்..."
"என்ன சார் நீங்க... புரிஞ்சுக்காங்க... அவருக்கு ஐ சி யூ வில் டூட்டி. அவர் வெளியே வந்தப் பிறகுதான் பார்க்க முடியும்... போய் வெயிட் பண்ணுங்க... ப்ளீஸ்..."
"இப்பப் பார்த்தாகணுமே?" - என்று தனது அடையாள அட்டையை நீட்டினார்...
அட்டையைப் பார்த்தவுடன் எழுந்து நின்று, உள் அழைப்பினூடே மருத்துவரிடம் பேசினாள் வரவேற்புப் பெண் : "சார், பேஷண்ட் கார்த்திக் சம்பந்தமா உங்ககிட்ட பேச போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்..."
"நான் ஐ சி யூ வில் இருக்கேன்னு சொன்னீங்களா ?"
"சொன்னேன் சார்... உடனே பார்க்கணும்னு சொல்றார்"
"வார்டுக்கு வரச் சொல்லுங்க..."
"சார் நீங்க ஐ சி யூ வார்டுக்கு போங்க... மருத்துவர் இளங்கோவன் டூட்டி டாக்டர்"
ஐ சி யூ வார்டுக்கு வெளிய ஆய்வாளர் பாலுவும், பெண் துணை ஆய்வாளரும் காத்திருக்க, மருத்துவர் இளங்கோவன் முழுமையாக மூடப்பட்ட பச்சை நிற ஆடையுடன் வெளிப்பட்டார்.
"நான் மருத்துவர் இளங்கோவன் " என்று சொல்லிவிட்டு, "எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க?" - என்று கேட்டார்...
"பேங்க் மேனேஜர் கார்த்திக்தானே பேஷண்ட்"
"ஆமா"
"என்னாச்சு?..."
"அவரை கொண்டு வந்தப்ப அவருக்கு சுய நினைவு இல்லை... ட்ரீட்மெண்ட் போயிருக்கு?"
"யார் கொண்டு வந்து சேர்த்தாங்க"
"அவங்க மனைவி... இதெல்லாம் ரிசப்சனில் கேட்டாலே சொல்லுவாங்களே... என்கிட்ட நீங்க வந்திருக்க வேண்டியதில்லை..."
"இந்த கேள்வி உங்க கிட்டத்தான் கேட்கணும்... கார்த்திக்குக்கு வந்திருக்கிறது அட்டாக்கா?..."
"எங்க ரிப்போர்ட் அதைத்தான் சொல்லுது...''
"பாய்சன் கொடுத்தாலும் அட்டாக் வரவாய்ப்பிருக்கா?"
"வாய்ப்பிருக்கு... ஆனா; இது இயற்கையான அடைப்பு... மைல்ட்"
"பாய்சன் கொடுத்து அட்டாக் வரவெச்சிருப்பாங்கன்னு சந்தேகம் படுகிறோம்"
"உங்க சந்தேகத்துக்கு என்கிட்டே ஒரே பதில்!... உங்க சந்தேகம் தப்பு!... பிளட் டெஸ்ட் முதற்கொண்டு பக்கவா செஞ்சிருக்கோம்"
"உங்களுக்கும் சீதாலெட்சுமியை முன்கூட்டியே தெரியுமா?"
"யார் சீதாலெட்சுமி "?
"கார்த்திக்கின் மனைவி பேர் என்ன?"
"ரிசப்சனில் கேளுங்க... உள்ளே பேஷண்ட் உயிருக்கு போராடிட்டு இருக்கார்" - என்று சொல்லிவிட்டு மருத்துவர் இளங்கோவன் உள்ளே .சென்று விட்டார்...
"டூட்டியை தடுத்ததா போலீஸ் மேல் குற்றச்சாட்டு வந்துரும், சார்!... முறையா ஸ்டேசனிலிருந்து சம்மன் அனுப்பி விசாரிச்சிடுவோம்..." - பெண் துணை ஆய்வாளர் சொன்னார்...
"சீதாலெட்சுமி எங்கே? எப்படி தலைமறைவானாள்?"
"ரிசப்சனில் கேட்போம்... வாங்க"
வரவேற்பகம் நோக்கி சென்றார்கள்...
"இந்தப் படத்தில் இருப்பது யார்னு தெரியுமா?" - சீதாலெட்சுமியின் படத்தை அலைப்பேசியில் காட்டி, விசாரித்தார் பெண் துணை ஆய்வாளர்!...
"தெரியும் மேடம்!"
"உங்க சிநேகிதியா?""
"இல்லை... யூ ட்யூப்பில் நிறைய தடவைப் பார்த்திருக்கேன்... இப்ப நீங்க ஒரு பேசண்டை விசாரிச்சு வந்தீங்களே... அவங்க மனைவிதான் இவங்க"
"இவங்க கல்யாணம் எங்கே நடந்தது?"
"எனக்குத் தெரியாதுங்க மேடம்... அட்மிசன் படிவத்தில் அவங்க மனைவினு எழுதி கையெழுத்துப் போட்டிருந்தாங்க..."
"அவங்களை வரச் சொல்ல முடியுமா?"
"மேடம், அவங்க எங்கிருக்காங்கனு எனக்கு எப்படி தெரியும்?"
"ஒரு பேசண்ட் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவங்களுக்கு உதவிட ஒரு உதவியாளராகத்தானே சீதாலெட்சுமி இருந்தாங்க"
"இருந்தாங்க மேடம்... பணம் கட்டினாங்க... மருந்தும் வாங்கித் தந்தாங்க... பேசண்ட்டோட அப்பா வந்தவுடன் அவங்க போயிட்டாங்க... போலிருக்கு"
"அப்பாவா?... எங்கே?" - அவசரமாக கேட்டார் பெண் துணை ஆய்வாளர்...
"அதோ... கருப்பு கோட்டு... அவர்தான்"
வருகையாளர்கள் பகுதியில் கடைசி வரிசையில் நடுத்தர வயதுடைய - கருப்பு கோட்டு அணிந்து பணக்கார தோரணைக் குன்றாமல் - முகத்தில் வாட்டத்தோடு அமர்ந்திருந்தவரிடம் ஆய்வாளர் பாலு சென்றார்... கூடவே பெண் துணை ஆய்வாளரும் சென்றார்...
"சார், நான் பாலு... உங்க பையனுக்கு எப்படி இருக்கு"
"வாங்க... வணக்கம்!...என் மகனுக்கு தெரிஞ்சவங்களா"
"கார்த்திக் எப்படி இருக்கார்?"
"நினைவுத் திரும்பலை"
"அட்டாக்னு கேள்விப் பட்டோம்"
"மருத்துவர் அப்படித்தான் சொன்னார்..."
"கார்த்திக்கை காலையில் சந்திச்சுப் பேசினேன்... நல்லாத்தான் இருந்தாரு..."
"நோய் சொல்லிட்டா வரும்..." - வறட்டுப் புன்னகையினூடே சோகம் கொண்டுப் பேசினார்...
"கார்த்திக்கை மருத்துவமனையில் சேர்த்தது யார்... நீங்களா?"
"இல்லைங்க... என் மருமகள் சேர்த்திருக்காங்க!"
"உங்க மருமகள் கார்த்திக் பக்கத்தில் இருக்காங்களா?"
"பொது வார்டுக்கு மாற்றும் வரை, கூட யாரும் இருக்கக் கூடாதுனு மருத்துவர் சொல்லிட்டாருங்க..."
"ஓ... அதனால் மருமகளை வீட்டுக்கு அனுப்பிட்டு நீங்க மட்டும் இங்கே இருக்கீங்க?"
"நான் அனுப்பலைங்க... மருமகளுக்கு அவசர வேலை இருந்துச்சு... பார்த்துட்டு வந்துட்றேனு எங்கிட்ட சொல்லிட்டுதான் போனாங்க"
"என்ன வேலையா போயிருக்காங்க"
"அதை கேக்கலீங்க... சீக்கிரம் வந்துருவாங்க"
"வருவாங்களா?"
"என்ன கேட்கிறாங்க"
"இல்லை... வரலைனா, இராத்திரி நீங்க தனியா இருப்பீங்க... ஏதாவது அவசர உதவிக்கு நான் கூட இருக்கட்டுமான்னு கேட்டேன்"
"வேண்டாங்க... எதுக்கு சிரமம்?... மருமகள் வந்துருவாங்க"
"வரட்டும்... வரட்டும்... கார்த்திக் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... கல்யாணம் எப்ப நடந்துச்சுங்க"
"கல்யாணம் நடந்திருந்தா உங்க எல்லாருக்கும் அழைப்பு இல்லாமலா நடந்திருக்கும்?... கல்யாணம் நடக்கும் போது, நிச்சயம் கார்த்திக் அழைப்பு கொடுப்பான்!"
"மருமகள் மருமகள்னு சொன்னது?"
"கல்யாணத்திற்கு முன்னாடியே, மருமகளா ஏத்திகிட்டேன்... ஆமா, மருமகளை ஓயாமல் விசாரிக்கிறீங்களே... கார்த்திக் ஒன்னும் சொல்லலியா?"
"சொல்லியிருக்காரே... இவங்கதானே உங்க மருமகள்... யாருங்க?" - என்று பெண் ஆய்வாளர் சீதாலெட்சுமியின் படத்தைக் காட்டினார்...
"ஆமா இவங்கத்தான்!... உங்களுக்குத் தெரியுமா?"
"எங்களைத் தெரியலியா... பாருங்க" - என்று பெண் துணை ஆய்வாளர் தன் அடையாள அட்டையைக் காட்டினார்...
"நாங்க போலீஸ்... கேட்கும் கேள்விக்கு தெளிவாச் சொல்லுங்க"
"எனக்கு ஒன்னும் புரியல... "
"இந்தப் பொண்ணு சீதாலெட்சுமியை எங்கே அனுப்பி வெச்சீங்க?"
"நான் அனுப்பலை... அவங்களாகத்தான் போயிட்டு வரேன்னு போனாங்க..."
"எப்பப் போனாங்க?"
"ஒன்றரை மணி நேரமிருக்கும்"
"போனப்பிறகு போன் வந்ததா?"
"இல்லைங்க"
"என்ன சொல்லிட்டுப் போனாங்க?"
"போன் பண்ணாதீங்கப்பா... வேலை முடிச்சிட்டு நானே போன் பண்றேன்னு சொல்லிட்டு போனாங்க"
"இப்ப போன் போடுங்க... கார்த்திக் வரசொன்னான்னு சொல்லுங்க"
"நான் மாட்டேன்... என் மருமகள்கிட்ட நான் பொய்ப் பேச விரும்பலை"
"மிஸ்டர் ஜென்டில் மேன் ! நான் சொல்றது உங்க மண்டையில் ஏறுதா?... உங்க மருமகள் காவல்துறையின் சந்தேகப்பட்டியலில் இருக்கும் பித்தலாட்டக்காரி... ஏமாற்றுக்காரி... ஏற்கனவே நாலு தற்கொலைகளுக்கும் உடந்தையா இருந்திருக்கா... இப்ப ஐந்தாவது உங்க மகன்... உங்க மகனுக்கு அட்டாக் வரவெச்சு சாவுக்குக் காரணமா இருக்கப் போறதும் சீதாலெட்சுமிதான்!"
"என்னங்க என் மகனை சாகடிக்க சீதாலெட்சுமிக்கு என்ன மோட்டிவ் இருக்கப் போகுது?"
"மோட்டிவ்... மோட்டிவ்... மோட்டிவ்... அதைக் கண்டுப் பிடிக்கத்தான் நாங்க இன்வெஸ்டிகேசன் செஞ்சுட்டு இருக்கோம்" - என்று கத்தினார் பாலு!... அந்த பெரியக் கூடத்தில் இருந்த நோயாளிகளும், பணியாளர்களும், வருகையாளர்களும் கத்தல் வந்த திக்கை திரும்பிப் பார்த்தனர்...
பெண் ஆய்வாளர் : "சார் உணர்ச்சிவசம் படாதீங்க... "
"அவர் உணர்ச்சி வசம் மட்டுமில்லை... உங்க விசாரணையே தப்பு... என் மகனை சாகடிக்கணும்னா காரில் வரும்போதே என் மருமகளால் சாகடிச்சிருக்க முடியாதா... காரில் என் மகனை அம்போன்னு விட்டுட்டு என் மருமகள் இறங்கிப் போயிருக்க முடியும்... அவசரம் அவசரமா மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கணும்னு ஒரு கொலைகாரிக்கு நிர்பந்தம் இல்லையே"
"அப்படி செஞ்சிருந்தா கொலைப் பழிக்கு உள்ளாகணும்... இப்படி செஞ்சா இயற்கை மரணம்"
"எனக்கு உங்கக்கூட, பேச விருப்பம் இல்லை... எதுவா இருந்தாலும் என் மகன் நல்லாகட்டும்... போங்க"
"நல்லாகும்!... நல்லாகும்படியாகவா சீதாலெட்சுமி விட்டுட்டுப் போயிருக்கா... ஆமா; சீதாலெட்சுமி ஓட்டிட்டு வந்த கார் எங்கே?"
"எதுக்குக் கேட்கறீங்க?"
"உள்ளே தடயம் இருக்கானு பார்க்கணும்"
"கார் இல்லை"
"எங்கே?"
"என் மருமகள் எடுத்துட்டுப் போயிருக்காங்க... "
ஆய்வாளர் முகம் சிறுத்து மீண்டும் கோபமாக மாறியது...
"பக்கா பிளான்"
"மக்குத்தனமா இருக்கு உங்க பேச்சு!... என் மகன் கிட்ட இருந்து, மருத்துவமனையில் இருந்து ஒப்படைச்ச, எல்லாப் பொருள்களையும் என்கிட்டே ஒப்படைச்சிட்டுதான் என் மருமகள் போயிருக்காங்க... ஏமாற்றுக்காரியா இருந்திருந்தா மகனோட நகைகள், ஏ டி எம் கார்டு, கடிகாரம்னு தூக்கிட்டுப் போயிருப்பாங்க 'ஏம்மா ஆட்டோவில் போறே?... கார் எடுத்துட்டு போம்மானு நான்தான் காரை கொடுத்து அனுப்பினேன்..."
அனைத்துப் பொருள்களையும் ஒப்படைத்த சீதாலெட்சுமி, தனது கைப்பைக்குள் இருந்த கார்த்திக்கின் அலைப்பேசியை மறந்துவிட்டாள் ஒப்படைக்க!
அந்த மறதிக் குணம் அவளுக்கு எதிரியாய் மாறி அவளை விரட்டும் என்பதனை அவள் அறியாள்...
ஆய்வாளர் பாலு பெண் ஆய்வாளரைப்பின் தொடருமாறு சைகை செய்துவிட்டு மருத்துவமனைக்கு வெளியே வந்தார்...
39 - சீதாலெட்சுமி போகும் பாதைத் தெரிந்தது!
கட்டுப்பாட்டு அறை
முரளிக்கு அழைப்பு .பாலுவிடமிருந்து!...
"சொல்லுடா பாலு"
"அவனோடக் கார் எடுத்துட்டு மருத்துவமனையிலிருந்து சீதாலெட்சுமி போயிட்டா... கார் எங்கே போயிட்டுருக்குனு பார்..."
"பார்க்கறேன்"
"சீக்கிரம்..."
"அவசரத்துக்கு பிறந்தவண்டா நீ... டேய் சிக்னல் இல்லைடா... ம்... இரு... விட்டு விட்டு கிடைக்குது... டேய், போன் காரில் இல்லைடா... ஒரு ஆட்டோவில் போயிட்டுருக்கு... நெற்குன்றம் ஏரியா..."
"ஆட்டோ நம்பர்..."
" வாட்சப்பில் அனுப்பறேன் பாரு"
"கார் என்னடா செஞ்சிருப்பா"
"காரை நிறுத்திட்டு ஆட்டோ பிடிச்சுப் போயிருப்பாடா... இது ஒரு கேள்வி... இதுக்கு ஒரு ஆபிசர்..."
"டேய் கண்ட்ரோல் ரூமிலிருந்து எல்லா ஸ்டேசனுக்கும் தகவல் அனுப்புடா.... கார் எங்கே இருக்குனு தெரிஞ்சாகணும்..."
"நான் பார்துக்குறேன்... ஆட்டோ கேளம்பாக்கம் செங்கல்பட்டு ரோட்டில் போயிட்டுருக்கு... அதுக்கு மேல் பாரஸ்ட் ஏரியா... சிக்னல் வீக்கா இருக்கு... சீக்கிரம் கிளம்புடா..."
ஒரு காவலரை மருத்துவ மனையில் இருந்து கண்காணிக்கச் சொல்லி விட்டு, மீதிக் காவலர்களுடன் ஆய்வாளர் பாலுவின் குழு ஓ எம் ஆர் சாலையில் விரைந்து செங்கல்பட்டுசாலையில் திரும்பியது.....
40 - நமக்காக நாம்தான் சாகடிக்கணும்...
இருளின் இனிய வரவுக்கு வரவேற்ப்பு கூறும் விதமாக, மாலைப் பொழுது மங்கிக் கொண்டிருந்தது...
பின்னால் வந்துக் கொண்டிருக்கும் ஆபத்தை உணராமல் ஆட்டோவில் காட்டுப் பாதைக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்கள்...
"பாதை ரொம்பக் கரடு முரடா மோசமா இருக்கு... இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?" - ஆட்டோ ஓட்டுநர் கேட்டார்...
"அண்ணா, இன்னும் கொஞ்ச தூரம்தான்... மெதுவா ஒட்டுங்கண்ணா" - காத்ரீனா கேட்டுக் கொண்டாள்...
ஓட்டுநர் மிகவும் சமாளித்து ஓட்டினார்... வண்டி குலுக்கலில் சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் ஒருவர் மீது ஒருவர் இடிபட நேர்ந்தது... குலுக்கல் வேதனையாக இருந்தாலும், இருவரும் சிரித்துக் கொண்டார்கள்...
அப்போது அலைப்பேசி அழைப்பு ஒலித்தது... தங்களிடம் அலைப்பேசியின் அழைப்பை இருவரும் எதிர்ப் பாராத ஒன்று!... அதனால் "அண்ணா, உங்க போன் ரிங் ஆகுதுப் போலிருக்கு " - என்றாள் காத்ரீனா!...
"என் போன் இல்லைம்மா... " - என்று தன் அலைப்பேசியை பார்த்து விட்டு சொன்னார் ஓட்டுநர்...
அலைப்பேசியின் அழைப்போசை தனது கைப்பை வழியாகத்தான் என்று உணர சில வினாடிகள் ஆயிற்று!... உணர்ந்துக் கொண்ட, சீதாலெட்சுமி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்... அது கார்த்திக்கின் அலைப்பேசி!
வேகமாக முடிவெடுத்து, அழைப்பேசியின் ஓசையை நிரந்தரமாக மூடினாள்...
"அண்ணா வண்டியை நிறுத்துங்க..." - சீதாலெட்சுமி
"வண்டி அதிகமா குலுங்குது... இடுப்பு வலிக்குது... உட்கார முடியல... இந்தாங்க காசு" - இரண்டாயிரம் தாள் எடுத்து நீட்டினாள் சீதாலெட்சுமி...
"சில்லறை இல்லையே"
"வேண்டாங்கண்ணா... நீங்களே வெச்சுக்குங்க... எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க... " - காத்ரீனா!
ஆட்டோ ஓட்டுநர், இரண்டாயிரம் ரூபாய் தாளை கண்களில் ஒற்றி, புன்னைகையோடு புறப்பட்டான்...
வண்டித் திரும்பும் வரையில் வேறு பாதையில் நடந்தவர்கள், வண்டி பார்வையிலிருந்து மறைந்தவுடன், காட்டுக்குள் குறுக்குச் சாலையில் வேகமாக நடந்தார்கள்....
"ஏண்டி எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்தியேடி ..."
"ஆமாடி, எல்லாத்தையும் எடுத்து கார்த்திக்கோட அப்பாகிட்ட கொடுத்துட்டேன்... இந்த போன் மட்டும் பைக்குள்ளே இருந்துருக்கு... ம்... நானும் கவனிக்கலை... என்னோட கவனமின்மை போலீசுக்கு சாதகமா போச்சுடி... கார்த்திக்கின் போன் நம்மகிட்ட இருக்குனு நம்மளை ட்ரேஸ் பண்ணிட்டு பின்னாடியே வந்துட்டு இருக்காங்க போலிருக்கு... "
"யார் கூப்பிட்டது"
"கண்ட்ரோல் ரூம்"
"அப்போ, போலீஸ் வந்துருமாடி..."
"ஆட்டோவுக்கு பின்னாடி அலையப் போகுது போலீஸ்!"
"என்னடி செஞ்சே?"
"ஆட்டோவுக்குள்ளே சொருகிட்டேண்டி... போலீஸ் நம்மைத் தேடி வந்தாலும், ஆட்டோவுக்குப் பின்னாடி அலைய வேண்டியதுதான்" - சீதாலெட்சுமி
"அலையட்டும்... அதுக்குள்ளே நம்ம வேலையை முடிச்சிரலாம்..."
"ஆனாலும், கார்த்திக் என்ன ஆனான்னு தெரியலையேடி..."
"நாம போய் சேருவதற்குள் தகவல் கிடைச்சிரும் வாடி... சீதாலெட்சுமி, கார்த்திக் ரொம்ப நல்லவண்டி... உனக்கும் அவனுக்கும் பொருத்தம் நல்லா இருந்தது"
"அப்படிப் பார்த்த நம்மளைக் காதலிச்ச அய்ந்து பேருமே நல்லவங்கதாண்டி... அதுக்கெல்லாம் இரக்கம் காட்டினால், நம்ம கடமையை யார் செய்வாங்க... நமக்காக நாம்தான் சாகடிக்கணும்... சும்மாப் புலம்பாதே; பார்த்து நடடி... பாம்புகள் இருக்கப் போகுது"
"ஏண்டி, மனிதன் துடித்துடிச்சு சாகும் போது கூட பயம் வர்ரதில்லை... பாம்புனா பயம் வருதே..."
"ஏய்... ஏய்... பாம்புடி" - என்று சொல்லிக் கொண்டே, காத்ரீனாவை தன்பக்கம் இழுத்தாள்... காத்ரீனா வீலென அலறி சீதாலெட்சுமியின் மீது சாய, இருவருமே புதருக்குள் விழுந்து புரண்டார்கள்...
"சி எழுந்துருடி... பயந்தாங்கொள்ளி " - என்று சொல்லி சீதாலெட்சுமி சிரித்தாள்...
"போடி... பயந்துட்டேன் தெரியுமா" - காத்ரீனாவும் சிரித்தாள்...
நேரவிருக்கும் ஆபத்துக் குறித்து இருவருமே அறியாமல் சிரித்து மகிழ்ந்து காட்டுக்குள் நடந்தார்கள்...
நீரூற்றுகள் நிறைந்த - மலர்வனத்தின் நடுவே மிகப்பெரியப் பெரிய பண்ணை வீடு அவர்களுக்காகக் காத்திருந்தது... கருங்கண்ணாடிகளால் வட்டவடிவமாக - அய்ந்து மாடி - உயரத்திற்கு பரந்து - விரிந்து - காணப்பட்டது...
அடர்ந்த மரங்களுக்கைடையில் - நடுவே இருந்ததால், வீடு வெளிப் பார்வைக்குத் தெரியாது இருந்தது...
41 - இரவில் சோதனைச் சாவடி
காவல் ஊர்தி கேளம்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில் அலசிக் கொண்டிருந்தது...
இருள் கவ்வி விட்ட நிலையிலும், சிறிய சோதனைச்சாவடி போல நின்று எதிர்ப் பாடும் ஆட்டோக்களை நிறுத்தி சோதித்தார் ஆய்வாளர் பாலு!
தன்னிடமிருந்த ஆட்டோவின் எண்களைக் காட்டி விசாரித்தார்...
"சார், நேரம் வீணாகிட்டு இருக்கு"
"சப் இன்ஸ்பெக்டர் மேடம், வீட்டுக்காரர் நினைப்பு வந்துருச்சோ"
பெண் துணை ஆய்வாளர் எரிச்சல் உற்றாலும், வெளிப்படுத்தாமல் "ஆட்டோவோட எண் தெரியும்... ஆர் டி ஓ வில் விசாரிச்சா முகவரி கிடைக்குமே" - என்றார்...
'தனக்கும் அது தெரியும்... தனக்கும் அறிவிருக்கு' என்பது போல் பெண் ஆய்வாளர் மீது பார்வையை தூவி விட்டு, அலைப்பேசியை எடுத்தார்...
"டேய் முரளி நீ சொன்ன இடத்தில் இருந்து எந்த ஆட்டோவும் திரும்பி வரலையேடா"
"ரெண்டாவது போன் செஞ்சு கேக்கமாட்டியாடா... ஆட்டோ போரூர் நோக்கி போய் ரெண்டு மணி நேரமாச்சு... உன் போனுக்கு ஓய்வே இருக்காதடா... எப்பவுமே பொண்டாட்டிகள்கிட்டேயே பேசிட்டு இருக்கியே... நான் ஒன்னை வெச்சு சமாளிக்க முடியல... மூனு வெச்சுட்டு எப்பிடிடா?"
"இது ரொம்ப முக்கியம் பாரு... சும்மா இருடா... எரிச்சல் கிளப்பாதே... டேய் அந்த ஆட்டோவை ஆர் டி வில் விசாரிச்சு சொல்லுடா..."
"சொல்றேண்டா"
42 - மண் தரையில் மயங்கிய ஈருடல்கள்...
சூளைமேடு, ஒவையார் தெருவில் சந்து.
இரவு பதினோரு மணி!
ஆட்டோ ஓட்டுநர் கூரை வீட்டின் கதவைத் தட்டும் முன்னதாகவே, கதவைத் திறந்தாள் கண்மணி...
"வாங்க" - ஆசையோடு அழைத்தாள் ...
உள்ளே நுழைந்ததும், ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம், "கொஞ்சம் தாமதம் ஆயிருச்சு... என்னால் தூக்கம் கெடுத்து தூங்காமல் இருக்கியே கண்மணி!" - என்று பேசிக்கொண்டே சட்டைப் பையிலிருந்துத் தாள்களை எடுத்து மனைவி கண்மணியிடம் கொடுத்துவிட்டு, சட்டையைக் கழற்றிக் கயிற்றில் போட்டான்...
இரண்டாயிரம் தாள்களையும், அதனோடு சில தாள்களையும் எண்ணி, "இரண்டாயிரத்து நானூற்று அய்ம்பது இருக்குங்க... மாமா!" - என்றாள்... குழந்தைத்தனமாக இரண்டாயிரம் ரூபாய் தாளை, திருப்பித் திருப்பி பார்த்து தடவினாள்...
"நான் இரண்டாயிரம் ரூபாய்யைப் பார்த்ததே இல்லைங்க"
உண்மைதான்!... இதுவரைக்கும் பார்க்கவில்லை... இரண்டாண்டுகளுக்கு முன் இருவரும் ஓடிவந்து விட்டார்கள்; காதலர்களாக!...
தாலி கட்டுதல் என்ற சடங்கு எதுவும் இன்றி, கணவன் மனைவியாக வாழத் துவங்கி விட்டார்கள்...
"கண்மணி, நான் தினமும் நூறோ இருநூறோ கொண்டு வருவேன்... சிலநாளில் பத்து, இருபதுனு கூட தந்திருக்கேன்... இன்றைக்கு உன் முகம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... இந்த மகிழ்ச்சி உன் முகத்தில் தினமும் பார்க்க விரும்பறேன்... ஆனால்; முடியாதே கண்மணி"
"மாணிக்கம் இப்படிப் பேசாதீங்க... நமக்கும் காலம் வரும்... நாமும் நல்லா இருப்போம்... " - என்று ,சொல்லி அவனை அரவணைத்து முத்தம் தந்தாள்...
"மூனு மாதம் வாடகை பாக்கியைத் தந்துரு... ஒரே துணிதான் உனக்கு இருக்கு... நாளைக்கு போய் ரெண்டு நைட்டி எடுத்துக்கோ... "
"உங்களுக்கும் ஒரு சட்டை" - என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்து, முதுகில் கோடு வரைந்து நின்றாள் நெருக்கமாக!
அவனும், அவளை இறுக்கமாய் அணைத்தான்...
கையில் இருந்த பணத்தாள்களை கூரையில் சொருகிவிட்டு, அவன் மீது அவள் சாய்ந்தாள்...
மண் தரையில் ஈருடல்களும் மயங்கின...
43 - காவல்துறை எனில் மிருகமோ ?
வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு - இரவு பதினொன்று... ஆள் நடமாட்டம் ஏறக்குறைய குறைந்து விட்டது...
கைலி மட்டும் கட்டிக் கொண்டு, செல்வரத்தினம் வீட்டு வாசல் தெருவில் - காற்றோட்டமாக - நின்றிருந்தான்...
வாசல் தெருவில் ஏழெட்டு ஆட்டோக்கள் நிறுத்தப் பட்டிருந்தன...
ஆட்டோக்கள் அருகில் காவல்துறை வாகனம் வந்து நின்றதைப் பார்த்தான்...
ஆய்வாளர் பாலு வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார்... பெண் துணை ஆய்வாளரும் காவலர்களும் இறங்கி நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளை நோட்டமிட்டனர்... அனைவரும் சாதாரண உடையில் இருந்தனர்...
"சார் இந்த வண்டிதான் சார்" - பெண் ஆய்வாளர் சுட்டிக் காட்டிய வண்டியை காவலர்களும் பார்த்தனர்...
அவர்கள் அருகில் சென்ற செல்வரத்தினம் "சார் ஆட்டோ..." என்று வாய் திறப்பதற்குள் வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர், "செல்வரத்தினம் யாருய்யா" - என்று கேட்டார்...
"நான்தானுங்க சார்"
"ஓ தயாரா நிக்கறியே... வா வண்டியில் ஏறு"... மயிர்க் கொத்தோடு தூக்கி செல்வரத்தினத்தை வாகனத்தில் ஏற்றினர்...
"சார், எதுக்கு சார் வண்டியில் ஏத்தறீங்க"
"உட்காருடா... உட்காருடா..." - என்று சொல்லி செல்வரத்தினத்தின் முதுகில் ஓங்கி நாலு குத்து குத்தினார்...
வலித் தாங்காமல் கத்திய கத்தல் கேட்டு, வீட்டிற்குள்ளிருந்து மனைவியும், குழந்தைகளும் ஓடி வந்து, "சார் எதுக்கு என் வீட்டுக்காரரை அடிக்கிறீங்க... முதலில் கீழே இறக்கி விடுங்க"
"முதலில் அந்த ஆட்டோவோட சாவி எடுத்துட்டு வா"
"முடியாது சார்... முதலில் என் வீட்டுக்காரரை இறக்குங்க... " என்று சொல்லி, கணவனை வெளியே பிடித்து இழுத்தார்...
"மேடம், இந்தம்மாவையும் பிடிச்சு உள்ளேத் தூக்கி போடுங்க..."
பெண் துணை ஆய்வாளர் வந்து, "ஏம்மா, நகருங்க... ஒரு விசாரணைக்கு கூட்டிட்டுப் போறோம்... விசாரணை முடிஞ்சவுடனே நாங்களே கொண்டு வந்து விட்டுருவோம்... நகருங்க " - என்று சொல்லி நகர்த்தினார்...
"முடியாது... எதுவா இருந்தாலும் இங்கேயே விசாரிங்க... " என்று சொல்லி கணவனைப் பிடித்து மீண்டும் வெளியே இழுத்தார்...
உள்ளே இருந்த இரு காவலர்கள் செல்வரத்தினத்தின் கைகளை பின்பக்கமாக கட்டி, நகர விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்...
குழந்தைகள் 'அப்பா அப்பா' என்று கதறினார்கள்...
அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு, மெல்ல, மெல்லக் கூடினார்கள்...
கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் முன்வந்து, ஆய்வாளர் பாலுவிடம் "எதுக்கு சார் அவரை வண்டியில் ஏத்தியிருக்கீங்க?" - என்று கேட்டனர்...
"ம்... பொழுது போகலை.... ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் கேரம் விளையாடப் போறோம்... நீயும் வரியா?... பேசாமல் எல்லாரும் போயிருங்க... விசாரணைக்கு இடையூறு செஞ்சதா எல்லாரையும் உள்ளே தள்ளிருவேன்" - ஆய்வாளர்.
"சார் மிரட்டாதீங்க... பக்கத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தா நாலு பேர் தட்டிக் கேட்கதான் செய்வாங்க... "
"ஓ... போலீசையே தட்டிக் கேட்பியோ" - என்று கை ஓங்கினார்... அதற்குள், பெண் ஆய்வாளர் குறுக்கே வந்து இளைஞர்களிடம், " அந்த ஆட்டோவில் இரண்டு குற்றவாளிகள் பயணம் செஞ்சிருக்காங்க... குற்றவாளிகள் எங்கே ஏறினாங்க? எங்கே இறக்கி விட்டார்னு விசாரிச்சிட்டு நாங்களே கொண்டு வந்து விட்டுருவோம்" - என்றார் அமைதியாக!
அதற்கு அந்த இளைஞர் , "அதுக்கு இவரை எதுக்கு அழைச்சிட்டுப் போறீங்க... இந்த வண்டியை யார் ஓட்டுனாங்களோ அந்த டிரைவரை விசாரிங்க..." - என்றார்...
"இவர்?"
"இங்கே நிற்கிற ஆட்டோக்களுக்கு முதலாளி!... ஆட்டோக்களை டிரைவர்களுக்கு வாடகைக்கு விடுவார்..." என்று சொன்ன இளைஞர், செல்வரத்தினத்தைப் பார்த்து "அண்ணே, இந்த வண்டியை இன்றைக்கு யாருங்கண்ணே ஓட்டுனாங்க " - என்று கேட்டார்...
"சூளைமேடு மாணிக்கம்" - செல்வரத்தினம்...
"எதுவுமே விசாரிக்காதீங்க... மிருகங்கள் மாதிரி நடந்துக்குறீங்க... போலீஸ்னா மிருகம்னு பேர் இருக்கா? ' - இளைஞர்.
"செல்வரத்தினம் சார், மாணிக்கம் வீடு காட்ட முடியுமா?" - என்று பெண் துணை ஆய்வாளர் கேட்டார்...
"அண்ணே நீங்க போகாதீங்க... பரமு, நீ போய் காட்டிட்டு வா... இந்த என் வண்டியை எடுத்துக்க " - என்று மற்றோர் இளைஞரிடம் சாவி கொடுத்தார் அந்த இளைஞர்...
"கான்ஸ்டபிள், ஆட்டோவை எடுத்துட்டு ஸ்டேசனுக்கு கொண்டு போ"
"சரிங்க சார்"
நடந்த எல்லாவற்றையும் சிலர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்...
இருசக்கர வண்டி வழிகாட்ட, காவல் வாகனம் தொடர்ந்தது...
44 - ஒற்றைச் சட்டை
மாணிக்கம் உணவருந்திக் கொண்டிருந்தான்... அவன் அணிந்து வந்திருந்த, சட்டையையும், தான் அணிந்திருந்த இரவு உடையையும் நீரில் அலசிப் பிழிந்து வீட்டுக்குள்ளேயே கொடியில் காய வைத்துக் கொண்டிருந்தாள், கண்மணி...
முதல் நாள் துவைத்து, மறுநாள் காலையில் அணிந்துக் கொள்வார்கள்; மாற்றுத் துணி இன்மையால்!...
உள்பாவாடையும், கிழிந்திருந்த தனது பழைய மேலுடையையும் அணிந்திருந்தாள் கண்மணி!...
துணிகளை உலர்த்தி விட்டு, உணவருந்திக் கொண்டிருந்த கணவனுக்கு அருகில் அமர்ந்து, அவனுக்கு சோறு பரிமாறினாள்...
"எனக்குப் போதும் கண்மணி, நீ சாப்பிடு " - என்று ஒரு வாய் ஊட்டி விட்டான் கண்மணிக்கு!
அப்போது, கதவு தட்டப் படவே, "வீட்டுக்காரம்மாவா இருக்கும்... நீ சாப்பிடு; கண்மணி, நான் போய்ப் பார்க்கிறேன் " - என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்தான்...
கதவுத் திறக்கப்பட்டதும், சாதாரண உடையில் பெண் துணை ஆய்வாளர் நுழைந்தார்...
கண்மணி நின்று தன் மார்பகத்தை தன்னிரு கைகளாலும் மூடிக் கொண்டு திரும்பி நின்றுக் கொண்டாள்...
"நீ உட்கார்ந்து சாப்பிடும்மா" - பெண் துணை ஆய்வாளர்.
"அக்கா, நீங்க..." - என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் மாணிக்கம்!
"உன் பேரென்ன?"
"மாணிக்கம்"
அப்போது ஆய்வாளர் பாலுவும் உள்ளே நுழைந்தார்... அவருடைய பார்வையை உள்பாவாடையோடு திரும்பி நின்றிருந்த கண்மணியின் பின்னழகு ஈர்த்தது...
அதைக் கவனித்து விட்ட, பெண் ஆய்வாளர், தான் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து, கண்மணியின் மீது போர்த்தி விட்டாள்...
"முல்லைக்குத் தேர் கொடுத்த மாதிரி நீ, கிள்ளைக்கு சால் கொடுக்கிறே" - ஆய்வாளர் பாலு பெண் துணை ஆய்வாளரிடம் கேட்டுவிட்டு, மாணிக்கதைப் பார்த்து "என்னடா செஞ்சுட்டு இருக்கே?" - என்று கேட்டார்...
"சாப்பிட்டுட்டு இருந்தேன்... நீங்க?"
"அவ யாருடா?"
"என் மனைவிங்க... நீங்க"
"மனவினு சொல்றே?... தாலி இல்லையே..." - என்று சொல்லிக் கொண்டே, கண்மணியின் அருகே நெருங்கி மேலும் கீழும் பார்த்தார்...
ஆய்வாளரின் பாலியல் பார்வையைப் புரிந்த பெண் ஆய்வாளர், "சார், அங்கே பாருங்க" - என்று ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார்...
ஆய்வாளர் பாலு பார்த்தார்... 'தந்தை பெரியார்' படம் தொங்கிக் கொண்டிருந்தது...
"இவங்களுக்கு தாலி முக்கியமில்லை... வாழ்க்கைமுறைதான் முக்கியம்"
"சரி... சரி... பையனைத் தூக்கி வண்டியில் ஏத்துங்க" - என்று சொல்லி, மாணிக்கத்தின் தலை முடியை கொத்தாகப் பிடித்து இழுத்தார்...
"என் மாமாவை விடுங்க" என்று ஓடிவந்து மாணிக்கத்தை கட்டிப் பிடித்து நின்றாள்...
"இத பாரும்மா... உங்க மாமாவை ஒன்னும் செய்யமாட்டோம்... சின்ன விசாரணையை முடிச்சிட்டு அனுப்பி வெச்சிருவோம்.... மாமா போட்டுக்குறதுக்கு சட்டை எடுத்து குடும்மா" - என்று ஆறுதலுடன் கூறி, கண்மணியை அழைத்தாள்...
"நீங்க யார்... எதுக்கு மாமாவை கூட்டிட்டுப் போறீங்க... நானும் வாரேன்" என்று சொல்லி கொடியில் தொங்கிக்கொண்டிருந்த ஈரச்சட்டையை எடுத்து வந்து போட்டு விட்டாள்...
"என்னம்மா, சட்டையிலிருந்து ஈரம் சொட்டுது"
"அக்கா, இருக்கறது ஒரே ஒரு சட்டைக்கா... இராத்திரி துவைச்சுப் போட்டு காலையில் போட்டுக்குவார்..."
பெண் துணை ஆய்வாளர் முகம் வாடியது...
மாணிக்கத்தை முதுகில் குத்து விட்டு இழுத்துச் சென்றார் ஆய்வாளர்...
"அக்கக்கா... அவரை அடிக்கிறாங்கக்கா..." - என்று கதறிக் கொண்டே ஓடியவளை நிறுத்தி, "அடிக்காம நான் பார்த்துக்குறேன்... நீ அழாதே..." என்று கண்மணியை ஆறுதல் படுத்தி விட்டு ஒரு காவலரை அழைத்தார் பெண் துணை ஆய்வாளர்....
காவலரை அழைத்து, "வேடியப்பன் நீங்க இங்கே இருந்து பாத்துக்காங்க... அதோ பாருங்க கோவில் இருக்குது... அங்கிருந்து வீட்டைப் பார்த்துக்குங்க... பொண்ணு ஊருக்கு புதுசுப் போலிருக்கு... உங்க பொண்ணு மாதிரி " -என்றார்...
"சரிங்க மேடம்... அய்யா கேட்டார்னா"
"அய்யாகிட்ட சொல்லிக்கிறேன்... நீ உள்ளே போம்மா..." - என்று சொல்லி, தேம்பிக் கொண்டிருந்த கண்மணியை உள்ளே அனுப்பி விட்டு, புறப்பட்டுக் கொண்டிருந்த காவல் வாகனம் நோக்கி விரைந்தார் பெண் துணை ஆய்வாளர்...
45 - தொலைக்காட்சி செய்தி
மறுநாள் காலை!
காவல்நிலையத்தின் வாயிலில் ஆய்வாளர் பாலு செய்தியார்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்...
தொலைக்காட்சிகள் நேரலைச் செய்துக் கொண்டிருந்தன...
'சீதாலெட்சுமி மற்றும் காத்ரீனா எனப்படும் இருவரும் இணைந்து யூ ட்யூப் எனப்படும் சமூக வலைத்தளத்தில் தனியாக சேனல் நடத்தி வருகிறார்கள்...
'இவர்களின் சேனல் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலும் அதிகளவில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது... இந்நிலையில் சென்னையில் அடுத்தடுத்து நடந்த நான்கு தற்கொலைகளுக்கும் இந்த சானலுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியில் காவல்துறை விசாரணை நடத்தி வந்தது... இதனை அறிந்த சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது... இவர்களை வலைவிரித்து தேடும் பணி நடந்துவருகிறது என்றும், இதற்காக தனிக்குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும் ஆய்வாளர் பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...'
46 - காலடித் தடம் சிக்கியது
காவல் வாகனம் செங்கற்பட்டு சாலையில், நிறுத்தப்பட்டு அதிலிருந்து இறங்கிய காவலர்கள் மாணிக்கத்தை கீழே இறங்கச் சொன்னார்கள்... ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் இறங்கினார்கள்... அனைவருமே சாதாரண உடை அணிந்திருந்தார்கள்...
மாணிக்கம் வழித்தடத்தை காட்டி முன்னால் நடந்துச்சென்றான்... "இந்த வழியாகத்தான் ஆட்டோ ஒட்டி வந்தேன்..."
"இந்த செங்குத்து மேட்டில் ஆட்டோ ஓட்டி வந்தியா?" - ஆய்வாளர் பாலு நக்கலாக சிரித்தார்!
"ஆமாங்க சார்" - மாணிக்கம்.
"இலேசா கல் சறுக்கி விட்டால்கூட வண்டி தலைக் குப்புற உருண்டுரும்... இந்த பாதையில் எருமையால் கூட ஏற முடியாது... இவன் ஆட்டோ ஓட்டுனேனு கதையளக்கறான்..."
"மெதுவா ஓட்டினேன் சார் "
"பார்றா... சொன்னதையே சொல்றான்... டேய், பொண்டாட்டி உனக்காகக் காத்திருக்கா... அவ வேணும்னா உண்மையை சொல்லு.... இல்லைனா சுட்டு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்..." -ஆய்வாளர் பாலு அடிக்க கை ஓங்கினார்...
"உண்மையா இந்தவழிதான் சார்"
"ஏய்யா நீயும் ஓட்டுனர்தானே... இந்த வழியில் வண்டி ஒட்டுவே?"
"இல்லைங்க அய்யா என்னால் முடியாது " - என்றார் காவல் வாகன ஓட்டுநர்....
"உண்மையைச் சொல்லுடா... அவளுகளை எந்த ரூட்டில் கூட்டிட்டு போனே... அடிப்பட்டு சாகாதே"
"இந்த வழிதான் சார்"
"மனைவி அவ்வளவு அழகா இருக்காய்யா... அழகை பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கு... இவனென்னடானா, மனைவியை கண்டவன் தூக்கிட்டுப் போனாலும் நான் பொய்தான் பேசுவேன்றான்... ஏண்டா மனைவி வேண்டாமா? லட்டு மாதிரி இருக்காளே"
"இந்த வழிதான் சார்" - ஆட்டோ ஓட்டுனருக்கு கண்ணீர்க் கசிந்தது...
"எங்கிருந்துடா தூக்கிட்டு வந்தே?... தக்காளிப்பழம் போல"
"கான்ஸ்டபிள், அதோ ஆட்டோவை நிறுத்துங்க" - பெண் ஆய்வாளர் காட்டிய ஆட்டோ தொலைவில் வந்துக் கொண்டிருந்தது...
ஆட்டோ நெருங்கியதும் அதனை நிறுத்தி, ஆட்டோ ஓட்டுனரை இறங்கச் சொல்லிவிட்டு, "மாணிக்கம், இந்த வழியில் ஓட்டிக் காட்டு" - என்றார் பெண் துணை ஆய்வாளர்.
மாணிக்கம் மிக நுண்மையாக கையாண்டான்... ஓரிடத்தில் வண்டி சாய்வதுப் போல் தெரிந்தது... சமாளித்து கரடு முரடு மேட்டுப் பாதையில் ஓட்டி, ஒரு வேப்பமரத்தின் அருகே நிறுத்தினான்...
"இதுவரைக்கும் ஓட்டிவந்தேன் சார்" - மாணிக்கம்.
'இதுக்கு மேல் ஓட்டமுடியலையா?" - என்று கேட்டு ஆய்வாளர் தன் மீசையைத் தடவிக் கொண்டார்...
"அவங்க இங்கேயே இறங்கிக்கிறேன் னு சொன்னாங்க"
"இது வரைக்கும்தான் ஒட்டி வந்தேன்றியே... என்ன அடையாளம்?"
"வளைஞ்சு நிற்கிற வேப்பமரம்"
பெண் ஆய்வாளர் தரையை கூர்மையாக ஆய்ந்து, "ஆமாங்க சார்... வேப்பமரத்து கிட்ட வண்டி சக்கரம் தடம் பதிஞ்சிருக்கு..."
"இங்கே இறக்கி விட்டே; சரி... அவங்க இந்தக் காட்டுக்குள் எந்த வழியா போனாங்க?"
"நான் கவனிக்கலைங்க சார்... வண்டியை இப்படியே திருப்பிட்டுப் போயிட்டேன்"
"ஏண்டா எத்தனை மணிக்கு இங்கே இறக்கி விட்டே"
"ஆறு ஆறரை இருக்கும் சார்"
"டேய் பொய்ப் பேசாதே!... பொளந்துருவேன்"
"உண்மைதான் சார்"
"நேற்று ஒன்பதரை மணிவரைக்கும் உன்னோட ஆட்டோவில் அவங்க சுத்தியிருக்காங்க... ஒன்பதரை மணிக்கு போன் சிக்னல் கட்டாகுது... அதுவரைக்கும் எங்கெங்கே போனீங்க; சொல்லு..."
"தெரியாதுங்க சார்... இங்கேயே இறங்கிட்டாங்க"
"சார் இங்கே வாங்க..." - பெண் துணை ஆய்வாளர் ஓரிடத்தில் உற்று நோக்கி நின்று ஆய்வாளரை அழைத்தார்...
"பெண்கள் அணியும் செருப்புத் தடம் பதிஞ்சிருக்கு..."
செருப்புத் தடம், ஓரிடத்தில் தொடங்கி, சுமார் இரண்டாயிரம் அடி வரைக்கும் சென்று முடிகிறது.... மீண்டும் அந்த இடத்திலிருந்து நானுறு அடிக்கு அதே பாதையில் திரும்பி நடந்து வந்து, எதிர்ப்புறத்தில் உள்ள மிக குறுகலான புதர் வழியாக செருப்புத் தடம் திரும்புகிறது...
ஆய்வாளர் பாலு தரையை ஓங்கி மிதித்தார்... புழுதிகிளம்ப! "இந்தக் காட்டுக்குள் அவளுகளுக்கு என்ன வேலை?... நாலு பக்கமும் நல்லா தேடுங்கய்யா" - ஆய்வாளர் உத்தரவிட காவலர்கள் காட்டுக்குள் ஆளுக்கொரு வழியில் தேடிக் கிளம்பினார்கள்...
ஆவேசமாக, ஆய்வாளர் பாலு செருப்புத்தடம் பின்பற்றிதொடர்ந்தார்...
"மாணிக்கம் ஆட்டோவில் வீட்டுக்கு போ... நான் கூப்பிடும்போது ஸ்டேசனுக்கு வரவேண்டியிருக்கும்! ஆட்டோக்காரரே, இவரை இவங்க வீட்டில் இறக்கி விட்டுருங்க... இந்தாங்க பணம் "
மாணிக்கத்தை ஏற்றிக்கொண்டு ஆட்டோ மெதுவாக அகன்றவுடன், பெண் துணை ஆய்வாளர், ஆய்வாளர் பாலுவோடு தேடும் பணியில் கலந்துக் கொண்டார்...
காடு அடர்வாக இருந்தமையாலும், காட்டில் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், காட்டில் முகாமிட்டுத் தேடவேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டுத் தகவல் அனுப்பினார் காவல்துறை ஆணையாளருக்கு! மேலும் கூடுதல் படையுடன், ஒட்டுக் கேட்கக் கூடிய சில நுண் கருவிகளையும் அனுப்பிட ஆணையாளரைக் கேட்டுக் கொண்டார்...
47 - மேலும் ஒரு தடயம்
பகல் தேடுதல் பலனற்றுப் போனதால், முகாமிட்டுக் கண்காணித்தனர்... நள்ளிரவுக்கு மேல் சிலரின் நடமாட்டம் தொலைநோக்கியில் தெரிந்தது...
நடமாட்டம் உள்ள திசை கண்டறியப்பட்டுவிட்டதால், அனைவரையும் ஓய்வெடுக்கச் சொன்னார் ஆய்வாளர் பாலு!
விடிந்தப் பிறகு, விறகு பொறுக்கிகளாகவும், விறகு வெட்டிகளாகவும், மரங்களைக் கணக்கெடுக்கும் பணியாளர்களாகவும் குழுக்கள் பிரிக்கப்பட்டு தேடுதல் மீண்டும் தொடங்கியது...
விறகு சுமக்கும் பெண்ணாக பெண் துணை ஆய்வாளரும், விறகு பொறுக்கும் ஆளாக ஆய்வாளரும் மாறினார்... அடர்ந்தக் காடு! உயரமான மரங்களுக்கிடையில் புதர்கள் ஆங்காங்கே மண்டியிருந்தன... மேடும் பள்ளமும் இருந்தன... மறுபள்ளத்தில் இருப்பவரைப் பார்க்கவியலாது... சில பள்ளங்கள் சரிவாக இருந்தமையால், ஆய்வாளர் பாலு தொப்பையோடு நடக்க சிரமப்பட்டு உட்கார்வதற்கு இடம் தேடினார்...
"ஏம்மா குடிக்க தண்ணி குடும்மா" - என்று கேட்டு நீர் பருக, பெரும்புதர் அருகே இருந்த பாறை மீது அமர்ந்தார்...
அப்போது அழைப்போசை வரவே, '' இந்தாம்மா, என்னனு கேளும்மா " - என்று அலைப்பேசியை விறகு சுமந்து நின்ற பெண் துணை ஆய்வாளரிடம் கொடுத்தார்...
விறகு சுமையை இறக்கி வைத்து விட்டு, "அலோ" - என்றார் பெண் துணை ஆய்வாளர்...
"மேடம் நான் பாண்டி பேசறேன்"
"சொல்லுங்க பாண்டி "
கார்த்திக் போன் கிடைச்சிருச்சுங்க மேடம்"
"சீதாலெட்சுமி எடுத்துட்டு போன போன் தானே"
"ஆமாங்க மேடம்... ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்துட்டு போனதா கார்த்திக் சொன்னான் மேடம்"
"போன் கொண்டு வந்து கொடுத்த பையன் யார்? அவன்கிட்ட போன் கொடுத்து அனுப்பினது யார்னு உடனே கண்டு பிடிக்க எஸ் ஐ கிட்ட சொல்லுங்க" - என்று சொல்லிவிட்டு அலைப்பேசியை ஆய்வாளரிடம் கொடுத்துவிட்டு. "சார் என்னமோ எடுத்தீங்க போலிருக்கு" - என்று பெண் துணை ஆய்வாளர் கேட்டார்...
"இல்லையே..." என்று மழுப்பினர்...
"நான் பார்த்தேனே... நீங்க ஒளிச்சு வச்சதையும் பார்த்தேனே"
"ஏம்மா நான் உனக்கு சீனியர்... என்னையே..."
"எடுங்க சார் நான் பார்க்க வேண்டாமா?"
கைலி மடிப்புக்குள் ஒளித்து வைத்ததை வெளியே எடுத்தார்...
"கைக்கடிகாரம் நல்லா இருந்துச்சு... என் மனைவி கைக்கு நல்லா இருக்குமில்லே..."
"ஆமா... நல்லாயிருக்கும்... இன்னும் ஓடிட்டு இருக்குங்க சார்... எந்த அக்கவுக்குத் தரப் போறீங்க.... சின்ன அக்காவுக்கா? பெரிய அக்காவுக்கா? " - என்று சொல்லிவிட்டு அவரிடம் கொடுத்தார்...
அதனை வாங்க ஆய்வாளர் பாலு கை நீட்டினார்... ஆனால்; பாலுவிடம் அதனைக் கொடுக்காமல், "சார்..." - என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடிகாரத்தை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு, தனது அலைப்பேசியைத் திறந்து ஒப்பிட்டுப் பார்த்தார் பெண் ஆய்வாளர்...
"சார் பாருங்க..." - என்று அலைப்பேசியை பாலுவிடம் காட்டி, அதிலுள்ள சீதாலெட்சுமியின் படத்தைக் காட்டி, "இது சீதாலெட்சுமி கட்டியிருந்த கடிகாரம்... சீதாலெட்சுமி இந்த பக்கம்தான் போயிருக்கணும்... கையிலிருந்து நழுவிய கடிகாரத்தை அவள் கவனிக்கலை போலிருக்கு" -என்றார் பெண் துணை ஆய்வாளர்...
"ஆமா... " என்ற பாலுவின் குரலில் வியப்பு வெளிப்பட்டது... மேலும், "உனக்கு போலீஸ் மூளைம்மா" - என்று புகழ்ந்தார்...
"நீங்களும் போலீஸ்தான் சார்"
"ஆனால்; நான் சீனியர்... நீ சின்சியர்... எப்படியாவது இந்த கேசில் நா வெற்றி பெறணும்... அப்பதான் எனக்கு பதவி உயர்வு... எல்லாம் உங்க மூளையில் இருக்கு, மேடம்"
"சரி... சரி... பாருங்க... செருப்புத்தடம் தெரியுது.... இதைப் பின்தொடர்வோம் வாங்க"
48 - திசை மாறுமா வழக்கு?
நினைவுத் திரும்பியப் பிறகு கார்த்திக் தனியறைக்கு மாற்றப் பட்டிருந்தான்... அவன் பருகிட அவனது தந்தையார் பழச்சாறு கொடுத்தார்...
தொலைக்காட்சியில்-
'தலைமறைவாக இருக்கும் சீதாலெட்சுமி மற்றும் அவரது தோழி காத்ரீனாவை தேடும் பணி முடுக்கிவிட்டு இருப்பதாக, இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் காண்டீபன் தெரிவித்தார்...
செங்கல்பட்டு அருகே அடர்ந்த வனப்பகுதியில் சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் கூடுதலாக அங்கு போலீஸ் படை குவிக்கப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேடுதல் வேட்டையின்போது சில பொருட்கள் கண்டெடுத்திருப்பதாகவும், அந்தப் பொருட்கள் தீவிரவாதிகளால் பயன்படுத்தப் படும் பொருட்கள் எனவும், தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டில் உள்ள அமைப்புகளோடு எளிதில் பேசக்கூடிய கருவிகள் அவைகள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்...
தீவிரவாதிகளோடு சீதாலெட்சுமிக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்...
செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் தந்தையிடம், 'என்னப்பா இது... சீதாலெட்சுமி மேல் அபாண்டம் சுமத்தறாங்கப்பா" - என்றார் வேதனையுடன்...
"கார்த்திக், உடல்நலம் சரியில்லாதப்ப, நீ வேதனையான செய்திகள் கேட்கக்கூடாது" - என்று சொல்லி மாத்திரையும் தண்ணீரும் தந்தார்...
"அந்த இன்ஸ்பெக்டருக்கும், சீதாலெட்சுமிக்கும் ஆகாது... அதை மனதில் வெச்சிட்டு பழி வாங்கறாருப்பா... சீதாலெட்சுமி, தான் உண்டு தன் வேலையுண்டுனு இருப்பாங்கப்பா... எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் என்னை மருத்துமனையில் சேர்த்துவிட்டதுக்கு சீதாலெட்சுமிக்கு ஏற்பட்ட சோதனையைப் பாருங்கப்பா"
"கார்த்திக், எனக்கென்னமோ, சீதாலெட்சுமியை அந்த இன்ஸ்பெக்டர் கடத்தி வெச்சிட்டு, நாடகம் ஆடுகிற மாதிரி தோணுது...அந்தாளோட முகம் சரியில்லை கார்த்திக்... நான் வக்கீலை கலந்து பேசறேம்ப்பா"
49 - இளமகள் தேடா பொழுதும்...
தேடுதல் வேட்டையில் இருந்த ஆய்வாளர் பாலுவுக்கு, மற்றோர் குழுவிடமிருந்து தகவல் வந்ததது...
"சார் இங்கே ஒரு பங்களா தெரியுது... பெண்கள் நடமாட்டம் இருக்கு"
உடனே, ஆய்வாளர் பெண் துணை ஆய்வாளரோடு தகவல் தந்த குழுவினர் இருந்த இடத்திற்குப் போனார்கள்...
அவர்கள் காட்டிய பங்களா தொலைவில் இருந்தது... தொலைநோக்கியில் பார்த்தார் ஆய்வாளர் பாலு... பெண் துணை ஆய்வாளரும் தொலைநோக்கியில் பார்த்து, "சார், பெண்கள் உள்ளே போறாங்க... வெளியிலும் பெண்கள் நடமாட்டம் தெரியுது... அவங்கக் கட்டியிருக்கிற சேலை, அம்மன் கோவிலுக்கு போகும்போது பெண்கள் உடுத்தும் சேலை மாதிரித் தெரியுது..." - என்றார்...
"சார் இங்கிருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்..."
"உடனே அட்டாக் பண்ணிடலாமா"
"சார், நானும் இன்னொரு லேடி கான்ஸ்டபிளும் அங்கே போறோம்... கோயிலா இல்லையானு தெரிஞ்சிட்டு வரோம்..."
"ஓகே மேடம்"
"சார் என்னை மேடம்னு சொல்லாதீங்க... என் பேர் மலர்!... மலர்னே கூப்பிடுங்க... சுமதி நீ என்கூட வா"
மலரும், சுமதியும் சென்றார்கள்... நீண்ட நேரம் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை... தகவலுக்காகக் காத்திருந்தனர்...
முக்கால் மணி நேரங்கழித்து, "சார்... கேட்குதா?" - என்று மலரின் கேட்டது...
"சொல்லுங்க மலர்" - ஆய்வாளர் பாலு!
"சார் நான் எதுவும் சொல்லலை... நல்லா உன்னிப்பா கேளுங்க... கேட்குதா..."
ஆய்வாளர் செவியைக் கூர்மையாக்கி மடுத்தார்...
'தேடும் பொழுதும் - இளமகள்
தேடா பொழுதும்
கூவும் பொழுதும் - இளவரசி
கூவாதப் பொழுதும்'
"மலர் என்னம்மா இது?"
"உன்னிப்பா கேளுங்க சார்"
"கேட்கறேன்..."
ஆய்வாளர் மேலும் உன்னிப்பாக செவியுண்டார்...
'அடங்கிப் போ அன்னமவளிடம்
அணைத்துக் கொள் ஆளப்பிறந்தவளை
மண்டியிடு நாளும் நீ!...
மண்ணாளப் பிறந்தவளாடா
உன்னையும் ஆளவே!...'
"நான் இங்கிலீஸ் மீடியம் மலர்... எனக்கு புரியல"
'ஓங்காரமிடு
ஓலமிடு
காதகனெனில் -நீ
காணாதாவாயடா '
"ஏம்மா... ஏம்மா... மலர், இதை எங்கோக் கேட்ட மாதிரி இருக்கே" - பாலு
"ம்... சீதாலெட்சுமி உங்களை மிரட்டி எழுதி வெச்சத் துண்டுச் சீட்டு" - மலர்
"அவளோடக் குரல் மாதிரி இருக்கு..."
"யார் குரலா இருந்தாலும், நமக்கு தெளிவாயிருச்சு... சீதாலெட்சுமிக்கும் இந்த சாமியார் மடத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்குனு!... சார், மடம் பெரிசா இருக்கு... மதில்சுவர் பத்தடி உயரம் இருக்கும் போலிருக்கு..."
"நான் என்ன செய்யணும், மலர்!"
"நானும் சுமதியும் பக்தைகள் மாதிரி உள்ளே நுழையப் போறோம்... "
'"அடுத்தடுத்து தகவல் அனுப்புங்க மலர்... நாங்க அட்டக் செய்ய வசதியாயிருக்கும்..."
"சார், நானும் சுமதியும் உள்ளே நுழைஞ்சப் பிறகு பின்னாடியே லேடி கான்ஸ்டபிள் சிலரை பக்தைகள் மாதிரி அனுப்பி வைங்க..."
"வாசலில் கெடுபிடி இருக்கா?"
"அப்படி பெரிசா இல்லை... சுமார் மூனு மைல் நீளத்துக்கு மதில் சுவரில் ஒற்றை ஆள் நுழையும் அளவுக்குத்தான் வழியிருக்கு..."
"மலர் வெற்றியுடன் வருக"
"இந்த மடத்தின் முதன்மை நுழைவாயில் கேளம்பாக்கம் வழியில் இருக்கும் போலிருக்கு... நீங்க பெண் காவலர்களை முதன்மை வழியில் வரச்சொல்லுங்க... ரெண்டுபக்கமும் நீங்க ஆயத்தமா இருங்க..."
50 - இளைஞர்களின் மனவோட்டம்
தேநீர் கடை வாசலில் இளைஞர்கள் , வலைத்தளத்தில் சீதாலெட்சுமி பற்றிய, செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...
'ஏற்கனவே நான்கு இளைஞர்களை சீதாலெட்சுமியும் அவரது தோழியும் காதலித்த விபரம் நமக்குக் கிடைத்துள்ளது...'
நால்வரின் புகைப்படங்கள் பின்னணியில் காட்டப் பட்டது...
'இவர்களால் காதலிக்கப்பட்ட நான்கு பேரும் தற்கொலைச் செய்துள்ள விபரம் இப்போது பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவரையும் சீதாலெட்சுமி காதலித்து வந்துள்ளார்...'
கார்த்திக்கின் படம் பின்புலத்தில் காட்டப்பட்டது...
'கார்த்திக்கிடம் சீதாலெட்சுமி பற்றிய விபரத்தை முன்கூட்டியே ஆய்வாளர் பாலு கூறியிருந்த தகவலும் இப்போது நமக்குக் கிடைத்துள்ளது...
ஆய்வாளரின் படம் பின்புலத்தில் காட்டப்பட்டது...
சம்பவம் நடந்த நாளன்று, கிடைத்தத் தகவலையடுத்து ஆய்வாளர் பாலு சீதாலெட்சுமியை கண்காணித்துப் பின் தொடந்துள்ளார்...
ஆய்வாளர் தொடர்வதை அறிந்த சீதாலெட்சுமி, மேலாளர் கார்த்திக்கை குற்றுயிருடன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் தலைமறைவாகி விட்டது இப்போது பலராலும் பேசுப் படும் பொருளாகி விட்டது...
இதில் முக்கியத் தகவல் என்னெவென்றால், மருத்துவமனையில் தன்னை கார்த்திக்கின் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார்...'
சீதாலெட்சுமியால் நிரப்பட்ட படிவம் காட்டப்பட்டது...
'யாரிந்த சீதாலெட்சுமி? யாரிந்த காத்ரீனா? சீதாலெட்சுமியும் காத்ரீனாவும் மாடல் அழகிகளைப் போல் இருப்பதால் இளைஞர்கள் எளிதில் சிக்கி ஏமாந்துவிடுகிறார்கள் என்றும் இன்னும் இவர்களிடம் சிக்கி ஏமாந்த இளைஞர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், போலீஸ் தரப்பு கூறுகிறது...
'இளைஞர்களைக் காதலித்து, பிறகு அவர்களுடைய மரணத்திற்குக் காரணமாக இருந்துள்ளார்கள்... நல்வாய்ப்பாக மேலாளர் கார்த்திக் இவர்களின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்து விட்டார்... இந்நிலையில் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் கார்த்திக்கை ஓர் இளைஞர் சந்தித்தத தகவலும் கசிந்திருக்கிறது... சீதாலெட்சுமியால் களவாடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட அலைப்பேசியை மீண்டும் கார்த்திக்கிடம் கொண்டு வந்து கொடுத்துச் சென்றுள்ளார்... அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது...
நகரில் இளைஞர்கள்:
"பிகருக்குப் பின்னாடி அலையாதீங்கடா"
"இவரு பெரிய மன்மதர்... ஏண்டா உன்னையெல்லாம் எந்தப் பிகரும் காதலிக்க மாட்டா... அப்படியே உன்னைக் காதலிச்சாலும், அவ உன்னைக் கொல்ல மாட்டா... அவளே தூக்கு மாட்டிக்கிடுவா... தைரியமா இரு"
"உங்க கண்ணுக்கு எதிரில், ஒருத்தியை காதிலிச்சுக் காட்றேண்டா"
"அப்ப மச்சிக்கு சங்குதான்"
51 - தாயின் மலரடியாள்
மலரும், சுமதியும் நெடுந்தொலைவு நடந்து வந்து, பண்ணைவீட்டின் மதிற்சுவற்றின் ஒற்றை நுழைவு வாயிலை அடைந்தார்கள்...
சில நூறு ஏக்கர், பரப்பளவில் விரிந்திருந்த பண்ணை வீட்டின் நேர்த்தி, நெருங்க நெருங்க அவர்களை வியப்பில் ஆழ்த்தியது...
'தேடுமுன்னே ஓடிவா - அவள்
தேகமேயினி உனதுக் கூடு
ஓங்காரமிடு
ஓலமிடு
காதகனெனில் - நீ
காணாதாவாயடா '
நல் தெளிவோடு, பெண்ணின் குரல் ஒலி இனிமையான சுதியில் மிதந்து வந்தது...
"அதென்னங்க மலர், காணாது போயிருவேன்னு சொல்லிட்டிருக்காங்க" - காட்டுக்குள் இருந்து பாலு!
"உங்களைப் பார்த்திருப்பாங்க போலிருக்கு... உங்களைத் தொலைச்சிருவேன்னு சொல்றாங்கப் போலிருக்கு "
"அய்யோ என் பதவியுயர்வு?"
"சார் நுழைவாயில் அடைஞ்சிட்டோம்... "
"சரி: கவனம்!"
சிறிய நுழைவாயிலை நெருங்கும்போது, காவலுக்கு நின்றிருந்த பெண்களில் ஒருத்தி, "தாயின் மகள்களே, ரெண்டு பேரும் இங்கே வாங்க..." - என்று அழைத்தாள்...
மலரும், சுமதியும் அழைத்தப் பெண்ணிடம் சென்றனர்...
"தாயைப் பார்க்க வந்தீங்களா, மகள்களே ?"
'இல்லை' 'ஆம்' என்பதுபோல் தலையசைத்தார்கள்...
"காட்டுக்குள் வராதீங்க தாயின் மகள்களே!... காட்டு நாய் நிறைய இருக்கே... கடிச்சுக் குதறிடுமே தாயின் மகள்களே... தாயைப் பார்க்க வந்ததால் நாய், நரிகள் உங்களை ஒன்னும் செய்யலே... இனிமேல், கேளம்பாக்கம் வழியா வாங்க... பூமித்தாய் கோயில் னு கேட்டா எல்லாரும் வழிகாட்டுவாங்க"
"நாங்க பூமித்தாய் கோவிலுக்குத்தான் வழிகேட்டோம்... அங்கிருந்தவங்க, காட்டுக்குள் போனு சொல்லிட்டாங்க...."
"கேளம்பாக்கம் காட்டுவழியை சொல்லியிருப்பாங்க தாயின் மகள்களே..."
இவர்கள் பேசிக்கொண்டிருப்பது, ஆய்வாளர் செவிக்கும் அடைந்தது...
"தாயைப் பார்க்கணுமா... பூசை தொடங்கிருச்சு... நாளைக்கு வந்தீங்கனா ஆரம்பத்திலிருந்து பூசை முடியறவரைக்கும் இருந்து தாயைப் பார்த்துட்டு போகலாம்; தாயின் மகள்களே!"
"தாயை இப்பவே பார்க்கணும்னு ஆசையா இருக்குங்க"
"வாங்க தாயின் மகள்களே... உங்களை தாயன்போடு அரவணைப்பதுதானே தாயின் பாக்கியம்... வாங்க தாயின் மகள்களே" - என்று அன்போடு அழைத்துச் சென்றாள் பணிப்பெண்; மலரையும் சுமதியையும்!...
ஓர் ஒற்றையடி பாதையில் - பூஞ்செடிகள் மணம் சூழ - இதமாகத் தென்றல் வருட , ஆங்காங்கே மிகப்பெரிய கூண்டுக்குள் சிங்கம், புலி, மான் உலாவ - அக்காட்சி வண்டலூர் உயிரியல் பூங்கா போல் இருந்ததை உணர்ந்தவாறு நடந்தார்கள்...
"தாயின் மகள்களே, உள்ளே போங்க" - என்று சொன்னப் போது மலரும், சுமதியும் விழித்தார்கள்...
வழி ஏதும் தெரியாத போது எதனுள் நுழைவது என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் போதே சுவர் இரண்டாக பிளவுப் படுவது போல் ஓரடி திறந்து வழி விட்டது...
இருட்டாக இருந்தது...
"உள்ளே போங்க... தாயின் மகள்களே..."
"இருட்டாக இருக்கு"
"அஞ்சாதீங்க... என் போல் தாயின் மலரடிகள் உங்களை அழைச்சிட்டு போவாங்க..." என்றுச்சொல்லி அவர்களை உள்ளே திணித்தாள் தாயின் மலரடியாள்...
உள்ளே நுழைந்த மலருக்கும், சுமதிக்கும் அதிர்ச்சித் தரும் தகவல் தரப்பட்டன...
52 - தாயே போற்றி
"சார், கூகுள் பார்த்துட்டுதானே இருக்கீங்க...?"
"ஆமாங்க மலர், மலர் நீங்க நுழைஞ்சு இடம் சேவ் ஆயிருக்கு..."
மெலிதான வெளிச்சத்தில் இரு இளம்பெண்கள் வந்தனர்... வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்... ஒட்டுத் துணியின்றி பதுமை போல் வந்து நின்று, " தாயின் மகள்களே, நீராட வாங்க..." - என்று சொல்லி கையைப் பிடித்து அழைத்தார்கள்...
.இனிமையான வாடை நாசியில் இழைய, ஒரு புதிய உலகிற்குள் நுழைவது போல் பின் சென்றார்கள்...
மெலிதான ஒளி இழையோடிக்கொண்டிருந்த அப்பெரிய அரங்கத்தின் மையப்பகுதியில் - நீச்சல் அரங்கு ..
அதில் சில பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர் ஆடையேதுமின்றி
''என்ன இப்படி குளிக்கிறாங்க... ஆண்கள் பார்க்க மாட்டார்களா?"
"தாயின் எதிரில் அமர தாயின் மகள்களுக்கு மட்டுமே அனுமதி... தாயின் மகன்களுக்கு ஒருபோதும் தாயின் ஒப்புதல் இல்லை... வெளியே பெரியக் கூடத்தில் அமர்ந்து அம்மாவின் உரையை காதில் கேட்கலாம்... அதுவே தாயின் பாக்கியம்"
தாயின் மலரடிகள் ஆடைகளை களையச் சொன்னார்கள்...
மலருக்கும், சுமதிக்கும் அதிர்ச்சியாக இருந்தது... சில பெண்கள் ஆடைக்களைக் களைந்து நீர் அரங்கினுள் நுழைவதை கண்ணுற்றனர்...
மலரும், சுமதியும் நீராடி விட்டு வந்தப் போது இவர்களின் ஆடைகளோ உடைமைகளோ ஏதும் அங்கிருக்கவில்லை...
நீர் சொட்டச் சொட்ட நின்ற மலரிடமும், சுமதியிடமும் நகைப் பெட்டி நீட்டப் பட்டது...
"நகைகளை சூடிக் கொள்ளுங்கள்... தாயின் மகள்கள், தாயிடம் போகலாம்..."
சிலைக்கு அணிவிக்கப்படும் நகைகள் தரப்பட்டன... தலைக்கு மகுடம்; வளைகாப்பு; கழுத்துக்கு ஆரம்; இடுப்புக்கு ஒட்டியாணம் சூடிக்கொண்டு, காலுக்கு கொலுசு மாட்டிக் கொண்டனர்... பிறகு, தாயின் மலரடியாள் அவர்களை அழைத்துச் சென்றாள்...
பெரியதோர் அரங்கம் - அரங்கத்தினுள் வட்ட வடிவில் நிர்வாணக் கோலத்தில் இளம்பெண்கள் அகல் விளக்கு ஏந்தி நின்றனர்... அகல் விளக்கின் சிறு வெளிச்சம் கூட அரங்கத்தின் பிரமாண்ட கும்மிருட்டை நிர்வாணம் படுத்தியது...
மஞ்சள் கொண்டு மேடை அமைக்கப்பட்டு, அதன் மீது குவிக்கப்பட்ட குங்குமம் பூக்கள் குவியல் மீது, முகமலர்ச்சியுடன் ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்; முழு நிர்வாண நிலையில்!... வயது இருபத்தைந்து இருக்கலாம்... அவளை சுற்றிலும் நகைகள் அணிவிக்கப் பட்டிருந்த நிர்வாணப் பெண்கள் நின்று 'தாயே போற்றி... தாயே போற்றி' என்று துதிப்பாடியும், 'தாயே' 'தாயே' என்றும் ஆடியும் இருந்தார்கள்...
இருபத்தேழு இளம்பெண்கள் நிர்வாண நிலையில் செந்தூரம் பூக்களை தாயின் மீது தூவிக்கொண்டிருந்தனர்...
சிலபெண்கள் நிர்வாண நிலையில் ஓடி ஓடிஅரங்கினுள் வேண்டியப் பணிகளை செய்துக் கொண்டிருந்தனர்...
முற்றிலும் பெண்கள் மயம்... பெண்கள் யாவரும் நிர்வாணக்கோலம்... அவர்களினூடே, மலரையும், சுமதியையும் அமர்த்தினாள் தாயின் மலரடியாள் வாழையிலை விரிப்பின் மீது!
'தாயே போற்றி' என்ற துதிகளுக்கிடையில், மலர் கட்டை விரலில் ஒட்டியிருந்த சிறு மின்தகடு மூலம் ஆய்வாளரோடு பேசினார்...
"சார், இது ஒரு நிர்வாண மடம்..."
"சீதாலெட்சுமி இருக்காளா"
"பெண்கள் நிறைய இருக்காங்க"
"சீதாலெட்சுமி இருக்காளா?"
"எல்லாரும் ஆடையில்லாமல் இருக்காங்க... அதனால் சீதாலெட்சுமியை அடையாளம் காண சிரமமா இருக்கு"
"ஆடையில்லாமல்னா"
"நிர்வாணம்"
"மலர் நீங்க?"
"சார், நான் உங்க மகள் வயசு..."
"மலர்... மலர்... உங்களுக்கு இப்படி ஒரு டூட்டி"
"இது என் கடமை"
"மலர் நீங்க சொன்னமாதிரி பதினைந்து பெண் காவலர்களை அனுப்பிட்டேன்"
தாய் உரையாற்றிக் கொண்டிருந்தாள் : "....................................போகிறது... வானத்திற்கும் பூமிக்கும் நானே தாய்... என் மடியில் சூரியன் உறங்க வருகிறான்... பசியை என்னிடம் தணித்துக் கொள்கிறான்... தாயின் மகள்களே உங்கள் பசிக்கும் நானே தாய்... என்னைத் தொடுங்கள்... உங்கள் துன்பம் தொலையட்டும்..."
ஆடிக்கொண்டிருந்த தாயின்மகள்களினூடே பூமித்தாய் நடந்து வந்தாள்... தாயின் மகள்கள் தொட்டு வணங்கினார்கள்...
"என்னை முத்தமிடுங்கள்... உங்களை முத்தமிட உங்கள் வயிற்றில் குழந்தையாய் நானே பிறப்பேன்..."
குழந்தைப் பேறில்லாத தாயின்மகள்கள் பூமித்தாயை, வரிசையில் நின்று, முத்தமிட்டனர்... அந்த வரிசையில் நின்று முத்தமிட மலரும், சுமதியும் காத்திருந்தனர்...
அப்போது உள்ளே நுழைந்த சில தாயின்மகள்களை அடையாளம் தெரிந்துக் கொண்டாள் மலர்! அவர்கள் ஆய்வாளர் பாலுவால் அனுப்பப்பட்ட பெண் காவலர்கள்!...
பாதுகாப்புப் பணியில் பூமித்தாய்க்கு பின்னால் நின்றிருந்த தாயின்மலரடிகளை, பூமித்தாய்க்கு முத்தமிடும் போது மலர் கண்காணித்தாள் சீதாலெட்சுமி தென்படுகிறாளா என்று...
அங்கு நிலவிய மெலிதான வெளிச்சம் கண்களுக்குப் பழக்கமாகி விட்டதால், சீதாலெட்சுமியைத் தேடுவதற்கு இலகுவாக இருந்தது...
பெண்களை நோக்கி செந்தூரம் பூக்களை வீசினாள்... தாயின் கரத்தால் வீசப்பட்ட மலர்களை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டனர்... 'தாயே போற்றி' 'தாயே போற்றி' எனும் துதிப்பாடல் ஓங்காரம் ஆகி, குதியாட்டம் வேகம் பிடித்தது...
தாயும் மேடையேறி தலைவிரிக் கோலத்துடன் ஆடிக் கொண்டே செந்தூரம் மலர்களைத் தூவினாள் தாயின்மகள்கள் மீது பூமித்தாய்!...
ஒரு தாயின் மலரடியாள் பேசினாள்: "தாயின் மகள்கள்களுக்கு ஓர் அறிவுப்பு! இன்றைய உச்சிக்கால மலர்த் தூவல் நிறைவு பெறுகிறது... நாளைய முழுநிலவு விளக்கேற்றுதல் வழக்கம் போல் அதிகாலை ஒரு மணிக்கு ஆரம்பமாகும்... நாளைய முழுநிலவு விளக்கேற்றுதல் நிகழ்ச்சியில் பங்குக் கொள்ள விரும்பும் தாயின் மகள்கள் இல்லத்தில் தங்க விரும்பினால் தங்கிக் கொள்ளலாம்... வீட்டுக்குச் செல்ல விரும்பும் தாயின்மகள்கள், வீட்டுக்குச்சென்று நாளை விளக்கேற்றுதல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்பினால் நாளையும் வரலாம்... இன்று, இல்லத்தில் தங்கும் தாயின் மகள்கள் தாயின் மடியில் உறங்கலாம்... அனைவரும் இப்போது விருந்து மண்டபம் அழைக்கப் படுகிறார்கள்..."
மூன்றாவது தளத்தில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது... ஆடையற்றக்கோலத்துடன்! மேடை மீது அமர்ந்து விருந்தோம்பலை பார்த்துக் கொண்டிருந்தத் தாய்க்கு விருந்து ஊட்டிக் கொண்டிருந்தார்கள் தாயின் மலரடிகள் இருவர்...
மூன்று வகையான உணவுகள் இருந்தன... வேக வைக்காத உணவுகள்... வடைப் பாயாசத்துடன் சைவ உணவுகள்... விதவிதமான இறைச்சி உணவுகள்...
இறைச்சி உணவுகளை ஆசையுடன் பார்த்து, தயக்கத்துடன் நின்றார்கள் மலர் உட்பட பெண் காவலர்கள்...
தாய் அருகில் வந்து, மலரை உச்சி முகர்ந்து "தாயின் மகளே, உண்ணும் உணவால் எவரும் பேதம் படுத்தப்படுவதில்லை... உள்ளதால் தூய்மை கொண்டேரே, தாய்க்கு நிகராவர்... உண்... தாயின் மகளே!... உள்ளம் விரும்புவதை உண்... உடல் கொள்வதை உட்கொள்!... இறைச்சி உணவை உண்ணும் தாயின் மகள்களும், இறைச்சியற்ற உணவை உண்ணும் தாயின்மகள்களும் என் மகள்களே!..." - சொல்லி ஆட்டிறைச்சியின் ஈரல் துண்டுதனை மலருக்கு ஊட்டிவிட்டாள்...
"உண்!... தாயின் மகளே!... தாயின் குழந்தைகள் கருவிலிருந்து வெளிவந்தவுடன், உண்பது என்னா?... அறிவாயா?... தாயின் உடல் நரமாமிசத்தால் ஆனதுதானே தாயின் மகளே!... பிறந்தவுடன் நரமாமிசத்தின் சாறுதனை பாலெனப் பருகியக் குழந்தை, பின்னாளில் சைவக் குழந்தையென அடையாளம் படுத்தும் நரமனிதர்கள் அயோக்கியர்கள் என்பதை மனதில் கொள் தாயின் மகளே!"
மீண்டும் மலரிடம், "தாயின் மகளே, நீ விரைவில் குழந்தைக்கு தாயாவாய்... கலங்காதிரு" - என்றுச் சொல்லி மலரின் வயிற்றில் முத்தமிட்டுச் சென்றாள், தாய்!...
தாய் அகன்றவுடன் தாயின் மலரடிகள் மலரை சூழ்ந்து நின்று, "தாயின்மகளே, தாயின் அருளுக்காக தாயின்மகள்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்... பூமித்தாயே உன்னைத் தேடி வந்து, அருள் முத்தம் தந்து சென்றிருக்கிறார்கள்... வாழ்துகள்" - என்றார்கள்... எல்லாமே அகல் ஒளியில் நிகழ்ந்தேறின...
மாலை நான்கு மணிக்கே, குளிருணரப்படாத இதமான சூழல் நிரம்பிய சிறு அகல் ஒளிப் படர்ந்திருந்த 'துயில் அரங்கினுள்' அனுப்பப்பட்டனர்...
ஒவ்வொருவரும் தாயின் மடியில் ஒருநிமிடம் படுக்க வைத்து, பின்னர் வாழையிலை விரிப்பில் வைக்கப்பட்டனர்...
மலர் ஆய்வாளர் பாலுவிடம் பேசினாள் : 'சார், இன்றைக்கு இரவு..." -என்று சொல்லி முடிப்பதற்குள், ஆய்வாளர், "சீதாலெட்சுமியைப் பார்த்தீங்களா" - என்று கேட்டார்...
மலர் குழம்பினாள்... 'சீதாலெட்சுமிக்கும், இந்த நிர்வாண மடத்திற்கும் தொடர்பு இல்லையோ... நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோமோ?'
இரவு எட்டுமணி... தாயின்மகள்களும், சில தாயின்மலரடியாள்களும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள்...
ஏனெனில் இரவு பதினொரு மணிக்கே எழுந்தால்தான், நீராடிவிட்டு, முழுநிலவு விளக்கேற்றுதல் பணியில் ஈடுப்படமுடியும்...
மலர் எழுந்தாள்... மேலும் நான்கு பெண் காவலர்களுக்கும் ஓசையின்றிக் கட்டளைப் பிறப்பித்தாள்; சீதாலெட்சுமியைக் கண்டு பிடிக்க!
உறங்கிக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் முகம் மெல்லிய அகல் ஒளியில் அடையாளம் காணப்பட்டது...
சீதாலெட்சுமி இல்லை... துயில் கொண்டிருந்த பூமித்தாயும் இல்லை...
ஆளுக்கொரு தளம் - அரவமின்றி - மிகு எச்சரிக்கையுணர்வோடு - தேடல் செய்தார்கள்...
மூன்றாவதுத் தளம் விருந்தினர் அரங்கு வெறிச்சோடியிருந்தது... ஆனால், மேற்கு அறையில் சற்று கூடுதலான ஒளியும், புகை மூட்டமும் தெரிந்ததால்- மலர் அந்த அறையை எட்டிப் பார்த்தாள்...
உற்று - உன்னித்த - மலர் அதிர்வடைந்தாள்...
இருபத்தேழு தாயின் மலரடிகள் அகல்விளக்கு ஏந்தி நின்றனர்... அது கண்டு மலர் அதிரவில்லை...
பூமித்தாய்க்கு தாயின்மலரடிகள் துணை புரிந்துக் கொண்டிருந்தனர்... அதுகண்டும் மலர் அதிரவில்லை...
உள்ளிருந்தவர்களில் சீதாலெட்சுமி இல்லை என்பதும் அதிர்ச்சித் தரக் கூடியதாக மலருக்கு இருக்கவில்லை...
அப்பெரிய அறையின் சுவர்களில் மனித மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் தொங்கிக் கொண்டிருந்தன... அவைக் கண்டும் மலர் அதிரவில்லை...
பூசையில் ஈடுப்பட்டிருந்த பூமித்தாயின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மனித எலும்புகள் கண்டோ, மனித மண்டை ஓடுகள் கண்டோ மலர் வியப்புக் கொள்ளவில்லை...
பூமித்தாய்க்கு எதிரில் ஆளுயர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன... அவற்றிக்கு இடையே மையமாக நான்கு ஆளுயர படங்கள் இருந்தன... அந்நான்கு படங்கள் கண்டு மலருக்குள் அய்யம் பெருகியது ஏனெனில்; அந்நான்கு படங்களுமே சீதாலெட்சுமியோடு தொடர்பில் இருந்து, தற்கொலை செய்துக் கொண்டவர்களின் படங்கள்...
மலரும் மற்றவர்களும் அடித்தளம் வந்தனர்... மலர், ஆய்வாளர் பாலுவுக்கு தகவல் அனுப்பிவிட்டு, ஏதுமறியாதவர் போல் துயிலரங்கில் படுத்தனர்...
முழுநிலவு விளக்கேற்றுதல் நிகழ்வு அதிகாலை ஒருமணிக்கு தொடங்கிய நேரத்தில், பெண் காவல் படையினர், ஒரு பெண் ஆய்வாளரின் தலைமையில் அதிரடியாக பூமித்தாயின் இல்லத்திற்குள் நுழைந்து, பூமித்தாயை கைது செய்தனர்...
53 - தூக்கில் போடு
தொலைக்காட்சிகளின் செய்தி ஒளிப்பரப்பை தமிழ்நாடெங்கும் வீடுதோறும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...
'நான்கு பேர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சீதாலெட்சுமி மற்றும் அவரது தோழி காத்ரீனா ஆகியோர் காட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் செங்கல்பட்டு அருகே இரண்டு நாட்களாக முகாமிட்டு தேடிவந்தனர்.
'தேடிவந்த நிலையில், காட்டுக்குள் - மறைவிடத்தில் - ஒரு பங்களா போலீசாரால் கண்டுப் பிடிக்கப்பட்டது...
'காவல்துறையினர் பங்களாவை கண்காணித்தபோது பல இளம்பெண்களின் நடமாட்டம் கண்டறியப் பட்டது...
'இதனை அறிந்துக் கொண்ட காவல்துறையினர் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்தபோது, காவல்துறையினர் அதிரிச்சியடையும்படியான காட்சிகளைக் கண்டதாக காவல்துறை வட்டாரங்களில் கிடைத்ததகவல்கள் கூறுகின்றன...
"அதாவது; வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு போதைப் பொருட்களை உட் கொண்டு இளம்பெண்கள் நிர்வாணமாக - ஆபாச நடனம் - ஆடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்...
"பங்களாவை சோதனையிட்ட காவல்துறையினர் , சென்னையில் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட நான்கு இளைஞர்களின் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்...
"இதுகுறித்து மேலதிகத் தகவல்களை நமது செய்தியாளர் வளர்மதி அவர்களிடம் கேட்போம்... ம்... வளர்மதி, காட்டு பங்களாவுக்குள் நான்கு பேரின் புகைப்படங்கள் காவல்துறையால் கண்டெடுக்கப் பட்டதாகச் சொன்னீங்க... அந்த பங்காளவுக்கும், சென்னையில் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட நான்கு பேருக்கும் என்ன தொடர்புன்னு காவல்துறை தரப்பிலிருந்து தகவல் பெறப்பட்டதா... விளக்கமாக சொல்லுங்க...'
"பூங்கொடி, நிச்சயமாக!... நேற்று நள்ளிரவு செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அந்த மறைவிட பங்களாவை காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அது நவீன வசதியுடன் கூடிய சொகுசு பங்களா என்றும் காவல்துறை தரப்பில் .கூறப்படுகிறது...
"மேலும் அந்த பங்களாவை பெண்காவலாளிகள் காவல் காத்து வந்ததாகவும், அவர்கள் ஆயுத்தங்கள் இருந்ததாகவும் காவல்துறை கூறுகிறது பூங்கொடி!"
"பங்களவைக் கைப்பற்ற முயன்றபோது, ஏதேனும் கைகலப்பு, உயிர்சேதம் ஏற்பட்டதா?"
"காவல்துறையினர் தற்சமயம் விளக்கமாகக் கூற மறுத்து விட்டனர்... தற்பொழுது முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது... காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தப் பிறகுதான், பங்களாவை சோதனையிட்டுள்ளனர்... சோதனையின்போது, வெளிநாட்டு போதைப்பொருட்கள் சிக்கியதாகவும், சென்னையில் அடுத்தடுத்து தற்கொலைகள் செய்துக் கொண்ட நான்கு இளைஞர்களின் புகைப்படங்கள் அங்கிருந்து கைப்பற்றியதாகவும் காவல்துறை தகவல் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தார்கள் பூங்கொடி!... இதில் முக்கியச் செய்தி என்னவென்றால், சீதாலெட்சுமி மற்றும் அவரது தோழி காத்ரீனாவை பிடிக்கச் சென்ற காவல்துறையிடம் சீதாலெட்சுமி மற்றும் தோழி காத்ரீனா பிடிப் படாதது மட்டுமல்லாமல், அவர்களைப் பற்றிய துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்பதோடு, அவர்கள் தலைமறைவாகியுள்ள இடம் தெரியாமல் காவல்துறை மிகவும் குழம்பியுள்ளதாகவே தெரிகிறது..."
"பங்களாவில் கைது செய்யப்பட்ட பூமித்தாய் பற்றிக் கூடுதல் தகவல் உண்டா, வளர்மதி"
"ம்... பூங்கொடி, நிச்சயமாக! பெண் பக்தர்களால் பூமித்தாய் என்று வழிபடப்படும் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் என்றும், பெரும்பாலான மாணவிகள் இவரிடம் தாயின் மலரடியாள் என்ற பெயரில் சீடர்களாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறைத் தரப்பில் கூறப்படுகிறது... கைது செய்யப்படும் போதும் இவர் ஆடை அணிய மறுத்து விட்டார் என்றும், காவல் நிலையத்திலும் ஆடையின்றியே இருந்தார் என்றும் கூறப்படுகிறது... இவரிடம் பெண் காவலர்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்...
"பூங்கொடி, இப்ப பார்த்துக் கொண்டு இருப்பது சைதாப்பேட்டை நீதிமன்றம்... பூமித்தாய் என்பவரை காவல்துறையின் விசாரணையில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் கொண்டு வந்துள்ளனர்... நீதிமன்றத்திக்கு வெளியே பொதுமக்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் கூடி இருப்பதையும் காணலாம்... கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏராளமான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்... பூமித்தாய் ஆடை அணிய மறுத்து விட்டதால், கருப்பு திரையால் கூடு மாதிரி செய்து, கூட்டுக்குள் வைத்து காவல்துறையினர் நீதியரசரின் அறைக்கு கொண்டு செல்லும் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... "
'நிர்வாண பெண் சாமியாரை தூக்கில் போடு' எனும் கூப்பாடுகளுக்கிடையில் - நாற்புறமும் திரை சீலையால் கூடு போன்று வடிவமைத்து, அதற்குள் நடக்க வைத்து நீயரசரின் அறைக்கு பெண் காவலர்களால் பூமித்தாயை அழைத்துச் செல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின...
54 - சீதாலெட்சுமி எங்கே?
நீதிமன்றம்!
திரைக் கூண்டுக்குள் பூமித்தாய் நிறுத்தப் பட்டிருந்தாள்...
ஆய்வாளர் பாலு, ஓரிரு வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவல் பணியாளர்கள், தட்டச்சர் தவிர ஏனைய எவரையும் அனுமதிக்காமல் நீதிமன்றத்தின் கதவு சாத்தப்பட்டது...
'பெண் நிர்வாண சாமியாரைத் தூக்கில் போடு' எனும் கூப்பாடு மட்டும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது...
நீதிபதி இருக்கையில் வந்து அமர்ந்தார்... அனைவரும் வணக்கம் தெரிவித்தனர்... பெண் காவலர்களின் பாதுகாப்பில் பூமித்தாய் திரைக் கூண்டுக்குள் நிறுத்தப் பட்டிருந்தாள்...
"உங்க பெயர் என்ன?" -நீதிபதி
"பூமித்தாய்"
"உங்களை ஏன் கைது செஞ்சுருக்காங்கனு தெரியுமா?"
"தாயின் மகன் நீதிபதி அவர்களே! நான் நானாக நிற்க விரும்புகிறேன்... பூமித்தாய் என்மீது காற்றுத் தொடுவது தடுக்கப்படுகிறது... வெளிச்சம் தொட தடுக்கப்படுகிறது... இந்தத் தடைகள் பூமித்தாயின் உரிமைக்கு எதிரானது..." -பூமித்தாய்!
"நீங்க ஆடையணிந்து நிற்க தடையில்லை!"
"தாயின் மகன் நீதிபதி அவர்களே! நான் இங்குத் தாயாக இருக்கிறேன்... பூமியின் மீது அமிலத்தைப் பூசுவதுப் போல் இருக்கிறது; என்னை ஆடையணியச் சொல்வது"
"நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?"
"நான் பறவையாக இருந்து பேச விரும்புகிறேன்... தாயின் மகன் உங்கள் முகம் பார்த்துப் பேச விரும்புகிறேன்"
பெண்காவலர்களைப் பார்த்து, "திரை மூடியை எடுத்துருங்க... அவங்க முகம் மட்டும் எனக்குத் தெரியும்படி அவங்களுக்கும் எனக்கும் நடுவில் திரை இருந்தா போதும்... சாட்சி கூண்டில் நிற்க வைங்க" - என்று நீதிபதி உத்தரவிட்டார்...
நடுவில் சிறுத் திரையை பெண்காவலர்கள் பிடித்து நின்றார்கள்... திரைக்கு அப்பால் பெண்தெய்வம் மட்டும் நிறுத்தப்பட்டார்...
திரைக்கு இப்பால் அனைவரும் அகற்றப் பட்டனர்...
கதவுகள் திறக்கப் பட்டன...
"இப்ப சொல்லுங்க... உங்களைப் போலீஸ் அடிச்சாங்களா?"
"இல்லை"
"துன்புறுத்தல் செஞ்சாங்களா"
"மிகவும் கேவலமாக!... ஆனால்; பூமித்தாயாகிய நான் என்னை துன்புறுத்தியவர்களை, தாயின் மகளாக - தாயின் மகனாகவே இரக்கம் கொள்கிறேன்"
ஆய்வாளரைப் பார்த்து, "லேடி போலீசைத்தானே பயன்படுத்துனீங்க விசாரணைக்கு?" - என்று நீதிபதி கேட்டார்.
ஆய்வாளர் பாலு 'ஆம்' என தலையசைத்தார்.
"என்ன மாதிரியான துன்புறுத்தல் செஞ்சாங்க?"
"தாயின் மகன் வெளி வந்த பாதையை தடியால் குத்தினார்கள்... தாயின் மகன் தாயிடம் பருக பால் கேட்டு துன்புறுத்தினார்கள்"
"ஏய்யா... உங்களுக்கு எதுக்கு உடுப்பு?" - என்று ஆய்வாளரைப் பார்த்து, நீதிபதி தலையில் அடித்துக்கொண்டார்
"உங்கமேல் என்னென்ன வழக்குப் பதிவு செஞ்சுருக்காங்கனு தெரியுமா?"
"தாயின் மகன் நீதிபதி அவர்களே, பூமித்தாயின் இல்லத்திற்கு தாயின் மகன் ஆய்வாளர் ஏன் வந்தார் என்று தாய் அறிந்துக் கொள்ள விரும்புகிறேன்..."
"எதுக்கு அவங்க இல்லத்திற்குப் போனீங்க? - என்று நீதிபதி, ஆய்வாளர் பாலுவிடம் கேட்டார்...
"அய்யா, போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க, ஒரு வாரம் அனுமதி கொடுத்தீங்கனா, முழு விபரத்தையும் தாக்கல் பண்ணிருவேங்க"
"நான் கேட்ட கேள்வி உங்க காதுக்கு கேட்கலையா?"
"அய்யா, இவங்க இல்லத்திற்குப் போகும் எண்ணம் எனக்கில்லைங்க... தலைமறைவுக் குற்றவாளி சீதாலெட்சுமியைத் தேடித்தான் காட்டுக்குப் போனோம்"
"காட்டுக்குள் தேடினீங்களா?"
"அய்யா இரண்டு நாள் காட்டுக்குள் முகாம் போட்டுத் தேடினோம்... சீதாலெட்சுமி பயன்படுத்திய சில பொருட்கள் கிடைச்சது... அதை வெச்சு தேடினப்பத்தான் இவங்க இல்லத்திற்கு போக வேண்டி வந்தது..."
" சீதாலெட்சுமி உங்க இல்லத்திற்கு வந்திருந்தாங்களா?"
"தாயின் மகன் நீதிபதி அவர்களே, தாயின் மகள்கள் தாயின் இல்லத்திற்கு வருவார்கள்... தாயின் மலரடியாள் வருகிற எல்லாரையும் வரவேற்று தாயிடம் அனுப்புவார்கள்... யாரையும் இல்லம் தடுப்பதில்லை... தாயும் தாயின் மகள்களுக்கு அன்புமொழி வழங்குவாள்... அப்படி வருகிற தாயின் மகள்களோடு மகளாக சீதாலெட்சுமியும் வந்திருக்கலாம்"
"சீதாலெட்சுமி, காத்ரீனா இவங்களோடு காதல் தொடர்பில் இருந்து தற்கொலை செய்துக் கொண்ட நாலு பேருடைய போட்டோவுக்கு இவங்க பூசை செஞ்சிட்டு இருந்தாங்க... அதனால், இவங்களுக்கும் சீதாலெட்சுமிக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்குனு இவங்களை கைது செய்து விசாரிக்கப் போனோம் அய்யா"
"சீதாலெட்சுமியை, காத்ரீனாவை காதலிச்ச நாலு பேரின் போட்டோ வெச்சிருந்தீங்களா?"
"தாயின் மகன் நீதிபதி அவர்களே, நான்கு மட்டுமல்ல... அல்ப ஆயுளில் மரணித்து விடுகிறவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி, தாயின் மகள்கள் இறந்த தங்களுடைய மகனின் புகைப்படங்களோடு பூமித்தாயிடம் வருவார்கள்... அல்ப ஆயுளில் மரணித்தவர்கள் புகைப்படங்கள் இல்லத்தில் அதிகம் இருந்ததை, தாயின் மகன் ஆய்வாளர் அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார் போலும்..."
"இன்ஸ்பெக்டர், நீங்க தாக்கல் செஞ்ச முதல் தகவல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கீங்க?... 'பூமித்தாய் ஆசிரமத்தில் போதைப் பொருட்கள் வைத்திருந்தார்... இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து, இணையத்தில் வெளிட்டு தவறான வழியில் பணம் ஈட்டுகிறார்' என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கீங்க... ஆனால்; குற்றம் சாட்டப்பட்டுள்ள பூமித்தாய்க்கும், தலைமறைவாகியுள்ள சீதாலெட்சுமிக்கும் தொடர்பு இருக்கலாம்... அதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் கைது செஞ்சோம்னு நீதிமன்றத்தில் சொல்றீங்க... ஒன்னுக்கு ஒன்னு முரண்படுதே..."
"அய்யா தயவு செஞ்சு மன்னிக்கணும்... விசாரிக்க அனுமதி கொடுத்தீங்கனா, இரண்டாவது தகவல் அறிக்கையில் திருத்தும் செஞ்சு..."
"ஓ... உங்க விருப்பத்திற்கு திருத்தும் செய்ய அனுமதி கேட்பீங்க... சரியா விசாரிக்க மாட்டீங்க... சரியா எப் ஐ ஆர் போடமாட்டீங்க... ஆனால்; தடியெடுத்து குத்துவீங்க... இல்லையா... "
"அய்யா..."
"இரண்டு நாள் காட்டில் முகாம் போட்டு, இவங்க இல்லத்தை கண்காணிச்சிருக்கீங்க..."
"ஆமாங்க அய்யா..."
"இல்லத்திற்குள் இவங்க என்ன மாதிரியான உடையிலும் இருக்கலாம்... ஆடையணியாமலும் இருக்கலாம்... அது அவங்க விருப்பம்... இதனால் பொது அமைதிக்குக் களங்கம் உண்டாச்சுனு பொது மக்களிடமிருந்து புகார் வந்த மாதிரி முதல் தகவல் அறிக்கையில் ஒன்னும் இல்லையே..."
"அய்யா..."
"இவங்க வீட்டுக்குள் நுழைந்து, சோதனை நடத்த நீதிமன்றத்தின் அனுமதி வாங்கினீங்களா?"
"இல்லைங்க"
"விசாரணைக்கு சம்மன் அனுப்புனீங்களா?"
"அய்யா"
அப்போது,நீதிபதியின் அலைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரவே ,அலைப்பேசியை எடுத்துப் பார்த்து விட்டு, கோபமாகத் திரும்பி ஆய்வாளரைப் பார்த்து, புருவத்தை உயர்த்தினார்...
மீண்டும் அலைப்பேசியை பார்த்துப் படித்தார்..." ஆய்வாளர் பாலு, அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தி தேநீர் கடைக்காரரிடம் வடையை ஆட்டையை போட்ட வீடியோ"
"இன்ஸ்பெக்டர் உங்களைப் பற்றி வீடியோ வந்திருக்கு"
"அய்யா, அது பொய்யுங்க..."
'அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேநீர்க்கடையில் வடையை ஆட்டைய போட்டதை நீதிமன்றம் தாமாக முன் வந்து ஆய்வாளர் பாலு மீது, வழக்காகப் பதிவு செய்கிறது...
வழக்கு முடியும் வரை ஆய்வாளர் பாலுவை இடைநீக்கம் செய்ய காவல்துறைக்கு இந்த நீதி மன்றம் பரிந்துரை செய்கிறது...
மேலும்; போதிய முகாந்திரம் இல்லாததால் வழக்கிலிருந்து பூமித்தாய் விடுவிக்கப் படுகிறார்... மேலும் தகுந்த ஆதாரமற்ற இந்த வழக்கை முடித்து வைக்கிறது...
மேலும்; தேடப்படும் குற்றவாளிகளான சீதாலெட்சுமி மற்றும் காத்ரீனாவை தனிப்படை அமைத்து, விரைந்துப் பிடித்து நீதிமன்றத்தின் முன், முன்னிலைப் படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது...
ஆய்வாளர் பாலுவின் தூண்டுதலில் பேரில் கொடூர துன்புறுத்தல் செய்து பூமித்தாய்க்குக் காயங்களை ஏற்படுத்திய, பெண் காவலர்களை, பணி இடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இந்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிடுகிறது...
தனியார் மருத்துமனையில் அனுமதித்து, பூமித்தாயின் மருத்துவச் செலவினங்களை, ஆய்வாளர் பாலு தன் சொந்தக்காசில் செய்யவும், இது குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது...'
"தாயின் மகன் நீதிபதி அவர்களே, பூமித்தாயின் இல்லத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது... அதில் பூமித்தாய் மருத்துவம் காண விரும்புகிறாள்... பூமித்தாய்க்கான மருத்துவச் செலவிலிருந்து தாயின் மகன் ஆய்வாளர் பாலுவை விடுவிக்க பூமித்தாய் விரும்புகிறாள்"
நீதியரசர், கோபத்தோடு ஆய்வாளர் பாலுவை முறைத்தார்...
55 - பொதுமக்கள் பேச்சு
சீதாலெட்சுமி பெயரில் யூ டூப் பில் வெளியான காணொலி பரவலாக பலராலும் நாடெங்கும் பேசப்படும் .பொருளானது ..
"இதப்பாருடி... சீதாலெட்சுமியை காணோம்னு தேடிட்டிருந்த இன்ஸ்பெக்டருக்கே வடை கொடுத்துட்டா"
"சின்ன டீ கடையில் அய்ந்து லட்சம் ரூபாய்க்கு வடைத் தின்னுருக்கான்... பிரியாணிக் கடையில் எத்தனைத் தின்னுருப்பான்? ஓசியில் பிடுங்கித் திங்கற புத்தி போலீசுக்காரங்களுக்கு சொந்தம் போலிருக்கு..."
"நல்ல போலீசும் இருக்காங்கடி..."
..........
"மச்சி!... இந்த போலீஸ்களுக்கே இதுதாண்டா வேலை... இவன் லஞ்சம் வாங்கினதை சீதாலெட்சுமி படம் பிடிச்சிருப்பா... இதனால் அவளைப் பழிவாங்க இந்த இன்ஸ்பெக்டர் கொலைப்பழி சுமத்தி ஊரைவிட்டே ஓட விட்டுட்டான் பாருடா"
..........
#save_ seethalakshmi
..........
"மாப்பிளே நான் அன்றைக்கு சொன்னேன் இல்லே... எங்கிட்ட வேலை வாங்கிட்டு காசு தராமல் மிரட்டிய இன்ஸ்பெக்டர் இந்தாள் தாண்டா" நாளிதழில் வெளியான பாலுவின் படத்தைக் காட்டி பழுது நீக்கும் தொழிலாளி பேசினார்...
"இப்ப சப் இன்ஸ்பெக்டரா மலர்னு ஒரு லேடி இருக்காங்களே .... அவங்களுக்கு இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு கிடைச்சிருக்காம்... அவங்க நல்லவங்கடா"
..........
"ஏண்டி நம்ம ஊரில் பூமித்தாய் கோயில் இருக்குனு நமக்குத் தெரியவே இல்லியே"
"போம்மா; அங்கே பொம்பளை சாமியார் துணியில்லாம இருப்பாள்னு பேசிக்கிறாங்க..."
"அப்படிப்பட்ட சாமியார்கிட்ட அருள்வாக்கு வாங்கறது நல்லதுடி... உனக்கு கல்யாணம் தள்ளித் தள்ளி போகுது... நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்"
..........
56 - ஆவிகளின் ஆற்றலும் அரசாட்சியும் !
இரவு நேரம்!
பூமித்தாய் சாய்வுப் படுக்கையில் கால் நீட்டிப் படுத்திருந்தாள்... எப்போதும் போலவே, பூமித்தாயும், தாயின் மலரடிகளும் பிறந்த மேனியாய் இருந்தனர்...
பூமித்தாயின் அருகே இருபத்துமூன்று வயது மதிக்கத்தக்க தாயின் மலரடியாள் ஒருத்தி வந்து, 'தாயே போற்றி' - என்று சொல்லிவிட்டு தாயின் அருகில் அமர்ந்து, தாயின் பாதங்களை இதமாக நீவி விட்டாள் ..
"ம்... தாயின் மலரடியாளே! காவல்துறையைக் கண்டு நமது தாயின் மலரடியாள்கள் அஞ்சினார்களா?"
"தாயே போற்றி, அஞ்சவுமில்லை; ஓடவுமில்லை; ஒளியவுமில்லை! தாயின் பாதம் பணிந்தோர்க்கு பதட்டமில்லையே! "
"தாயின் மலரடியாளே, நன்று சொன்னாய்!... நாம் உலகையே ஆளப் போகிறோம்... நமது இளவரசிகள் மாண்புமிகு சீதாலெட்சுமி அவர்களும், மாண்புமிகு காத்ரீனா அவர்களும் அரசியாய் முடிசூடி, உலகை ஆள்வார்கள்... அரசியார் சீதாலெட்சுமி அவர்கள் உலகின் கீழ் பகுதியையும், அரசியார் காத்ரீனா அவர்கள் உலகின் மற்றோர் பகுதியையும் அரசாள்வார்கள்... அரசியார்களின் அரசின் கீழ் இந்த மண்ணும் பொன்னும் மணியும் விண்ணும் விரிதிரைக்கடலும், காற்றும், கதிரும் ஆளப்படும்..."
"தாயே போற்றி! அரசியார் சீதாலெட்சுமியும், அரசியார் காத்ரீனாவும் கடுந்துயர் அடைந்தனர்... அரசியார்களின் செவ்விய ஆட்சியால் பூமித்தாயின் புகழ்ப் பாடப்படும்!"
"தாயின் மலரடியாளே, கோடிக் கணக்கில் தாயின் மகள்களை கண்டேன்... நான் கண்ட தாயின் மகள்களில் இருவரிடம் மட்டுமே அரச மரபுக் கண்டேன்... அவர்கள் தான் அரசியார் சீதாலெட்சுமி, அவர்களும், அரசியார் காத்ரீனா அவர்களும்!"
"தாயே போற்றி!.. அரசியார் சீதாலெட்சுமி, அவர்களும், அரசியார் காத்ரீனா அவர்களும் இந்த உலகை ஆளும் அழகை உலகே கண்டுவியக்க வேண்டும்..."
"தாயின் மலரடியாளே, உன் எண்ணம் ஈடேறும்... நமது தாயின் இல்லத்தில் நடந்தேறியிருக்க வேண்டிய சடங்குகள் இங்கு நடத்தமுடியாமல் போயிற்று... ஐந்து காதலர்களும் மரணித்திருந்தால், ஐவரின் ஆவிகளையும் குடுவைக்குள் ஊற்றி, ஆவிகளின் ஆற்றலை ஒருங்குப் படுத்தி அரசியார்களின் ஆன்மாவோடு கலந்திருப்பாள்; இந்தத் தாய்!... ஆவிகளோடு கலந்த ஆன்மாக்களால் மட்டுமே இனி இந்த உலகம் ஆளப்படும் என்பதே ஓலைச்சுவடியின் விதி!"
"தாயே போற்றி!... அய்ந்தாவது காதலனைக் கொல்லாமல் அரசியார் சீதாலெட்சுமி தவிர்த்து விட்டாரே!"
"தாயின் மலரடியாளே, அரசியார் சீதாலெட்சுமியின் மடியில் உயிரோடுப் போராடிக் கொண்டிருந்தான் அய்ந்தாவது காதலன்... அனைக் கொன்றுவிட பூமித் தாயும் கேட்டுக் கொண்டாள்... ஆனால்; அரசியார் சீதாலெட்சுமி அவர்களின் உள்ளத்தின் மான்பைப் பார்தாயா?... நல்ல உள்ளம் நல்ல ஆட்சியாளர்களிடம் மட்டுமே இருக்கும்... பூமித்தாய் சொல்லியும் அரசியார் செவி மடுக்கவில்லை... காதலன் எனில் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பேன்... இப்போது என் மடியில் படுத்திருப்பது உயிரோடுப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளி அல்லவா!... நோயாளியிடத்தில் அன்புக் காட்டுவது எனது கடமையல்லவா!... நோயாளியின் உயிரைக் காப்பதும் என் கடமையல்லவா... என்று அரசியார் சீதாலெட்சுமி அவர்கள் கூறிவிட்டார்... காதலர்களைக் கொல்ல வேண்டும்; அல்லது காதலால் காதலன் சாக வேண்டும்... காதலர்களின் ஆவிக்கு பெரும் ஆற்றல் இருக்கிறது... காதலர்களின் ஆவியை ஆன்மாவில் ஏற்றிக் கொண்டவர்களால் மட்டுமே இனி இந்த உலகம் ஆளப்படும்"
"தாயே போற்றி!... அய்ந்தாவது காதலனை நலமாக்கிவிட்டு, அவன் உடல் நலம் பெற்றவுடன் அவனைக் கொன்றிருந்தால், அய்ந்தாவது காதலனின் ஆவியும் நமக்குக் கிடைத்திருக்கும் அல்லவா"
"தாயின் மலரடியாளே, காலமில்லை!... குறிப்பிட்டக் காலத்தில் அரசியார்களின் ஆன்மாவுக்குள் ஆவி ஏற்றும் சடங்கு நிகழ்த்தப்பட வேண்டும் என்று ஓலைச்சுவடி கூறுகிறது... அதனால்தான் அய்ந்தாவது ஆவி இல்லாமல், சடங்கிற்கு ஏற்பாடு செய்தாள் பூமித்தாய்!"
"தாயேபோற்றி!... ஆவி ஏற்றப்படும் சடங்கை நான் காண இயலாதுப் போயிற்று"
"தாயின் மலரடியாளே, ஒற்றைப் படை ஆவிகளை கைக் கொள்ளும் வித்தையை மட்டுமே பூமித்தாய் கற்றுள்ளாள்!... இரட்டைப் படை ஆவிகளைக் கைக் கொள்ளும் வித்தை அறிந்த மற்றோர் தாய் மொரீசியசு தீவில் இருக்கிறாள்... அந்தத் தாயிடம், அரசியார்கள் கடல் வழியே அனுப்பப்பட்டு விட்டார்கள்... அங்கு சடங்கு நடந்துக் கொண்டுள்ளது..."
"தாயேபோற்றி!... மொரீசியசு தீவில் அரசியார்களுக்கு சடங்கு நடந்துக்கொண்டிருக்கும் வேளையில். பூமித்தாய் நமது இல்லத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை பூசித்ததேன் என்று எனக்கு விளங்கவில்லை"
"அரசியார்கள் நமது இல்லத்திற்கு வந்தும் சென்றும் இருந்தவர்கள்... அவர்களைத் தேடிக் கொண்டிருக்கும் ஆவிகள் குறிப்பிட்ட நாட்களில் நமது இல்லத்திற்கும் வரும்... காதல் நினைவால் அலையும் ஆவிகள் இங்கு வரும்போது, தாயின் மகள்களின் மேலும் தாயின் மலரடியாள்களின் பிறந்த மேனியின் இளமைக் கோலம் கண்டு மோகமுற்று - மயங்கி - இங்கேயே சுழன்றுக் கொண்டிருக்கும்... அப்படி மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஆவிகளை பூமித்தாய் குடுவைக்குள் பிடித்து அடைக்கவே, இறந்தவர்களின் புகைப்படங்கள் நமது இல்லத்தில் பூசிக்க வைக்கப்பட்டன... பூமித்தாய் நினைத்தப் படியே, இங்கு மயக்கத்தில் சுழன்றுக் கொண்டிருந்த நமது அரசியார்களின் காதலில் வீழ்ந்த ஆவிகளைப் பிடித்து - குடுவையில் அடைத்து - மொரீசியசு தீவுக்கு அனுப்பட்டு விட்டது..."
"தாயே போற்றி!... அரசியார்களின் ஆட்சியைக் காண ஆவலுடன் உள்ளேன்..."
57 - சீதாலெட்சுமி வருவாள்!
உடல்நலம் தேறிய கார்த்திக்கை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள் செய்தியாளர்கள், கார்த்திக்கின் வீட்டு முற்றத்தில்!
"காதலித்து, காதலனைக் கொன்று விடுவது சீதாலெட்சுமியின் குணம் என்று காவல்துறைத் தரப்பில் கூறப்படுகிறது!... நீங்களும் சீதாலெட்சுமியை காதலிச்சிருக்கீங்க... உங்க அனுபவம் சொல்லுங்க"
சற்று கண்மூடி யோசித்தான்... பிறகு ஒரு பெருமூச்சு விட்டு நிதானித்தான்... மீண்டும் கண்களைத் திறந்து, செய்தியாளர்களைப் பார்த்தான்...
"சீதாலெட்சுமி ரொம்ப நல்லவங்க!..."
"உங்களையும் கொல்ல முயற்சி நடந்ததாக காவல்துறையில் சொல்லப்படுது"
"உண்மையில் என்னைக் கொல்ல சீதாலெட்சுமி நினைச்சிருந்தாங்கனா, அவங்க மடியில்தான் நான் சுயநினைவு இல்லாமல் கிடைந்திருந்தேன்... அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சீதாலெட்சுமி என்னைக் கொலை செய்திருக்கலாமே... செய்யலே... ஏன்னா, என்னை கொல்வது அவங்க நோக்கமில்லை!... அவங்க நோக்கமெல்லாம் என் உயிர்க் காப்பாற்றப்படுவதில்தான் இருந்தது... அதனால்தான் என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தாங்க சீதாலெட்சுமி!"
பொருளடக்கம்
1. வெயிலடிக்குது வாடி
2. காதலனைச் சந்திக்கப் போறேன்
3 - இப்படியும் கொலைச் செய்யலாமா?
4. துடித் துடித்து சாகும் காட்சி
5 - உயிரும், உடலும் செய்த பாவம் என்ன?
6 - போதைப் பழக்கம்
7 - இதயத்தை கிள்ளினாள்
8 - காரணமில்லா தற்கொலைகள்
9 - முதல் கொலை
10 - டோக்கன் நெம்பர் நான்கு ஒன்பது... கவுண்டர் எண் : மூன்று.
11 - சீதாலெட்சுமியிடம் விசாரணையா?
12 - இரண்டாவது கொலையும் தற்கொலையானது
13 - தனிமரமானான்
14 - காவல்நிலையம்
15- சீதாலெட்சுமி சுட்ட வடை
16 - ஓலை வீடு ஒன்பது வாசல்
17 - உளவாளிகள்
18 - கஞ்சா பொட்டலங்கள்
19 - சீதாலெட்சுமிக்கு வீடு!
20 - அசோக் நகர் ரவிக்குமார் மரணம்
21 - சோதிடர் குறித்துக் கொடுத்த திருமணநாள்!
22 - காவல் கட்டுப்பாட்டு அறை
23 - சீதாலெட்சுமியின் வீட்டில் பகல் உணவு!
24 - அதுதான் சீதாலெட்சுமி!
25 - சதித் திட்டம் உருவானது.
26 - சீதாலெட்சுமியின் வீட்டில் கிடைத்தத் துண்டு சீட்டு
27 - வெட்டப்படும் முன் ஆட்டுக்கு மாலை
28 - போலீஸ் பின் தொடர்கை
29 - கார் நின்றது
30 - நெருங்கவில்லை
31 - காத்ரீனாவின் குறும்பு
32 - ஆய்வாளரின் உறுதி!
33 - கார்த்திக் என்னவாயிற்று?
34 - அபிபுல்லா சாலை
35 - மரண வியர்வை!
36 - இடைவெளிப் புதிரானது
37 - மருமகள் ஆன சீதாலெட்சுமி
38 - சீதாலெட்சுமி தலைமறைவு
39 - சீதாலெட்சுமி போகும் பாதைத் தெரிந்தது!
40 - நமக்காக நாம்தான் சாகடிக்கணும்
41 - இரவில் சோதனைச் சாவடி
42 - மண் தரையில் மயங்கிய ஈருடல்கள்
43 - காவல்துறை எனில் மிருகமோ?
44 - ஒற்றைச் சட்டை
45 - தொலைக்காட்சி செய்தி
46 - காலடித் தடம் சிக்கியது
47 - மேலும் ஒரு தடயம்
48 - திசை மாறுமா வழக்கு?
49 - இளமகள் தேடா பொழுதும்
50 - இளைஞர்களின் மனவோட்டம்
51 - தாயின் மலரடியாள்
52 - தாயே போற்றி
53 - தூக்கில் போடு
54 - சீதாலெட்சுமி எங்கே?
55 - பொதுமக்கள் பேச்சு
56 - ஆவிகளின் ஆற்றலும் அரசாட்சியும் !
57 - சீதாலெட்சுமி வருவாள்!
இந்நூல்...
மூட எண்ணத்திற்கு இரையாவோர் இன்னமும் இக்காலத்திலும் காண்கிறோம்...
notion press வெளியீட்டில் அரங்க கனகராசன் எழுதிய பிற நூல்கள்!
1) அதனால் இரவே விடியாதே...
2) என்னவனே... என்னவனே...
3) பாப்பாவைத் திட்டாதே...
4) காதல் என்றாய்...
5) விழிகளுக்கு திரையிடு...
----------------------------------------------------
பெசன்ட் நகர் கடற்கரை...
மணற்பரப்பில் சீதாலெட்சுமியும், காத்ரீனாவும் நடந்துக் கொண்டிருந்தார்கள்...
கரைக்கு ஓடிவந்து திரும்பும் நீரலைகள் மீது நடந்துச் செல்வதில் ஆனந்தம் என்றால், -பாதத்தின் அடியை மணல் வருடிச் செல்வதால் ஏற்படும் குறுகுறுப்பும் ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தி இன்பம் ஊட்டுகிறது...
ஆங்காங்கே குழு குழுவாக அமர்ந்து மாலைநேரத்து கடற்காற்றின் வருடலை சுவைத்துக் கொண்டிருந்தார்கள் மக்கள்...
சுடச்சுட மீன்வருவல் -
மணமணக்க நெருப்பில் கருக்கித் தரப்படும் மக்காசோளம்-
நீளமாய் தொங்கவிடப்பட்ட மிளகாய் பஜ்ஜி கடைகள்-
மகிழ்ச்சித் ததும்பும் குழந்தைகளின் விளையாட்டு...
இவைகளினூடே நடந்து, தனித்து நிற்கும் ஒரு படகின் முதுகில் சாய்ந்து உட்கார்ந்தார்கள் சீதாலெட்சுமியும், காத்ரீனாவும்!
சிலர் சீதாலெட்சுமியை அடையாளம் தெரிந்துக் கொண்டு புன்முறுவல் பூத்தனர்...
"ஏண்டி இன்றைக்கு நாள் தெரியுமா"
''ஓ" என்றாள் கத்ரீனா!
அந்த நாள்-
பனகல் பூங்காவில் புல்வெளியில் அமர்ந்திருந்தார்கள்...
சுண்டல் விற்கும் பையன் "மசாலா சுண்டல்" என்று கூவிக்கொண்டே அருகில் வந்து "அக்கா சுண்டல் " என்றான்.
அவர்கள் கேட்கும் முன்னரே கூம்பு வடிவில் இரண்டு சுண்டல் பொட்டலங்களை சுருட்டி நீட்டினான்...
"டேய், தம்பி மெல்ல திரும்பி பார்... பால் கடை தெரியுதா" - என்று சீதாலெட்சுமி கேட்டாள்...
"ஆமாக்கா ! பூங்காவுக்கு வெளியே"
"பக்கத்தில் பாணிப்பூரி கடை இருக்கில்லே"
"பானிபூரி வேணுமாக்கா... வாங்கிட்டு வரேன்"
"தம்பி உன் பேரென்ன?"
"கதிரவன்க்கா"
"கதிரவன், திரும்பிப் பார்க்காதே... நா சொல்றதை மட்டும் செய்... என்ன"
"சரிக்கா"
"பானிப்பூரி கடைக்குப் பக்கத்தில் மரத்தில் சாஞ்சு நின்னு என்னையே பச்சை நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டுட்டு நின்னுட்டு என்னையே பார்த்துட்டு இருக்கான்.... நின்னுட்டு இருக்கான்
51 - வேவு பார்த்தல்
அடர்ந்த காட்டுக்குள் விரிந்திருந்த, பண்ணை வீடட்டை பார்த்துவிட்டார்கள்... இப்போது பெண்ணின் குரல் ஒலித் தெளிவாகக் கேட்டது...
'ஓங்காரமிடு
ஓலமிடு
காதகனெனில் -நீ
காணாதாவாயடா '
"ஏய்... ஏய்... இந்த வரியை எங்கோ படிச்ச மாதிரி இருக்கே" - ஆய்வாளர் பாலு மண்டையைத் தேய்த்து யோசித்தார்...
"சீதாலெட்சுமி மிரட்டி உங்களுக்கு எழுதி வெச்ச துண்டுக் கடிதம்"
"அதை ஏன் இங்கே படிக்கறாங்க... அப்படினா நா வருவதை சீதாலெட்சுமி பார்த்துட்டு இருக்காளோ... என்ன தைரியம் அவளுக்கு... என்னையே தொலைச்சிருவாளா" - என்று பற்களை நறநறவென்று கடித்தார்...
"ஏய் சீதாலெட்சுமி, உன்னை விடமாட்டேன்"
'பேய்க்குரலெடுத்து
பெருங்குரலெடுத்து
வீதியில் அலையாதே!
பாதியில் செத்தவனே
பாவைமடியினி உனக்கேடா"
"என்ன மேடம் சொல்றாங்க?... ஏம்மா, புலவரம்மா... இப்ப சொன்னதுக்கு பொருள் சொல்லேம்மா" - என்று பெண் காவலரைப் பார்த்துக் கேட்டார் ஆய்வாளர்...
"பேய் மாதிரி பெருசா சத்தம் போட்டுட்டு வந்தாலும் வீதியில் உனக்கு பாடை மவனே" -னு சொன்னமாதிரி இருந்துச்சுங்க சார்" - பெண் காவலர்
உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட, பெண் துணை ஆய்வாளர், "சார், நாங்க ரெண்டு பேரும் போய் என்ன ஏதுனு நோட்டம் பார்க்கிறோம்..."- என்றார்...
"மேடம், உங்க மூளை மேல் எனக்கு அபரிமிதமான நம்பிக்கை இருக்கு... எப்படியாவது சீதாலெட்சுமியை மடக்கிருங்க... நீங்க சிக்னல் காட்டியவுடன் நான் படையுடன் வந்துறேன் மேடம்"
"சார், நீங்க சீனியர்... என்னை மலர்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க"
"மேடம், சாரி; மலர், நான் சீனியர்... நீங்க சின்சியர்..."
"சரிங்க சார் நாங்க கிளம்பறோம்"
சாதாரண உடையில், பெண் துணை ஆய்வாளரும், பெண் காவலரும் பண்ணை வீடு நோக்கி நடந்தார்கள்...
'தேடுமுன்னே ஓடிவா - அவள்
தேகமேயினி உனதுக் கூடு
ஓங்காரமிடு
ஓலமிடு
காதகனெனில் - நீ
காணாதாவாயடா '
"அய்யோ என்ன சொல்றாளுக... ஒன்னுமே புரியலையே" - என்று ஆய்வாளர் தனியே புலம்பினார் மரத்தில் ஒளிந்து நின்று!...
கருத்துகள்
கருத்துரையிடுக